"பண்பாடு- புரிதலை நோக்கி..." கலந்துரையாடலின் தொட‌ர்ச்சி...

ராஜன்: திராவிட இயக்க வளர்ச்சிக்கு பாலியல் பேச்சுகள்தான் காரணம் என்று சொல்வது, அந்த இயக்கத்தின் பங்களிப்பை எளிமைப்படுத்துவதாக இருக்கிறது. பல்கலைக்கழகங்களிலும் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பெருமளவுக்கு வந்திருக்கிறார்கள். இடஒதுக்கீட்டில் அல்ல, பொது ஒதுக்கீட்டிற்கான இடங்களிலேயே இவர்கள் வந்திருக் கிறார்கள். தகுதி, திறமை பற்றியெல்லாம் யாரும் இப்போது பேச முடியாது. அப்படிப் பேசினால் இந்தக் கல்வி நிறுவனங்களின் புள்ளிவிவரங்கள் முகத்தில் அறைகின்றன. ஒரு பெரும் பரப்பு இப்படி ஒரு சமதளத்திற்கு வந்திருப்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு மிகப்பெரியது. திராவிட இயக்கம் வலுவாகச் செயல்பட்ட இந்த இடத்தில்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. வேறு எங்கேயும் இல்லை.

tamil_370குமரேசன்: திராவிட இயக்கத்தின் போராட்டங்கள், இட ஒதுக் கீடு உரிமைகள் போன்றவை இந்த நிலையை உருவாக்கி யுள்ளன என்பதை மறுக்க முடியாது. அதே நேரத்தில், இன்று அந்த இட ஒதுக்கீடு கொள்கைக்கே எதிரான தனியார்மயம், உலகமயம் உள்ளிட்ட நடவடிக்கைகள் வேகமாகப் புகுத்தப்படுகிறபோது, அதற்கு எதிரான போராட்டத்தை திராவிட இயக்கத்தில் காண முடிய வில்லையே...

ராஜன்: ஆம், திராவிட இயக்கத்தின் தேவையும் பங்கும் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது போலத்தான் தெரி கிறது. அதற்காக அவர்களின் முந்தைய பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

நாம் சாதியத்திற்குப் பண்பாட்டுக் காரணியை மட்டும் சொல்ல முடியாது. ஆழமான பொருளா தாரக் காரணம் இருக்கிறது. பட்டியல் சாதி மக்களில் தொண்ணூறு சதவீதத்தினர் கூலித் தொழிலாளர்கள்தான். இவர்களில் ஒரு ஐந்தாறு சதவீதத்தினர் கார்ப்பரேட் நிறுவனங் களுக்குள் வருகிறார்கள் என்றால், மீதியுள்ளவர்களின் சமூக நிலைதான் இவர்களுடைய நிலையையும் தீர்மானிப்பதாக இருக்கும்.

லட்சுமணன்: திராவிட இயக்கத்தின் இந்த சமூகப் பொருளாதாரப் பங்களிப்பை மறுக்கவில்லை. அவர்களது அரசியலில், ஆண்-பெண் உறவு பற்றிய பேச்சையும் அணுகுமுறையையும் தான் நான் குறிப்பிட்டேன். அதை மையமாக வைத்து அவர்களுடைய கதைகள், திரைப்படங்கள், அரசியல் மேடைகள் எல்லாம் அமைந்தன. சட்ட மன்றத்திலேயேகூட அதை மையமாக வைத்துக் கொச்சையான வாதங்கள் நடந்திருக்கின்றன. ஆண்-பெண் உறவு என்றால் இப்படித்தான் என்றொரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள், மக்களிடையே அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: தமிழகத்தில் அரசியலிலோ, சமுதாயத்திலோ எதையும் கேள்வி கேட்கிற ஒரு துணிவு வளர்ந்திருக்கிறது என்றால் அது திராவிட இயக்கத்தால் நிகழ்ந்த முக்கியமான, பெரிய மாற்றம்தான் என்பதை மறுக்க முடியாது. அதே வேளையில், தமிழ்ப்பண்பாடு பற்றி வலியுறுத்திப் பேசிய திராவிடக் கட்சிகளின் தலைவர்களில் பலர் அதற்கு விசுவாசமாக இல்லை. பலதார மணம், பல பெண்களுடன் தொடர்பு என்று சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது. அது பெருமைக்குரிய விசயமாகவும் பார்க்கப்படுகிறது.

லட்சுமணன்: அதற்கு முக்கியக் காரணம், திராவிட இயக்கம் வளர்ந்த இதே தமிழகத்தில் மக்கள் அரசியலாக்கப்படவில்லை என்பதுதான். மேற்கு வங்கத்தைப் பற்றிச் சொன்னீர்கள், அங்கே பெருமளவுக்கு மக்கள் அரசியலாக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு ரிக்ஷா தொழிலாளிக்குக்கூட, தான் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்காக வாக்களிக் கிறோம் என்ற ஒரு குறைந்தபட்ச புரிதல் இருக்கிறது. இங்கே அப்படி நிகழவில்லை.

ராமகிருஷ்ணன்: மேற்கு வங்கத்தில் நான் விரிவாகப் பயணம் செய்திருக்கிறேன். நீங்கள் சொல்கிற அரசியலாக்கப்படுதல் என்பதை நகரங்களில்தான் காண முடிந்தது. கிராமப் பகுதிகளுக்குப் போகப்போக, அவர்களுடைய அடிப்படைப் பிரச்சனைகள் பற்றிய அக்கறை மட்டுமே இருப்பதைக் கண்டேன். இடதுசாரிகளின் அரசியல் முக்கியத்து வம் பற்றிய புரிதல் இருந்ததாகக் கூற முடியாது. அதனால்தான், சில அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காதபோது, தங்களுடைய பழைய மரபைப் பின்பற்றி, ஒரு மாற்றம் தேவை என்று முடிவு செய்து, தேர்தலில் அதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மனப்போக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே எனது வங்கப் பயணத்தில் உணர முடிந்தது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் அரசியல் பேசப்படுகிறது. ஆனால், ஊடகங்களின் மூலம் அவர்களைச் சென்றடைகிற செய்திகள் என்ன என்ற அடிப்படையில்தான் அந்த அரசியல் வாதங்கள் இருக்கின்றன. செய்திகள் அவர்களிடம் போய்ச்சேர வில்லை என்பதுதான் இங்கே பிரச்சனை.

குமரேசன்: இங்கே டீக்கடை அரசியல் என்று கிண்டலாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் டீக்கடை அரசியல் இங்கே ஆரோக்கியமாகத்தான் நடந்திருக்கிறது. எந்தக் கட்சிக்கு ஆதரவாக மக்கள் முடிவு செய்கிறார்கள் என்பதில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம், ஆனால் அது குறித்த ஒரு விவாதத்தைத் தமிழக மக்கள் நடத்தத்தான் செய்கிறார்கள். இதிலே பெண்ணின் இடம் என்ன என்பதைப் பற்றி நாம் பேசலாம். தனிப்பட்ட சில பெண்கள் தங்களைத் தலைவர்களாக நிலை நாட்டிக்கொண்டிருந்தாலும், பொது வெளியில் பெண்ணின் அரசியல் இடம் என்னவாக இருக்கிறது?

