“சிலப்பதிகாரம் : உண்மையும் புரட்டும்”

பிராமணியவாதிகள் ராமாயணத்தை காலங் காலமாகத் தூக்கிப்பிடித்து வந்தார்கள். இதற்கு மாற்றாக சிலப்பதிகாரத்தை திராவிட இயக்கம் உயர்த்திப் பிடித்தது. இப்படியாகப் பழந்தமிழ்க் காவியம் ஒன்று வெகு மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த அளவுக்கு அது பாராட்டத் தக்கதே. ஆனால், அந்தக் காவியத்தின் உள்ளுறைப் பாடுபொருளை அவர்களால் உய்த்துணர முடிய வில்லை. மார்க்சிய நோக்கில் - வர்க்கப் போராட்ட வரலாற்று நோக்கில் - அதைக் காணும்போதுதான் அது புலப்பட்டது. இதிலே கே. முத்தையாவின் பங்களிப்பு மையமானது.

“சிலப்பதிகாரத்தின் தலைமைப் பாத்திரம் கண்ணகி என்ற பெயருடைய வணிககுல மங்கைக்கு அளிக்கப்படுகிறது. அதுவரையில் மன்னர்களை யும்,  நிலக்கிழார்களையும் புலவர்கள் பாடிவந்த வழக்கிற்கு இது மாறானதாகும். இந்த இலக்கியம் தோன்றியதன் முக்கியமான குறிக்கோள் யதேச் சதிகார கொடுங்கோல் மன்னர்களை எதிர்த்துக்  குரல் கொடுப்பதேயாகும். அன்று இது வணிக குலத்தின் குரலாகவே இருந்தது. இந்த இலக்கியத்தினைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தி இதன் பாத்திரங்களுக்கு தெய்வீகத் தன்மை கற்பித்த திருத்தல் வேலைகள் பிற்காலத்தில் நிகழ்ந்துள்ளன. இதைப் பின்னால் விபரமாகக் காண்போம்” - என்றார்.

பத்துப்பாட்டு - எட்டுத்தொகையிலிருந்து சிலப்பதிகாரம் எங்கே வேறுபட்டு நின்றது என்பதைப் பளிச்சென்று 1960களிலேயே சொன் னவர் கே. முத்தையா. இது வணிக குலத்தின் இலக் கியம். இது புத்த - சமண சமய எழுச்சியின் கவித்துவக் குரல். இது தமிழனின் சொந்தப் படைப்பு என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லப்பட்டு வந்தச் சூழலில், இது எந்தத் தமிழனுக்கு எதிராக எந்தத் தமிழன் பாடியது என்று உள் புகுந்து பார்த்துச் சொன்னார். தான் உறுதியளித்தபடி 1980-81ல் இதில் நடத்தப்பட்ட “திருத்தல் வேலைகளை” விரிவாக ஆராய்ந்து “சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்” எனும் நூலைக் கொண்டு வந்தார். வழக்குரை காதை யுடன் முடிந்துபோன காப்பியத்தை வேண்டு மென்றே இழுத்திருப்பதை வஞ்சிக் காண்டத்தின் மூலம் தெளிவாக உணரலாம் என்றார்.

சிலப்பதிகாரம் பற்றிய இத்தகைய மார்க்சிய நோக்குதான் தொ.மு.சி. ரகுநாதனை “இளங்கோ வடிகள் - யார்?” என்கிற பெரும் ஆய்வு நூலை எழுதத் தூண்டியது. அதற்கு எம்.ஏ. நுஃமானின் விமர்சனமும், அந்த விமர்சனத்திற்கு விமர்சனமாக இந்தக் கட்டுரையாளர் செம்மலரில் எழுதியதும் இங்கு குறிக்கத்தக்கவை. உண்மையில் சிலப்பதி காரம் பற்றிய நுணுக்கமான மார்க்சிய ஆய்வுகள் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டும். கவுந்தியடி கள் மூலம் சொல்லப்பட்டிருக்கும் சிந்தனைகள் சமணம் சார்ந்தவை. ஆனால், அவரை ஒரு சைவச் சிவனடியார் போல மக்கள் மனதில் பதிய வைக்கும் வேலைதான் தமிழகத்தில் நடந்தது.

