கலை, இலக்கியம் உள்பட வாழ்க்கையின் சகல களங்களிலும் நாம் பல வகையான சிந்தனைகளின் தாக்கங்களுக்கு உட்படுகிறோம். அந்தத் தாக்கங்களின் தன்மைகளையும் விளைவுகளையும் புரிந்துகொள்ள நாம் நமது விமர்சனக் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது. நமது பண்பாட்டுத் தளங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முன் நிகழ்ந்திராத மாற்றங்களை நாம் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். சமுதாயத்தில் அடிப்படையான மாற்றங்கள் எதுவும் நிகழாமலே, பண்பாட்டுத்தளத்தில் மறுபடியும் மறுபடியும் பிற்போக்குத்தனமான மாற்றங்கள் நிகழ்கின்றன. மறுபடியும் மறுபடியும் மத-இன அடிப்படைவாத மாற்றங்களும் நிகழ்கின்றன. பதினேழாம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக் கட்டத்தில் ஏற்பட்டதை விடவும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிற மாற்றங்கள் இவை. பெரிதும் சிறிதுமாக இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும் என்றாலும் கூட, அவற்றில் நாமும் பங்கேற்றுக்கொண்டுதான் இருக்கிறோம் என்ற போதிலும் கூட, அந்த மாற்றங்களின் பொருள் என்ன, அவற்றின் தாக்கங்கள் என்ன என்பதை நம்மில் பலரும் அறியாதவர்களாகவே இருக்கிறோம். மக்களையே கருவிகளாகப் பயன்படுத்தி அந்த மாற்றங்கள் புகுத்தப்படுகின்றன. மக்களின் அனுமதி பெறாமலே அவர்களுடைய வாழ்க்கையில் புகுந்து அவர்களை இயக்கிக்கொண்டிருக்கிற இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வதும், மக்களுக்குப் புரியவைப்பதும் பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்களின் கடமையாகிறது. சுவையான கதைகளையும் கலைநிகழ்ச்சிகளையும் தருவதோடு மட்டுமே எழுத்தாளர்கள், கலைஞர்களின் கடமை முழ்்துவிடவில்லை. சமுதாயத்தின் உண்மைகள் குறித்தும், நிகழ்ந்துகொண்டிருக்கிற மாற்றங்கள் குறித்தும் மக்களுக்குத் தெளிவுபடுத்துகிற கடமையும் இருக்கிறது. ஏனென்றால், பண்பாட்டுத் தளத்தில் செயல்படுவது என்பதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் முற்போக்குப் பண்பாடு பற்றியும் முற்போக்குக் கலைகள் பற்றியும் முற்போக்கு இலக்கியம் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். முற்போக்குக் கவிதைகள் பற்றியும் முற்போக்குக் கதைகள் பற்றியும் முற்போக்கு நாடகங்கள் பற்றியும் முற்போக்கு ஓவியங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோம். கடந்த நூற்றாண்டுகளில் முற்போக்குக் கலை இலக்கியத்திற்குப்பங்களித்தவர்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளிலிருந்து முற்போக்குப் படைப்புகளை வழங்கியவர்களின் வரலாறுகள் நமக்குத் தெரியும். ஆனால், முற்போக்கு என்பதன் பொருள் என்ன? ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளில் முற்போக்கு என்ற சொற்பதத்திற்கு என்ன பொருள் வழங்கியதோ, அதே பொருள்தான் இன்றும் இருக்கிறதா? அன்றைய முற்போக்கு எழுத்துகளும் கலைப் படைப்புகளும் நம்மிடம் நிறைய இருக்கின்றன. ஆனால், அப்போது முற்போக்கு என்றால் என்பதற்கு இருந்த அதே புரிதல் இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் பொருந்துமா? அன்று முற்போக்கு என்று பேசப்பட்டபோது அதிலே முற்போக்குப் பண்பாடு பற்றிப் பேசப்படவில்லை.

