‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப்பிற்காக இந்த ஆண்டின் சாகித்திய அகாடமி விருது பெற்றிருக்கிறார் நாஞ்சில் நாடன். ஜி.சுப்பிரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழில் எழுதிவருபவர். இதுவரையிலும் 6 நாவல்கள், 9 சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து கட்டுரைத் தொகுப்புகள், 2 கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர். இவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’ மிக வெற்றி பெற்ற படைப்பு. 8 பதிப்புகளில் இதுவரையிலும் 18 ஆயிரம் பிரதிநிதிகள் விற்பனையாகியுள்ளன. ‘சொல்ல மறந்த கதை’ என்ற பெயரில் இது திரைப்படமாகியுள்ளது.

எழுத்து இவருக்குத் தவமோ, வேள்வியோ, பிரசவ வேதனையோ, ஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல. பணம் சம்பாதிக்கும் முயற்சியும் அல்ல. பேரும் - புகழும் தேடும் முயற்சியுமல்ல. மாறாக மனிதர்களின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. தனது சுயத்தைத் தேடும் முயற்சி. இவ்வாறு அவர் கூறுவதிலிருந்தே எழுத்தை நாஞ்சில் நாடன் அணுகும் விதத்தின் தனித்தன்மை புலனாகும். தனது எழுத்தை ஓர் ஆயுதமாக மாற்றிக் கொள்ள தனது கட்டுரைகள் உதவியதாகச் சொல்கிறார் இவர்.

இவரது ‘சதுரங்கக் குதிரை’ நாவல் 1995ல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசைப் பெற்றது. மும்பை தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது, லில்லி தேவசிகாமணி விருது, அமுதன் அடிகள், கண்ணதாசன் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை நாஞ்சில் நாடனின் படைப்புகள் பெற்றுள்ளன. இவரின் ‘மிதவை’ நாவல் பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்காக நேஷனல் புக் ட்ரஸ்ட்டினால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவரின் கருத்துகளோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம்; ஆனால் அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும்பட வேண்டுமென்பதே நாஞ்சில் நாடனின் எதிர்பார்ப்பு.

நாஞ்சில் நாடனுக்கு, 63வது வயதில் சாகித்திய அகாடமி விருது கிடைத்ததில் மகிழ்ச்சிதான். ஆனாலும், விருது கிடைத்த மகிழ்ச்சியின் பின்னே நீண்டகாலப் புறக்கணிப்பின் வலி உள்ளதாக இவர் உணர்கிறார்.

“காலம் கடந்த அங்கீகாரம் சகிக்க முடியாதது. சரியான நேரத்தில் சரியான நபருக்கு அங்கீகாரம் கிடைப்பது அவசியம்” - என்கிறார் நாஞ்சில் நாடன்.

சந்திப்பு: கமலாலயன், கோவை தி.மணி, மு.பரமேஸ்வரன்

(கோவையில், மரங்களடர்ந்த ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள நாஞ்சில் நாடனின் இல்லத்தில் நடைபெற்ற நேர்காணலின் எழுத்துவடிவப் பதிவு இனி தொடர்கிறது..)

உங்களின் இளமைக்காலத்திலிருந்து துவக்கலாமா...

நாஞ்சில் நாடன் : நான் பிறந்து வளர்ந்த ஊர் வீரநாராயணமங்கலம். கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை தாலுகாவில் இருக்கிறது. அப்பா விவசாயி. எங்கள் ஊர்தான் அந்த மாவட்டத்தில் இரண்டாவது திமுக கிளைக்கழகம் அமைந்த ஊர். திராவிட இயக்கமும், பொது வுடைமை இயக்கமும்தான் அந்த நாட்களில் மிக வலுவாக இருந்தன. எங்களின் மீது தாக்கம் செலுத்தியதும் அப்போது இந்த இயக்கங்கள் தான். இரண்டிலும்கூட திராவிட இயக்கம்தான் மாண வர்களை அதிகமாக ஈர்த்தது. அன்றைய காலகட்டம், ஓர் அரசியல் எழுச்சிமிக்க காலம். எங்கள் ஊரில் திராவிட இயக்கத் தலைவர்கள் நாஞ்சில் மனோகரன், பேராசிரியர் அன்பழகன், பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள் பி.ராம மூர்த்தி, எம்.கல்யாணசுந்தரம் இப்படியாகப் பெரும் தலை வர்கள் வந்து பேசுகிற அரசியல் கூட்டங்கள் ஏராளமாக நடக் கும். ஆன்மீகச் சொற்பொழி வுகளும் அப்போது கோயில் திருவிழாக்களை ஒட்டி நடை பெறும். இவற்றை எல்லாம் மிக ஆர்வத்துடன் நடந்து போய்க் கேட்டு வருவேன். அப்போது என் நோக்கம், பள்ளியில் கட்டுரை -பேச்சுப் போட்டி களில் சேர்ப்பதற்கான நல்ல பாயின்ட்ஸ் கிடைக் குமே என்பதாகத்தான் இருந்தது.

ஊரிலேயே கிளை நூலகம் ஒன்று நல்ல புத்தகங் களுடன் இயங்கி வந்தது. அவற்றைப் படிக்கத் தொடங்கி னேன். வாசிப்பின் தொடக்க நிலை அது என்பதால், எல்லோ ரையும்போல நானும் அகிலன், சாண்டில்யன், நா.பார்த்தசாரதி, லக்ஷ்மி, தி.ஜானகி ராமன் என்றுதான் முதலில் படித்துக் கொண்டிருந் தேன்.

கேரளாவில் ஏ.கே.கோபாலன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அதை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தில் பங்கேற்றவரான வாசு என்ற தோழர், தலைமறைவு வாசத்திற்காக எங்கள் ஊருக்கு வந்தார். அவர் மூலமும் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.

