சிறகுகள் இல்லாமலே
பொழுதெல்லாம் வானில்
பறக்குது பாரு நிலவு...
உறவுகள் ஒண்ணுமில்ல - நாம்
வீட்டுக்குப் போனால்
தெறக்குது பாரு கதவு...

nila_370காற்றில்லாத பலூன் பாருங்க-இது
ஆளில்லாத ஊரு தானுங்க!

எந்தக்குழந்தை எறிந்ததுங்க
நிலா பந்து வானில்
எல்லோர் கண்ணும் பாக்குதுங்க
உலா வரும் ஊரில்

கட்டணங்கள் இல்லாத
விளக்கு - என்
பள்ளிக்கூட தட்டப்போல
இருக்கு!

ஒரு குட்டிப் பொண்ணு வரைஞ்சு
                                                      வச்ச
வட்டமான சித்திரம்...
உடல் வற்றி மீண்டும் வளருது
யாரு சொன்ன தந்திரம்?

குவிந்த இரண்டு உதடு
கொடுத்த முத்தச்சுவடோ!
மந்திருச்சு ஒட்டவச்ச
வட்டமான தகடோ!
- (சிறகுகள் இல்லாமலே)

கிழவன் காவல் காத்து வந்த
கிணற்று நிலவைப் பாரு!
மஞ்சள் பாலை கிண்ணத்துல
ஊற்றி வைத்த தாரு?

கண்ணை மட்டும் கொண்ட உடல்
                                                    நிலவு - இது
அந்தரத்தில் அறுந்து தொங்கும்
        கனவு

அட, தொந்தி வைக்கும் நிலவுகூட
மூன்றாம் பிறைக்குப் பிறகுதான்
பெண் குளிக்கும்போது நெற்றி
                                                தொட்டு
எடுத்து வைத்த பொட்டுதான்.

கறை அல்ல நிலவில் - அவள்
கழுத்துத்தேமல் தானே!
நிலவு பார்த்து சோறு தின்ன
பழைய குழந்தை நானே!
  - (சிறகுகள் இல்லாமலே)

காற்றடித்துப் பறந்து போன
கருவமரத்துப் பூவோ!
வானக்கடல் மத்தியிலே
நிலவு குட்டித் தீவோ!

இமைகளின்றி விழித்திருக்கும்
                                                 நிலவு-இது
கவிஞன் கண்டு பசியாறும்
                                                 கனவு!

காக்கை திருடிப்போன -நம்ம
பாட்டி சுட்ட வடையோ!
ஒன்றில் ஒன்றைக் கழித்த பின்னால்
கிடைக்கும் அந்த விடையோ!
                           - (சிறகுகள் இல்லாமலே)

Pin It