இந்து ராஷ்ட்ரிய சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) அமைப்பின் அரசியல் முகம் தான் பாரதிய ஜனதா கட்சி என்பதை அரசியல் அரிச்சுவடி அறிந்தவர்கூட அறிவர். இந்து முன்னணி, விஷ்வஇந்து பரிஷத், பஜ்ரங்தள், ஏபிவிபி என்பவையெல்லாம் ஆர்எஸ்எஸ் என்ற விஷத்தேளின் கொடுக்குகள்தான். இது தவிர ஆர்எஸ்எஸ் அமைப்பின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்புச் செயலாளர்களாக செயல்படுபவர்கள் சோ.ராமசாமி, சுப்பிரமணியசாமி, குருமூர்த்தி போன்றவர்கள் ஆவர். அதிலும் சோ.ராமசாமி பாஜகவினருக்கே புத்தி சொல்கிற அளவுக்கு இந்துத்துவா கொள்கைகளின் பாதுகாவலராகத் தன்னைக் காட்டிக்கொள்பவர்.

sho_370அவர் நடத்தும் துக்ளக் பத்திரிகையில் தன்னை ஒரு கோமாளிபோல சித்தரித்துக் கொண்டாலும் அரசியல் அரங்கில் அவர் செய்கிற வேலைகள் படுவில்லத்தனமாக இருக்கும். ஜனசங்கம் என்ற பெயரில் சீந்து வாரற்று கிடந்த கட்சியை ஜனதா அமைப்புக் குள் கொண்டு வந்து பின்னர் பாஜக என்று அந்தக் கட்சி உருவெடுத்த போது அதற்கு அடித்தளமிட்ட வர்களில் சோவும் ஒருவர் என்பதை அவரது கட்டுரைகளின் வழியாக அறியலாம்.

துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழாவை ஒவ்வொரு ஆண்டும் பொங்கலன்று நடத்துவது அவரது வழக்கம். ஏதாவது ஒரு மண்டபத்தில் நடக்கும் ஆண்டு விழா இந்த ஆண்டு வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்றது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பேசிய வள்ளுவரின் பெயரால் அமைக் கப்பட்டக் கோட்டத்திற்கு பாஜக தலைவர்கள் லால்கிஷன் அத்வானி, நரேந்திர மோடி ஆகியோர் வந்தபோது வள்ளுவரின் குறள்கள் நாணப் பட்டிருக்கும். ஒவ்வொரு திரைப்படம் வருகிறபோதும் அரசியலுக்கு வரப்போவதாக உதார் விட்டு பின் ஜகா வாங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வருகை தந்து முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா கும்பலை விரட்டியதில் சோவுக்கு முக்கிய பங்கு உண்டு என்று ஊடகங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. நரேந்திர மோடியினால் அனுப்பி வைக்கப்பட்ட செவிலியர் ஒருவர் போயஸ் தோட்டத்தில் சசி கும்பலின் கொட்டத்தை உரிய இடத்திற்கு சொன்னதாகவும் தகவல்கள் கசிந்தன. நக்கீரன் ஏட்டின் மீது அவதூறு வழக்குத் தொடர்ந்த முதல்வர் ஜெயலலிதா இந்தத் தகவல்களை வெளியிட்ட ஊடகங்களின் மீது வழக்கு எதையும் தொடரவில்லை.

ஊழலிலும் உலகமயக் கொள்கைகளை அமலாக்குவதிலும் காங்கிரசோடு போட்டி போடுகிறது பாஜக. அமெரிக்காவுக்கு காவடி தூக்குவதிலும் நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்பதையும் அந்தக்கட்சி அவ்வப்போது வெளிக்காட்டத் தயங்கியதில்லை. ஆனாலும் அந்தக்கட்சி பரிசுத்தவான்களின் கூடாரமாகத் திகழ்வதாக நற்சான்றிதழ் கொடுத்து, தானே கைதட்டி மகிழ்வார் சோ.

