கடந்த தேர்தலில் நான் ஆட்சிக்கு வந்தால் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்றார் ஜெயலலிதா. ஆனால் அமைச்சர்கள் மாற்றம், ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் அடிக்கடி மாற்றம், சட்டசபைக் கூட்டம் மாற்றம், அண்ணா நூலக மாற்றம் என்று மாற்றிக் கொண்டேயிருக்கிறார். இப்போது பஸ் கட்டணம், பால் விலை, மின் கட்டணத்தை மாற்றித் தமிழ் மக்களைச் சவுக்கால் விளாசுகிறார்.

ஏற்றினாலும் ஏற்றம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏழை- நடுத்தர மக்கள் வாய்விட்டுக் கதறும் அளவுக்கு விலை ஏற்றம். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் மக்களை பஸ் கட்டண உயர்வு அலற வைக்கிறது. 75 சதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பால்விலை லிட்டருக்கு 6 முதல் 9 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் மின்சாரக்கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப் போவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனிட் 75 காசு இருந்ததை 1. 50 உயர்த்தி 2. 25 ஆக்கப் போகிறார்கள். இது ஏழைகளின் வீடுகளுக்கே இந்தக்கதி. பஸ் கட்டணம் மூலம் 12000 கோடியும், பால் விலை மூலம் 7000 கோடியும், மின் கட்டண உயர்வு மூலம் 18000 கோடியும் மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறார்கள்.

இந்த உயர்வுகளைத் தொடர்ந்து டீ ஒரு ரூபாய் விலை கூட்டப்பட்டுள்ளது. ஓட்டல்களில் சாப்பாடும் உயர்த்தப்பட்டுள்ளது. பாமர மக்கள் வாழ்வதா சாவதா என்று தெரியாமல் தவிக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுகளை வாங்கி முடித்ததும் ஜெயலலிதா மக்களை மிதிக்கத் தொடங்கிவிட்டார். இந்த விலையேற்றத்தால் ஒவ்வொரு ஏழைக் குடும்பமும் சராசரியாக மாதம் ரூ. 1500 கூடுதல் செலவாகும். வருமானத்திற்கு எங்கே போவது?

2001ல் முதலமைச்சரானதும் இதே போலத் தான் ஜெயலலிதா எல்லாப் பொருட்களின் விலையையும் ஒரே நாளில் விலையேற்றினார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரை இன்னும் மூன்றாண்டுகளுக்கு மக்கள் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் போலும்.

நம் தமிழ் மக்களும் பஸ் கட்டணம் உயர்ந்தால் கண்டக்டரைத் திட்டுவார்கள். பால் விலை உயர்ந்தால் பால்காரனையும், மின் கட்டணம் உயர்ந்தால் வயர்மேனையும் பில் கலெக்டரையும் திட்டுவார்கள். பின்பு பத்து நாளில் பழகிய பின் மௌனம் காத்து இருந்து விடுவர். எய்தவர்களை விட்டுவிட்டு அம்பை நோகிற குணம் உள்ள வரை ஆட்சியாளர்கள் திருந்த மாட்டார்கள்.

அரசின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேறு பல வழிகள் உள்ளன. தமிழ்நாட்டில் கிரானைட் தொழிலில் நமது மலைகள் அறுக்கப்பட்டு 1. 5 லட்சம் கோடி வருவாய் அரசுக்குக் கிடைக்கவேண்டும். இந்தப் பணம் கடந்த பல ஆண்டுகளாகத் தனிநபர்களுக்குப் போகிறது. இதைக் கைப்பற்றினாலே மக்களைத் தாக்க வேண்டியதில்லையே!

மத்திய அரசு ஒரு புறம் பெட்ரோல், டீசல், கேஸ், உரம் விலைகளை உயர்த்தி மக்களைக் கொள்ளையடிக்கிறது. இந்தப் பணத்தை அம்பானிகளுக்கும் ஏகபோக நிறுவனங்களுக்கும் வாரி வழங்குகிறது. அதே பாதைதானா அதிமுக அரசின் பாதையும்?

