முருகனது குடும்பம் நீலகிரியில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்து 30 வருடமாகி விட்டது. முருகன் மாமா சிவனாண்டி சென்னைக்கு குடியேறியதைத் தொடர்ந்து அவனது தாயாரும் தன்னுடைய குழந்தைகளோடு சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

இன்னும்கூட முருகனுக்கு நீலகிரியின் வாசம் மறையவில்லை. பசுமையான மலைத் தொடர்களும், அடர்ந்த மரங்களும், தெளிந்த நீரோடைகளும் அவனது நெஞ்சத்தில் இடம் பெற்று விட்டது. திருமணம் முடிந்த அடுத்த ஆண்டிலேயே முருகனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. நம் தலைமுறையில் யாருமே படிக்கவில்லை. தன் பிள்ளையை சென்னையில் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணக் கனவு அவனை வாட்டிக் கொண்டிருந்தது.

குழந்தையின் வளர்ச்சியின் கூடவே அவனது கனவும் கூடிக் கொண்டே வந்தது. குழந்தைக்கு பெயர் வைப்பது, காது குத்துவது,மொட்டை அடிப்பது என குழந்தையின் முதல் பிறந்த நாள் வரை அத்தனைக்கும் விழா எடுப்பதற்கு தவறவில்லை.

எப்படியோ பையனுக்கு இரண்டரை வயதை தொட்டவுடனேயே அக்கம், பக்கத்தில் விசாரித்து சுமாரான பள்ளிக்கூடத்தில் தன் மகனை சேர்ப்பது என்று முடிவு செய்தான். பள்ளிக்கூடத்திற்கு சென்று ஃபார்ம் வாங்கிக் கொண்டு வந்தான் முருகன். பள்ளி நிர்வாகி பிறந்த சான்ற ிதழையும், சாதிச் சான்றிதழையும் தவறாமல் வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

குழந்தையின் பிறந்த சான்றிதழை வாங்கி வைத்திருந்ததில் மகிழ்ச்சி கொண்ட முருகன், சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டுமே! இதை எப்படி வாங்குவது, எங்க வாங்குவது என விழிபிதுங்கினான்.

பக்கத்து வீட்டில் குடியிருந்த சாமியப்பனிடம் இது பற்றி கேட்க, அட ஜாதி சட்டிபிகேட் தானே, அது ஒண்ணும் பெரிய விஷயமில்லிங்க, நம்ம டீ கடை கோவிந்தசாமி கிட்ட சொல்லுங்க, ஒரு நூற்றி ஐம்பது ரூபா கொடுத்தா எல்லாத்தையும் அவரே பாத்துப்பாரு... என்று கூறினார்.

முருகனும் எப்படியோ சர்டிபிகேட் வாங்கியாகணும், வேற வழியில்லை... நமக்கும் அங்கெல்லாம் அலைய முடியாது என்று மனதில் எண்ணிக் கொண்டே gt;, டீ கடை கோவிந்தசாமியை பார்த்து விஷயத்தை சொன்னான்.

டீ கடை கோவிந்தசாமி இந்த விஷயத்தில், அந்த ஊர்ல ரொம்ப பேமஸ். சரி, சரி என்ன ஜாதின்னு கேட்டார்; நாங்க மலை ஜாதிங்க,குருமன்ன்ன சொல்லுவாங்க; சரி, இதுக்கு ஏதாவது அத்தாட்சி வைச்சிக்கிறீயா? என்று கேட்டார் டீ கடை கோவிந்தசாமி.

எங்க வீட்ல யாரும் படிக்கிலீங்க... எங்கிட்டயும் வேற எந்த சர்டிபிகேட்டும் இல்லீங்க என்றார்... அப்பாவித்தனமாக. என்னய்யா... நீ,சரி, இது இல்லாட்டி போகுது, உங்களுக்கு ஏதாவது இடம், கிடம் இருந்தா அந்த பத்திரத்தில எழுதியிருப்பாங்களே அதாவது இருக்கா?என்றார் டீ கடை கோவிந்தசாமி.

அண்ணே! எங்களுக்கு நிலமிருந்தா நாங்க ஏண்ணே சென்னைக்கு வர்றோம். அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்கண்ணே என்றான் முருகன்.

நல்ல கேஸ¨யா நீ...

யோவ்... மலை ஜாதின்னா சர்டிபிகேட் தர மாட்டாங்கய்யா. ஏண்ணே, நாங்களும் உங்களாட்டும் மனுஷங்கத்தானே!

அது ஒண்ணும் இல்லையா... உங்க ஜாதின்னா கவுருமெண்டுல வேல்யூ அதிகம்... அதான் தர மாட்டங்கா. நீ மலைஜாதின்னு சர்டிபிகேட் வாங்கிட்டினா ஒம் பையனுக்கு படிப்பு, வேலை எல்லாத்துலையும் நிறைய சலுகை கிடைக்கும்...

