குழந்தைகளாக உள்ளவரை மகிழ்வைத் தரும் கோடைகால விடுமுறைகள், பள்ளிக்கல்வியில் எட்டாவது வகுப்பு வரும்போதே பெரும்பாலும் தொலைந்துபோய்விடுகிறது. பத்தாவது வகுப்புக்காக பதட்டத்துடன் துவங்கும் படிப்பும், இதயத் துடிப்பும் மிக அதிகமாவது பன்னிரெண்டாவது வகுப்பு தேர்வுகாலத்திலும், தேர்வு முடிவு வெளியிடப்படும் காலத்திலும்தான்.
எந்தக் கல்லூரியில், என்ன படிக்க வைப்பது என பலர் பல ஆலோசனைகளை ஒர் ஆண்டாகவே விசாரித்து, தேர்வு முடிவு வெளியிடப்படும் தினம் வரை யோசித்துக்கொண்டிருப்பார்கள். நண்பர்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், இணைய தளங்கள், கல்வி ஆலோசகர்கள் என தேடிய பின்பும் இறுதி முடிவு எடுக்க முடியாமல் பலர் திணறுவதும் உண்டு. ஆலோசனை பெறுவது எளிதெனினும், அக்கல்லூரியில் கிடைக்குமா இக்கல்லூரியில் கிடைக்குமா என்ற வருத்தம்தான் அவர்களின் குழப்பத்துக்கான பெரும் காரணமாகும். பெற்றோர்களின் பெரிய கவலை சிறந்த கல்லூரி எது என்பதே. கெடுபிடிகள். நன்கொடை என்பது அனைத்து கல்லூரிகளுக்கும் பொது என அனைவரும் அறிந்தாலும், அதிக காசு பிடுங்கும் கல்லூரியாக இருக்கக்கூடாது என்ற கவனமும் பலருக்கு உண்டு. இருப்பினும், அனைவரின் கவலைகளும் தேடல்களும் இரண்டு பதில்களைத்தேடித்தான்.
1) சிறந்த கல்லூரி எது?
2) நல்ல வேலை வாய்ப்புள்ள படிப்பு எது?
என்ன படிப்பு என முடிவெடுப்பதற்கு முன்னர் வேறு சில முக்கியமான விசயங்களையும் நாம் செய்ய வேண்டியுள்ளது. தன் குழந்தையுடன் பெற்றோர் மனம் விட்டு பேசுவது இன்று மிக அவசியமாகும். ஏனெனில் உயர்கல்வியில் தன் குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பதை பல நேரங்களில் பெற்றோர்களே முடிவெடுத்துவிடுகின்றனர். சில மாணவர்களுக்கு அது சரியாக அமைந்துவிட்டாலும், பலருக்கு அதனால் மிகுந்த தொல்லையே பின்னால் ஏற்பட்டுவிடுகிறது. குறைந்த மதிப்பெண் வாங்கிய ஒரு சராசரி மாணவனை, ஒரு பொறியியல் கல்லூரியில் சீட்டை விலைக்கு வாங்கி சேர்ப்பதனால் என்ன நடக்கிறது? பொறியியல் படிப்பிலும் குறைந்த மதிப்பெண்ணை அவர் பெறக்கூடிய நிலையே தொடர்கையில் பெற்றோரின் வேதனை அதிகரித்து, அவர்கள் அனைவரின் மனம் பாதிக்கப்படும் நிலையோடு முடிந்துவிடுவதில்லை. குடும்பத்தின் கடன் சுமை வங்கியிலோ அல்லது தனிநபரிடத்திலோ அதிகமாகையில் அடுத்தடுத்த குழந்தைகளின் கல்வியும் பெரும்பாலும் அக்குடும்பத்தில் பாதிக்கப்படுகிறது. பெரும்பாலும் இரண்டாவது குழந்தையாக உள்ள(ஒரு அனுமானம் மட்டுமே) பெண் குழந்தையின் கல்விதான் பலிகடாவாக்கப்படுகிறது.