இப்படி முற்போக்கு என்பதற்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் இருந்த பொருளையும் இன்றைய பொருளையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறதா என்று சிலர் கேட்கக்கூடும். அப்படி வேறுபடுத்தி பார்க்கவும், அதன் அடிப்படையில் நம் புரிதல்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் தவறுவோமானால் முற்போக்குக் கலை இலக்கிய இயக்கம் தேக்கமடைந்துவிடக்கூடும் என்று அஞ்சுகிறேன். அரசியலுக்கும் பண்பாட்டுக்கும் இடையேயான உயிரோட்டமான தொடர்பைப் புரிந்துகொள்ளத் தவறுவோமானால் சமுதாயத்தில் படைப்பாக்கச் செயல்பாடுகளே கூட இல்லாமல் போய்விடும் என்று கருதுகிறேன்.

சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் முற்போக்குக் கலை இலக்கியம் என்றால், அது அன்றைய காலனியாதிக்க எதிர்ப்பு அரசியலொடும் நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்கு எதிரான அரசியலொடும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. அன்றைய இலக்கியப் படைப்புகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனியாதிக்க எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு ஆகியவற்றை உள்வாங்கிக்கொண்டவையாக உருவாகின.

அதே வேளையில், கலை இலக்கிய வடிவங்களை அரசியல் கருத்துகளைப் பரப்புவதற்கானகருவிகளாக மட்டும் பயன்படுத்துகிற போக்கு என்பதும் உருவானது. அப்படி வெறும் கருவிகளாக மட்டும் பயன்படுத்துவது மட்டுமே பண்பாட்டுச் செயல்பாடாகிவிட முடியாது. இன்றும் கூட அரசியல் செய்திகளைச் சொல்வதற்கும், சமுதாயக் கருத்துகளைப் பரப்புவதற்குமான கருவிகளாக மட்டுமே கலை இலக்கியத்தைப் பார்க்கிற போக்கு இருக்கிறது. கலையும் இலக்கியமும் வெறும் கருவிகளே என்ற பார்வையின் காரணமாகவே கலை இலக்கியத்தின் முழு ஆற்றலையும் வெளிக்கொண்டுவர இயலாத நிலை தொடர்கிறது. படைப்பாளி மனங்களும் கூட அதற்கேற்ப பக்குவப்படுத்தப்படுகின்றன. ஆனால் அரசியலுக்கும் பண்பாட்டிற்கும் இடையேயான உறவு பற்றிய சரியான புரிதலொடும் ஈடுபாட்டோடும் படைக்கப்படுகிற கலைகளும் இலக்கியங்களும் மிகப் பெரும் அளவுக்கு சுயேச்சையான பங்களிப்புகளைச் செய்ய முடியும்.

முற்போக்கான அரசியல் கருத்துகளையும் சமுதாயச் சிந்தனைகளையும் மக்களிடையே பரப்பியாக வேண்டும், அதற்குக் கலை இலக்கியத்தையும் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு பரப்புரை செய்வதற்காக மட்டுமே கலை இலக்கியத்தைப் பயன்படுத்திக்கொள்கிற அரசியல்-சமுதாயச் செயல்பாடு என்பது பண்பாட்டுத் தலையீடு என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப் பண்பாட்டுத் தலையீடு என்பது பல தளங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. முற்போக்கான அரசியல்-சமுதாய இயக்கங்ளும் அதைக் கையாளுகின்றன.

ஆனால், பண்பாட்டுத் தலையீடு என்பதற்கு மாறாக, கலாச்சாரத்திற்குள் தலையீடு என்பதே தேவை என்று கருதுகிறேன். நாமும் “பண்பாட்டுத் தலையீடு” என்ற சொல்லாடலை விடுத்து, “பண்பாட்டில் தலையீடு” என்ற சொல்லாடலைப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன். பண்பாட்டுத் தலையீடு, பண்பாட்டில் தலையீடு என்ற இரண்டு அணுகுமுறைகள் குறித்தும், அவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்கிறபோது பண்பாட்டுத் தளத்தில் நம் செயல்பாடு ஒரு மாறுபட்ட நிலையை அடைய முடியும். கலை இலக்கியத்தில் முற்போக்கு என்பதைப் பார்ப்போம். 1947க்கு முன் முற்போக்குக் கலை இலக்கியம் என்றால் ஏகாதிபத்தியத்திற்கும் காலனியாதிக்கத்திற்கும் எதிரான இயக்கம் என்ற பொருளில் புரிந்துகொள்ளப்பட்டது. 1947க்குப் பிறகும் முற்போக்குக் கலை இலக்கியம் என்ற சொற்களை நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் இன்று அந்தச் சொற்களுக்கு மாறுபட்ட பொருள் உருவாகியுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வெளியேறிய பிறகு காலனியாட்சி எதிர்ப்பு என்பதற்கான தேவையும், அதுதான் முற்போக்கானது என்ற பார்வையும் மாறியிருக்கின்றன.