1964-65ல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தபோது, போலீசாரிடம் பிரம்படிபட்டேன். 1967ம் ஆண்டு பொதுத் தேர்தலில் அங்கு போட்டி யிட்ட திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய் வதற்குப் போனேன். ஒரு காரில் மைக் கட்டிக் கொண்டு பேசியபடி போனேன். 1967ல் திமுக வெற்றி பெற்றதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம். ஆனால் இரண்டே ஆண்டுகளில் எங்கள் பிரமைகள் உடைந்து போயின.

பிரமைகள் உடைபட்டதற்கான காரணம்..?

வேலையின்மைப் பிரச்சனையில் எனது சொந்த அனுபவமும் ஒரு காரணம். வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் என்று வரும்போது, பணம் கொடுக்காமல் எதுவும் நடக்கவில்லை. அந்த நிலையை எதிர்கொண்ட போது பிரமைகள் தாமாக உடைந்துபோயின. நான் க்ஷ.ளுஉ. ஆயவாள முடித்திருந்தாலும், எஸ்.எஸ்.எல்.சி. லெவலில் தேர்வு எழுதுவேன். வேலைக்குத் தேர்வுப்பட்டியலில் பெயர் வராது. கிராஜு வேஷன் லெவலில் எழுதியபோதும் அதே கதை. இப்படியான சூழ்நிலைகள் உருவான பொழுது, இவர்கள் உண்மையானவர்கள் இல்லை என்ற தெளிவு பிறந்தது.

பிறகு என்ன செய்தீர்கள்..?

வேலை தேடி பம்பாய்க்குக் கிளம்பினேன். எங்கள் ஊரில் நாங்கள் குத்தகைக்குப் பயிரிட்டு வந்த நிலங்களின் உரிமையாளர் அப்போது பம்பாயில் இருந்தார். அங்கே போனதும் கலெக்டர் அலுவ லகத்தில் ரூ.7 தினசரி சம்பளத்திற்குப் பணி செய் தேன். எங்கள் நில உரிமையாளர், ஹெச்.ஒய். பிராடி நிறுவனத்தில் கேஷுவல் லேபராகச் சேர்த்து விட்டார். அங்கேயும் ஆரம்பத்தில் அதே ஏழு ரூபாய் தினக்கூலிதான் சம்பளம்.

பம்பாய் வாழ்க்கை எப்படியிருந்தது?

தனிமை ஏக்கம், வீட்டு ஞாபகங்கள் நிறைந்த நோஸ்டால்ஜிக் மனநிலைதான்... ஹெச்.ஒய். பிராடி நிறுவனத்தில் அப்போது எனக்கு வேலை கொஞ்சம் குறைவுதான். அதனால் பொழுதைக் கழிக்கப் புத்தகங்கள் படிப்பது வாடிக்கை. வாசிக்கப் புத்தகங்கள் வேண்டுமே என்பதற்காக பம்பாய்த் தமிழ்ச்சங்கத்திற்கு மாலை நேரங்களில் போய்விடுவேன். அங்கு உறுப்பினராக என்னைப் புலவர் கலைக்கூத்தன் சேர்த்துவிட்டார். அங்கேதான் எனது வாசிப்புப் பசிக்குச் சரியான தீனி கிடைத்தது. தமிழ்ச்சங்க நூலகத்திலிருந்து புத்தகங் களை தினசரி 2 என்ற அளவிற்குக் கூட எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன். எங்கள் ஊரான வீர நாராயண மங்கலத்தில் எனக்குப் படிக்கக் கிடைக் காத பல நல்ல, நவீன இலக்கியப்பிரதிகள் பம் பாய்த் தமிழ்ச்சங்க நூலகத்தில் கிடைத்தன. புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் - இப்படியான பல படைப்பாளிகளை வாசித்தேன். ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட்... எங்கே போனா லும் படிப்பு...படிப்பு... இதேதான் வேலை. வீட்டு ஞாபகங்கள் அதிகமாக மேலோங்கும் போது, என் கண்களில் நீர் நிரம்பித் ததும்பும்... இம்மாதிரியான ஒவ்வொரு சமயத்திலும் விக்டோரியா டெர்மினஸ் (இப்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) ரயில்நிலையத்திற்குப் போய்விடுவேன். அங்கே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு சென்னைக்குப் புறப்படும் ஒவ்வொரு ரயிலையும் பார்த்துக் கொண்டே உட்கார்ந்திருப்பேன். பிரயாணிகளையும், ரயிலையும் பார்க்கையில் நானே சென்னைக்குப் பயணமாவது போல ஏதோ ஒரு வகையான மனநிறைவு ஏற்படும். அது ஒரு மாதத்திற்குத் தாங்கும்...

இந்தச் சூழ்நிலையில் 1979ல் திருமணம் நடந்தது. அப்போது 790 ரூபாய் சம்பளம். எனக்குக் கம்பெனியில் விற்பனைப் பிரிவுக்குப் பதவி உயர்வு கொடுத்தார்கள். அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. செலவுக்கும் முன்பணமாகக் கிடைத்து விடும். நான் வெளியூர்களுக்குப்போய் மில்களில் நிர்வாகிகளைச் சந்தித்து, நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வாங்கி வருவேன். அந்த மாதிரிப் பயணங்களில் இந்தியா முழுவதிலும் சென்று வந்தேன்.

தங்குமிடம், உணவிற்காக மிகக்குறைந்த செலவு பிடிக்கிற மாதிரிப் பார்த்துக் கொள்வேன். போகிற ஊர்களில் என்னென்ன பொருள்கள் வீட்டு உபயோகத்திற்கு மலிவாகக் கிடைக்கும் என்ற விவரம் எனக்கு அத்துபடியாக இருந்தது. பண் ருட்டிப் பக்கம் போனால் பலாப்பழம், நாக் பூருக்குப் போனால் வெங்காயம், இப்படியே பருப்பு வகைகள், கருத்த மொச்சை, கருத்த கொள் - எங்கள் பக்கத்தில் காணம் என்பார்கள் - இப்படி மலிவாகக் கிடைப்பதை எல்லாம் பை நிறைய வாங்கி வருவேன். வாழைக்காய் வாங்கப் போனால், வாழைத்தாரிலிருந்து உதிர்ந்த காய் களைக் கூறுகட்டி விற்பார்களே. அது மாதிரிப் பார்த்து வாங்குவேன். இப்படியாகச் சிக்கனமாக இருந்து பிள்ளைகளைப் படிக்க வைத்தேன். என் செலவுகள் குறைவு. புத்தகங்கள் வாங்குவதில் மட்டும்தான் கொஞ்சம் செலவாகும்.

