சிதம்பரம் நடராசர் கோயிலில் உள்ள தீண்டாமைச் சுவரை அகற்றவேண்டும் என்று அண்மையில் புதுக்கோட்டையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நினைவிருக்கலாம். அது என்ன, கோயிலில் தீண்டாமைச் சுவர் என்றுகூட பலருக்கும் வியப்பு ஏற்பட்டிருக்கலாம். நந்தன் என்ற சேரி மகன் தில்லை நடராசனைத் தரிசிக்க ஆசைப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆலயப்பிரவேச முயற்சியில் ஈடுபட்டு, தீயில் மாண்டுபோன வரலாற்றை சற்றே சிந்தித்துப் பார்த்தால் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மேற்படித் தீர்மானத்தைப் புரிந்துகொள்ளப் பிடி கிடைக்கும். 

கோவில் தீட்டுப்பட்டுவிட்டது என்று அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் ஆலயத்தின் தெற்கு நுழைவாயில் சுவர் குறித்து நேரில் ஆய்வு செய்ய நாம் சிதம்பரம் கிளம்பினோம். பேருந்து மதுரையிலிருந்து புறப்பட்டதும் நந்தன் என்ற தீரமிக்க அந்த நாயகனின் கதையையும் அந்த நாளைய சமூகச் சூழலையும் சற்றே பின் நோக்கிச்சென்று நம் மனம் எண்ணிக் கொண்டு வந்தது. 

தமிழகத்தின் பழமையான ஊர்களில் சிதம் பரம் தனித்துவமானது. சிதம்பரம் நடராஜர் ஆலயம் தமிழகக் கோயில்களிலேயே முற்றிலும் மாறுபட்டது. கோயில் என்றாலே ஒரு காலத்தில் அது சிதம்பரம் கோயிலைத்தான் குறிக்கும் என்று சொல்வதுண்டு. இங்கே பூசைகள் செய்வோர் தீட்சிதர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் தில்லை மூவாயிரவர் என்று குறிக்கப்பட்டனர். அதாவது, அக்காலத்தில் அந்த எண்ணிக்கையில் வாழ்ந்திருக்கலாம். தீட்சிதர்கள் தங்களைக் கயிலாயத்திலிருந்து சிவபெருமானே தமக்குப் பூசைகள் செய்ய அழைத்துவந்ததாகச் சொல்லிக்கொள்வார்கள். அதிலும்கூட சிவபெரு மான் மூவாயிரமாவது நபராகத்தான் வரிசையில் வந்தாராம். அதாவது, கடவுளும்கூட இவர்களிலும் கடைசிதான் போலும்!. சாதியத்தின் உச்ச நிலை யைத் தக்கவைத்துக்கொள்ளத்தான் எத்தனை வகையான கதைகள்-

சைவ சமயத்தின் தலைமையகமாகவே சிதம்பரம் இருந்தது என்பது வரலாறு. சமணத்தை யும், பௌத்தத்தையும் வீழ்த்த நடந்த போரிலே சைவம் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள மேற் கொண்ட எத்தனையோ வழிகளில் பக்தி இலக்கிய உருவாக்கங்களும் அவற்றைப் பரப்பும் வகை களும் பிரதானமானவை. சமூக வரலாற்றில் நடந்த நிகழ்வுகளைத் தங்கள் நலன்களுக்கேற்ப புராண முலாம் பூசி அரங்கேற்றும் கலையில் சைவமும், வைணவமும் ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டுக் கொண்டது. அத்தகைய தன்மையிலானவைதாம் நாயன்மார்கள் கதைகள். தில்லை மண்ணில் தாழ்த்தப்பட்ட நந்தன் எப்படி நந்தனாராகி நாயன்மார்கள் வரிசையில் வைக்கப் பட்டான் என்பதே அன்றைய வர்ணாசிரம சமூகம் எத்தனைக் கொடூரமானதாக இருந்தது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

அன்பும் சிவமும் இரண்டென்பரறிவிலர்

அன்பே சிவமாவ தாரு மறிகிலர்

அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்

அன்பே சிவமா யமர்ந்திருப்பாரே!