பிரிட்டிஷ் ஆட்சி வெளியேறிவிட்டதால் “பின் காலனிய இந்திய சமுதாயம்” - அதாவது “காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய இந்திய சமுதாயம்” என்ற சொல்லாடல் வெகுவாகப் பயன்படுத்தப்படுகிறது. அறிவுத்தள விவாதங்களில் “பின் காலனிய சமுதாயம்” என்ற சொற்கள் பொதுவாகக் கையாளப்படுகின்றன. ஆனால் இந்தியா உண்மையிலேயே ஒரு பின் காலனிய சமுதாயமாக மாறியிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். மாறாக, பின் காலனிய சமுதாயமாக மாறுவதற்கான காலகட்டத்தில்தான் இந்தியா இன்று இருக்கிறது.

எனினும் இந்தக் காலகட்டம் 1947க்கு முந்தைய காலனியாதிக்கக் காலகட்டத்தைப் போன்றதல்ல. இன்று ஒரு எழுத்தாளரோ கலைஞரோ முற்போக்குப் பண்பாடு என்று சொல்கிறபோது, அதற்கு 1930ஆம் ஆண்டுகளில் வழங்கிய அதே பொருள் இப்போது இல்லை. சொல்லின் பொருள் மாறியிருப்பதோடு, இன்றைய அரசியல், பண்பாடு, கோட்பாடு ஆகிய ஆகிய ஒட்டுமொத்தக் களமும் மாறியிருக்கிறது. ஆகவேதான், இன்றைய முற்போக்குக் கலை இலக்கிய இயக்கம் என்ற கருத்தாக்கமும் முப்பதாம் ஆண்டுகளின் முற்போக்குக் கலை இலக்கிய இயக்கத்திலிருந்து மாறுபடுகிறது.

இதே போன்றதுதான் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு என்பதும். நிலப்பிரபுத்துவ சமுதாய எதிர்ப்பு என்பது முதலாளித்துவ சமுதாய எதிர்ப்பு இயக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. நிலப்பிரபுத்துவம் இல்லாமல் போய்விட்டது என்ற பொருளில் இதை நான் கூறவில்லை. சாதியம், கிராமங்களில் தொடரும் நிலக்குவியல் போன்ற பல வடிவங்களில் அது நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்று இந்திய சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய சக்தியாக முதலாளித்துவம் வளர்ந்திருக்கிறது.

குறிப்பாக தாராளமயமாக்கலும், உலகமயமாக்கலும் தொடங்கிய பிறகு முதலாளித்துவத்தின் ஆதிக்கம் மேலொங்கியிருக்கிறது.

முற்போக்காளர்கள் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளில் பெரும்பாலானவை நடுத்தர வர்க்க மக்களைக் குறிவைத்தே எழுதப்படுகின்றன - அவர்கள்தான் முக்கிய நுகர்வோராக இருக்கிறார்கள். அந்த நடுத்தர வர்க்கமோ இன்றைய நவீன தாராளமயமாக்கலின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது. அவர்கள் நேரடியாக தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் எல்லாம் தேவைதான் என்றுவாதிடுவதில்லை. ஆனால், நாடும் சமுதாயமும் நவீனமாக வேண்டும் என்ற கோணத்தில் அவர்கள் இவற்றை ஆதரிக்கிறார்கள். நம் சமுதாயம் நவீனமாவதில் என்ன தவறு இருக்கிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். நவீனமாவது என்றால் அவர்கள் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள்தான் என்பதாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். மேம்பாட்டுப் பணிகள் என்ற பெயரில் ஒரு பக்கம் நவீனமான தொழில்களும் உயரமான கட்டடங்களும் அகலமான நான்குவழிச் சாலைகளும் வருகின்றன. இன்னொரு பக்கம் அந்தத் திட்டங்களால் வெளியேற்றப்படும் எளிய மக்கள் அடுத்த வேளை உணவுக்கு உத்தரவாதமற்றவர்களாகத் தெருவில் நிற்கிறார்கள். நடுத்தர வர்க்கமோ இந்த எளியவர்களைப் பற்றிச் சிந்திப்பதில்லை. மாறாக, நவீனமாதல் ஒரு சமுதாயத்திற்குத் தேவையானதுதானே என்பதாக, அது ஒரு முற்போக்கான செயல்பாடுதானே என்பதாகப் பார்க்கிறார்கள். நவீனமயமாக்கலின் தீங்குகளை விமர்சிக்கத் தயங்குகிறார்கள். அவர்களுக்கு முதலாளித்துவம் புகுத்துகிற நவீனமயம் எப்படிப்பட்டது, அதன் உண்மை நோக்கம் என்ன, உண்மையான நவீன வாழ்க்கை என்றால் என்ன, உண்மையான முற்போக்குப் பாதை என்றால் என்ன என்பதையெல்லாம் புரிய வைக்கிற கடமை கலை-இலக்கியவாதிகளுக்கு வந்திருக்கிறது.