இந்த மாதிரியான ஓயாத பிரயாணங் கள், திட்டமிடல்களுக்கு நடுவே, படைப்பாக் கத்தின் மீது எப்படி கவனம் திரும்பியது?

ஒரு முறை, வட இந்தியாவில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். சாப்பிட நேரம் கிடைக்கவில்லை என்பதால் பார்சல் வாங்கி வைத்திருந்தேன். அதை ஒரு ரயில்நிலையத்தில் வண்டி நின்றபோது பார்சலைப் பிரித்து சாப்பிடத் தொடங்கினேன். அந்த நிலையத்தில் ரயிலில் ஏறிய ஒரு பெரியவர் என்னையும், என் கையிலிருந்த பார்சலையும் பார்த்தார். அவரது பதற்றத் திலிருந்தே அவர் பசியுடன் இருந்தார் என்பது தெரிந்தது. என் பார்சலில் கொஞ்சம் ரொட்டிகள் மீதியிருந்தன. பசியாலும், பதட்டத்தாலும் நடுங் கும் உடலோடு அவர் என்னைப் பார்த்து, “ழயஅஅi முயயயேயச! முயஅஅi முயயயேயச!” என்றார். “நாம் சாப்பிட லாம்...!” என்பது தான் ‘ஹாமி கானார்’ என்று அவர் சொன்னதற்கு அர்த்தம். ‘எனக்குப் பசிக்கிறது, கொஞ்சம் ரொட்டி கொடு...’ என்று அவர் கேட்க வில்லை. வேறு எதையும் யாசிக்கவுமில்லை. ‘நாம் உண்போம்’ என்று ஒலித்த அந்தக்குரல் என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது. யோசித்துக் கொண்டேயிருந்தேன். அவர் ஏன் அந்த மாதிரி பசித்த வயிறுடன் வந்தார்? அவருக்கு மகன், மகள், மருமகன், மனைவி - யாருமில்லையா...? இப்படி உள்ளேயே கிடந்து ஊறிய கேள்விகள் தாம் - சின்னத்தம்பியா பிள்ளையை, அவரது இரண்டு மகள்களை, பிள்ளையின் அமாவாசை விரதத்தை, பசிக்குச் சாப்பிட ஏங்கி இரண்டு மகள்களின் வீடு களுக்கும் அவர் அலைந்ததை, குளித்து முடித்துத் திருநீறணிந்துவிட்டால் அவர் சாப்பிட்டு விட்டதாக அர்த்தம் என்பது ஊர் முழுக்கப் பிரசித்தமாகி விட்ட நிலையில், அந்தப் பிரசித்தமே அவரது பசிக்குப் பகையாகி விட்டதை, ஆயாசத்துடன் அவர் வீட்டிற்கே திரும்பி பழைய சோற்றுப் பானை யிடமே சரணடைந்து ஊறுகாயைத் தேடியதை - ‘விரதம்’ கதையாக வெளிப்பட்டு வந்தது. இது 1972ல் தீபத்தில் பிரசுரமானது. இலக்கியச் சிந்தனை யின் பரிசையும் பெற்றது.

இதுதான் அச்சில் வந்த முதல் கதையா? வேறு ஏதேனும் வகையான எழுத்து கள் அதற்கு முன் நீங்கள் எழுதி அச்சில் வந்திருக்கின்றனவா?

பம்பாய்த் தமிழ்ச்சங்க இதழ் ஒன்று ‘ஏடு’ என்ற பெயரில் வந்தது. அதற்கு, புலவர் கலைக் கூத்தன்தான் ஆசிரியர். 32 பக்க இதழ் அது. பாதிப் பக்கங்களில் தமிழ்ச்சங்கத்தின் நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் - புகைப்படங்களும் இடம்பெறும். மீதிப் பாதிப்பக்கங்களில் தமிழ்ச்சங்கத்திற்கு வரும் அறிஞர்கள் ‘ஏடு’ இதழுக்கு அனுப்பும் கட்டுரைகள் வெளியாகும். இந்தக் கட்டுரையாசிரியர்கள், 64 பக்க அளவிற்குக் கூட தங்களின் கட்டுரைகளை எழுதி அனுப்பியிருப்பார்கள். இப்படி அனுப்பிய வர்களுள், மறைந்த க.த.திருநாவுக்கரசு, வை.இரத்தினசபாபதி, ந.சஞ்சீவி ஆகியோரின் கட்டுரைகளைகூட ‘ஏடு’ இதழில் 4 பக்கங் களுக்குள் சுருக்கி நான் போடச்செய்திருக்கிறேன். இதைச் செய்தது ஒரு நல்ல பயிற்சியாக அமைந்தது.

தலைகீழ் விகிதங்கள்’ - உங்களின் முதல் நாவல். அதில் இருந்த எதார்த்தவாத எழுத்து இப்போது எடுபடாது; எதார்த்த வாதம் செத்துப்போய் புதைகுழிக்கே போயாகிவிட்டது. இன்றைய எழுத்துக்களின் காலம் - நவீனத்துவம், பின் நவீனத்துவம், நான்லீனியர் ரைட்டிங் போன்ற நவீன வகை எழுத்துகளின் காலம் என்கிறார்கள். இதுபற்றி யெல்லாம் நிறைய சர்ச்சைகள்..! உங்களின் பார்வையில், ஒரு தேர்ந்த படைப்பாளியின் அனுபவத்தில் இந்தத் தொழில்நுட்பங்களைப் பற்றிச் சொல்லுங்கள்.