-என்பது திருமூலர் வாக்கு. அதாவது அன்புதான் சிவமாம். அதாவது, அன்பும் சிவமும் ஒன்றுதானாம். நந்தன் கதை எனும் உரைகல்லில் இதனை உரசிப் பார்த்தால் நாம் என்ன முடிவுக்கு வருவோம்? அன்பும் சிவமும் ஒன்றுதானா? நந்தன் கதையைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள் வோம்.

மேற்கானாட்டு ஆதனுரில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நந்தன் அந்த ஊரின் அருகிலிருந்த திருப்புன்கூர் சிவாலயத்தின் புறத்திருந்து ஊழியம் செய்யும் தொண்டன். புறத்திருந்து தொண்டு செய்வது என்றால் கோயிலுக்குள் நுழைய அனு மதிக்கப்படாத குலத்தினர் அதற்கு வெளியி லிருந்தே அந்தக் கோயிலுக்கு வேண்டிய பணிவிடை களைச் செய்வது. இன்றைக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ச் சமூகம் அப்படித் தான் இருந்தது. சமணம் வீழ்ந்துவிட்ட பின்னர் எழுந்த சைவ, வைணவ மதங்கள் சாதியத்தை இன்னும் இறுக்கிக் கட்டி வலுவாக்கின. அதன் உச்சகட்டக் கொடுமையாகத் தீண்டாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. கோவி லுக்குள் நுழைய அனுமதியில்லை, ஆனால் அந்தக் கோயிலுக்குப் பணிவிடைகள் மட்டும் செய்ய வேண்டியது கட்டாயம். அவர்கள் வசதிக்காக கோபுரத்தைத் தரிசித்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் ஏற்பாடு. அடடா! எத்தனை நுட்ப மானதாகப் பின்னப்பட்டிருக்கிறது இந்தத் தீண் டாமை எனும் வலை!

கோவிலுக்கு உழைத்துக்கொட்டிய, குளங்களை வெட்டிய நந்தனுக்கு இயல்பாகவே வந்தது ஒரு ஆசை. அவனைப் பொறுத்தளவில் அந்த ஆசை ஒரு பேராசைதான். ஊருக்குள்ளேயே அனுமதி மறுக்கப்பட்டிருந்த சாதிக்காரனான நந்தனுக்கு திருப்புன்கூர் கோயில் மூல விக்ரகமான சிவனைப் பார்த்துவிட வேண்டும் என்று ஒரு ஆசை தோன்றினால் எப்படியிருக்கும் - நாட்டுப்புறக் கலைஞனான அந்த நந்தன் திருப்புன்கூர் ஆலயத்தின் முன் ஆடிப் பாடிக் கூத்தாடுகிறபோது ஆட்டத்தின் ஏதோவொரு கோணத்தில் சிவ தரிசனம் கிடைத்து விட்டது. இதைப் பின்னாளில் கதையாக்கியவர்கள் நந்தனுக்காக நந்தி விலகிக் கொண்டது என்றும் அதனால் அவனுக்கு சிவ தரிசனம் கிடைத்தது என்றும் கற்பித்தனர். நந்தனின் இந்த மீறலை தெய்வச்செயலாக்கி மற்றையோர்க்கு எட்டாத தாகச் செய்யும் நோக்கம் இதிலிருந்தது. திருப் புன்கூரில் இன்றும் நந்தி விலகி நின்று இந்த நோக்கத்தை உறுதி செய்கிறது.