ஆனா...?

இன்னாணே! சரி நீ நாளைக்கு வா... ட்ரை பண்ணுவோம்...

யோவ் முருகா! இந்த சர்டிபிகேட் வாங்கணும்னா நிறைய காசு செலவாகும்ய்யா... இன்னாணே கூட ஒரு நூறு ரூபா ஆவுமா!

மண்ணாங்கட்டி! பத்தாயிரம் ரூபா ஆவும்யா...

அதிர்ந்து போன முருகனுக்கு, கண்ணில் தண்ணீர் வரவில்லையே தவிர கோபமும், ஏமாற்றமும் முட்டிக் கொண்டு வந்தது.

மறு நாள் காலை ஐந்து மணிக்கே எழுந்து விட்ட முருகன், டீ கடை கோவிந்தசாமியை பார்க்கப் போனான்.

முதல் நாளே அப்ளிகேஷனையெல்லாம் தயாராக எழுதி வைத்திருந்த டீ கடை கோவிந்தசாமி, முருகனையும் கூட்டிக் கொண்டு வில்லேஜ் ஆபிசரை பார்த்து விஷயத்தை சொன்னார்.

ஏம்பா கோவிந்தசாமி! உனக்கு வேற கேஸே கிடைக்கிலியா? என் வேலைக்கே உலை வைச்சிடுவ போலீருக்கே என்று கடுகடுப்பாக சொன்னார் வில்லேஜ் ஆபிசர்.

முருகனுக்கு ஒண்ணுமே புரியலை! ஜாதி சர்டிபிகேட் வாங்குறதுன்னா அவ்வளவு கஷ்டமா? பக்கத்து வீட்டு சாமியப்பன் நூத்து ஐம்பது ரூவாவுல முடிஞ்சிடும்னு சொன்னான்!

குழம்பிப்போன முருகன், படிக்காமப் போனது எவ்வளவு தப்பா போச்சு! என்று மண்டையில் அடித்துக் கொண்டான். தன்னை படிக்க வைக்காத அப்பா மேலயும் எரிச்சலாய் வந்தது. அவுங்க என்ன பண்ணுவாங்க... அந்த மலையில எங்க பள்ளிக்கூடம் இருந்தது! அரசாங்கமும் அதக் கண்டுக்கல....

டீ கடை கோவிந்தசாமி, வில்லேஜ் ஆபிசருக்கு ஒரு டீயை வாங்கிக் கொடுத்து, எண்ணான்ணே பண்றது? நீங்களே ஒரு வழி சொல்லுங்க... என்னை நாடி வந்தவங்களே நான் கை விட்டது இல்லை..., கையில காசு வாங்குனாலும் நாக்குச் சுத்தமாக இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.. உங்களுக்கே தெரியும்!

யோவ் கோவிந்தசாமி பழங்குடி சர்டிபிகேட் வாங்குனம்னா குறஞ்சது அஞ்சு வருசம் ஆகும்யா... அதுவும் ஆர்.டி.ஓ., சப்கலக்டர்,கலக்டர்ன்னு நிறைய என்கொய்ரி எல்லாம் இருக்கும்... அதுவும் இந்த கேஸ¨க்கு எந்த ஆதாரமும் இல்லை... சர்டிபிகேட் வாங்கவே முடியாதுய்யா...ன்னுட்டார். சரி! நாளைக்கு வா! ரெவீன்யூ ஆபிஸர பாத்து பேசலாம்... ஆனா... காசு செலவாகும்யா...ன்னார்.

முருகனுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல! இன்னிக்கே ஒரு நாள் லீவு போட்டாச்சு! அந்த மேஸ்திரி வேற லொள் லொள்ன்னு கத்துவான்... வேலை கிடைக்கிறதே கஷ்டமா இருக்கு. இந்த நிலையில நாளைக்கு வேற எப்படி லீவு போடறது என்று யோசித்துக் கொண்டே... இருந்தவனுக்கு தலை சுத்தியது...

பையனை படிக்க வைக்கணுமே என்ன பண்றது!

சரி! சாயந்திரம் மோதிரிக்கிட்ட போய் விஷயத்தை சொல்லிட்டு நாளைக்கும் லீவு போட்டுட்டு ரெவின்யூ ஆபிசராம் அவரைப் பார்ப்போம்! என்று மனதில் திட்டமிட்டுக் கொண்டான் முருகன்.

யோவ் முருகா, ரொம்ப யோசிக்காத! இந்த பழங்குடி ஜாதில பிறந்தாலே இப்படித்தான் நாய் பொழப்பாயிடும், நீயே பரவால்ல... வேலையில இருக்குற, பல ஆபிஸருங்க கதைய கேட்டீன்னா ரொம்ப சோகமா இருக்கும்மய்யா...

