பொதுவுடைமை, சமத்துவம் ஆகிய நோக்கங்கள் அழகிய லட்சியக் கற்பனைகளே, அவை நடைமுறை சாத்தியமற்றவை என்று கூறப்படுகிறதே? மக்களுக்காகவே தியாகத் தழும்புகள் ஏற்றுப் போராடி வருகிறபோதிலும் கட்சி இன்னும் ஒரு மையமான சக்தியாக வளர வேண்டியுள்ளதே? பண்பாட்டுத்தளப் பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அக்கறை கிடையாதா - இக்கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன். கட்சியின் மாநில மாநாடு இம்மாதம் 22 முதல் 25 வரையில் நாகையில் நடைபெற இருப்பதையொட்டி செம்மலருக்காக அவர் அளித்த சிறப்பு நேர்காணல் இது.

சந்திப்பு: அ. குமரேசன்

இன்றைய அரசியல் சூழலில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் முக்கியத்துவம் என்ன?

கிளை மாநாடுகளில் தொடங்கி வட்ட மாநாடுகள், மாவட்ட மாநாடுகள் என முடித்து இப்போது மாநில மாநாடு நடைபெற உள்ளது. ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் அகில இந்திய மாநாடு. மாநில மாநாட்டைப் பொறுத்தவரையில், கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் அரசியல் - பொருளாதர - சமூக வளர்ச்சிப் போக்குகள், நாடாளுமன்ற - சட்ட மன்றத் தேர்தல்கள், அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள், மாநில அளவில் முக்கியத்துவம் பெற்ற பல நிகழ்வுகள், அவற்றில் கட்சியின் நிலைபாடுகள், அனுபவங்கள், அடுத்து வரும் ஆண்டுகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் - இவை ஆய்வு செய்யப்படும். அகில இந்திய மாநாட்டில், நாடு தழுவிய பிரச்சனைகளிலும் உலகளாவிய பிரச்சனைகளிலும் கட்சி மேற்கொண்ட அணுகுமுறைகள் விவாதிக்கப்பட்டு அடுத்த மூன்றாண்டுகளுக்கான வழிகாட்டியாக அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

ramakrishnan_370இதைப் போலவே தத்துவார்த்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படும்.இந்த இரண்டு தீர்மானங் களின் முன்வரைவு நாடு முழுவதும் உள்ள எல்லாக் கிளைகளுக்கும் அனுப்பப்பட்டு, அங்கே யிருந்தே விவாதிக்கப்பட்டு திருத்தங்களும் ஆலோசனைகளும் பெறப்படும். அகில இந்திய மாநாடு அவற்றையும் ஆய்வு செய்து, இரண்டு தீர்மானங்களையும் இறுதிப் படுத்தும். மக்கள் பிரச்சனைகளில் கட்சியின் தலையீடுகள், அதில் பெறப்படுகிற படிப்பினைகள், கட்சியமைப்பு சார்ந்த நிகழ்வுகள் விவாதிக்கப்பட்டு, தொடர்ந்து இயங்குவதற்கு வழிகாட்டும் அமைப்புத் தீர்மானமும் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்படும். இவ்வாறு ஜன நாயக முறையில் மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கட்சியின் அரசியல் பாதையைத் தீர்மானிப்பதில் கிளை உறுப்பினர்கள் முதல் அகில இந்தியத் தலைமை வரையில் பங்கேற்கிறார்கள்.

இன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. தமிழகத்தில் ஒரு முக்கியமான கட்சி யாகிய திமுக அந்தக் கூட்டணியில் இடம்பெற்று மத்திய ஆட்சியிலும் பங்குவகிக்கிறது. மாநிலத்தில் கடந்த மே மாதத்திலிருந்து அஇஅதிமுக ஆட்சியில் இருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி, இடதுசாரிகள் ஆதரவு இல்லாமலே மத்திய ஆட்சியில் இருக்க முடியும் என்ற நிலையால், நாட்டு மக்களை பாதிக்கிற பொருளாதாரக் கொள்கைகளை வேகவேக மாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவது, விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்குவது-இந்தப் பொறுப்புகளைக்கூட இனி முழுக்க முழுக்கத் தனியாரிடம் விட்டு அவற்றை விலை பொருளாக்குவதற்கான கொள்கையை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது.

சில்லறை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப் பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு, நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாகத் தற் போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் இவர்களது ஓய்வூதிய நிதியைப் பங்குச் சந்தை சூதாட்டப் பணமாக மாற்றுவதற்கான சட்டத்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. பொருளாதார சீர்திருத்தம் என்று சொல்லிக்கொண்டு இந்தக் கொள்கைகள் தொடங்கப்பட்ட 1990ம் ஆண்டில், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் விவசாயத் தின் பங்கு 30 சதவீதமாக இருந்தது. இன்று 14 சதவீதமாக வீழ்ச்சிய டைந்துவிட்டது. இன்றைக்கும் நாட்டில் விவசாயத்தை நம்பியிருக்கக்கூடிய விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நாட்டு மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகம். ஆனால் விவசாயத்தில் இன்று பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்குப் பிரதானமான காரணம் அரசின் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள்தான்.

