அறுவடை செய்யப்பட்ட வயல்களின் அடிக்கற்றைகள் போலத்தான் தன்னைச் சுற்றிலும் இருந்து கொண்டிருந்த அவர்களை அவனுக்குப் பார்க்கவும் தெரிந்தது. எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து அவன் மனவருத்தப்பட்டான். உடலின் மிருதுத் தன்மை போய் சொரசொரப்பாகத்தான் எல்லோருமே இருக்கிறார்கள். அங்கே தாயுடனிருந்து தரையைப் பார்த்தபடி இருக்கிறாளே அவளையும் அவன் புதுக்குடியிருப்பு சந்தை வழியே பல தடவைகள் முன்பெல்லாம் கண்டிருக்கிறான். அந்த நேரம் காணும் போது.. அழகா... என்னமாதிரியான அழகானவள் அவள். அன்னப்பட்டுப் போன்ற கண் கள். தேன் போன்ற நிறம் படைத்த கரங்கள். ஒரு பார்வை பார்த்தாளென்றால்.. ஸ்சா.. சுவர்க்கத்திலிருந்து வந்த மாயக் கன்னி மாதிரித்தான் அவள். இப்போது அவள் முகத்தில் குளிர்ந்த பார்வையுமில்லை. முகத்தில் ஒரு பாவமுமில்லை. என்ன மாதிரியாக உடல் வறண்டும் போய் விட்டாள்.

இந்தப்போரின் மத்தியிலே அங்குள்ள மற்றையவர்களுடன் சேர்ந்து தானும் அழிந்து போகத் தயாராக இருப்பது போலத்தான் அவனுக்குத் தோன்றியது. கூடாது இனி ஒரு அழிவு அப்படியாக யாருக்குமே வரக்கூடாது என்று நேற்று அங்கு நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துக் கொண்டு தனக்குத்தானே அவன் கூறிக் கொண்டான். அதற்குப்பிறகு “கடவுளே என்பிதாவே” என்று பலதடவைகள் அவன் சொல்லிக் கொண்டான். வேறு ஒரு வார்த்தைகள் சேர்க்காமல் இதையே பல தடவைகள் சொல்லிக் கொண்டிருந்தான். அப்படியே சொல்லிக் கொண்டிருந்தால் நேற்றைக்கு போல தான்கண்ட அந்தச் சம்பவம் நினைவில் நின்று தள்ளி நிற்கும் என்றும் அவன் நினைத்தான்.

ஆனாலும் முடியவில்லை. “கடவுளே என் பிதாவே..” என்று பல தடவைகள் சொல்லி முடிய திரும்பவும் அவனுக்கு வந்து விட்டது அந்த நினைவு. வயிறுகளை வானுக்கு காட்டிக்கொண்டு செத்து விழுந்து விடும் பூச்சிகள் போல, செல்பட்டுச் செத்துப்போன அந்தப் பெண்கள், குஞ்சு குருமண் மாதிரிப் பிள்ளைகள், கிழவர்கள், கிழவிகள் என்று அதிலே அவர்கள் கிடந்தார்களே. அந்தக் காட்சி இன்னமும் அவன் கண்களிலிருந்து மறை யாமல் காணப்படுவது போலத்தான் அவனுக்கு திரும்பவும் இருந்தது.

கடலை உழுது கொண்டிருப்பதுபோல விசைப் படகுகள் போய்க் கொண்டிருக்கும் சப்தம் அவன் காதுகளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தன. அயர்ந்து போய் ஒரு காலத்தில் அமைதியாகக் கிடந்த கடல் இப்போது பீரங்கிப் படகுகளின் விரைவால் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது என்று அவன் நினைத்துக் கொண்டான்.

தரையைப் பார்த்து முணுமுணுத்துக் கொண் டிருந்தார் அவனுக்குப் பக்கத்தில் இருந்த கிழவர். பீதி அவரைப் பற்றியிருந்தாலும் கோபமாக எழுந்து கொஞ்சதூரம் நடந்துவிட்டு வந்து முன்பு இருந்த இடத்திலேயே அவர் இருந்தார். இந்தப் பட்டினியில் புழுப்போல அவரின் குடல் துடித்துக் கொண்டிருக்கும் என்று அவனுக்கும் தெரியும்.

