நாட்டுப்புறக்கதை

வீட்டுக்குள்ள நொழஞ்சதும் ஒரு காரணம் காரியம்ன்னு இல்லாம யார்கிட்டெயோ இருக்கிற கோபதாபத்தை மனசுல வச்சி ஓங்குன கை மாறாம சூசுவா ராமான்னு இருக்கிறவளை சரமாரியா கை நீட்டுற புருசன்கிட்டெயிருந்து தற்காத்துக்கிட தேவானை ரெண்டு வழி வச்சிருந்தாள். ஒண்ணு அதிதீவிரதத்துல சேர்ந்தது. மற்றது சாத்வீரத்துல சேர்ந்தது.

"எதுக்கு அடிக்கிறீரு? ஏன்? இன்ன விபரம்ன்னு சொல்லிப்புட்டு அடியும்ன்னு" கேட்டாக்கூட குண்டான் பயலுக்கு பிடிக்காது. "பொட்டச்சி இன்னக்கி நாளக்கி தொட்டதுக்கெல்லாம் வாய் பேசுவியா? பதிலுக்குப்பதில் பேசுவியா? அப்படீன்னு அடி இன்னும் கூடுதலையாத்தான் கிடைக்கும்.

போற வார இடங்கள்ல, வேலைத்தளத்துல, ஒரு கொடுக்கல் வாங்கல்ல இந்த ஆம்பளையாகப்பட்டவுகளுக்கு ஒரு ஏத்தடி இறக்கடி வர்றது சகஜந்தான். அங்கெ நடந்த இழப்பினையை, அவமானத்தை எங்கே கொண்டு போய்க் கொட்டித் தணிக்க முடியும். அடுத்தவன் கிட்டெயா? அவன் குடும்பம், வாசல் கொடி வழிகளோடு வந்து குமுறி விட்டுட்டு போயிருவான். இளிச்சவாச்சி வீட்டுக்காரிதான். வந்ததும் வராததுமா பிடிச்சி கை சளைக்கிற மட்டும் கச்சேரிய நடத்த வேண்டியதான்.

நச்சதுர வீட்டுக்குள்ள அடியைத் தன்னால தாங்கமாட்டாம ஒரு பொம்பளை எங்கே போய் ஒளியுவாள்? வெழந்தீரமட்டும் எதாச்சும் ஒரு சாக்கு போக்குச் சொல்லி பிடிச்சு கும்ம வேண்டியதான் யாரிருக்கா கேட்க அந்த வாயில்லா பொட்டெச் சீவனுக்கு?

பெத்ததுக பொடிசு ரெண்டும் அரண்டு போயி எதாவது ஒரு மூலையிலெ பம்மிகிடக்கும்ங்க. என்னம்மோ ஓடியாடி சம்பாரிக்கிற ஆம்பளைக்கு என்ன ஆத்திரமோ யாரு என்ன சொன்னாகளோ போனா போகட்டும்ன்னு ரெண்டு அடி நாலு அடிக்கு பொறுப்பாள். நிறுத்தலையா எல்லை மீறிட்டானா! அவ்வளதான். குபீர்ன்னு குனிஞ்சி அவன் உயிர்த்தலத்தை வேட்டியோட சேர்த்து பிடிச்சுக்கிடுவாள். பொட்டியார்க்கு அவ்வளதான். தன்னால வெல வெலத்துப்போயி குழந்தைக கையில கிடைச்ச விட்டி உசிருக்கு தட்டழிஞ்ச மாதிரி, "ஏய் தேவானை... தேவானை... தேவானேய்... விட்டிரு... சொன்னாக் கேளு விட்டிரும்மாயேய்....

அவன் அவளோட பிடியிலிருந்து நழுவி விலகி ஓட, இவள் குனிஞ்சமட்டுல பாய்ஞ்சி பாய்ஞ்சி பிடிக்க எத்தனிக்க, இப்பொ அவன் நாலு சுவத்துக்குள்ள சுத்திவர்றதைப் பார்க்கணும். இப்பொ அடிக்கட்டும் பாப்போம்.

