இன்று அரசியல்வாதிகள் முதல்வர் பதவி மீது மோகம் கொண்டு வெறியுடன் அலைவதைப் பல மாநிலங்களில் நாம் காண்கிறோம்.
ஆனால் அவர் ஒரு வித்தியாசமான மனிதர் 1957இல் கேரளாவில் அவரது கட்சி வெற்றி பெறுகிறது. முதல்வர் பதவி அவரை நாடி ஓடி வருகிறது. அவர் முதலமைச்சராகிறார். மக்கள் செல்வாக்கு வெள்ளமாய் பெருகுகிறது. இதைப் பொறுக்காத டெல்லி சிம்மாசனம் அவரது அரசை டிஸ்மிஸ் செய்கிறது. ஆனால் 1967 தேர்தலில் மீண்டும் அவரது கட்சி வெற்றி பெறுகிறது. மீண்டும் முதல்வராகிறார். அவரது வாயசைவிற்கு கட்டுப்படுகிற இலட்சோப இலட்சம் மக்கள் திரள் அவர் பின்னால் அணிவகுக்கிறது. அவரது கட்சி அடுத்தடுத்து ஆட்சிக்கட்டிலில் அமரும் வாய்ப்புக்கள் அதிகரிக்கிறது. இந்த நிலையில் கட்சியின் தலைமை அவரை டெல்லியிலிருந்து பணியாற்ற அழைக்கிறது. எந்தத் தயக்கமுமில்லாமல் மத்தியக்குழு அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக அவர் 15 ஆண்டுக்காலம் பணியாற்றுகிறார். அமைச்சர் பதவியைவிட சமூகத்தை அடியோடு மாற்றிடும் சமூகப்புரட்சிப் பணியே பிரதானம் என்று வாழ்ந்த அந்த மாமனிதர் தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்.
நடமாட முடியாத தள்ளாத வயதிலும், தனக்கு மட்டுமல்லாது தனது குடும்பத்தாரையும் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் பலரை நினைக்கும்போது தோழர் இ.எம்.எஸ், ஒரு அபூர்வ, அற்புத மனிதர்.
கேரள முதலமைச்சராகப் பணியாற்றிய அந்தக் காலத்திலும். அவர், தன்னைப்பற்றி சிந்திப்பவராக இருந்ததில்லை. தனது சிந்தனை, செயல் இரண்டையும், கேரளாவின் ஒடுக்கப்பட்ட உழைப்பாளி மக்களுக்காகவே அமைத்துக் கொண்டார். புதிய கேரளாவைப் படைத்தவர். கிராமப்புற விவசாய வர்க்கம், நிலப்பிரபுத்துவ அடிமைச் சங்கிலிக்குள் சிக்கிக்கொண்டிருந்த காலம் அது. தோழர் இ.எம்.எஸ் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த நிலச்சீர்திருத்த சட்டங்கள் அந்த அடிமைவிலங்கினை நொறுக்கின. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலக்குவியல் சில நிலப்பிரபுக்களிடம் இருந்த நிலையை மாற்றி, நில உச்சவரம்பைக் கொண்டு வந்து, உபரி நிலங்களை ஏழை நிலமற்ற விவசாயிகளுக்கு 1969ஆம் ஆண்டிலேயே வெற்றிகரமாக பகிர்ந்தளித்த சாதனையாளர் தோழர் இ.எம்.எஸ்.
குத்தகை விவசாயிகளின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு, அவர்களை எந்த நேரத்திலும் நிலத்திலிருந்து வெளியேற்றுகிற கொடூரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. குடிமனைப்பட்டாக்கள் தங்குதடையின்றி உரியோருக்கு வழங்கப்பட்டன. இந்த நிலச்சீர்திருத்தம் கேரளச்சமூகத்தை அடியோடு மாற்றி ஒரு நவீன கேரளா உருவாகிட வழிவகுத்தது. அதனால் தான் தோழர் இ.எம்.எஸ் மறைந்த போது வரலாற்றை படைத்தவர், வரலாற்று நாயகர் என்ற புகழாரங்கள் சூட்டப்பட்டன. அவரது வாழ்நாள் முழுவதும் அவரை எதிர்த்து வந்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி கூட இ.எம்.எஸ் இல்லாத கேரளாவை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று வருத்தப்பட்டார்.
அன்று, சென்னை இராஜதானிக்கு உட்படுத்தப்பட்டிருந்த பகுதியோடு, திருவிதாங்கூர் சமஸ்தானம், கொச்சி, மலபார் பகுதிகளை இணைத்து கேரள மாநிலம் உருவாக்கக் காரணமாக இருந்தவரும் தோழர் இ.எம்.எஸ் தான். அவர் எழுதிய தேசிய இனப்பிரச்சனை பற்றிய கட்டுரைதான் தனி மொழி, தனி கலாச்சார வேர்களைக் கொண்ட பகுதி ஒரு மாநிலமாக பரிணமிக்கத் தகுந்தது என்ற ஜனநாயக கோட்பாட்டை முன்வைத்தது. இது மொழிவழி மாநிலங்கள் உருவாக வேண்டுமென்ற உயரிய கோரிக்கை எழக்காரணமாக அமைந்தது. பின்னர் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. எனவே, தோழர் இ.எம்.எஸ் கேரள வரலாற்று நாயகர் மட்டுமல்ல, இந்திய வரலாற்றின் சிற்பியாகவும் திகழ்கின்றார்.
