பெண் எழுத்தைக் கூறிட வேண்டுமெனில் அதன் துவக்கப்புள்ளி எதுவாக இருக்கும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. எழுத்தும், மொழியும் பிறந்திடாத நாட்களில் குலத்தின் தலைவியான பெண்தான் யாவற்றையும் உருவாக்கியிருப்பாள். லிபியின்றி சைகையில் அமைந்த ஆதிக்கதைகள் என்னவாக இருந்திருக்கும் எனத் தெரியவில்லையே தவிர, யூகித்திடச் சாத்தியங்கள் இருக்கிறது. ஒரு வேளை அவள் வடித்திட்ட கதைகளில் மனித குலத்தை மிருக அழிவிலிருந்து மீட்டெடுத்திடும் தாந்திரீக கதைகள் நிறைந்திருக்கலாம். அதன் நீட்சியாகத் தான் கதைகளைச் சொல்லிச் செல்கிறவளாக தமிழ்ச் சமூகத்தில் பாட்டிகள் இருந்திருக்கிறாள் என்றும்படுகிறது.

வீட்டிற்கு வெளியே கால் நீட்டி, வாகை மரத்தூரில் அமர்ந்தபடி கதை சொல்லிக் கொண்டிருந்த பாட்டிகள் காணாமல் போனது நவீனத்துயரத்தின் விளைவுதான். அவர்களின் தொண்டை நரம்புகளை உருவித்தான் வீட்டின் தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கான கேபிள் இணைப்புகளைத் தந்திருக்கிறோம். வழி வழியாக சொல்லப்பட்டு வந்த கதைகளின் தொடர்ச்சி அறுபட்டுக் கிடக்கிறது என்று தவித்த கதை சொல்லிகள், மரபின் தொடர்ச்சியாக கதை சொல்லத் துவங்கியிருக்கிறார்கள்.

தான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் கதையை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார் பாரததேவி. தன்னுடைய பால்யத்தையும், தன்னுடைய கிராமத்து வாழ்வியல் அனுபவங்களையும் தொகுத்துத் தந்திருக்கிறார். “நிலாக்கள் தூர தூரமாக என்கிற தன் வரலாற்று நாவலில் அது ஒரு வகையில் தென் தமிழகக் கிராமங்களின் கதையாகவும் வடிவம் பெற்றிருக்கிறது. நிலாக்கள் தூரதூரமாக என்கிற நாவல் முழுக்க பெண்களின் வைராக்கியம், வாழ்க்கையை, எதிர் கொண்டு முன் நகர்கிற பெண்களின் தொகுப்பாகத் தான் அமைந்திருக்கிறது. புனைவிலக்கியப் பகுதிக்குத் தான் முன் தீர்மானங்களை கலைத்துப் போடும் ஆற்றல் உண்டு. ஆழமான தத்துவ விவாதங்களையும் கூட தன் எளிய கதைகளால் கடந்து சென்ற எழுத்து பாரத தேவியினுடையது. அவருடைய சமீபத்திய நாவலும் கூட திருமணத்திற்குப் பிறகான பெண்களின் மன நிலை சார்ந்த முப்பது வருட வாழ்க்கையைத் தான் பதிவு செய்துள்ளது.

