நாட்டுப்புறக் கதை

ஒரு நா ஒரு பொழுது போல கடவுளும் அவரு பெண்சாதியும் சாவகாசமா உக்காந்து நாலா விபரமும் பேசிக்கிட்டிருந்தாங்க. அப்பொ புருசனைப் பாத்து அந்த அம்மா ஒரு சந்தேகங் கேட்டா. “இந்தா பாரும் ஒம்மத்தானே! வெகுநாளா ஒம்மளிடத்துல ஒரு வெகரங் கேக்கணுமின்னு நெனச்சிக்கிட்டேயிருப்பேன். அந்த மானக்கி அந்த வேல இந்த வேலன்னு அந்த அரப்பு பரப்புல கேக்க அயத்து அயத்து போயிருவேன். நல்ல வேளையா இப்பொ யாபகம் வந்தது. இந்த உலகத்துல எவ்வளவோ சீவராசிகளை படைச்சிருக்கீரு. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புத்தியிருக்கு. யானையா அதுக்கொரு உருவம் ஒரு குணம். பூனையா அதுக்கொரு உருவம் ஒரு குணம் நாய்க்கொரு குணம். நரிக்கொரு குணம். இப்படி எல்லா உசுப்பிராணியும்  அததான குணத்தோட அலையும் போது இந்த மனுசப்பிறவி மட்டும் ஏன் பல புத்தியில அலையுறான்? அவனப் படைச்ச நேரம் நீரு ஒரு புத்தியில இல்லையா?”அப்படீன்னு கேட்டா. அதுக்கு பகவான் சிரிச்சுக்கிட்டே, “எல்லாம் ஆசைக் கோளாறுதான். அவனோட பேராசையினால அவனுக்கு அப்படி லபிச்சிருக்கு. அதுக்கு இருக் கிறவனை குறைபேசி என்ன செய்ய!” அப்படீன்னு தாம்மேல எந்தக் கொறவும் இல்லேங்கிற மாதிரி நல்லா நீட்டி உட்கார்ந்தார்.

“அது என்ன? கொஞ்சம் விபரமாச் சொல் லும் கேப்போம்!” அந்த அம்மாவும் நல்லா சுவத்துல சாயுமானங் கொடுத்து கதையைக் கேக்க ஆரம்பிச்சா.

“உலக ஜீவராசிக்கு பூராவும் அதோட இருப்பிடம் வாழ்வாதாரம் அததோட தராதரத் துக்கு தகுந்த மாதிரி ஆயுளையும் குணமணத்தையும் கொடுத்தேன். எல்லா உசுப்பிராணியும் மறுபேச்சு பேசாம வரத்தை வாங்கிட்டு போனதுக. இந்த மனுசப் பயலுக்கு மாத்திரம் பாத்துக்கோ அதிலே ஒரு திருப்தியே இல்லை.

மனுசப்பிறவி பிறந்தாம் பிறவிகள்லயே ரொம்ப சுகமான பிறவியாச்சா. இருக்கிற மத்த ஜந்துக்களைப் பூராவும் தனக்குக் கீழே வச்சு ஆண்டு சுகங்கண்டு பூலோக இன்பத்தையெல்லாம் முழுக்க முழுக்க அனுபவிச்சவனாச்சா? அதனால இந்த உலகத்துலகூட கொஞ்ச காலம் வாழ்ந்தா நல்லாயிருக்குமேன்னு நெனச்சான்.

சரிசரி என்ன செய்ய ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தான் வெப்பான் நாம ஆசைப் பட்டு என்ன செய்ய அப்படீன்னு மேப்பேச்சுத்தான் பேசுனானேயொழிய மனசுக்குள்ள இந்த உலகத்தை விட்டு பொசுக்குன்னு சாகிறதுங்கிறது அவனுக்கு சம்மதமில்லே. கிடந்து உதைஞ்சுக்கிட்டு இருந்தான்.

