கே.எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் நிமிர வைக்கும் நெல்லை நூலின் விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பு படித்து முடித்தபோது, இதில் சேர்க்க வேண்டிய சமாச்சாரங்கள் இன்னும் இருக்கும் போலிருக்கே என்று தோன்றியது.

 முக்கியமாக, இந்தப் பகுதிகளில் வாழ்ந்த கைகாரர்கள், கொள்ளைக்காரர்கள் பற்றியும் சொல்லலாமே என்று நினைத்தேன். எடுத்துக்காட்டாய் ஜம்புலிங்கம் பற்றி. பாளை மத்திய சிறைச்சாலையில் வெள்ளைக்காரன் காலத்திலேயே ஜம்புலிங்கத்தை அடைக்க என்றே தனியாக ஒரு செல் வடிவமைத்துக் கட்டியிருக்கிறான். நாங்கள் பாளை சிறைச்சாலையில் கலைஞர் ஆட்சியில் கொஞ்ச நாள் விருந்தாளிகளாக இருந்தோம். விவசாயிகள் போராட்டக் காலத்தில், கூட்டம் என்றால் பேகொண்ட கூட்டம்! சுதந்திராக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் இவைபோக எந்தக் கட்சியிலும் சேராத அப்புராணி சப்புராணிகளையெல்லாம் பிடித்துக்கொண்டு வந்து ரொப்பி விட்டார்கள். அந்த சிறைச்சாலையை, சும்மா சொல்லப்படாது நம்ம கலைஞர் ஆட்சியை!

விசயம் ஒண்ணும் ரொம்பப் பெரிசுமில்லை. ஒரே ஒரு பைசாவுக்காகத்தான்!

ஆலை அதிபர்களுக்கு ஒரு யூனிட் (அலகு) மின்சாரத்துக்கு நாலு பைசா போதும் என்று சொல்லி அரசு பெற்றுக் ண்டிருந்தபோது, இந்த விவசாயிகளுடைய பம்ப் செட்டுக்குப் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு 9 பைசாவிலிருந்து 12 பைசாவாகவும் மீட்டர் கட்டணத்தை 50 பைசாவிலிருந்து 2-50 ரூபாயாகவும் குறைந்தபட்ச பில் கட்டணத்தை ரூ. 3-75லிருந்து 5 ரூபாய் என்றும் உயர்த்திவிட்டது.

இதென்னய்யா அநியாயம், வசதி உள்ள ஆலை அதிபர்களுக்கு மட்டும் நாலு பைசா. எங்களுக்கு மட்டும் பன்னிரெண்டு பைசாவா என்று கேட்டதுக்கு அவர்கள் நிறைய்ய உபயோகிக்கிறார்கள்; நீங்கள் அப்படியா? நிறைய மின்சாரத்தைப் பயன்படுத்துகிறவர்களுக்கு குறைந்த விலைக்குக் கொடுப்பதுதான் சரி என்று பதில் வந்தது.

நிறைய்ய சாப்பிடுகிறவர்களுக்கு குறைந்த பில், குறையாச் சாப்பிடுகிறவர்களுக்கு நிறைய்ய பில் எப்படி? கோபம் வராத விவசாயிகளுக்கு கோபம் வந்துவிட்டது; வரத்தான செய்யும். சரி, உக்காந்து பேசுவோம் வாங்க என்று அழைத்துப் பேச்சுவார்த்தை நடந்தது.

ஒரே ஒரு பைசா தர்க்கத்தில் பேச்சுவார்த்தை முறிந்துபோய்விட்டது. அதன் பலன்தான் தமிழகச் சிறைச்சாலைகள் அனைத்தும் நிறைந்து பொங்கி வழிந்ததும் பதினெட்டு விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் செத்து மடிந்ததும்.

பாளை சிறையில் என்னோடு இருந்தவர்களில் கோவில்பட்டி ஸ்தாபனக் காங்கிரஸ் பிரமுகரான சிகரெட்டுக் கடை தவமணி நாடார் என்பவரை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

அவர் இருந்த செல் வித்தியாசமாக வடிவமைத்துக் கட்டப்பட்டிருந்தது. பிறகுதான் தெரிந்தது எங்களுக்கு அதில்தான் ஜம்புலிங்கம் இருந்தார் என்று. ஆஹா, அப்படியா சங்கதி என்று நாங்கள் சிரித்து தவமணி நாடாரைக் கேலி செய்தோம்.

அது ஒரு நினைவுச்சின்னம் போல் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது இப்பவும். தமிழ் உரைநடை இலக்கியத்திலும் ஜம்புலிங்கத்தின் பெயர் மாற்றம் பெற்று புதுமைப்பித்தன் தன்னுடைய கதை ஒன்றில் பதிவு பண்ணியிருக்கிறார்.

கொக்கிரகுளத்திலிருந்து தாம்பிரவருணி ஆற்றின் குறுக்காக ஒரு கிழவி வேகமாக நடந்து வருகிறாள். அவள் மடியில் தனது பேத்தியின் கல்யாணத்துக்கான தாலி இருக்கிறது. நேரம் செங்கமங்கலாகிவிட்டது. பக்கத்துணை யாரும் இல்லை. அப்போதுதான் அந்தக் கொள்ளைக்காரன் ஏ கிழவி நில்லு என்று எதிரே வந்து வழிமறித்தான்.

ஏங்கிட்டே ஒண்ணுமில்லை ராசா; நா ஏழைக் கிழவி என்னை விட்டுடு என்று கையெடுத்துக் கும்பிடுகிறாள். அப்பவே தெரிந்துவிடுகிறது அவனுக்கு இவனிடம் ஏதோ இருக்கு என்று. ஒண்ணுமில்லை இல்லெ; பிறகென்னத்துக்குப் பயப்படுதே? ஒண்ணுமில்லென்னா விட்டுறுதேம்; எங்கெ மடியக் காமி. கிழவி உள்ளதெச் சொல்லி தாலிய எடுத்துக் காமிச்சி அழுகிறாள். விடிஞ்சாக் கல்யாணம் பேத்திக்கு. நானென்ன செய்வேம் என்ன செய்வேம் என்று பதைபதைக்கிறாள்.

