சொலவடை கவிதையாக இருப்பது, அதன் உயிர்த்தேவை. ஏனெனில், சொலவடைக்கு ஏட்டுச் சிம்மாசனம் எட்டாத ஆகாயம். மக்களின் உதடுகளில் உலவி, ஞாபகமடியில் உயிர் வாழ்ந்தாக வேண்டிய கட்டாய அவலம். ஞாபக இடுக்குகளில் சிக்கி நிற்பதற்கு, முதல் வாக்கியத்தை தொடர்ந்து தானாகவே பின் தொடர்கிற மறுவாக்கியம் என்ற தன்மை அவசியம்.

சொலவடைகளில் புழக்கமுள்ளவன் இயல்பாகவே சொல்வளமிக்க மொழியாளுமை கொண்டிருப்பான். சொலவடைகளில் ஊறித் திளைத்தவனின் காலடியில் வார்த்தைகள் வந்து சேவகம் பண்ண காத்திருக்கும்.

அப்படியொரு வரம் தருகிறது. "சொலவடைகளும் சொன்னவர்களும்" என்றொரு நூல். நூலாசிரியர் பேரா.ச.மாடசாமி.

அறிவொளி இயக்கத்தின் உடம்புகளாகவும் உயிர் நரம்புகளாகவும் மாதத்திற்கு முப்பத்தைந்து நாட்கள் ஓய்வில்லாமல் ஓடி ஓடி உழைத்த கருத்தாளர்கள், கற்பிப்போர்கள், கற்பவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து உழைப்பாளி மக்களுக்குள் ஆனா, ஆவன்னா சொல்லிப் பழக முனைந்தார்கள். இரவும் பகலும் நெருங்கிப் பிணைந்து பழகினார்கள். பாமர மக்களின் மனமடிகளின் மடிப்புகளுக்குள் மனதைவிட்டு துழாவித் துழாவி... பொறுக்கி பொறுக்கிச் சேகரித்த அத்தனை சொலவடைகளையும் அள்ளிவைத்து ஒரு தட்டில் தருவதுபோல சிந்தாமல் சிதறாமல் அப்படியே நூல்வடிவில் தந்திருக்கிறார், மாடசாமி.

அறிவொளி இயக்கத்தின் பண்பாட்டுச் செயல்பாடுகளில் சேகரித்துக் கொண்டுவரப்பட்ட சொலவடைக்குவியல் முழுவதையும் ஒழுங்குபடுத்துவதற்கும், வரிசைப்படுத்துவதற்கும், வகைவாரியாக பிரிப்பதற்கும் அவற்றுக்கான உரைவிளக்கம் எழுதுவதற்கும் பலவருஷகால உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. அப்படியான அறிவார்ந்த வியர்வை வாசத்துடன் தான் முன்னூற்று நாற்பது பக்கம் கொண்ட முழுமையான இலக்கியப் புதையலாக இந்த நூல்.

சொலவடைக்கும் - பழமொழிக்கும்-நீதிமொழிக்கும் -முழக்கமொழிகளுக்குமிடையிலான வேறுபாடுகளை கோடு கிழித்துக் காட்டி, சொலவடையை உயர்த்திக் காட்டப்படுகிறது.

"தருணங்கள்" "கசப்பு, கரிப்பு" "யதார்த்தம்-எரிந்ததும், புரிந்ததும்" போன்று எட்டுத் தலைப்புகளில் அனைத்துச் சொலவடைகளும் அறிவார்ந்த கவித்துவ உரையுடன் அணிவகுக்கின்றன. அனைத்துச் சொலவடைகளும் எழுதப்படிக்கத் தெரியாத வியர்வை மக்களின் கவிதைகள். சமுதாய ஆதிக்கங்களால் நசுக்கப்பட்ட எளிய மனதுகளின் பெருமூச்சுகள். ஒடுக்குமுறைகளில் உடைபட்டுச் சிதறிய மனிதமனத்தின் சீற்றங்கள்... கண்ணீர்... கசந்த உணர்வுகள்.

பசியிலும் பட்டினியிலும் வாடி மெலிந்து போகாத கற்பனைகள். கற்கும் பசியுள்ள படைப்பாளிகளுக்கெல்லாம் கற்பகத்தரு. பொற்கனிகள். புழுதிவாசத்துப் பாடல்கள். வதைபட்ட மனதுகளின் கலகச்சீறல்கள்.

"வேலையும் இல்ல! வென்னி வைக்கப் பானையும் இல்ல!"

"மறைச்சுக்கட்ட மாத்துப் புடவை இல்ல"

"அன்னும் இல்ல ஆடி, இன்னும் இல்ல தீவாளி"

"அன்னைய பாடு ஆண்டுப் பாடா இருக்கு"

"அறுக்குறப்பவும் பட்டினி! பொறுக்குறப்பவும் பட்டினி!