ராமகிருஷ்ணன்: பெண்ணை உடைமைப் பொருளாக மாற்றிய நிலப்பிரபுத்துவப் பண்பாடுதான் அரசியலிலும் ஆளுமை செலுத்துகிறது. நிலத்தை உடைமையாக்கி, உரிமைகொள்கிற ஆக்கிரமப்பு மன நிலைதான் பெண்ணை ஆக்கிரமிப்பதிலும் செயல்படுகிறது. பெண்ணைத் தனது உடைமையாக ஆண் கருதுகிற மனநிலையாக, அவளது நிலையைத் தீர்மானிப்பது தனது அதிகா ரம் என்ற மனநிலையாகச் செயல்படுகிறது.

குமரேசன்: அதனால்தான், ஒரு குடும்பத்தில் மகன் யாரோ ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் என்றால், ஒரு கட்டத்தில் அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அதுவே, மகள் யாரையோ காதலிக் கிறாள் என்றால் அதை அவ்வளவு எளிதில் வீட்டார் ஏற்றுக் கொள்வதில்லை. மகன் மூலமாக ஒரு சொத்து வருகிறது, மகள் காதலிக்கிறாள் என்றால் ஒரு சொத்து கையைவிட்டுப் போகிறது என்ற அடிப்படையான மனநிலையிலிருந்து பிரச்சனையாக்கப்படுகிறது.

ராமகிருஷ்ணன்: பெண்ணை வெற்றி கொள்வதே ஒரு முக்கியச் செயல்பாடாகிறது. ஒரு ஆண், தன் வாழ்நாள் முழுக்க எந்த அளவுக்குப் பெண்ணைக் கட்டுப்படுத்தி வைக்கிறானோ அந்த அளவுக்கு அவன் வெற்றி பெற்றவனாகப் பார்க்கப்படுகிறான். காதலி, மனைவி, தாய், மகள், சகோதரி என அனைத்து உறவுகளிலும் இந்த ஆளுமையும் ஆக்கிரமிப்பும் இருக்கின்றன.

அண்மையில் பழநி பேருந்து நிலையத்தில் பார்த்த காட்சி நினைவுக்கு வருகிறது. நள்ளிரவு நேரம். தங்களுடைய பேருந்துக்காகக் காத்திருந்த ஒரு குடும்பத்தில், இரண்டு இளம் பெண்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து தூங்க முயல்கிறார்கள். அவர்களைத் தூங்கவிடாமல் தடுக்கிறான் தந்தை. பெண் பிள்ளைகள் பொது இடத்தில் தூங்கக் கூடாது என்று சொல்கிறான். அவனுடைய வயதான மனைவி தரையிலேயே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்ததை அவன் தடுக்கவில்லை. அவனுடைய மகன் தூங்கிக்கொண்டிருந்தான்,  அவனையும் தடுக்கவில்லை. ஆனால் வயதுக்கு வந்த மகள்கள் தூங்க அனுமதிக்கவில்லை. அவன் அசந்த நேரத்தில்தான் அவர்களும் சற்று கண்ணயர்ந்தார்கள். அவனுக்கு அவர்கள் மீது அக்கறையில்லை என்று சொல்ல முடியாது. அதே வேளையில், பெண்ணைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாப்பாக வைக்கிற சமூக மனநிலையோடும் அவன் இருந்தான்.

பெண்கள் மீற முயல்கிறபோதெல்லாம் அவர்கள் சொல்ல முனைவது ஒன்றுதான். ‘நான் உன் உடைமைப்பொருள் அல்ல. நாம் இணைந்து வாழ்கிறோம். உனக்குள்ள உரிமைகள் எனக்கும் இருக்கிறது,’ என்பதுதான் மீறுகிற பெண் சொல்கிற செய்தி. ஆணோ, தன் உடைமைப் பொரு ளாகக் கருதுவதால், பெண்ணின் இடுப்பில் ஒரு கயிறைக்கட்டி, அந்தக் கயிறு எவ்வளவு நீளமோ அந்த நீளத்திற்கு மட்டும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கிறான். குடும்பத்தின் நிலையைப் பொறுத்து, அந்தக் கயிறு அமெரிக்கா வரையில் கூட நீளும்!

அந்தக் கயிறை அறுக்கிற செயலில், அறுப்பது பற்றிப் பேசுவதில் பெண்கள் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். பெண் தனியாகக்கூட வாழ முடியும் என்று காட்ட முயல்கிறார்கள். சமுதாயத்தின் சீரழிவுக் கட்டத்தில் இது நிகழ்வதால், பெண் இப்படி உரிமை பேசுவதேகூட ஒரு சீரழிவாகப் பார்க்கப்படுகிறது. கல்வியின் மூலம் சுதந்திரம் கிடைக்கும் என்று பெண் எதிர்பார்த் தாள். நேரெதிராக, இரட்டைச் சுமைதான் பெண்ணின் மீது ஏற்றப்பட்டது. நீ வேலைக்கும் போ, வீட்டு வேலையையும் பார், பண்பாட்டுப் பெருமையையும் காப்பாற்று என்று மேலும் நுட்பமான கயிறுதான் கட்டப்பட்டிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: பெண்ணுக்கு எந்த விதமான கல்வி கிடைத்தது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெண் விடுதலையையும் பெண்ணின் உரிமையையும் சொல்கிற கல்வி பெண்களுக்குக் கிடைக்கவில்லை. ஆணின் மனதில் பெண் பற்றியதாக இருக்கிற சித்திரத்தை அழிக்கிற கல்வியாகவும் அது இல்லை. இந்தக் கல்வியால் பெண்ணின் விடுதலையை நிலைநாட்டிவிட முடியாது. ஏற்கெனவே இருக்கிற நிலவுடைமைச் சமூக அடிமைத் தனங்களை அறிவியல்பூர்வமாக நியாயப்படுத்துகிற கல்வியாகத்தான் இது இருக்கிறது. அம்பேத்கர் ‘கற்பி’ என்று சொன்னார் என்றால், இந்தக் கல்வியை அல்ல. மாற்றத்திற்கான, விடுதலைக் கான கல்வியைத்தான் சொன்னார்.

ராஜன்: அடிப்படையான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. கல்விக் கூடங்களிலும் பணித்தலங்களிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இது இப்படியே நிற்கும் என்று சொல்ல முடியாது. இந்த அளவு மாற்றம், எதிர்காலத்தில் படிப்படியாக மன நிலை மாற்றத்திற்கும் இட்டுச் செல்லும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

ராமகிருஷ்ணன்: நாம் விவாதிக்கிற பல கூறுகள் விக்டோரியன் மொராலிட்டி (விக்டோ ரியா அறம் - ஆங்கிலேய அறநெறி) சார்ந்தவை. அதன் தாக்கத்தில், இங்கே ஏற்கெனவே இருந்த சில முற்போக்கான கூறுகளை இழந்திருக்கிறோம். உதாரணமாக, நியூடிட்டி (நிர்வாணம்) தொடர்பாக இங்கே நிலவியிருந்த கோட்பாடே வேறு. ஆனால், இன்று விக்டோரியன் மொராலிட்டி அடிப்படை யிலேயே பெண்ணின் உடல் சார்ந்த ஆபாசம், வக்கிரம் உள்ளிட்ட பார்வைகள் ஊட்டப் பட்டிருக்கின்றன. விதவைத் திருமணம் இங்கே இல்லாமலிருந்தது போன்ற சில பலவீனங் களைப் பயன்படுத்திக்கொண்டு வந்த ஆங்கிலேயர்கள், அவர்களுடைய பலவீனங்களை இங்கே திணித்து விட்டார்கள்.

