நூல் மதிப்புரை: 1857 எழுச்சியின் பேரோசை
முனைவர் கா.மோகன்ராம்
விலை ரூ.240
வாசல் பதிப்பகம்
புதிய எண் 202, முதல் தெரு,
வசந்தநகர்,
மதுரை - 625 003
கடந்த கால வரலாறு என்பது ஞாபகங்களின் புதைசேற்றில் அமிழ்ந்து மறைந்து போவதற்கில்லை. அதன் ஒவ்வொரு பக்கத்திலும் கடந்த காலத்தின், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், மக்கள் வாழ்வின் துடிதுடிப்பு, மனோநிலைகளின் விசித்திரம், விந்தையான நிகழ்வுகள் என்று எல்லாவற்றைப் பற்றியும் பேசுகிறது. அப்படித்தான் கேட்கக் காதுள்ளவர்களுடன் ஒரு அர்த்தமுள்ள உரையாடலைத் துவக்குகிறது. அந்த உரையாடல் வழியே உயிர்பெறும் வரலாற்று நாயகர்கள், அழுகிறார்கள், சிரிக்கிறார்கள். வஞ்சிக்கிறார்கள், கொலை செய்கிறார்கள். போர் புரிகிறார்கள்., தியாகம் செய்கிறார்கள், சாதிக்கிறார்கள், அருஞ்செயல் புரிகிறார்கள். வாழ்வின் விசித்திரமான தருணங்களை ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ப எதிர்கொள்கிறார்கள். தாங்கள் கொண்ட லட்சியத்துக்காக, கொள்கைப் பிடிப்புக்காக எதையும் தாங்கவும், எதையும் இழக்கவும் தயாராகிறார்கள். தாங்கள் வரலாற்றில் பேசப்படப்போகிறோம் என்று அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் அதை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. ஆம் இப்படித்தான் வரலாறு நம் கண்முன்னே தன் கதாபாத்திரங்களை நிறுத்துகிறது. தன் பழைய ஞாபகங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. வரலாற்றை வாசிக்கவும், அதைப் புரிந்து கொள்ளவும் அதிலும் குறிப்பாக இந்திய வரலாற்றை முன் எப்போதைக் காட்டிலும் இப்போது மிகுந்த அவசியம் ஏற்பட்டுள்ளது. அப்படிப்புரிந்து கொள்வதின் மூலமே நிகழ்காலத்தைப் பற்றிய தெளிவும், எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான திட்டவரையறைகளையும் நம்மால் உருவாக்க முடியும.
1987 எழுச்சியின் பேரோசை என்ற வரலாற்று நூல் இந்திய முதல் விடுதலைப்போர் என்றும் புரட்சி, கலகம், எழுச்சி என்றும் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக வியாக்கியானங்கள் செய்து கொண்டிருக்கிற மகத்தான சிப்பாய்களின் எழுச்சியைப் பற்றிய அற்புதமான நூல். புகைந்து கொண்டேயிருந்த அதிப்ருதியின் நெருப்புப் பற்றி பாரக்பூரிலிருந்து கிளம்பியது. 1857 ஆம் ஆண்டு மே 11ம்தேதி பற்றிக் கொண்ட நெருப்பு வட இந்தியா முழுவதும் பரவி, மீரட், கான்பூர், தில்லி என்று எல்லா நகரங்களிலும் தன் ரத்தச் சுவடுகளைப் பதிந்து இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு மெல்ல அணைந்தது. அந்த இரண்டரை ஆண்டுகளும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்று யாருக்குமே புரியவில்லை. வெள்ளையர்களுக்கு அதுவரை அடிமைச் சொக்கட்டான்களாக இருந்த இந்தியர்கள் இப்போது புராணிகப்புதிர்களைப் போல ஆகிவிட்டனர். நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியவில்லை. அந்த இரண்டரை ஆண்டு கால எழுச்சி ஒரு லட்சம் சிப்பாய்களையும், ஒரு லட்சம் மக்களையும் காவு கொண்டது. முனைவர் கா.மோகன்ராம் மிகச் சரியாக குறிப்பிட்டதைப்போல, இந்தியாவின் நெடிய வரலாற்றைக் குறுக்கே வெட்டினால் எலும்பும் நரம்புமாய் சதையும் தோலுமாய், நிணமும், குருதியுமாய் சாதி, சமயம், நலமானியம், காலனியம், நவீனத்துவம் ஆகிய அனைத்துக் கூறுகளும் ஒரே சமயத்தில் தென்படுகிற ஒரு இடம் 1857 நூலை வாசிக்க வாசிக்க நமக்கு இத்தனை விசித்திரமாக வரலாறு இருந்திருக்கிறதே என்று திகைத்துப்போக நேரிடுகிறது. வெறுமனே சிப்பாய்கள் மட்டும் சம்பந்தப்பட்ட எழுச்சியாக இல்லை. ஏழை - எளிய விவசாயிகளும், குடியானவர்களும் பொதுமக்களும் தனனெழுச்சியாகக் கலந்து கொண்ட எழுச்சியாக நடந்திருக்கிறது. இந்திய மீட்சியின் ஒரு முக்கியமான கூறு எனறு மார்க்சும், ஏங்கெல்சும் அன்றே கணித்திருந்தார்கள்.