கையில் வாங்கிப் பார்த்த அந்த தாலியை அந்தக் கொள்ளைக்காரம் அந்த கிழவியிடமே கொடுத்து மகராசியாப் போயிட்டு வா என்று அனுப்புகிறான். கொள்ளைக்காரன் ஒருவன் கையில் கிடைத்த தங்கத்தைத் திருப்பித் தருவானா எவனும், என்று நினைக்கிறாள் கிழவி. தன் பேத்திக்குத் தாலிப்பிச்சை கொடுத்த அந்த புண்ணியவான் பெயரைக் கேட்கிறாள் கிழவி.

ஒனக்கென்னத்துக்கு என்னோட பேரு? எப்பா... எம் பேத்திக்குப் பிறக்கிற தலைப்பிள்ளைக்கு ஓம் பேரை வைக்கணும் என்கிறாள். ஒரு ஆனந்தச் சிரிப்பு சிரிக்கிறான் அவன். கிழவி அவன் பதிலுக்காக காத்திருக்கிறாள். அந்த அவனுடைய பேரைக் கேட்டதும் கிழவி நடுங்கிவிட்டாளாம். அப்படி யார் அதைக் கேட்டாலும் நடுங்குகிற பெயர் அது!

ஜம்புலிங்கத்தைப் பற்றி நிறைய்ய கேள்விப்படலாம் நாம்.

நான் டோனாவூர் பரமசுகசாலை என்ற மருத்துவமனையில் நோயாளியாகப் படுத்திருந்தபோது, ஜம்புலிங்கம் தனது குழந்தைகளை அந்த கிருத்துவ நிறுவனத்தில் கொண்டுவந்து ஒப்படைத்துவிட்டு என் குழந்தைகள் இனி உங்கள் அடைக்கலம் என்று ஒப்படைத்துவிட்டு போனதாகச் சொல்லுவார்கள்.

*************

மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு நாளை ஒட்டி பில்க்கில் (புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்) நடந்த ஆய்வரங்கத்துக்குப் போயிருந்தேன். பேராசிரியர் ம.செ. ரபிசிங் அவர்கள் ஒரு ஆய்வெழுத்து (பேப்பர்) வாசித்தார். ஆங்கில மொழியில் பிறந்த முதல் நாவலைப் பற்றிச் சொன்னார். அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டில் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் நிறைய்யப் பேர் இருந்தார்களாம். ஒரு கடிதம் எழுதணும் என்றால் தபால் அலுவலகத்துக்கு வந்து, தங்கள் கடிதத்தில் எழுத வேண்டிய செய்தியைச் சொல்லுவார்களாம். அதை அப்படியே எழுதிக் கொடுக்க ஆள் இருப்பராம். கடிதம் எழுதிக் கொடுத்தால் தரும் காசுதான் அவர்களுக்கு வருமானம். எழுதி முடித்து வாசித்துக் காட்டும்போது, அந்த மக்கள் சொன்னபடியே எழுத்தில் இருக்க வேண்டும், அப்பதான் காசு தருவார்கள்! சாமுவேல் ரிச்சட்சன் என்பவர் இப்படி அவர்கள் சொன்ன மக்கள் மொழியில் எழுதி, எழுதி, அவர்கள் சொல்லும் தங்கள் துயரச் செய்திகள் சந்தோசச் செய்திகள் கேட்டுக் கேட்டு, அவர் அதே மொழியில் அதே நடையில் எழுதப்பட்ட நாவல்தான் “பமீலா” என்ற பேர்பெற்ற நாவலாம்.

சாமுவேல் ரிச்சட்சனுக்கு எழுதும் நடை உருவானது அந்த மக்களின் பேச்சு நடைதானாம். நானும் என் வாசகர்களிடம் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன்; எனது நடையை உருவாக்கியதும் நான் எழுதிய கடிதங்கள்தான் என்று. ஏதோ ஒரு வகையில் சாமுவேல் ரிச்சட்சன் எனக்கு சாட்சி சொல்லுகிறார் என்று சொல்லலாமா.

வந்தே மாதரம் பாடவும் சொல்லவும் மிகவும் அவசியம் என்று உன்னி உன்னிப் பேசுகிறார்கள். அது நமது தேசிய விடுதலை இயக்கத்தின்போது ஒலித்த மந்திரச் சொல் என்கிறார்கள்; உண்மைதான். எனக்குத் தெரிய நான் சிறு பையனாக இருந்தபோது - கிட்டத்தட்ட எழுபத்தி அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் வந்து மேடை போட்டுப் பேசிய பேச்சாளர்கள் தலைவர்கள் உட்பட கூட்டத்தில் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம் வந்தே மாதரம் மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்ள மாட்டார்கள். வந்தே மாதரம் என்று சொல்லிவிட்டு அதே மூச்சில் அல்லாஹு அக்பர் என்றும் முழங்குவார்கள்.

அந்தக் காலத்தில் பொதுக் கூட்டங்களுக்கும், மகாநாடுகளுக்கும் மக்களை அழைக்கவும் ஒன்றுதிரட்டவும் அடிக்கும் பிட் நோட்டீஸ்களிலெல்லாம் கையில் தேசியக் கொடி வைத்திருக்கும் பாரத தேவியின் படமும் அந்தப் படத்தில் இடது பக்கத்தில் வந்தே மாதரம் என்றும் வலது பக்கத்தில் அல்லாஹு அக்பர் என்றும் கட்டாயம் இருக்கும்.

இந்த இரண்டு கோஷங்களையும் உரக்கச் சொல்லிவிட்டுத்தான் பேச்சைத் தொடங்குவார்கள். முடிவில் மகாத்மா காந்திக்கு ஜே என்றும் நமதே ராஜ்யம் அடைந்தே தீருவோம் என்று பேச்சை முடிப்பார்கள்.