இந்த இடத்தில் இரைச்சல் போடாமல்தான் இப்போது குருவிகளும் பறக்கத் தொடங்கி விட்டன. அப்படியான ஒரு சூனியத்தில் சொந்தங் களை அவன் நினைவில் தேடினால், ஒருவர் நினைவும் அவனுக்கு வரவில்லை. வியர்வை வேர்த்து அவனுக்கு வடிந்தது. அவன் நரம்புகள் துடித்துத் தெறித்தமாறியாக இருந்தன.

பசி அவனது உள் குடலைப் பிடுங்கிற்று. அவனைப் பிசைந்து வலி உண்டாக்கிற்று.

“முழங்காலுக்க சரியா வலிக்குது... “ என்று அந்தக் கிழவர் சொல்லிக் கொண்டிருந்தார். “பசிக்கவும் பசிக்கிது” என்று ஒரு வார்த்தையும் சொல்லாமல் அதை மறைத்துக் கொண்டு, “மானஸ்தர் தான் கிழவர்!” என்று அவன் மனதுக் குள் அவரைப்பற்றி நினைத்துக் கொண்டான்.

செல் சத்தங்களும், துப்பாக்கிச் சத்தங்களும் இன்னும் ஓயவில்லை. “எப்போது வந்து எங்கே செல்விழுமோ?” என்ற பயம் எல்லோருக்கும் உடம்பை நடுக்கிக் கொண்டிருந்தன. கிழவர் வயிற்று வலிபோல உடலைக் கோணி வளைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். கடினமாகவும் கேட்கும்படியாகவும் பெரிதாகவும் மூச்சு விட்டார். அவரின் உலர்ந்த அதரங்கள் தானாகவே சில வார்த்தைகளை உச்சரித்தன.

“இன்னும் கஞ்சி ஊத்தேல்லயோ சனத்துக்கு...?” அவர் சொல்லிய பிறகு நிலவிய அமைதி பாறாங் கல்லைப்போல அவனுக்கு கனத்தது. தலையைச் சாய்த்துக் கொண்டு பிச்சை கேக்கிறமாதிரிக் கேக்காமல் “ஏதோ தந்தால் தா தராட்டிப் போங்கோ...” என்ற மாதிரி நிரையில் நின்று கொடுக்கிற கஞ்சி, தண்ணீரை வாங்கிச் சாப்பிட்டுக் குடிக்கிறவர் இந்தக் கிழவர்.

உணவு நசித்துவிட்டால் உடல் நசித்துவிடுகிறது. அதுவும் வயதுபோன இவரைப் போன்றவர் களுக்கு என்று அவரைப் பற்றி நினைக்கவும் அவரிடமுள்ள திரை ஒன்று கிழிபட்டது போல அவன் எண்ணினான். கிழவரைப் பற்றி நினைத்துக் கொண்டு தன் துயரை பெரிது செய்து கொண்டான். எங்கோ ஒரு குழந்தை கத்தியது கேட்கவே அவனுக்கு உயிரைக் கொண்டு போகுமாப் போல இருந்தது. வேறு ஒன்றும் காதில் விழாமல் அதுவே மட்டும் கேட்பது போல அவனுக்கு இருந்தது. உடனே காது இரண்டையும் கைகளால் பொத்திக் கொண்டான்.

அன்றையத் தினம் பின்னேரவேளையில் குடிக்கக்கிடைத்த சோற்றுக் கஞ்சியைக்கூட அவன் அந்தக் கிழவருக்கே குடிப்பதற்குக் கொடுத்து விட்டான்.

கிழவர் அவனிடமிருந்து அதைக் கையில் வாங்கு வதற்கு முதல் “ஏன் தம்பி நீ உன்ரை பசிக்கு குடியனப்பு.... ஏன் எனக்கு இதத் தருறீர்..?” என்று கேட்டார்.

“பரவாயில்லைப்... பெரியவர்.... எனக்கு இப்ப வயித்துக்கு ஒரு மாதிரி சரியாயில்லப் பெரியவர்... அதால நீங்க இதக் குடியுங்கோ” என்று தன் பசியையும் அடக்கிக் கொண்டு அவருக்கு அவன் பொய் சொல்லிவிட்டான். கிழவர் பாவம்! அவன் சொன்னதை உண்மைதான் என்று நம்பிக்கொண்டு அதைக் கையில் வாங்கினார். அதன்பிறகு ஆழமான ஒரு சோகத்தோடு அவரும் கையில் பாத்திரத் தோடு வைத்திருந்த கஞ்சியை குடிக்காமல் வைத்துக்கொண்டு இருந்தார்.