நவீனமயம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சமுதாயத்தைப் பல தனித்தனித் தீவுகளாகப் பிரித்துவைத்திருக்கிறது. நவீன வாழ்க்கையின் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கிறவர்கள், அரைகுறையாக அவற்றை அனுபவிக்க வாய்ப்புப் பெற்றவர்கள், அவற்றை எட்டிக்கூடப் பார்க்க முடியாதவர்கள் என சமுதாயம் கூறுபோடப்பட்டிருக்கிறது. ஏனென்றால், சந்தை ஆக்கிரமிப்பு சக்திகளால் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் இவை.

சந்தைக் கலாச்சாரமே கூட பெருமளவுக்கு மாறிப்போயிருக்கிறது. கால் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த சந்தை முறை இன்று இல்லை. சிறிய நகரங்களில் கூட சந்தைக் கலாச்சாரம் மாறியிருக்கிறது. கடைத்தெருக்கள் மாற்றமடைந்திருக்கின்றன.

முன்பொரு முறை, ஒரு திறந்தவெளி பொது நிகழ்ச்சியில் உரையாற்றச் சென்றிருந்தேன். கூட்டம் நடந்த இடம் ஒரு கடைத்தெரு. கூட்டம் நடந்த இடத்தைச் சுற்றி பல வகையான கடைகள் இருந்தன. காப்பித்தூள், கருப்பட்டி விற்கிற மளிகைக்கடைகள் உள்பட பலவகைக் கடைகள் நிறைந்திருந்தன. இன்று அதே ஊரில் அதே தெருவின் வழியாக வரும்போது, அதே கடைகளைக் காண முடியவில்லை. பெரும்பாலான கடைகள் அடியோடு மாறிப்போயிருக்கின்றன. புதிய புதிய பொருட்களை விற்கிற கடைகளாக மட்டுமல்லாமல், எல்லாப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் கிடைக்கிற பெரிய பல்பொருள் அங்காடி வளாகங்கள் முளைத்திருக்கின்றன. ஆனால், சிறிய கடைக்காரர்களுக்கும் வாடிக்கையாளர்களாகிய மக்களுக்கும் இடையே ஒரு நட்புறவு

இருந்த சூழல் இப்போது இருக்கிறதா? அடுத்த ஆண்டிற்குள் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடுகளை அனுமதிப்பதற்கான தீவிர நிர்ப்பந்தங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு வலுவான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. அப்படிப்பட்ட வளாகங்கள் வருமானால், இன்றிருக்கிற சிறு வணிகர்கள் பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும்.

இப்படிப்பட்ட நவீன சந்தைகள் வருகிறபோது அது விற்பனைப் பொருள்களோடும், வர்த்தகப் போட்டிகளோடும் மட்டும் நிற்பதில்லை. சந்தை மாற்றங்களோடு பண்பாட்டு மாற்றங்களும் மக்கள் வாழ்வில் புகுத்தப்படுகின்றன. நவீன வாழ்க்கை முறைகளை மக்கள் தாங்களாக விரும்பித் தேர்ந்தெடுப்பதற்கு மாறாக, எந்தப் பொருள்களை அவர்கள் வாங்க வேண்டும் என்பது உள்பட திணிக்கப்பட்ட முடிவுகளாக இருக்கின்றன. அதற்கேற்ப மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அது பண்பாட்டு மாற்றங்களுக்கும் இட்டுச்செல்கிறது.