மேகங்கள் நிலாவை நகர்த்துகின்றன என்கிற நாவலும் கூட ஒரு வகையில் பெண் புனை கதையாளர்களான ராஜம் கிருஷ்ணன், சூடாமணி, ஹெப்சிபாசேசுதான், ஆகியோரின் தொடர்ச்சி-தான். மரப்பாச்சி, தொலைகடல் என்கிற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளின் ஊடாக நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் உலகினை நுட்பமாக பதிவு செய்திருப்பவர் உமா மகேஸ்வரி. தந்தைக்கும், மகளுக்குமான உரையாடல்கள் என்னவாக இருந்திருக்கும் என ஒவ்வொரு தந்தையும், மகளும் உமா மகேஸ்வரியின் படைப்புகளை கடந்த பிறகு கேட்கப் போவது நிஜம். படிச்சியா, சாப்பிட்டியா, ஹோம் ஒர்க் செஞ்சியா என்ற அய்ந்தாறு வார்த்தைகளுக்குள் அடங்கி விடுகிறது. இப்படி அற்ப விஷயங்களுக்கெல்லாம் கூட பேசுகிற குடும்பம் அவளின் மீத நாட்களை முடிவு செய்யப்போகிற, திருமணத்திற்கு முந்தைய நாட்களின் போது எப்போதாவது பேசியதுண்டா? என்கிற கேள்வியும் கூட நமக்குள் உருவாக்கிடும் வல்லமை கொண்டது உமா மகேஸ்வரியின் எழுத்து. அவருடைய “யாரும் யாருடன் இல்லை" என்கிற நாவலை வாசிக்கிறபோது தொன்னூறுகளில் தன்னுடைய தனித்த மொழியில் பெண் உலகை தமிழ்ப் புனைவுப் பரப்பில் பதிவு செய்த அம்பையின் தொடர்ச்சியே உமா மகேஸ்வரி என்று மதிப்பிடத் தோன்றுகிறது. உமா மகேஸ்வரி சிறு கதை நாவலுடன் அவ்வப்போது கவிதைகளும் எழுதி வருபவர்.

உமா மகேஸ்வரியைப் போலவே கவிதைகளுடன் கதைகளையும் எழுதி வருபவர் சல்மா. அவருடைய “இரண்டாம் ஜாமங்களின் கதை" அதுவரை தமிழ்க் கதைப் பரப்பிற்குள் வந்திராத இஸ்லாமியப் பெண்களின் மன உலகினை ஆழமாக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது. இந்தியாவின் பலமொழிகளில் நாவல் மொழி பெயர்க்கப்படுவதற்கான காரணம் இரண்டாம் ஜாமங்களின் கதைகளுக்குள் மட்டுமே தென்படும் தனித்த தமிழ் இஸ்லாமியப் பெண்களின் உலகிற்காகத் தான். தான் பிறந்திட்ட சமூகம் சார்ந்த விஷயங்களை தெளிவுற எடுத்து வைத்திருக்கும் துணிச்சல் மிகுந்த எழுத்து சல்மாவினுடையது. சல்மாவின் கவிதைத் தொகுப்புகளுக்குள் வந்து சென்ற பெண்களின் மன உலகினை மிக விரிவாகப் பதிவு செய்த எழுத்தே அவரின் நாவலும், கதைகளும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ் இலக்கிய வெளிகளில் மிகக் காத்திரமாக இயக்கம் பெற்ற தலித் இலக்கியத்தின் பெண் பிரதிநிதியாக பாமா அடையாளப்படுத்தப்படுகிறார். அவருடைய ‘கிசும்புக்காரன்,’ “கொண்டாட்டம்“ “பாமாவின் கதைகள்” என்கிற சிறு கதைத் தொகுப்புகளுக்குள் கிராமத்து எளிய மக்களின் வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. அவருடைய கதைகள் அதுவரை அய்யோ பாவம், ரொம்பக் கஷ்டப்படுறாங்க என்று கழிவிரக்கப்பட்டுக் கொண்டிருந்த தலித் கதையாடல்களின் போக்கை திசை மாற்றியது. எளிய மொழியில் வாசக மனதின் சமநிலையைக் கலைத்துப் போட்ட வழுவான எழுத்து பாமாவினுடையது. அவருடைய “வன்மம்“ எனும் நாவல், இன்றைக்கும் தீர்க்க முடியாமல் நீடிக்கிற ஒடுக்கப்பட்ட மக்களுக்கிடையோன ஒற்றுமையின்மை குறித்துப் பேசிப் பார்க்கிறது. கிராமங்களின் இடைநிலைச் சாதியினர் அதிகாரம் தன் கையை விட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக எந்த எல்லைவரை செல்வார்கள் என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தது நாவல். கலவர நாட்களில் ஆண்கள் எல்லாம் காடுகளில் தலைமறைவாகிட வீட்டில் தனித்திருக்கும் பெண்கள் அடையும் மனத்துயரை உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