பெண்ணுக்குச் சுதந்திரமும் அதிகாரமும் இருப்பது போன்ற மனநிலையை ஏற்படுத்துவதில் மதம் ஒரு முக்கியப்பங்காற்றி வந்திருக்கிறது. கதைகளாக, சடங்குகளாக பெண் தெய்வங்களாக பெண் ணின் உடல் சார்ந்த போதனைகளாக, பெண்ணுக்கு ஒரு பண்பாட்டு வெளி வழங்கப் பட்டிருக்கிறது என்ற மனநிலை கட்டப்பட்டிருக்கிறது. எல்லா மதங்களும் இதைச் செய்திருக்கின்றன. இந்து மதத்தில் உள்ள நிலைமைகள் நமக்குத் தெரியும். கிறிஸ்துவத்தில் பெண் புனிதத் துறவியாகிவிட முடிவதில்லை. இஸ்லாமியத்தில் பெண்ணுக்கு முகத் திரையோடு மேலங்கி போடப்பட்டுவிட்டது. பௌத்தத்தில் பெண் துறவிகளுக்குக் கட்டுப்பாடு கள் உள்ளன. சமணத்தில், கடுமையாகத் துறவறம் மேற்கொள்கிற பெண் அடுத்தபிறவியில் ஆணாகப் பிறக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்மீக விடுதலைக்காகத்தான் மதம் என்கிறார்கள். அப்படியானால் அதில் பெண் வெளியே நிறுத்தப்பட்டது எப்படி? ஆகவே பெண் விடுதலை, மதத்திற்கு எதிரான போராட்டத்தோடும் இணைகிறது.

தமிழ்ச்செல்வன்: மதம், அரசியல் இரண்டிலுமே தன்வயப்படுத்துவது, திணிப்பது என்ற இரண்டு ஏற்பாடுகளும் உண்டு. அரசியலில் எடுத்துக்கொண்டால், ஏகாதிபத்தியம் ஒரு நாட்டில் நுழைகிறபோது, அங்கே உள்ள கூறுகளைத் தன் வயப்படுத்திக்கொள்கிறது. உதாரணமாக, வெள்ளைக்காரர்கள் காலில் ஷூ அணிந்து எங்கே வேண்டுமானாலும் போவார்கள். இங்கே காலில் செருப்பணிய அனுமதிக்கப்பட்டவர்கள், பெரிய மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றால் அதைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டுதான் போக வேண்டும் என்றிருந்தது. இங்கே வந்த வெள்ளைக்காரர்கள், மேலதிகாரிகளைக் காண வருகிற இந்திய அதிகாரிகள் காலில் ஷூ இல்லா மல்தான் உள்ளே வரவேண்டும் என்ற விதியைக் கொண்டுவந்தார்கள்.

மதத்தில் எப்படி இந்தத் தன்வயமாக்குதலும் திணிப்பும் நடந்தன என்றால், கிராமப்புற தெய்வங் களை இந்துப் புராணங்களோடு இணைத்தது போன்ற செயல்கள் மூலமாக நடந்தன. கிராமங் களில் மனுசியாக வாழ்ந்து, போராடி, தலைவியாகப் போற்றப்பட்டு, பின்னர் தெய்வமாக வணங் கப்பட்டு உருவானவைதான் பெண் தெய்வங்கள். மாரியம்மா போன்ற பெண் தெய்வங்கள் பார்வதியின் அவதாரமாக சித்தரிக்கப்பட்டன. சுடலை மாடன்கள் சிவனின் வடிவங்களாக்கப் பட்டார்கள். கிராமக்கோயில்களின் எளிய சடங்குகள் சமஸ்கிருத மயமாக்கப்பட்டன. இவற்றோடு இணைந்து பெண்ணடிமைத்தனம் கெட்டிப்படுத்தப்பட்டது.

லட்சுமணன்: பெண்ணைக் கட்டுப்படுத்தி வைப்பது, சாதியை இறுக்கமாக்குவது இரண்டும் இந்தியப் பண்பாட்டின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்கிறோம். இவற்றையும், பல மூட நம்பிக்கைகளையும் பராமரித்து வந்திருப்பதில் ஜாதகம், சோதிடம் ஆகியவை முக்கியமான பங்காற்றி வந்திருக்கின்றன.

குமரேசன்: இதற்கெல்லாம் எதிரான முற்போக்குச் சிந்தனைகள் வளர்வதற்கு இன்றைய பொருளாதாரக் கட்டமைப்புகள் தடைகளாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அதிநவீன தொழிலாக இருக்கிற தகவல் தொழில்நுட்பத் துறையின் பல தனியார் நிறுவனங்களில் ஊழியர்கள் யாரும் நிரந்தரமானவர்கள் அல்ல. அவர்களுக்காக மாதந்தோறும் மது, ஆட்டபாட்டம் என்று கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அவர்கள் வேறு எதையும் சிந்திக்க முடியாதவர்களாக வார்க்கப்படுகிறார்கள். சென்னையின் சில பகுதிகளில் இருக்கும் விடுதிகளில், பாலியல் தொழிலாளர்களை நாடி வருகிறவர்களில் பெரும்பாலோர் இந்தத்துறையின் ஊழியர்களும் அதிகாரிகளும் தான்.

என்னுடைய தினசரி ரயில் பயணத்தில், இரவில் வீடு திரும்பும்போது பல பெரிய நிறுவனங்களின் இளம் ஊழியர்கள் வருகிறார்கள். மடிக்கணினிகளை விரித்துவைத்துப் பேசிக்கொண்டே பயணிக்கிறார்கள். அவர்களுடைய பேச்சில் கணினிக்கான ரேம், ஜி.பி., ஸ்பீட் போன்ற சொற்கள்தான் அடிபடுகின்றனவே தவிர, சமூகப் பிரச்சனைகளையோ அரசியலையோ அவர்கள் பேசுவதே இல்லை. தாங்கள் சுரண்டப்படுவது பற்றிக்கூட பேசுவதில்லை. சுதந்திர மென்பொருள் இயக்கம் போன்றவற்றில் தங்களை இணைத்துக் கொள்வதில்லை. விமர்சிக்காதவர்களாக, கேள்வி கேட்காதவர்களாக அவர்கள் வார்க்கப்படுவதன் இன்றைய கார்ப்பரேட் கலாச்சாரம் பற்றியும் நாம் பேசியாக வேண்டும்.

தமிழ்ச்செல்வன்: இந்த இளம் வல்லுநர்கள் வேலைக்குச் சேரும்போதே அவர்களுடைய சான்றிதழ்களை நிறுவனம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு வாங்கிவைத்துக்கொள்கிறது. சங்கம் வைக்கிற உரிமை மறுக்கப்படுகிறது. வேலைப்பளு திணிக்கப்படுகிறது. தொடக்கத்தில் நல்ல ஊதியம் கவர்ச்சிகரமாக இருந்தாலும், நாளாக நாளாக, தப்பித்துச்செல்லும் மனநிலையும், தப்பிக்க முடியாத சூழலுமாக மாட்டிக் கொள்கிறார்கள்.

மற்ற தொழில்கள் போல, குறிப்பிட்ட பயிற்சியோடு போய் வேலையில் நிரந்தரமானோம் என்று ஐ.டி. துறையில் இருக்க முடியாது. இவர்கள் தங்களது கணினி அறிவை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையென்றால் வெளியே தள்ளப்பட்டுவிடுவார்கள். அந்த அச்சத்தோடும் இருப்பதால், வேறு சிந்தனைகள் வருவதில்லை.

