பிரியமுள்ள உதயசங்கருக்கு நலம்.

"முன்னொரு காலத்திலே"... கிடைத்தது. இதற்கு நான் "ஒரு காலத்தில்" என்று பெயர் வைத்துக் கொண்டேன். எழுத்துப்பிழைகளுக்காக கின்னஸ் பரிசு பெறப்போகும் - கடுகு எழுத்துக்களுக்கும் சேர்த்து (!) - பவா அவர்களுக்கு ஒரு பாராட்டு தெரிவிக்க வேணும்.

தக்கிமுக்கி பூராத்தையும் படித்துவிட்டேன். இப்படியும் ஒரு "தலபுராணம்" பெற கோவில்பட்டி கொடுத்து வச்சிருக்கணும். விசயங்கள் அருமையாக வந்திருக்கின்றன.

இப்படிப் பரம்பரைகளை கோவில்பட்டி பல கண்டிருக்கிறது. கரடிகுளம் அண்ணாச்சி கந்தசாமி செட்டியார் காலம்; இது உரைநடைக் காலமல்ல கவிதைக்காலம். "குவளை" என்ற புனைப் பெயரில் கவிதைகள் சாகித்யங்கள் பதங்கள் என்று எழுதிய கு.அழகிரிசாமி முதலில் இந்த சத்சங்கத்திலிருந்து தான் உதயமானான். இவற்றிற்குப் பின்புலமாக "ஜவகர் வாலிபர் சங்கம்" என்று ஒரு அமைப்பு இருந்தது. அப்போது கு.அ.ஆறாவது வகுப்பிலிருந்து பத்தாவது வரை கோவில்பட்டியிலிருந்துகொண்டேதான் படித்து முடித்தான்.

"பால முருகன்" ஏ.மாரியப்பஞ் செட்டியாரின் சுற்றுச்சூழலில் ஒரு இசைச் சங்கமே இயங்கியது. ஒரு பிள்ளையார் கோவிலை முன்வைத்து ஆண்டுக்கு மூன்றுநாட்கள் தமிழ்நாட்டின் பிரபல சங்கீத வித்துவான்கள் வந்து கச்சேரி செய்வார்கள்.

காருகுறிச்சி அருணாசலமும் விளாத்திகுளம் சுவாமிகளும் வாசம் பண்ணியதே இதே கோவில்பட்டியில்தானெ.
வ.உ.சிதம்பரம் பிள்ளை வந்து, இருந்து வக்கீல் தொழில் பார்த்த ஊரும் இதுதான். சுயசரிதம் எழுதுவதில் இதுவும் ஒரு வகைப்பாடுதான். 'நண்பர்களோடு நான்' என்று நானும் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். "நண்பர்களோடு நானும்" என்று பெயர் வைத்திருக்க வேண்டும் என்று பிறகு தோன்றியது.

"முன்னொரு காலத்திலே" என்பது ஒன்ஸ் சப்பானிய டைம்" என்பதுபோல தொனித்தது. இதை மக்கள் சொல்றது ஒரு காலத்துலெ... என்றோ "அந்தக்காலம்" என்றுதான் சொல்லுகிறார்கள்.

வெளிநாட்டு எழுத்து ஜாம்பவான்கள் எல்லாம் கோவில்பட்டியின் தெருக்களில் திரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களின் எழுத்துக்களைப் பற்றி இங்கே காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பதைக் காது கொடுத்துக் கேட்பதற்காக என்று சொல்லி, கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் பெஞ்சில் இரண்டுபேர் இன்னாருடைய எழுத்து பற்றிப் பேசுவதைக் கேட்க அவரே வந்து முன்னுமாக நடந்துகொண்டே கவனிக்கிறார் என்று சொல்வதெல்லாம் ரசமான விசயம்.

ராமனுடைய கதையைப் பற்றி யார் எங்கே பேசிக் கொண்டிருந்தாலும் அந்த இடத்துக்கு அனுமான் வந்துவிடுவார் கேட்பதற்கு என்று ஒரு 'மித்' (தொன்மம்) உண்டு. மித்தைத் தொட்டுக் கொண்டு போகும் எந்த எழுத்தும் மனசைத் தொடும் என்பது மிகவும் உண்மை. இந்த அனுமான் மித் துளசிதாஸின் ராமாயண அரங்கேற்றம் வரை வருகிறது!

அது அனுமானுக்கும் துளசிதாசருக்குமான சம்வாதம் (விவாதம்) ஆகிவிடுகிறது. கடேசியில் ஜெயிப்பது படைப்பாளியான துளசிதாசர் தான். கதை சம்பவத்தில் நேரடியாகவே கலந்துகொண்ட அனுமான் இல்லை என்று ஆகும்போது படுசுவாரஸ்யம் தருவதாக அமைகிறது!

தமிழின் உரைநடை இலக்கியம் எங்கெல்லாமோ போய்விட்டது; வெறும் நாவலும் சிறுகதையும் என்று இருந்ததை இந்த இளம் எழுத்தாளர்களின் பேனா அர்சுனனின் வில் போலவும் மேகங்களுக்குள் ஒளிந்துகொண்டு போர் செய்யும் மேகநாதனின் செயல்கள் போலவும் ஆக்கிவிட்டன; தம்பீ படிக்கவே சந்தோசமாக இருக்கிறது.

விடுபட்டுப் போன விசயங்கள் என்று பார்த்தால் எவ்வளவோ உண்டு. பூமணியின் காலம், நீலக்குயில் இதழ் என்று. இவைகளை மட்டுமல்ல இன்னும் பலதையும் எழுத இன்னொரு உதயசங்கர் வருவார் என்று நம்பலாம்.

வேற எந்த ஊருக்கும் இப்படி ஒரு பதிவு கிடைத்ததாகத் தெரியவில்லை. கோவில்பட்டி யோகம் செய்தது தான். இங்கிருந்து கொண்டே உங்கள் அனைவரையும்  ஆரத் தழுவிக்கொள்கிறேன். எப்பவும்.

முன்னொரு காலத்திலே
உதயசங்கர்
விலை ரூ.70-
வெளியீடு - வம்சி பதிப்பகம்
19, டி.எம்.சாரோன்
திருவண்ணாமலை - 606601

Pin It