“நந்தன் கதையை

மீண்டும் மீண்டும் சொல்லும்போது

அம்மக்கள் அவமானம் அடைகிறார்கள்...”

 

செம்மலர் (ஜூலை 2010) இதழில் தில்லை வாழ் தீண்டாமைச் சுவர் என்னும் தலைப்பில் சோழ.நாகராஜன் எழுதிய கட்டுரை வெளியாகி யிருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சிதம்பரம் நடராஜர் கோயிலின் தெற்குவாசலை அகற்றக்கோரும் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதையும், அப் போராட்ட காரணமாகிய சுவர் பற்றிய புரிதலை முன்வைப்பதாகவும் அக்கட்டுரை விளங்குகிறது.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற தனி யான துணை நிலை அமைப்பை கடந்த சில ஆண்டு களுக்கு முன் உருவாக்கிய காரணம், அவை முன் னெடுக்கும் தீண்டாமை பிரச்சினைகளின் தன்மை கள் குறித்து விமர்சனங்கள் இருந்த போதிலும் அடிப்படையில் சிபிஎம் -கட்சியின் இவ்வகை போராட்டங்களை ஆதரிக்கும் நோக்கு எம்மிட முண்டு. அந்த வகையில் தீண்டாமை செயல்படும் எந்த வடிவத்தையும் எதிர்க்க வேண்டியது அனைவ ரின் கடமையே. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீண்டாமைச் சுவருக்கு எதிரான போராட்டமும் வரவேற்கத்தக்கதே. ஆனால், பிரச்சினை அதில்லை. தீண்டாமை சுவர் குறித்து நீங்கள் உருவாக்கி கொண்டிருக்கும் புரிதல் சார்ந்து தான் எம் விளக்கம்.

சிதம்பரம் நடராஜர் ஆலயம், நந்தனின் வரலாறு குறித்து எழுதும்போது அவை சார்ந்த பல தரப்பு செய்திகளையும் கணக்கில் கொண்டு அவை களிலிருந்து உங்கள் புரிதலை உருவாக்கியிருக்க வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.

நந்தன் என்ற தலித், ஓர் அடிமை என்பதே பொதுபுத்தி சார்ந்த நம்பிக்கை. புராணங்களாலும், கதைகளாலும் தொடர்ந்து பரப்பப்பட்டு நம்ப வைக்கப்பட்ட நம்பிக்கையே அது. எனவே நாம் எதிர்கொள்ளும் நந்தன் பற்றிய கதையும் அவ் வகைப்பட்டதே.

நந்தன் ஒர் அடிமை என்ற நம்பிக்கைக்கு மாறாக அல்லது இணையாக நந்தனை மன்னனாக கருதும் நம்பிக்கையும் நம் சமூகத்தில் இருந்துள்ளது. நந்தனை அடிமையாகக் கருதும் நம்பிக்கையை மட்டுமே எழுத்து சார் ஆவணமாக மாற்றிவிட்ட காரணத்தால் அது மட்டுமே நிலைத்து விட்டது. அவனை அடிமையாக கூறும் எழுத்து ஆவணம் மட்டுமே அப்போது மேலாண்மை பெற்றிருந்த சமயத்திற்கு தேவையானதாக இருந்திருக்கிறது. வாய்மொழி ஆதாரத்தை எழுத்து சார் ஆவணத் திற்கு எதிராக முன்வைத்து அதிகார மேலாண்மை யை கட்டுடைத்து புரிந்து கொள்ள வேண்டிய நம் காலத்திற்கு இப்புரிதல் வேண்டும்.