எதார்த்தவாதம் சாகவில்லை; சாகவும் சாகாது. அது செத்துப்போய்விட்டது என்கிறவர் களின் படைப்புகள் தமிழிலக்கியப் பரப்பில் எத்தனை பெரிய வெற்றிகளைச் சாதித்துவிட்டன? என்னைப் பொறுத்தவரை, மனிதர்களின் உண்மை யான உணர்வுகளை நியாயமான உணர்வுகளை, சரியான - பொருத்தமான மொழியில் தருவதுதான் இலக்கியம். எதார்த்த இலக்கியம் ஒரு புள்ளியில் துவங்கி அதிலேயே முடிந்துவிடும் வட்டம் அல்ல. அது ஒரு புள்ளியில் தொடங்கி மேலே - மேலே சுழன்று ஏறிச்செல்லும் ‘ஸ்பைரல்’- அதாவது வளைந்து வளைந்து மேலேறும் மாடிப்படிக் கட்டுகள்போல. ஒரு படைப்பாளிக்கான மூல தனம், இந்த மண்ணும் அதில் வாழும் மனிதர் களும்தான்..! நமது மக்களின் நேயம்... பிரசவமான பிள்ளைத்தாய்ச்சிப் பெண்ணுக்கென்று மீன் கேட்டால், அவளுக்குப் பால் அதிகமாகச் சுரக்கச் செய்யும் மீன் வகைகளைத் தமது ‘மடி’(வள்ளம்) யிலிருந்து கடல்மீன் குவியலில் தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு, காசு வேண்டாம் என்கிற மீனவர் கள்... தென்னை மரங்களிலிருந்து தேங்காய்களை யும், பனைமரத்துப் பதநீரையும், தோட்டத்து மரங் கள் - செடிகொடிகளிலிருந்து காய்கறிகளையும் இலவசமாகவே கேட்கிறவர்களுக்குக் கொடுத்து மகிழ்கிற மக்கள். பசிப்பதற்றத்துடன் வரும்போது கூட, ‘எனக்குக் கொடு’ என்று கெஞ்சாமல், ‘நாம் உண்போம்’ என்கிற கிழவர்... இவர்களும், இம்மக்களின் இயல்பான உணர்வுகளும்தான் நமது மூலதனம். நம்முடைய சொந்த அனுபவங் களும் எழுத்தாக மாறுகையில், மொழிநடை, படைப்பாக்கும் திறன், உண்மை இவை யெல்லாம்தான் கிரியேட்டிவிட்டிக்கான பலங்கள். எவ்வளவு திறமைக்குறைவான வகையில் எழுதப் பட்டிருக்கக்கூடிய படைப்பிலும்கூட ஒரு வாழ்வுண்மை இருக்கும். எதார்த்தவாதத்தைக் கைவிட்டவர்கள் மீண்டும் இன்று அதே இடத்திற்கு வந்து சேர்ந்திருப்பதைப் பார்க்கலாம். பூமணி, வண்ண நிலவன், வண்ணதாசன், கந்தர்வன், மேலாண்மை பொன்னுச்சாமி, தமிழ்ச்செல்வன், டி.செல்வராஜ், சின்னப்பபாரதி - இவர்கள் எல்லோரும் எதார்த்தவாதப் படைப்பாளி கள்தானே?

காலமாற்றத்திற்கேற்ப, நவீன உத்திகள் பயன்படுத்தப்படுவதுதானே சரியாக இருக்கும்? பழைய, தேங்கிப் போன எழுத்துக் களை இன்னமும் அதேமொழியில், உத்தியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு பற்றி...

எந்தப் புதிய உத்தியும், அதற்கான தேவை யைப் பொறுத்துத்தான் எந்த ஓர் இடத்திலும் எடுபடும். எனக்கு அது அவசியமென்றால், அது என்னிடம் எப்படியும் வந்து சேரும். இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களின் உத்திகள், அந்த நாடுகளின் மக்கள் பிரச்சனைகள், சூழலைப் பொறுத்து அந்த இலக்கியங்களுக்குப் பயன்படும். அதே உத்திகள் அப்படியே இங்கே எடுபடுமா? நமது மக்களின் வெளிப்பாட்டு உத்திகள் வேறு வகையானவை.

என் படைப்புகளைப் பொறுத்தவரை, 30 வருடங்களாக நான் எந்த வகையிலும் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. தலைகீழ் விகிதங்களில் தொடங்கிய என் மொழி இன்று அதே மாதிரி இருக்காது. ‘மிதவை’ நாவலில் எதார்த்தவாதமும் - நவீனத்துவக் கூறுகளும் கலந்தேயிருப்பதாகச் சொல்லுகிறார்கள். நான் ‘இன்ன வடிவத்தில்தான் எழுதுவேன்’ என்று திட்டமிட்டு அப்படியே எழுதவில்லை. தலைகீழ் விகிதங்களை இன்று நான் எழுதினால், அதே மொழியில், அதில் பயன்படுத்திய அதே சொல்லாடல்களில் இன்று அதை எழுதமாட்டேன். கால ஓட்டத்திற்கேற்ப, நானும் மாறி நகர்ந்து கொண்டேதான் வந்திருக் கிறேன். எனது மொழியும் மாறித்தான் வந்திருக் கிறது..! பின் நவீனத்துவ மொழியில் எழுத முடியும் என்று திட்டமிட்டு, பரிசோதனை முயற்சிகள் செய்தவர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவற்றில் எத்தனை படைப்புகள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன?