திருப்புன்கூரில் சாமியைப் பார்த்த இந்த அனுபவம் நந்தனை இன்னும் ஊக்கப்படுத்த, தில்லைக்குப் போய் அங்கிருக்கும் நடராசனைப் பார்த்துவிடவேண்டும் என்று ஆசை மிகுதியாக, நந்தன் தில்லைக்கு நாளை போவேன், நாளை போவேன் என்று நாளைத் தள்ளிக்கொண்டே போனானாம். அவனை ஊரிலிருப்பவர்கள் நாளைப்போவான் என்றே பட்டப் பெயர் இட்டு அழைக்கத் தொடங்கிவிட்டனராம். இறுதியாக ஒரு நாள் தில்லைக்குக் கிளம்பிவிட்ட நந்தனை தில்லை வாழ் அந்தணர்கள் ஊருக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தி, கோயிலுக்குள் நீ போக வேண்டு மானால் முதலில் நெருப்புக் குண்டத்தில் இறங்கி, இந்த இழி பிறப்பைத் துறந்து, நெருப்பின் உதவியினால் புனிதம் அடைந்து அந்தணர் உருவம் பெற்று, பின்னர் கோயிலில் நுழை என்றனராம். நந்தனும் அவ்வாறே செய்தானாம். அதாவது, நெருப்பில் இறங்கி, புனிதனாகி, அந்தணர் உருப்பெற்று, ஆலயம் புகுந்து சிவனுடன் கலந் தானாம். இதுதான் வழமையாக நாம் நந்தன் குறித்துக் கேள்விப்பட்ட கதை.

இன்றைக்கும் பல்வேறு வடிவங்களில் தீண்டாமை நீடிக்கிற நமது சமூகத்தில் ஆயிர மாண்டுகளுக்கு முன்னர் அது எத்தனைக் கொடிய வடிவில் அமலாகியிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அதன் வடிவம்தான் ஊருக்கு வெளியே சேரிகளில் அந்த மக்களை வாழச் செய்தது. எல்லா விதத்திலும் அவர்களின் உழைப் பைச் சுரண்டிக் கொண்டு, அவர்களை ஊருக் குள்ளேயும், கோவில்களுக்கு உள்ளேயும் அனுமதி மறுத்தது. கோவிலுக்குப் புறத்தேயிருந்து தொண்டு செய்பவர்களுக்கென்றே ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று சமாளித்தது. நந்தனின் கதையும் நமக்கு உணர்த்தும் செய்திகள் இவையல்லவா?

பறையனாகப் பிறந்த நந்தன் அன்றைய நாளில் அமலில் இருந்த வழமையின்படி நடக் காமல் அதனை மீற எண்ணியதால் அவன் நெருப்பில் கொளுத்தப்பட்டான் என்று இதை ஏன் சொல்லக் கூடாது என்பதுதான் இன்றைக்கு எழும் கேள்வி. நந்தனைத் தனது பிறவியின் இழிவிலிருந்து மீட்டு, அந்தணனாக்கிப் புனிதப்படுத்தவே அந்த அக்கினிப் பிரவேசம் என்று அன்றைக்கு இந்தக் கொலைக்குப் புனிதச் சாயம் பூசப்பட்டது என்பதே அதன் புராண உள்ளடக்கத்தின் சாரம்.

நந்தனின் இந்தக் கதையைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் பதிவு செய்திருக்கிறார். கோபாலகிருஷ்ண பாரதி என்ற அந்நாளைய புதுமைப் புலவன் தமது நந்தனார் சரித்திரத்தில் நந்தனுக்குப் புகழ் சேர்த்திருக்கிறார். இதில் சேக்கிழாருக்கு சைவ நெறியைப் பரப்பும் நோக்கமிருந்திருக்கிறது. அதை மனதில் வைத்தே நந்தனைப் புனிதப்படுத்தி அவனுக்கு திருநாளைப் போவார் என்று பெயர் சூட்டவும் செய்தார். நந்தனை ஊரார் கேலி செய்து வைத்த பட்டப் பெயரே நந்தனின் சிறப்புப் பெயராகி விட்டது. சேக்கிழார் புண்ணியத்தில் நந்தன் சைவத்திற்குத் தொண்டாற்றிய நாயன்மார்களின் வரிசையில் சேர்க்கப்பட்டான். அதாவது, உயிருடன் இருந்த போது உழைத்துக்கொட்டியவன், ஆலயத்தின் உள்ளே சென்று ஆண்டவனைத் தரிசிக்க நினைத் ததால் நெருப்பில் மாண்டவன், நாயன்மார் வரிசை யில் சிலை வடிவில் ஆலயத்திற்குள்.

