விலைவாசி உயர்வு

அரசாங்கம் ஏழை மக்கள் மீது

ஏவிவிட்ட ஏவுகணை

மக்கள் இதயங்களில்

அரசு பாய்ச்சுகின்ற ஈட்டிமுனை

வெகுஜன வாழ்வின் மீது

வீசப்பட்ட வெடிகுண்டு

விலை ஏற்றம்

வர்த்தகச் சூதாடிகளும்

வஞ்சக ஆட்சியாளர்களும்

கூட்டுச் சேர்ந்து மக்களுக்கு

வைத்த வேட்டு

இது,

பன்னாட்டு நிறுவனங்கள்

பகாசுர கம்பெனிகள் செய்யும்

பதுக்கல் வேலை

இங்கே ஏழை விவசாயி

எலிக்கறி தின்றாலென்ன

தற்கொலை செய்தாலென்ன

எல்லாம் உலகமயம்!

விலைவாசி உயர்வு

ஆன்லைன் வர்த்தகத்தின்

கைவரிசை

அவர்களுக்கு ஆட்சியாளர்கள்

தந்த சீர்வரிசை

இங்கே

சாமானிய மக்களுக்கு வரிச்சுமை

சீமான்களுக்கு வரிச்சலுகை

வறியவர்க்கெல்லாம் சேவை வரி

வசதிபடைத்தவர்க்கு வரி விலக்கு

இது,

வர்த்தகச் சூதாடிகளுக்கு வசந்த காலம்

வறிய மக்களுக்கு இருண்ட காலம்

-பெ.அய்யனார்

Pin It