எந்தெந்த அரசியல், சமூக, பொருளாதாரக் காரணங்களுக்காக இலத்தீன் அமெரிக்க எழுத்தா ளர்கள் மாஜிக்கல் ரியலிசம் என்ற உத்தியைத் தேடிப் போனார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். மேற்குலகில் அவர்களின் மொழியிலக்கணத் திற்கேற்ப யீடிளவ அடினநசnளைஅ என்றொரு வகைப் பாட்டைக் கொண்டதை அப்படியே நாம் பின் - நவீனத்துவம் என்று மொழி பெயர்ப்பது சரியா; கட்டுடைத்தல் என்று நமது மண்ணையும் - மக்களையும் - வாழ்முறைகளையும் பண்பாட்டை யும் சார்ந்த படைப்புகளை மேற்கத்திய இலக்கிய அளவுகோல்களின்படி உடைத்துக் கொண்டு போனால் - என்ன மிஞ்சும்? - இதையெல்லாம் யோசிக்காமல் நாம் அப்படியே எந்த நவீனக் கோட்பாட்டையும் திணிக்கக்கூடாது. இப்படி யான நவீன உத்திகளை வலியுறுத்துகிறவர்கள், தங்களின் கல்விப் புலமையை, நுண்ணறிவுத் திறனை வெளிப்படுத்திக் காட்டுவதற்குத்தான் அப்படிச் செய்கிறார்கள். இதில் எனக்கு நம்பிக்கை யில்லை. க்ரியேட்டிவிட்டி என்பது வெறும் டெக்னிகாலிட்டி மட்டுமல்ல. சமீபத்தில் வந்த கண் மணி குணசேகரனின் ‘நெடுஞ்சாலை’ எஸ். செந்தில்குமாரின் ‘முறி மருந்து’ இரண்டையும் படித்துப் பாருங்கள். வெறும் உத்திகளில் இல்லை இலக்கிய வெளிப்பாட்டின் ஜீவன் என்பது தெரிய வரும். சு.nணுகோபாலின் ‘கூத்தப்பனை’ படித் தேன். இந்த படைப்புகளைப் படிக்கையில் வாழ்க்கையைப் படிப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறவர்கள், சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும். படைப்பு தானே வசமாகும். ஆனால் வாழ்க்கை அனுபவங்களைக் கலையாக்கு வதில் பல படித்தரங்கள் உள்ளன. ஒவ்வோர் எழுத்தாளருக்கும் அவருடைய கல்வி, அனுபவங் கள், வாழ்க்கைச்சூழல்... இவற்றைப் பொறுத்து பல லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. அதையும் மனதிற்கொண்டுதான் ஒரு படைப்பாளியை மதிப்பிட வேண்டும்.

சமீபகாலத்தில் கட்டுரைகளில் அதிக மான கவனம் செலுத்துகிறீர்கள், இல்லையா? ‘தீதும் - நன்றும்’ கட்டுரைகளில், குறிப்பாகப் பெண் மாணவிகளின் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளின் பிரச்சனைகள் பற்றி, இன்றைய சமூக நிகழ்வுகள், அரசியல், மொழி, இலக்கியம், மரபு - என சகல துறைகளிலும் உள்ள பிரச்சனைகள் பற்றி மிகச் செறிவான கட்டுரை களைத் தந்திருக்கிறீர்கள். ‘தமிழினி’யில் ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ பற்றியும், கண்மணி குண சேகரனின், ‘நெடுஞ் சாலை’ பற்றியும் கட்டு ரைகள் எழுதியிருக்கிறீர் கள். இவற்றைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்.

கட்டுரைகள் எழுதும்படி நண்பர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதினேன். அவற்றுக்கு வந்த எதிர்வினைகள் எனக்குத் தைரியம் தந்தன. சொல்லுவதற்கும் எனக்கு விஷயங்கள் இருக்கின்றன. நாஞ்சில் நாட்டு உணவு வகைகள், நானறிந்த எங்கள் ஊர்த் தாவரங்கள் பற்றி யெல்லாம் சொல்ல முடியாமலேயே போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஓரளவிற்கு இப் போது பதிவு செய்து விட்டேன். இனியும் சொல்ல வேண்டியிருக்கிறது.

‘நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல்லகராதி’ ஒன்றைத் தயாரியுங்கள் என்று ‘கரிசல் வட்டாரச் சொல்லகராதி’ தந்தவரான கி.ராஜநாராயணன் ஒரு சமயம் என்னிடம் சொன்னார். 3000 சொற்கள் வரையில் சேகரித்தேன். பிறகு அதைத் தொடர என்னால் முடியவில்லை. ‘கீணுதல்’ என்ற சொல் ஒன்றை அறிந்தேன். அது முந்திரிப்பழத்தை, காயை - இரண்டாகப் பிளப்பது பற்றியது. அந்தச் சொல் அறிமுகமான பின்தான் ‘புள்ளின் வாய்க் கீண்டானை’ என்ற பாசுரத்தின் பொருளை, அந்தச் சொற்பிரயோகத்தின் அழகை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. ‘புத்திமுட்டு’ என்று இன்னொரு சொல். சிரமமாயிருக்கிற ஒரு நிலையைச் சொல்லுவது. இப்படி எத்தனையோ... வாழ்வனுபவங்களைச் சொல்லவும், பதிவு செய்யவும் நமது சொற்களஞ்சியத்தில் ஏராளமுண்டு. எங்கள் மாவட்டம் திருவனந்தபுரத்தை ஒட்டியிருப்பதால் மலையாளச் சொற்கள் நிறைய எங்கள் பேச்சில் விரவிவரும். அவற்றில் பலவும் சங்க இலக்கியங்களில் பயின்று வரும் சொற்கள்!

இசையார்வம் உங்களுக்கு உண்டு அல்லவா? உங்களின் ‘தாளம்’ கதையில் வருகிற தவுல் வித்வான் மீது கடைசியில் கொஞ்சம் சலுகை காட்டியிருக்கிறீர்கள். கோபப்பப்பட வேண்டிய அளவிற்குக் கோபம் பூரணமாக வெளிப்படவில்லை போல் தோன்றுகிறதே..?