2000-2005 காலகட்டத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 2.7 சதவீதமாக இருந்தது, 2006-2010ல் அது 0.8 சதவீதமாக சரிவடைந்துவிட்டது. ஒட்டுமொத்த தொழில் உற்பத்தி மதிப்பில் தொழிலாளர்களுக் கான ஊதிய விகிதம் குறைந்துவிட்டது. இன்று எல்லாவிதமான தொழில் நிறுவனங்களிலும் நிரந்தரத் தொழிலாளர்களே இல்லை. எங்கும் கான்ட்ராக்ட் தொழிலாளர்கள்தான். அவர்களுக்குத் தொழிற்சங்கம் வைக்கிற உரிமைகூட கிடையாது. கிராமங்களில் விவசாய வேலை வாய்ப்புகள் சரிவடைந்துவிட்டதால் அங்கிருந்து இடம் பெயர்ந்து நகரங்களுக்கு வேலை தேடி வருகிறார்கள் - நகரங்களிலோ வேலைவாய்ப்பு இல்லாத நிலை. இப்படி நாட்டு மக்கள் அனைவரையுமே பாதிக்கக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு செயல் படுத்து கிறது, அதில் மாநிலக் கட்சியான திமுக கூட்டாளி யாக இருக்கிறது.

இந்த நிலையில்தான், சென்ற ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்தது. காங்கிரஸ் ஆட்சியின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கை களிலும் கூட்டாளியாக இருக்கும் திமுக இங்கே மறுபடி ஆட்சிக்கு வரக்கூடாது என்ற முடிவோடு தான், அஇஅதிமுக-வுடன் மார்க்சிஸ்ட் கட்சி தொகுதி உடன்பாடு கண்டது. திமுக கூட்டணியை மக்கள் நிராகரித்தார்கள், அதிமுக அணி வெற்றி பெற்றது; அதிமுக ஆட்சியமைத்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடனேயே, அதற்கு வாழ்த்துத் தெரிவித்து, மக்களின் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு, ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவது என்று முடிவு செய்தது.

அந்த அடிப்படையில்தான் இந்த அரசின் நல்ல நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றது. உதாரணமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வரவேற்கிறோம். ஆனால், பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்வு போன்ற, எளிய மக்களைத் தாக்குகிற நடவடிக்கைகளை எதிர்க்கிறோம். சேலத்தில் கட்டப்பட்ட சிறப்பு மருத்துவ மனையை மூடிவிட்டு சென்னையில் புதிதாகக் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடுகிற முடிவை எதிர்க்கிறோம். சமச்சீர் கல்வியை முடக்க முயன்றதை எதிர்த்தோம்.

இத்தகைய பிரச்சனைகளில் கட்சி சுயேச்சையாக இயக்கம் நடத்துவதோடு, இடதுசாதி மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளோடு இணைந்து கூட்டு இயக்கங்களும் நடத்தியிருக்கிறது. இந்த அரசியல் சூழலிலும், உலகமயப் பொருளாதாரக் கொள்கை தமிழகத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள பின்னணியிலும் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி 22 முதல் 25 வரையில் நாகப்பட்டினத்தில் கூடுகிறது.

கடந்த மாநாட்டிற்குப் பின் இந்த மாநாடு வரையிலான காலகட்டத்தில் தமிழகத்தில் கட்சியின் குறிப்பான சாதனைகள் எவை?

தமிழக மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வாதார பிரச்சனைகளில் மார்க்சிஸ்ட் கட்சி இடையறாத இயக்கங்களை நடத்தி வந்திருக்கிறது. சில முக்கிய பிரச்சனைகளில் அரசுக்கு நிர்ப்பந்தம் அளித்து தீர்வுகாண முடிந்துள்ளது. உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிப்பும், தலித் மக்களின் வழி பாட்டு உரிமை மீட்பும் அத்தகைய வெற்றிகளில் ஒன்றுதான். குறிப்பாக, அருந்ததியர் மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையைப் பெறமுடிந்தது.

ramakrishnan_pho_370இந்தக் காலகட்டத்தில் மாநிலம் முழுவதும், மோசடியாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சித் தோழர்கள் வன்முறைக்கு அஞ்சாமல் நடத்திய வெற்றிகரமான போராட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டம் காவேரி ராஜபுரத் தில், கர்நாடக மாநிலத்தின் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.டி. தினகரன் கைப்பற்றியிருந்த 199 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் மற்ற கட்சிகள் வாய்மூடி மௌனமாகவே இருந்தன. மார்க்சிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் தொடர்ந்து போராடின.

அதே மாவட்டத்தில், பல்லவாடா கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 780 ஏக்கர் நிலத்தை மீட்டு உரியவர்களுக்கு கிடைக்கச் செய்தது. தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல்புரம், சில்லாங்குளம் கிராமங்களிலும் ஆக்கிர மிக்கப்பட்டிருந்த நிலங்களையும், திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி கிராமத்திலும் இன்னும் பல இடங்களிலும் வெற்றிகரமான நிலமீட்பு போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி நடத்தியிருக்கிறது. நகர்ப்புற, கிராமப்புற ஏழை மக்களுக்கான மனைப்பட்டா கோரிக்கையை முன் வைத்து மாபெரும் இயக்கங் கள் நடத்தப்பட்டன. சுமார் 25 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, ஒரு பகுதியினருக்கு பட்டா கிடைத் திருப்பது சாதாரண விஷயமல்ல.

ஏழைகளின் வீட்டுமனைப்பட்டா என்ற கோரிக்கையை மாநில அளவிலான ஒரு செயல்திட்டமாக மாற்றிய பெருமை மார்க்சிஸ்ட் கட்சிக்கே உரியது. சென்னையில் கோவில் நிலங்களில் குடியிருந்த பல்லாயிரக் கணக்கானோரின் உரிமையைப் பாதுகாத்துக் கொடுத்ததும் மார்க்சிஸ்ட் கட்சிதான். மனைப்பட்டாவுக்கான போராட்டத்தை இன்னும் வலுவாகத் தொடரவேண்டியுள்ளது.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் கட்சி இக்காலகட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. குறிப்பாக வாச்சாத்தி வழக்கை 19 ஆண்டுகள் உறுதியாக நடத்தி அண்மையில் அத்தனை குற்றவாளிகளுக்கும் தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த முடிந்தது.