நந்தனை மன்னனாக கூறுவது பல சாதி களும் சாதிப்பெருமை கருதி ‘முன்னெடுக்கும்’ ஆண்ட பரம்பரைக் கதைதான் என்பதாக கருதி குறுக்கிவிட வேண்டாம். பறையர் உள்ளிட்ட கீழ்நிலையாக்கப்பட்ட பல்வேறு சாதிகள் குறித்தும் இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட இழிகதை களை நாம் அவை எழுதப்பட்ட காலம், நோக்கம், பரப்பப்பட்ட விதம் சார்ந்து கவனமாக ஆய்வு செய்து பார்க்க வேண்டும். மற்றபடி கதையின் நிகழ்கால வடிவத்தை அப்படியே ஒத்துக் கொண்டு செயற்படுவது அக்கதையை உருவாக்கியவர்களின் நோக்கத்தை நிறைவு செய்து விடுவதாக மாறி விடுகிறது. நந்தன் என்னும் பறையனின் கதையை ஆய்வு செய்யும்போது அதில் சாதி, பறையர் வகுப்பாரின் சமூக நிலைமை மாற்றப்பட்ட விதம் ஆகியவற்றையும் நாம் சந்திக்கிறோம்.

நந்தனை அடிமையாக புனைந்த கதைக்கு இணையாக கோயில் சிற்பங்களும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. பெரிய புராணத்தின் கால மும், இப்புனைவை காட்டும் திருப்புன்கூர் அடை யாளங்களும் பிற்காலத்தவையேயாகும். இதை யெல்லாம் கூறும் ஆதாரங்கள் கிடைக்கின்றன. மேலும், சாதிமுறையின் காலம், பெரிய புராணம் என்னும் பிரதியின் காலம் பற்றிய ஆய்வுகள் மீது மறுவெளிச்சம் பாய்ச்ச வேண்டியுள்ளது.

நந்தன் பற்றிய புதிய வரலாற்றை தரும் அயோத்திதாசரின் எழுத்துகள், ரவிக்குமாரின் நந்தனின் அறியப்படாத வரலாறு, சுந்தர்காளியின் கட்டுரை, நான் புதிய ஆராய்ச்சி இதழில் எழுதிய கட்டுரை, என் கட்டுரையை உருவி தன் கட்டுரை யாக எழுதிய ஈரோடு தங்கவேலின் நந்தனில் எத்தனை நந்தனடி (புது விசை) கட்டுரை ஆகிய பதிவுகள் நந்தனைக்குறித்து புதிய தரவுகளோடு எழுதப்பட்டு அண்மையில் வெளியாகியுள்ளன. இவை தரும் பார்வைகளோடும் உங்கள் பார்வை இணைத்து பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.  அதை விடுத்து பழைய ‘வரலாறு’தான் இன்றைய தலித் சேவைக்கு பயன்படும் என்று எடுத்துக் கொண்டிருக் கிறீர்களா?

நந்தன் பற்றிய புதிய வரலாற்றுத் தரவுகளின் பின்னணியில் கோயில் சுவர் மட்டுமல்ல சிதம்பரம் போன்ற பல கோயில்களே தலித்துகளுக்கு உரிமை கொண்டவையாக இருக்கின்றன. இதையெல்லாம் மறைப்பதற்காகவே பொய்க்கதைகளை உற்பத்தி செய்து இம்மக்கள் இழிவானவர்கள் ஏதுமற்ற வர்கள் என்னும் ‘உண்மை’யை உறுதிப்படுத்தி யுள்ளனர். இக்கருத்துகளை பிறர் மட்டுமல்ல தலித்துகளும்கூட ஏற்றுக்கொண்டு தாங்கள் இயல்பிலேயே இழிவானவர்கள் தாம் என்று ஒப்புக்கொள்கின்றனர். நந்தன் கதை அந்த நோக்கில் எழுதப்பட்டவையே. கருத்துகள் மக்களை இறுக பற்றும் போது அது பௌதீக சக்தியாகி விடுகிறது என்ற காரல் மார்க்ஸ், ஆதிக்கத்தை தக்கவைப்பதில் கருத்தியலுக்குள்ள பங்கை பேசிய கிராம்ஷியின் பார்வை வழியேயும் இதை பரிசீலித்து பார்க்க முடியும். நந்தன் குறித்த பழைய கதையை ஒப்புக் கொள்ளுவதன் மூலம் நாம் அவர்கள் குறித்த இழிவான சித்திரத்தையும் ஏற்பவர்களாகி விடுகிறோம்.