ராமகிருஷ்ணன்: கண்ணுக்குத் தெரியாத முதலாளி, கண்ணுக்குத் தெரியாத அலுவலகம் இரண்டும் இந்தத்துறையின் முக்கியமான அம்சங்கள். தன் முதலாளியார் என்பதே அவர்களுக்குத் தெரியாது. இங்கே வேலை செய்தாலும், அமெரிக்காவில் இருக்கிற முதலாளியோடு இவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இந்தச் சுரண்டலுக்கு இங்குள்ள பண்பாடுகள் தடையாக இருக்கிறபோது, மாற்றுப்பண்பாடாக அந்தக் கேளிக்கைகளின் மூலம் அவர்களை இந்த அமைப்பு ஈர்க்கிறது. அதற்கென்றே தனி வீடு பிடித்து, மது விருந்தும், நடனமும், நடிகைகளோடு உல்லாசமும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட சூழல் அவர்களை மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவேகூட மாற்றிவிடுகிறது. சிலர் ஏதாவது தொண்டு நிறுவனங்களையும், மன அமைதிக்கான அமைப்புகளையும் நாடி அமைதியைத் தேடுகிறார்கள். மிகச் சிலர்தான் இலக்கியம், கலை என்று ஈடுபடுகிறார்கள்.

தமிழ்ச்செல்வன்: உலகமயமாக்கல் சூழலில் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் கார்ப்பரேட் தனி மனித பலவீனம் என்றுதான் பொதுவாகக் கூறப் படுகிறது. ஆனால் அதன் பின்னணியிலும் கார்ப்பரேட் கலாச்சாரம் இருக்கிறது.

ராமகிருஷ்ணன்:தற்கொலை மனநிலையில் விழக்கூடியவர்களை மீட்பதிலும் நம்பிக்கையூட்டு வதிலும் உறவுகள் எப்போதுமே ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டுவந்திருக்கின்றன. அது குடும்ப உறவாகவும் இருக்கலாம், நட்புறவாகவும் இருக்கலாம். இப்போது அந்த உறவுகள் துண்டிக் கப்படுகின்றன.

‘நடுவில் உள்ளவள்’ என்று ஒரு கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு நண்பர் என்னிடம், ‘இப்பதான் நடுவில் உள்ளவங்கன்னு யாருமே கிடையாதே’ என்றார். இரு மனிதர்களுக்கு நடுவே  ஆறுதல் அளிக்கவும், ஆலோசனை கூறவும் ஆளில்லாத நிலையில் தற்கொலை மனப்போக்கு அதிகரிக்கிறது.

தமிழ்ச்செல்வன்: ‘முதலாளித்துவம் மனித உறவுகளைப் பண உறவுகளாக மாற்றுகிறது’ என்றார் மார்க்°. முன்னெப்போதையும் விட இப்போது அதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

லட்சுமணன்: விவசாய உற்பத்தி முறை மாற்றப்பட்டு, முதலாளித்துவ உற்பத்தியிலும் இது வரை இருந்த முறை பின்னுக்குத்தள்ளப்பட்டு இன்று எங்கும் நிதி மூலதனத்தின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிறது. முன்பு ‘ஃபோர்டிசம்’ எனப்பட்ட தொழில் உற்பத்தி முறையில், ஒரு கார் தொழிற்சாலை இருக்கிறது என்றால் காருக்கான அனைத்துக் கருவிகளும் பொருள்களும் ஒரே வளாகத்தில் தயாரிக்கப்பட்டன. இன்று காரின் இன்ஜின் ஓரிடத்தில், வீல் ஓரிடத்தில், பிரேக் ஓரிடத்தில் என்று வேறு வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு இணைக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் முழுக்காரின் உற்பத்தியிலிருந்து விலக்கி வைக்கப்படுகிறார்கள். தற்காலிகத் தொழிலாளர்களுமாக ஒப்பந்தத் தொழிலாளர்களுமாக மாற்றப் படுகிறார்கள். தங்களுடைய இருப்பு பற்றிய பேரச்சம் எழுந்தவர்களாகத் தொழிலாளர்கள் வைக்கப்படுகிறார்கள்.

எண்பதுகளுக்கு முந்தைய முதலாளித்துவத்தில் தொழிலாளர்களின் சில உரிமைகள் பாதுகாக்கப்பட்டன. நவீன முதலாளித்துவத்தில் அந்த உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அந்த உரிமைகளை வழங்குவதற்கு மாறாக, மதம், சாதி, கேளிக்கைகள் என்று வேறு அடையாளங்கள் பொறிக்கப்படுகின்றன. இதிலிருந்துதான் அச்சம், மனநலம் பாதிப்பு, தற்கொலை உணர்வு ஆகியவை ஏற்படுகின்றன.

நவீன முதலாளித்துவத்தின் தேவையிலிருந்து, தலித் தன்வரலாறு போன்ற முயற்சிகள் ஊக்கு விக்கப்படுகின்றன. ‘உன் வலிகளை வெளிப்படையாகப் பேசு, பதிவு செய்’ என்று வழிகாட்டப் படுகிறது. அதில், இதுவரை வெளியே தெரியாமலிருந்த உண்மைகள் வெளிப்படுவது உண்மை. ஆனால், அதற்கான மாற்றை நோக்கிச் செல்வதற்கு மாறாக, ஒரு வடிகால் என்ற அளவிலேயே வைக்கப்படுகிறது.

உலகமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் எப்படி இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக இருக் கின்றன என்று நிறையவே பேசப்பட்டிருக்கிறது. இந்தியாவில் தொண்ணூறாம் ஆண்டுகளில் தான் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் இந்தக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டன என்று நமக்குத் தெரியும். ஆனால், இட ஒதுக் கீட்டிற்கான மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த வி.பி. சிங் அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து தான், தனியார்மய, தாராளமய நடவடிக்கைகள் கொண்டுவரப்பட்டன என்பதையும் நாம் கவனத் தில் கொள்ளவேண்டும்.

இன்று, நெருக்கடியில் சிக்குகிற தனியார் நிறுவனங்களை பெயில் அவுட் பண்ணுவதற்கு அரசு எத்தனை ஆயிரம் கோடி வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறது. ஆனால் பொதுத் துறை நிறுவனங்களை மீட்கத் தயாராக இல்லை. நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர்களில் அமைப்புசார்ந்த தொழிலாளர்கள் ஏழே ஏழு சதவீதம்தான் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. மீதி தொண்ணூற்று மூன்று சதவீதம் முறைசாராத் தொழிலாளர்கள்தான். அந்த ஏழு சதவீத அமைப்பு சார்ந்த பணியிடங்களிலும் நான்கு பங்கு தனியார் துறையில்தான். மூன்று பங்குதான் அரசுத்துறையிலும், பொதுத்துறையிலும். இந்த மூன்று சதவீதத்துக்கு உள்ளேதான் இட ஒதுக் கீடும், பொது ஒதுக்கீடும். எடுத்த எடுப்பிலேயே இட ஒதுக்கீடு அரசியல் பேசுகிற பலரும், அதற்கு உலைவைக்கிற இந்தக் கொள்கைகள் பற்றியோ, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பற்றியோ வாய் திறப்பதில்லை. இந்த நாட்டின் நில வளம், நீர் வளம், கனிம வளம், மனித வளம் பற்றியெல்லாம் ஒரு நிமிடம்கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் கொண்டுவரப் பட்டதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம். சொந்த மக்களை அடித்து விரட்டி அந்த மண்டலப்பகுதிகள் வெளி நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து ஏற்படுத்துகிற பொருளாதார நெருக்கடி சமூகத்தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் எதிர்வினையாற்றுகின்றன.