பள்ளிப்பாளையம் கிராமத்தில், கந்துவட்டி சமூக விரோதிகளால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணின் சுயமரியாதை யைப் பாதுகாக்க தோழர் வேலுச்சாமி தன் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் போராடினார். கள்ளச்சாராய சமூக விரோதக் கும்பலின் அடாவடிகளை எதிர்த்துப் பேரளத்தில் தோழர் நாவலன் தன்னுயிருக்கு அஞ்சாமல் போராடினார். திருக்கோவிலூர் அருகில் காவலர்களின் பாலியல் வெறிக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடிப் பெண் களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி அரசாங் கத்தை அசையச் செய்தது மார்க்சிஸ்ட் கட்சி. பரமக்குடி துப்பாக்கிச்சூடு பிரச்சனையில் இதர தலித் அமைப்புகள், மனித உரிமை அமைப்பு களோடு நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி. முறைசாரா தொழி லாளர்களுக்கான போராட்டங்கள், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள், சமச்சீர் கல்விக் கான போராட்டங்கள் என மேலும் பல குறிப்பிடத் தக்க பங்களிப்புகளைச் சொல்லலாம்.

 சமத்துவம், பொதுவுடைமை என்ற முழக் கங்கள் கவர்ச்சிகரமான லட்சியக் கனவுகளே, அவை நடைமுறை சாத்தியமில்லை என்ற ஒரு வாதம் அண்மைக் காலமாக அறிவுத்தளத்தில் செயல்படுவோரிடையே பரப்பப்பட்டு வருகிறது. இதற்கு உங்கள் பதில் என்ன?

முதலாளித்துவ அமைப்பையும் அதன் சுரண்டல் விதிகளையும் நியாயப் படுத்திய கடந்த கால வாதங் களின் தொடர்ச்சிதான் இது. உலக அரங்கில் சோசலிச முகாமில் ஏற்பட்ட பின்னடை வைத் தொடர்ந்து, முதலாளித் துவம்தான் இறுதியானது என்ற கருத்து மேலோங்கியது. அது தன்னைத் தானே தகவமைத்துக் கொண்டு பெரும் பகுதி மக்களுக்கும் நன்மை யைக் கொண்டு வரும் என்று சொன்னார்கள். அதுவே இயற்கையானது என்றார்கள்.

ஆனால், இன்று முதலாளித்துவத்தின் தலைமை பீடமாகியிருக்கிற அமெரிக்காவிலேயே, உலகமயப் பொருளாதார நடவடிக்கைகளின் மையமான வால் தெருவிலேயே முதலாளித் துவம் மக்களின் முதல் எதிரி என்ற முழக்கங்களுடன் தன்னெழுச்சியான போராட்டங்கள் தொடங்கி யிருக்கின்றன. காவல்துறையின் தாக்குதல்களை மீறி அந்தப் போராட்டங்களில் அமெரிக்க மக்கள் தங்களது மரபுப்படி இசை, நடனம், ஓவியம் என பல வடிவங்களில் ஈடு பட்டதைப் பார்த்தோம். மக்களின் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவத்தால் தீர்வு காண முடியாது, அது மேலும் மேலும் நெருக்கடிக்குத்தான் இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் - எங்கெல்ஸ் கூறியதை இன்று உலகம் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

வால் தெரு போராட்டங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பரவியிருக்கின்றன. முதலா ளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்ப வேண்டும் என்ற முழக்கங்கள் அந்தப் போராட்டங் களில் எழுகின்றன. ஜப்பானில் நடந்த போராட்டத்தில் ஒரு பத்து வயது சிறுவன், ‘என்னை எப்போது கரை சேர்ப்பீர்கள்’ என்ற வாசகத்தைத் தாங்கிய அட்டையை உயர்த்திப் பிடித்தபடி கலந்து கொண்டதைப் பார்த்தோம். ‘திவாலான நிறுவனங்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மானியம் கொடுகிறீர்கள், வறுமையிலிருந்து என்னை மீட்க ஏன் முன்வரவில்லை?’ என அந்தச் சிறுவன் கேள்வி எழுப்புகிறான். இன்றைய உலகளாவிய சுரண்டல் கட்டமைப்பு களுக்கு எதிரான, அதிலிருந்து விடுபட வேண்டும், சரியானதொரு மாற்று வேண்டும் என்ற உணர்வுகளின் வெளிப்பாடுதான் அந்தப் போராட்டங்கள். சமத்துவத்திற்கான பொதுவுடைமை இயக்கங்களில்தான் அந்த மாற்று இருக்கிறது.

வரலாற்றுப் படிப்பினைகளோடு சோசலிசம் கட்டப்படுகிற நாடுகளின் அனுபவங்களும் மக்கள் வாழ்நிலை முன்னேற்றங்களும், உலகளாவிய ஊடகத் திரைகளைத் தாண்டி, மக்களை ஈர்த்துக் கொண்டிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களின் அமோக ஆதரவோடு இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வந்து எண்ணெய் வளம் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை அரசுடைமை யாக்குகிற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அதற்கு மக்க ளின் அங்கீகாரம் கிடைக்கிறது. இவை யெல்லாம் சமத்துவம், பொதுவுடைமை லட்சியங் கள் வெறும் கனவல்ல, நடைமுறை சாத்தியங்களே என்ற உண்மையைத்தான் அழுத்த மாகக் கூறுகின்றன.