கொலை செய்யும் நோக்கத்தில்தான் நந்தனை எரித்திருப்பார்களா- அதற்குத்தான் புனித மாக்குகிற வேள்வி என்ற புளுகா- இப்படியெல் லாம் நடந்திருக்குமா என்றெல்லாம் சிந்திக் கிறவர்கள் இன்றும் நிறையப்பேர். நந்தன் கோயிலுக்குள் சென்று சாமி கும்பிடவேண்டும் என்று தனது விருப்பத்தைச் சொன்னதும் அதற்குக் கிடைத்த பதிலில் எவ்வளவு கோபமும், சாதியக் குரோதமும் வெளிப்பட்டிருக்கிறது பாருங்கள்:

“பறையா நீ சிதம்பரம் பரமென்று சொல்லப்

படுமோடா போகப் படுமோடா - அடா

அறியாத்தனம் இனி சொன்னால் இனிமேல்

அடிப்பேன் கூலியைப் பிடிப்பேன் - பாவி

சிதம்பரம் என்பதை விடு - கொல்லைச்

சேரடியிலே வந்து படு - நாத்தைப்

பதத்திற் பிடுங்கினதை நடு - கருப்

பண்ணனுக்கே பலி கொடுத்திடு!”

-கோபாலகிருஷ்ண பாரதியின் வரிகள் இவை. பறையன், ‘சிதம்பரம்’ என்று சொல்வதே பாவகாரியமாக இருந்திருக்கிறது. ஆனால் நந்தன் சொல்லமட்டுமா செய்தான்- சிதம்பரத்திற்குச் செல்லவும் அல்லவா ஆசைப்பட்டான்- தில்லைநடராசரைக் கோயிலின் உள்ளே சென்று தரிசிக்கவும் அல்லவா ஆவல் கொண்டான்- இதை எப்படி அன்றைய சாதிய சமூகம் ஒப்பியிருக்கும்? அதுதான் “மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழித் திருநாளோ?” என்று அநீதியாகக் கேட்ட சமூக மாயிற்றே?

நந்தனின் இந்தக் கதை இரண்டு செய்தி களைச் சொல்கின்றன. ஒன்று, நந்தன் எரிக்கப் பட்டிருக்கிறான். மற்றொன்று, அதற்கு முன்னரோ அல்லது அதன் பின்னரோ அவன் ஆலயத்துள் போயிருக்கிறான் என்பவையே அச்செய்திகள்.

சேக்கிழாரும், கோபாலகிருஷ்ண பாரதியும் மட்டுமல்ல, தில்லையைச் சுற்றிய கிராமப் புறங் களில் நந்தனின் கதை பரவலாகப் பேசப்படுகிறது. நந்தன் எரிக்கப்பட்டான் என்பதைவிட நந்தன் தில்லையம்பலத்திற்குள் போனான் என்பதே தில்லையைச் சுற்றிலுமுள்ள மக்களின் பேச்சாக இருப்பதை அந்தப் பகுதிகளில் நாம் நேரில் மேற்கொண்ட கள ஆய்வின்போது உணரமுடிந்தது. நந்தன் தீயில் எரிந்து, புனிதமடைந்து வெளிவந்தான் என்ற கட்டுக்கதையானது அவன் தீயிட்டுக் கொளுத்தப்பட்ட காரணத்திற்காகத் தோன்ற வேண்டிய கோபாவேசத்தை மழுங்கடித்து விட்ட தாகவே தோன்றுகிறது. இதனால்தான் நந்தன் சிதம்பரம் கோயிலுக்குள் போனதைமட்டும் மக்கள் பெருமிதத்தோடு பேசுகிறார்கள். ஆக, நந்தன் சென்ற அந்த வழி மக்களின் நம்பிக்கையில் இன்றும் இருக்கிறது. அந்த வழியைச் சுவர் வைத்து ஏன் அடைத்தார்களாம் -

நந்தன் சரித்திரத்தைக் கேளாதே - நாளும்

வந்த தரித்திரம்தான் மாளாதே

- நந்தன் வந்த வழியில் போய் சாமி தரிசனம் செய்தால் பயனில்லை என்பது மேன்மக்களின் நம்பிக்கை. அதைத்தான் இப்படி கோபால கிருஷ்ண பாரதி பதிவு செய்கிறார். நந்தனின் சரித் திரத்தைக் கேட்டாலே தரித்திரம் வந்துசேருமாம், இதையும் பதிவு செய்து விட்டு, தனது நூலுக்கே நந்தனார் சரித்திரம் என்று பெயர் வைத்த கோபால கிருஷ்ண பாரதியார் அந்த மூட நம்பிக்கையை ஒப்பவில்லை என்று புரிகிறது.

