நாட்டுப்புறக் கதை

ஆச்சாரம்ன்னா ஆச்சாரம் உங்க வீட்டு ஆச்சாரமில்லே எங்க வீட்டு ஆச்சாரமில்லே அது கண்ணன் பிறப்பாகட்டும், புரட்டாசி வார சனியாகட்டும், மார்கழி பஜனையாகட்டும், விரதம் பிடிச்சாச்சுன்னா ஒருத்தருக்கொருத்தர் வந்து பாருன்னு ரெண்டு நேரங் குளிப்புத்தான் நெத்தி நிறைய கோப்பாளந்தான், பஜகோவிந்தம்தான், இலைச்சாப்பாடுதான், ஊருக்குள்ள ஒரே அலப்பறைதான்.

பங்காரு நைனா

மன்னாரு நைனா

சித்தாரு நைனா

ஊருக்குள்ள இவங்க வவுசுதான் வவுசு. ஊர் மொத்தமும் விரதம் பிடிக்காமலா இருக்காங்க! என்னம்மோ வைகுண்டமே இவங்க பேருக்குத்தான் பின்னாடி பட்டா ஆகப்போற மாதிரியும், அதுலே மூணு பேருலே யாரு முந்துறதுங்கிறது மாதிரியும் குடல் தொங்க அலையுவாங்க.

ஒண்ணை ஒண்ணு கடிச்சு குதர்ற மாதிரித்தான் உள்ளுக்குள்ள பொருமல் இருக்கும். ஆனால் கோயில் குளங்களுக்கு மூணு பேரும் ஒண்ணாத்தான் கிளம்புறது. தன்னைவிட பெருமாள் அடுத்தவனுக்கு அதிகமாக அருள் பாலிச்சிட்டா?

பஜனை கோஷ்டியிலெ இவங்கதான் பாடகர்கள். ஒவ்வொரு தெரு முக்கிலயும் ஒரு திருக்கண் வச்சி ஒருதர் மாற்றி ஒருதர் பாட்டுப் பாடுவாங்க. அதிலேயும் மூணு பேருக்கும் ஆளுக்கொரு பொம்பளை தொடுப்பு உண்டும். அந்த வீட்டுக்கு நேரா போனவுடனே அவங்கவங்களுக்கு சுதாரிப்பு கிளம்பிடும்.

யாராவது ஒருத்தரோட சேர்க்கையாள் வீடு வந்தவுடனே, உரிமைப்பட்டவர் தொண்டையைச் செருமி அந்த அம்மாள் காதுக்கு கேட்கும்படியா, ``ஸ்ரீஸ்ரீஜானகி நேசா ஓம் நம நமோ நாராயணாய நமஹ!'' அப்படீன்னவுடனே, கோஷ்டிகள் அப்படியே வளையமா கோவிந்தா! கோவிந்தான்னு நின்னுக்கிடும்.

அந்த அம்மா வெளியே வரும் தண்டிக்கும், இவர் ஏழரைக்கட்டை வரைக்கும் போயி வேர்க்க விறுவிறுக்க தொண்டை கட்டப் பாடுவார். அடுத்த ரெண்டு பேரும், ``ம்............ பாரு........... ம்.............. ஆளு காதிலே விழுந்து வெளியே வரணுமாம். ம்.......... ம்...... வயசுக்குத் தக்க கூப்பாடா பாருமே இந்தக் குளிர்லயும் அவன் உடம்பு வேர்க்கிறதை...''

ஒருத்தரையொருத்தர் கண்ணைச் சிமிட்டி காட்டிக்கிடுவாங்க. கையில ஜால்ரா அடி விழுந்துக்கிட்டேதான் இருக்கும். ஆள் வெளியே வந்து தனது ஆளுக்கு ஒரு டம்ளர் தண்ணியோ, டீயோ கொடுத்த பிறகு தான் ஒரு சந்தோசத்துல,``ஸ்ரீஸ்ரீஜானகி நேசா ஓம் நமோ நாராயணாய நமஹ!'' ``கோவிந்தா கோவிந்தா''ன்னு கோஷ்டியை கிளப்புவார்.