எனது வயதை ஒத்த எந்தக் கிழவனாரிடம் கேட்டாலும் இந்த உண்மையைச் செல்லுவார்கள்.

தாம் சாகும்பரியந்தம் காந்திஜி மட்டும் ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரி வரும் ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை பாடி முடித்த பிறகுதான் பிரார்த்தனை, பேச்சு எல்லாம். இந்த வந்தே மாதர வாசிகள் இப்பவும் அப்படி அதையே சொல்லலாம்; தப்பில்லை. சமாதானம் மெய்ப்படும்.

*************

இடைசெவல் ஊரில் எங்கள் பாட்டனார் காலத்தில் நடந்த, நான் பலமுறை கேள்விப்பட்ட ஒரு நடப்பை இங்கே பதிவு செய்யலாம் என்று தொடங்குகிறேன்.

கோயிந்து நாய்க்கன் என்று ஒரு கைகாரன். அவனைப் பற்றி எங்களுக்கு கவுலூர் நாயக்கர் வீட்டுப் பாட்டி கதை கதையாகச் சொல்லி இருக்கிறாள். அதெல்லாம் நெசந்தானா என்று நாங்கள் எங்கள் வீட்டுப் பாட்டியிடம் வந்து கேட்போம். ஆமா அது மாத்திரமா இன்னும் கேட்டுக்கோ என்று இவளும் பலது அவனைப் பற்றிச் சொல்லியிருக்கிறாள். அடடா அப்பேர்க்கொத்த மனுசனை நாம பார்க்க முடியாமல் போய்ட்டதே என்ற வருத்தம்தான் எனக்கும். அந்த ஆத்தாமையை உங்களிடம் இங்கே சொல்லித் தீர்த்துக் கொள்கிறேனே?

கோயிந்துவுக்குத் தெரிந்த சிறந்த தொழில் கூரை மேய்ச்சல், படப்பு மேய்ச்சல், இந்த ரெண்டிலும் மகாநிபுணன். இப்படியான ஒரு தொழில் தெரிந்தவர்களைக் கொத்தன் என்ற பட்டப் பெயர் தந்து ரொம்ப மரியாதை தருவார்கள் ஊர்களில். காலையில், வந்ததும் பதநீர் கிடைக்காத காலங்களில் மோர். மேய்ச்சலுக்குக் கூரை மேல் ஏறிவிட்டால் இடையிடையே பானக்கரம் குடிக்கக் கிடைக்கும். மத்தியானம் சுடுசோறு கறி வகைகளுடன் அதோடு வெத்திலை போயிலை பொடி என்று உபசரிப்பும் உண்டு. கோயிந்துவின் வேலை (செய்நேர்த்தி) பிரமாதமா இருக்கும்; அது பனை ஓலை ஆனாலும் சரி கம்மந்தட்டை மேய்ச்சலானாலும் சரி அப்படி ஒரு சுத்தம். ஓலைக் கூரை என்றால் மூணு வருசத்துக்குக் கவலை இல்லை. கம்மந்தட்டை என்றால் அஞ்சி வருசம் உத்தரவாதம். ஜம்புத்தட்டை போட்டால் ஏழு வருசம். சீகை என்றால் பத்து வருசத்துக்கு நிற்கும். சீகையில் (இது ஒருவகை நாணல்ப்புல்வகை) வாய்ப்பாகக் கிடைத்துவிட்டால் பன்னெண்டு வருசம் தாக்குப்பிடிக்கும். பெரும் மழைகளுக்கும்கூட என்பார்கள். எந்தவகைக் கூரை மேய்ச்சலுக்கும் மூங்கில் வரிச்சிகள் போடலாம், விலையும் சலுசு, ஆனா சீக்கிரம் உளுவாடிவிடும். எதும் மூங்கிலுக்குப் பிந்திதான்; அது போல வராது. மூங்கில் வாங்க வேண்டும் என்றால் மெனக்கிட்டு கோவில்பட்டிக்கு வண்டி கட்டிக்கொண்டு போகணும்.

அப்பதான் கோவில்பட்டியில் மரக்கடைகள் என்று ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு குறிப்பிட்ட சாதியார்தான் ராஜபாளையத்திலிருந்து வந்து இந்த மரக்கடைகளை முதல்முதலில் வைத்து விற்கத் தொடங்கினார்கள் கோவில்பட்டியில் கொல்லம் ஓடுகள் வராத காலம்; அல்லது வரத் தொடங்கிய காலம்.

சீகைப்புல்தான் வேணும் என்கிறவர்கள் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு, ரெண்டு மூணு வீட்டுக்காரர்கள் சேர்ந்து வண்டிகளில் வாரிகளைக் கட்டிக்கொண்டு ஆற்றுப் படுகைகள் இருக்கும் இடங்கள் பார்த்துப் போக வேண்டும். சீகைகளை அறுத்துக் காயப்போட்டு பாரம் வைத்துக் கொண்டு வருவார்கள். பெரிய்ய பாடு அது. அந்தப் பாடில் ஒரு சவுகரியம் உண்டு; அதில் தீப்பிடிக்காது. காத்தடிக் காலங்களில் நிம்மதியாகத் தூங்கலாம்.

கூரை வீட்டில் குளிர்காலத்தில் குளிர் தெரியாமலும் வேனல்க் காலத்தில் சூடு பொசுக்காமலும் நிம்மதியாக வசிக்க முடியும். நெருப்புப் பயம் மட்டும் இல்லையென்றால் கூரை வீடுகளும், கூரைத் தாழ்வாரங்களும் மனிதருக்கும் கால்நடைகளுக்கும் சொர்க்கம்தான்.