மார்க்சிஸ்டுகள் எல்லாவற்றையும் கடைசி யாகத்தான் கண்டுகொள்வார்கள் என்ற பொது வான விமர்சனம் உண்டு. அதனை மெய்பிக்கும் வகையில் நந்தன் வழியாக சாதி குறித்து எழுந்துள்ள புதிய பார்வைகளை இப்போது புறந்தள்ளிவிட்டு பிற்காலத்தில் ஓடிச்சென்று பேசவேண்டாம். மேலும் சிதம்பரம் சுவர் தொடர்பான போராட்டத் தினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடந்த காலத்தில் நடத்தி ‘வழக்கம்போல்’ தற்போது விட்டுவிட்டது. எனினும் அக்கட்சியும் போராடியது என்பதை ஒரு தகவலாக இங்கே பதிவு செய்கிறேன்.

சோழ.நாகராஜனின் செம்மலர் கட்டுரை முடியும் போது சில வாக்கியங்களே சொல்கிறது. அவை: “அந்த மக்கள் அங்கே அந்தச் சுவரை கண்ணால் பார்க்கிறபோதெல்லாம் இது நம்முன்னோர் வழி வந்த நந்தன் நுழைந்ததால் தீட்டுப்பட்டு விட்டதென்று அடைக்கப்பட்ட வழிதானே என்ற எண்ணம் தோன்றுமே. அது அவர்களை குற்ற உணர்வு கொள்ளச் செய்யுமே...” என்கிறார். அவமானமும் - குற்ற உணர்வும் அந்த சுவரில் மட்டுமல்ல. அந்த கதையை மீண்டும் மீண்டும் வெவ்வேறு முறையில் சொல்லும் போதும் அம்மக்கள் அவமானம் அடைகிறார்கள். ஏனெனில் அக்கதை அம்மக்களை இழிவாகவே பார்க்க கற்றுத் தருகிறது. திருத்திக் கொள்வோம் அந்த வரலாற்றுத் தவறை என்னும் தலைப்பை நம்மை நோக்கியும் திருப்பிபார்க்க வேண்டிய காலம் இது.

- ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை.

 

ஸ்டாலின் ராஜாங்கத்தின் எதிர்வினைக்கு ஒரு பதில்

நாயன்மார்களில் ஒருவராக வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள ‘திருநாளைப்போவார்’ என்ற நந்தனார் மிகச் சிறந்த சிவபக்தர் என்று அறியப் பட்டிருக்கிறார். சிவபெருமானை தரிசிப்பதற்காக ஹோமக்குளம் எனும் அக்கினிக்குண்டத்தில் இறங்கி, பூணூல் அணிந்த பிராமணராக வெளிப்பட்டு, சிவஜோதியில் ஐக்கியமானவர் என்பது மாதிரி பக்திப் பரவசமிக்க புனைவுப் படுதாக்களை விலக்கி விட்டு, யதார்த்தத்தைத் தேடினால் .... அதுவேறு கதையாக இருக்கிறது.

ஆலயத்தில் நுழையக் கூடாதவர்களுக் காகவே ‘கோபுர தரிசனம்’ என்ற சொல் உலவியது. சேரியில் ஊர்த் தலைவராக வாழ்ந்த நந்தன் பண்ணையடிமையாக நெல் வயலில் உழைத்தவர். ஆலயத்திற்கும் பூஜைக்கும் தேவையான தோல் சார்ந்த உபகரணங்களை உருவாக்கித் தருவது அவரது கடமை. கோபுர தரிசனத்திலேயே ஆயுள் கரைந்த நந்தனுக்கு ஆலயத்துக்குள் சிவனை தரிசிக்க ஆசை. தனது கைபட்டுச் செய்யப்பட்ட உபகரணங் கள் ஆலயத்திற்குள் நுழைகிறபோது-தான் நுழையக் கூடாதா? தான் மட்டும் தீட்டா?

உபகரணங்கள் போகிற அதே வாசல் வழி யாக அவரும் போக... ஆலயம் தீட்டாகிவிட்டதே  என்று அந்தணர்கள் ஆர்ப்பரிக்க நெருப்புக் குண்டத் தில் தள்ளி அவரைச் சம்பலாக்கி  விட்டனர். உயிரு டன் நெருப்பில் துடித்தது மனித உயிர்.