 உலகின் பல பகுதிகளில் பல வடிவங்களில் நடக்கிற போராட்டங்கள் அனைத்துமே முதலா ளித்துவத்தின் தோல்வியைத்தான் பறை சாற்று கின்றன. இந்தியாவில் நாளைக்கே சோசலிசம் வந்துவிடும் என்று மார்க்சியவாதிகள் சொல்ல வில்லை. அதற்குப் பல கட்டங்கள் உண்டு. மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கொள்கைகளை முன் வைத்து, உடனடி மாற்றங் களுக்கான போராட்டங்களோடு இயக்கத்தின் பயணம் தொடர் கிறது.

 இந்த உலகளாவிய நிகழ்ச்சிப்போக்கு களும், இந்திய அளவிலான அனுபவங்களும் தருகிற படிப்பினைகள் என்ன?

இரண்டு வகையான படிப்பினைகள் இருப்ப தாகப் பார்க்கிறேன். ஒன்று முதலாளித்துவ அரசு களுக்கான படிப்பினை. இன்னொன்று சோசலிசத் திற்காகப் போராடுகிற இயக் ங்களுக்கான படிப்பினை. தாராளமய பொருளாதாரக் கொள்கை களின் ஊற்றுக்கண்ணே அமெரிக்காவும் ஐரோப் பிய நாடுகளும்தான். அங்கேயே அந்தக் கொள்கை செல்லுபடியாக வில்லை என்றால், முதலாளித்துவக் கொள்கைகளில் மாற்றங்கள் செய்யாமல் பிரச் சனைகளுக்குத் தீர்வு காண முடியாது, நெருக்கடி களிலிருந்து தப்பிக்க முடியாது என்ற படிப்பினை முதலாளித்துவ அரசுகளுக்கு இருக்கிறது.

தன்னெழுச்சியாகத் திரள்கிற மக்கள் போராட் டங்கங்களில் தலையிடுவது எப்படி, இன்னும் அந்த அளவுக்கு முன்னுக்கு வராத மக்களின் கொந்தளிப்பு உணர்வுகளையும் இயக்கமாக அணி திரட்டுவது எப்படி, அவர்களோடு அடையாளப் படுத்திக்கொள்வது எப்படி என்பதற் கான படிப்பினை இடதுசாரிகளுக்கு இருக்கின்றன.

 “பொது” என்ற விரிவான இயக்கமேகூட ஒரு அடக்குமுறைதான். எனவே அந்தந்தப் பகுதி மக்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்து நடத்துகிற தனித்தனிப் போராட்டங் கள்தான் முக்கியமானவை என்ற ஒரு “அடை யாள அரசியல்” கருத்தாக்கம் வலுப்பெற்று வருகிறதா?

பொதுவான இயக்கம் என்பதேகூட ஒரு அடக்குமுறைதான் என்று அடையாள அரசியலை வலியுறுத்துவோர் சொல்லும் கருத்து ஏற்கத்தக்க தல்ல. பொது நோக்கத்திற்கான இயக்கம் தேவை யில்லை என்கிறபோதே, பொதுவில் பெரும் பாலோருக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் புறந்தள்ளுவதாகிவிடுகிறது.

முதலாளித்துவ சமுதாய அமைப்பில், குறிப்பாக இன்றைய தாராளமயக் கொள்கைகளால் மக்கள் கூறுபோடப்படுகிறார்கள் என்பது உண்மை. அதில், ஏற்கெனவே பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக, தலித் மக்கள், பழங்குடி மக்கள் சமூகங்களைக் கூறலாம். தலித்துகளுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமை புதிய வடிவங்களில் வருகிறது. பழங்குடி மக்கள் மேலும் மேலும் கையறு நிலைக்கு ஆளாக்கப் பட்டு, அவர்களது வாழ்விடங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள். இதில் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனம் இருக்கிறது. பொதுவான மேம் பாட்டுத் திட்டங்கள் போதும், இவர்களுடைய நிலை தானாக முன்னேறிவிடும் என்பது போன்ற அரசின் அணுகுமுறைகளை ஏற்க முடியாது. ஆகவே, இந்தப் பகுதி மக்களுக்கான தனிப்பட்ட போராட்டங்கள் தேவைப் படுகின்றன.

அதே நேரத்தில், தனிப்பட்ட போராட்டம் என்றால் அது தனித்து ஒதுங்கி நடத்துகிற போராட் டம் அல்ல. அப்படி தனிமைப்பட்டு நடத்துகிற போராட்டங்களால் ஒருபோதும் வெற்றிபெற முடி யாது. மற்றவர்கள் எல்லாம் பெரும்பான்மையாக இருக்கிறபோது ஒரு சிறு பகுதியி னர் தங்களது சாதி, சமூக அடையாளத்தை மட்டும் மையமாக்கி, மற்றவர்களோடு இணையாமல் போராடுவார் களானால் அவர்களுடைய போராட்டம் எளிதில் நசுக்கப்பட்டுவிடும். அதிலும், ஒடுக்கப்பட்ட ஒரு சாதிக்குள்ளேயே ஏராளமான உட்பிரிவுகள் இருக்கும் நிலையில், அதிலேயேகூட துண்டு துண்டாக நிற்கிற நிலையை ஆளும் வர்க்கங்கள் சுலபமாக ஏற்படுத்திவிடுவார்கள்.

ஒரு உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் உடைப்புப் போராட்டம் வெற்றி பெற்றது என்றால், அக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொண்ட, அதற்காகத் தோள்கொடுக்க முன்வந்த மற்ற சமூகங்களைச் சேர்ந்தோரும் ஒன்றாக அணி திரண்டதால் தான் அது சாத்தியமானது. இதே போல் தமிழகத் தின் பல பகுதிகளிலும் தீண்டாமைச் சுவர்கள் உடைபட்டன, இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது, ஆலய நுழைவுப் போராட்டங்கள் வெற்றி பெற்றன... ஒரு வீடு தீப்பற்றி எரிகிறபோது இது என் வீடு, நான்தான் தீயை அணைப்பேன் என்று யாராவது சொல்வார்களா? தீயை அணைக்க வருவோர் அனைவரையும் அழைக்கத்தான் வேண்டும்.