சாதியத்திற்கு எதிரான கலகம்
1909, ஜுன் 13 அன்று இளங்குளம் மணக்கல் பரமேஸ்வரன் நம்பூதிரிபாடுவின் மகனாகப் பிறந்தவர் இ.எம்.எஸ். சமஸ்கிருத பண்டிதரான தனது தந்தையிடமும், இதர சமஸ்கிருத ஆசிரியர்களிடம் வீட்டிலிருந்த படியே சமஸ்கிருத இலக்கியங்களைப் பயின்றார். அன்றைய நம்பூதிரி சமூகத்தில் இருந்த கல்வி முறை இது.
சிந்தனையை வளர்த்திட வாய்ப்பில்லாமல் அர்த்தம் ஏதும் புரியாமல் சமஸ்கிருத பாடல்களை உருப்போடுகிற கல்வி மீது வெறுப்பு கொண்டார். இ.எம்.எஸ் அதனை உதறிவிட்டு குடும்பத்தாரின் எதிர்ப்புக்கிடையே பள்ளிக்கல்விக்கு சென்றார். உளுத்துப்போன பழமைக்கு எதிராக அவர் செய்த முதல் கலகம் இது.
அடுத்தடுத்த கலகங்கள் துவங்கின. பிறபோக்குக்குப் பெயர் பெற்ற நம்பூதிரி சமூகத்தின் மூடப்பழக்க வழக்கங்களையும் சமூக ஒடுக்கு முறையையும் எதிர்த்துப் போராடத் துவங்கினார். தனது 16. வதுவயதில், யோகாக்ஷேம சபை என்ற சமூக சீர்திருத்த அமைப்பின் செயலாளராக பொறுப்பேற்றார். நம்பூதிரி சமூகத்தில் விதவைப் பெண்கள் மீது இந்து பழமைவாதம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டார். விதவைகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். இளவயது பெண்களை முதியவர்கள் திருமணம் செய்யும் கொடுமைக்கு எதிராகவும் போராடினார். இப்படிப்பட்ட திருமணங்கள் நடக்கும் மண்டபங்களுக்கு எதிரில் நின்று மறியல் போராட்டம் நடத்தினார். சாதிஒடுக்குமுறை ஆதிக்கம் செலுத்திய ஒரு சிறைக்கூடமாக இருந்த கேரளாவை உருமாற்றிய இயக்கம் தோழர் இ.எம்.எஸ் தலைமையேற்று நடத்திய சாதி ஒழிப்பு இயக்கம். தான் சார்ந்திருந்த பிராம்மணீய நம்பூதிரிச் சமூகத்தின் ஒடுக்குமுறையை எதிர்த்து துவங்கிய அவரது பயணம் சாதிக்கட்டமைப்பையே மாற்றும் எல்லை வரை சென்றது. சொத்து படைத்த நிலப்பிரபுத்துவ வர்க்கத்தில் பிறந்த இ.எம்.எஸ் தன்னை சிந்தனை ரீதியாக உழைப்பாளி வர்க்கமாக மாற்றிக்கொண்டார். இந்த வர்க்கச் சிந்தனை அகலக்கூடாது என்பதற்காக தனது சொத்துக்களை விற்றுக்கிடைத்த, அந்தக்காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையான ரூ 1.80 லட்சத்தை கட்சிக்கு நன்கொடையாக அளித்துவிட்டு , எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார்.
ஏகாதிபத்திய எதிர்ப்புக்கலகம்
இதன் தொடர் ஓட்டமாக ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டத்திற்கு அவர் தலைமையேற்கும் அடுத்த கட்டம் நிகழ்ந்தது. அவர் கல்லுரிப்படிப்பைத் துறந்து , காங்கிரஸ் கட்சி நடத்திய விடுதலைப்போராட்டங்களில் பங்கேற்றார். அவரது தீவிரமான செயல்பாடு 1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளராக உயரும் அளவிற்குச் சென்றது. அந்த நிலையில்பிரிட்டிஷ் ஆட்சி சட்டசபைக்கான தேர்தல்களை நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் இதர தலைவர்களெல்லாம் பதவிகளைப் பிடிக்க ஓடிவிட்ட நிலையில் , தோழர் இ.எம்.எஸ் மிகச் சாதுர்யமாக மக்களை அமைப்பு ரீதியில் திரட்டும் பணிகளச் செய்தார். எல்லா கிராமங்களிலும் ஒரு நுலகம், ஒரு இரவுப்பள்ளி, ஒரு கட்சி கிளை அமைப்புக்குழு , அமைக்க வேண்டுமென செயலாளர் என்ற முறையில் உத்திரவு பிறப்பித்தார். வெறும் உத்திரவாக மட்டும் இல்லாமல், தானே முன்முயற்சி எடுத்து கிராமந்தோறும் மேற்கண்ட மூன்றையும் உறதிப்படுத்த அயராது சுற்றுப்பயணம் செய்தார். இந்த மூன்றும்தான் பெருவாரியான மக்களை கல்வி அறிவு பெற்றவர்களாக மாற்றி, மார்க்சிய ஆதரவாளர்களாகவும் மாற்றியது. கிளை அமைப்புக்குழுக்கள் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கிளைகளாக உருமாறின. இன்றளவும் கம்யூனிஸ்ட் இயக்கம் அங்கு உயிர்ப்புடன் விளங்குவதற்குக்காரணம், அன்று இ.எம்.எஸ் போட்ட அஸ்திவாரம்தான். அவரோடு பி.கிருஷ்ணப்பிள்ள, ஏ.கே.கோபாலன் ஆகிய இருவரும் ஆற்றிய பங்களிப்பும் மகத்தானது.