தங்களுடைய எதிரிகளுக்குக் கடும் துன்பம் கொடுக்கச் செய்யும். தீய செயல்கள்தான் இந்தத் தீ வைப்பு முறை. நேருக்கு நேராக வந்து மோத முடியாத பலவீனர்கள் செய்யும் செய்கைகள் இவை.

தீயை மடியில் கட்டிக்கிட்டு அலையுதான்! என்பார்கள். நேரம் பார்த்து வெடிக்கிற நேரவெடி (டைம் பாம்) கண்டுபிடிக்க இது முன்னோடியாக இருந்திருக்குமோ என்று நினைக்க வேண்டியதிருக்கிறது.

நான் சிறைச்சாலையில் இருந்த நாட்களில் பல கைகாரர்களைப் பார்த்து மனம் விட்டு அவர்களோடு பேசியபோது இப்படியான பல செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுக்கு முன்னாலெல்லாம், பீடி பத்த வைக்க தீக்குச்சியை எடுத்து தீப்பெட்டியில் உரசி தீப்பத்த வைக்கிற மாதிரிதான் இந்தத் தீ வைக்கிறதும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்! இதைச் சொன்னதும் அந்தக் கைகாரமுத்து விழுந்து விழுந்து சிரித்தான்.

காத்தடிக் காலங்களில்தான் இந்தத் தீவைப்பு நடக்கும். அப்போது பீடியைப் பத்த வைக்கிறதே சிரமம், அப்படி இருக்க ஒரு வீட்டுக் கூரையில கொண்டுபோயி தீப்பெட்டியால நெருப்பு வைக்க முடியுமா அதுக்கெல்லாம் ஒரு டிரிக் இருக்கு என்றான்.

அந்த டிரிக்கைத்தான் கொஞ்சம் சொல்லேம்; நானும் தெரிஞ்சிக்கிடுதேம். ஒங்களைப் பார்த்தா நல்லவரு மாதிரித் தெரியுது, இதெ எல்லாம் ஏம் ஒங்களுக்கு என்று கேட்டான். மெய்யான தீயவர்களிடம் இப்படியும் ஒரு நல்ல குணம்!

முதல் முதலில் குடிக்கப் போகும் ஒருவனைப் பார்த்துக் குடிகாரர்கள் வழக்கமாகச் சொல்லுவது: வேண்டாம் தம்பி என்று தடுப்பான். தாங்கித் தடுக்கிக் கேட்டேன். தொழில் செய்யிறதுக்காக இல்லையப்பா; ஒரு இதுக்காகத் தெரிஞ்சிக்கிடதாம் கேக்கிறேம், சொல்லலைன்னா விட்டுரு என்றதும் இறங்கி வந்தான். கொள்ளி வைக்கிறது அல்லது கொள்ளி போடுகிறது என்று சொல்லுகிறோமே அதிலிருந்து அபிவிருத்தி (வளர்ந்த முறை) செய்யப்பட்டிருக்கிறது இது. கொள்ளிக் குச்சியின் நுனியில் மினுங்கும் கங்கு கண்ணுக்குத் தெரியும்; இது தெரியாது. ஒரு கட்டித் தீக்கங்கை கையடக்கமாக “பேக்” பண்ணணும். அதைச் சுற்றிலும் விராட்டி என்று சொல்லும் சுக்காகக் காய்ந்துபோன மாட்டுச் சாணத்தினுள் வைத்து, அதை பருத்தித் துணி நீளத்தால் கை எறிகுண்டு அளவுக்கு சுற்றினால் மடியில் வைத்துக்கொண்டு போகலாம். துணி சுற்றும்போது பதனமாகச் சுற்ற வேண்டும் ரொம்பவும் இறுக்கிச் சுற்றிவிட்டால் மூச்சு விட்டிடும். அதாவது அவிந்து (செத்துப்) போய்விடுமாம் நெருப்பு. ஒரு மணித் தியாலத்துக்குள் கொண்டுபோய் சொருகிவிட வேணும். இல்லே ஒம் மடியில கனிஞ்சி, தீப்பத்திக்கிடும்! என்று எச்சரிக்கை செய்தான்.

நாய்கள் வளர்க்கும் வீடுகளில் வைப்பது சிரமம். பகலிலேயே போய் ஊசராட்டம் பார்த்துக்கிடணும் என்றான். ஊரே சோற்றுத் தூக்கத்தில் ஆழ்ந்திருக்கும் நேரம். திடீரென்று தீ தீயோ தீ, தீயோ தீ என்ற பதட்டமான கூக்குரல் கேட்கும். அதைத் தொடர்ந்து நாய்களின் குலைப்புச்சத்தமும் குழந்தைகள் பெண்களின் அழுகுரல்களும் கதறல்களும், மேல்காற்றுக் காலங்களில் நான் பலமுறை கேட்டுப் பதறியிருக்கிறேன். (நெருப்பு கதையில் பதிவு செய்திருக்கிறேன் அந்தக் கொடுமையை)

ஒரு வீட்டில் தீப்பிடித்தால் குறைந்தது நாலைந்து வீடுகளாவது பரவி சேதமாகிவிடும். அந்தக் கூக்குரல் கேட்கும்போதுதான், கேட்டால்தான் தீ வைத்தவனுக்கும் அப்பாடா என்றிருக்குமாம். தீக்கொளித்திக் கோயிந்தன் அப்போது கள்ளப் புன்னகையுடன் தனது வீட்டுக்குள் பத்திரமாக உட்கார்ந்துகொண்டு வெத்திலையின் முதுகில் சுண்ணாம்பு தடவிக் கொண்டிருப்பானாம்! (இவன் ஒரு அமுக்காளமான, கொடூரமான ஆள் என்று பிற்பாடுதான் தெரிந்தது) சில சமயம் அவனும் ஓடிவந்து மக்களோடு மக்களாகத் தீ அணைப்பில் கலந்துகொள்வதும் உண்டாம்.