இன்னுமொரு முக்கியமான எடுத்துக்காட்டை இங்கே சொல்லியாக வேண்டும். அருந்ததி மக்களுக்கான உள் ஒதுக்கீடு கோரிக்கையை அரசு ஏற்றதுதான் அது. இந்தப் போராட்டங்கள் அனைத்துமே, அந்தந்தப் பகுதி மக்களின் தனிப் பட்ட கோரிக்கைகளுக்காக அனைத்துப் பகுதி யினரும் தோள்கொடுத்ததால்தான் வெற்றி பெற்றன.

ஆகவே வாய்ப்புகள் மறுக்கப்பட்ட சமூகங் களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தேவை. அந்தப் போராட்டங்களை மேற்கொள்கிற பொது இயக்கங்களும் தேவை. ஆனால், ஒட்டுமொத்த மான அடிப்படை மாற்றங்களுக்காக நடத்தப்படும் பரந்த இயக்கங்களில் இணையவிடாமல் சாதி, மதம், இனம் என பல்வேறு அடையாளங்களாக மக்கள் கூறுபோடப் படுவது உண்மைதான். இதைப் பற்றிய விழிப்புணர்வையும் மார்க்சிய இயக்கம் மக்களி டையே விரிவாகக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

 பொருளாதாரப் பிரச்சனைகளில்தான் கம்யூனிஸ்ட்டுகள் கவனம் செலுத்துகிறார்கள், சமூக - பண்பாட்டுப் பிரச்சனைகளில் ஈடுபடுவதில்லை என்ற விமர்சனம் முன் வைக்கப் படுகிறதே?

தவறான விமர்சனம். 1940ஆம் ஆண்டுகளி லேயே சாதிப்பாகுபாட்டுக்கும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும் எதிரான போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வெற்றி பெற்றி ருக்கிறார்கள். தேர்தல் ஆதாயத்தையோ, வட்டார செல்வாக்கையோ நோக்கமாகக் கொள்ளாமல் களத்தில் நின்று நேருக்கு நேராக அந்தப் போராட்டங்களை இன்று வரையில் நடத்தி வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஏற்ற தியாகத் தழும்புகள் ஏராளம். தீண்டாமை மிக வலுவாக இருந்த தஞ்சை மண்ணில், தாழ்த்தப் பட்டவர்கள் என்று ஆதிக்க சாதியினராலும் பண் ணையார்களாலும் ஒதுக்கப்பட்டு கொடுமையான சுரண்டல்களுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாகி வந்த தலித்து மக்களை தோளில் துண்டு போட்டுக் கொண்டு, காலில் செருப்பணிந்து கொண்டு கம்பீர மாக நடைபோடவைத்தது கம்யூனிஸ்ட் இயக்க மன்றி வேறு எந்த இயக்கம்? தீண்டாமை ஒழிப்புக்காகப் போராடுவதும் பண்பாட்டுப்போராட்டம் இல்லையென்று சொல்லிவிட முடியுமா?

மதக்கலவரங்களின்போது சிறுபான்மை மக் களுக்குத் துணையாக நின்றிருப்பது கம்யூனிஸ்ட் தோழர்கள்தான். இதை சிறுபான்மை மக்களே சொல்கிறார்கள். பெண்களின் சம உரிமைக் காகவும், பெண்கள்மீதான அநீதிகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கட்சி போராடி வருகிறது.

கலை இலக்கிய உலகத்தை எடுத்துக்கொண்டா லும், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டபோதெல்லாம் அதற்கு எதிராக வலுவாகக் குரல்கொடுப்பது கம்யூனிஸ்ட் இயக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், கேரள முற்போக்கு கலை இலக் கிய சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான சானு மாஸ்டர் இருவரும் இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்கள். மார்க்சியம் கற்றுக்கொடுத்த சமூகப் பண்பாட்டு ஞானத்தோடுதான் சமுதாயத்தைப் பார்த்து அவர் கள் எழுதினார்கள். இவர்களைப்போல பல படைப்பாளிகள், கலைஞர்கள் மார்க்சிய இயக்கத் தோடு இணைந்து செயலாற்றுகிறார்கள். ஆகவே, கம்யூனிஸ்டுகளுக்குப் பண்பாட்டுத் தளத்தில் அக்கறை இல்லை என்று சொல்வது சாரமற்ற விமர்சனம். இதில் இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் செயல்பட வேண்டி யிருக்கிறது என்பதே உண்மை.

மனித உரிமைகளுக்காக, மக்கள் நல்லிணக்கத் திற்காக போராடுவது பண்பாட்டுப் போராட் டத்தின் ஒரு முக்கிய அம்சம். வாய்ப்புகளுக்குக் கடும் போட்டிககளை ஏற்படுத்தி, சுயநலம் மேலோங்கச் செய்து, போட்டியில் தாக்குப்பிடிக்க முடியாத மக்கள் மனங்களில் ஏக்கத்தை விதைத்து, ஏற்றத் தாழ்வுகளை வளர்த்து, போராட்டங்களைத் திசை திருப்பி... இப்படி யெல்லாம் பண்பாட்டுத் தளத்தில் கடுமையான அரிப்புகளை ஏற்படுத்துகிற உலகமய - தாராளமய - தனியார்மய கொள்கை களை எதிர்த்துப் போராடுவதிலும் கம்யூனிஸ்ட்டு கள் உண்மையான அக்கறையோடு ஈடுபடுகிறார் கள். பண்பாட்டுப் பிரச்சனைக்காக மட்டும் நிற்கிற பலர் இந்தப் போராட்டத்திற்கு வருவதில்லை.