மக்கள் நலப் பணியாளர்கள் டிஸ்மிஸ்

2001ல் ஜெயலலிதா முதலமைச்சரானதும் மக்கள் நலப் பணியாளர்களையும், சாலைப் பணியாளர்களையும் டிஸ்மிஸ் செய்தார். மீண்டும் 8-11-11 அன்று தற்போதும் 13500 பேரைப் பணிநீக்கம் செய்துள்ளார். 2001ல் சுமார் 60 பேர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்தும் மாண்டனர். இப்போதும் அது துவங்கியுள்ளது.

உயர்நீதிமன்றம் அரசு உத்தரவைத் தடை செய்து, அனைவருக்கும் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால்அரசோ அதை மீறி அப்பீல் செய்கிறது. இப்படி ஊழியர்களை வயிற்றிலடித்துத தெருவில் நிறுத்துவதில் என்னதான் மகிழ்ச்சியோ? மீண்டும் அவர்கள் போராட்டம் தொடர்கிறது.

சிதம்பர ரகசியம்

2 ஜி ஊழலில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது 5000 கோடி கமிசன் வாங்கிக் கொண்டு கையெழுத்திட்டார் என்றும், எனவே அவரும் கைது செய்யப்பட வேண்டுமென்றும் சுப்பிரமணியசாமி வழக்குத் தொடுத்துள்ளார். இதில் பீதியடைந்த சிதம்பரம் குடும்பத்தோடு கோவில் கோவிலாக அலைகிறார். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பனும் சிதம்பரத்திற்கு எதிராகக் கிளம்பியுள்ளார். சிதம்பரத்தை இழுத்தால் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் சேர்ந்து இழுபடுவார்கள் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். திருடர் கூட்டம் மக்கள் முன் அம்பலமாகி வருகிறது.

உத்தப்புரம் வெற்றி

உத்தப்புரத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகக் கடந்த சில ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தொடர்ந்து போராடின. அப்போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. 10-11-11 அன்று தலித்துகள் முத்தாலம்மன் கோவிலுக்குள் நுழைந்ததும் அவர்களைப் பிள்ளைமார் சமூகப் பெரியவர்கள் கை கூப்பி வரவேற்றதும் மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.

இரு சமூக மக்களையும் பிரித்து வைத்த தடுப்புச் சுவர் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் வருகையால் உடைக்கப்பட்டது. இது நடந்தது 2008ல். 1989ம் ஆண்டு வரை தலித்துகள் கோவில் அருகே உள்ள அரச மரத்தடியில்தான் வழிபாடு நடத்தினர். அதன்பின்வ் அதுவும் தடுக்கப்பட்டது. தற்போது நான்காண்டு காலப் போராட்டத்திற்குப் பின்பு கோவிலுக்குள்ளேயே வழிபாடு நடத்தும் உரிமை கிடைத்துள்ளது.

இருதரப்பையும் சமரசம் செய்து வைத்த காவல் துறை அதிகாரி அஸ்ரா கார்க் பாராட்டுக்குரியவர். இரு தரப்பு மக்கள் மீதும் போடப்பட்ட அறுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இது மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான சாதனையாகும்.

டேம் 999

முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கேரள அரசு, தமிழக உரிமையைத் தட்டிப் பறிக்கும் நோக்கில் புதிய அணை கட்டி தண்ணீரைக் கடலில் விடும் திட்டத்தைச் செயல்படுத்த முனைகிறது. 1979ல் பல கோடி செலவில் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்ட அணை உடையப் போகிறது என்ற பீதியை கேரள அரசு கிளப்பி வருகிறது.

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும், மக்கள் வெள்ளத்தில் அழிவது போலவும் காட்டும் 'டேம் 999' என்ற திரைப்படத்தை ராய் என்பவர் வெளியிடவுள்ளார். இரு மாநில மக்களிடையே ஆத்திரமூட்டும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்புத் தீர்மானம் கொடுத்துள்ளார்.

இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட அனுமதிப்பதில்லை என திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Pin It