கவனப்படுத்தப்பட வேண்டிய பெண் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, அதிலும் குறிப்பாக கதை சொல்பவர்களின் எண்ணிக்கை கை விரல்களுக்குள் அடங்கிப் போவது விசித்திரமான முரண்தான். தெருவிற்கு ரெண்டு கதை சொல்லிகள் உலவித் திரிந்த தமிழ் நிலத்திலிருந்து எழுத்தில் கதையாட ஏன் வரவில்லை பெண்கள் பெருவாரியாக என்பது ஆய்வுக்குட்படுத்த வேண்டிய பணியாகும். எழுத்தறிவையும், பெண்ணையும் மிக நீண்ட நாட்கள் தனித்தனியே வைத்திருந்த சமூகமிது. மதங்களும், வைதீக நம்பிக்கைகளும் பெண்ணுக்குரிய இடத்தையும், அதன் எல்லைகளையும் திட்டமிட்டு வரைந்திருக்கிறது. ஆணாதிக்க தந்தை வழிச் சமூகத்தில் உருவாக்கி உலவ விடப்பட்டிருக்கும் பெண்ணுக்கு எதிரான கருத்தியல்களையும், பொய்யான நம்பிக்கைகளையும் படைப்புகளின் மூலமாகத்தான் உடைத்து நொறுக்க முடியும். புனைகதையை விட இரண்டாயிரமாவது ஆண்டில் வாசக கவனத்தைப் பெற்றது பெண் எழுத்தில் கவிதைகள் தான்.

காரைக்கால் அம்மையார், ஒளவை, ஆண்டாள் மற்றும் சங்க காலப் பெண் கவிஞர்கள் என தமிழ்ப் பெண் கவிதை மொழிக்கு மிக நீண்ட மரபு இருக்கிறது. ஆயினும் கடந்த பதினைந்து ஆண்டுகளில் விவாதிக்கப்பட்டதைப் போல பெண் கவிஞர்களின் கவிதைகள் குறித்த விவாதம் வேறு எப்போதும் தமிழில் நிகழ்ந்ததில்லை. வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக, பெண் சமத்துவத்திற்காக, தந்தை வழிக் கதையாடல்களைக் கலைத்துப் பார்க்க என பயணப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்க் கவிதை வேறு ஒரு தளத்தில் விஸ்வரூபமெடுத்தது அப்போது தான். பெண் உடலின் மொழியை, அவர்களுக்கு மட்டுமேயான தனித்த வலியை கவிதையால் வலிக்க வலிக்க பதிவு செய்யத் துவங்கினர். அப்போது அதைக் கண்ட ஆண் மனம் கொஞ்சம் கலவரமடைந்தது. இப்படி வெளிப்படையாக பேசக் கூடாது. இடக்கரடக்கல் (உடல்கள் பற்றி) எல்லை இல்லையா இலக்கியத்திற்கு என்று மூத்த கவிஞர்கள் என வாசகனால் கொண்டாடப்படுபவர்கள் கூட கேட்டு தன்னுடைய ஆணாதிக்க மனதை வெளிப்படுத்தி தொலைத்தார்கள். அதன் பிறகு தமிழ் நிலத்தின் நாலா திசைகளில் இருந்தும் பெண்கள் விமர்சனத்திற்கான, கேள்விகளுக்கான பதில்களை கவிதைகளைப் படைத்தளித்தனர். மாலதி மைத்திரி, குட்டி ரேவதி, அ.வெண்ணிலா, சுகிர்தராணி, தேன்மொழி எனத் துவங்கி உமாசக்தி, லீனா மணிமேகலை வரை கவிஞர்கள் இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகளை “பறத்தல் அதன் சுதந்திரம்“ என்கிற கவிதைத் தொகுப்பாக க்ருஷாங்கனி தொகுத்திருக்கிறார். 52 பெண் கவிஞர்களின் விதவிதமான கவிதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பில் ஈழத்துப் பெண் கவிஞர்களின் கவிதைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதே போல் அ.வெண்ணிலா இதுவரை எழுதப்பட்டிருக்கிற பெண் படைப்பாளிகளின் கதைகளைத் தொகுத்திருக்கிறார். இவ்விரண்டும் காலத்தில் செய்யப்பட்ட ஆகச் சிறந்த இலக்கியப் பணியாகும்.

Pin It