முன்னுரை
அரசுப் பள்ளிகளை நிர்வகிப்பதில் மக்களின் (அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்) ஈடுபாடு நம் கல்வி அமைப்பில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் அதிகப்படுத்த வாய்ப்பிருகிறது. இத்தகைய நோக்கத்திற்காக மக்களின் பங்களிப்பை உறுதிசெய்ய பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) அரசுப் பள்ளிகள் தோறும் 2-2021 இல் தொடங்கப்பட்டன.
தற்போது இக்குழுக்கள் அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்குப் பல்வேறு விதங்களில் கைகொடுக்கிறார்கள். முதல்வரின் காலை உணவுத் திட்டம், குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்த்தல், தக்கவைத்தல் மற்றும் இடைநிற்றலைத் தவிர்த்தல், பள்ளிகளுக்கான அத்தியாவசிய தேவைகளைக் கண்டறிதல் எனப் பரந்துபட்ட விஷயங்களிலும் துணை நிற்கின்றனர் என்பது நிதர்சன உண்மை.
கல்வி உரிமைச் சட்டத்தின் சிறப்பம்சம்
அனைத்துத் தரப்புக் குழந்தைகளும், எந்தவிதப் பாகுபாடும் இல்லாத சூழலில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 யை சிறப்பாக செயல்டுத்திட, அதற்கான சட்ட விதிகள் (தமிழ்நாடு அரசு - மாநில விதிகள்) - 2011 இல் உருவாக்கப்பட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அச்சட்டத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றான பள்ளி மேலாண்மைக் குழு கட்டமைக்கப்பட்டு, 2022 ஆம் ஆண்டு அவை மறுசீரமைப்பும் செய்யப்பட்டன. இதன் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்புற செயலாற்றி, அரசுப் பள்ளிகளை நமது பள்ளி என்ற உணர்வோடு தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, அரசுப் பள்ளி பெற்றோர்கள், பள்ளியை மேலாண்மை செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள். இதன் வழியாக மக்கள் அரசுப் பள்ளிகளை மேலாண்மை (நிர்வாகம்) செய்யும் பொறுப்பைப் பெறுவதுதான் கல்வி உரிமைச் சட்டத்தின் சிறப்பம்சம்.
பள்ளி மேலாண்மைக் குழு
ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்குவதில் தமிழ்நாட்டின் 37,592 (முப்பத்தி ஏழாயிரத்தி ஐநூற்றி தொன்னூற்று இரண்டு) அரசுப் பள்ளிகளின் பங்கு மிக முக்கியமானது. இந்தப் பள்ளிகளிலிருந்து பள்ளி மேலாண்மைக் குழுக்கள் அமைப்பதற்கு 2022-2024 ஆம் ஆண்டுக்கான மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்களை பெற்றோர்களை திரட்டி அந்தந்த அரசுப் பள்ளிகளில் நடத்திய போது, அவற்றில் 23.2 இலட்சம் எண்ணிக்கையில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் விழிப்புணர்வு கூட்டங்களை தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்களாக 6,83,959 பேர் தேர்வு செய்யப்பட்டு, அரசுப் பள்ளியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து உறுப்பினர்கள் தங்களது பங்களிப்பினை செலுத்தியிருக்கிறார்கள். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலுள்ள அரசுப் பள்ளிகளை மக்கள் மேலாண்மை செய்ய ஏதுவாக, அவர்களை பல்வேறு வகையில் ஊக்கம் அளித்து, பள்ளிக் கல்வித்துறை சார்பிலும், பள்ளி மேலாண்மைக் குழுவின் மாநில வழிகாட்டு குழுவும் இணைந்து உறுப்பினர்களை திடப்படுத்தி வருகிறது.
தீர்மானங்கள் நிறைவேற்றுதல்
பள்ளி மேலாண்மைக் குழுவில் உறுப்பினர்கள் பெருவாரியாக ஒன்றுகூடி, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 19 க்கும் மேற்பட்ட முறை கூடி, அப்பள்ளியின் தேவைகளை திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இந்தக் கூட்டங்களின் வாயிலாக அந்தந்தப் பள்ளியின் தேவைகளை அடையாளம் கண்டு, அவற்றை பெற்றோர் செயலியில் பதிவேற்றம் செய்தும், சில உடனடித் தேவைகளை உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்பைப் பெற்று அவைகளை நிறைவேற்றும் வழிமுறைகளையும் கண்டறிந்துள்ளார்கள் என்றால் மிகையல்ல.