இந்தப் பின்னணியில்தான் நாம் முற்போக்கு என்ற கருத்தாக்கத்தை, இன்றைய நிலைமையோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முற்போக்குக் கலைகள், முற்போக்கு இலக்கியங்கள் என்றெல்லாம் சொல்கிறபோது அந்த முற்போக்கு என்ற சொல்லுக்கான புதிய, தெளிவான புரிதல்களுக்கு நாம் வரவேண்டியிருக்கிறது. நாம் என்ன செய்ய வேண்டும்? அதை எங்கெங்கே செய்ய வேண்டும்? தங்கள் மீது திணிக்கப்பட்ட கடலளவான பண்பாட்டு மாற்றங்களை அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாக, எதிர்ப்புக் குரல் எழுப்ப முடியாதவர்களாக ஒடுக்கப்பட்ட மக்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களை, உள்ளே நுழைய விடாமல் மூடப்பட்ட கதவுகளை நாம் திறந்தாக வேண்டும்.

ஒடுக்குகிறவர்களால் மூடப்பட்ட அந்தக் கதவுகளைத் திறந்து நாம் நுழைந்தாக வேண்டும். இந்தியச் சூழலில், ஒடுக்கப்பட்ட மக்கள் எதிலும் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆலய வழிபாட்டில் கூட அவர்கள் வட்டத்துக்கு வெறியேதான் நிறுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். அவ்வாறு வெளியே நிறுத்தப்பட்டதன் மூலமே இங்கே நிலப்பிரபுத்துவசமுதாய அமைப்பு ஆளுமை செலுத்துகிறது. சாதியக் கட்டமைப்பு அந்த வெளியேற்றத்திற்கான ஏற்பாடாக இருக்கிறது. தமிழ், மலையாளம், இந்தி உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இதற்கான இலக்கியச் சான்றுகளும் வரலாற்றுப் பதிவுகளும் இருக்கின்றன.

அதே போன்றுதான், இன்றும் ஒடுக்கப்பட்ட பெரும்பகுதி மக்களை முன்னேற்றங்களில் பங்கேற்கவிடாமல் தடுப்பதன் மூலம் முதலாளித்துவ சக்திகளும் ஆளுமை செலுத்துகின்றன. இந்த ஆதிக்கங்களுக்கு எதிரான முற்போக்குக் கலை இலக்கிய இயக்கங்கள், பண்பாட்டுச் செயல்பாட்டையே புதிதாக வரையறுக்க வேண்டியுள்ளது. அது ஒரு பண்பாட்டுத் தலையீடாக, எதிர்ப் பண்பாட்டுத் தலையீடாக இருந்தாக வேண்டும். ஆதிக்கப் பண்பாட்டுக்கு எதிரான தலையீடு என்றால் அது இன்னொரு ஆதிக்கப் பண்பாடாக மாற வேண்டும் என்பதல்ல. தற்போதைய ஆதிக்கப் பண்பாடுகளை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அம்பலப்படுத்துவதாக, அதன் மூலம் அந்த மக்களின் விழிப்புணர்வைத் தூண்டுவதாக, விடுதலைக்குத் துணை நிற்பதாக இருக்க வேண்டும்.இரண்டாவது பணி, மிகக் கடினமான பணி, ஒரு விமர்சனக் கண்ணோட்ட உணர்வை உருவாக்குவதும் பரப்புவதுமாகும். அந்த உணர்வு மக்களிடையே - குறிப்பாக, முன்னேற்றங்களில் பங்கேற்க முடியாமல் வெளியே நிறுத்தப்பட்ட மக்களிடையே - பரப்பப்பட வேண்டும். அடுத்து கலை இலக்கியவாதிகளிடையே பரப்பப்பட வேண்டும்.

