வாசிப்பு தான் என்னை வாழவும், பயணிக்கவும் உதவி வருகிறது என்று முதுபெரும் எழுத்தாளர் அசோக்மித்திரன் கூறியுள்ளார். இதுவரை 200 சிறுகதைகளும், 8 நாவல்களும், 15 குறுநாவல்களும் எழுதிய அசோக் மித்திரனக்குத் தற்போது 80 வயதாகிறது. அவரது சிறுகதைகள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் பரிசை மூன்று முறையும், இலக்கியச் சிந்தனை பரிசை இருமுறையும் பெற்றுள்ளார். இவரது 18 வது அட்ச ரேகை நாவலுக்கு டால்மியா பரிசும், அப்பாவின் சிநேகிதர் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதும் பெற்றார்.

"எனக்கு வயதாகிறது. நடக்கவே சிரமமாக உள்ளது. ஆனால் என்னால் படிக்க முயல்கிறது. வாசிப்பதால் என்னால் சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது. என்னிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. எனக்குப் பிடித்த புத்தகங்களை தொடர்ந்து தினமும் வாசிக்கிறேன். இந்த வாசிக்கும் பழக்கம் தான் என்னை நினைவாற்றலோடு வைத்திருக்கிறது. வயதான காலத்தின் துயரங்கள் இருந்தாலும் வாசிக்க முடிவதால் எழுதவும் முடிகிறது, கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு கூட ஒரு புத்தகத்தை எழுதி முடித்தேன்" என்று கூறுகிறார்.

"புனைவுகள் எனக்கு அளப்பரிய சுதந்திரத்தையும் கதாபாத்திரங்களையும் அவர்கள் வாழ்வையும் எழுத வாய்ப்பளித்தன. எழுதுகிற புனைவுகள் ருசிகரமாகவும் வாசகருக்கு மகிழ்வூட்டிச் சிந்திக்க வைக்கவும் பயன்பட்டன. இது வரை எனக்கு எவ்வித வருத்தங்களுமில்லை. நான் ஒரு நோயாளியாகிவிட்டாலும் அது எனது செயல்பாட்டை ஒன்றும் தடுக்கவில்லை. எனது குடும்பத்திற்கு போதுமான நேரத்தைக் செலவிடுகிறேன். அவர்களுக்கும் புத்தகம் படிப்பதற்கு போதித்து வந்துள்ளேன். வாசிப்பு அவர்களது வாழ்க்கைக்கு உதவும் என்பதை அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிவுறுத்தியுள்ளேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாழ்வில் வெல்வதற்கு என்ன இருக்கிறது? "புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்டபின் அவர் கூட தனது வாழ்வில் முழு வெற்றியடைந்து விட்டதாகக் கூறவில்லை. ஒருவரின் வாழ்வில் செயலுக்கு முடிவேயில்லை. இன்று நாலு வயதுக் குழந்தைகூட கணினியைப் பயன்படுத்துகிறது. ஆனால் நான் இன்னும் கையால் தான் எழுதுகிறேன். சில நேரம் கணினியில் டைப் செய்தாலும் எழுதுவதில் தான் எனக்குத் திருப்தியாகும்.

இளம் எழுத்தாளர்களைப் பொறுத்தவரை பரந்த அறிவும் தீவிரமும் உள்ளவர்களாக உள்ளனர். ஆற்றலும் திறமையும் அவர்களிடம் உள்ளது. ஆனால் வாசிப்பு மிகவும் குறைவாக உள்ளது. மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்கிறார்கள். அதைவிட்டுக் கொஞ்சம் வெளியில் வந்தால் வாழ்க்கை மேலும் அழகாக இருக்கும்" என்கிறார் அசோகமித்திரன்.

- டெக்கான் கிரானிக்கல் பேட்டியிலிருந்து.

Pin It