உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்னைக்கு குடும்பத்தோடு செல்ல வேண்டியிருந்தது. மகளின் ஞாபகத்தில் டவுனுக்குச் சென்று ரெயிலில் முன் பதிவு செய்து வைத்தான். “ரெயிலைப் பார்க்க வேண்டும், ரெயிலைப் பார்க்க வேண்டும்” என அவள் ரொம்ப நாளாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘இன்னும் எத்தனை நாளிருக்கு’ என ஒவ்வொரு காலையிலும் ரெயிலைப் பார்க்கக் கேட்டுக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை.

father_daughter-370போகும் நாளன்று சீக்கிரமே ரெயில் நிலையத் திற்குச் சென்று விட்டிருந்தார்கள். தண்டவாளங்களைப் பார்த்தபடி, ‘இதிலா ரெயில் வரும்’ என ஆச்சரியத்தோடு கேட்டாள். ரெயில் வரும் திசையைக் கேட்டு, அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தாள். இரைச்சலோடு தூரத்தில் சின்னப் புள்ளியாய் இருந்து மெல்ல மெல்ல பெரிதாவது அதிசயம் போலிருந்திருக்க வேண் டும். அதை நோக்கிக் கையைக் கையை நீட்டியவளைத் தூக்கி வைத்துக் கொண்டான். ‘தடக்’ ‘தடக்’ கெனக் கடந்து நின்ற அந்த நீண்ட இயந்திரத்தைப் பார்த்து ‘ரெயில்’ ‘ரெயில்’ எனக் கத்தினாள்.

ரெயிலின் உள்ளே ஏறிக்கொண்டார்கள். உட்கார இடம் பார்ப்பதில், சாமான்களை பத்திரமாக வைப்பதில் கவனமாக இருக்கும்போது குழந்தை ஏதேதோ பேசிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் ரெயில் புறப்பட்டது. ‘நாம இப்போ ரெயிலில் போறோம்’ என்றான் நிம்மதியோடும், சந்தோஷத்தோடும் மகளைப் பார்த்து. ‘ரெயிலைக் காணோம்’ என அவள் வெளியே கை நீட்டியபடி அழ ஆரம்பித்தாள்.

 உயிர்த்தெழும் நேரம்

 பல நகரங்களில் வாழ்ந்துவிட்டு முப்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவன் தன் ஊருக்கு ஒரு பகலில் குடும்பத்தோடு வந்திறங்கினான். பெரிய பெரிய ஜவுளிக்கடைகளுக்கும், அடுக்குமாடி மருத்துவ மனைகளுக்கும், வண்ணமயமான டிஜிட்டல் சென்டர்களுக்கும், பழங்களில் லேபிள் ஒட்டி வைக்கப்பட்டு இருந்த பழமுதிர்ச் சோலைகளுக்கும் இடையே சாலை போய்க் கொண்டிருந்தது. வேப்ப மரங்களும், புங்கை மரங்களும் சூழ நடராஜா தியேட்டர் இருந்த இடத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்று கண்ணாடிக் கட்டிடமாய் பளபளத்தது. திருட்டு தம் அடிக்க நண்பர்களோடு மறைந்த பூங்காவில் நான்கைந்து இரும்பு டவர்கள் செங்குத்தாய் முளைத்திருந்தன. தனது மகனுக்கு ‘இங்குதான் அப்பா...’ என்று காட்ட எதுவு மில்லை. எல்லாம் காணாமல் போயிருந்தன. ஒரு குழந்தையைப்போல கிறுக்கிக்கிறுக்கிப் பார்த்துக் கொண்டு இருந்தான் நினைவுகளில்.

இரவில், வெளியே சென்றபோது யாவும் சோடியம் வெளிச்சத்தில் மின்னிக்கொண்டு இருந் தன. பெரும் போதையில் தள்ளாடியது போலிருந் தது ஊரே. “அப்பா, இதைத்தான் நான் வாங்க விரும்புகிறேன்” என ஷோரூம் ஒன்றிலிருந்த பைக்கை காண்பித்தான் மகன். மகனின் உலகம் இங்குமிருந்தது.

வெளிச்சம் பரவாத அதிகாலையில் வாக்கிங் செல்ல வெளியே வந்தபோது அதிசயம் போலிருந் தது. அவனது இடங்கள் யாவும் பனிமூட்டம்போல ஊரின் மீது மிதந்துகொண்டு இருந்தன. மரங்களுக் குள், வீடுகளின் உச்சியில், தூரத்து ரயில் பாலங் களின் மீது, மின்சாரக் கம்பிகள் அடைந்த தெருக் களின் ஊடே, கோவில் மணியோசை வழியே அவை ஒவ்வொன்றாய் அவனுக்குத் துலங்கின. பெருமூச்சுவிட்டு மௌனமாய் அவனோடு பேசின. வெளிச்சம் வரவர மெல்லக் கலைய ஆரம் பித்தன. ஹாரன் அடித்து வேகமாய்க் கடந்த மினரல் வாட்டர் வண்டி சட்டென எல்லாவற்றையும் அழித்துச் சென்றது ஒரு டஸ்டரைப்போல. 

ஒரு தென்னம் பூவுக்கு... 

பகலெல்லாம் எங்கிருக்குமோ தெரியவில்லை. இரவானதும் சிறியதும், பெரியதுமாய் தோட்டமெல்லாம் தவளைகள் வந்து விடுகின்றன. விரிந்து சுருங்கும் வயிறுகளோடு தென்னை மரத்தடியில் உட்கார்ந்து கண்களை உருட்டியபடி ‘கொரக்கொரக்கென்று’ அவைகளில் சில பேசிக் கொண்டு இருந்தன.

வானம் கிழிந்து மின்னல் வெட்டி பெருஞ்சத்தத்தோடு இடி ஒன்று விழுந்தது. தவளைகள் கலங்க வுமில்லை, கொஞ்சங்கூட அசையவுமில்லை.

வெடித்த பாளையிலிருந்து, உதிர்ந்த தென்னம்பூ தவளையொன்றின் மீது விழுந்தது. ‘ஐயோ செத் தேன்’ என அரண்டு குதித்து திசையற்று பாய்ந்தது அது. அவ்வளவுதான் என்னமோ எதுவோவென்று மற்ற தவளைகளும் அங்கங்கு தாவிப் பதுங்கின.

Pin It