ச.சுப்பாராவ், மதுரை

நிறையப் பேர் புராணத்தை வேறு மாதிரியாக எழுதுகிறேன் என்று எழுதுகிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை. இதிகாசங்கள், புராணங்கள் முடிந்து போன விஷயம்.  அதை ஏன் வேறு வடிவத்தில் எழுத வேண்டும்? - இப்படி கூறியிருக்கிறாரே (ஆனந்த விகடன் 2.3.11 இதழில்) அசோகமித்திரன்?

முடிந்துபோன விஷயம் என்றால் ஏன் அதை மீண்டும் எழுதினார்கள் ராஜாஜியும்  சோவும்? ஏன் இப்போதும் பகவத் கீதை பாராயணம் நடக்கிறது? ஏன் ராமாயணம் பற்றிய கருத்தரங்குகள் விடாமல் நடத்தப்படுகின்றன? ஏன் ராமாயணம்- மகாபாரதம்- விஷ்ணுபுராணம் - டி.வி. தொடர்களாக வருகின்றன? ஏன் பெரியார்-அண்ணா வாரிசுகள் நடத்தும் சன் டி.வி.யிலும் விநாயகர் புராணம் வருகிறது? இதற்கெல்லாம் எதிர்ப்புத் தெரிவிக்கிற அசோகமித்திரன், இவற்றை மறுவாசிப்புச் செய்து,இவற்றில் உள்ள சாதியத்தை, ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தி-படைப்புகளை எழுதினால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்? இவரைப் போன்ற "நவீன எழுத்தாளர்கள்" எனப்படுவோர் வடிவத்தில் தான் நவீனத்தை எதிர்பார்க்கிறார்களே தவிர, உள்ளடக்கத்தில் அல்ல என்பதை உறுதிப்படுத்துகிறார். இந்த மடிசஞ்சிகள்  எவ்வளவுதான் எதிர்த்தாலும் ஒடுக்கப்பட்டோரின் கண்ணோட்டத்தில் இருந்து மெய்யான வரலாறுகளை மீட்டெடுக்கும் வேலை விடாமல் நடக்கவே செய்யும். அது கண்டு இவர்கள் பொருமுகிறார்கள் என்றால் முற்போக்காளர்களுக்கு வெற்றியே.

எஸ்.சண்முகக்கனி, விருதுநகர்

திமுக அணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப் போவதாக நடிகர் வடிவேலு கூறியிருக்கிறாரே...?

பாவம், அவருக்கு என்ன பிரச்சனையோ? ஏற்கெனவே, சக நடிகர் ஒருவர், தனது கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்துவிட்டதாகப் புலம்பியிருந்தார். அப்படி என்ன விவகாரமோ? ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் திடீர் அரசியல் பிரவேசம் என்றாலே அங்கே சுயநலம்தான் இருக்கும்.

கே.எல்.பஞ்சாபகேசன், சென்னை

இமயம் டி.வி.யில் வைகோ பேட்டி கேட்டீர்களா? உங்கள் கருத்து?

வாஜ்பாயையும் அத்வானியையும் அவர் வானளாவப் புகழ்ந்து பேசியது கேட்டு "மெய்சிலிர்த்துப்" போனேன்! அத்வானியைத் துணைப் பிரதமராக்க வேண்டும் என்று இவர்தான் வாஜ்பாயிடம் போய் பரிந்துரை செய்தாராம்! இதற்கு ஏற்பாடு செய்தவர் பெர்னாண்டசாம்! என்னத்தச்  சொல்ல? பாபர் மசூதியை இடித்து நாட்டை ரணகளமாக்கி, நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரைக் குடித்த ஓர் உன்மத்தரைத் துணைப் பிரதமராக்க வேண்டும் என்று சொல்ல எப்படி மனம் வந்தது வைகோவுக்கு? ஒருபுறம் சமூக நீதிப் போராளிகளாம் பெரியார்- அண்ணா பெயர்களைச் சொல்லிக் கொள்வது, மறுபுறம் மத வெறியர்களாம் வருணாசிரமவாதிகளாம் வாஜ்பாய்- அத்வானிக்குச் சேவை செய்வது...! இது என்ன கொடுமை?

ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மாரியூர்

அரபுலகில் மேலை நாட்டவரின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்று சர்வதேச அரசியல் பார்வையாளர் - அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ஃபிஸ்க் கூறுவது பற்றி..?

இப்படியொரு அரசியல் பார்வையாளரா? அவர் எந்த நோக்கில் இப்படிக் கூறினார் என்பது விளங்கவில்லை. நடப்பு என்னவோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. எகிப்தில் "புரட்சி" என்றார்கள். ஹோசினி முபாரக்கை வெளியேற்றிய பிறகு அங்கே ஜனநாயக மீட்டெடுப்பு பற்றி பேச்சையே காணோம்!  மாறாக, லிபியா மீது பாய்ந்துவிட்டன அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும். கடாபியிடமிருந்து லிபிய மக்களைக் காப்பாற்ற அந்த நாடு மீது குண்டு போடுகிறார்களாம்! கொத்துக் கொத்தாய் அங்கு மக்கள் சாகிறார்கள்!  இதுவா காப்பாற்றும் வேலை? கடாபி தன் நாட்டு மக்களை அடக்கி ஒடுக்குகிறார் என்பது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் அந்த நாட்டு உள் விவகாரத்தில் தலையிட அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளுக்கு என்ன உரிமை இருக்கிறது? கடாபியைக் கொல்லும் நோக்கோடு அவர் வீடு மீது குண்டுவீச என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நாட்டு விவகாரத்தை அவர்கள் அல்லவா தீர்த்துக் கொள்ள வேண்டும்! "சோத்துக்குள் இருக்கிறான் சொக்கன்" என்று ஒரு சொலவடை உண்டு. அப்படி அரபு நாடுகள் மீது  இந்த மேற்கத்திய நாடுகள் பாய்வதன் நோக்கம், அவற்றின் எண்ணெய் வளத்தைக் குறிவைத்து. இவர்களுக்கு ஜனநாயகம் பற்றி, மக்கள் உரிமைகள் பற்றியெல்லாம் கவலையே இல்லை. தங்கள் நாடுகளது கம்பெனிகளின் நலனைக் கணக்கில் கொண்டு இவர்கள் இன்னொரு நாட்டின் மீது பாய்வார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். லிபியா மக்கள் பற்றிக் குடங்குடமாய்க் கண்ணீர் வடிப்பவர்கள், இலங்கைத் தமிழர்கள் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என்பதை எண்ணிப் பாருங்கள். இதிலே மிகவும் கவலைதரும் விஷயம், ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும் இவர்களின் இந்தப் போக்கிற்கு மவுன சாட்சியாகிப் போனதுதான்! "மங்கை சூதகமானால் கங்கைக்குப் போகலாம், அந்த கங்கையே சூதகமானால் எங்கே போவது?" என்பார்கள். அப்படியாகிப் போனது உலக விவகாரம்.

கே.அரங்கராஜன், பாதிரக்குடி

அருணன் எழுதிய "கண்ணதாசன்" ஆய்வு நூலை வைத்துப் பார்க்கும் போது கவிஞர் வாலியின் ஆயிரம் பாடல்கள், வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