ஆமாம் ! நீங்கள் சொல்வது சரிதான்! அந்தக் கதையின் முடிவில், மகா கலைஞனான அந்தத் தவுல் வித்வானின் மீது கருணை காட்டும்படிதான் ஆகி விட்டது. கலைஞர்களுக்கு என்று சில செம்மார்ந்த பண்புகள் உண்டு. 6000 ரூபாய்க்கு சபாவில் பாடு வதற்கு ஒப்புக் கொள்கிற சில இசைக்கலைஞர்கள், ஒரு லட்ச ரூபாய் தர முன் வந்தாலும் கல்யாண வீட்டு நிகழ்ச்சிகளில் பாட மறுத்து விடுகிறார்கள். கவர்னர், படைத்தளபதிகள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வின் போது, உஸ்தாத் பிஸ்மில் லாகான் ஷெனாய் வாசிக்க, அல்லா ரக்கா தபலா. வாசிப்பதற்குத் தொடங்கிய பிறகும் சபையில் சளசளவென்ற பேச்சுச் சத்தம். மூன்று முறை சொல்லியும் கூட்டம் அமைதியைப் பராமரிக்கவில்லை. பார்த்தார் உஸ்தாத்; சட்டென்று ஷெனாயை உறையில் போட்டு மூடி எடுத்துக் கொண்டு சபையிலிருந்து வெளியேறி விட்டார். இங்கே அதிகாரத்தில் இருப்பவர்களின் உறவினர்கள் வந்தாலே எழுந்து நிற்கிறார்கள். பிஸ்மில்லாகானின் துணிச்சல் எத்தனை பேருக்கு வரும்? ‘தாளம்’ கதையின் வித்துவான், கலைஞனுக்கே உரிய பலவீனத்தினால் சிறு பையன் மேல் தன் ஆத்திரத்தைக் காட்டிவிட்டார் என்று எடுத்துக்கொண்டேன். கலைஞனின் பலவீனமான இடங்களில் இம்மாதிரி சறுக்கல்கள் நேரலாம். என்ன செய்வது?

 

இசையில் ஆர்வம் அதிகம்தான் எனக்கு. எங்கள் பக்கத்துத் தாளவாத்தியங்கள் - பம்பை, முரசு இரண்டும் ஒன்றாக இருக்கும். எல்லாச் சிறுதெய்வ வழிபாடுகளிலும் இது உண்டு. தப்பு வகையில் மகுடம் என ஒன்றிருக்கிறது. இதுபோல் பல வகை உண்டு. நம்மில் தாளலயம் சார்ந்த ரசிப்புத்தன்மை இரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. நேற்று ஏர்வாடியில் நான் பார்த்த ஒரு சிறுவன் - தன் தொடைகளில் இரண்டு கைகளையும் தட்டிக்கொண்டு போட்ட தாளம் ஆச்சரியத்தைத் தந்தது.

தலைகீழ் விகிதங்கள்’ நாவல், ‘சொல்ல மறந்த கதை’ யாகத் திரைப்பட வடிவில் வந்தது. அது திரைப்படமான விதத்தில் உங்களுக்கு முழு மனநிறைவு உண்டா?

எனது நாவல் தரும் வாசிப்பு அனுபவத்தை அதே அளவிற்குத் திரைப்படம் தரும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றம்தான் கிடைக்கும். ஏனென்றால் சினிமா மொழி வேறு. அது முற்றிலும் வேறான ஓர் ஊடகம். மொத்த நாவலிலிருந்து சில நுணுக்கமான இடங்களையும், கருவையும் மட்டும் எடுத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற காட்சிகளைக் கட்டி எழுப்பிக் கொள்கிறார்கள்.

சமகால எழுத்துகளின் உள்ளடக்கமும், போகிற திசைவழியும் பொதுவாக சரியாக இருக்கின்றனவா?

சமகால எழுத்துக்களின் உட்பொருள் காமம் மட்டுமே என்பது மாதிரியான ஒரு நிலை இருக்கிறது. பெண்கள் நன்றாகவும், நிறையவும் எழுதுகிற காலம் இது. ஆனால் பெண் எழுத்தின் பாடுபொருள் அவர்களின் உடலும், உடல் அரசியலும் மட்டுமே என்றாகிவிட்டது போல் தோன்றுகிறது. இதைத் தவிர பெண்களுக்கு வேறு எந்தப் பிரச்சனையுமே இல்லை என்றா அர்த்தம்...? அவர்கள் ஏன் தங்களின் கவிதைகளின் உள்ளடக்கம், சொல்லாடல்கள் இவற்றைப் பெண்ணுடலோடு மட்டுமே ஏன் குறுக்கிக் கொள்ள வேண்டும்?

இன்றைய சூழலில் சமூகப் பிரச்சனைகள், பண்புகளின் சீரழிவு, சமூக மட்டங்களில் சாதாரண மக்களின் வாழ்க்கை எந்தப் பயனையும் பெறாமல் போவது, விவசாயிகளுக்கு அவர்கள் விளைவிக் கும் பொருட்களுக்கெல்லாம் உரிய நியாயமான விலைகள் கூட கிடைக்காமல் இடைத்தரகர்கள் கொள்ளையடிப்பது - இப்படி எத்தனையோ நடக்கின்றன. 45 நாட்களுக்கு ஒருமுறை வெட்டி லாரிகளில் லோடு ஏற்றி அனுப்பப்படுகிற தேங்காய்களுக்குப் பணம் அடுத்த தேங்காய் வெட்டின்போதுதான் கிடைக்கிறது. ஒரு கோட்டை நெல்லின் விலை 600 ரூபாய்தான். அதுவும் உடனே கிடைப்பதில்லை. விவசாய உற்பத்திப் பொருட்கள் எதற்குமே எத்தனையோ வருடங்களாகியும் விலைகள் உயரவே இல்லை. விவசாயியோ - சாதாரணத் தொழிலாளியோ உலகமயமாக்கலால் எந்தவிதப் பயனையும் பெற்றுவிடவில்லை. இதுபற்றியெல்லாம் யாரும் யோசிக்காமல், உடலும் - உடல்சார்ந்த உணர்வு களும், மன உளைச்சல்களும், ஆழ்மன விகாரங் களும்தான் நவீன இலக்கியத்திற்கான பாடு பொருள் என்று எழுதிக் கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.