அன்னைக்கும் இப்படித்தான் எல்லா வேலை வெட்டியையும் முடிச்சி இப்படி அக் கடான்னு உக்காந்திருக்கும்போது இந்த நாய்ப் பிறவி இருக்கே நாயி அது என் காலை சுத்தி சுத்தி வந்து ஊழ் ஊழ்ன்னு ஊளையிட்டு கும்பிடு ஒண்ணு போட்டு, சாமி பகவானே இது உங்களுக்கே நல்லா இருக்கா நான் எடுத்துக்கிறதெல்லாம் ஒரு ஜென்மமா? இது ஒரு பிறவியா? தெருத்தெருவா திரியுற எச்சக்கல பொழப்பு.

எப்படா எந்த வீட்டுலருந்து மிச்சம் மீதி விழுகும்ன்னு தொட்டிப் பக்கமா கிடக்க வேண்டி யிருக்கு. சொத்துன்னு ஒத்த எச்சிலை விழுகவும் எத்தனை நாய்க போட்டிக்கு. அதோடயா என்னொத்த பிறநாய்க நான் மொதக் கொண்டு வேற பிறவிகளைப் பாத்தா வாலை வாலை ஆட்டுறதும் பக்கத்துல போயி முகர்ந்து பார்த்து குலையுறதும் ஆன சக இனமான நாய்களைக் கண்டாமட்டும் அந்தமானக்கி பாய்ஞ்சி விழுந்து கடிச்சுக் குதறி ஒரே மல்லுக்கட்டுல நிக்கிறாப்புல இருக்கு. ஏன் இந்தப் புத்தி? ரோட்டில போயிட் டிருக்கும்போது இந்த லாரிக்காரன் எங்களை மதிச்சு பிரேக்குல கால் வைக்கிறதே கிடையாது. அந்த மட்டுல ஏத்திர்றான். நசுங்கி குடல் வேற குந்தாணி  வேறயா கிடக்கோம்.

ஆண்டவா உனக்கு புண்ணியமாப் போகும். இப்படி சீரழியுற இந்தப் பிறவிக்கு இத்தனை வருச ஆயுள் வேண்டாம், அதை பாதியா குறைச்சிருங் கன்னு சொல்லி மன்றாடுனது. ஐயோ பாவமேன்னு அதோட ஆயுளை பாதியா குறைச்சுப்புட்டேன்.   இதை எப்படியோ அறிஞ்சு பக்கத்துல ஒளிஞ்சு நின்னு கேட்டுக்கிட்டிருந்த மனுசப்பயல், கடவுளே கடவுளே அந்த நாய்க்கு குறைச்ச அந்த ஆயுளை எனக்கு கொடுத்திருங்க தெய்வமே” ன்னு கெஞ்சு கெஞ்சுனான். அதுவுஞ் சரித்தான்னு அதை மனுசன் ஆயுளோட சேத்துட்டேன்.

கொஞ்ச காலம் போச்சு. ஒரு கழுதை ஒண்ணு ரொம்ப வருத்தமா வதங்கிப் போயி மெல்ல நடந்து வந்து என்னைப் பாத்து “கும்பிடு தேன் தெய்வமே”ன்னு, மண்டி போட்டு எழுந்தி ருச்சது. இருக்கட்டும் இருக் கட்டும் என்ன விஷயம்ன்னேன். “ஏ ஆண்டவனே! எனக்கு நாம் பொழைக்கிற பொழப்புக்கு இத்தனை வருச ஆயுள் வேணுமாக்கும். சுமைன்னா சுமையா!  நிதாசரியும் அழுக்குத் துணியை சுமந்து கொண்டு போயி ஆத்துல போடணும். அப்படியும் பிறகு சுதந்திரமா கொஞ்சநேரம் ஆத்துல திரிய முடியுதா? முன்னந்திங்கால் ரெண்டையும் சேத்து கட்டி விட்டுர்றான். அதோட தாவித் தாவிப் போயி அந்த வாயிக்கெட்டாத கரடுகளை மேய்ஞ்சு வயித்துப் பாட்டுக்கு பாக்க வேண்டியிருக்கு.