தத்துவப்போராளி
ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு இயக்கத்தின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்ட இ.எம்.எஸ் பிறகு, மார்க்சிஸ்ட் கட்சி 1964இல் உதயமான போது, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டார். பின்னர் மார்க்சிஸ்ட் கட்சியன் பொதுச்செயலாளராக உயர்ந்தார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கம் பல தத்துவார்த்தப் பிரச்சனைகளை எதிர்கொண்ட போது மார்க்சிய வெளிச்சத்தில் அவற்றுக்கெல்லாம் வழிகாட்டிய மார்க்சிய மேதை இ.எம்.எஸ். இந்திய நிலைமைகளில் மார்க்சியத்தைப் பொருத்தி இந்தியச் சமூகத்தின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பாட்டாளி வர்க்கங்களின் நலன் காக்கும் தளத்தில் நின்று விடை கண்டவர் அவர். இந்திய வரலாற்றையும், கேரளாவின் வரலாற்றையும் மார்க்சிய வழி நின்று விளக்கியவர் அவர். வரலாற்றின் திசைவழி கம்யூனிஸத்தை நோக்கியே என்பதில் இறுதி மூச்சுவரை அசையாத நம்பிக்கை கொண்டிருந்தார். தான் கண்டறிந்த தத்துவ முத்துக்களை நடைமுறை எனும் பரிசோதனைச் சாலையில் பரிசோதித்தவர் அவர். குளு குளு அறையில் மெத்தப்படித்த கல்வியாளர்கள் விவாதிக்கும் விஷயமாக, அவர் தத்துவத்தை பயன்படுத்தவில்லை. மக்கள் இயக்கம் காணும் கருவியாகவே தத்துவத்தை அவர் பயன்படுத்தினார்.
ஓய்ந்திடாத பேனா!
இ.எம்.எஸ் ஸின் பண்பாட்டு பங்களிப்பும் முக்கியமானது. இலக்கிய விமர்சனம் என்பதை மலையாளத்தில் ஒரு கலையாக வளர்த்தெடுத்தவர் அவர். (இன்னமும் தமிழில் இது வளரவில்லை) அந்தக்காலகட்டம், மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கையே கருவாகக் கொண்டு இலக்கியங்கள் உருவாகிக் கொண்டிருந்த காலம். இ.எம்.எஸ் ஏற்படுத்திய மார்க்சிய விமர்சன நெறி, சாமான்ய மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாகிட வழிவகுத்தது. அவர் ஒரு சிறந்த பத்திரிகையாளர். தேசாபிமானி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது பேனா தொடாத பரப்பு ஏதுமில்லை, அரசியல், சமூகம், பொருளாதாரம், பண்பாடு, கலை, இலக்கியம், மார்க்சிய தத்துவப் பிரச்சனைகள் என ஏராளமாக எழுதிக்குவித்துள்ளார். அவரது எழுத்துக்கள் இதுவரை 100 நூல்களாக தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய எழுத்தாளர்கள் யாரும் இந்தச் சாதனைச்சிகரத்தை தொடவில்லை. அவரது வாழ்க்கையின் பரிணாமங்களை ஒவ்வொன்றாகத் தொகுத்தால் கீழ்கண்டவாறு அமைந்திடும்.
சிறந்த தத்துவவாதி
சிறந்த மார்க்சியவாதி,
சிறந்த ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்,
சிறந்த சமூக சீர்திருத்தவாதி,
சிறந்த நிர்வாகி,
சிறந்த பத்திரிகையாளர்,
சிறந்த வரலாற்றாசிரியர்,
சிறந்த இலக்கிய விமர்சகர்
சிறந்த பேச்சாளர்
ஆனால் இந்த வரிசைக்கு முற்றுப்புள்ளி கிடையாது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2009
இ.எம்.எஸ் எனும் இந்திய அதிசயம்
- விவரங்கள்
- என்.குணசேகரன்
- பிரிவு: இளைஞர் முழக்கம் - செப்டம்பர் 2009