அவருக்கு இரத்தஅழுத்தம் ஏகமாக எகிறிவிட்ட தால் தலைச்சுற்றல் மயக்கமாக மாறுவது போல இருந்தது. அதனால் கையிலிருந்து கோப்பைக் கஞ்சியை யாருக்காவது உடனே கொடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அங்கே அவருக்குப் பக்கத்திலிருந்த பையனை தன்னருகில் கூப்பிட்டு அவனுக்கு கஞ்சிக் கோப்பையைக் கொடுத்தார். அதைக் கொடுத்தகையோடு அப்படியே மயக்கம் போல வந்து கீழே சாய்ந்து விழுந்துவிட்டார் கிழவர்.

கிழவரின் நிலையைக் கண்டு பீதியில் அவனுக்கும் முகம் வெளுப்புத் தட்டிவிட்டது. அவனின் நுரையீரல்... ஆக்ஸிசனுக்குத் தவித்தது மாதிரி அவதிப்பட்டது. தொய்வு நோய்க்காரன் தானே இவனும். அதனால் “புஸ் புஸ்” சென்று மூச்சு வாங்கினான். என்ன செய்வதென்று தெரியாத நொடிகள் கடந்த பின், கிழவரின் தலையை அப்படியே தன் மடிமேல் தூக்கி படுக்கவைத்துக் கொண்டு, கஞ்சி வாங்கிக் கொண்டு போன அந்தப் பையன் கொடுத்த குவளையில் இருந்த தண்ணீரை அவரின் முகத்தில் தெளித்தான். அவரின் சால்வை யை உதறி வேர்வை வழிந்த உப்புக் கரித்துப் போன கழுத்தையும், முகத்தையும் தோள்பட்டைகளையும் துடைத்து விட்டு துண்டை சுழற்றி சுழற்றி அவருக்கு விசிறிக் கொண்டிருந்தான்.

பட்டை கழற்றும் வெயில் கங்கை கக்கிக் கொண்டிருந்தது. பெரியவரின் நிலையைப்பார்த்து அவனுக்கு கண்களில் நீர் திரண்டுவிட்டது. பெரு மூச்சிழுத்து அடக்கிக் கொண்டான். தூக்கமுடியாத கனத்தில் துக்கம் மனதை வாட்ட கிழவரின் முகத்தையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்திலிருந்து ஒரு பெண் வைத்த ஒப்பாரி பனைஓலைகளையும் தாண்டி அந்த மணல் பாங்கான தரையிலெல்லாம் எதிரொலித்தது. செல் விழுந்து நேற்றுப் பறிக்கப்பட்ட உயிர்! செத்துப் போன தன் மகனை நினைத்துத்தான் அவள் அழுது கொண்டிருக்கிறாள்.

“நேற்று அவளுக்கு சபிக்கப்பட்ட நாள் தான்...” என்று அங்கே இருந்தவர்களெல்லாம் நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இதுதான் ஒரு துயரம் என்று குறிப்பிடமுடியாத அளவிற்கு அங்கு உள்ளவர்கள் யார் கண்ணிலும் இப்பொழுதெல் லாம் துயரம் என்கிற களைதான். எங்கு கால் வைத்தாலும் எந்தப்பக்கம் திரும்பினாலும் எங்களுக்கு ஒரு விபத்து நேரக் காத்திருக்கிறது என்ற பயம் அவர்களுக்கு. இதனால் சுடு மணலில் தங்கள் இதயத்தைப் புதைத்ததைப் போன்ற வேதனைதான் எல்லோருக்கும். கிழவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை. அவனுக்குப் பயம் அதிகமாகிக் கொண்டு வந்தது. இப்படியே கிழவர் சில வேளை இறந்தும் விடுவாரோ... என்று நினைத்ததில் ஒரு வித அச்சம் வயிற்றில் அவனுக்கு முள்ளாய்க் குத்தியது போல இருந்தது. இது போர்க்களம். - தீயும், சாவின் வேதனைகளும் நிரம்பிய இடம். எனவே எல்லாமே. சகஜம் தான். அடுத்த நிமிடம் நான் உயிருடன் இருப்பேனோ? அல்லது அவர் உயிருடனிருப்பாரோ? இல்லை இதிலே இருக் கின்ற எல்லோரும் தான் ஒன்றாக நாங்கள் களப்பலி களாக இவ்விடத்தில் செத்தும் மடிவோமோ யாருக்குத்தான் அது தெரியும்.