மறுநாள் காலையிலெ, `ஏய் ஆண்டாளோய்!'.... எப்படி வீட்டுக்கு நேரா வந்ததும் நம்ம பாட்டு... எப்படியிருந்தது? கண்டாரவோலிபாடு, உன்னைப் பாத்ததும் பாட்டு தன்னைப்போல கிளம்புதே... ஓய்.... ஆமாங்கிறேன்.''

``கேட்டேங்கேட்டேன் ஒம்ம சத்தந்தான் அந்த குளுந்த நேரத்துக்கும் அதுக்கும் நல்லா குலவை போடது போல கேட்டுச்சில்லே. பிறகு பூராம் சிங்கி அடிக்கவும் பயறு திங்கவும்தான் லாயக்கு.''

``அப்படியா... ஓகோ... அப்படிச் சொல், அப்படிச் சொல்...'' மேற்படியாளுக்கு ஒரு குஜால்தான். இது மூணு பேருக்கும் அவங்கவங்க திருக்கண்ணுல நடக்கிறதுதான்.

யாராவது ஒருத்தர் திருக்கண்ணுல தொடுப்புக்காரி வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரலையோ மற்ற ரெண்டு பேருக்கும் ஒரே சிரிப்பும் கேலியுந்தான்.

`வெண்ணையாண்டி வைப்பாட்டிக்காரி வீட்டுல நின்னு வெதர் தெறிக்க கத்தனது- தான் மிச்சம்... ``ப்ர்ர்ர்ர்.......... ப்ர்ர்ர்ர்.... ஆளைக் காணோம் மயித்தக்காணோம்!''

பிறகு பக்கத்து வீட்டிலிருந்து வந்து சொல்லுவாங்க.`` அந்த வீட்டுல ஆள் இல்லே ஊருக்கு போயிருக்காங்க'' ஆன்னு சொல்லவும் இங்கே மத்த ரெண்டு பேரும் கொண்டாட்டமா ``கோவிந்தா கோவிந்தா''ன்னு ஒருதர் புஜத்திலே ஒருதர் இடிச்சுக்கிட்டு வெளியே தெரியாம சிரியோ சிரின்னு சிரிச்சுக்கிட்டே கோஷ்டியை கிளப்புவாங்க.

இவங்க மூணு பேரும் ஆளுக்கு ஒவ்வொரு பொம்பளைய ஏற்பாடு பண்ணிக்கிறடற தோட விடுறதில்லை. இவங்க பிரதாபங்களைக் காட்டி, முடிஞ்சமட்டும் ஊருக்குள்ள துலாவுறதுதான் அதிலே ஒவ்வொரு கிழவி சரின்னு சொல்லியும் சொல்லாமலும் ஏமாத்திக்கிட்டே திரியும். அதன் ஆத்திரத்தை பஜனைப் பாட்டுல கோழி கூப்புட கேட்டுக்கிடலாம்.

``கோதோ மாதே என்னை வாதைப்படுத்தாதே!

காலங் கடத்தாதே" தூக்கங் கெடுக்காதே!

போக்குக் காட்டி என்னை மோசப்படுத்தாதே!

சாக்குச் சொல்லி மனச் சஞ்சலம் பண்ணாதே!

சண்டாளி ஏ சண்டாளி அடி சண்டாளி

மெத்த சண்டாளி ஏன் என்னை கொல்லுகிறாய்

ஒத்த வார்த்தை பேசாது நாள் தள்ளுகிறாய்!''

அடுத்த ஆளுக்கு இவங்களாலே பத்துப்பைசா பிரயோஜனம் இருக்காது. நட்டந்தான். மூணு பேரும் மூக்குப்பொடி போடுவறங்கதான். பொடி மட்டை கொண்டுக்கிட்டு ஒருத்தன் எதிர்ல வரப்படாது. மூணு பேர்ல யார் கையில சிக்குனாலுஞ்சரி, மட்டை கொண்டு வர்ரான்னு தூரத்திலேயே தெரியவும், மூக்கை டர்ர் டர்ன்னு சிந்தி தயார் படுத்திடுவார்.