மணிமேகலை

மணிமேகலை பற்றிய கே. முத்தையாவின் சிந்தனை மிக வித்தியாசமானது. அதை அந்த 1960களிலேயே அவர் வெளியிட்டிருந்தார். வெறுமனே “இரட்டைக் காப்பியங்கள்” என்றே புலவர் பெரு மக்கள் பேசி வந்தார்கள். இவரோ “இந்தக் காப்பியம் முழுவதுமே மன்னன் ஆதிக்கத் தின் முன் வணிககுலம் எதிர்த்து நின்று போராட முடியவில்லை என்பதனைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு உலகுக்கு அறிவித்ததன் சின்னமாகும்” என்றார். அதாவது, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு, அவனைச் சாகாமல் சாகடித்த கண்ணகியின் சீற்றத்திற்கும், மணிமேகலையின் துறவுக்கும் இடையிலான பெருத்த வேறுபாட்டின் வரலாற்று விளக்கமாக இதைச் சொன்னார்.

அமுதசுரபி எனும் கற்பிதத்தின் மூலம் வறுமைப் பிரச்சனையை அது தீர்க்க முயன்ற தையும், அரசனுக்கு எதிரான கலகக் குரல் என்பதைவிட ஒரு சமரசக் குரலாகவே மக்களை நோக்கிய அதன் வேண்டுகோள் இருந்ததையும் அவர் ஆதாரமாகச் சுட்டிக் காட்டினார். “அதிர் சுழல் வேந்தன் அடி பிழைத்தாரை/ஒறுக்கும் தண்டத்துறு சிறைக்கோட்டம்/விருப்பொடும் புகுந்து வெய்துயிர்த்துப் புலம்பி/ ஆங்குப் பசியுறும் ஆருயிர் மாக்களை/வாங்கு கையகம் வருந்த நின்று ஊட்டலும்” என்று அங்கே வருகிறது. மன்னவரின் திருவடி பணியாதோர் சிறையில் இருந்தார்கள். அங்கே புகுந்து பசியோடு இருந்த அவர்களுக்கு உணவு ஊட்டின மணிமேகலை என்று வருகிறது. இங்கே ஆட்சி மாற்றம் என்பதைவிட வறுமை ஒழிப்பு என்பதையே பிரதான விஷயமாக மணிமேகலை கைக் கொண்டதன் காரணம் அதுவே என்றார்.

மணிமேகலையில் உள்ள “சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை” என்கிற முக்கியமான பகுதி குறித்து கே. முத்தையா ஏனோ பேசவில்லை. அது பவுத்தவாதியாகிய மணிமேகலை பிற சமயத்தவர்களைச் சந்தித்து வாது செய்த கட்டம். அதன் மூலமாக -  பரபக்கவாதமாக இதர சமயத் தவரின் சிந்தனைகள் நமக்கு கிடைக்கின்றன. அந்த நாளில் சமயங்கள் என்பவை வெறும் சடங்காச் சாரங்களை மட்டுமல்லாது, தத்துவ சாரங் களையும் கொண்டிருந்தது. எனினும் இந்தக் கட்டுரையாளர் போன்ற சில ஆய்வாளர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்தவர் அவரே. அதனால்தான் “தமிழரின் தத்துவ மரபு” எனும் எனது நூலில் மணிமேகலையின் தத்துவப் பேச்சு பற்றி அலச முடிந்தது.

திருக்குறள்

மன்னர் குலத்திற்கும் வணிக வர்க்கத்திற்கும் இடையில் ஏற்பட்ட முரணும் சமரசமுமே திருக்குறளிலும் வெளிப்படுவதாகக் கணித்தார் கே. முத்தையா. “மன்னனுடன் சமநிலைக்குப் போராடிய வர்க்கம் இது. எனினும் மன்னனை மீறிவிட முடியாத நிலையில் இருந்தது. அதனால் தான் முரண்பாடு. இந்த முரண்பாட்டினையே உலகப் புகழ் பெற்ற வள்ளுவரும் தன் குறட் பாக்களில் பிரதிபலிக்கிறார்” என்றார்.