சில பள்ளி மேலாண்மைக் குழுக்கள், தேவையின் நிமித்தம் பல்வேறு சிறப்புக் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறார்கள். பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களில் முறையாக உறுப்பினர்கள் பங்கேற்று அவ்வப்போது கூடி விவாதித்ததன் அடிப்படையில், பள்ளியின் பல்வேறு தேவைகளை உள்ளடக்கி, செப்டம்பர் 2022 முதல் ஜுன் - 2024 வரையிலும் சுமார் 3,84,982 தீர்மானங்கள் நமது அரசுப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் 87,665 தீர்மானங்களுக்குப் படிப்படியாகத் தீர்வும் காணப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஒட்டுமொத்தமாக மாநில அலுவலகத்திலிருந்து தொகுக்கப்பட்டதில் 437 வகையாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் தீர்வு காணப்பட்ட தேவைகள் மற்றும் தீர்மானங்களின் அடிப்படையில் கீழ்க்கண்ட 15 வகைப்பட்டியலாக இருந்துள்ளன என்பதையும் நாம் காணலாம்.
S.NO |
TITLE |
COUNTS |
1 |
புதிய சுற்றுச் சுவர் |
5865 |
2 |
குழந்தைகளின் சேர்க்கை |
2389 |
3 |
புதிய வகுப்பறை |
2339 |
4 |
மாணவர்களுக்கான புதிய கழிப்பறை |
2204 |
5 |
பழுதடைந்த கட்டடத்தை அகற்றுதல் |
2125 |
6 |
மாணவிகளுக்கான புதிய கழிப்பறை |
1947 |
7 |
சுற்றுச்சுவர் பழுதுப்பார்த்தல் |
1763 |
8 |
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அடையாளம் காணுதல் |
1553 |
9 |
புதிய சமையல் அறை |
1483 |
10 |
போதைப் பொருள் இல்லா பள்ளிச்சூழலை உறுதி செய்தல் |
1462 |
11 |
புதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் |
1378 |
12 |
புதர் / மரங்களை அகற்றுதல் |
1119 |
13 |
மின்சார இணைப்பு பழுதுப்பார்த்தல் |
1086 |
14 |
புதிய கேட் |
1021 |
15 |
பள்ளி மைதானத்தை சமதளப்படுத்துதல் |
1012 |
மேற்கண்ட தீர்மானங்களுக்கு உரிய தீர்வு கண்டு தரமான கல்வி, சுகாதாரமான பாதுகாப்பு, மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல், எதிர்பார்ப்புடனான பள்ளி வளாகம் ஆகியவற்றை பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களின் செயல்பாடுகளின் வழியாக உறுதிபடுத்தி இருக்கின்றன.
இதில் தீர்மானங்களை பதிவேற்றம் செய்யும் பெற்றோர் செயலி என்பது, பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளி மேலாண்மைக் குழுவில் அவசியத் தேவைகள் என்று அடையாளம் காணப்பட்டு அவைகள் தீர்மானமாக நிறைவேற்றி, அவற்றை உடனுக்குடன் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு பிரத்யோக செயலி ஆகும். இதன் வழியாக பொறுப்புடைய துறைசார் அரசு அலுவலர்கள் யார் ஒருவரும் எத்தகைய தேவைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதை உடனே காண முடியும்.
கண்காணிப்புக் குழுக்கள்
பள்ளி மேலாண்மைக் குழுவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதை முறையாக கண்காணிக்கவும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு அரசுத் துறைகளை இணைத்து பள்ளிக் கல்வித்துறை செயல்படுவதோடு, அவற்றை முழுமையாக ஒருங்கிணைக்க மாநில (SLMC), மாவட்ட (DLMC) அளவிலான கண்காணிப்புக் குழுக்களானது மாண்புமிகு முதல்வர், அமைச்சர் பெருமக்கள், துறைசார் செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் என உயர்மட்ட அதிகாரிகளின் தலைமையில் இயங்கி வருகின்றன. இதன் வழியாக அந்தந்தப் பள்ளி தேவைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தலைமையாசிரியர்கள், அந்தந்த துறைசார் அதிகாரிகள், அரசு மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் - செயலர் ஆகியோர் உடனுக்குடன் பார்க்கும் படி சமமான நேர்க்கோட்டில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனால் மாநில மற்றும் மாவட்ட அளவில் கண்காணிப்புக் குழுக்கள் துரிதமாக செயல்படவும் தொடங்கியுள்ளன.