ராஜன்: நிதி மூலதனம் பற்றிப் பேசுகிறபோது, அது ஏதோ பிரைமரி இண்டஸ்ரி (அடிப்படைத் தொழில் - விவசாயம்), செகண்டரி இண்டஸ்ட்ரி (இரண்டாம் நிலைத்தொழில்) இரண்டுக்கும் அப்பாற்பட்டு தனித்து இயங்குவது போலப் புரிந்துகொள்ளக்கூடாது. செகண்டரி இண்டஸ்ட்ரி யில் கிடைக்கிற உபரி லாபத்தைத்தான் சேவைத் துறையாகிய நிதிநிறுவனங்களில் முதலீடு செய்கிறார்கள். அந்தத் தொழில்களில் நெருக்கடி ஏற்பட்டால் நிதிமூலதனமும் சீர்குலையும். இதைத்தான் அண்மையில் பார்த்தோம்.

மின்சாரம் உள்பட பல்வேறு உற்பத்திகள் அமெரிக்காவிலும் மற்ற பல மேற்கத்திய நாடுகளிலும் தேக்கநிலைக்கு வந்துவிட்டன. ஆகவேதான் அவர்கள் தங்களுடைய லாப உபரியை எடுத்துக் கொண்டு இந்தியா போன்ற நாடுகளுக்கு வருகிறார்கள். இங்கே உற்பத்தி செய்து மற்ற நாடு களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக மட்டுமல்ல. இந்தியச் சந்தையிலேயே அவர்களுடைய கார் களும் டூ வீலர்களும் இதர பல பொருள்களும் கணிசமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உலகம் முழுவதும் அவர்களுடைய பணம்தான் உற்பத்தித் துறையிலும், உற்பத்தியல்லாத சேவைத் துறை யிலும் பாய்கிறது என்பதுதான் பிரச்சனை, அதுதான் நாம் பேசிக்கொண்டிருக்கிற பண்பாட்டுத்தளத் திலும் சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குமரேசன்: இதை இப்படிப் புரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். முதலாளித்துவம் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்காகவும் தனியார் மயமாக்கல், பொதுத்துறை அழிப்பு, சேவைத்துறை என்ற பெயரில் பங்குச்சந்தை சூதாட்ட முதலீடு என்றெல்லாம் மாற்று வழிகளைச் செயல்படுத்துகிறது. முதலாளித்துவ சந்தை விதிகளின் காரணமாக, இந்த நடவடிக்கைகள் தற்காலிக பலனளிப்பது போலத் தெரிந்தாலும், இறுதியில் அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதாக முடிகிறது. அது மேலும் மேலும் நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்கிறது. அதன் தாக்கம் மக்களின் வாழ்க்கையிலும் பண் பாட்டிலும் பிரதிபலிக்கிறது.

தமிழ்ச்செல்வன்: இப்படிப்பட்ட ஏற்பாடுகளில் மொழி ஆளுமை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. மொழியைக் கட்டுப்படுத்துவது, மொழியால் கட்டுப்படுத்துவது என்று இரண்டு வழிகள் இருக்கின்றன. ஆங்கிலம் இங்கே ஒரு கட்டளையிடும் மொழியாக வந்தது. இந்திய மொழிகளை அவர்கள் அப்படியே எடுத்துக் கொள்ளவில்லை. தங்கள் வசதிக்கேற்பவே எடுத்துக்கொண்டார்கள். மதுரையை மெஜூரா என்றார்கள், தூத்துக்குடியை டூட்டுக்கொரின் என்றார்கள். அதை இங்கேயிருந்த மிடில்கிளாஸ்காரர்கள், நம்முடைய ஊர்ப் பெயர்கள் மாற்றப்படுகின்றனவே என்ற உறுத்தலே இல்லாமல், வெள்ளைக்காரர்களுக்கு எப்படிச் சொல்ல வந்ததோ அதைத் தாங்களும் ஏற்றுக்கொண்டார்கள். மறுநாளிலிருந்தே அவர்களும் மெஜூரா, டூட்டுக்கொரின் என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

குமரேசன்: மொழியின் மூலமாக மக்களிடையே நேரடி வினைபுரிவது கலை இலக்கியம் தான். எல்லாக் கால கட்டங்களிலும் கலை இலக்கியம் மூலமாகவே நியதிகள் கற்பிக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டன. அந்த நியதிகளை எதிர்த்த மனப்போக்கும் கலை இலக்கியமாக வெளிப் பட்டிருக்கிறது. தற்போதைய பொருளாதார ஆதிக்கங்கள், அதனால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் ஆகியவற்றை நியாயப்படுத்துகிற கலை இலக்கியப் படைப்புகள் வருகின்றனவா?

லட்சுமணன்: கலை இலக்கியங்கள் மக்களை ஊடகங்கள் வழியாகவே சென்றடைகின்றன. இன்று குறிப்பாக காட்சி ஊடகங்கள் இவற்றை ஹைஜாக் செய்துவிட்டன. உலகமயமாக்கல் சூழலில் ஊடகங்களும் கார்ப்பரேட் கட்டுப் பாட்டில்தான் செயல்படுகின்றன. தற்போதைய சுரண்டலையும் ஆதிக்கங்களையும் ஏற்கும்படி ஊடகங்களின் துணையோடு பெரிய அளவுக்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது. வளரும் நாடுகளின் மக்கள் அரசியல் ரீதியாகக் காயடிக்கப் பட்டவர்களாக மாற்றப்படுகிறார்கள். மக்களின் கலை இலக்கியத் தேவைகள் வர்த்தகச் சரக்காக மாற்றப்படுகின்றன.

திரைப்படங்களை எடுத்துக்கொண்டால் ஒரு பக்கம் வட்டாரக் கதைகள் முன்னுக்கு வருகின்றன. இன்னொரு பக்கம், இதுதான் வட்டாரக் கதை என்று விறுவிறுப்புக்காக என வன்முறைகள் நியாயப்படுத்தப்படுகின்றன.

இதில் ஒரு ஆக்கப்பூர்வமான அம்சமும் இருக்கிறது. பெண் விடுதலைச் சிந்தனைகள், தலித் விடுதலைச் சிந்தனைகள் இதே ஊடகங்கள் வாயிலாக வெளிப்படவும் செய்கின்றன. எந்த அளவுக்கு இவை முழுமையான பெண் விடுதலைக்கோ, தலித் விடுதலைக்கோ உதவப்போகின்றன என்பதில் கருத்து மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் பெண்ணின் கோபங்களும், தலித் ஆவேசங்களும் எழுத்தாக, படமாகப் பதிவாவது தீவிரமாக நடக்கிறது. ஒரு விரிவான சந்தை இருக்கிறது என்ற வர்த்தக ஏற்பாட்டோடு இது கலந்திருக்கிறது என்றாலும், அந்தச் சிந்தனைகளும் பரவுகின்றன. உலகமயமாக்கலோடு கொண்டுவரப்பட்ட இணையத் தொடர்புகள், வர்த்தகப்போட்டிக்காக தரமான சரக்குகளைத் தர வேண்டியிருக்கிற பெரும் ஊடகங்கள் - இவற்றின் துணையோடு தலித் குரலும், பெண்ணின் குரலும் பதிவு செய்யப்பட்டு, விரிவான தளங்களுக்குச் செல்வது வரவேற்கத் தக்கதுதானே...