முற்போக்கு இலக்கிய வட்டார எழுத்தாளர்களின் மீது “இவர்கள் வெறும் முழக்கங்களையே கவிதைகள் என்கிறார்கள். வெற்றுப் பிரச்சாரக் கதைகளைத்தான் எழுது கிறார்கள். இவர்கள் யாரும் எதையும் படிப்பது கிடையாது. இவர்கள் எழுதும் எந்த ஒரு வரியும் இலக்கிய மதிப்புடையவை இல்லை. எல்லாம் வெறும் அரசியல் துண்டுப் பிரசுரங்கள் அல்லது அறிக்கைகள்...” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக் கிறார்கள். இது எந்த அளவிற்குச் சரி? உங்கள் கணிப்பில் முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளின் நிலை என்ன?

இம்மாதிரியான குற்றச்சாட்டுகளை நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இந்த சர்ச்சை புதியதுமல்ல. ரொம்ப நாளாய் நடப்பதுதான். கதையோ, கவிதையோ எதுவுமே சமூகத்தின் விளைபொருள் என்ற வகையில், வெற்றுக்கூடல்ல. அதற்குள் ஓர் உயிர் ஒளிந்து கிடக்கிறது. அதை, அதன் உயிர்த்துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது. எந்தப் படைப் பாளிக்கும், அவரின் எந்த ஒரு படைப்பிற்கும் அவருக்கேயுரிய அல்லது அதற்கே உரிய எல்லைகள் - லிமிட்டேஷன்ஸ் இருக்கின்றன. வாசகர்களில் பல படித்தரமானவர்கள் இருப்பதுபோல, படைப் பாளிகளிலும் பல படித்தரங்களில்தான் இருக்கிறார் கள்; இருப்பார்கள்.

ராஜம் கிருஷ்ணனையும், அம்பையையும் - இந்த இரண்டு பேரின் எழுத்துகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டையும் கணக்கிலேயே எடுக்காமல் தடாலடியான முத்திரை குத்திவிட முடியாது. நான் வாசித்த வரையில், கந்தர்வன், ச.தமிழ்ச்செல்வன், வேல.ராமமூர்த்தி, உதயசங்கர், இலட்சுமணப்பெருமாள், காமுத்துரை - இப்படிப் பலரும் நன்றாகவே எழுதுகிறார்கள். ஆனால் இவர்கள் அனைவரையும ஒரே கோட்டிற்குள் அடக்கிவிட முடியாது.

முழக்கங்களாகவும், அறிக்கைகளாகவும் படைப்புகள் வந்தால் அவற்றை விமர்சிக்கத்தான் வேண்டும். ஒட்டுமொத்தமாக முத்திரை குத்துவதை யார் செய்தாலும் அது தவறுதான். கலைத்தரமில்லாத ஒரு படைப்பு, எவ்வளவுதான் முற்போக்கான உள்ளடக்கத்துடன் இருந்தாலும் அது மக்களைக் கவராது. அதே சமயம் வெறும் கலைத்தரம் மட்டுமே இருந்து உள்ளடக்கம் உயிரற்றதாக இருந்துவிடும் பட்சத்தில் அந்தப் படைப்பும் பிரயோசனப்படாது. இதுதான் எனது அணுகுமுறை.

உங்கள் படைப்புகளின் தலைப்புகள், கட்டுரைகளில் விரவி வருகிற பல சொற்கள், மேற்கோள் காட்டுகிற பாடல் - கவிதை வரிகள் யாவும் சங்க இலக்கியச் சொல்லாடல் களைப் போன்ற கவித்துவ அழகுடன் அமைந்திருக்கின்றன. உதாரணமாக, இப் போது சாகித்திய அகாடமி விருது பெற்றி ருக்கும் ‘சூடிய பூ சூடற்க’ சிறுகதைத் தொகுப் பின் தலைப்பு. அதேபோல ‘நஞ்சென்றும் - அமுதென்றும் ஒன்று...’, ‘என்பிலதனை வெயில் காயும்’, ‘எட்டுத் திக்கும் மத யானை’... இப்படியாக... இதற்கு என்ன காரணம்?

இதைக் காரணத்தோடுதான் செய்கிறேன். எனக்கு என் படைப்புகள் குறித்த ஒரு செம்மார்ந்த பெருமிதம் உண்டு. வாசகரை என் புத்தகத் தலைப்புகள் கவர வேண்டும். அது என்ன அர்த்தத்தை உள்ளடக்கியிருக்கிறது என்று யோசிக்கச் செய்ய வேண்டும். யோசித்து வாசகர் உள்ளே வர வேண்டும். அவரை நான் குறைத்து மதிப்பிடுவதில்லை. அவரும் ஓர் இண்டலக் சுவல்தான். தலைப்புகளே வாசிப்பு சுகத்தைக் கொடுக்க வேண்டும். அழகியல் உணர்வுடன் வாசகனுக்கு வித்தியாசமான உணர்வைத் தர வேண்டும். பசிப்பதற்றத்துடன் வந்த அந்தப் பெரியவர்கூட ‘நாம் உண்போம்’ என்றுதானே சொன்னார். இந்த உணர்வின் அடிப்படையில்தான் என் புத்தகத் தலைப்புகள் இப்படி அமைந்திருக் கின்றன.

ஆன்மீகத்தில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா? உண்டென்றால் அது எந்த வகை யான ஆன்மீகம்?

நான் ஆரம்பத்திலேயே சொன்னது போல, தொடக்க காலத்தில் என் கருத்துகளின் மீது தாக்கம் செலுத்தியவை - திராவிட இயக்கமும், பொதுவுடைமை இயக்கமும்தான். நான் நாத்திகனாக இருந்த காலத்தில் கூட கோயில்கள் மீது மிகுந்த ஈடுபாட்டுடன்தான் இருந்தேன். அதற்குக் காரணங்கள் மூன்று. ஒன்று, அந்தக் கோயில்களின் கட்டிடக் கலை, சிற்பக் கலை அழகுகள்; இரண்டாவது - அந்தந்தக் கோயில்களின் மீது பாடப்பட்ட ஆழ்வார்கள் - நாயன்மார்களின் பாடல்கள்; மூன்றாவது - அந்தந்தக் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் - அதாவது உணவு வகைகள்! இப்போது - நான் ஆன்மீகத்தை எப்படிப் பார்க்கிறேன் என்றால், நிறுவனமயப்பட்டதாக அல்ல.

