நாடகம்

பங்கேற்பு: காட்சி 1

கட்டியங்காரன் கோமாளியாக

பின்பாட்டுக்காரன்

போலீஸ்காரன்

 

கட்: ஐயா வந்தனமய்யா வந்தனம் வந்த ஜனங்க குந்தனும்.

பின்: வந்தனமய்யா...

கட்: அப்டி பிச்சி மலரெடுத்து பெரிய வங்களக் கும்பிட்டோம்

பின்: பிச்சி மலரெடுத்து..

கட்: அல்லி மலரெடுத்து அத்தன பேரையும் கும்பிட்டோம்

பின்: அல்லி மலரெடுத்து...

கட்: சண்ட சத்தம் செய்யாதீங்க இளவட்டங்களக் கும்பிட்டோம்

பின்: சண்ட சத்தம்...

கட்: சத்தனத்த பூசுங்க நீங்க சந்தோசமாப் பாடுங்க.

பின்: சத்தனத்த பூசுங்க...

கட்: விசிறி இருந்தா வீசுங்க வெத்தல இருந்தாப் போடுங்க...

பின்: விசிறி இருந்தா...

கட்: வெத்தலன்னா வெத்தல இது சோழவந்தான் வெத்தல

பின்: வெத்தலனா வெத்தல..

கட்: வாங்கி வந்த வெத்தல கடை வாய்க்குக் கூட பத்தல.

பின்: வாங்கி வந்த...

கட்: சோழவந்தான் வெத்தலய சுவீடனுக்கு அனுப்புவோம்.

பின்: சோழவந்தான் வெத்தலய...

கட்: சோழவந்தான் காரன் கேட்டா தூக்கிப் போட்டு எத்துவோம்.

பின்: சோழவந்தான்காரன் கேட்டா....

நிறுத்துங்க. நிறுத்துங்க. இங்கயே பத்தாம இருக்கும்போது ஏன் வெளிநாட்டுக்கு அனுப்பனும்?

கட்: அட கேனப்பயலே... தாராள வர்த்தகம்டா. நம்ம நாட்டுல விளையிறது மூலம் பொருள்கள் எல்லாம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சுடனும். அமெரிக்காக் காரன் அனுப்புற குர்குரே... லேஸி, கென்டகி சிக்கன் இதயெல்லாம் இங்க விக்கணும். லாபத்த அங்க அனுப்பனும். உலகமயம்னா லேசா? அமெரிக்காவே இப்ப நமக்கு நெருக்கமுல்ல.

பின்: அப்ப போக்குவரத்தெல்லாம் உண்டுண்டு சொல்லுங்க.

கட்: பின்ன? சமீபத்துல கூட அமெரிக்க ஜனாதிபதி இங்க வந்தாருல்ல. சும்மா ஜம்முனு அவங்க பிளேன்ல. வந்த அவங்க காருல ஏறி... அவங்க செக்யூரிட்டி கூட வர இந்தியாவையே சுத்துனாருல்ல பொண்டாட்டியோட. அந்தம்மா கூட அங்கங்க டான்ஸ் ஆடுச்சே.

பின்: பரவாயில்லயே. நம்ம ஆளுக அங்க போனாலும் இந்த மரியாத கிடைக்குமுல்ல?

கட்: மரியாதன்னா மரியாத அப்பிடி ஒரு மரியாத. அமெரிக்காவுக்கு தூதரா ஒரு அம்மாவ அனுப்பி வைச்சோம். எப்படி கவனிச்சாங்க தெரியுமா? சேலய உருவிக்கிட்டு கவனிச்சாங்க. நம்ம ராணுவ மந்திரி அங்க போனபோத டவுசரோட நிக்க வச்சுல்ல கவனிச்சாங்க.

பின்: தூத்தேறி..

 

(போலீஸ் வருகிறார்)

போலீஸ்: ஏய் என்னப்பா பண்றீங்க..

கட்: ஒண்ணுமில்லீங்கய்யா... ஒரு நாடகம் போடுறோம்.

போலீஸ்: நாடகம் போடுறீங்களா? என்ன பேசப் போறீங்க?

கட்: அத இனிமேத் தான்யா முடிவு பண்ணனும்.

போலீஸ்: அனுமதி இல்லாம பேசக் கூடாது.

கட்: பேச்சுரிமை இருக்குன்னு சொல்றாங்களே.