தமிழ்ச்செல்வன்: காட்சி ஊடகத்தைக் கட்டுப்படுத்துகிற ‘ரிமோட் கன்ட்ரோல்’ கையில் தரப்பட் டிருப்பது, வேகவேகமாக சானல்களை மாற்றுகிற பழக்கத்தை ஏற்படுத்திவிட்டது. ஒரு நிகழ்ச்சி வேகமாக இல்லை என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் சலிப்படைகிறார்கள். அதைத் தவிர்த்துவிட்டு வேறு நிகழ்ச்சிக்குப் போகிற மனப்போக்கு, குறிப்பாக இளைஞர்களிடையே பரவியிருக்கிறது. இந்த சலிப்படைகிற உளவியல், குடிப்பழக்கம் போன்று பரவியிருக்கிறது. சமூகத்தில் இதனால் எந்த ஒரு ஆழமான சிந்தனைகளையும் கொண்டுசெல்ல முடியாத, மாறுபட்ட கருத்துகளை விவாதிக்க முடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

குமரேசன்: ஊடகங்கள் இன்றைய பெரும் வர்த்தக நிறுவனக் கட்டமைப்பை நியாயப்படுத்து வதற்கு விளம்பர வருவாய் நோக்கங்கள் மட்டுமேயல்லாமல், இந்தக் கட்டமைப்பின் ஒரு அங்க மாகவே ஊடகங்கள் இருப்பதும் மையமான காரணமாக இருக்கிறது. சலிப்படையும் உளவிய லின் இன்னொரு கூறாகத்தான், பெரிய வர்த்தகப் பத்திரிகைகளில் ஒருபக்கக் கதைகள் மட்டுமே வெளியிடப்படுகின்றன. என்னுடைய கேள்வி, இன்று வருகிற கதைகளும் கவிதைகளும் இதர படைப்புகளும் தற்போதைய பொருளாதார அமைப்பை நியாயப்படுத்துகின்றனவா, அல்லது அதை எதிர்க்கிற மனப்போக்கை வளர்க்கின்ற னவா?

தமிழ்ச்செல்வன்: அதே வேளையில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட நாவல்களை விரும்பிப் படிக்கிற ரசனையும் வளர்ந்திருக்கிறது. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்ற கேள்வியும் இருக்கிறது.

ராஜன்: தத்துவமும் அரசியலும் தொட முடியாத சில இடங்களையும் தொட்டுவிடுகிற வாய்ப்பு கலை இலக்கியத்திற்குத்தான் இருக்கிறது. தற்போதைய திணிப்புகளை மீறுகிற மனநிலையை உருவாக்கும் வேலையை கலை இலக்கியப் படைப்புகளால்தான் செய்ய முடியும். இன்று அந்த வேலை நடக்கிறதா?

ராமகிருஷ்ணன்: கலை இலக்கியத்தில் மொழி கையாளப்படுவதோடும் இது சம்பந்தப்படுகிறது. பயன்பாடு, படைப்பாக்கம் இரண்டு நோக்கங்களுடனும் மொழி கையாளப்படுகிறது. தமிழ் மொழியின் சிறப்பு அது பயன்பாட்டு மொழியாகவும் இருக்கிறது, இரண்டாயிரமாண்டு வரலாற்றோடு படைப்பாக்க மொழியாகவும் இருக்கிறது. இதே மொழியைத்தான் திருவள்ளு வரும் கையாண்டார், இன்று நவீன எழுத்தாளரும் கையாள்கிறார். எந்த நோக்கத் திற்காகப் பயன் படுத்துவது, எந்த நடையில் பயன் படுத்துவது என்ற மனம்தான் மாறியிருக்கிறது.

மொழிக்கலப்பு ஒரு முக்கியப் பண்பாட்டுப் பிரச்சனையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு மொழி பல்வேறு இனக்குழுக்களின் சொற்களிலிருந்து பெற்றுக்கொண்டுதான் தன்னை வளர்த்துக்கொள்கிறது. கலப்பில்லாத தூய தமிழ் என்பதை எழுத்திலும், கலப்புத் தமிழைப் பேச்சிலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அணுகுமுறை இருக்கிறது. வேறு மொழிகளிலிருந்து வந்து இங்கே ஏற்கப்பட்ட சொற்களை திசைச்சொற்கள் என்று ஏற்கப் பட்டிருக்கின்றன. சீனாவில், வேறு மொழிகளி லிருந்து வந்த சொற்களைக் குறிப்பிட ஒரு தனி எழுத்துருவையே உருவாக்கியிருக்கிறார்கள்.

பயன்பாட்டில், தேவைக்கேற்ப கையாள்வது இயல்பாகியிருக்கிறது. பஸ்டாண்டு என்றும் சொல்கிறோம், பேருந்துநிலையம் என்றும் சொல்கிறோம். மின்சார ரயிலை எலெக்ட்ரிக் ட்ரெய்ன் என்று சொல்வதில் நமக்குப் பிரச்சனை இல்லை. எழுத்து, படைப்பு, இலக்கியம் என்று வருகிறபோதுதான் தூய மொழியா, கலப்பு மொழியா என்பது பிரச்சனையாகிறது. இலக்கியத் தில் தூய்மையான மொழிதான் மரபின் தொடர்ச்சியாக அமைகிறது. பிற்காலத்தில் இதிலேயும் மாற்றம் ஏற்பட்டு மணிப்பிரவாள நடை வந்தது. பாமர நடையில் எழுதுவது வந்தது. திராவிட இயக்க மொழிநடை என்றே கூட அலங்காரச் சொற்களோடு வந்தது. இன்றைக்கு, பேச்சு நடைக் கும் எழுத்து நடைக்குமான இடைவெளி வெகு வாகக் குறைந்திருக்கிறது.

அறிவுத்துறை சார்ந்து இயங்குகையில், கண்டுபிடிப்புகளுக்கும் தொழில்நுட்பத்திற்குமான மொழியாக தமிழ் இன்னும் தன்னை உருவாக்கிக்கொள்ளவில்லை என்ற போதாமையை நாம் உணரவே செய்கிறோம். ஆங்கிலம் போல் மற்ற மொழிச்சொற்களை உள்வாங்கிக் கொள்ளாமல், சொல்வங்கியை உருவாக்கிக் கொள்ளாமல் ஏன் இங்கே ஒரு புனிதத்தன்மை புகுத்தப்பட்டது என்பதையும் ஆராய வேண்டி யிருக்கிறது.

குமரேசன்: தமிழ் ஏன் கண்டுபிடிப்புகளுக் கான மொழியாக வளரவில்லை என்பதில் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது. தாய்மொழி வழிக்கல்வி பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆங்கில வழிக்கல்வி யின் காரணமாக, மூளைக்குள் ஒரு மொழி பெயர்ப்பு நடந்துகொண்டே இருக்கிறது. ‘ஹவ் ஆர் யு’ என்பதை ஆங்கிலத்தில் வாங்கி, பின்னர் ‘எப்படி இருக்கிறாய்’ என்று தமிழில் மொழி பெயர்த்தே மூளை புரிந்துகொள்கிறது. ‘நன்றாக இருக்கிறேன்’ என்று தமிழில் யோசித்து, ‘ஐயாம் ஃபைன்’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்கிறது. இதில் ஒருவர் எவ்வளவு வேகமாகத் தனக்குள் மொழிபெயர்க்கிறார் என்பது வேண்டுமானால் மாறுபடலாம். மூளைக்குத் தரப்பட்ட இந்த இரட்டை வேலைப் பளுவும், இங்கிருந்த அடிமைத்தனமுமாகச் சேர்ந்துதான் கண்டுபிடிப்பு களும் வளரவில்லை, கண்டுபிடிப்புச் சொற்களும் உருவாகவில்லை.