“குடிதழீஇக் கோலொச்சும் மாநில மன்னன்/அடிதழீஇ நிற்கும் உலகு” -  என்ற குறள் இதற்குக் கச்சிதமான எடுத்துக்காட்டாக உள்ளது. குடி மக்களை வருத்தி வரி கேட்கும் மன்னர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்களைப் போன்றவர் கள் என்று கடுமையாகக் கடிந்து கொண்டாலும், மன்னராட்சி ஒழிய வேண்டும் என்கிற சிந்தனை வள்ளுவருக்கும் வரவில்லை. அவர் கேட்ட தெல்லாம் மக்களது விருப்பங்களைக் கணக்கில் எடுத்து ஆட்சி செய்யும் மன்னவன் கொடுங் கோன்மை இல்லாத செங்கோன்மை மன்னவன். இங்கே “குடிதழீஇ” என்பதில் வணிக மக்களும் அடங்குவர் என்பது நிச்சயம். காரணம், வள்ளுவரில்தான் வாணிபம் பற்றியும், பொருள் தேடுவதன் அவசியம் பற்றியும் மிக விரிவாகப் பேசப்படுகிறது. “பொருள் என்னும் பொய்யா விளக்கம்” என்றும், “செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்” என்றும் பலப்பட வணிக வர்க்கத் தின் நிலைபாடும், அதன் வழிவந்த போதனையும் கூர்மையாகப் பேசப்படுகிறது.

இன்னொரு முக்கியமான கருத்தையும் கே. முத்தையா இது சமயம் முன் வைத்தார். “பொருட் பெண்டிர்” என்று வள்ளுவர் பேசுவது பொருள் உற்பத்திக்கும் வணிகத்திற்கும் முக்கியத் துவம் கொடுத்த சமுதாயம் பிறந்ததன் ஒரு பக்க விளைவு என்றார். “விற்பனைக்காகப் பண்டம், பொருள் என்பது தோன்றும் அதே காலத்தில் பெண்டிரும் பொருளின் நிலையை அடையும் நிலைமை” ஏற்பட்டது என்றார். பொருட் பெண்டிரைத் தேடிப் போய்ப் பொருளை எல்லாம் இழக்கும் பரிதாப நிலையைக் கண்டபோது அது “இருட்டறையில் ஏதில் பிணந்தழிஇயற்று” என்று வணிக மக்களை நேயத்தோடு எச்சரித்தார் வள்ளுவர் என்றும் சுட்டினார்.

இப்படி சமுதாயத்தின் விளைபொருளாயும், தனிமனிதப் படைப்பாளியின் விழைவாயும் இணைத்துப் பார்க்கும்போது இலக்கியத்தின் சாரம் நமக்குப் புரிபடுகிறது. இத்தகைய ஆய்வு முறையின் ஒரு முன்னோடியாய்த் திகழ்ந்தவர் கே. முத்தையா.

திருக்குறளைப் “பொது மறை” என்கிறார்கள் பலரும். உண்மையில் அது சமணம் - பவுத்தம் தழைத்திருந்த காலத்தின் இலக்கிய வெளிப்பாடு. “பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற இலக் கியங்களுக்கு வரிவடிவம் தந்து ஏடு ஏற்றினர். நீதி நெறி நூல்கள் என்றழைக்கப்படும் பதினெண் கணக்கு நூல்களையும், ஐம்பெரும் காப்பியங்கள், தொல்காப்பியம், நன்னூல் போன்ற இலக்கண நூல்களையும், இன்னும் எண்ணற்ற நூல்களையும் வழங்கினர்” புத்த-சமணர்கள் என்றார்

கே.முத்தையா. இவரின் அடியொற்றி புகுந்து பார்த்ததில் திருக்குறள் ஒரு சமண நூல் என்கிற முடிவுக்கு வர முடிந்தது என்னால். இந்தக் கருத்தை பல ஆதாரங்களுடன் எனது “தமிழரின் தத்துவ மரபு” நூலில் முன் மொழிந்திருக்கிறேன்.

“இராமாயணம் : ஒரு ஆய்வு”

தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் எனும் வரையறைக்குள் இராமாயணம் வராதுதான். ஆனால், அந்த இதிகாசம் பற்றிய கே. முத்தையா வின் ஆய்வு இன்று மிகுந்த காலப் பொருத்த முடையதாக இருப்பதைச் சுட்டிக்காட்ட வேண்டி யுள்ளது. செவ்வியல் இலக்கியங்கள் உள்ளடக் கத்தில் காலத்தின் விளைச்சலாகவும், உருவ அழகில் காலத்தை மிஞ்சிய வெளிப் படாகவும் ஒருங்கே இருப்பதை மார்க்° சுட்டிக் காட்டி யிருந்தார். அழகிற்குப் பின்னால் ஆபத்து இருக்கக் கூடும் என்பதற்கு உதாரணம் இராமாயணம். அது எப்படி இந்துத்துவவாதிகள் கையில் ஆயுதமாகி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, நாடு முழுக்க எப்படிக் கலவரங்கள் வெடித்தன என்பதை அறிவோம். தமிழகத்திலோ சேது சமுத்திரத் திட்டம் எனும் ஒரு பெரும் வளர்ச்சித் திட்டமே அந்த இதிகாசத்தின் பெயரால் தடுத்து நிறுத்தப் பட்டது.