என்று இவை எல்லாமே அவனது நினைவில் ஒரு கரும் புள்ளியாய் வந்து விட்டுப்போயின. செல்விழுந்து எழும்புகை போல அலைந்தது அவனது மனம். யார்தான் யாரைக் கவனிக்க முடியும். கிழவர் மயக்கமாகக் கிடப்பது இவ்விடத் தில் ஒன்றும் புதிய விசயமல்ல. ‘இதுவும் சர்வ சாதாரணம்தான்’ என்கிற ஒரு நிலையிலே இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்களெல்லாம் வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிற மாதிரி இருந்து கொண்டிருந்தார்கள். “டேய் ஓட்டங் காட்டினியெண்டா அடிப்பன் உனக்கு..” என்று சொல்லிக் கொண்டு தன் சின்ன மகனை கக்கத்தில் தூக்கிக் கொண்டு அவனுக்குப் பக்கத்தாலே போனாள் ஒருத்தி. கொஞ்சம் அவனுக்குத் தொலை வில் போய் அவள் இருந்து கொண்டு “ராசா இப்படி மடியில இருடா பிள்ள...” என்று சொல்லிக் கொண்டு பிள்ளையை இருக்கவைத்து பின்பு குழந்தையை உச்சி மோர்ந்து முத்தமிட்டாள் அவள்.

அதை இவன் பார்த்துவிட்டு... “வரம் வாங்கி தவம் வாங்கிப் பெத்த ஆசை மகன் போல”என்று அந்தப் பிரச்சனையான வேளையிலும் தனக்குள் நினைத்துக் கொண்டான்.

மணி சற்றேறக் குறைய ஏழு மணி இருக்கும். எப்போது நான் சோர்ந்து மயக்கமானேன் என்பது எனக்கு நிச்சயமாத் தெரியவில்லை என்ற பார்வை யோடு கிழவர் கண் முழித்துவிட்டார். அவனுக்கு நெஞ்சுக்குள் தண்ணீர் வந்த மாதிரியாக நிம்மதி யாக இருந்தது. கிழவரை படுத்து இருக்கும்படி சொல்லி சால்வையை விரித்து அதிலே அவரை கிடத்திவிட்டு, விறைத்துப் போன காலை பழைய நிலைக்கு கொண்டுவர நினைத்து எழுந்து நின்றான். நடந்தால் தேவலை போல அவனுக்கு இருந்தது. இந்தச் சனக்கூட்டத்தில் எங்கேதான் அவனுக்கு நடக்க இடம் இருக்கிறது. என்றாலும் நடந்துதான் ஆகவேண்டும் என்ற மாதிரியாக உடம்பு உளைந் தது. அதனால் மெல்ல மெல்ல அதற்குள் நடக்க வெளிக்கிட்டான். சேற்றில் புதைத்த காலைப் பிடுங்கி நாற்றுக்களை மிதித்திடாமல் நடப்பது போல சனங்களுக்குள்ளாக கவனமாக நடந்து போய்விட்டு வந்தான் அவன்.

தன் இடத்துக்கு வந்தும் கையை உதறி உளைவு எடுத்துவிட்டு பின்பு தான் இருந்த இடத்திலேயே மீண்டும் குந்தினான். “முன்னமெல்லாம் எப்படி இருந்தது எங்களிண்ட இந்த ஊர்” என்று நினைக் கையில் அவனுக்குப் பார்வை மறைத்து வழிந் தோடியது கண்ணீர். அது மறைவதற்காகக் கண் களை இறுக்கி அவன் மூடிக்கொண்டான். மறுபடி யும் சிந்தனை திடத்தைப் பெற அவன் முயன்று கொண்டிருந்தான்.