துக்ளக் ஆண்டுவிழாவுக்கு வருகை தரும்போது முதல்வர் ஜெயலலிதாவை அத்வானியும் நரேந்திர மோடியும் சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது. நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

விழாவில் பேசிய சோ, 2014ம் ஆண்டு நடை பெறவுள்ள தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை ஏற்படலாம். பிரதமர் பொறுப்புக்கு பாஜக தலைவர் ஒருவர் வர முடி யாமல் போனால் அந்த இடத்தில் மதச்சார்பற்ற கட்சியின் தலைவர் என்ற முறையில் ஜெயலலிதாவை அமரவைக்கலாம் என்று ஒரு போடு போட்டார் சோ. ஏற்கெனவே எல்.கே.அத் வானியும் நரேந்திர மோடியும் பிரதமர் ஆகிவிட்டதாகவே கருதிக்கொண்டிருக்கிறார்கள். துக்ளக் ஆண்டுவிழாவில் பிரதமர் என்று எழுதப்பட்டு ஒருநாற்காலி போடப்பட்டிருந்தால் அதைப் பிடிப்பதற்கு இருவரும் அடிதடியில்கூட இறங்கியிருப்பார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று வந்து விட்டாலே அது மதச்சார்புள்ள கூட்டணிதான். அதற்கு எப்படி மதச்சார்பற்ற ஒரு கட்சியின் தலைவர் தலைமையேற்க முடியும் என்பதெல்லாம் சோவுக்கு மட்டுமே தெரிந்த சாணக்கிய தந்திரம்.

விழாவில் பேசிய அத்வானி பாஜகவும் அதிமுகவும் இயல்பான கூட்டணிக் கட்சிகள் என்று புல்லரித்து அரிப்புத்தாங்க முடியாமல் போர்வையை எடுத்து போர்த்தியிருக்கிறார். இதே அத்வானிக்குத்தான் செலக்ட்டிவ் அம்னீ சியா என்ற நோய் இருப்பதாக ஏற்கெனவே ஜெயலலிதா கண்டுபிடித்துக் கூறினார். இவர் இப்போது இப்படி பேசுவதிலிருந்து ஜெய லலிதா பேசியதை மறந்து விட்டதாகத் தெரிகிறது. இதிலிருந்து அவருக்கு அந்த பிரச்சனை இருப்பது உறுதியாகிறது.

வாஜ்பாய் தலைமையிலான அரசுக்கு அதிமுக ஆதரவு அளித்தபோது தினம் ஒரு நிபந்தனையை விதித்து அவர்களை பாடாய்ப் படுத்தினார் ஜெயலலிதா. ஒரு நாள்கூட நிம்மதியாகத் தூங்கவில்லை என்று வருத்தப்பட்டார் அடல்பிகாரி வாஜ்பாய். அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் சென்னைக்கும் தில்லிக்கும் அலைந்தே இளைத்துப்போனார்.

மறுபுறத்தில் பாஜகவுக்கு ஆதரவளித்தது மிகப்பெரிய தவறு என்று சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றக் கூட்டத்தில் பகிரங்கமாகக் கூறினார் ஜெயலலிதா. இந்துத் துவா சாயலில் அவர் எடுத்த நடவடிக்கைகளான மதமாற்றத் தடைச்சட்டம், ஆடு, கோழி பலியிடத் தடை போன்ற நடவடிக்கைகள் தமிழக மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பு இந்த நடவடிக்கைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த போதும் அந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவை ஒரு மதச்சார்பற்ற கட்சியாக காட்டவும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு நெருக்கமான கட்சியாகக் காட்டிக் கொள்ளவும் ஜெயலலிதா பல முயற்சிகளை எடுத்தார்.

இந்துத்துவா ஆதரவு சாயல் தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது. ஆனால் மத்தியில் பாஜக வை எப்படியாவது ஆட்சியில் அமர்த்தி விடவேண்டும் என்பதற்காக அதிமுகவை தவறாக வழிநடத்த சோ முயல்கிறார். என்னுடைய பேச்சைக்கேட்டு யாரும் உருப்பட்டதாக வர லாறு இல்லை என்று சோவே அடிக்கடி பெருமைப்பட்டுக்கொள்வார். அவரது விஷயத்தில் அதிமுக மிகுந்த கவனத்தோடு இருப்பது நல்லது.

- மதுரை சொக்கன்

Pin It