போலீஸ்: இருக்குப்பா. ஆனா நாங்க நினைக்கிறதத்தான் பேசணும். இல்லைனா முட்டியப் பேத்துருவோம்.

கட்: விக்கிரமாதித்தனும். வேதாளமும் பேசறதா ஒரு நாடகம்.

போலீஸ்: வேதாளக் கதையா... சரி போடுங்க வேற மாதிரி எதானும் பண்ணுனீங்க. பார்த்துக்க.. நான் இங்கன தான் இருப்பேன்.

கட்: சரிங்கையா...

ராஜாதிராஜ் ராஜ மார்த்தாண்ட ராஜ குல திலக விக்கிரமாதித்த மகாராஜா பராக்! பராக்!! பராக்!!!

 

காட்சி 2

பங்கேற்போர்:

1. விக்கிரமாதித்தன்

2. வேதாளம் (ஒரு ஓரமாக)

3. போலீஸ்காரன்

 

விக்: நீர்வளமும் நில வளமும் கனி வளமும் கனிம வளமும் நிறைந்த எனது அன்னை பூமியில் ஊழல்பேய் தலைவிரித்து ஆடுகிறது. இதைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டால் இந்த நாடே சுடுகாடாகிவிடும். மக்களின் காவலனாகிய நான் இந்த ஊழலை ஒழிக்காமல் விடமாட்டேன்.

பாடல்: ஊழலை ஒழித்திடுவேன். அந்தப் பொல்லாத வேதாளத்தைக் கொல்லாமல் விடமாட்டேன்.

வேதா: ஹெக்ஹெக்கே... ஊழலை ஒழிக்கப் போறீங்களாக்கும்! நல்ல வேடிக்கை காலங்காலமா நான்  இங்கதான் தொங்கிக் கிட்டு இருக்கேன். என்னக் கண்டுபிடிக்கிறதே பெரிய கஷ்டம். கண்டுபிடிச்சாத்தான ஒழிக்கிறதுக்கு? விஞ்ஞானரீதியா கொள்ளையடிக்கிறத பாவம் எப்படி மன்னா கண்டுபிடிப்பீங்க?

விக்: கண்டுபிடிக்கிறது மட்டுமல்ல. குழி தோண்டிப் புதைத்தும் விடுவேன். இது கடவுள் மீது ஆணை.

வேதா: என்ன மன்னா இவ்வளவு அப்பாவியா இருக்கீங்க! கடவுளுக்கே கடுக்கா நாட்டுல இருக்கிற  பிராடு கம்பனிகள்ல பாதிக்கு மேல எழுமலையான் பார்ட்னர் தெரியுமா? திருப்பதி உண்டியல்ல விழுகிற பணத்துல பாதிக்கு மேல என்ன பணம்? கள்ளப்பணம். கறுப்புப் பணம்.

விக்: கடவுளைக் கூட ஏமாத்தி விடலாம். ஆனா என்ன ஏமாத்த முடியாது. சரியா கணக்குப் பாத்து கண்டுபிடிச்சுருவேன்.

வேதா: கணக்கு... பாத்துருவீங்களா? சரி. ஒரு கணக்கு போடறேன். சொல்றீங்களா? ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடிக்கு எத்தன சைபர்?

(விக்கிரமாதித்தன் முழிக்கிறார்)

(வேதாளம் மக்களைப் பார்த்து) சரி. இவங்கள்ல யாருக்காவது தெரியுமா? ம்.. இழந்த பணத்துக்கு எத்தன சைபர்னு கூடத் தெரியாத இந்த ஜனங்கள வச்சுக்கிட்டு ஊழல ஒழிக்கப் போறீங்களாக்கும்?

(போலீஸ் வருகிறார்)

போலீஸ்: நிறுத்து. நிறுத்து. என்ன கண்டதப் பேசிக்கிட்டு இருக்கீங்க?

வேதா: நாங்க என்னத்தக் கண்டோம். காணாத தத்தான் பேசிக்கிட்டிருக்கிறோம்.

போலீஸ்: பொது எடத்தில இது என்னாது? பப்ளிக் நியூ சென்ஸ்? கைது பண்ணிருவேன்.

விக்: பப்ளிக் பணத்தக் கொள்ளை அடிக்கிற வனுகளக் கைது பண்ணுவீங்களா?