அன்றைய தினம் அவன் உணவு உண்ண வில்லை என்பதால் இரவில் சொட்டு உறக்கமும் அவனுக்கு வரவில்லை. ஒன்றும் அவன் குடிக்கவு மில்லை. கீழே சோர்வாக அவன் படுக்கவு மில்லை.

மணி சற்றேறக் குறைய பன்னிரண்டு மணியிருக் கும்! வினாடிகள் யுகங்களாக கடந்து கொண்டிருந்த அந்த வேளையில் அவனுக்கு தொய்வும் இழுக்கத் தொடங்கிவிட்டது. அவன் நெஞ்சை உருப் பெருக்கி இழுத்துக் கொண்டிருந்தது தொய்வு வருத்தம். அதனால் அமைதியற்ற பாழ் வெளியாய் நீண்டது அவனுக்கு அந்த இரவு.

வெளிச்சத்தின் சுவடே தெரியாமல் எங்கும் இருட்டு தலைவிரிகோலமாய்ப் பயமுறுத்திக் கொண்டிருந்த இரவு கலைந்துபோய் விடிந்தது. பாரமுள்ள தலைச் சுமையோடு நடப்பது போல, இரவு நித்திரையில்லாமல் கிடந்த அவர்களெல் லாம் எழுந்து தள்ளாடியவாறு அது வழியே நடந்து கொண்டிருந்தார்கள். வளைக்குள் இருந்து எட்டிப் பார்க்கும் நண்டாக அவர்களிலேயுள்ள சில பேர் களின் முகங்கள் இருந்தன.

காலை வெயில் ‘சுருசுரு’வென்று கடுமை காட்டத் தொடங்கியிருந்தது. என்ன செய்யலாம் என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். ஏதோ மூளைக்குள் பழுதாகிவிட்டது மாதிரியாக இவனுக்கு இருந்தது. வாய் முணுமுணுக்க பித்துப் பிடித்தவன் மாதிரி இருந்துவிட்டு எழுந்து கொஞ்சத் தூரம் பிறகு கஷ்டப்பட்டு அவன் நடந்து போனான். நடக்க நடக்க அவனது மனவேகம் அதிகரித்தது ஏதோ அபாயமென்று அவனுக்கு உள் உணர்வுகள் கூறுவது மாதிரியாக இருந்தன.

ஒரு சின்ன மரத்தில் பூங்குட்டியாக இருக்கும் அணில் குட்டி தாயுடன் இருந்து கத்திக் கொண் டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. அதே நேரம் தான் சீறிக்கொண்டுவந்து அவன் முன்பு இருந்த இடத் தில் விழுந்து வெடித்தது செல். எங்கும் புகை! புகை மண்டலமாகவே எல்லா இடமும் பார்க்கக் கிடந்தன. அவனுக்கு ஒரு கணம் கண்களைத் திறந்து அந்தப்பக்கமாகவே பார்க்கவே முடியாமல் இருந் தது. செல் விழுந்த இடத்தில் மாரடித்துக் கதறிய மாதிரி கத்தியழும் குரல் கேட்டது, “ஐயோ என்ர பிள்ள... என்ற அம்மாவே..”

அவனுக்கு உடலெல்லாம் நடுங்கியது. மரண தேவதையின் சுவாச உஷ்ணம் அவனைத் தகித்தது. துடைப்பக்கம் குளிர்ந்தமாதிரி இருந்தது. குனிந்து பார்த்தான். செல்துண்டு வெட்டிய சிராய்ப்புக் காயந்தான்! அவன் அதைப் பொருட்படுத்தாமல் முன்பு தான் இருந்து கொண்டிருந்த இடத்துக்கு நொண்டி நொண்டி நடந்து போனான். அங்கே செல் விழுந்த இடத்தில் சில உடல்களை அவனுக்கு முழுதாகப் பார்க்க முடியவில்லை. சில உடல்கள் முண்டமாகக்கிடந்தன. அந்தப் பெரியவர் எங்கே..? அவர் எங்கே...? அவனது கண்களில் நீர் கோர்த்தது. கண்ணீர் வழிந்தது. ஒரு மாதத்திற்கு முன்பு செல் பட்டு செத்துப்போன தன் பாட்டனின் நினைவோடு அவன் குலுங்கி குலுங்கி அழத் துவங்கினான்.

Pin It