நந்தன் என்ற அந்தத் தீண்டத்தகாதவன் நுழைந்ததால் இந்த வாசல் தீட்டுப்பட்டுவிட்டது என்ற சொல்லாடலை இன்றும் நம்மால் அங்கே கேட்க முடிந்தது. காலம் மாறியிருக்கிற சூழலில் யாரும் பகிரங்கமாக இதைச் சொல்லத் தயாரில்லை என்பதே உண்மை. தீட்டுப்பட்டு விட்ட இந்த வாசல் வழியாகக் கோயிலுக்குள் போனால் கோயிலுக்குச் செல்வதால் கிட்டும் எந்த நன்மையும் கிடைக்காமல்போகும் என்ற நம்பிக்கை நந்தனுக்கு முன்னமேயே இருந்திருக் கிறது. நடராசர் சிலையைக் கோயிலுக்குள் கொண்டுசெல்ல உதவிய சாம்பான் கிழக்கு வாசல் வழியே சென்ற காரணத்தால் அந்த வாசலின் வழியாக உள்ளே போனால் எந்தப் புண்ணியமும் இல்லை என்ற நம்பிக்கை நீண்ட காலமாக இருந்ததாக மூத்த தீட்சிதர் ஒருவரே சொல்லியிருக்கிறார். எனவே, அந்தச் சுவர் தீண்டாமையின் அடையாளம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

நந்தன் சென்று நடராசரை வழிபட்ட அந்தத் தென்திசை வாயிலை அடைத்துக் கட்டப்பட் டிருக்கும் சுவரை உடனடியாக அகற்றிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீர்மானம் நிறைவேற்றியுள்ள இந்த நிலையில் நாம் சிதம்பரம் பகுதியில் நேரடியாக மேற்கொண்ட கள ஆய்வும் அந்தத் தீர்மானத்தின் நியாயத்தையே உணர்த்து கிறது.

தில்லை அம்பல நடராசரின் ஆலயத்தை இன்று தீட்சிதர்களின் கைகளிலிருந்து தமிழக அரசு எடுத்துக்கொண்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க நல்ல நிகழ்வுதான். உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் வழக்கு தொடுக்கப் பட்டிருந்தாலும் அரசின் மேற்பார்வையில் ஆங்காங்கே சிற்சில மாற்றங்களை உணர முடிகிறது. சிப்பந்திகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். துப்புரவுப் பணி முன்னைக் காட்டிலும் சிறப்பாக நடப்பதாகச் சொல்கிறார்கள்.

வழக்கு இருப்பதைக் காரணம் காட்டி அதிகாரிகள் வாய் திறப்பதில்லை. என்றாலும், வழக்கம்போல நெஞ்சை நிமிர்த்தியபடி உயர்ந்து நிற்கும் கோபுரங்களும், வேலிக் கம்பிகளுக்குள்ளே நந்தி சிலைகளும், அமைதியை வாரி வழங்கியபடி பிரகாரங்களும், குளமும் கால மாற்றங்களையும் கடந்து மௌனம் அனுசரிக்கின்றன. அதுபோலத் தான் தீட்சிதர்களும் ஆங்காங்கே சின்னச் சின்னக் கூட்டங்களாக உட்கார்ந்துகொண்டு மந்திரங்களை கோரசாக உச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். மேடையேறி அர்த்த மண்டபத்திலிருந்து நட ராசரைத் தரிசிக்க பக்தர்களுக்கு ஆசை காட்டி, ஆளுக்கு நூறு ரூபாய் ஆகும் என்று வசூல் வேட் டையை மூலஸ்தானப் பகுதியில் வாலிப வயது தீட்சிதர் ஒருவர் காவலாளியின் உதவியோடு நடத்திக் கொண்டிருக்கிறார். எந்தச் சலனத்தையும் பொருட்படுத்தாமல் பல நூற்றாண்டு மோனத் தபசில் உறைந்த நிலையில் காலைத் தூக்கியது தூக்கியபடி நடராசரும், அருகிலேயே படுத்தது படுத்தபடி பெருமாளும்.