வேதா: ஒரு ஓரமா ஒக்காந்து வேடிக்க பாருங்க. நாங்க ஏதாவது தப்பாப் பேசுனா கடைசில கைது பண்ணுங்க. போலீஸூனாலே கடைசில தான வரணும்?

போலீஸ்: சரி.சரி. இங்கதான் இருப்பேன். தப்புப் பண்ணீங்க... நடக்கிறதே வேற...

வேதா: எல்லாம் தெரிஞ்ச விக்கிரமாதித்த மகாராஜாவே! நான் சொல்ற கதைகளுக்கு விடை சொல்லுங்க. சொல்லிட்டீங்கன்னா நீங்க சொல்றதக் கேக்கிறேன்.

விக்: ம்... இவ்வளவுதானே... சரியான விடையைச் சொல்லி உனது கொட்டத்தை அடக்குகிறேன்.

வேதா: நம்ம நாட்டில... ஒரு தொழில் அதிபர் இருந்தாரு. பிரதம மந்திரிக்கும் நிதிமந்திரிக்கும் நெருக்கமான நண்பர். அவரோட தொழில் நொடிச்சுப் போச்சு. என்ன பண்ணினாரு தெரியுமா? எல்ஐசியில போயி என்னோட கம்பெனி பங்குகள ஒரு கோடியே 24 லட்சம் ரூபாய்க்கு வாங்குங்க. அப்படீன்னு சொன்னாரு. நஷ்டத்துல ஓடுற கம்பெனி பங்குகள யாராவது வாங்குவாங்களா? எல்ஐசி வாங்குச்சு. ஏன்னா பிரதம மந்திரிக்கும் நிதி மந்திரிக்கும் அவரு நண்பரு. அதால பங்குல வாங்கி நஷ்டமாகுது எல்ஐசி. நாடே கொந்தளிக்குது. நாடாளுமன்றத்தில வீராவேசமா இத அம்பலப்படுத்துனது வேற யாருமில்ல. பிரதமருடைய மருமகன். இப்ப கேள்வி இதுதான்.

அந்த கில்லாடியான தொழில் அதிபரோட பேரு என்ன?

விக்: (திணறுகிறார்) தொண்டைக் குள்ளயே இருக்கு. வரமாட்டேங்குது?

வேதா: மறந்துட்டீங்க இல்ல. இந்த மறதி தான்யா எங்க மூலதனம்.

(வேதாளம் போகிறது விக்கிரமாதித்தன் இழுக்கிறார்)

விக்: ஏப்பா. எத்தனயோ வருஷத்துக்கு முன்னால நடந்ததயெல்லாம் கேட்டா எப்படிப்பா சொல்றது?

வேதா: பழச மறக்காத தேசம் தான்யா உருப்படும். சுதந்திர இந்தியாவோட முதல் பெரிய ஊழல் முந்திரா ஊழல் அதுவே ஒங்களுக்கு தெரியல. அப்புறம் ஊழல ஒழித்திடுவேன்று டான்ஸ் ஆடுறீங்க. சரி. தாத்தா காலத்துல நடந்ததுதான் தெரியல. ஆத்தா காலத்துல நடந்ததக் கேக்கிறேன். சொல்றீங்களா?

விக்: கரெக்டாச் சொல்லிடுறேன்

வேதா: டெல்லி பாராளுமன்றத் தெருவில் ஒரு ஸ்டேட் பாங்க் கிளை. அந்த பேங்க் கேஷியருக்கு திடீருனு ஒரு போன் வருது. பேசுனது நாட்டோட பெண் பிரதம மந்திரி. என்னோட ஆளு வர்றாரு ஒரு அறுபது லட்ச ரூபாயக் கொடுத்து விடு அப்படீன்னு போன்ல கட்டளை. கொஞ்ச நேரத்துல உளவுத் துறையில வேல பார்த்த ஒரு ஆளு வர்றாரு அறுபது லட்ச ரூபாய வாங்கிக் கிட்டுப் போயிருராரு.

விக்: ஆறாயிரம் ரூபா கடன் கேட்டாலே அறுவத பத்திரம் ஆயிரம் கையெழுத்து கேட்பாங்களே. அறுபது லட்சத்த எப்படி உடனே குடுத்தாங்க?

வேதா: வில்லங்கமே அங்கதான ஆரம்பிக்குது. காலையிலே பணங் குடுத்த கேஷியரு சாயந்தரம் போயி பிரதமர் அலுவலகத்துல ரசீது கேட்டிருக்கிறாரு. நாங்க எப்ப வாங்கினோம்னு அங்க சொல்லிட்டாங்க.