மார்க்சியம் ஒரு பொருளதாரத் தத்துவம் என்பதே கூட அதைச் சுருக்கிப்பார்க்கிற பார்வையி லிருந்து வருவதுதான். வர்க்க எதிரிகளால் பரப்பப் படுகிற கருத்துதான் அது. அரசியல், பொருளா தாரம், சமூகம், பண்பாடு, மனித உரிமைகள், கலை இலக்கியம், இயற்கை, அறிவியல், வரலாறு, மக்களது வாழ்க்கை என பன்முகப் பரிமாணங் களைக் கொண்டது தான் மார்க்சிய தத்துவம்.

 மக்கள் வாழ்வை நேரடியாகத் தாக்கக்கூடிய விலைவாசி உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்ற பிரச்சனைகள் வருகிறபோது மக்கள் கோபப்படுகிறார்கள். ஆனால், போராட் டங்கள் நடைபெறுகிறபோது, அந்தந்த பகுதியைச் சேர்ந்த கட்சி ஊழியர் களும் ஆதரவாளர் களும்தான் பங்கேற்கிறார்கள். பொதுமக்கள் வருவதில்லை. ஏன் இந்த நிலை? இது எப்போது மாறும்?

பொதுவாக ஆர்ப்பாட்டங்கள், கோரிக்கை முழக்கங்கள், மறியல்கள் என்ற வடிவங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறபோது அந்தப் போராட்டங்களால் வெற்றி பெற முடியுமா, விலைவாசி குறைந்துவிடுமா என்ற ஒரு எண்ணம் மக்கள் மனங்களில் ஏற்படுகிறது. எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும் மத்திய - மாநில அரசுகள் தங்கள் முடிவுகளை அவ்வளவு எளிதில் மாற்றிக்கொள்வதில்லையே என்றும் ஒரு பகுதி மக்கள் பார்க்கிறார்கள். முதலில் நாம் பார்த்த அந்த அடையாள அரசியல் காரணமாக பிரிந்து நிற்கிற அம்சமும் இதில் இருக்கிறது.

ஆனால், எல்லாப் போராட்டங்களும் அப்படி மக்கள் ஆதரவின்றிப் போய்விடும் என்று சொல்லி விட முடியாது. உதாரணமாக, சில்லறை வர்த்தகத் தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்ட முன்வரைவை எதிர்த்து தொடக்கத்தில் இடதுசாரிகள் போராடினார்கள்.

பின்னர் அந்த எதிர்ப்பு வளர்ந்து, கடந்த டிசம்பர் 1ம் தேதி நாடு தழுவிய அளவில் கடை யடைப்புப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. அனைத்து சிறிய, நடுத்தர வணிகர் களும் பங்கேற்ற தால்தான், அவர்களுக்குப் பொதுமக்களும் ஆதர வளித்ததால்தான் அந்தப் போராட்டம் தற்காலிக வெற்றியைப் பெற்றிருக்கிறது. அரசு அந்த சட்ட முன்வரைவைத் தாக்கல் செய்யும் முடிவைத் தள்ளிவைக்க வேண்டியதாயிற்று. குறிப்பிட்ட பிரச்சனையில் பாதிக்கப்படுகிற மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. அவ்வாறு, பிரச்சனைகளில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவதற்கான முயற்சிகள்தான் தொடரவேண்டும்.

ஆகவே, இப்படிப்பட்ட போராட்டங்களில் மக்கள் பெருமளவுக்கு ஈடுபட வேண்டுமானால் அவர்களது நம்பிக்கையைப் பெறவும், அச்சத்தைப் போக்கவும், தனித்துச் செல்லும் பாதையிலிருந்து மாற்றவும் கம்யூனிஸ்ட்டுகள் விரிவான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

 ‘உலகமயமும் அதன் உள்நாட்டுத் தாக்கங் களும் தவிர்க்கமுடியாத வளர்ச்சிப் போக்குகள், கம்யூனிஸ்ட்டுகள் தேவையின்றி உலக வர்த்தகத் தொடர்புகளை எதிர்க் கிறார்கள், இது வளர்ச்சிக்கு உதவாது’ என்ற வாதத்தைப் பற்றி...

உலகத்தின் மற்ற பகுதிகளிலிருந்து வருகிற எல்லாமே எதிர்க்கப்பட வேண்டியவை என்று கம்யூனிஸ்ட்டுகள் ஒருபோதும் சொன்னதில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கும் தேவையான பொருள்களும் வர்த்தகமும் தொடர்புகளும் உலகின் எந்த மூலையிலி ருந்தும் வரவழைக்கப்படலாம். அதே போல், இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கட்ட உதவியாக இங்கேயிருந்தும் மற்ற நாடுகளுக்கு வர்த்தகம் நடை பெற வேண்டும்.

இப்போது நடப்பது என்ன? உலகமயம் என்ற பெயரால் வலுத்த நாடுகளின் வர்த்தக நலன்கள் நம் மீது திணிக்கப்படுகின்றன. சமதளத்தில் நடைபெறுகிற வர்த்தக உறவாக அது இல்லை.