இவள் பரிதாபப்பட்டு அத்தோட விட்டுட்டாளோ! அப்படியே திரும்பி "குட்டப்பய மகளே இனிம்மே அதை தொடுவியா தொடுவியான்னு ஓடி ஓடி அடிப்பான். இவனையெல்லாம் அய்யோன்னு பாத்தா ஆறு மாத்தப் பாவம் நம்மளத்தான் பிடிச்சுக்கிடும்ன்னு ஒரு சுவரணையில போயித்திரும்பி பாதுகாப்பா கையால பொத்தி நிக்கிறவனை, "இனிம்மே எங்கப்பனை குட்டப்பயன்னு வையுவியான்னு குனிஞ்சு வயித்தோட முட்டி பழைய படிக்கும் உயிர்த்தலத்தை பற்றுன மாத்திரத்துல குண்டான் மைனா வாயைத் திறந்த மாதிரி ஆய்..யாய்...யான்னு கூப்பாடைக் கேக்கணும். ஊரே கேக்கிற மாதிரி அவயம்.

தேவானைக்கு இப்பொ புலிவாலை பிடிச்ச கதைதான். விட்டால் போச்சி. அக்கம் பக்கம் ஆளுகள் ஓடிவந்து ஒண்ணையொண்ணு விலக்கினாத்தான் சரி தனக்கு பாதுகாப்பு கிடைச்சிருச்சிங்கிற தெம்புல பிடியை தளர்த்துவாள்.

என்ன நடந்தது ஏது நடந்ததுன்னு வந்தவங்க விசாரிக்க ரெண்டு பேரும் பூஸூ பூஸூன்னு இளைக்சிக்கிட்டு பதில் சொல்ல முடியல்லே. இப்பைக்குள்ளே இவங்களுக்கு அலுப்புத் தீந்து பதில் சொல்லப்போறதில்லே என்கிறதை உணர்ந்து இது மாதிரி சம்பவத்துல ரொம்ப அனுபவப்பட்ட ஒரு பெரியவர்தான் சொன்னார்.

மகாபாரதப் போர் நடக்காம இருக்கணும்ன்னா கிருஷ்ணனை பிடிச்சு கட்டிப் போட்டாத்தான் ஆகும்ன்னு சகாதேவன் சொன்னான். என்னைக் கட்டிப்பார்ரான்னு இவரு சுயரூபத்தை விண்ணுக்கும் மண்ணுக்குமா காட்டி நின்னார். இவன் இவருடைய அவதாரங்களுக்கெல்லாம் மூலமான பாற்கடல் ஆதி நாராயணனை தன் மனசுக்குள்ள இறுகப்பற்றி பிடிச்சுக்கிட்டான். ஐயா தன்னால வெலவெலத்து பிடியை விடுவிடுன்னு அலறுனார் பாவம். இப்பொதான் எல்லார்க்கும் புரிஞ்சது. அடிச்சதுனால புடிச்சான்னும் புடிச்சதுனால அடிச்சான்னும் வந்த ஆளுகளுக்குள்ள பட்டிமன்றங்கள் நடக்கும்.

தேவானைக்கு இப்படியொரு உபாயந்தெரிஞ்சிருந்தது. இது எப்பவும் செல்லுபடியாகாதுல்ளே அதனால இன்னொரு வழியும் வச்சிருந்தாள். அடி உதை தாங்க மாட்டாமல் போகும்போது இந்த வழி கை கொடுக்காத நிலையில் திடீர்ன்னு ஆத்தா அருள் வந்த மாதிரி கண்ணை திரச்சி முழிச்சி நாக்கை 'அந்த்' ன்னு கடிச்சு தலையை விரிச்சுப் போட்டு கைகள் ரெண்டையும் சேர்த்து மேலே தூக்கி ஒரு வளையம் போட்டு ஆக்ரோசமா ஆட ஆரம்பிச்சிருவாள்.