ப்ளஸ் டூவில் பெறும் மதிப்பெண்ணை வைத்து, தன் குழந்தையின் கல்வித்திறனை ஒரு பெற்றோர் தீர்மானிப்பது மிக அவசியம். ப்ளஸ் டூவில் மதிப்பெண் குறைந்துவிட்டால் வாழ்க்கையே இருக்காது எனவும், பொறியியல் படிப்பு படிக்காவிடில் நல்ல வாழ்க்கையே கிடைக்காது எனவும் யாரும் அஞ்ச வேண்டியதில்லை. உயர்கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும் ஒரு வழிப்பாதையென எதுவும் இல்லை. நமக்கான பாதையை தேர்ந்தெடுக்கவும், அப்பாதையில் இலக்கை அடைவதற்கான இலட்சியப் பயணத்தை துவங்கவும் ஒருவர் செய்ய வேண்டியது ஒன்று தான். நம்மை நாம் சரியாக அறிந்து கொள்வது என்ற ஒற்றை மந்திரமே அனைத்துக்கும் தீர்வாகும். ஆசையில் இருந்தோ அல்லது கௌரவம் என்ற மாயையில் இருந்தோ நாம் நம்மை மதிப்பிடக்கூடாது. மாறாக நமது பலவீனங்களை சுயவிமர்சனமாக அணுகி,அவற்றை களைய மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகளை ஆராய்வதே முதற்தேவையாகும். அவநம்பிக்கைகளை ஒதுக்கி வைத்தால் மட்டும் போதாது, அதை நமது எதிரியாக பாவித்து தொலை தூரத்திற்கு விரட்டி விட வேண்டும். நமது பலம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது தான், அது நம்மைவிட்டு விலகிவிடப்போவதில்லை; எனவே, அதை பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என அவசியமில்லை.
ஆனால் நமது பலவீனங்களே நம்மை அழிக்கும் வைரஸ் என்பதால், அதை அறிந்து கொள்வதும்,களைவதும்தான் முன்னேறுவதற்கான முதற்பணியாகும். நண்பர்கள், உறவினர்கள் வீட்டு குழந்தைகள், என்ன படிக்கிறார்கள் என்பதை வைத்து அதுவே நமக்கும் கௌரவம் என நினைத்து முடிவெடுக்காமல், நமது குழந்தையின் திறன் என்ன என்பதை முதல் அளவுகோலாக வைத்து என்ன படிப்பது என தீர்மானிப்பது அவசியம். எந்த துறையில் ஆர்வம் உள்ளது, மகிழ்ச்சியாக படிக்கும் மன நிலையை அந்த துறை உருவாக்குமா என்பதை அடிப்படையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், எதை படிக்கிறார்களோ அதில் முழு ஆர்வத்தோடும், ஈடுபாட்டோடும் படிக்கையில்தான் சிறந்தவர்களாக பரிணமிக்க முடியும். தனியார் வேலை வாய்ப்பு மட்டுமே பெரும் வழி என்றாகிவிட்ட சூழலில், சராசரியாக இருப்பவரை எந்த நிறுவனமும். வேலைக்கு எடுப்பதில்லை. எனவே, மதிப்பெண்ணில் சிறந்து விளங்குவது மட்டுமல்ல துறை சார்ந்த அறிவு படைத்தவராகவும் இருத்தல் அடிப்படையாகும். ஈடுபாடு மட்டுமே இத்தகைய அறிவுத்தேடலை அவர்களுக்கு உருவாக்கும் என்பதால் மாணவரின் இயல்பான ஆர்வத்தை கண்டறிய அவர்களுடன் வெளிப்படையான உரையாடல் மிகத் தேவையாகும்.