சாயங்காலம் திரும்பும்போது உவர்மண் ரெண்டாள் சுமைக்கு முதுகில ஏத்தி அதுக்குமேல துவைச்ச துணி உருப்படிகளை பொதியா கட்டி என் குறுக்கு ஒடிய ‘பொட்டுலுபட்டி கழுதைக்கு போக வரச் சுமை’ன்னு சொலவம் சொல்லுற சாடைக்கு நான் கிடந்து சீரழியுறேன். எல்லாம் அறிஞ்ச பகவானே! என் வாணாள்ல பாதியை குறைச்சி இந்தக் கட்டைக்கு விடுதலை கொடுக்கணும்ன் னுச்சி. அடப்பாவமே சரி சரி அப்படியே ஆகட் டும்ன்னேன்.

எப்படான்னு காத்துக்கிட்டிருந்த மாதிரி திடீர்ன்னு மனுசன் வந்து எதுக்கே நட்டுக்குத்தலா நின்னுக்கிட்டு “சாமி சாமி அந்த கழுதைக்கு கொறைச்ச ஆயுளை எனக்குத் தந்திடுங்க சாமி” ன்னான். பிறகென்ன செய்ய சரி கழுதைய வச்சுக் கிட்டுப் போன்னுட்டேன்.

பிறகொரு சமயம் இந்த குரங்கு வந்துச்சி. ரெண்டு கையையும் கும்புட்டாப்புல வந்து நெடுஞ் சாயலா விழுந்து “ஏ எல்லாம் வல்லவரே இதுஉமக்குத் தகுமா? நான் பிழைக்கிறது ஒரு பிழைப்பா. நாலு விரக்கிடை வயித்தக் கழுவ எத்தனை மரம் எத்தனை கொப்பு தாவுறது? எங்களுக்குள்ள ஒத்துமையா இருந்தாலும் கோயில் குளம்ன்னு வர்ற துட்டுப் பெருத்த மனுசங்க ஒத்த ரூபாய்க்கு பட்டாணிய வாங்கி அதை தரையில சிதறி விட்டு எங்க கையில ஒவ்வொரு  தடியைக் கொடுத்திர்றான். நாங்க ஒண்ணோட ஒண்ணு அடிச்சி மண்டைகளை உடைச்சி அதை பெறக்கி யுந் திங்காம சீரழிஞ்சு செங்கச் சுமந்து பொழப் பாயிருக்கு. இப்படி மரமேறி கிளைகிளையா தாவுற இந்த ஆக்கங்கெட்டபொழப்புக்கு இவ் வளவு ஆயுசு வேண்டாஞ்சாமி இதுல பாதி வாழ்ந்தா போதும் ஆயுசை குறைச்சிடுங்க சாமின்னது.

எனக்கு நியாயமாப்பட்டது. சரீன்னதுதான் தாம்சம் இந்தா அப்பவும் வந்துட்டானே இந்த மனுசப்பயல். ஐயா ஐயா அதையும் என் ஆயுள்ல சேத்திருக்கோன்ன பின் மனுசனோட ஆயுள் இப்போ ரொம்ப கெட்டியாகிப் போச்சு இந்த மனுசனப் பாரு ஆரம்பத்துல காதல், கல்யாணம், குழந்தைன்னு - சொல்லி முடியாத சந்தோசத்துல   இருப்பான். அவனுக்கு கொடுத்த ஆயுள்ல அவன் மொதல்ல இருந்து கடைசி வரைக்கும் சந்தோச மாவே இருக்கும் படியாத்தான் வச்சிருந்தேன். என்ன செய்ய அவன் அவனா தேடிக்கிட்ட வினை. நாப்பது வயசு போல நாயோட ஆயுள் அவனுக்கு ஆரம்பமாகுது. நாய்க் குணத்தை காட்ட ஆரம்பிச் சிருவான்.