கேள்வி இதுதான். அக்கௌண்ட்டே வைக்காத பிரதமருக்கு 60 லட்ச ரூபாய் எந்தக் கணக்குல குடுத்தாங்க? அந்த ரூபாய வாங்கினது யாரு?

விக்: இதெல்லாம் எப்படிப்பா எங்களுக்குத் தெரியும்?

வேதா: (மக்களைப் பார்த்து) இவங்களுக்காவது தெரியுமா? தெரியாதுல்ல. இதுதான்யா எங்க சொத்து. நாடே நாறுன நகர்வாலா ஊழலயே இவங்க மறந்துட்டாங்க. இந்த மறதி இருக்கிறவரை எங்கள் யாரும் அசைக்க முடியாது.

(வேதாளம் போகிறது விக்கிரமாதித்தன் இழுக்கிறார்)

விக்: வேதாளமே! எங்கள் மக்கள் தெரியமத்தான் இருக்கிறாங்களே தவிர முட்டாள்களல்லர். எடுத்துச் சொன்னா புரிஞ்சுக்குவாங்க.

வேதா: என்னத்தப் புரிஞ்சுக்கிட்டாங்க? சரி. தாத்தா காலஊழல் தெரியல. ஆத்த காலத்து ஊழலும் தெரியல. இப்பப் பேரன் காலத்துல நடந்ததக் கேக்கிறேன்.

விக்: கேளு.கேளு. சரியாச் சொல்லிடறேன்.

வேதா: சுவீடன் கம்பனி கிட்ட சுடாத பீரங்கி வாங்குனதுல சுட்ட பணம் எவ்வளவு? புரோக்கர் வேல பார்த்த இத்தாலி மாமா பேரு என்ன?

விக்: இப்படி வில்லங்கமா கேள்வி கேட்டா எப்படிப் பதில் சொல்றது?

வேதா: வில்லங்கம் நடக்கும்போது வேடிக்க பார்த்தா ஊழல எங்கிட்டு ஒழிக்கிறது?

(வேதாளம் ஓடுகிறது விக்கிரமாதித்தன் இழுக்கிறார்)

 

காட்சி 3

 

(வேதாளத்துக்கு விக்கிரமாதித்தனுக்கும் இழுபறி நடக்கிறது)

(விளையாட்டு உடையில் கையில் மட்டையுடன் ஒருவர் வருகிறார்)

வந்தவர்: சபாஷ்... சரியான போட்டி

வேதா

விக்: என்னது...போட்டியா?

வந்தவர்: ஆமா. நீங்க இந்தப் பக்கம் இழுக்கிறீங்க. அவர் அந்தப்பக்கம் இழுக்கிறாரு. இதையே ஒரு விளையாட்டுப் போட்டியா நடத்துனா எவ்வளவு வருமானம்?

வேதா: யாருக்கு?

வந்தவர்: பங்கு பிரிக்கிறத அப்புறம் பாத்துக்கலாம். முதல்ல விளையாட்டுப் போட்டிய ஆர்கனைஸ் பண்ணுவோம். நான் தான் அதுல எக்ஸ்பர்ட். கயிறு இழுக்கிற போட்டியே நடத்திடலாம்.

விக்

வேதா: என்னது? கயிறு இழுக்கிற போட்டியா?

வந்: சாதாரணக் கயிறு இழுக்கிற போட்டி இல்ல. காமன்வெல்த் கயிறு இழுக்கிற போட்டி,

வேதா: இதையே உலக அளவுல நடத்திடுவீங்களா?

வந்: கோடு போட இடங்கிடச்சா ரோடு போட்டுற மாட்டமா?

என்ன? ஒரு 71 நாடுகள்ல இருந்து கயிறு இழுக்கிற ஆளுகள வரவழைக்கணும். போட்டி நடத்த ஒரு அஞ்சாறு புது மைதானம் கட்டணும். ஏற்கனவே இருக்கிற மைதானங்கள்ல புல்லு வெட்டணும். கல்லுப் பிறக்கணும். வர்றவங்க தங்க வீடுக கட்டணும். ரோடு போடணும். கட்டில்க வர்ங்கணும். மேஜ நாக்காலி வாங்கணும். பயிற்சியாளர்கள வரவழைக்கணும். நடுவர்கள் போடணும். வேட்டுப் போடணும். விழா நடத்தணும். எதுக்கும் கவலப்படாதீங்க. நான் பாத்துக்கிறேன். பணத்த மட்டும் எங்கிட்ட குடுத்திடுங்க. அப்புறம் பாருங்க வேடிக்கய.