இந்தப் பணி ஏன் முக்கியமானது என்றால், இத்தகைய விமர்சனக் கண்ணோட்டம் வளர்வதை இன்றைய இந்திய முதலாளித்துவக் கட்டமைப்பு மேலும் மேலும் கடினமானதாக்கியிருக்கிறது. ஜனநாயகத்தைக் கட்டமைப்பதில் இது பிரதிபலிக்கிறது. அதே வேளையில், எந்த ஒரு சமுதாயத்தையும் போலவே இந்தியாவிலும் எதிர்ப்பு இயக்கத்திற்கான நீண்டதொரு வரலாற்றுப் பாரம்பரியம் இருக்கிறது. மக்களிடையே வேரோடியிருக்கிற அந்த எதிர்ப்புப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் முற்போக்குக்கலை இலக்கிய இயக்கம் முழுமையாக உள்வாங்கிக்கொண்டாக வேண்டும், அதன் மீது நின்று புதிய வடிவிலான எதிர்ப்பு இயக்கம் வளர்க்கப்பட வேண்டும்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளின் முற்போக்குச் சிந்தனைகள் கொண்டுசெல்லப்பட்ட வடிவங்களிலிருந்தும், அதற்கான வழிகளிலிருந்தும் கூட பெருமளவுக்கு நாம் மாற வேண்டியிருக்கிறது எனக் கருதுகிறேன். அன்று பயன்படுத்தப்பட்ட கவிதை, கதை, நாடகம் போன்ற வடிவங்களைக் கைவிட்டுவிட வேண்டும் என்ற பொருளில் நான் இதைக் கூறவில்லை. நிச்சயமாக அவை இன்றைக்கும் வினை புரியக்கூடிய வலுவான வடிவங்கள்தான்.

ஆனால், அவற்றோடு நில்லாமல், இன்றைய நிலைமைக்கும் தேவைக்கும் ஏற்ற புதிய கருவி, புதிய வழிமுறை உருவாக்கப்பட வேண்டும். அதனை இரண்டு வழிகளில் உருவாக்கலாம் என்று கருதுகிறேன். மக்களை விலக்கிவைக்கிற இன்றைய பல ஏற்பாடுகளுக்கு அப்பாற்பட்டதாக, மக்களோடு இணைந்த, மக்களை ஈடுபடுத்துகிற ஒரு பொதுவான வழிமுறையாக அது இருக்க வேண்டும். மைய நீரோட்டம் என்று சொல்லப்படுகிற வளர்ச்சிப்போக்கிலிருந்து தள்ளிவைக்கப்பட்ட மக்களோடு அடையாளப்படுத்திக்கொள்கிற வழிமுறையாக அது இருக்க வேண்டும். இதற்கான இன்னொரு சாத்தியக்கூறாக, மாற்றம் வேண்டும் என ஏற்றுக்கொள்கிற அனைத்துப்பிரிவு மக்களையும் வேறுபாடின்றி ஈடுபடுத்துகிற அணுகுமுறை தேவை.

தள்ளிவைக்கப்பட்ட மக்களையும் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவது அவ்வளவு எளிதாக நடந்துவிடாதுதான். இதை ஒரு பண்பாட்டு நடவடிக்கை என ஒப்புக்கொள்வதே கூட கடினமாக இருக்கும். மக்கள் தாங்களாக மாற்றத்திற்குத் தயாராகிவிடுவார்கள் என்று நினைப்பதும் ஒரு அழகான கற்பனையாகிவிடும். அனைத்துப் பிரிவு மக்களின் பண்பாட்டு வளங்களையும் கையில் எடுத்தாக வேண்டும்.

இது தொடர்பாக, லெனின் முன்வைத்த ஒரு கருத்தை இங்கே மேற்கோள் காட்டலாம் என்று நினைக்கிறேன். பலர் அதை ஒரு சர்ச்சைக்குரிய கருத்தாக எடுத்துக்கொள்ளக் கூடும். பண்பாடு பற்றி விரிவாகவும் நுட்பமாகவும் எழுதிய அவர் ஒரு மாற்றுப் பண்பாடாகப் பாட்டாளி வர்க்கப் பண்பாட்டை உருவாக்க வேண்டியிருக்கிறது என்றார். அதே நேரத்தில், எந்தவொரு சமுதாயத்தின் பண்பாடும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் பண்பாடாக மட்டுமேயாக இருந்துவிட முடியாது என்றும் அவர் கூறினார். நிலப்பிரபுத்துவ சமுதாயம் உருவாக்கிய பண்பாடுகள் உள்பட, முந்தைய தலைமுறைகளின் பண்பாடுகள் எல்லாம் ஆழ்ந்த வளமும் மாண்புகளும் கொண்டவை, மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை, அவை சமுதாயத்தின் செல்வங்கள் என்றார். அந்தப் பண்பாடுகள் ஒடுக்குமுறை சமுதாயத்தில், ஒடுக்கும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், அவை பின்னர் மக்களால் ஏற்கப்பட்டு, மக்களின் வாழ்க்கையோடு தொடர்புள்ளவையாக மாறியிருக்கின்றன என்று லெனின் சுட்டிக்காட்டினார்.

இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, கேரளத்தில் பல்வேறு பிரிவு மக்களுக்கும் பிடித்தமான ‘புதியா’ என்ற சமஸ்கிருத நாடக வடிவத்தைக் குறிப்பிடலாம். மிகப்பழமையான, இன்றைக்கும் நிகழ்த்தப்படுகிற இந்த நாடகவடிவத்தில் எழுதுகிறவர்கள், நிகழ்த்துகிறவர்கள் மேலாதிக்க சாதியான பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர்கள்தான். ஆனால் இந்த ‘புதியா’ நாடகம் பாகுபாடின்றி அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களால், கேரளத்தின் தனிச்சிறப்பான கலைவடிவமாக மதிக்கப்படுகிறது. கேரளத்தின் முற்போக்குப் பண்பாட்டு இயக்கத்தினர், புதியா நாடகம் குறிப்பிட்ட பிரிவினருக்கு உரியதுதானே என்று புறக்கணித்தால் அவர்களால் பெரும்பகுதி மக்களைச் சென்றடைய முடியாமல் போகும். ஆகவேதான் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துகிற மாற்றுப் பண்பாட்டை முன்மொழிந்தார் லெனின். பண்பாட்டுத் தளம் என்று வருகிறபோது, மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுச் செயல்படுவதில் ஒரு மோகம் ஏற்படக்கூடும். அந்த மோகம், மாற்றத்திற்காகத் திரட்டப்பட வேண்டிய மக்களிடமிருந்து தனிமைப்படுத்துகிற ஒரு குறுங்குழுவாத அணுகுமுறையாக மாறிவிடக்கூடும். அது பண்பாட்டுத்தளத்தில் முற்போக்காளர்களின் பணியைப் பின்னுக்குத் தள்ளிவிடக்கூடும்+என்று அவர் குறிப்பிட்டார். இதே போன்றுதான் வர்க்கப் போராட்டம் பற்றிய புதிய புரிதல் தேவை எனக் கருதுகிறேன். தத்துவம் -பண்பாடு ஆகிய இரண்டு தளங்களிலுமே அந்தப் புதிய புரிதல் தேவைப்படுகிறது. வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுகிறவர்கள், குறிப்பாகக் கலை இலக்கியவாதிகள், அதன் பல்வேறு பரிமாணங்களையும் உள்வாங்கிட வேண்டும். வர்க்கப் போராட்டம் என்று சொல்கிறபோது, வழக்கமான ஒரு புரிதல் நமக்கு இருக்கிறது. கடந்த நூற்றாண்டுகளின் வர்க்கப்போராட்டம் - குறிப்பாக 1930ஆம் ஆண்டுகளின் வர்க்கப்போராட்டம் - இன்று பல மாற்றங்களைப் பெற்றிருக்கிறது. தத்துவம், பண்பாடு ஆகிய இரண்டு தளங்களிலுமே அது பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது வர்க்கப் போராட்டம் என்ற இயற்கைத் தன்மை மாறவில்லை, அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதன் குணவியல்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றங்களைப் புரிந்துகொள்வது ஒரு முக்கியத் தேவையாகியிருக்கிறது. மற்றொரு முக்கியப் பிரச்சனை, வர்க்கம் என்ற கோட்பாடு பற்றிய புரிதலிலேயே கூட இருக்கிறது. இந்தியாவில் வர்க்கக் கோட்பாடு வலுவாக வளர்ந்திருக்கிறது. வர்க்கப் போராட்டம் வலுவாக நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதன் நுட்பமான, பன்முகக் கூறுகளைப் புரிந்துகொள்வதில்தான் சிக்கல் இருப்பதாகக் கருதுகிறேன். இவற்றைப் புரிந்துகொள்வது, வர்க்கப்போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு அடிப்படையான தேவை.