வாலியைப் படிக்கவில்லை, வைரமுத்துவைப் படித்தேன். ஒரு விஷயம் பளிச்சென்று தெரிந்தது. கண்ணதாசன் பிற்காலத்தில் மத உணர்வுக்கு ஆட்பட்டு சாமி பாடல்களாகப் பாடித் தீர்த்தார், "அர்த்தமுள்ள இந்து மதம்" என்று அதிலுள்ள சகல மூடநம்பிக்கைகளுக்கும் ஒருவித நியாயம் கற்பிக்க முனைந்தார். அத்தகைய போக்கு வைரமுத்துவிடம் இல்லை. அந்த விஷயத்தில் அவர் கண்ணதாசனையும் மிஞ்சி நிற்கிறார். அண்மையிலே வந்த "பேராண்மை" படத்திலே கூட "கடவுளுக்கும் எங்களுக்கும்/பேச்சுவார்த்தை இல்லை- எங்க/கைகளைப் போல எங்களுக்கு/ மூலதனம் இல்லை" என்று பாட்டெழுதியிருக்கிறார் கவிஞர். "கண்காணா உன் கடவுள்/தான் தோன்றி ஆகிறப்போ/கண்கண்ட பேரண்டம்/ தான் தோன்றி ஆகாதோ"-என்று "பெரியார்" படத்தில் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடவுள் இருப்புக்காக சொல்லப்படுகிற முதல் காரண விதி எனும் வாதத்தை தனது கவிதையில் உடைத்துத் தகர்த்தவர் பாரதிதாசன் என்றால், அதைச் சினிமா பாடல் வரைக் கொண்டு வந்தவர் வைரமுத்து.

மு.புண்ணியகோடி, சிதம்பரம்

கொள்கை மறந்து கூட்டணிக்குப் போனவர்களின் பட்டியலில் இடதுசாரிக் கட்சிகளையும் சேர்த்து வசைமாறிப் பொழிந்திருக்கிறாரே உதயை மு.வீரையன் "தினமணி" (22.3.11) ஏட்டில்?

இந்திய மக்களின் இன்றைய மிகப் பெரிய எதிரிகள் பி.ஜே.பி.யும் காங்கிரசும். இந்த இரண்டும் இல்லாத அணிக்குத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்றுள்ளன. இது எப்படிக் கொள்கை மறந்த நிலையாகும்? அந்தக் கட்டுரையில் சகல கட்சிகளையும் திட்டியவர் பி.ஜே.பி.யை மட்டும் விமர்சிக்கவில்லை. தமிழ்நாட்டில் எந்த அணியும் அந்தக் கட்சியை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்பதிலிருந்தே மக்கள் மத்தியில் அதுபற்றி உள்ள அசூயையைப் புரிந்து கொள்ளலாம். இதைத் தாங்க முடியாமல் தான் புலம்பித் தீர்த்திருக்கிறார் போலும் அந்த மனிதர்!

பி.சுந்தரேசன், கோவில்பட்டி

அண்மையில் தாங்கள் ரசித்த நிகழ்ச்சி..?

தொலைக்காட்சியில் "ஸ்ரீசங்கரா" என்றொரு அலைவரிசை இருக்கிறது. வைதீகத்தைப் பரப்புவதற்காகவே இப்படியொன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலொரு வைதீகர் தோன்றி கேள்விகளுக்கு பதில் சொன்னார். " பிராமணர்கள் பிரார்த்தனைக்காக மொட்டையடித்துக் கொள்ளலாமா? அதற்கு சாஸ்திரத்தில் இடமிருக்கிறதா?" - இப்படியொரு கேள்வி. "சாஸ்திரத்தில் இடமில்லைதான். ஆனாலும் செய்கிறார்கள். எல்லாரும் மொட்டையடிப்பதால் பிராமணர்களும் மொட்டையடிக்க வேண்டியதில்லை. வேறு வகையில் நேர்த்திக் கடன் செலுத்தலாம். மொட்டையடித்துக் கொண்டாலும் தவறில்லை"- இப்படியாக அந்தப் பெரியவர் சக்கரவட்டமாகப் பதில் சொல்லி வந்தார். இப்போதும் அடித்தட்டு சாதியினரே அதிகம் மொட்டையடித்துக் கொள்வதன் காரணம் ஆதி நாளில் அவர்களே சமண-பவுத்த மதங்களில் இருந்தார்கள் என்பது. இந்த விபரம் புரியாமல் உயர் சாதியினர் சிலரும் இப்போது மொட்டையடித்துக் கொள்வதை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் அவர் தடுமாறியதை ரசித்துக் கொண்டிருந்தேன்.

Pin It