விக்: (திகைத்துப் போய்) எவ்வளவு பணம்?

வந்: அதிகம் இல்லை பிரதர். 50,000 கோடி,

(வந்தவர் போகிறார்)

வேதா: பாத்தீங்களா. நாடு எப்பிடிப் போகுதுன்னு. சும்மா கையப் பிடிச்சு இழுத்ததுக்கே 50000 கோடி பட்ஜெட் போட்டிட்டு போறார்.

விக்: விளையாட்டுப் போட்டியில இவ்வளவு காசா வெளையாடுது.

வேதா: போட்டி நடத்திக் காசு பாப்போம்.

கிரிக்கெட் நடத்தி சூதாடுவோம். எதுலயும் விளயாடுவோம். உயிரோட இருக்கிற வங்கல வச்சும் வெளையாட்டு, செத்த வங்கள வச்சும் வெளையாட்டு.

விக்: செத்தவங்கங்கள வச்சுமா?

வேதா: செத்தவங்கள அடக்கம் பண்ண சவப்பெட்டி வாங்கணும்ல. அதுல பணம் பாக்கலாம்ல.

 

காட்சி 4

 

(நேரு கோட் போட்ட ஒருவர் அழுது கொண்டே வருகிறார்)

நேரு கோட்: நான் நல்லதுதான் செஞ்சேன். என்னய ராஜினாமா செய்யச் சொல்லிப்புட்டாங்க.

விக்: என்னய்யா தப்புப் பண்ணின?

நேருகோட்: தப்பே பண்ணலீங்க. ஆதர்சமா ஒரு நல்லது பண்ணினேன்- அதுக்குப் போயி... நீங்களே கேளுங்க. போர்ல இறந்தவுங்க குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும்? அவங்களுக்கு வீடு கட்டித் தரலாம்ணு முடிவு பண்ணினோம். பம்பாய் கடற்கரையில ஒரு 6 மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கினோம்.

விக்: நல்ல காரியம் தான?

நேரு கோட்: நம்ம கொத்தனார் கொஞ்சம் வேகமான ஆளு. 6 மாடிக்குப் பதிலா 31 மாடி கட்டிப்புட்டாரு. என்னடா இப்படி உயரமா கட்டிப் புட்டாரே... ஏற்கனவே நொந்து போயிருக்கிற போர் வீரங்க குடும்பங்க ஏறி இறங்கச் சிரமப் படுவாங்களே அப்படின்னு  நினைச்சு வேற ஆளுகளுக்கு - முன்னாள் மந்திரிங்க... இந்நாள் மந்திரிங்க, ராணுவ உயர் அதிகாரிக... மத்தபடி அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு கொறச்ச விலையில வீடு குடுத்தேன். இது ஒரு தப்பா?

விக்: சரியா தப்பா புரியலையே...

வேதா: என்னய்யா... நாயகன் கமல் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டீங்க? இருங்க நான் கேக்குறேன்.  (நேரு கோட்டிடம்) உங்க மாமனாரு போர் வீரரா?

நேரு கோட்: இல்லையே

வேதா: கார்கில் போர்லயா இறந்தாரு?

நேரு கோட்: இல்லையே... சாதாரணமாத்தான் இறந்தாரு.

வேதா: அப்புறம் எதுக்கு உங்க மாமியாருக்கு வீடு ஒதுக்குனீங்க?

நேரு கோட்: (கேனத் தனமாகச் சிரித்தபடியே) அதக் கேக்குறீங்களா? செத்தவங்களுக்கு குடுத்த வாக்க மீறக் கூடாதுல்ல. அதனால தான்.

எங்க மாமனாருக்கு இழுத்துக்கிட்டு இருந்த போது எங்க மாமியாரக் கூப்பிட்டு, அடியே.. அடியே... அடுத்த பிறவில நான் ராணுவத்திலதான் சேருவேன். அதனால நீ இப்பவே ராணுவ வீரங்களுக்கு ஒதுக்கின வீட்டுக்குப் போயிறுன்னு சத்தியம் வாங்கிட்டாரு. அதனால தான் ஒதுக்கினேன்.