அவ்வளதான் இவன் சொரூபமெல்லாம் குறைஞ்சிபோயி "ஆத்தா சொல்லு ஆத்தா ஒம் பிள்ளை எதுவொண்ணும் தெரிஞ்சும் தெரியாம சொல்லியோ செய்தோ இருந்தா நீதான் மாப்புக் கொடுக்கணும்னு" கும்பிட்டமட்டுல அவ கால்ல விழுவான். அவன் கை நீட்டுற நாள் செவ்வாய் வெள்ளியாயிருந்தா இப்படி அம்மன் வேஷம் போட்டிருவா. எது செய்தாலும் நம்பும்படியா இருக்கணுமில்லே. இந்த விசயத்துல அவனை ஒரு அரட்டுப்போட்டு மடக்கி வச்சிருக்காள்.

'ஒன் வம்சா வழியில ஒரு பெண் தெய்வம் இருக்கா?"

'தெரியலயே ஆத்தா. பெரியவங்களுக்கு தெரிஞ்சிருக்கும். நான் அறியலயே தெய்வமே!"

"இந்த ஈசானு மூலையிலே அவ குடி கொண்டிருக்கா. நீ உன் ஆத்தா வயித்துல செனிச்சிருக்கும்போது பிறக்கிறது ஆணா பிறந்தா அந்தக் குலதெய்வம் சன்னிதியில கரும்புல ஊஞ்சக்கட்டி ஆட்டிவிடுதேம் முன்னும் ஊருசனம் பூராவுக்கும் அன்னதானம் போடுறதாவும் நேர்ச்சை பண்ணி இந்த தலைமுறை வரைக்கும் செலுத்துனபாடில்லே... ம்.... டேய்.... வழிவழி தெய்வத்தை மறந்ததுனால அத்தனை சோதனையும் குடும்பத்துல நேருதடா... ஏய்..."

"ஆத்தா அந்த ஆலயம் எங்கிருக்கு? அந்த தெய்வம் குடி கொண்டிருக்கிற ஊர்..."

அவ்வளவுதான். இந்த விபரம் கேட்கும்போது சாமி மலையேறிரும். இன்னக்கி வரைக்கும் அந்த விலாசத்தை சொல்லலையே... (அருளாடி சொன்னவளுக்கு மட்டும் தெரியுமாக்கும்) தனக்கு இவ்வளவு வயதாகி இப்படி உடம்பு வச்சிக்கிட்டு இன்னும் கரும்புல தொட்டில் போட்டு எங்குட்டு தாலாட்ட? உத்தரத்துல போட்டாலே தாங்காதே. இப்படி பல கவலைகளை குண்டானுக்கு ஏற்படுத்தி வச்சிருந்தாள் வசதியா.

அன்றைக்கு காலையில பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கூடம் போனபிறகு ரெண்டு பேருக்கும் வாய்த்தகராறு முத்தி தேவானையை வழக்கம்போல கண்ணு மண்ணு தெரியாம போட்டு அடிக்கையில் அவள் வலி தாங்க முடியாம 'அடேய்...ய்'ன்னு பலம்மா அவயம் போட்டுட்டா. குண்டானும் அந்த சத்தத்துல அரண்டு போனான். இன்றைக்கு என்ன கிழமைன்னு பளிச்சின்னு அவனுக்கு ஞாபகம் வரல.