இங்கே இல்லாத, இங்கே முதலீடு செய்ய இயலாத, இங்கே தொழில்நுட்பம் வாய்க்காத பல தொழில்கள் மற்ற நாடுகளிலிருந்து வருவதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கவே செய்கிறது. உதாரணமாக கைப்பேசி தயாரிப்புத் தொழில்நுட்பம் வெளியிலிருந்துதான் வரவேண்டியிருந்தது. ஆனால், சில்லறை வர்த்தகம், வங்கிச் சேவை, காப்பீடு, பல்வேறு நுகர் பொருட்கள், சாதாரண உணவுப் பொருள்கள்... இவற்றில் எதற்காக அந்நிய நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும்? இந்தியத் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியை எதற்காக உள் நாட்டு, வெளிநாட்டுத் தனியாரிடம் விட வேண்டும்?

இதை வேறு கண்ணோட்டத்திலும் விளக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதிலிருந்து மீள்வதற்காகப் பல நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு நிதி உதவி செய்ய வேண்டியதாயிற்று. அப்படியும் பல நிறு வனங்கள் இழுத்து மூடப் பட்டன. ஆனால், இந்தியாவில் அந்த நெருக்கடி ஏன் அப்படிப்பட்ட மோச மான பாதிப்பு களை ஏற்படுத்தவில்லை? ஏனென்றால், அங்கே நிதிநிறுவனங்கள் எல்லாம் தனியார் துறை. இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட நிதி அமைப்பு கள் பொதுத்துறையில் இருக்கின்றன. ஆகவேதான், அந்த நெருக்கடியின் தாக்குதலை இந்தியா சமாளிக்க முடிந்தது. அப்படிப்பட்ட நிலையில் அந்த வங்கிகளிலும் காப்பீட்டு நிறுவனங்களிலும் எதற்காக அந்நிய நிறுவனங்களை நுழைய விட வேண்டும் என்பதுதான் கேள்வி. கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பாகவும் வாழ்வாதாரமாகவும் இருக்கிற சில்லறை வர்த்தகத்தில் எதற்காக நேரடி அந்நிய முதலீடு என்பதுதான் கேள்வி.

ஆகவே, தற்போதைய உலகமய நடவடிக்கைகள் தவிர்க்க இயலாதவையாக, இயல்பாக வந்துவிட வில்லை. திட்டமிட்ட முறையில் அவை திணிக்கப் படுகின்றன. மத்திய ஆட்சியாளர்கள் அதற்கெல்லாம் அடிபணிகிறார்கள்.

நீங்கள் முதலில் குறிப்பிட்டதைப்போல தமிழகத்தில் சு. வெங்கடேசனும், கேரளத்தில் சானு மாஸ்டரும் சாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கிறார்கள். மார்க்சிய இயக்கத் தைச் சேர்ந்த இவர்கள் இந்த தேசிய விருதைப் பெற் றிருப்பதில் கட்சியின் தலைவர் என்ற முறை யில் உங்கள் உணர்வு என்ன?

மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருக்கிறது. அவர்களுக்கு கட்சியின் சார்பிலும் என் சார்பி லும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் வெங்கடே சனுக்கு வந்து குவிகிற பாராட்டுகளை, இயக்கத்திற்கு கிடைக்கிற பாராட்டுகளாகவே நாங் கள் எடுத்துக் கொள்கிறோம். கம்யூனிஸ்டுகள் அழகியல் உணர் வற்றவர்கள் என்ற வன்மம் நிறைந்த விமர்சனத்தை இத்தகைய வெற்றிகள் தள்ளுபடி செய்கின்றன. மார்க்சிய அழகியல் புரிதல் இருந்தால் வாழ்க்கை யின் உண்மைகளை சரியாகப் புரிந்துகொள்ள முடியும். கலாபூர்வமாக வெளிப்படுத்த முடியும். புதினம், புனைவு என்றால் மேல்தட்டு குடிகளின் கதைகளாகவே இருக்கும், அவர்களது மன உளைச்சல்களே அலசப்படும் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, சமுதாயத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட சமூகங்களின் மனக்குமுறல்களை இலக்கியமாகப் படைக்க முடியுமென ஏற்கெனவே மார்க்சிய சிந்தனைச் சார்ந்த படைப்பாளிகள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த முன்னோடிகளின் வழியில் இவர்கள் சாதித் திருக்கிறார்கள்.

 அமெரிக்காவில் வெளியாகியுள்ள ‘அங்கிள் டாம் கேபின்’ என்ற நாவல் கருப்பு இன மக்களின் பிரச்சனைகளை உண்மை உணர்வுடன் பேசுகிறது. அதை எழுதியவர் ஒரு வெள்ளையர் என்பது குறிப் பிடத்தக்கது. பிரெஞ்சு நாவலாசிரியர்கள் வால்டேர், ரூஸோ இருவரும் கம்யூனிஸ்டுகள் அல்ல, ஆனால் பிரெஞ்சு சமுதாயத்தின் யதார்த்தங்களை, போராட்டங்களை அவர்களுடைய படைப்புகள் உலகத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தன. மார்க்சிய வெளிச்சத் தோடு சமுதாயத்தை நெருங்குகிறவர்கள் இன்னும் பல மடங்கு சிறப்பாக, சமுதாய விடுதலை லட்சி யங்களை நோக்கி தங்களது எழுத்துகளைச் செலுத்த முடியும். வெங்க டேசனும், சானு மாஸ்டரும் மீண்டும் நிலை நாட்டியுள்ள இந்தத் தடத்தில் மேலும் பல படைப்பாளிகளும் கலைஞர்களும் உருவாகி, ஒட்டுமொத்த சமுதாய மாற்றத் திற்கான இயக்கத்திற்குப் பங்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 இந்திய சமுதாயம் எண்ணற்ற பல சிக்கல்களையும் பிரச்சனைகளையும் கொண்டிருக் கிறது. அரசுக் கொள்கைகளின் மோசமான விளைவுகளை மக்கள் அனுபவிக்கிறார்கள். அந்த வலிகளை உணர்கிறார்கள். அவர்களுக் காகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி போராடு கிறது. மார்க் சிஸ்ட்டுகளின் தன்னலமற்ற தொண்டையும், தியாகங்களையும் மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆயினும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு மையமான இடத்தைப் பிடிக்க வில்லையே, ஏன்?