தீ விழுந்த மறுநாளோ மூணாம் நாளோ, மூக்குத்தி கம்மல்களை அடகுவைத்து, வண்டிகள் கட்டிக்கொண்டு கோயிந்தைத் தேடிக்கொண்டு வருவார்கள். கோவில்பட்டி போய் மூங்கில் கம்புகள், பனைவிட்டங்கள் வாங்கிக்கொண்டு வர. கோவில்பட்டி மரக்கடைக்காரர்களோடு கோயிந்துக்கு நல்ல பழக்கம் உண்டு. அகாத விலை சொல்லும் மரக்கடைக்காரர்களிடம் அடித்துப் பேசி விலை முடித்து வாங்க அவனால் தான் முடியும் என்று நம்பினார்கள். வண்டிகளில் பாரம் ஏற்றி, கொச்சக் கயிறு போட்டு இறுக்கிக் கட்டி முடித்துவிட்டு, கிளப்புக் கடை தேடிப்போய் வாயிக்கு ருசியாய் நெல்லுச்சோறு சாப்பிடுவார்கள். எந்தக் கடையில் சாப்பாடு நல்லா இருக்கும் என்பதெல்லாம் கோயிந்துக்குத்தான் தெரியும்.

சாப்பிட்டு முடித்து, கோயிந்துக்கு மட்டுந்தான் அசோகா பாக்கு வெத்திலை, மற்றவர்களெல்லாம் சாதா வெத்திலைதாம். ஒரு தடவை, இந்தப் பார வண்டிகளோடு மன்னார் நாயக்கரும் கோவில்பட்டிக்குப் போயிருந்தார். அவர் மாட்டுத் தரகர். மாடுகளை மட்டுமல்ல மனுசர்களைக் கண்டும் எடை போடுவதில் சமர்த்தர். இந்த மரக்கடைக்காரர்கள் கோயிந்தனோடு விசேசமாகப் பழகுவது, நுணுக்கம் வைத்துப் பேசுவது முதலில் புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது. அவரும் இந்தப் பாரவண்டிகளோடு ரெண்டு மூணு தரம் வரவேண்டியது ஏற்பட்டது.

வண்டிகளில் பாரம் ஏற்றி முடித்து, கடைக்காரர்களுக்குத் தரவேண்டிய பணத்தை எல்லாம் ஓர் செல் செய்துவிட்டுப் புறப்படும்போது கோயிந்து மட்டும் கடை முதலாளி இருக்கும் இடத்துக்குப் போயி வந்தான். சரிதான் கமிஷன் போல எதாவது இருக்கும். மாட்டு விற்பனையில் நாமும் வாங்கிறதில்லையா என்று நினைத்துக் கொண்டார்.

பிறகொரு சமயம் மன்னார் நாயக்கர், மரக்கடைக்குப் பின்னால் போய் மறைவாக சிறுநீர் கழிக்க உட்கார்ந்தபோது, கடை முதலாளியும் கோயிந்தும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

அட குடியெக் கெடுத்தானே; இப்படியா சங்கதி. மோசக்கேடு வந்துட்டதே என்று வேதனைப்பட்டார். அவர்கள் பேசியதிலிருந்து தெரிந்துகொண்டது.

இந்தத் தீ வைப்புகள் வேற யாரோ வந்து வைக்கவில்லை. இந்த மரக்கடைகளின் விற்பனையை அதிகரிக்க அவர்களின் கையாளாக இந்தக் கோயிந்து நாய்க்கன் செய்த காரியமே என்று தெரிந்துபோனது. இருக்கட்டும் இருக்கட்டும். இவன் எப்படி நம்மிடம் நல்ல பிள்ளையாக நடந்துகொள்கிறானோ அப்படியே நாமும் அவனிடம் இப்போதைக்கு நடந்துகொள்வோம் என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டார். அவர்கள் நகர்ந்துபோன பிறகு கொஞ்ச நேரம் இருந்து இவர் ஒன்றும் அறியாதவர் போல முகத்தை வைத்துக்கொண்டு வந்துவிட்டார்.

கூரை வீடுகளுக்கெல்லாம் கொள்ளி வைக்கும் இவனுக்குக் கொள்ளி வைக்க ஒரு பிள்ளைப் பாக்கியம் இல்லாதவன் இவன் என்பதை நினைத்துப் பார்த்தார்.

போன தடவைக்கு முந்தின தடவை நல்லாநாயக்கரின் வீடு தீப்பிடிந்து எரியும்போது நல்ல தூக்கம் எல்லோருக்கும். வெளியே ஓடி வந்தவருக்கு அங்கு வீட்டுக்குள் வயதான அம்மா படுத்துக் கிடப்பது ஞாபகத்துக்கு வரவே தீக்குள் நுழைத்து அவளை தூக்கிக்கொண்டு பாய்ந்து வரும்போது உயரம் குறைந்த அரங்கு வீட்டு நிலை இடித்து கீழே விழுந்தவர்தான். இருவரும் கரிக்கட்டை ஆனார்கள். அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடந்த அந்தக் கண்காட்சியைப் பார்த்த உறவும், ஊரும் தங்கள் முகத்திலும், நெஞ்சிலும் அறைந்துகொண்டு அலறிய காட்சி ஞாபகத்துக்கு வந்தது. இப்படி ஒன்றா ரெண்டா இந்தச் சண்டாளனால், ஊரை அடிச்சி உலையில் போட்டுத் தின்கிற பணம் சேர்க்கிறவங்களுக்குத் துணை போகலாமா இந்த நீசப் பயல். இந்த ஊரில் இனி இருக்கவே கூடாது என்று ஒட்டிக்கொண்ட நாயக்கரின் குடும்பத்தார் வண்டிகட்டிக் கொண்டு கிளம்பிவிட்டார்கள். அதுக்குக் காரணமான அந்த நிகழ்ச்சியைச் சொல்லவே எனக்கு வாய் கூசுதடா பேராண்டி என்று கண்களைத் துடைத்துக்கொண்டாள் கவுலூர்ப்பாட்டி.