கொலைசெய்த குற்றத்தை மறைக்க, ‘சிவ ஜோதியில் ஐக்யம்’ என்ற புனைவை உருவாக்கி நாயன்மாராக உயர்த்தி, குற்றத்தை மறைத்துக் கொள்கின்றனர். மனுதர்ம சாதியவாதத்தின் தத்துவச் சித்து  இது.

இந்த சாதியாதிக்க மதவாதத்தின் குற்றத்தை மறுவிசாரணை செய்கிறது தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி. இதில் ஸ்டாலின் ராஜாங்கத் துக்கு என்ன சங்கடம்? எதற்கிந்த நீண்ட எதிர் வினை?

எஸ்.ஜி. ரமேஷ்பாபு திரட்டிய ‘நந்தன் ஒரு மன்னன்’ என்பது உள்ளிட்ட பல்வேறு கதைகளைச் சென்ற செம்மலர் இதழிலேயே வெளியிட்டிருக் கிறோம். திறந்த மனதோடும் அகன்ற பார்வை யோடும்தான் செம்மலர் இயங்குகிறது. முன் முடிவுகளின்றி அதை ஸ்டாலின் ராஜாங்கம் போன்றவர்கள் அங்கீகரிக்க வேண்டும்.

“மார்க்சிஸ்டுகள் எல்லாவற்றையும் கடைசி யாகத்தான் கண்டு கொள்வார்கள் என்ற பொது வான விமர்சனம் உண்டு” எனும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் தேவையற்ற இந்த வரிப்பிரயோகத் தின் அரசியல் என்ன?

இடிப்பது பிரச்சனை இல்லை. அதை தீண்டாமை ஒழிப்பு முன்னணி முன்னெடுத்துச் செய்வதுதான் ஒரு வேளை அவரின் பிரச் சனையோ என்கிற ஐயப்பாடு நமக்கு எழுகிறது.

நாலுமூலைக்கிணறு, உத்தப்புரம், காங்கிய னூர், அருந்ததியர் பிரச்சனைபோல அவர்கள் இறுதிவரை போராடுவார்கள் - பிறரைப்போல பாதியில் விட்டுவிட்டு ஓட மாட்டார்கள் என்பதை யும் ஸ்டாலின் ராஜாங்கம் குறிப்பிட்டிருந்தால் நேர்மையாக இருந்திருக்கும்.

தனது கட்டுரையை அப்படியே உருவி புது விசையில் ஈரோடு தங்கவேல் எழுதிய கட்டுரை யாகப் பிரசுரம் செய்ததாக இப்போது குமுறுகிற ராஜாங்கம், அப்போதே புதுவிசைக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்திருக்கலாமே! ஆறப் போட்டுவிட்டு, இப்போது ஏன் அதைக் கிளப்ப வேண்டும்?

கண்ணால் பார்க்கிற தலித்களை இந்தச் சுவர் குற்ற உணர்வு கொள்ளச் செய்யுமே என்று சோழ. நாகராஜன் செம்மலர் கட்டுரையின்  முடிவில் எழுதியுள்ளதாகக் குறிப்பிடுகிறார் தனது இந்த எதிர்வினையில் ஸ்டாலின் ராஜாங்கம். அந்தக் கட்டுரையின் முடிவில் “அது அவர்களை அவமான உணர்வுகொள்ளச் செய்யுமே...” என்றுதான் உள்ளது. குற்ற உணர்வு என்ற சொல்லே அங்கு இல்லை.

கோபுர தரிசன எல்லை தாண்டி நுழைந்த நந்தனின் காலடிபட்டதால் தீட்டுப்பட்டுவிட்ட தாகச் சொல்லி சிதம்பர ஆலயத்தின் தென்திசை வாசல் அடைக்கப்பட்டு தீரா அவமானச் சின்ன மாக உள்ள அந்தச் சுவர் ‘இடிக்கப்பட வேண்டும்’ என்கிற அறைகூவலை ராஜாங்கம் ஏற்கிறாரா- மறுக்கிறாரா என்பதைத் தெளிவாகக் கூறாதது ஏன்?

-ஆசிரியர் குழு

Pin It