பொங்கல் அன்னைக்கும் பட்டினி! பொழுதன்னைக்கும் பட்டினி!"

"பொங்கல் எப்பவரும்? பொருமல் ஒப்ப தீரும்?"

வாழ்வின் அவலத்தில் மிதக்கிற கண்ணீர் வார்த்தைகள்,

"எல்லாரும் ஏறி எளைச்சகுதிரை மேல

சாஸ்திரியார் ஏறி சறுக்கி வுழுந்தாராம்"

இதற்கு நேர் எதிராக ஒரு சொலவடை.

"எல்லாரும் ஏறி எளைச்ச கழுதைமேல

வண்ணான் ஏறி வையாளி பாய்ஞ்சானாம்"

(வையாளி-விரைவான பயணம்)

"அஞ்சுபணம் கொடுத்து அடிக்கச் சொன்னானாம்!

பத்துப்பணம் கொடுத்து நிறுத்தச் சொன்னானாம்"

வம்புவழக்கு வீம்பு வீராப்பு காரணமாக காவல் நிலையம், கோர்ட்படி ஏறியவர்கள் அனுபவம் போலிருக்கிற கசப்புகள்.

"உழைச்சுப்பிழைக்குறவன் ஒருகோடி

ஏச்சுப் பிழைக்குறவன் ஏழுகோடி"

"சுமந்தவன் தலையிலே பத்துச்சுமை"

ஏட்டுமொழிக் கவிதை மாதிரி நேர்ப்பொருளில் இனம் காண முடியாது, சொலவடைகளை. சொலவடைகளில் உள்ளுறைந்து கிடக்கிற சமூக அனுபவங்களைத் தாம் அடையாளம் காண முடியும்.

" குமரின்னு இல்லாம தாலிகட்டி

மலடின்னு இல்லாம புள்ள பெத்துக் கிட்டேன்"

வாழ்வின் ஏமாற்ற அறைகளை வலியுடன்

சொல்கிற ரணவரிகள்.

"உழக்குக்குள்ளே கிழக்கா மேக்கா

உருண்டுக்கிட்டு கெடக்கேன்"

குறுகலான குடும்ப வாழ்வின் கசப்பான தலையெழுத்தை கோடிட்டு காட்டுகிற வரிகள்.

எதைச் சொல்ல... எதை விடுவது என்று ஆயாசமும் மலைப்பும் வருகிறது. சொலவடைகளை அறிமுகப்படுத்தி எழுதியிருக்கும் வரிகளும் கவித்துவச் செறிவுடன் திகழ்கின்றன. வகுத்து, தொகுத்து வகைப்படுத்திய பாங்கில் தெரிகிற சமுதாய நோக்கு. சொலவடைக்கான விளக்கவரிகள் யாவும் வெளிச்சக் கவிதைகள்.

ஆதிமனிதப் புராதன அனுபவச் சங்கிலிகளின் முடிவற்ற நீளத்தை, அதன் நுனியை பிடித்து நம் மனதில் கொடுத்து முழுமையை உணர்த்திவிடுகிறது, சொலவடை.

'புழுதிக்குள் இத்தனை கவிமணமா? வியர்வைக்கு இத்தனை காவியவல்லமையா?' என்றெல்லாம் நம்மை பிரமிக்க வைக்கிறது.

ஏட்டு மொழியை மட்டுமே அறிந்திருக்கிற ஒட்டுமொத்த தமிழிலக்கியப் படைப்புகள் யாவும் இந்த நூலுக்குள் பயணப்பட்டால்... முழுமையாக செம்மைப்படும். இலக்கியப் படைப்பாளிகள் மட்டுமல்ல சகல தமிழ் வாசகத்திரளும் இந்த நூலுக்குள் பயணப்பட்டாக வேண்டும்.

சில பல சொலவடைகள் இன்னும் கொஞ்சம் கூடுதலான விவரிப்பை கோருகின்றன. இன்னும் சில சொலவடைகள் வேறு கோணத்திலான அறிமுகத்தை எதிர்நோக்குகின்றன.

வாசித்து முடித்தபிறகும் ஆறஅமர யோசிப்பதற்கும், அசைபோட்டுப் பார்ப்பதற்கும் புதிய புதிய கோணத்திலான அணுகலுக்கும் வாசலைத் திறந்து வைத்திருக்கிறது, நூல்.

பிழையேயில்லாமல் அழகான வடிவமைப்புடன் அச்சிட்ட அருவி மாலை பதிப்பகத்தை பாராட்டலாம்.

 

 

Pin It