செவ்வாய் வெள்ளிக்கு அருள் வந்து போடுற கூப்பாடா. இல்லே சங்கதியில கை வைக்கப்போற கூச்சலான்னு கொஞ்சம் மிரண்டு நின்னான். அன்றைக்கு பஞ்சாயத்துப் பண்ணுனவங்கள்ல ஒருத்தன் சொல்லீட்டுப் போயிருந்தான். "நீ வாட்டுல கை நீட்டாதடா அவள் தெய்வத்தை சுமந்துக்கிட்டிருக்காங்கறே. நீ கை வைக்கிற நேரம் உன் பெண்டாட்டி மேனியில அவ இறங்கியிருந்தான்னு வச்சுக்கோ துன்பமில்லெ வந்து சேரும்."

தேவானைக்கும் இப்பொதான் ஞாபகம் வந்தது. நாம வாட்டுல சவுண்ட கொடுத்துட்டோம். இப்பொ சாமி வந்ததுக்கான அறிகுறிய காட்டுறதா. இல்லே மல்லுக்கட்டுல இறங்கி கைப்பற்றக் கூடுறதா, என்ன கிழமைன்னு தெரியலயே....

அப்படியே இவன் சுவத்துப்பக்கமா பாதுகாப்பா திரும்பி மெல்ல விலகிட்டான். அவளும் தலைமுடிய அள்ளி முடிஞ்ச மட்டுல ஒரு மூலயில போயி முக்காடு போட்டு படுத்துக்கிட்டாள். இவன் வாசற்படியில போய் நின்னுக்கிட்டு ஒரு பீடிய பற்றவச்சதும் ஒரு இழுப்பு இழுத்துக்கிடுவான், இவளை ஒரு பார்வை மொறச்சி பாத்துக்கிடுவான். அவளும் முக்காட்டை விலக்கி தலையத் தூக்கி பார்த்து பழையபடி படுத்துக்கிடுவாள். இப்படியே ரொம்ப நேரம் நடந்தது. தேவானை யோசிச்சாள். இப்படியே நேரம் போய்க்கிட்டிருந்தா காரியம் ஆகணுமே பள்ளிக் கூடம் போன பிள்ளைகள் பசியிலெ வருமேன்னு நினைச்சி, "ஹ்ர்ம்....ஹர்ர்ம்ம்ம் ... "ன்னு செருமிட்டு பேசுனாள்.

"ஆம்பளை அந்தமானக்கி பைசா பெறாத சோலிக்கு அடிச்சுப்போட்டு வாசப்படியில நட்டமா நிக்கலையின்னா அந்தா அந்த அடுக்குப் பானையில அரிசி இருக்கு. ரெண்டு கை அள்ளி, பெரிய சட்டியில உலைய வச்சு அரிசியை களைஞ்சு போட்டு வெந்ததும் வடிப்புமார் வச்சி வடிச்சு வெக்கலாமுள்ளே... க்கும் அத ஏஞ் சொல்லுவானெ இந்த அடிபட்ட கழுதை"

படுத்த மட்டுலயே பேசி முடிச்சா. அவன் தடபுடலா உலையவச்சி அரிசியைப் போட்டு செத்த நொடியில சோறாக்கிட்டான். அவள் தலைய தூக்கிப் பார்த்துட்டு 'ஆச்சா' ன்னு தலைய ஆட்டிட்டு பழையபடி படுத்தமட்டுல கிணத்துக் குள்ளிருந்து பேசுன மாதிரி பேசுனா.

"அந்த அஞ்சறைப் பெட்டியில பருப்பு வச்சிருக்கேன். அந்த சின்னச் சட்டியில ஒரு தம்ளர் தண்ணிய கொதிக்க வச்சி பருப்ப போட்டு வெந்து வரவும் அந்த மத்தைப் போட்டு கடைஞ்சி தாளிச்சு வச்சுட்டா பள்ளிக்கூடத்துலருந்து அலமந்து பசியோட வர்ற பிள்ளைக சாப்பிட்டுக் கிடுமுள்லே... க்கும் அத ஏஞ் சொல்லுவானெ இந்த அடிபட்ட கழுதை"

சோறு பொங்குனதும் அடுத்தாப்புல பத்தவச்ச பீடியை இவளைப் பார்த்து மொறச்சமட்டுல உறிஞ்சிக்கிட்டிருந்தவன் அவள் சொல்லி முடிச்சதும் பருப்புக் குழம்பு வைக்கிற வேலையில் மும்முரமாயிட்டான். பிள்ளைகளும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்து சேர்ந்தது.