``கொஞ்சம் மட்டையைக் கொடுத்து வாங்குப்பா'' மட்டையை அப்பொதான் கடையில வாங்கிட்டு வந்திருப்பான். மட்டையைத் திறந்ததும் ரெண்டு விரலால அள்ளி முதலில் வேகமாக ஒரு இழுப்பு. பொடி போய் மூக்கோட உள்தட்டில ஏறிக்கிடும். அடுத்து ஒரு சிட்டிகை எடுத்து ஏத்துற ஏத்துல ரெண்டாவது தட்டில படிஞ்சுக்கிடும். மூணாவது சிட்டிகை மூக்கோட நடுப்பகுதியை அடச்சி நாலாவதாக எடுத்து மூக்கோட நுனியில அப்பி நிறுத்தி (கொஞ்ச நேரங்கழிச்சு உள்ளே இழுத்துச் செலுத்திகிட) ஐந்தாவதா மட்டையை வழிச்சு எடுத்து கையில இருப்பு வச்சமட்டுமல வெறும் பட்டையை மடித்துக் கொடுப்பார்.

மூணு பேர்ல யார் கிட்ட சிக்குனாலும் இந்தக்கதிதான். இப்பேர்பட்ட கொடையாளிகள், நாலுவாசல் கோட்டை நாராயணனைப் போய் சேவிச்சு வரணும்னு கிளம்புனாங்க. அது துட்டுப் பெருத்த கோயில், ஆயிரம் ரெண்டாயிரம்னு டிக்கட் எடுத்துத்தான் உள்ளே போய் பகவானை சேவிக்க முடியும். அதனால பரவாயில்லன்னு பிரயாணம் பண்ணி ஊர் போய்ச் சேந்தாங்க. இப்படி ஆயிரக்கணக்குல ரூபா செலவழிக்க வேண்டியிருக்குன்னு மூணு பேரும் ஒருத்தருக்குத் தெரியாம ஒருத்தர் கவலையில கோயிலைப் பார்த்து நடந்திருக்கிட்டிருக்கும் போது எதிர்த்தாற் போல பெரிய ஊர்வலம் வந்தது.

தூரத்துல அலங்காரம் பண்ணுன தேர்ல பாப்பாப்பேட்டை கமிசன் கடை மொதலாளி பெத்தண்ணா செட்டியார் பொணத்தை கொண்டுவந்துக்கிட்டிருந்தாங்க. அவர் நெத்தி நிறையை நாமம் போட்டு, கடுக்கண் மாட்டி, உறுமாக்கட்டி, "கோவிந்தா ராமான்ஜா கோவிந்தா" ராமான்ஜான்னு தேர் வந்துக்கிட்டிருந்தது.

இவங்க மூணு பேரும், ``ஆஹா, சாமி சுத்தி வருதுடோய் எங்கெ வெட்டியா துட்டு செலவாகுமேன்னு பாத்தோம். பெருமாளே நமக்கூன்னு ஊரு சுத்தி வாரார் பெருமாள் மகிமையே மகிமை. மூணு பேரும் துண்டையெடுத்து இடுப்புல கட்டி கையிரண்டையும் மேலே தூக்கி கண்ணை மூடி பரவசமாயிட்டாங்க.

``பெருமாளப்பா, ஏழு கொண்டலவாடா'' இந்த வருசம் வெள்ளைக்கு அதிகாரம் கொடுக்கணும் தெய்வமே!'' பங்காரு மாறி மாறி உக்கி போட்டார். அவர் இந்த வருசம் பருத்தி விதைச்சிருக்கார். ``எங்கட்ரமணா! தேவுடா!'' இந்த வருசம் சிவப்புக்கு அதிகாரம் தாணும் ஆண்டவா! மன்னாரு மிளகாய் வத்தலுக்கு வெள்ளாமை பெருக்கு வேணும்னு தரையை தொட்டுத் தொட்டுக் கும்புட்டார்.

``ஏ கிட்ணா! முராரி! இந்த வருசம் பச்சைக்கு அதிகாரம் தரணும் பகவானே! நல்ல பயனைக் கொடுத்தியின்னா திருப்பதிக்கு வந்து மொட்டை போடுறேன் எம்பெருமாளே!'' ``தோட்டத்துல கத்திரிக்காய், வெண்டைக்காய் நட்டியிருந்த சித்தாரு நெஞ்சாயலா சாய்ஞ்சிட்டார் பரவசத்துல.