சக உயிர்கள், சகமனிதர்களின் மீதான அன்பும் - நேசமும்தான் பிரதானம் என்பதே என் ஆன்மீகம். எல்லா மத இலக்கியங்களும் போதிப்பது அன்பு ஒன்றை மட்டும்தான். யாவரையும், யாவற்றையும் நேசிக்கச் சொல்வது அந்த அன்பு. அன்பை முன்னெடுப்பது எனது நோக்கம். மனிதர்களாகிய நாம், நமது பிரச்சனை களின் தீர்வுக்காக ஏதாவது ஒன்றின் மீது பற்று வைக்கிறோம். ‘பக்தி’ என்பதே ‘பற்று’ என்பதைத் தானே குறிக்கும்? ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்கிறது குறள். நிறுவனமயமாகி வரும் ஆன்மீக வாதிகளின் செயல்கள் பற்றி எனக்கு இப்போதும் கேள்விகள் இருக்கத்தான் செய்கின்றன.

நான் எழுதிய ‘மண்ணுள்ளிப் பாம்பு’ கவிதை இதைப்பற்றித்தான் பேசுகிறது. நான் கிறிஸ்துவர்களின் தேவாலயத்தில் இருக்கும்போது, இந்துவாகவும், முஸ்லிமாகவும் உணர்கிறேன். இந்துக்கோயிலில் இருக்கையில் முஸ்லிமாகவும், கிறிஸ்தவனாகவும் உணர்கிறேன். முஸ்லிம்களின் கோயிலில் இருக்கையில் கிறிஸ்தவனாகவும், இந்துவாகவுமே உணர்கிறேன் - என்பது தான் கவிதையின் உட்பொருள். எங்கே நான் நிற் கிறேனோ அங்கே இருப்பவர்களுடன் ஒரு வகை யில் நான் ஒன்றவில்லை. அங்கு இல்லாத அந்த ‘மற்றவர்களுடன் தான் நான் ஒன்றுகிறேன் என்று பொருள்.

‘ஒருவரை நாம் வெறுத்தால், அவரை நாம் புரிந்து கொள்ள முடியாது’ என்பார் நகுலன். ஆன்மீகம் எனக்கு ஃபேஷன் அல்ல. அது அன்பு நெறி. இந்த முடிவிற்கு நான் வருவதற்கு பல ஆசிரியர்கள் - குருக்கள் இருக்கிறார்கள். திருமூலர் ஓர் ஆசிரியர். சமகாலத்தில் ரஜனீஷ் உட்பட பலர். 1000 பேரில் ஒரு நூறுபேரைப் பக்குவப்படுத்துவது தான் சாத்தியம் என்றால், அதற்கு இந்த ஆன்மீக வாதிகள் உதவுகிறார்கள் என்றால் அதில் என்ன ஆட்சேபணை நமக்கு?

நிறைவாக, இப்போது என்ன திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்? ‘செம்மலர்’ வாசகர் களுக்கு உங்கள் செய்தி என்ன?

நான் இப்போது என் 63-வது வயதில் இருக்கிறேன். ஏற்கெனவே செய்து வந்த சில படைப்புப் பணிகளின் கிளைகளை வெட்டிவிட்டு, சிலவற்றைச் செய்து முடிக்க வேண்டியிருக்கிறது. ‘நாஞ்சில் நாட்டு உணவு வகைகள்’ பற்றி 300 பக்க அளவிற்குப் புத்தகம் வளர்ந்துவிட்டது. ஆனால் திருத்தி நகல் எடுக்கும் பணியில் 110 பக்கம்தான் முடிந்திருக்கிறது. அதேபோல் என் கிராமத்து வாழ்க்கைச்சூழலில் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கையையும் இணைத்து ஒருநாவல் எழுதத் திட்டமிருக்கிறது. பிறகு - கட்டுரைகள் கேட்கிற வர்களுக்கு எழுதுவதையும் தொடர வேண்டி யுள்ளது. இதுபோல் சில திட்டங்கள்...

‘செம்மலர்’ வாசகர்களுக்கு நான் முன் வைக்கிற வேண்டுகோள் இதுதான். எந்த ஒரு கருத்தையும், எந்த ஒரு பிரச்சனையையும் அதன் சாதக, பாதகங்களோடு நாம் ஆழமாக விவாதிக்க வேண்டும். முன் முடிவுகளோடு எதையும் அணுகுவது நல்லதல்ல. நம்முடையது ஒன்று மட்டும்தான் சிறந்தது என்று நாம் பிடிவாதமாக விவாதிக்க வேண்டியதில்லை. உலகில் ஒரே ஒரு மதம் மட்டுமா இருக்கிறது...? பல மதங்கள், பல மொழிகள், பல பாதைகள்... எத்தனை வேறுபாடுகள் இருக்கின்றன? அவற்றுடனே நாமெல்லாரும் ஒன்றாகத்தானே வாழ்கிறோம்? சாதகமாக - பாதகமாக இரண்டு வகையாகவும் நாம் விவாதித்துப் பழக வேண்டும். விவாதமே இல்லாமல் போய்விடக்கூடாது. எந்த ஒரு படைப்பையும் விவாதமில்லாமல் நாமாக முன் முடிவுகளுடன் அணுகக்கூடாது. திறந்த மனதுடன் அணுக வேண்டும். ஒரு படைப்பை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் அது பற்றிய ஒரு முடிவிற்கு வர வேண்டும். அப்போதுதான் நாம் படைப்பாளிக்கும் - படைப்புக்கும் நியாயம் வழங்க முடியும்..!

Pin It