மனுசன் மூஞ்சிக்கு நேரா நின்னு பேச முடியும்ங்கிறே? வீட்டுல பெண்டாட்டிக்கும் நாப்பது ஆகிருச்சுன்னு வச்சுக்கோ. பக்கத்து வீட்டுல மனுசர்கள் குடியிருந்த மாதிரி தான். பஸ்ஸில டிக்கட் எடுக்கும்போது, ஆட்டோவில போகும்போது, ரேசன் கடையில, பால்  பூத்துல, வேலை பாக்குற ஆபீஸ்ல சகமனுசர்க்கு வயசு கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா பரவாயில்லே அதே நாப்பதுல அவனும் இருந்தா? விடிஞ்சதுல இருந்து அடையுற வரைக்கும் வள்ளு வள்ளுன்னு நம்ம செவி கிழிஞ்சி போகும். முக்காலும் தெருச் சண்டைதான்.

கொஞ்ச வருசத்துக்குப்பிறகு கழுதை ஆயுள் வந்திரும். பிள்ளைகள் காலேஜ் படிப்புக்கு பீஸ் கட்டணும். பொம்பளைப்புள்ளைக்கு கல்யாணம், நகை நட்டு சீர்செனத்திகள் செய்யணும். வீட்டுக் காரிக்கு ஆஸ்பத்திரி செலவு, நல்லது பொல்லது ஊருக்குள்ள கலந்துக்கிடணும். பெரிசுகளைக் கவனிக்கணும். கூடப்பிறந்ததுகளை கரையேத் தணும் எல்லாச் சுமையும் இவன் தலையில தான். கஞ்சி குடிச்சுங் குடியாம காலையிலிருந்து அடையிற வரைக்கும் ஓடி ஓடி அசந்து போவான். பிரச்சனையோ பிரச்னை. கடைசியில்

செத்த கழுதை மேல எத்தனை கழுதை ஏறுனா என்ன...

பாரந்தாங்காமல் பரிதாபமாய் விழுந்து கிடப்பான்.

இப்போ குரங்கு ஆயுள் காலம். பொம்பளை பிள்ளைகளை கரையேத்தியாச்சு. பையன்களை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்து அவன வன் தனித்தனியா குடும்பமா யிட்டான். வீட்டுல ஆச்சியும் ஐயரும் ரெண்டு பேர் தான். அப்படியே மூத்தவங்கிட்டே போயிட்டு வருவோம்.’ அங்கெ ஒரு ஆறுமாசம். மருமகள் கிட்டே தகராறு. நடுவுளவன் வீடு. அந்த மருமகள் கிட்டே ரெண்டு மாசத்துல சண்டை. சின்ன மருமகள் குணம் வாய்க் காது. வா நாம அங்கே போயிடுவோம்.

அங்கே கொஞ்ச நாள்ல ‘உங்கிட்டெ ஒரு வாய் சோறு சாப்பிட இவ்வளவு கேவலப்படு றதுக்கு எம்மகள் வீட்டுல போய் நாங்க ராசா ராணியா நல்லா உக்காந்து சாப்பிடுவோம். கிளம் புங்க அங்கே போவோம்.’ அங்கே கொஞ்ச நாள்ல, ‘ஒம்புருசன் மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்டு திரி யுறான் நாங்க வந்தது புடிக்கலைன்னா சொல்ல வேண்டியதானே எம் மூத்த மருமவா எங்களை தாங்கு தாங்குன்னு தாங்குவா. அவுக ரெண்டு பேரும் குணத்துல சொக்கத் தங்கமில்லே புறப்படு போவோம்’ - இப்படியே அங்கேயும் இங்கேயும் தாவிக்கிட்டே திரியிறாங்க.”

கடவுள் சொல்றதைக் கேட்டு மொகவாயில கை வச்சமட்டுல கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்தா பெண்சாதிக் கடவுள்.

Pin It