வலுப்படுத்தும் பயிற்சிகள்
அரசுப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுக்கள் கட்டமைக்கப்பட்டு விட்டாலும், அவை உயிரோட்டமாக செயல்பட ஆக்கமும் ஊக்கமும் அவசியத் தேவையாக இருக்கிறது. அதற்காக மாநில அளவில் பயிற்சியாளர் குழுவும் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தளங்களில் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பயிற்சிகள் வாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்களின் தன்மை, அதன் வழியாக உறுப்பினர்களது கடமைகள், பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை அறிந்து கொண்டு அரசுப் பள்ளிகளை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது.
பள்ளி மேலாண்மைக் குழு தொடர்பான பயிற்சியானது, அதைச் செயல்படுத்தும் பல்வேறு மட்டத்திலிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு உதவிபுரியும் இதரப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பலருக்கும் குழந்தைகளின் கட்டாய, கல்விக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும், பள்ளி மேலாண்மைக் குழுவின் அமைப்பு மற்றும் செயல்பாட்டு முறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை நபர்கள், யார் கலந்து கொண்டார்கள் என்ற பட்டியலை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.
மறுகட்டமைப்பு
அரசுப் பள்ளிகளை தன்னிறைவு கொண்ட பள்ளிகளாக்கவும், பெரும் திரளான மக்கள் பங்கெடுக்கும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்தவும் மறுகட்டமைப்பு 2024 ஆகஸ்டு மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் நடைபெறுகின்றன. அவற்றில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனைத்துப் பெற்றோர்களையும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்க செய்வதற்கான முன்னெடுப்பை பள்ளிக் கல்வித்துறை செய்து வருகிறது.
பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான முன்னெடுப்பில் அரசுப் பள்ளி பெற்றோர்கள் அனைவரும் திரளாகப் பங்கேற்று, அரசுப் பள்ளியை மேலாண்மை செய்யும் பொறுப்பை ஏற்க பெற்றோர்கள் தாங்களாகவே முன்வர வேண்டிய தேவையும், அவசியமும் இருக்கிறது.
இத்தகைய சிறப்புக்குரிய பள்ளி மேலாண்மைக் குழுக்களில் ஒவ்வொரு அரசுப் பள்ளி பெற்றோரும் இணைந்து, அரசுப் பள்ளியை பாதுகாப்பான, சுகாதாரமான, கற்றல் திறன் மேம்படுத்தப்பட்ட பள்ளியாக, அனைத்து விதமான உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட தன்னிறைவு பெற்ற பள்ளியாக மேம்படுத்துவதில் பேரியக்கமாக மக்கள் இணைவது அவசியம்.
தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில் முதன்மை மாநிலாக வளர்ந்திட, அரசுப் பள்ளி பெற்றோர்களையும் இணைத்து, பள்ளிக் கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.
நம் முன்னாலுள்ள பொறுப்பு
பள்ளி மேலாண்மைக் குழுக்களை மறுக்கட்டமைப்பு செய்து அவற்றின் வாயிலாக அரசுப் பள்ளிகளை வலுவான, தன்னிறைவு பெற்ற அமைப்பாக மாற்றுவதற்கான பணியை சிறப்புற திட்டமிட்டு செயல்படுத்த வேண்டிய சூழலில் நாம் இப்போது இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சமூகப் பணி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், கல்வியாளர்கள், கல்வி செயல்பாட்டாளர்கள், களப்பணியாளர்கள் உள்பட அனைவரும், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுடன் இணைந்து ஓர் இயக்கமாக, அனைவரும் அவரவர் பணித்தளங்களில் செயல்படும் அரசுப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதில் நாம் உறுதுணையாக இருக்கவும், அனைத்துத் தரப்பினரும் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் பங்களிப்பை அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக செலுத்திடவும், உத்திரவாதப்படுத்தவும் களத்தில் இணைந்து செயல்படுவோம்!
நம் பள்ளி! நம் பெருமை!! என்பதை நிலைநாட்டுவோம்!
- மு.தமிழ்ச்செல்வன்