நமது அமைப்பு இந்தியாவின் மிகப்பெரிய இளைஞர் அமைப்பாகும் 1.72 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நம் அமைப்பில் உள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நம்முடைய வெண்கொடி பரந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு, நாள் இந்த இயக்கம் வளர்ந்து கொண்டே வருகிறது. 1980, நவம்பர் _ 3 அன்று துவங்கி இந்த இயக்கம் கடந்து 30 ஆண்டுகாலமாக ஒவ்வொரு நொடியும் இந்திய இளைஞர் நலனுக்காகவும், சமூகப் பிரச்சனைகளை முன்வைத்தும் தொடர்ந்து போராடி வருகிறது.

“சோசலிசமே எதிர்காலம், எதிர்காலம் நமதே’’ என்ற லட்சிய வேட்கையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. ஏகாதிபத்தியம் தன்னுடைய முகத்தை மாற்றிக்கொண்டே இருந்தாலும் அதன் குணம் எந்த வகையிலும் மாறவில்லை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் வெளியே செல்லும் கதவு வழியாக ஜார்ஜ்புஷ் சென்றிக்கிறார், உள்ளே வரும் வழியாக ஒபாமா வந்திருக்கிறார். அவர்களுடைய நிறத்தை தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.

இன்றும் ஆஃப்கானிஸ்தான், வடகொரியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள், லத்தின் அமெரிக்கா, கியூபா மீதான அதன் மேலாதிக்க அணுமுறை மாறவில்லை. ஐந்து கியூப இளைஞர்களை எந்த வித அடிப்படை வசதியும் இன்றி சிறைப்பிடித்து வைத்துள்ளது. தென் கொரியாவில் எழும் ஒன்றுபட்ட கொரியா என்ற கோஷத்தை எதிர்க்கிறது.

ரஷ்யாவில் சோசலிசம் வீழ்ந்துவிட்டது இனி சோசலிசத்திற்கு எதிர்காலம் இல்லை என்று கூறிவந்தனர். சோசலிசநாடாக இருந்தபோது ரஷ்யாவில் வேலையின்மை என்பதே கிடையாது. விவசாயம், கல்வி, விளையாட்டு, சமூகப் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் முதன்மையான நாடாக ரஷ்யாதான் திகழ்ந்தது. இன்றோ 44 சதவிதமான இளைஞர்கள வேலையின்றி தவிக்கின்றனர். கல்வி, விவசாயம், சமூகப் பாதுகாப்பு என அனைத்திலும் பின்தங்கியே உள்ளது.

உலகளவில் சீனா, கியூபா, வடகொரியா, மற்றும் வியட்நாம் ஆகிய நான்கு நாடுகள் தற்போது சோசலிச லட்சியத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்கின்றது. கியூபாவை பொறுத்தரை பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்றிருந்தாலும் மருத்துவத் துறையில் சிறப்பான வகையில் செயலாற்றி வருகிறது. 80,000த்திற்கும் மேற்பட்ட கியூப மருத்துவர்கள் உலகம் முழுமையிலும் இலவசமாக மருத்துவ சேவைபுரிகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 5000 தென்ஆப்ரிக்க மாணவர்கள் இலவசமாக கியுபாவில் மருத்துவ படிப்பு பயின்று வருகின்றனர்.

கடந்த 63 ஆண்டுகால சுதந்திர இந்தியாவை காங்கிரஸ் அரசுதான் 52 ஆண்டுகள் ஆட்சி புரிந்திருக்கின்றது. நிலமை என்ன? இன்று இந்தியாவில் 23 கோடிக்கும் மேற்பட்டோர் பட்டினியால் வாடுகின்றனர். 1947ல் கல்வியறிவு பெறாதவர்களின் எண்ணிக்கை 26 கோடி இன்றோ அது 36 கோடியாக உள்ளது. 16 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலையற்று காத்துக்கிடக்கிறார்கள். இந்த அவல நிலையை பற்றி எந்த இளைஞர் காங்கிரஸினரும் பேசப்போவது இல்லை. நாம்தான் இதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டியவர்கள்.

நமது அமைப்பில்தான் தலைவர்கள் ஊழியர்களாகவும், ஊழியர்கள், தலைவர்களாகவும் திகழ்கின்றோம். நமது பயணம் நல்ல வசதியான பாதையிலான பயணம் அல்ல. தியாகம், கொடுமை, கஷ்டம் நிறைந்தது அது. ஒவ்வொரு ஏழுநாளும் ஒரு தோழரை நாம் இழந்துள்ளோம். நீண்ட தியாகிகள் பட்டியலை கொண்டது நமது இயக்கம்.

நமது அமைப்பு குறிப்பிட்ட காலத்தில் மலர்ந்து வாடும் அமைப்பு கிடையாது. ஒவ்வொரு நொடிபொழுதும் வருடத்தின் 365 நாளும் இம்மக்களுக்காக களம் காணும் அமைப்பு இது.

அப்படிப்பட்ட இந்த அமைப்பிற்கு போர்குணம் மிக்க, திறமையான இளைஞர்களின் கூட்டம் அவசியம். கிளைகள் நமது உயிர் செல்கள். அங்கிருந்துதான் புது,புது இளைஞர்களை சந்திக்க வாய்ப்புள்ள இடம். அதை முறையாக நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

81 பேரை கொண்ட புதிய மாநிலக்குழு உறுப்பினர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இயல்பான தலைவர்களாக, மக்கள் பிரச்சனைகளில் முன்நிற்பவர்களாக, சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களாக நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும்.. மேற்கு வங்கம், கேரளா அடுத்த படியாக தமிழகம் 10 லட்சம் உறுப்பினர்களை கடக்கும் மாநிலமாக தமிழகம் இந்த ஆண்டு மாற, வேண்டு மென்று வாழ்த்தி விடைபெற்றுக்கொண்டார்.

தொகுப்பு:ச.லெனின்

Pin It