விக்: அப்ப சொந்தக்காரங்களுக்கு வீடு ஒதுக்கினது தப்புத்தான?

நேரு கோட்: சொந்தமா? யாரு சொந்தம்?

விக்: மாமியார் சொந்தமில்லையா?

நேருகோட்: ஐயைய.. மாமியார் சொந்தமில்லிங்க. அந்நியம். நமக்கு அந்நியத்துல தான் சம்பந்தம்

(போகிறார்)

விக்: அடேங்கப்பா... யாருய்யா இவர்?

வேதா: இவங்க அப்பா ராணுவ மந்திரியா இருந்தவரு. அதனால ராணுவ வீரங்க சொத்தெல்லாம் தன்னோட சொத்தா நெனைக்கிறாரு. ஜெய் ஜவான்!

(காவித் துண்டு போட்ட ஒருவர் வருகிறார் தலையில் நாற்காலி. மேடையின் மையத்தில் சுற்றிச் சுற்றி வருகிறார்)

காவி: விடமாட்டேன். விடவே மாட்டேன். அசந்தா ஒக்காந்திரலாம்னு பாக்கிறீங்களா? அசர மாட்டேன். மகன் மகளெல்லாம் சொந்தமா? அந்நியம். அதனால தான் நிலம் ஒதுக்கினேன். நான் என்ன கேள்வி கேட்கவா ரூபாய் வாங்கினேன்? சூட்கேஸ் வாங்கியா பிடிபட்டேன்?

விக்: யாருயா இவரு?

வேதா: ராம பக்தன், காவியயும் விடமாட்டாரு நாக்காலியயும் விடமாட்டாரு. பாசமுள்ள அப்பா. அதனால பெங்களூர்ல மையப் பகுதில் மகளுக்கும் மகனுக்கும் நிலம் ஒதுக்கிட்டாரு.

விக்: அதுசரி. நாக்காலிய ஏன் தூக்கிட்டே திரியிறாரு?

வேதா: அசந்தா அவங்க ஆளுகளே கவுத்துரு வாங்களே. அதனாலதான்.

விக்: அதுசரி. கேள்வி கேட்க ரூபா. சூட்கேஸூ அப்படீன்னு என்னவோ சொல்றாரே!

வேதா: அவங்க கட்சித் தலைவர் ஒருத்தரே சூட்கேஸூ நெறைய பணம் வாங்கினத பத்திரிக்கக் காரங்க போட்டோ எடுத்து போட்டுட்டாங்க. பார்லிமெண்டில கேள்வி கேட்கவே முதலாளி மாருகிட்ட காசு  வாங்கின ஆளுக இவங்க கட்சியில.

காவி: என்னய்யா நியாயம் யாரும் செய்யாததையா நான் செஞ்சுபுட்டேன். எதுக்கு ராஜினாமா செய்யனும்?

விக்: மகன் மகளுக்கு நிலம் ஒதுக்கினது தப்பு இல்லையா...

காவி: என்ன தப்பு? தமிழ்நாட்டில போயிப்பாருங்க மகள்கள், மகள், பேரன், பேத்தி, பேத்தியோட வாரிசு எல்லாத்துக்கும் ஒதுக்கியிருக்கு. தமிழ்நாட்டையே பட்டாப் போட்டது மாதிரி நாலு திசைக்கும் நாலு மகனுக. பேரன் பேத்திகளுக்கு டிவி, சினிமா, விநியோகம், என்னமோ என்னய கேக்க வந்துட்டீங்க...

விக்: அடக் கொடுமையே... ஏமாந்து போயி இவங்களயெல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கிறாங்களே...

வேதா: மந்திரிகள... மக்கள் தேர்ந்தெடுக்கிறாங்களா? நீங்க எந்த ஒலகத்துல இருக்கிறீங்க? ஓட்டுப் போடுறது மட்டும் தான் மக்கள். மந்திரி யாருன்னு முடிவு பண்றதெல்லாம் வேற எடத்துல.

 

காட்சி 5

பாடல்: ஆயிரம் டெலிபோன் பேசி

அமைச்சர்கள் செய்வாய் போற்றி...

அங்கங்கே ஆட்களை வைத்து

அனைத்தையுமே முடிப்பாய் போற்றி...

நாடியே வருபவர் தமக்கு

நலமெல்லாம் தருவாய் போற்றி...