ஏண்ணே! அவங்கெல்லாம் நல்லா படிச்சிருப்பாங்களேண்ணே... படிப்பாவது, புண்ணாக்காவது, எவனாவது ஆவாதவன் மொட்டை கடுதாசி போட்டான்னா.. அவ்வளவுதான்; என்கொய்ரி, என்கொய்ரின்னு உயிர எடுத்துடுவானுங்க....

இதற்குள் மேஸ்திரியின் ஞாபகம் வந்த முருகனுக்கு, அந்த ஆள் வேற சாயந்தரத்துல புல்லா தண்ணியடிச்சிட்டு இருப்பான். நல்லா இருக்கும்போதே எரிஞ்சி விழுவான்... தண்ணியடிச்சா சொல்லவே தேவையில்லை... என்று நினைத்தவனுக்கு கண் கலங்கியது...

எப்படியோ மேஸ்திரி இல்லாத நேரத்துல போய், வீட்டம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்துட்டான்.

மறுநாள் மாதாகோவில் மணியடிக்கும் சத்தத்தை கேட்டதும் விழித்துக் கொண்ட முருகன், அவசர, அவசரமா ரெடியாகி... ரெவீன்யூ ஆபிஸர பாக்குறதுக்கு டீ கடை கோவிந்தசாமியோட போனான்.

ரெவின்யூ ஆபிஸ்ல ரெடியா இருக்கேன்னு சொன்ன வில்லேஜ் ஆபிஸரை காணோமே! சுத்தி முத்தி பாத்த கோவிந்தசாமி, பக்கத்துல இருந்த வாட்ச்மேன் கிட்ட கேட்க! ஏம்பா! அவுங்க எல்லாம் இன்னிக்கு காலைலே 7 மணிக்கே கும்மிடிப்பூண்டி போய்ட்டாங்க... அங்க ஏதோ வீடுங்க பத்திக்கிச்சாம், அத விசாரிக்க போயிட்டாங்க.... நீ நாளைக்கு வான்னு... வாட்ச் மேன் கூறியவுடன் இதயமே நொறுங்கிப் போனது முருகனுக்கு.

வீட்டுக்கு போனதும் முருகன் மனைவி கருப்பாயி என்னங்க வாங்கியாச்சான்னு கேட்டதும், பளார்னு ஒன்ணு விடணும் போல தோணுச்சு... நாமே எரிச்சலா வர்றோம்... உள்ள நுழையறமோ இல்லையோ, அதுக்குள்ள கேள்வி கேக்குறா... வீட்டுக்காரரின் சிடு சிடுப்பை பார்த்ததுமே ஒண்ணும் நடக்கலை என்பதை உணர்ந்து கொண்டாள் கருப்பாயி. தூங்கிக் கொண்டிருந்த பையன் அப்பாவின் சத்தத்தை கேட்டதும், அரைத் தூக்கத்தில் ஓடி வந்து அப்பாவின் மடிமேல் படுத்துக் கொண்டான். மனைவி போட்ட சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டே நடந்த எல்லாவற்றையும் பெண்டாட்டிக்கிட்ட சொன்னான்.

ஜாதி சட்டிபிகேட் வாங்குறதுக்கு இவ்வளவு பிரச்சினையா! ஜாதி இல்ல, ஜாதி இல்லங்கறங்க... ஏன், இப்படி சர்டிபிகேட் கேட்டு நம்ம தாழியறுக்கிறானுங்க என்று முனுமுனுத்தால் கருப்பாயி.

பள்ளிக்கூடம் சேர்ப்பதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் என்ன செய்வது என்ற யோசனையிலேயே உறங்கிப் போனான். மறு நாள் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஜாதி சர்டிபிகேட் கிடைக்க நாளாகுங்க! ஒரு மாசம் கழிச்சு வாங்கித் தரேன் என்று முருகன் கூற, பள்ளி நிர்வாகி, ஒரு மாசமெல்லாம் டைம் கிடையாது, இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாந்து சேக்கணும் சரியா! என்று மிரட்டல் தொணியில் சொல்லிட்டார் ஹெட் மாஸ்டர். முருகன் டீ கடை கோவிந்தசாமியை பார்த்து, பள்ளி நிர்வாகி கூறியதை சொன்னான். ஏம்பா, நீ எந்த தைரியத்துல ஒரு மாசத்துல கிடைக்கும்ன அவனவன் ஐஞ்சு வருஷம் லொங்கு, லொங்குன்னு அலையறான் அவனுக்கே கிடைக்க மாட்டங்குது நீ என்னடான்னா...

வேணும்னா ஒண்ணு பண்ணு, உனக்கு அவசரமாக சட்டிபிகேட் வேணும்னா, நான் வேற எதாவது ஜாதியைப் போட்டு வாங்கித் தரேன் அப்புறம் பாத்துக்கோ...ன்னார்...

பள்ளிக்கூடமும் பையனும் மட்டுமே கண்ணுல இருந்த முருகனுக்கு ஜாதியை தூக்கி எரிஞ்சான்! ?

- கே.செல்வப்பெருமாள்