தேர் நெருக்கி வந்திருச்சி. முன்னால செட்டியாரோட பேரன் நெத்தி உடம்பெல்லாம் நாமம் போட்டு ஒரு வேட்டியை இடுப்புல தீச்சட்டி கொண்டு வந்துக்கிட்டிருந்தான்.

``சாமி தீர்த்தங் கொடுங்க. சாமி தீர்த்தங் கொடுங்க''ன்னு மூணு பேரும் துண்டை குடங்கையில போட்டு உள்ளங்கையை ஒருத்தர் கைக்கு மேலே ஒருத்தர் ஏந்திக்கிட்டே போனாங்க. பையன் நடந்துக்கிட்டே மொறச்சிப் பார்த்தான். அப்பதான் கவனிச்சாங்க சட்டியிலிருந்து புகையா வந்தது.

என்னடா இதுன்னு பக்கத்துல வந்துட்ட தேரைக் கவனிச்சாங்க. நாற்காலியில இறுகக் கட்டுன உடம்பு அசையாம இருக்க, பெத்தண்ணா செட்டியாரோட நாமம் போட்ட தலை நாலாபுறமும் `வாங்க வாங்க'ன்னு கூப்புடுற மாதிரி ஆடிக்கிட்டே வந்தது.

``அடச்சே! ஐயையே! பிரேதமில்லப்பா போய்க்கிட்டிருக்கு. நல்லா சாமி கும்புட வந்தோம். போ! பட்டணக்கரையில, பெருமாளுந்தெரியல. பிரேதமும் தெரியல.

பொழுதடைஞ்சி போச்சேன்னு மூணு பேரும் கோயிலை விசாரிச்சு ஓடுனாங்க. அங்கேயும் நடை சாத்துற நேரமாகிப் போச்சு. உள்ளே கூட்டமுன்னா கூட்டம் இவங்க நேராப் போயி பெரிய அர்ச்சகரைப் பாத்தாங்க. ``ஐயா நாங்க ஊர்ல பஜனைக் கோஷ்டிக்கு பெரிய மனுசங்க. எதும் தரும தரிசனம் உண்டுமா"ஞஞன்னாங்க.

எப்பேர்ப்பட்ட சப்பையாண்டின்னாலும் ரெண்டாயிரம், ஆயிரம், ஐயாயிரம் இதுல எதாவது ஒரு டிக்கெட்லதான் போகணும்னுட்டார். வேறு வழியில்லை. மூணு பேரும் கூட்டத்தோடு கூட்டமா டிக்கெட்டுக்கு நின்னாங்க. நடை சாத்துற நேரம் நெருங்குனது.

அந்நேரம் ஒரு சபாரி டிர° போட்ட ஒரு மனுசர் கையில சூட்கேஸோட அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் பரபரப்பா அலைஞ்சுக்கிட்டிருந்தார். பெரிய அர்ச்சகர் அவரை நிறுத்தி, ``நானும் அப்பவிருந்து பார்க்குறேன் உங்களுக்கு என்ன வேணும்?'' ``சாமி நான் உடனே சாமி தரிசனம் பண்ணணும் எட்டு மணிக்கு பிளைட்'', ``அதெல்லாம் நடக்காது. அதோ பாருங்க வரிசை. ஐயாயிரம், ரெண்டாயிரம், ஆயிரம்'' ``அட நீங்க ஒண்ணு பணம் என்னங்க பணம் இந்த சூட்கே°ல லட்சக்கணக்குல பணம் இருக்கு. என்ன செலவானாலும் சரி, நான் உடனே தரிசனம் பண்ணனும்'' அர்ச்சகர் சுற்றி ஒரு தரம் பார்த்திட்டு, ``பணம் நிறைய வச்சிருக்கேளா. சரி, அப்பொ செத்த நாழி இங்கேயே நில்லுங்கோ பெருமாளை வெளியே கொண்டாந்திர்றேன்.

அர்ச்சகர் குறுக்கு வழியில் ஓடினார்.                                                                                                                                  

- எஸ்.இலட்சுமணப் பெருமாள்

Pin It