ஏற்கெனவே கம்பராமாயணத்தில் தேர்ந்திருந்த கே.முத்தையாவின் கரங்களில் டி. அமிர்தலிங்க அய்யர் எழுதிய “இராமாயண விமர்சனா” எனும் ஆங்கில நூல் கிடைத்தது. இது வால்மீகி ராமாயணம் பற்றிய ஆய்வு நூல். எழுதியவர் யாரென்றால் மார்க்சி°டு கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ. பாலசுப்பிர மணியத்தின் தந்தையார். அமிர்தலிங்க அய்யரின் தமையனார் டி. பரமசிவ அய்யரும் “இராமா யணமும் இலங்கையும்” என்றொரு ஆங்கில நூலை எழுதியிருந்தார். இவற்றையெல்லாம் படித்துப் பார்த்த கே. முத்தையாவுக்குள் வால்மீகி ராமாய ணமும் கம்பராமாயணமும் ரங்கராட்டினம் சுற்றின. இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு களும், வால்மீகி ராமாயணத்திற்குள்ளேயே

இருந்த முரண்பாடுகளும் நிறைய சந்தேகங்களை எழுப் பின. அமிர்தலிங்க அய்யரோ தனது சம°கிருதப் புலமையால் வால்மீகி ராமாயணத் தில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணம் செய்து அதன் இடைச் செருகல்களைத் தனியாக எடுத்து வைத்திருந்தார். அவற்றைக் கழித்துப் பார்த்தாலும், உள்முரண் களை பகுத்தறிவுக்கு உட்படுத்திப் பார்த்தாலும் சில யதார்த்த உண்மைகள் பளிச் சிட்டன. அவரின் இந்த ஆய்வைத் தனது கம்ப ராமாயணப் புலமையோடு தொடர்ந்தார் கே. முத்தையா.

விளைவு என்னவென்றால் இராமாயணக் கதை விந்திய மலைக்குத் தெற்கே நடக்கவே யில்லை என்கிற தெளிவான முடிவு. அதிலும் முக்கியமாக “இலங்கை என்பது இன்றுள்ள ஸ்ரீலங்கா அல்ல, மாறாக மத்தியப் பிரதேசத்தில் விந்திய மலைகளிடையே உள்ள ஒரு நீர் சூழ்ந்த மலை” என்கிற முடிவு. இதற்கு பரமசிவ அய்யரின் ஆய்வுகளோடு அதை வழிமொழிந்துள்ள எ°.டி. சங்காலியா எனும் புதைபொருள் ஆராய்ச்சி யாளரின் கருத்துக்களையும் பொருத்தமாகக் கை யாண்டார் கே. முத்தையா.

அவர் மேற்கோள் காட்டிய அமிர்தலிங்க அய்யரின் கீழ்வரும் கருத்து அதி முக்கியமானது - “இராமன் என்பவன் ஒரு சாதாரண அரச குமாரன். அவன் தந்தையினால் கட்டளையிடப்பட்டு விந்தியப் பிரதேசத்தில் தன் மனைவி சீதையுடனும், தம்பியுடனும் வாழ்ந்தபோது அங்குள்ள மலைவாழ் மக்களோடு நடத்திய சண்டைதான் இராம-இராவண சண்டை. இதில் தெய்வீகத் தன்மை எதுவும் கிடையாது.”

பக்தி மார்க்கம், இந்துத்துவா சிந்தனை போன்றவற்றை கழற்றி வைத்துவிட்டு வரலாறு மற்றும் பூகோள அறிவோடு வால்மீகி ராமாயணத் தைப் படித்துப் பார்த்தால் பெறப்படும் உண்மை இதுவே. இதை 1980 லேயே தமிழ் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் கே. முத்தையா. இந்தச் சிந்தனை மட்டும் விரிவாகவும் ஆழமாகவும் தமிழ் மக்களிடையே கொண்டு செல்லப்பட்டிருந்தால் சேது சமுத்திரத் திட்டம் எனும் ஒரு பெரும் வளர்ச்சித் திட்டத்தை இராமாயணத்தின் பெயரால் இந்துத்துவ சக்திகள் தடுத்துக் கொண்டிருப்பதை, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியே இந்தக் கேட்டிற்குத் துணை போவதைத் தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள், இந் நேரம் பொங்கி எழுந்திருப்பார்கள்.