"பிள்ளைகளுக்கு இம்புட்டிம்புட்டு கிண்ணத்துல போட்டு தானும் ஒரு வட்டில்ள போட்டு சாப்பிட வேண்டியதானெ நேரங்காணாதா? வயித்தை தொங்கப்போட்டுக்கிட்டு இருக்கணுமா, தேறத்துக்கு சாப்பிடலைன்னா ஆம்பளை உடம்பு என்னத்துக்காகும்...க்கும்...அதெ ஏஞ் சொல்லுவானெ இந்த அடிபட்ட கழுதை. எல்லாம் சாப்புட்டு முடிச்சு வட்டில்களை கழுவி வச்சான். தேவானை மெல்ல தலையைத் தூக்கிப் பார்த்தாள். முடிஞ்சிச்சான்னு மொணங்கி தலையை ஆட்டி பழையபடி முக்காடைப் போட்டு படுத்துக்கிட்டாள்.

பிள்ளைகள் பள்ளிக்கூடம் போயிருச்சிக. இவன் சாப்பிட்ட கையோடு ஒரு பீடியை வாயில வச்சி பற்ற வைக்கப் போனான். தேவானை பழையபடி சுவத்தைப் பார்த்த மட்டுல அவன் காதுபட மொணங்க ஆரம்பிச்சாள்.

"நமக்கின்னு யாரிருக்கா... அப்படியா வரம் வாங்கி வந்திருக்கேன். அந்தச் சட்டியில மிச்சமிருக்கிற பருக்கையை சுரண்டி ஒரு கும்பாவுல போட்டு இப்படித் தள்ளிவிட்டா எம் பொழது கழியும். தனக்குன்னு இருக்கிற மகராசங்க அவக்குன்னு போட்டுக் கிட்டாக. நாம அனாதிதானெ... க்கும் அத ஏஞ் சொல்லுவானெ இந்த அடிபட்ட கழுதெ"

குண்டான் அடுப்பாங்கரையில போயி இருக்கிற சோத்தைப் போட்டு பருப்பை ஊத்தி கும்பாவை அவபக்கமா சர்ர்ருன்னு தள்ளிவிட்டான். படுத்த மட்டுலயே இவ சாப்பாடு மொதக்கொண்டு முடிஞ்சது.

பொழுதடைஞ்சி விளக்கும் பொருத்தியாச்சு. பிள்ளைகள் விளையாடப் போயிருந்ததுக. குண்டான் வீட்டுக்குள்ளேயே மொடங்கி பேசாம கொள்ளாம இருக்க இச்சலாத்தியாகிப் போனான். ஒரு பாயும் தலையணையும் எடுத்துக்கிட்டு ஊர்க்கிணத்து மேட்டுல படுக்கிறதுக்குக் கிளம்பி வாசல் வரைக்கும் வந்துட்டான். தேவானை இப்பொ பலம்மா கத்துனாள். "முன்னந்திப் பனியில வெளியில போய் ஏம்படுக்கணும். இப்படி வந்து பாயில பக்கத்துல படுக்க வேண்டியதானெ... க்கும் அதெ ஏஞ் சொல்லுவானெ இந்த அடிபட்ட கழுதெ"

வாசப்படியில நின்னு காது வரைக்கும் வாயை இளிச்சு சிரிச்ச குண்டான் குபீர்ன்னு பாய்ஞ்சி உள்ளே போன செகண்டுல தேவானைக்கும் சிரிப்பாணி பொறுக்கலை.

Pin It