வழக்கமான நேரத்திற்கு

நீ படுக்கையைவிட்டு எழாதபோது

கழுத்திடுக்கில் கை வைத்துப் பார்க்கிறேன்

காச் மூச்சென்று கத்துகிறாய்

 

குளியலறையில் நீ இருக்கும் போது

எத்திசையில் இருந்து பெரும் சப்தம்

எழுந்தாலும்

"என்னங்க ஆச்சு" என்று

துடித்துப்போய்க் கேட்கிறேன்

காதில் விழாதது போல் மௌனம் காக்கிறாய்.

 

வீட்டிலிருந்து புறப்பட்டுபோய்

மணிநேரம் ஆனதும்

கைப்பேசியில் அழைத்து

"ஆபீஸ் போய்ட்டீங்களா?" என்று

கேட்டு முடிப்பதற்குள்

"ம்ம்" என்று முடிக்கிறாய்

 

மதிய உணவில்

உப்பு புளி காரம்

சரியாக இருந்ததாயென்று

கேட்கபதற்கான என் அழைப்பிற்கு தவறாமல்

"ஸ்விட்ச் ஆ ப்" என்று

பதில் வந்து விழச் செய்கிறாய்.

 

வீடு திரும்பியதும்

உன் விரல் நுனியில் பட்டிருக்கும்

மையைக் காயமென எண்ணி

"ஐயையோ!" என்று எட்டித் தொடுகையில்

கொதிகலனைத் தொட்டது போல்

விருட்டென்று விரல் இழுத்து

முகம் சுளிக்கிறாய்

 

இந்த ஓரிரு செய்கைகள் போல்

ஓராயிரம் செய்கைகள்

நடந்தேறியிருக்கிறது

இவைகளை நான்

"அக்கறை"

என்று அர்த்தப் படுத்திகொள்கிறேன்

 

ஆனால்

உன் அர்த்தங்கெட்ட அகராதியில்

இதற்கெல்லாம் பெயர்

"தொந்தரவு"

Pin It