சிறுகதை எழுத்தாளராக அறியப்பட்டிருந்த காமுத்துரையிடமிருந்து 'முற்றாத இரவொன்றில்' என்ற சிறிய நாவல் வந்திருக்கிறது.

ஓடிப் போன காதல் தம்பதி தஞ்சமடைய இடமற்று, முன்னாள் மில் தொழிலாளியான சோனை முத்துவின் குடும்பத்தில் அடைக்கலமாகிறது. மகனை காப்பாற்ற பாசத்தால் துடிக்கிற மாயன் குடும்பத்தாரின் தவிப்பும் மகளை மட்டும் மீட்டெடுத்து கடத்திச் செல்ல, நாட்டாமை, அடியாள், பணம் எல்லாவற்றையும் பயன்படுத்துகிற பணக்காரியின் அத்துமீறல்களும், தொழிலாளியின் காதலுரிமைக்காக தலையிடுகிற சிவப்புத் துண்டு தோழர்களின் கூரிய திட்டமிடலும்தான் மொத்த நாவல். நிகழும் சம்பவங்கள் விறுவிறுப்பாக நகர்கின்றன. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று ஆர்வத்தை தூண்டுகிற சம்பவப் பின்னல்கள்.

ஒரே சாதிக்குள் நிகழ்கிற காதலுக்குள் வர்க்க முரண் பேருண்மையாக, கதையின் ஆன்மாவாக இயங்குகிறது.

சாதியே யில்லை என்றும் சொல்லிவிடவில்லை.

சோனைமுத்துவின் மனத்துணையாகவும், உடல் துணையாகவும் இருக்கிற வீருசின்னு என்ற தலித். அவளை அனுபவிக்கிற சோனைமுத்து, அவள் வீட்டுத் தண்ணீரை அருந்த மாட்டான். அவளது அண்ணனால் சோனைமுத்து வாசல்படியில் கால் வைக்க முடியவில்லை.

சாதியும் தீண்டாமையும் சமூக நிஜம் என்ற யதார்த்தத்தையும் உணர்த்துகிறது. வர்க்க முரணை முக்கியமான தாக்குகிறது. குடும்ப மனிதர்களின் உள்செயல்பாடுகளும், மனஓட்டங்களும், உள்வீட்டு நிகழ்வுகளும் நெஞ்சில் தைக்கிற மாதிரி அழுத்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. படைப்பாளியின் யதார்த்த வாத மொழி நடையும், மொழிப் பிரயோக ஆளுமையும் அதை சாத்தியப்படுத்துகிறது.

காமாட்சியம்மாளின் தாடகைத்தனமும், சித்திரம்பிள்ளையின் பயமும், மயிலின் பாசத்தவிப்பும், சோனைமுத்துவின் மன ஊசலாட்டமும், தோழர்களான குமார், முருகவேலின் அறிவார்ந்த சமூக அக்கறையும் மனசின் ஆழத்துக்குள் வேரடிக்கிற மாதிரியான எளிமையும் இயல்புமான மொழி நடைப் பிரயோகத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

வீருசின்னுவின் காதலும், காசுச் செலவும், உலக்கையுடன் காத்திருக்கிற வீரமும் அவளை உன்னத மனுசியாக்குகிறது, நாவல். வீரபத்திரனின் வட்டித்தொழில் அடாவடியும், பித்தலாட்ட ஆர்ப்பாட்டமும் அதை ஒரு தனித்துவமான பாத்திரமாக்குகிறது.

விறுவிறுப்பாக நகர்கிற காட்சிகள் எந்த இடத்திலும் யதார்த்த எல்லை மீறாமலிருப்பது ஒரு சிறப்பு.

நாவலின் கட்டமைப்பு கச்சிதம். ஒவ்வொரு அத்தியாயமும் துவங்குகிற இடம், ஒரு பழைய நிகழ்வின் தொடராக இருக்கிறது.

சிறிய நாவலாக இருந்தாலும் பெரிய வர்க்க உண்மையை சொல்லுகிறது. அட்டையும், அச்சும், வடிவமைப்பும் அழகுற செய்திருக்கிற பாரதி புத்தகாலயத்தை தாராளமாக பாராட்டலாம். ஒரு சில பிழைகளைத் தவிர்ப்பதில் கவனமும் செலுத்தியிருக்கலாம்.

விலை ரூ.60-

வெளியீடு:-

பாரதி புத்தகாலயம், 241, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18

Pin It