மிகப் பெரிய படிப்பினை என்னவென்றால் இதிகாசம், புராணம் என்ற பெயரால் மக்கள் நெஞ்சில் விதைக்கப்படும் சில கற்பிதங்கள் மெய்யான வரலாறைவிடவும் கல்லில் எழுத்தாய் பதிந்து விடுகின்றன, அவற்றில் சிலவற்றை மதவெறியர்கள் தங்கள் நோக்கத்திற்குப் பயன் படுத்தவும் முடிகிறது என்பது. இந்தச் சூழலில் இந்தப் பொய்மையை எதிர்த்த மெய்யான ஆய்வுகளை வெகு மக்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டியது மார்க்சியர்கள் உள்ளிட்ட இடதுசாரிகளின் கடமையாகும். ஏன் பெரியாரி°டுகள் - அம்பேத்கரி°டுகளின் கடமை யும்கூட. ஆனால் இதை அவர்கள் முழுமையாக  நிறைவேற்றினார்கள் என்று கூற முடியாது. இந்த சேதுசமுத்திரம் விவகாரத்திலேயே இந்தக் கட்டுரையாளர் எழுதிய “ஸ்ரீராமன் சிலோனுக்கு சென்றதில்லை - வால்மீகியின் வாக்குமூலம்” எனும் பிரசுரம் போன்ற ஒரு சிலவே வெளிவந்தன. பெரியார் உயிரோடு இருந்திருந்தால் சேது சமுத்திரம் விவகாரத்தை எவ்வளவு விரிவாக வெகு மக்களிடம் கொண்டு போயிருந்திருப்பார் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

தோழர் கே. முத்தையாவைப் பொறுத்த வரை தமிழக மார்க்சி°டு கட்சியின் தலைவர்களுள் ஒருவர் என்ற முறையில் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் தனது அணிகளுக்கு முன் வைத்தவர். அன்றும் சரி, இன்றும் சரி அந்த அணிகளுக்கு அப்பால் அவரது சிந்தனைகள் பெரிதாகச் சென்றடையவில்லை என்பது ஒரு சோகமே. ஆனால், அகமாச்சரியங் களை விலக்கிவிட்டும், பண்டிதத்தனமான சொல்லாட்சி இன்மையைக் கருதாமலும் அவரது எளிய, சிறிய நூல்களைப் படிக்கிற எவருக்கும் அவற்றுக்குள் இருக்கும் சீரிய, புதிய, வித்தியாச மான கணிப்புகள் பரபரப்பை ஊட்டாமல் போகாது. புதிய பாதைக்கான திட்டி வாசல் திறந்தது போலிருக்கும். அதற்குள் புகுந்து இறுதி வரை நடந்துவிட வேண்டும் என்று தோன்றும். என்னைப் போன்றவர்கள் எல்லாம் அப்படித்தான் ஈர்க்கப்பட்டோம். “மண்ணுக்கேற்ற மார்க்சி யத்தைக் கொண்டுவந்து விட்டேன்” என்றெல்லாம் அவர் பிரகடனப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களை அவர் கண்டுணர்ந்து சொன்ன விதத்தில் அதற்கான அச்சாரம் இருந்தது. அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டால் தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆய்வு செய்வதில் - அதாவது மெய்யான ஆய்வுகளை மேற்கொள்வதில் - பெரும் வெற்றி காணலாம் என்பதே எனது துணிபு.

உதவிய நூல்கள்

1. Preface to a Contribution to the Critique of Political Economy - Karl Marx

2. Karl Marx and Frederick Engels Selected Works -Engels to J.Block-Sep 21, 1980

3. Marx and Engels of Art and Literature 

4. இலக்கியங்கள் கூறும் வர்க்க சமுதாயம் - கே. முத்தையா.

5. சிலப்பதிகாரம் : உண்மையும் புரட்டும் - கே. முத்தையா

6. இராமாயணம் - ஒரு ஆய்வு - கே. முத்தையா

Pin It