வரலாற்றை எழுதுவது என்பது வேறு, வரலாற்றை நிகழ்த்திக் காட்டுவதென்பது வேறு.அதுவும் எழுச்சியின் தீ எந்த ஒரு ஒழுங்கிலுமில்லாமல் காட்டுத்தீ போல ஒரு இடத்தில் கொழுந்துவிட்டும் ஒரு இடத்தில் அணைந்தும், எதிர்பாராத இன்னொரு இடத்தில் விரிவு கொண்டும் பரவியிருக்கிறது. முழுமையாக இதை தன்னுடய மனதில் இருத்தி, மிகப்பெரிய திரைச் சீலையில் ஒரு தேர்ந்த ஓவியரைப்போல வரலாற்றின் எந்த நிகழ்வும் விடுபட்டு விடாமல், எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, எந்த இடத்திலும் கால இடவழுமைதியின்றி அற்புதமாக எழுதியிருக்கிறார் முனைவர் கா.மோகன்ராம். ஏராளமான இடங்களில் புனைவின் எல்லையைத் தொட்டு, அதன் வலிமையான தாக்கத்தையும் மொழி நடையில் சேர்த்து வளமாக்கியிருக்கிறார். நூலை கையில் எடுத்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்க முடியவில்லை என்பதே இந்த நூலாக்கத்திற்கான பெருஞ்சிறப்பு.
மங்கள் பாண்டே தொடங்கி இந்த எழுச்சியின் நாயகர்கள் ஒவ்வொருவருமே நமக்கு உத்வேகமூட்டுபவர்களாக இருக்கின்றனர். பாபுகுன்வர்சிங்கின் வீரம், நானா சாகேப்பின் தந்திரம், ஜீவாலாபிரசாத்தின் தீரம், ஜான்சிராணி லட்சுமிபாயின் போர்த்திறம் என்று வாசிக்க வாசிக்க பிரமிக்க வைக்கிற வரலாற்று நாயகர்கள். அதிலும் குறிப்பாக, உலகிலேயே கொரில்லா போர்முறையில் முதன்மையானவன் என்று வெள்ளையரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தாத்யாதோப்பே, 1859ம் ஆண்டு ஏப்ரல் 7ம்தேதி காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டவுடன் பெருமூச்சு விடுகிறார்கள் வெள்ளையர்கள். அத்துடன் கிட்டத்தட்ட மகத்தான அந்த எழுச்சி முடிவுக்கு வருகிறது. இந்த இரண்டரை ஆண்டுகால நிகழ்வுகளும் உயிர்த்துடிப்புடன் நம் கண்முன்னே காட்சியளிக்கிறது.
இதோ மங்கள்பாண்டேயின் குரல்ஓங்கி ஒலிக்கிறது. வெள்ளை அதிகாரிகளைத் தாக்கிய அவன் வாளிலிருந்து தான் குருதியின் முதல் துளி இந்திய மண்ணில் விழுந்தது. பின்னால் வெள்ளையர் மற்றும் இந்திய வீரர்களின், விவசாயிகளின், சாமானியர்களின், இரத்த ஆறாகப் பெருக்கெடுத்து ஓடப்போகிறது என்று யாருக்கும் தெரியும்? மீரட்டின் எழுச்சி, கிழட்டு பகதூர் ஷாவின் ஊசலாட்டம், கையாலாகத்தனம் தெரிகிறதா உங்களுக்கு. பாபு குன்வர் சிங் தன் தள்ளாத வயதிலும், குதிரையில் பாய்ந்து போரிடும் ஒலிகேட்கிறதா? ஜான்சிராணி லட்சுமிபாய் போரிடும் வீரர்களின் நடுவே புயலெனப் புகுந்து உற்சாகப்படுத்துகிற கீச்சொலி கேட்கிறதா? நானாசாகேப் இறுதி வரை புதிராகவே இருந்தானே. எப்படிப்புரிந்து கொள்வது? ஒரு லட்சத்தி அறுபதாயிரம்மைல் பரப்பளவுக்கு தனி ஒரு மனிதனாக வெள்ளையர் படையை அலைக்கழித்தானே ராமச்சந்திர பாண்டுரங்க ஹவலேகார் என்ற தாத்யாதோப்பே. அதோ தூக்கிலிடப்பட்ட அவன் உடல் காற்றில் ஆடிக் கொண்டிருக்கிறது. அந்தக் காற்று இன்னும், இங்கேயும், இப்போதும் வீசிக் கொண்டிருக்கிறது. நம்மை எச்சரிக்கிறது. எதற்கும் தயாராக இருக்கும்படி எச்சரிக்கிறது. தன் நினைவுகளில் பதுக்கியுள்ள ஞாபகங்களை நம்மிடம் தருவதற்கு முயற்சிக்கிறது. அதன்மூலம் நவகாலனியத்தை எதிர்த்து வெற்றி கொள்வதற்கான தந்திரங்களைக் கற்றுக் கொடுக்கிறது. சமீபகாலத்தில் வெளியான நூல்களலே மிக முக்கியமான இந்த வரலாற்று நூலை வாசியுங்கள்! நீங்கள் வரலாற்றை நேசிப்பீர்கள்!