‘ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி'

பாரதியின் வரிகளால், வரலாறை மீண்டும் வாசிக்கையில் நம்பிக்கை வெள்ளமென ஊற்றெடுக்கிறது.

காட்டுத் தீ போல் பரவி எரிகிறது இளைஞர்களின் போராட்டம்.

ஒரு நாட்டில் துவங்கி, அருகில் உள்ள நாடு என பரவத்துவங்கி இன்று தொலைதூர நாடுகள் என எல்லைகளில்லாமல் பரவுகின்றது எகிப்து போராட்டம்.

இளமை என்பது மாற்றத்தின் அடையாளமென வரலாறு மீண்டும் உரத்து சொல்லியுள்ளது. மாற்றம் என்பதன் துவக்கம் மக்கள் போராட்டமே என்பதும், போராட்டங்களின் நோக்கம் மாற்றம் என்பதும் உலகத்தின் திசைகளெங்கும் எதிரொலிக்கிறது.

நெருப்பு முளைத்த தேசத்தில் ஜனநாயகம் தழைக்கையில், மலர்வது சோசலிசமாக இருந்தால் மட்டுமே, மக்களின் கொதிப்பு நிலை குறையத்துவங்கும். இல்லையெனில், மாற்றங்களின் பலன் மக்களுக்கானதாக இருக்காது. ஆனால் வலுவான ஒரு இயக்கத்தின் தலைமையின் கீழ், ஒரு சரியான மாற்றுக்கொள்கையுடன் போராட்டம் நடக்கையில்மட்டுமே மாற்றம் மக்களிடத்தில் நம்பிக்கையை விதைக்கும். ஆட்சி மாற்றம் என்பதும் போராளிகளின் தலைமையில் நிகழும். இருப்பினும் தற்போதைய போராட்டங்களின் திசையில் சென்றால், அத்தகைய ஆட்சி மாற்றம் சாத்தியம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

அதுவரை மனித வளத்தையும், இயற்கை வளத்தையும் சுரண்டிக் கொழுத்த நவீன காலனி ஆட்சியாளர்கள் மனித நேயத்தையும் வறண்டு போகச் செய்வதால் தவிர்க்க முடியாததாக மாறி வெடித்துக் கொண்டேயிருக்கும் மக்கள் போராட்டங்கள். 5 பெண்கள் சந்தித்து பேசி, துவக்கிய போராட்டம் மகளிர் உரிமையும் மதிப்பிற்குரியதென நிருபித்தது நேற்றைய வரலாறு. ஒரு தாயின் குரலோடு போர்க்குரல்களாய் இணைந்து பலமடைந்த கரங்கள் பீரங்கி வண்டிகளை தடுத்து நிறுத்தியது இன்றைய வரலாறு. ஆணும், பெண்ணும் நிகரெனக் கொள்வதால் என்ன நடக்குமென வரலாறு மீண்டும் ஒரு கவிதையை எழுதியிருக்கிறது பிரமிடுகளின் மீது.

ஆண், பெண் பாகுபாடு மட்டுமல்ல; நாடு, இனம், மதம் என பாகுபாடுகள் எதுவும் போராட்டங்களுக்கு இல்லை. சர்வாதிகாரத்தின் முன் மட்டுமல்ல மதத்தின் முன்பாகவும் மனித சமூகம் அடிமைப்பட்டுக் கிடந்ததில்லை என சம்மட்டியாய் அறைந்து சொல்கிறது. இளைஞர் சமூகம் உலகெங்கும் இணைந்தே இருக்கிறது என எகிப்து போராட்டம் எச்சரித்துள்ளது ஏகாதிபத்திய சக்திகளை.

எண்ணெய் வள நாடுகளெல்லாம் என் அடிமைகளே என ஊழலை உற்பத்தி செய்து வேலையின்மை, வறுமை, கலாச்சார சீர்கேடு, பிணிகளென வீடுகள் தோறும் விற்பனை செய்துகொண்டிருந்த அமெரிக்க அடிவருடிகளுக்கு என்ன நடக்கும் என கண் இருப்பவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், காத்திருப்பவர்கள் போராட்டக்குரல்களை கேட்டு திருந்திக்கொள்ளட்டும்.

ஊழல், கல்வியின்மை, வேலையின்மை, வறுமையென இந்திய சமூகமும் கொதிநிலையிலேயே நீடித்து வருகிறது. இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, மிகப்பெரும் ஜனநாயக நாடு. எனவே, இங்கு மக்கள் போராட்டம் மட்டுமல்ல, மாற்றங்களே சாத்தியம் இல்லையென சிலர் ஆருடம் கூறுகின்றனர். பொருளாதார புலிகளுக்கு வரலாறு தெரியாது. நவீன இந்தியாவின் நாளைய வரலாறு இளைஞர்களால் எழுதப்படுகையில் நாட்டை விட்டு ஓடும் நிலை இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஏற்படலாம். ஆனால் அப்போது அவர்களுக்கு தஞ்சம்அளித்திட உலகில் எந்த நாடும் தயாராக இருக்காது. ஆம் இந்தியா மாறுகையில் உலகமும் மாறிவிடும் "உலகை அன்று இளமை வென்றிருக்கும்'.

Pin It