ஒரு சமத்துவ சமுதாயத்தை மலரச் செய்வதற்கான உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, இரு பெரும் சக்திகள் மிக மிக நுட்பமான முறைகளில் செயல்படுவதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒன்று ஏகாதிபத்தியம், இன்னொன்று மத-இன அடையாளவாதம். இந்தியா உள்ளிட்ட முதலாளித்துவ சமுதாய நாடுகள், ஏகாதிபத்தியத்தின் பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகின்றன. பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அரசியலில் மட்டுமல்ல, பண்பாட்டுத் தளத்திலும் ஏகாதிபத்தியம் மிக நுட்பமாகத் தன் வலைகளை விரித்திருக்கிறது. மதவெறி-இனவெறி சக்திகளும் மிக நுட்பமான தாக்கங்களைச் செலுத்துகின்றன.

முற்போக்கு இயக்கங்கள் அந்த நுட்பங்களைப் புரிந்துகொண்டு, அவற்றிற்கு ஈடுகொடுத்துப் போராடுவதற்கான திறன்களை வளர்த்துக்கொண்டு, தங்களைத் தகுதிப்படுத்திக்கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. இல்லை என்றால் தீர்வு என்ன என்ற கேள்வியும் எழுகிறது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒரு உண்மையை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். இந்தியாவில், ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதாம் ஆண்டுகளிலும் நாற்பதாம் ஆண்டுகளிலும் அன்றைய முற்போக்கு அரசியல் இயக்கமும் சரி, முற்போக்குக் கலை இலக்கிய இயக்கமும் சரி அப்படியொன்றும் பெரிய அளவுக்கு வலிமை பெற்றிருக்கவில்லை. இன்றைக்கும், இடதுசாரிகள் உள்ளிட்ட முற்போக்கு சக்திகள் வலிமையோடு வளர்ந்தாக வேண்டியிருக்கிறது.

அரசியல், பண்பாடு ஆகிய இரு தளங்களிலும் இந்த நுட்பங்களை மக்கள் இயக்கங்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது இன்றைய மிக முக்கியமான தேவை. இந்த இரு தளங்களுக்கும் ஒரு புதிய விளக்கம் தேவைப்படுகிறது. முதலாளித்துவத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் - பண்பாடு இரண்டுமே சமநிலையில் இயங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாக நான் கருதுகிறேன். பண்பாட்டுச் செயல்பாடுகள் மீது அரசியல் செயல்பாடுகள் ஆதிக்கம் செலுத்துமானால், பண்பாட்டின் மீது அரசியல் ஒரு சர்வாதிகாரத்தைச் செலுத்துமானால் - சில முன்னாள் சோசலிச நாடுகளில் அப்படித்தான் நடந்தது என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் - பண்பாட்டு இயக்கத்தால்ஆக்கப்பூர்வமான விளைவுகளை ஏற்படுத்த இயலாமல், தனது வரலாற்றுப் பங்களிப்பைச் செய்ய இயலாமல் போய்விடும்.

அரசியல், பண்பாடு இரண்டுமே ஒன்றுக்கொன்று பங்களித்து வந்திருக்கின்றன. இரண்டுக்கும் இடையேயான உறவைப் புரிந்துகொண்டால்தான், சமத்துவ சமுதாயம் காண்பதற்கான, சுரண்டலுக்கு முடிவு கட்டுவதற்கான, பண்பாட்டு ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் பின்தங்கிவிடாமல் முன்னேறிச் செல்ல முடியும். அப்போதுதான் பண்பாட்டுச் செயல்பாடு ஆக்கப்பூர்வமாக அமையும். இயக்கவியல் விதிகளின்படி பார்த்தால், முற்போக்கு அரசியலிலிருந்து முற்போக்குப் பண்பாடு வளர முடியும்; முற்போக்குப் பண்பாட்டிலிருந்து முற்போக்கு அரசியல் வளர முடியும்.

இந்த இயக்கவியலைப் புரிந்துகொள்வதும், அந்தப் புரிதலின் அடிப்படையில் மக்களிடையே இறங்கிச் செயல்படுவதும் முற்போக்கு அரசியல் - பண்பாட்டு இயக்கங்களின் முன்னுள்ள மிகப்பெரும் கடமை.

தமிழில்: அ.குமரேசன்

Pin It