எங்களுக்கும் இனம் தெரியாத ஒரு பயம் வந்துவிட்டது. அவளோடு நெருங்கி உட்கார்ந்து கொண்டோம். இந்தப் பாட்டிகளே ரொம்ப ரசமானவர்கள்தான். அப்போது நாங்கள் ரொம்பச் சின்னப்பிள்ளைகள். தொழுவீட்டில் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று கூனிப்பாட்டி கம்பை ஊன்றிக்கொண்டு, வித்தியாசமாகக் கூக்குரல் கொடுத்துக் கொண்டே நடுங்கும் குரலில் அய்...யோ... நா... என்னா சொல்லுவேம். என்னா செல்லுவேம் என்று சொல்லிக் கொண்டே எங்களுக்குப் பக்கத்தில் வந்தாள். என்ன பாட்டி என்ன பாட்டி என்று அவளைப் பார்த்தோம். அய்யோ பிள்ளை பிடிக்கிறவன் வந்துட்டானே வந்துட்டானே என்றாள். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக் கொண்டோம். தங்கள் தங்கள் வீட்டுக்கு ஓடத் தயாராகிவிட்டோம். தெருவிலே இறங்காத அங்கனெதாம் இருக்காம் என்றாள்.

இப்பொ என்ன செய்ய பாட்டி என்று கேட்டோம். ஒண்ணுமே செய்ய முடியாது. கட்டாயம் பிடிச்சிக்கிட்டே போயிருவாம். பெத்தவுகளுக்கு இனி பிள்ளை இருக்காது. நா என்னெ செய்வேம் என்று பதறினாள். நாங்கள் அவளை நெருங்கி அண்டினோம். எங்களைப் பிரியமாகத் தடவினாள். பாட்டி பேர்ல ஒரே சாணி வீச்சம்.

பிள்ளைகளெப் பிடிச்சிக் கொண்டுபோயி என்ன செய்வாம் பாட்டி என்று கேட்டேன். மண்ணுக்குள்ளே போட்டு புதைச்சிப் போடுவாம். புதைச்சி அதுக்கு மேலே பாலம் கட்டிருவாம் என்றாள். எதுக்காக? அப்பதாம் பாலம் பலமா இருக்கும். இல்லே... இடிஞ்சி விழுந்துருமாம் என்றாள். சேக்காளி சிக்கம்மா. பாட்டியை நறுக்கென்று ஒரு கிள்ளு வைத்து சும்மாதானெ சொல்லுதெ என்று கேட்டாள். பாட்டி முழிக்கிறதெப் பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அடங்காத பிள்ளைகளெப் பயமுறுத்திப் பணிய வைக்க குடும்பத்தோடு இந்த நாடகம் ஆடுவார்கள். சாப்பிட மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் ஒழுங்காகச் சாப்பிடுவார்கள்.

இன்னொரு பயமுறுத்தல்: இப்பொத் தோலை உரிக்கிறவனைக் கூப்பிடுவா? என்று கேட்பது. குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் உடனே முகத்தை பயப்படுகிறது போல வைத்துக் கொண்டார்கள். கொங்சம் கழித்து சத்தத்தைக் குறைத்து கிசுகிசுக் குரலில் வேண்டாம் என்பார்கள். குழந்தைப் பிள்ளை ஒழுங்காகச் சாப்பிட ஆரம்பித்துவிடும். இப்போது நாங்கள் பெரிய பிள்ளைகள் ஆகிவிட்டோம் என்றாலும், கவுலூர்ப் பாட்டி சொன்னது அப்படியே நிற்கிறது மனசில்.

ஒரு சோற்றுத் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து கதவைத் திறந்து கொண்டு மாடுகளுக்குக் கூளம் போட வருகிறார் ஒட்டிக்கொண்ட நாயக்கர். தொழு தனியாக இருந்தாலும் அதுக்கு வாசக்கதவு கிடையாது. அதன் வாசல் தெருவைப் பார்த்து இருக்கும். அதனால் மாடுகள் இல்லாத வீட்டுக்காரர்கள் வாசத் தெளிக்க இவர்கள் வீட்டுத் தொழுவில் வந்து தான் சாணி எடுத்துக்கொண்டு போவார்கள். அதுவும் ஒரு தருமம்தானே என்று நினைத்து யாரையும் ஒன்றும் சொல்வது கிடையாது. பசுமாடுகள் ஒரு வரிசையிலும் உழவுக்காளைகள் ஒரு வரிசையிலும் இருக்கும்.

அது அரிக்கேன் லைட்டுகள் வந்தும் வராத காலம். மண்சிட்டித் தீபங்களுக்கும் இருட்டுக்கும் பழகிய கண்கள். சிறிய நிலா வெளிச்சம் கூட அவர்களுக்குப் பிரகாசமான வெளிச்சமாகத் தெரியும். அவர் கதவைத் திறந்து படி இறங்கியவுடன் புதிதாகப் பிடித்துக்கொண்டு வந்த உயரமான லம்பாடிக் காளைகள்தான் கண்ணுக்குப் புலப்படும்.

விலை உயர்ந்த காளைகள் இந்த மாசம்தான் கழுகுமலைச் சந்தையில் பிடித்துக்கொண்டு வந்தார். மாடுகள் என்றால் இந்த மக்களுக்கு அவ்வளவு பிரியம். பெற்ற பிள்ளைகளுக்கு அடுத்தபடி மாடுகள்தான் அவர்களுக்கு.

காளைகள் நின்றுகொண்டிருந்த விதம் அவருக்கு வித்தியாசமாகப் பட்டது. கிட்டெ நெருங்கிப் பார்த்தபோது நிறம் வேற மாதிரித் தெரிந்தது. வால்கள அசையாமல் அய்யங்கோவில் சிலைகள் போல நின்று கொண்டிருந்தன.

