அவர்கள் அரசிடம் உழுது சாகுபடி செய்ய நிலம் கேட்கவில்லை; குடியிருக்க வீட்டடிமனை கேட்கவில்லை; கஷ்ட நிவாரணத்திற்காகக் கடன் உதவி கேட்கவில்லை. அந்த உத்தப்புரம் தலித் மக்கள் கேட்பதெல்லாம் வெயிலோ, மழையோ பேருந்து வரும் வரை காத்து நிற்க ஒரு பேருந்து நிழற்குடை; பாரம்பரியமாய்த் தொடரவேண்டிய அரசமர வழிபாட்டு உரிமை; அரசாங்கமே திறந்துவிட்ட எல்லாருக்குமான பொதுப் பாதையைத் தலித் மக்களும் முழுமையாய்ப் பயன்படுத்திக் கொள்ள உரிமை; தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் சுகாதாரக் கேடாகச் செல்லும் சாக்கடையை யாருக்கும் பாதிப்பில்லாதபடி வேறு பக்கம் திருப்பி விட்டுச் சுகாதாரம் பேணுதல் ஆகிய மனித உரிமை, சமூக நீதி சார்ந்த இந்த எளிய கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அரசும் மாவட்ட நிர்வாகமும் செய்கிற இழுத்தடிப்புகள்தான் எத்தனை ஆண்டுகள்... அளித்த வாக்குறுதி களையும் அளிக்கிற வாக்குறுதிகளையும் அமல் நடத்தாமல் கண்ணா மூச்சிக் காட்டுவதுதான் எத்தனை முறை...

தொடர் கோரிக்கை விண்ணப்பங்கள் - போராட்டங்கள் - சமாதானப் பேச்சு வார்த்தைகள் - ஏமாற்றங்கள் - மீண்டும் போராட்டம் - தடியடிகள் - ஊருக்குள் புகுந்து கைதுகள் - சிறைத்தண்டனைகள்... இவை உத்தப்புரம் தலித் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகிப்போயின.

அந்த மக்களின் அடிப்படை மனித உரிமைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி அண்மையில் மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீஸ் நடத்திய கொடூரமான - அநாகரிகமான தடியடித் தாக்குதலை தமிழகமே அறிந்து அதிர்ந்தது. தலைமை வகித்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்களும் அந்த அமைப்புகளின் ஊழியர்களும் பெண்களும் தலித் மக்களும் கடுமையாகத் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர்.

சமூக நீதிப் போராளி பெரியாரின் வழித் தோன்றல் எனப் பெருமை  சாற்றிக் கொள்ளும் திமுக அரசு சமூக நீதிக்காகப் போராடியவர்களுக்கு வழங்கிய பரிசு இது!

மார்க்சிஸ்ட் தலைவர் டி.கே. ரங்கராஜன் உத்தப்புரத்தில் நிழற்குடை அமைப்பதற்காக அனுப்பிய தமது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியைக் கூட மாவட்ட நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களின்பால் இந்த அரசு காட்டும் அக்கறையின்மையை இது அப்பட்டமாக வெளிப்படுத்தியது. ஆதிக்க வகுப்பாரின் நலனுக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப வளைந்து கொடுக்கிறது அரசு நிர்வாகம். போராட்டங்களுக்குப்பின் பொதுப் பாதையைத் திறந்து விட்ட அரசு நிர்வாகமே அதை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை மேற் கொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? தமிழக அரசின் சமூக நீதி லட்சணத்திற்கு இன்று உத்தப்புரம் ஓர் உரைகல்லாகிவிட்டது.

அண்மையில் போலீஸின் கொடுந்தாக்குதலுக்குள்ளான பிறகும் அந்த மக்களுக்கான போராட்டம் மீண்டும் எழுகிறது! கோரிக்கை  விண்ணப்பமும் தொடர்கிறது. அரசும் நிர்வாகமும் ஆதிக்க வகுப் பாருக்கே வளைந்து போகுமென்றால் அப்புறம் சமூக நீதி எங்கே?

மனித உரிமைகளுக்கான போராட்டங்களும் எழுச்சியும் ஆட்சியாளர் களின் அடக்குமுறைகளால் அடங்கிப்போவதில்லை. இதை வரலாறுகள் சொல்லும். அதுதான் உத்தப்புரமும்!

Pin It