தெற்கு கோபுர வாசலில் நுழைந்து நாம் நேரே பார்த்தால் சிறிய கோயிலும் அதன் பின்னே நந்தியுமாக மூலஸ்தானமான நடராசர் சந்நிதிக்கு நேராக அமைந்திருக்கின்றன, நந்திக்கு வலப்புறம் உயரமான ஒரு வளைவு, ஒரு நுழைவாயிலைப் போல. ஆனால், அது முற்றிலும் சுவர் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நந்தன் கோயிலுக்குள் நுழைந்த வழி என்று பலரும் சொல்ல, ஒரு சிலர் அதை மறுக்கவும் செய் கிறார்கள்.

நந்தன் எரிந்ததாகக் கூறப்படும் ஹோமம் வளர்க்கப்பட்ட ஓமகுளம் கிராமம் சிதம்பரத்தைத் தொட்டுக்கொண்டு இருக்கிறது. அங்கே நந்தனார் மடம் இருக்கிறது. அதற்குள்ளேயே நந்தனார் வழிபடுகிற காட்சியோடு அமைந்த சிவாலயமும் இருக்கிறது. இவற்றோடு கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கவென்றே நந்தனார் பெயரில் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே தொடங்கப்பட்ட பள்ளியும் இருக்கிறது. இவற்றை யெல்லாம் துவக்கியவர் நந்தனின் பற்றாளராக வாழ்ந்த சகஜானந்தர். சிதம்பரத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்ய சகஜானந்தர் போராடியவர். நந்தன் நுழைந்த வாசலைத் திறக்கக் குரல் கொடுத்தவர். நந்தன் பெயரில் அமைந்த அந்தப் பள்ளியும், நந்தன் மடமும் தீண்டாமைக் கொடுமை எனும் அநீதியோடு நடந்துமுடிந்த அந்த வரலாற்றினை இன்றைக்கும் மக்களிடையே நினைவூட்டும் சாட்சியமாகவே நிலைபெற்றிருக் கிறது.

வரலாற்று அடையாளங்களும், சாதாரண மக்களின் வாய்மொழித் தகவல்களும் தக்க சான்றுகளாக இருந்தும் அங்கேயிருப்பது தீண்டாமைச் சுவரல்ல என்ற குரலையும் நம்மால் கேட்கமுடிகிறது. அப்படியென்றால் அங்கே ஒரு வழி சுவர் வைத்து அடைக்கப்பட்டிருக்கிறதே,

அது என்ன என்று கேட்டால் அது குடமுழுக்கு காலத்தில் மராமத்துப் பணிகளுக்காகப் பொருட் களை எளிதில் கொண்டுசெல்ல உதவும் வழி என்று பதில் வருகிறது. தீட்சிதர்களிலிருந்து பலரும் இதையே சொல்ல, நாம் அந்தச் சுவரின் மறு பக்கத்தைப் பார்க்க கோவிலின் உள்ளே மறுபடியும் சென்றோம். அங்கே சுவருக்குப் பின்னே பெரிய கம்பிக் கதவு இருக்கிறது. அந்த வழியை முன்

பக்கத்தில் சுவர் எடுத்து அடைத்துவிட்டவர்கள் அதன் பின்புறத்தில் சுவரெழுப்புவதற்கு முன்னர் புழக்கத்திலிருந்த கதவை அப்படியே விட்டு விட்டிருக்கின்றனர். இந்தக் கதவே அது முன் னொரு காலத்தில் புழக்கத்திலிருந்த வழிதான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. தில்லையின் கடவுளான நடராசர் மூலஸ்தானத்தில் நிற்பதும் தென் திசை நோக்கித்தான். நந்தனின் ஊரான ஆதனூரும் தில்லைக்குத் தெற்கேதான் இருக்கிறது. எனவே இதுவே கோயிலின் பிரதான வாசலாக இருந்திருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