தனியார் நிறுவன்ங்களின் வேலைக்கான நடைமுறைகளில் உள்ள பல கட்ட தேர்வுகளைத் தாண்ட முடியாமல் ஒரு முறை பின் தங்கிவிடும் மாணவர்களுக்கு மீண்டும் ஒரு சிறந்த வேலை கிடைப்பது பெரும்பாலும் இன்று குதிரைக்கொம்பாகவே மாறிவிட்டது மிகுந்த வேதனைக்குரியதாகும். எனவே கல்வி கற்கும் காலத்திலேயே வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவனாக தன்னைத் தானே தயார் செய்து கொள்ளும் இரட்டைப் பொறுப்பும் மாணவர்கள் தலையிலேயே விழுந்து விடுகிறது. பல கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூ நடத்தப்படுவது பாராட்டுக்குரியது எனினும், பெரும்பாலான மாணவர்களுக்கு இவ்வாய்ப்பு இல்லாமலும் போய்விடுகிறது. எனவே, படிக்கும் துறையை இவ்வாண்டு தேர்ந்தெடுத்தாலும், வேலைக்கு செல்லப்போவது நான்கு ஆண்டுகள் கழித்துத்தான் என்பதால், இவ்வாண்டு எந்தப் படிப்புக்கு முக்கியத்துவம் என்பதை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நான்கு ஆண்டுகள் கழித்தும் எந்த துறையில் வேலைவாய்ப்பு இருக்கும் என கணிப்பதும் மிக அவசியம்.
உதாரணத்துக்கு, பல ஆண்டுகளாக மிகுந்த வேலைவாய்ப்பு துறையாக போற்றப்பட்ட ஐ,டி. யில் சமீப காலமாக வேலைவாய்ப்பு குறைந்துவரும் சூழலில், படித்தவுடன் அதிக சம்பளத்துடன் வேலை என்ற கனவு இன்று பலருக்கு கைகூடவில்லை. இரண்டாண்டுகளாக மெக்கானிக் மற்றும் சிவில்படிப்புக்கு முக்கியத்துவம் அதிகமாகியுள்ளது. நிலைமை அப்படியே எப்போதும் இருக்கப்போவதில்லை மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் இதில் மிகுந்த விசாரிப்புடன் தேர்ந்தெடுப்பது நல்லதாகும்.கலை, அறிவியல் பாடங்கள் என்பது எக்காலத்திலும் மதிப்புக் குறையாத துறைகளாகும். ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் மட்டுமே படிக்கும் துறையாக கலைப் பாடங்களை கருதுவது செயற்கையாக உருவாக்கப்பட்ட தோற்றமாகும். ப்ளஸ் டூ வில் சாதாரண மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட சரியான இலக்குடன் பயின்றால் கலை அறிவியல் படிப்புகளின் மூலமாகவும் சிகரங்களை எட்டலாம். ஆனால், முதுகலை படிப்பு பயில்வது, அதன் பின்னர் எத்துறைக்கு செல்வது என இலக்கு வைத்துக் கொள்வது மிக அவசியம்.
கலை, அறிவியல் பாடங்களுக்கும் சில சிறந்த தனித்துவம் பெற்ற கல்லூரிகள் உள்ளன. இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்ந்த பணிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்கள் வரலாறு சமூகவியல் போன்ற துறைகளைத் தேர்ந்தெடுத்து முயன்றால் வெற்றி நிச்சயம்.
+2 மதிப்பெண் குறைந்து விடுவதாலோ அல்லது நினைத்த மதிப்பெண் கிடைக்காததனாலோ வாய்ப்புகள் வற்றிப்போய்விட்டதாக மனம் வறண்டுவிடத் தேவையில்லை. குறைந்த மதிப்பெண் பெறுபவர் கூட பொறியியல் கல்லூரி போன்ற படிப்புக்கு செல்கையில் சரியான திட்டமிடுதலுடன பலவீனங்களை களைந்து முன்னேற திட்டமிட்டால் சிறந்த மாணவராக கட்டாயம் ஜொலிக்க இயலும். மதிப்பெண்ணை விடவும் இங்கு முக்கியம் பெறுவது நம்மை பற்றிய சரியான மதிப்பீடு என்பதால் நம்பிக்கைகளுடன் திட்டமிடுவதை இயல்பான குணமாக்கிக் கொள்ள வேண்டும்.
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற ஒரு வரியில் கூறிவிடலாம் நீங்கள் என்னவாகப் போகிறீர்கள் என...