எல்லா மக்களுக்கும் நல்வாழ்வு கிடைக்கும் சிறந்த இந்தியாவை உருவாக்க அனைத்துப் பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக அணிதிரண்டு போராட இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூஸ்னிட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டின் நிறைவாக சிவானந்தா காலனியில் மக்கள் தலைவர் ஜோதிபாசு நினைவுத் திடலில் திங்களன்று நடந்த பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நம்நாட்டில் எல்லா வாய்ப்பு, வளங்களும் இருக்கின்றன. ஆனால் இன்று இரண்டு இந்தியாக்கள் இருக்கின்றன. ஒன்று, செல்வந்தர்களின் இந்தியா, மற்றொன்று வறுமையில் சிக்கித் துயரப் படும் இந்தியா. நம் நாட்டின் செல்வ வளத்தை இளைஞர் சக்தியில் முதலீடு செய்தால், எல்லோருக்கும் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, பொது சுகாதாரம் என்ற வலுவான முழக்கத்தின் அடிப்படையில் சிறந்ததொரு இந்தியாவை உருவாக் குவதற்கு இளைஞர்கள் தங்கள் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இந்தியாவில் ரூ.5000 கோடிக்கு மேல் செல்வம் வைத்திருக்கும் 52 தனிநபர்களிடம் நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு செல்வம் குவிந்திருக்கிறது. மற்றொரு பக்கம் 77 சதவிகிதம் பேர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர்.

50 சதவிகிதம் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைப்பதில்லை. உலகில் ஒவ்வொரு நாளும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் இறக்கும் 5 குழந்தைகளில் 3 பேர் இந்தியக் குழந்தைகளாவர். 78 சதவிகிதம் தாய்மார்கள் ரத்த சோகை பீடித்தவர்களாக இருக்கின்றனர்.

இத்தகைய இந்தியாவை உருவாக்கும் ஆட்சி யாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக இளைஞர்கள் கலகம் செய்ய வேண்டும். இந்தப் பிரச்சனை களுக்குத் தீர்வு காண தொலைநோக்குப் பார்வையுடன் தெளிவான மாற்றுக் கொள்கை கொண்ட ஒரே அமைப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தான்.

மக்கள் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் நாம் எழுப்பினால் இவற்றைத் தீர்வு காண்பதற்கு நம்மிடம் போதிய நிதியாதாரம் இல்லை என்று ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் மிகப் பெரும் முதலாளிகளுக்கு, கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரிச் சலுகை களை வழங்கியுள்ளனர். பணக்காரர்களுக்கு வழங்கும் சலுகைகளை ஊக்குவிப்புத் திட்டம் என்று கூறும் ஆட்சியாளர்கள், ஏழைகளுக்கு மானியம் தருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல என் றும் சொல்கின்றனர். ஆனால் பெரும் செல்வந் தர்களுக்கு சட்டப்படி விதிக்கும் வரியை அதிகரித்து அதில் கிடைக்கும் நிதியைக் கொண்டு நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், பாசனக் கால்வாய்கள், சாலைகள், பாலங்கள் கட்டினால் அதன் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் கொடுக்கலாம். மேலும் புதிய கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் கட்ட முடியும்.

ஆனால் இதைச் செய்ய மறுத்து பெரும் பணக்காரர்களுக்குத் தான் ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுக்கின்றனர். மேலும் அதிகாரத்தில் இருப்போர் ஊழல் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடிக்கின்றனர். நம் நாட்டின் செல்வாதாரத்தை நம் மக்களுக்குப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் பின்பற்றும் கொள்கைத் திசை வழியை மாற்ற வேண்டும். அதற்கு அரசியல் உறுதிப்பாட்டுடன் அனைத்துப் பகுதி இளைஞர் களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். மேலும் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் மதவாத, பிளவு வாத சக்திகளின் சதிகளுக்கு எதிராக அனைத்து இளை ஞர்களையும் ஒன்று சேர்க்க வேண்டும்.

காஷ்மீரில் என்ன நடக்கிறது, நம் மக்களை இந்து, முஸ்லிம் என்று பிளவுபடுத்த சில சக்திகள் முயல்கின்றன. நம் நாட்டில் தீபாவளியில் அலி பங்கேற்பதும், ரம்ஜானில் ராம் பங்கேற்பதுமாக இந்து, முஸ்லிம் ஒற்றுமையை மையமாகக் கொண்ட கலாச்சாரம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உருவாகியிருக்கிறது. ஆனால் அரசியல் ஆதாயத்துக்காக இதைச் சீர்குலைக்க வகுப்புவாத சக்திகள் முயல்கின்றன. நாட்டின் ஒற்றுமை, மத நல் லிணக்கத்தைப் பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும். உறுப்பினர் எண்ணிக்கையில் லட்சங்களைத் தாண்டிய மேற்குவங்கம், கேரள மாநிலங்களின் வரிசையில் இருக்கும் தமிழக வாலிபர் சங்கம் மிகப்பெரும் சக்தியாக, தமிழக அரசியலில் தாக்கம் செலுத்தும் சக்தியாக வளர்ந்திருக்கிறது. அது மட்டு மின்றி இந்திய அரசியலிலும் தாக்கம் செலுத்தும் சக்தியாக வளர வேண்டும்.

நம் தியாகிகளின் பாரம்பரியத்தை உள்வாங்கி கோடிக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டி வளமான இந்தியாவை உருவாக்கும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

அனைத்து பிற்போக்கு சக்திகள், ஆளும் வர்க்கங்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை இளைஞர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது ஆங்கில உரையை சிஐடியு மாநிலத் தலைவர் ஆர்.சிங்காரவேலு தமிழில் மொழி பெயர்த்தார்.

Pin It