'என் எழுத்துகளை யார் படிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஏன் எழுதுகிறேன் என்பதும் எனக்குத் தெரியாது' என்று எழுதுவது பற்றி 'தெளிவாக' கருத்துகளைப் பகிரும் படைப்பாளர்களிடையே, தன் எழுத்துகளை படிக்கும் வாசகன் யார், தன் எழுத்து யாருக்காக எழுதப்படுகிறது, எழுதுவதன் சமூகத் தேவை என்ன என்பது பற்றிய சரியான புரிதல்களோடு கால் நூற்றாண்டு காலமாக தமிழில் கவிதைகள் எழுதிவரும் கவிஞர் ஜீவியின் தேர்ந்த கவிதைகள் 'ஜீவி கவிதைகள்' எனும் நூலாக மலர்ந்திருக்கிறது.

படிக்கும் வாசகனின் கண்களைக் கட்டி, இருட் புதருக்குள் இழுத்துப் போகும் பம்மாத்துத் தனங்கள் இல்லாமல், வாசகனருகே சக நண்பனாய் அமர்ந்து தோள்மேல் கைபோட்டு சிநேகமாய்ப் பகிர்ந்து கொள்ளும் எளிய-இயல்பான மொழியிலான கவிதைகள் ஜீவியினுடையவை.

ஒவ்வொரு கவிதையும் பாலின் ருசியை மேலும் கூட்டிப் போகும் பாலாடையின் தன்மையிலான கவித்துவமும், நேரடிக் காட்சியின் உயிர்ப்புமாய் நம்மை முதல் வாசிப்பிலேயே உள்ளிழுத்துக் கொள்கின்றன.

பலநூறு மேடைகளில் மேற்கோளாகச் சுட்டப்பட்ட கவிதை வரிகள் தொகுப்பு முழுவதும் மீண்டும் நம் வாசிப்பைக் கவர்கின்றன.

'அடிவாரங்களில்
கேலி பேசும்
இந்த சமூகம் தான்
சிகரங்களில் ஏறியதும்
சிம்மாசனம் போடும்...? என்கிற வாழ்வியல் உண்மை பேசும் கவிதையாகட்டும், (பக்.28)

'ஒரு
இரயில் எஞ்ஜினாய்
எப்போதும் இயங்கு.
கூடவே பலரைச்
சேர்த்துக் கொண்டு
உற்சாகமாகக்
கூவிக் கொண்டு...'

(பக்.65) - என்று இயக்கமாய் சேர்த்தியங்கும் செயல்பாட்டிற்கான உத்வேகத்தைத் தரும் கவிதையென ஒவ்வொரு கவிதையிலும் ஏதோஒரு சேதி நமக்குக் கிடைக்கிறது.

சின்னச் சின்னக் கவிதை வரிகளுக்குள்ளேயே ஒரு சிறு கதையையும் சொல்லி விடும் நுட்பம் ஜீவிக்கு இயல்பாய் கைகூடியிருக்கிறது. இது உண்மை என்பதை நூலிலுள்ள பல கவிதைகள் உணர்த்துகின்றன.

'சுட்ட அப்பளம்
சுற்றிலும் பருக்கைகள்
பட்டினி ராத்திரி'

(பக்.107)

-என்ற குறுங்கவிதைக்குள் கூட, பல சமூகக் காட்சிகளை காட்டி விட முடிந்திருக்கிறது கவிஞர் ஜீவியால்.

அறிவொளி இயக்கக் காலங்களில் தமிழகமெங்கும் எதிரொலித்த 'குறிஞ்சி மலைத் தேனே!' இசைப் பாடலும் இந்நூலில் முந்திரியாய் சுவைக்கக் கிடைக்கிறது.

'கவிதைகள் கவிதைகள் அல்ல...' என்ற கவிதையை ஜீவி இப்படி முடித்துள்ளார்.

'உங்களோடு இருக்க
என் கவிதைகள்
கண் விழித்துக் காத்திருக்கின்றன'

ஜீவியின் முந்தைய தொகுப்புகளிலும் மேடைகளிலும் கேட்டு ரசித்தக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வாசித்திட, அழகாய் நூலாக்கித் தந்துள்ள அகரம் வெளியீட்டைப் பாராட்டலாம்.

- வெளியீடு: அகரம்
1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்-613007
விலை: ரூ.90-
பக்கங்கள்: 144

Pin It