அவருடைய தொண்டையிலிருந்து செங்கம்மா என்ற குரல் கதறலாக ஒலித்தது. சுருக்கி வைத்திருந்த அரிக்கன் லாம்பைத் தூண்டிவிட்டு எடுத்துக்கொண்டு செங்கம்மா வேகமாக வந்தாள். எதாவது பூச்சிபுட்டரை தட்டிவிட்டதோ என்று நினைத்துதான் லாந்தலைத் தாழப்பிடித்துப் பார்த்துக்கொண்டு கவனமாக வந்தாள்.

அவருக்கு ஒண்ணுமில்லை. மாடுகளுக்குத்தான் எதோபோல.... லாந்தலை உயர்த்திப் பிடித்துப் பார்த்தாள். வெள்ளை நிறத்து மாடுகள் வேற்று நிறமாக, அங்கங்கெ ரத்தம் கசிய செங்களித்துப்போய் நின்று கொண்டிருந்தன.

வழக்கமாகத் திரும்பிப் பார்க்கும் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தன. லைட் வெளிச்சத்தில் கிட்டே நெருங்கித் தொட்டுப் பார்த்ததில் உடல்களில் தோல் இல்லை. சட்டை கழற்றிய வெத்து உடம்பாக இருந்தன.

நாயக்கருக்கு நிற்க முடியவில்லை. உடல் நடுங்க ஆரம்பித்தது. செங்கம்மா அவரைத் தாங்கிக்கொண்டாள். காற்றடிக் காலம் இல்லாததால் ஊரே சத்தமில்லாமல் இருந்தது. இது என்ன கொடுமை. யாரைக் கூப்பிட்டுச் சொல்றது.

எல்லாத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிற கடவுளைக் கூப்பிட்டுத்தான் சொல்லணும். உரத்துக் கத்திக் கூப்பிட்டாள் செங்கம்மா அழுகைக் குரலில். என்னமோ ஏதோ என்று பக்கத்து வீடு, எதிர் வீடு, தெரு, ஊர் என்று ஓடிவந்தார்கள். வந்தவர்களில் மாட்டுத் தரகர் மன்னார் நாயக்கரும் இருந்தார். இந்தப் புரியாத நிலையை அவர்தான் விளக்கமாகச் சொன்னார். ஊர் உலகத்துக்கு அப்போதுதான் இந்த உண்மை தெரியவந்தது. கேட்ட சம்சாரிகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரோடு சண்டைக்குப் போவது போல எதிர்த்துப் பேசினார்கள். அவர்கள் பார்த்ததெல்லாம் ஆட்டைத் தோலுக்கப் பார்த்ததுண்டு. அதுவும் அது இறந்ததுக்கு அப்புறம்.

உயிரோடு வைத்துக்கொண்டு ஒரு மாட்டில் எப்படித் தோல் உரிக்கிறது? அதுக்கெல்லாம் ஒரு பச்சிலை இருக்காம். அதைத் தடவிட்டா கீறுகிற இடங்களில் வலிக்காதாம். பிறகென்ன ஆட்டுல உறிக்கிற மாதிரி தோலை உறிச்சிக்கிட்டு போயிருவாங்களாம். கறியைவிட தோலுக்கு நல்ல விலை இருக்காமெ. பிறகுதாம் தெரியவந்தது. இதேபோல் பல இடங்களில் நடந்திருக்கிறது என்று. மக்களிடம் கோபம் அலை மோதியது. யார் இதைச் செய்திருப்பார்கள் என்று கண்டுபிடித்தே ஆகணும் என்று.

திருட்டுத்தனமாக மாடுகளை அவிழ்த்துக் கொண்டு போகிறதைப் பற்றித்தான் தெரியும். உயிரோடு தோலை உறித்துக்கொண்டு போவார்களா. எப்படியோ துப்பு துலங்கியது. துலங்கினால் மட்டும் போதுமா. கையும், களவுமாயப் பிடிக்க வேண்டாமா. அதே சோலியாக மன்னார் நாயக்கர் அலைந்து ஒரு நுனியைக் கண்டுபிடித்தார். அந்தக் கூட்டத்துக்கும் தீக்கொழுத்தி கோயிந்தனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று மட்டுமே தெரிந்தது.

இந்த ஊரில் இனி நாம இருக்கக் கூடாது என்று ஒட்டிக்கொண்ட நாயக்கருடைய குடும்பத்தாருக்குத் தோன்றிவிட்டது. இப்படித் தோன்றியதுக்கு மேலும் பல காரணங்கள் உண்டு. அந்தக் குடும்பத்தில் சொல்லி வச்சதுபோல அத்தனை பேரும் நல்ல குணமுள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களுடைய விளைநிலத்தில் யாரும் தைரியமாக இறங்கலாம். புல் அறுக்கலாம். வரப்புகளின் ஊடே கொண்டுபோய் கைமாடு மேய்க்கலாம்.

கருது ஒடித்துக் கசக்கித் திங்கலாம். கைப்பருத்தி எடுக்கலாம். மொச்சிக்காய் உருவலாம், அப்படி ஒரு அனுபோக பாத்தியதை ஊர்மக்களுக்கு.

அவர்களுக்கு கொட்டாரத்திலுள்ள தீவனப் படப்புகளில் பயமில்லாமல் போய் தங்கள் வீட்டு மாடுகளுக்கு கூளம் ஒடித்துக் கட்டிக்கொண்டு போவார்கள். ஒருநாள், கம்பெனிக் கடைமுக்கில் சுப்பையக் கவுண்டர் சந்தோசமாகத் தான் கண்ட ஒரு காட்சியை சிரித்துக் கொண்டே ரசமாக விவரிக்கிறார்.