மார்க்சிய இயக்கம் தற்போதைய அரசு, சமுதாய, வர்க்க கட்டமைப்பை அடியோடு மாற்றியமைப்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறது. இருக்கிற அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடச் செய்வோம் என்று சொல்கிற மேலோட்டமான அரசியல் இயக்கம் அல்ல இது. இப்படிப்பட்ட முழுமையான மாற்றத்திற்கான அரசியல் இயக்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை யை ஏற்படுத்துவது எளிதானது அல்ல.

இன்னொரு பக்கத்தில், எதிரி வர்க்கக் கருத்துகள் பல வழிகளில் மக்கள் மனங்களில் ஆளுமை செலுத்துகின்றன. முதலாளித்துவத்தின் பல்வேறு நிறுவன ஏற்பாடுகள், நிலப் பிரபுத்துவ கட்டமைப்புகள், பெரும் ஊடகங்கள் என பல முனைகளிலிருந்தும் அந்த ஆளுமை செலுத்தப்படுகிறது. ஏற்கெனவே நாம் பேசிய அடையாள அரசியல் உள் ளிட்ட காரணங்களும் உள்ளன. உதாரணமாக தாரா ளமயக் கொள்கைகள் வருகிறபோது, மார்க்சிஸ்டு கள் முன்வைக்கிற மாற்றுக் கருத்துகள் மக்களைச் சென்றடைவதற்கு முன்பாகவே, தாராளமயத்தை நியாயப்படுத்துகிற கருத்தாக்கங்கள் மக்களை அடைந்துவிடுகின்றன.

இவற்றையெல்லாம் கடந்து கம்யூனிஸ்ட் இயக்கம் இன்னும் சரியான, எளிய, நம்பிக்கையை ஏற்படுத்துகிற வழிமுறைகளோடு மக்களை மேலும் மேலும் விரிவாகச் சென்றடைய வேண்டியிருக் கிறது. கம்யூனிஸ்டுகளின் நேர்மையையும் தியாகத் தையும் மதிக்கிற மக்கள், தங்களது வாழ்க்கை அனுபவத்திலிருந்து கம்யூனிஸ்டு ஆதரவாளர் களாகவும் மாறுவார்கள்.

ஒரு அரசியல் கோட்பாடு பண்பாட்டுத் தளத்தின் மூலமாகவும் மக்களைக் கவ்வுகிறது என்று நோம் சோம்ஸ்கி கூறுகிறார். கருத்தாக்கங்கள் தயாரித்த ளிக்கப்படுகின்றன என்பார் அவர். இதைத்தான் இத்தாலியக் கம்யூனிசச் சிந்தனையாளர் ஆன்ட னியோ கிராம்ஷி ஏற் கெனவே கூறினார். மக்கள் ஏற்கிற வகையில் கருத்துகள் கொண்டுசெல்லப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். நம் பாரதி சொன்னதுபோல கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்ற அறிவுமிலார் என்ற நிலையில் நம் மக்கள் இருக்கிறார்கள். அந்தக் காரணங்களை, அவர்கள் ஏற்கும் வகையில் எடுத்துச்சொல்கிற பெரும் பொறுப்பு கம்யூ னிஸ்ட்டுகளுக்கு இருக்கிறது.

 தமிழகத்தில் இப்படிப்பட்ட நிலைமைகளை எதிர்கொள்வதில் கட்சியின் மாநாடு எத்தகைய செயல்திட்டங்களை வகுக்கும்?

ஏற்கெனவே தமிழக முதலமைச்சரிடம் மார்க் சிஸ்ட் கட்சியின் சார்பில் ஒரு அறிக்கை அளிக்கப் பட்டிருக்கிறது. அதில், மாநிலத்தின் பொருளா தாரம், தொழில், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு, மனித உரிமை பாது காப்பு, தீண்டாமை ஒழிப்பு, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக் கைகளை வலியுறுத்தி அரசியல் ரீதியாகவும், சமூகத் தளத்திலும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும், மக்களிடையே இயக்கத்தை மேலும் மேலும் வலுப்படுத்துவதற் கான அணுகுமுறைகளையும் இந்த மாநாடு விவா திக்கும். அதனடிப்படையில் உரிய செயல் திட்டத்தை வகுத்துக் கொடுக்கும். விடுதலைப் போராட்ட காலத்திலேயே மற்ற பல இயக் கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் என்ற இலக்கை மட்டுமே கொண்டிருந்தபோது, நாட்டின் அரசியல் விடுதலையோடு பொருளாதார விடு தலையையும் முழுமையான சமுதாய விடுதலை யையும் இலட்சியமாக முன்வைத்த இயக்கம்தான் கம்யூனிஸ்ட் இயக்கம். அந்த இலட்சியங்களை நோக்கி சமூக, பண்பாட்டுத் தளங்களில் கட்சியின் பங்களிப்புகளை அதிகரிப்பது, புறக்கணிக்க முடி யாத சக்தியாக கட்சியை வளர்த்தெடுப்பது, கட்சி ஊழியர்கள், தலைவர்கள் என அனைவரது செயல் முனைப்பையும் கூர்மைப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்கான செயல் வடிவங்களையும் மாநாடு உருவாக்கும்.

படங்கள்: எம். சதீஷ்

Pin It