பிரதான வாசலையே மராமத்துப் பணி களுக் கான வழி என்று தரம் குறைக்க வலுவானதொரு அடிப்படை வேண்டுமே. நந்தன் நுழைந்ததால் அது தீட்டுப்பட்டதாகக் கருதப்பட்டுத்தான் அடைக்கப் பட்டிருக்கவேண்டும் என்று தீர்மானிக்க நமக்குப் போதிய ஆதாரங்கள் நமது இலக்கியங் களிலும், மக்கள் வாய்மொழியிலும் மற்றும் கோயிலில் பார்க்கமுடிந்த அடையாளங்களிலும் காணக் கிடைக்கின்றன இன்றளவும்.

சிற்றம்பல மேடையேறித் தேவாரம் பாட முயன்ற ஆறுமுகசாமி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் உரிமைக்காக பலரும் ஆதரவுக் கரம் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான் சிதம்பரம் நடராசர் ஆலயம் தீட்சிதர்களின் நெடுங்கால ஆதிக்கத்திலிருந்து தமிழக அரசின் கைக்கு மாறியது. இப்போது நந்தன் சென்ற வழியைத் திறக்கச் சொல்லிப் போராட்டம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி தனது தீர்மானத்திலேயே இந்தச் சுவரை அகற்ற அரசுக்குக் காலக் கெடுவும் தந்திருக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களின் சுயமரியாதையோடு இணைந்த பிரச்சனை. அவர்கள் அந்தக் கோயிலுக் குள் செல்ல இப்போது தடையில்லைதான். ஆனால், அந்த மக்கள் அங்கே அந்தச் சுவரைக் கண்ணால் பார்க்கிறபோதெல்லாம் இது நமது முன்னோர் வழிவந்த நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதென்று அடைக்கப்பட்ட வழிதானே என்ற எண்ணம் தோன்றுமே, அதைத் தவிர்க்கமுடியாதே. அது அவர்களை அவமான உணர்வு கொள்ளச் செய்யுமே. இருபத்தோராம் நூற்றாண்டின் மனித சமுதாயத்தில் ஒரு பகுதியினர் இப்படி இன்னும் எத்தனைக் காலம்தான் அவமானத்தைச் சுமந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கேள்வி தலித் அல்லாத பிற பகுதியினரின் உள்ளங்களைக் குடைந் தெடுக்க வேண்டாமா? நமது சொந்தச் சகோதரர் களின் இந்தத் துன்பச் சுமையை இறக்கி, அதிலிருந்து அவர்களை விடுவிப்பது அனைவரது கடமையல்லவா?

தீட்சிதர்களில் ஒரு சாராரே இந்தச் சுவரை அகற்றுவதற்கு ஆதரவாக இருப்பதாகவும் நாம் அறிகிறோம். இந்த நிலையில் சிதம்பரத்தைச் சார்ந்த தலித் அல்லாத பிற சமுதாயத்தினரும் இந்தத் தீண்டாமைச் சுவர் விஷயத்தில் தங்களின் மனநிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதே நம் விருப்பம். அவ்வாறு அனைத்துப் பகுதி மக்களின் குரலாய் இது ஓங்கி ஒலித்து, அந்தப் பேரோசை அரசின் காதுகளில் விழட்டும். தீண்டாமையின் சின்னமாக இன்றளவும் இருக்கும் அந்தத் தீய அடையாளம் விழுந்து நொறுங்கட்டும். தமிழன் தனது வரலாற்றுத் தவறுகளில் ஒன்றை இப்போதாவது திருத்திக்கொள்ளட்டும்.

களஆய்வில் உதவி : ஆர். ராமச்சந்திரன், தீக்கதிர் காளிதாஸ், பி. வாஞ்சிநாதன்

படங்கள் : சூர்யா’ஸ்

- சோழ.நாகராஜன்

(செம்மலர் ஜூலை 2010 இதழில் வெளியானது)

Pin It