ஒட்டிக்கொண்ட முதலாளி கொட்டரத்துக்குப் பக்கம். இவர் வெளிக்கு இருந்து கொண்டிருந்தாராம். அவர்களுடைய தீவனப் படப்பில் பாலான் வந்து ரொம்ப சாவகாசமாகக் கூளம் சரித்து ஒடித்துக் கொண்டிருந்தானாம். சரிதான். இப்பொ இவன் இங்கே வேலைக்கு நிக்கிறான் போலிருக்கு என்று இவர் நினைத்துக் கொண்டாராம். அந்நேரம் ஒட்டிக்கொண்ட முதலாளியே வருகிறார். வந்தவர் அவனைப் பார்த்ததும் இன்னொரு படப்பு மறைவில் ஒளிந்துகொள்கிறார். விசயம் விளங்கவில்லை கவுண்டருக்கு. இந்தப் பயல் திருட்டுக் கூளம் ஒடிக்கிறாம் போலிருக்கு. அகப்பட்டுக் கொள்வான் இப்பொ என்று நினைத்து, அடுத்து நடக்கப் போறதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாராம்.

பாலான் கூளக்கட்டை எடுத்து தலையில் வைத்துக்கொண்டு போய்விட்டான். இவர் இந்தப் பக்கம் சிரித்துக்கொண்டே வருகிறார். என்னா முதலாளி. நீங்க அவனெக் கண்டு ஒளியிதீக? என்று இவர் கேட்டதுக்கு, என்னைப் பார்த்துட்டா அவனுக்குச் சங்கடமா இருக்கும் பா என்றாராம். கதெ எப்பிடி இருக்கு பாருங்க என்றார் சுப்பையக் கவுண்டர்.

வஞ்சகமத்த மகராசனுக்கு வறுத்த காணமும் முளைக்கும்ன்னு சும்மாவா சொல்லி இருக்கு என்று அதுக்கு ஒரு முத்தாய்ப்புக் கொடுத்தார் புதூர் நாயக்கர். நம்ம புஞ்சையிலே விளையிறதெல்லாம் நமக்கேன்னு நினைக்கப்படாதுப்பா. பட்சி சாதிகளுக்கும் பசியோட இருக்கிறவங்களுக்கும் போகத்தால் நமக்கு என்பார் அவர். அப்பேர்க் கொத்தவர். இது மனுஷர் வாழ்ற ஊரு இல்லை என்று புறப்பட்டு, தட்டு சாமான்களையெல்லாம் ரெண்டு வண்டிகள்ளெ கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமாகி விட்டார்கள்.

இன்னது செய்யது என்று யாருக்கும் தெரியவில்லை. அப்படியே திகிலடிச்சிப்போய் பார்த்துக் கொண்டே இருந்தது ஊர் பூராவும். அந்த சமயத்தில்தான் வந்தார் கோனேட்டி குருவய்ய நாயக்கர். வெளியூர் போய்விட்டு வருகிறார் போலிருக்கு. இங்கே நடந்தது ஒண்ணும் அவருக்குத் தெரியாது. தோளில் சாய்த்த பெரிய்ய கனமான கட்டையை வைத்துக்கொண்டு பீமசேனன் போல வந்தார். என்ன கூட்டம் இங்கே என்பது போல முகக் குறியுடன். என்னடா என்று மன்னார் நாயக்கரைப் பார்த்தார். இவர் எல்லா விவரங்களையும் ஆதியோடந்தமாக. தீக்கொளுத்தி கோயிந்தன் சம்பந்தப்பட்ட அனைத்தையும் சொன்னதும், வந்ததே ஒரு ஆங்காரம் அவருக்கு.

தோளில் வைத்துக்கொண்டிருந்த கட்டையை வீசி எறிந்தார். எங்கடா இருக்காம் அந்த கோயிந்தன் என்று ஆவேசமாகப் புறப்படவும் ஊர் இளவட்டங்களும் அவரோடு சேர்ந்துகொண்டார்கள்.

கொஞ்ச நேரத்தில் அவனுடைய தலைமயித்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தார் கோனேட்டி. ஊரே அவனை நினைத்து நடுங்கிக் கொண்டிருந்த கோயிந்தை இப்பொப் பந்தாடினார்கள். அடிபொறுக்க மாட்டாமல் ரெண்டு கைகளையும் தலைக்குமேல் குவித்துக்கொண்டு அனைத்தையும் ஒப்புக்கொண்டான்.

அதே பாரவண்டியின் பைதாவில் அவனைக் கட்டி வைத்து, உயிரோடு மாட்டின் தோலை உரித்தது போல இவனையும் உரிங்கடா என்றார்கள். ஒட்டிக்கொண்ட நாயக்கருக்கு இவர்கள் செய்வது சரி என்று படவில்லை. சொன்னாலும் இவர்கள் கேட்கப்போவதில்லை. ஒரு இளவட்டத்திடம் இவனுடைய பெண்டாட்டி வீட்டில் இல்லையா என்று கேட்டார். காட்டுக்குப் பருத்தி எடுக்கப் போயிருக்கா என்றான். ஓடுடா. தகவல் சொல்லு. இவர்கள் இப்பொ இவனைக் கொன்னு போட்டுடுவாங்க ஓடு என்றார்.

கொஞ்ச நேரத்தில் அவள் தலைவிரி கோலமாய் கூப்பாடு போட்டுக் கொண்டு ஓடிவந்து ஊர்க்காரர்களின் கால்களில் விழுந்தான். நாங்க போயிருறோம் ஊரைவிட்டு. மகாராசங்க ஏம் போகணும் என்று மாறி மாறிச் சொன்னாள். திரும்பிப் பார்க்காமப் போயிருங்க என்று கட்டை அவிழ்த்து விட்டார்கள். அவர்கள் அப்படியே கட்டுன சேலை வேட்டியோட அங்கிருந்து போய்விட்டார்கள். ஊர்மக்கள் வண்டிகளில் உள்ள பண்டபாத்திரங்களையும் ஒட்டிக்கொண்ட குடும்பத்தாரையும் அவர்களின் வீட்டினுள் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். யோசித்துக் கொண்டும் தயங்கிக்கொண்டிருக்கும் வரைதான் அக்கிரமங்கள் நடக்கும் என்பது தெரிந்தது.

Pin It