 

(டெலிபோன் பேசியபடி ஒரு பெண்.  வெண்கொற்றக் குடைபோல ஒருவர் குடைபிடித்து வருகிறார். குடையிலிருந்து டெலிபோன்கள் தொங்குகின்றன)

(டெலிபோனில்) யெஸ் ஸார். உங்க பத்திரிக்கையில் அந்த ஆர்டிக்கிள போட்றுங்க. தமிழ் எடிசன்லயும்  முடிஞ்சு போட்றுங்க... ஜீ ஹாங். அவர அக்காமடேட் பண்ண முடியும்னு தோணல. பேசிப் பாக்கிறேன். மேல இருக்கிறவங்களும் அப்படித்தான்  ஃபீல் பண்றாங்க.

அவர அந்த இடத்துல போட்றலாம்.

இவர கொஞ்சம் யோசிக்கணும்.

(வேறு ஒரு பெண் ஒரு நபருடன் வருகிறார்)

பெண் II: வணக்கம் அக்கா.

டெலிபோன்: வா மணி. நல்லா இருக்கியா? அப்பா எப்படி இருக்கிறாரு?

பெண்II: அவருக்கு என்னக்கா? கடிதமா எழுதித் தள்ளிக்கிட்டிருக்காரு. பையன் நம்ப பையன். ரொம்ப நல்லவன். கைக்கு அடக்கமா கூஜா மாதிரி இருப்பான். நில்லுனா நிப்பான். ஒக்காருன்னா ஒக்காருவான். இவன டெலிபோனுக்குப் பொறுப்பா போட்டீங்கன்னா...

டெலி: (மேலே பார்த்து) அங்கேயும் அப்படித்தான் கநநட பண்றாங்க. ஆனா ஒங்க அப்பாவோட பேரன் அடம் பிடிப்பானே!

பெண்II: அவன்கிட்ட டெலிபோன் கெடைச்சா அவனா வச்சுக்குவான். அவனா வெளையாடுவான். நமக்கு லாபமில்ல.

டெலி: அங்கயும் அப்படித்தான் நெனைக்கிறாங்க. டெலிபோன் அவன்கிட்ட போனா அவன் பேச்சத்தான் பேசுவான். நம்ம பேச்சப் பேசமாட்டான்.

பெண்II: இவன்கிட்ட டெலிபோன் போனா நம்ம பேச்ச மட்டும்தான் பேசுவான். டெலிபோன் அவன்கிட்ட பேச்சு பூராம் நம்மகிட்ட.

டெலி: மணி! கவலப்படாத. டெலிபோன் இவனுக்குத்தான். (போகிறார்)

பெண்

நபரிடம்: போப்பா. போயி டெலிபோன வச்சு வெளையாடு. நான்தான் வாங்கிக் குடுத்தேன். நன்றிய மறந்துராதே.

(மணி போகிறார். பணிவோடு பின் தொடரும் நபர், மணி சென்றதும் துள்ளிக் குதிக்கிறார்)

பாடல்: நான் தன்னந் தனிக் காட்டு ராஜா

என் தோட்டத்தில் டெலிபோன் பூஜா

நான் தீராத விளையாட்டுப் பிள்ளை

நான் தொட்டது எல்லாம் கொள்ளை கொள்ளை...

(நேரு கோட், காவி வருகிறார்கள் நெடுஞ்சாண் கிடையாக விழுகிறார்கள்)

நேரு கோட்: அண்ணா, நீங்க பெரிய ஆளுங்கண்ணா நாங்கள்லாம் 40,50 கோடிலதான் வெளையாண்டோம். நீங்க ஆரம்பமே அமர்க்களம்ண்ணா. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி.

காவி: நிலம், கட்டடம், சுரங்கம்னுதான் நாங்க வெளையாண்டோம். நீங்க காற்றே இல்லாத இடத்துல கற்றய வச்சு வெளயாடிட்டங்களே...

நபர்: கத்துக்குடுத்த எடம் அப்படிப்பா.

பாடல்: ஆண்டவன் படைச்சான்

எங்கிட்ட குடுத்தான்

அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்.

காவி: அடேங்கப்பா...

நபர்: நான் சாமானியன். சாமானிய மக்கள் அவை பேசணுமா இல்லையா?

விக்: சாமானிய மக்களுக்கா கொடுத்தீங்க? டாடாவுக்குள்ள குடுத்தீங்க.