ராமகிருஷ்ணன்: அப்படிச் சொல்ல முடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், பிற் காலத்தில் மொழிபெயர்ப்புக்கே கூட அவசியம் இல்லாமல், வீட்டிலும் பள்ளியிலும் பணித்தலத் திலும் முழுக்க முழுக்க ஆங்கிலமே கையாளப் படுகிற நிலை திணிக்கப்பட்டுவிட்டதையும் பார்க்கிறோம். தமிழ் பேசத்தான் தெரியும் எழுதவோ படிக்கவோ தெரியாத தலைமுறை உருவாகிவிட்டதே.

தமிழ்ச்செல்வன்: சிவத்தம்பி கூறியிருப்பது போல், தமிழைக் கற்பித்தல் என்பது நவீனப்படுத்தப் படவே இல்லை. அறிவியல்பூர்வமாக மொழி யைக் கற்பித்தல் என்பது ஏற்கப்படவே இல்லை. மொழியைக் கற்பிப்பது பண்டிதர்களின் கையிலேயே சிக்கிவிட்டது. தமிழ்ப் பண்டிதர்கள் மொழியை மக்கள்மயப்படுத்த விரும்பவில்லை. ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னரும் கூட, பல் வேறு கற்பித்தல் முறைகள் நவீனப்படுத்தப்பட்ட போதிலும் கூட, தமிழைக் கற்பித்தலில் அது நடக்க தமிழ்ப்பண்டிதர்கள் அனுமதிக்கவில்லை.  மொழி சார்ந்த இயக்கமாகவும் வளர்ந்த திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்தபிறகு, இதை நோக்கிய முயற்சிகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக ஆழமான ஆய்வுகளே இல்லாமல் போய்விட்டது. தமிழுக்கு ஒரு நீண்ட தத்துவ மரபு இருக்கிறது. அந்த மரபு மேல்நோக்கிச் செல்லாமல் தடுக்கப்பட்டதில் தமிழ்ப்பண்டிதர்களுக்கும் திராவிட இயக்கம் சார்ந்த தமிழறிஞர்களுக்கும் முக்கியமான பங்கு இருக்கிறது.

லட்சுமணன்: கேள்வி கேட்கிற பண்பாட்டை ஊக்குவிக்கிற சமூகத்தில்தான் கண்டுபிடிப்புகள் வரும். இங்கே அறிவுக்கு எதிரான வாதம் முன்னி றுத்தப்பட்டு, கேள்வி கேட்பதே பாவம் என்று போதிக்கப்பட்டிருக்கிறதே! இங்கே மதங்களும் சாதிச் சடங்குகளும் கேள்வி கேட்காதே என்றுதான் வலியுறுத்துகின்றன. கடந்தகாலத்தில் மட்டுமல்ல, இப்போதும் இதுதான் நிலை. ஒரு அரசியல் இயக்கத் தொண்டர், சில அம்பேத்கர் சிந்தனை களைப் படித்துத் தெரிந்துகொள்ள முயன்றபோது, அவரது தலைவர், ‘நீ எதற்குத் தனியாகப் படிக்கிறாய்? அதுதான் நான் பேசியிருக்கிறேனே... இந்த கேசட்டைப் போட்டுக் கேள்,’ என்று சொன்னார்! அந்தத் தொண்டர் தானே படித்துத் தெளிவடை வதைத் தடுத்து, ‘நான்தான் அறிவு, நான்தான் மையம்’ என்று சொல்கிறவராக அந்தத் தலைவர் இருக்கிறார்.

ராமகிருஷ்ணன்: படைப்பாக்கத்தைப் பொறுத்தவரையில், மிகவும் போற்றப்பட்ட பல தமிழ் இலக்கியப் படைப்புகள் கிராமங்களின் விழுமியங்களைப் பேசுகிறவையாக இருப்பதைப் பார்க்கலாம். நிலப்பிரபுத்துவம் மேம்பட்ட கட்டத் தில் செவ்வியல் இலக்கியங்கள் உருவாகின. இன்றைக்கு நவீன இலக்கியப் படைப்புகளுக்கு, அந்த செவ்வியல் இலக்கியங்களைப் படித்து சொல்லாடல்களையும் சித்தரிப்புகளையும் உள் வாங்கிக்கொள்ளலாமே தவிர, அவற்றையே முன்மாதிரிகளாகக் கொள்ள முடியாது. கம்ப ராமாயணம் போல் வராது, சங்க இலக்கியம் போல் வராது என்று சொல்கிற போக்கு அப்படி முன்மாதிரிகளாக எடுத்துக்கொண்டதால் வருவது தான்.

இடையில் யதார்த்த எழுத்து என்று ஒரு போக்கு, நடுத்தரவர்க்க மனநிலையிலிருந்து உருவானது. சொந்த வாழ்க்கை பற்றிய சித்தரிப்பு தான் அதில் இருந்தது. வீட்டைவிட்டு வெளியே போனால் எத்தனை மரங்கள் இருக்கும், அவற்றில் எத்தனை குருவிகளின் குரல்கள் ஒலிக்கும்? அவற்றைப் பற்றிய சித்தரிப்பே இருக்காது. சமூகம் பற்றிய பார்வையும் இருக்காது. எண்பதாம் ஆண்டுகளில் அந்தப்போக்கிற்கு அடி விழுந்து, அது ஒரு வெற்று யதார்த்தம் என்ற விமர்சனம் மேலேழுந்தது. பின்னர் சமூக யதார்த்தம் என்ற கதைப்போக்கு உருவானது. வாழ்க்கையை நெருங்கிப்பார்த்து எழுதுகிற போக்கு வளர்ந்தது. தொண்ணூறுகளில் சமூகத்தைப் பார்த்து எழுதுவதும் தொடங்கியது.

இன்றைக்கு மக்களின் வாழ்க்கையைப் பல தளங்களில் வெளிப்படுத்துகிற படைப்பு முயற்சிகள் வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கின்றன. சிறுகதைகளாக, நாவல்களாக, பாடல்களாக, திரைப் படங்களாக என பல்வேறு வடிவங்களில் அந்த முயற்சிகள் பயணமாகின்றன. கதை வடிவங் கள் மட்டுமல்லாமல், கட்டுரை எழுத்தும் வளர்ந்திருக்கிறது. அதில் பல்வேறு துறைகள் சார்ந்து நிறைய தகவல்கள் திரட்டப்பட்டு, கட்டுரையாக்கித் தரப்படுகின்றன. வட்டார வழக்கில் எழுதுவது, அதிலும் அடித்தட்டு மக்களுடைய மொழியில் அவர்களுடைய வாழ்க்கையை எழுது வது என்ற வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

இதெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதே, தமிழர்கள் தங்களது இலக்கியப் பெருமையைப் புராதனத்தில் மட்டுமே தேடுவதிலும் ஈடுபடுகிறார்கள். புறத்தில் எவ்வளவு நவீன வாழ்க்கைக்கு மாறியிருந்தாலும், அகத்தில் சமகால இலக்கியங்களிலிருந்து விலகி, தொன்மை இலக்கி யத்தையே போற்றுகிறார்கள் என்ற முரண்பாட்டையும் பார்க்கத்தான் செய்கிறோம். ஏன் இப்படி என்ற விவாதங்களும் தொடங்கியிருக்கின்றன.

சலிப்பு மனப்பான்மை என்பது ஊடகங்களால் தான் ஏற்படுத்தப்படுகிறது. ஐந்து நிமிடத்திற்கு சானலை மாற்ற விடாமல் வைத்துவிடுங்கள் என்றுதான் நிகழ்ச்சியை உருவாக்குகிற கலைஞர் களிடம் சொல்லப்படுகிறது! விஜய் டி.வி.யில் நீயா நானா விவாதத்தை அவ்வளவு நேரம் பார்க்கி றார்கள் என்பதும் நடக்கிறது. ஆனால், அந்த விவாதங்களில் பங்கேற்பவர்களும் சரி, பார்க்கிற வர்களும் சரி அதைத் தாண்டி பொது விவாதங் களுக்கு வருவதில்லை! இப்படிப் பொது விவாதங் களுக்கு வருவதில்லை என்பதும் இன்றைய ஒரு முக்கியமான பண்பாட்டுப் பிரச்சனைதான்.

குமரேசன்: அப்படிப்பட்ட விவாதங்களி லாவது அரசியல் விமர்சனங்களும், பொருளா தாரக் கொள்கைகள் பற்றிய நிலைமைகள் பற்றிய விமர்சனங்களும் இடம்பெறுகின்றன. இலக்கியப் படைப்புகளில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் வருகின்றனவா அல்லது தற்போதைய நிலைமை கள் நியாயப்படுத்தப்படுகின்றனவா?

ராமகிருஷ்ணன்: நேரடியாகக் கட்சி அரசியல் வெளிப்படுவதில்லைதான். ஆனால், வாழ்க்கை மாற்றங்களைக் கவனித்து எழுத்தாக்குகிறபோது, இன்றைய அரசியல், பொருளாதாரம் இவற்றிற்கு எதிரான விமர்சனங்களாக அது உருவாகத்தான் செய்கிறது. அதனால்தான், அப்படி இயங்குகிற படைப்பாளிகளை அரசியல் அங்கீகரிக்க மறுக்கிறது. நான் மெக்காலே பற்றிய ஒரு கட்டுரையில் அவரை விமர்சித்திருந்தேன். உடனே எனக்கு, ‘மெக்காலேயால்தான் தலித்துகள் விடுதலை பெற்றார்கள். நாங்கள் மெக்காலே தினம் கொண்டாடப்போகிறோம்’ என்று ஒரு கடிதம் வந்தது. நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அரசியல் பற்றி நான் எழுதினால், இன்று இப்படி எதிர் வினை வருகிறது! ஆக, அரசியல் செயல்பாடு என்பது இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இது தனித்தனியாக நடக்கிறது, ஒரு ஒட்டுமொத்தமான குரலாக எழவில்லை என்பது உண்மை. அதற்கேற்ற அரசியல் களம் இன்னும் உருவாகாததுதான் காரணம்.

முன்பு தத்துவங்களைப்  படைப்பாளிகள் நாடி னார்கள். தத்துவவாதிகள் எழுத்தாளர்களை வழி நடத்தினார்கள். இன்று அது இல்லை. இந்த நூற்றாண்டில் தத்துவவாதியாக, அறிவுவாதியாக ஒருவர் அமையவில்லை. அந்த வழிகாட்டலும் அமையவில்லை. இருக்கிறவர்கள் மேற்கி லிருந்து வாங்கிச் சொல்கிறவர்களாகவே இருக்கிறார்கள். இங்கிருந்து உருவாகவில்லை. கோட்பாட்டு வழி காட்டல் இல்லாதபோது, படைப்பாளியின் அறியாமையும் சேர்ந்தேதான் அவரது படைப்பில் வெளிப்படும். அறிவுத்தளத்தில் செயல்படுகிறவர்களுக்கும் எழுத்தாளர் களுக்குமான இடைவெளி பெரிதாக இருக்கிறது. படைப்பாளிகளை அறிவுத் தளத்தினர் அங்கீகரித்து, இணைந்து செயல்படுகிற போக்கு வளர வேண்டியிருக்கிறது.

தமிழ்ச்செல்வன்: தமிழ் எழுத்து வரலாற்றில் வாசகர்களுக்கும் பங்கிருக்கிறது. ‘பிரதாப முதலி யார் சரித்திரம்’ எழுதப்பட்ட காலத்தில் வாசகர்கள் யார்? உயர் சாதிகளாகத் தங்களை வைத்துக் கொண்டவர்கள்தான். அவர்களுக்கேற்ற படைப்புகள்தான் அன்று வந்தன. அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூகங் களிலிருந்து வாசகர்களும் படைப்பாளிகளும் வருகிறார்கள். படைப்புகளின் உள்ளடக்கமும் வடிவமும் அதற்கேற்றபடி மாறுகின்றன. பிற்காலத்தில், தலித் மக்கள், பழங்குடி மக்களிலிருந்து வாசகர்கள் வருகிறார்கள். படைப்பாளிகளும் உருவாகிறார்கள்.

குமரேசன்: உலகமயமாக்கல் சூழல் மக்களை வார்ப்பது போலவே, படைப்பாளிகளையும் வார்க்கிறது. முதலாளித்துவ சமுதாய அமைப்பையும், அதன் கொடூரமான சுரண்டல்களையும் ஆதரித்து எழுதவில்லை என்றாலும் கூட, அதை எதிர்த்து எழுதாமல் இருப்பதும், அதன் மீதான கோபத்தைக் கிளப்பாமல் இருப்பதும் கூட ஒரு வார்ப்பு வேலைதான். சிலர்தான் அதிலிருந்து விடுபட்டு மாற்றத்திற்காக எழுதுகிறார்கள்.

ராமகிருஷ்ணன்: சுயமான சிந்தனைகள் வருகிறபோது அதை அங்கீகரிக்கிற பண்பாடு வரவேண்டும். எதற்கெடுத்தாலும் மேற்கத்திய உலகம் அங்கீகரித்திருக்கிறதா என்று பார்க்கிற பழக்கத்தைக் கைவிட வேண்டும். ஒரு அறிவியல் கண்டுபிடிப்பே கூட நிகழ்கிறபோது, மேற்குலக அறிவியல் சமூகம் அதை அங்கீகரிக்கிறதா என்று எதற்காகக் காத்திருக்க வேண்டும்? அது சுயசிந்தனையை மழுங்கடிக்கிறது. அந்தக் கண்டுபிடிப்பு அங்கீகரிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வருகிறபோதுதான் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வளரும். அது பண்பாட்டிலும் இலக்கியத்திலும் வெளிப்படும். இப்போது ஓரளவுக்கு சுய சிந்தனை வெளிப்படத்தான் செய்கிறது என்றாலும் அது இன்னும் வேகப்பட வேண்டும். மேற்குலகினர் உலகின் மற்ற பகுதிகளிலிருந்து தங்களுக்கு அங்கீகாரம் வரவேண்டும் என்று எதிர்பார்ப் பதில்லை.

தமிழ்ச்செல்வன்: மேற்குலகின் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிற சிந்தனையே அவர்கள் நம் மீது திணித்ததுதான். அவர்கள் தங்களை மேல் நிலையில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை அங்கீரிக்கிற அல்லது தள்ளுபடி செய்கிற தகுதி தங்களுக்கே உரியதாக ஏற்படுத்திக்கொண்டார்கள். அரசியல் அதிகாரத்தின் மூலமாகவும் அதை நிறுவினார்கள். அதிலிருந்து விடுபடும் உணர்வு மேலோங்க வேண்டும்.

எழுத்தாக்கம்-அ.குமரேசன்

Pin It