நபர்: அவங்க என்னஅவங்களாவா வச்சுக் கிட்டாங்க? ஒரு சின்னப் பகுதிய 20000 கோடிக்கு வித்துறலயா? அதே மாதிரி தான எல்லாக் கம்பெனியும். அவங்களாவா வச்சுக்கிட்டாங்க? 30,40, மடங்கு லாபத்துல வித்துறலயா? மூலதனம் எவ்வளவு பெருகியிருக்கு?

விக்: டெலிபோன்ப் பத்தியே தெரியாத ரியல் எஸ்டேட் கம்பனிக கிட்ட அலைக்கற்றய வித்திருக்கீங்களே!

நபர்: ஜனநாயக நாட்டில எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டாமா? அதனாலதான் கொடுத்தேன்.

விக்: நீங்க தந்த அனுமதிய மட்டும் வச்சுக்கிட்டு பெரிய பேங்குக கோடிக்கணக்கில கடன் கொடுத்திருக்கே. ஒரு லட்ச ரூபா மூலதனமுள்ள உப்புமா கம்பெனிக்கு 368 கோடி பேங்க் கடன் கிடைச்சிருக்கே...

நபர்: நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு யேங்குக உதவியிருக்கு அவ்வளவுதான?

விக்: ஒரு மணி நேரத்து 1650 கோடி கட்டுனவங்களுக்குத் தான் வாய்ப்புன்னு சொல்லியிருக்கீங்க.

நபர்: இங்க பாருங்க. டெலிபோன் விளையாட்டு சீரியஸான விளையாட்டு எப்பவும் எதுக்கும் தயாரானவங்க தான விளையாட முடியும். துணிஞ்சவுங்க. முடிஞ்சவுங்க விளயாடி இருக்காங்க  அவ்வளவுதான்.

(போலீஸ் வருகிறார்)

போலீஸ்: நிறுத்து.நிறுத்து. அத்துமீறிப் பேசுறீங்க. அரெஸ்ட் பண்ணப் போறேன்.

(கோட் சூட்டுடன் முதலாளி வருகிறார்)

முதலாளி: என்னய்யா கலாட்டா?

வேதாளம்: என்னய குழி தோண்டிப் புதைக்கணுமாம்.

முதலாளி: லூசாய்யா நீ. ஊழல் வேதாளத்த அவ்வளவு சீக்கிரம் ஒழிச்சிர முடியுமா?

விக்: மக்கள் சக்தின்ற மகத்தான ஆயுதம் எங்கிட்ட இருக்கு.

முதலாளி: இந்த ஓட்டக் கத்திய வச்சுக்கிட்டா  ஊழல ஒழிப்பீங்க? மக்கள் சக்தியாம் மக்கள் சக்தி. கவரக் குடுத்து கவர் பண்ணிற மாட்டோமா?

நாங்க யாரு தெரியுமா? பெரிய பெரிய தொழில் எங்ககிட்ட. நிலத்தில முக்கா வாசி எங்க கூட்டாளிக கிட்ட. போலீஸ், ராணுவம், பத்திரிக்க எல்லாம் எங்க கையில. நாங்க சொல்ற ஆளுதான் மந்திரி. என்ன செய்ய முடியும் உன்னால?

(விக்கிரமாதித்தன் நடுவில் நிற்க கலர் கயிறுகளால் டெலிபோன், போலீஸ் வேதாளம் நெறிக்கிறார்கள்)

டெலி: நானே ஒளியாயிருக்கிறேன். நானே வழியாயிருக்கிறேன்.

வேதா: முந்திரா, நகர்வாலா, ஆதர்ஷ் போபர்ஸ், சவப்பெட்டி, சூட்கேஸ் 2ஜி, 3 ஜி என்ன செய்வ எங்களை.

போலீஸ்: பேசாதே. பேசினா முட்டிக்கு முட்டி தட்டுவேன்.

(விக்கிரமாதித்தன் திணறியபடியே)

அக்கிரமங்களுக்கு அழிவு நிச்சயம். என் மக்கள் விழித்தெழுவார்கள். வாழவும் வாழவைக்கவும் போர்க்கொடி ஏந்துவார்கள். ஊழல் ஆட்சிகளைத் தூக்கி எறிவார்கள். தூக்கி எறிவார்கள்)

உறைநிலை.

Pin It