"வளையோசை கல கல கலவென கவிதைகள் படிக்குது குளு குளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என சிறு விரல் பட பட துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்.....கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்"

இரவின் வாசத்தை இளையராஜா எங்கும் பரப்பிக் கொண்டே இருப்பதாய் உணர்ந்தாள் யூதரா. இந்த மாதிரி நள்ளிரவில்... பச்சை விளக்கோடு... தூக்க கலக்கத்தோடு... இருக்கும் தேனீர் கடைகளில்... இளையராஜா பாடல்கள் கேட்கையில்... வேறோர் அதிரூபம் தென்படுவதை உணர முடியும். குடித்துக் கொண்டிருந்த தேநீரில் அமிழும்... சிந்தனையை மீண்டும் மீண்டும் பாடல் வரிகள் சுழற்றின.

நெஞ்சாலையில் நீட்ட நீட்ட பெட்டிகளாக ஏர் பஸ்கள் சீறிக் கொண்டிருந்தன.

ஓர் இரவு தான் காலக்கெடு. அதற்குள் சென்னையோ... பெங்களூரோ... மார்த்தாண்டமோ... கன்யாகுமரியோ... ஒரு திசையில் இருந்து இன்னொரு திசைக்கு சென்று சேர வேண்டும் அல்லது வந்துச் சேர வேண்டும். உலகை சாலையாக்கும் நேர்த்தியில் மனிதன் இரவை பயணமாக்கினான். இரவை பேருந்தில் விட்டு விடியலை அலுவலகத்தில் காணும் அத்தனை பேரும் அவசர மனிதர்கள். பேருந்துக்குள் எப்போதும் சென்று சேராத ஒரு தூரம் இருந்து கொண்டே இருக்கிறது.

நள்ளிரவின் குளிர் வெப்பத்தோடும் துக்கத்தோடும் இருக்கிற மாதிரி.. என்னவெல்லாமோ யோசனையை யூதராவுக்குள் கிளப்பி விட்ட பாடலை அவள் காற்றோடு சேர்ந்து முனங்கினாள். எதிரே நின்ற பேருந்துகள்.. உறுமிக் கொண்டே வெள்ளை கல்லறைகளாக முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

"என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி..." என்ற போதே... ஸ்பீக்கருக்கு முத்தமிடத் தோன்றியது.

எதிரே தள்ளாடியபடியே காற்றில் வந்தவன்.. கண்கள் சிவக்க... கையில் இருந்த சரக்கு கிளாசில் நீர் ஊற்ற சொல்லி ஜாடை செய்தான். அவனை உற்றுப் பார்த்த யூதரா... கண நேரத்தில் எடுத்த முடிவோடு டேபிளில் இருந்த கூஜாவை கவிழ்த்தி அந்த கிளாஸை நிறைத்தாள்.

காலத்தை ஊற்றியது போல நீர் சொட்டும் காட்சி ஸ்லோமோஷனில் சொட்டிய நீரில் இரவின் நிறம் மாறி இருந்தது. அவன் போதும் என்று ஜாடை செய்தபடியே வணக்கத்தை நன்றியாக்கி விட்டு நகர்ந்தான்.

தள்ளாடும் நடையில்... " தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான் இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி... என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி..."

எல்லாவற்றுக்கும் பாடல் உண்டு இளையராஜாவிடம். எல்லா பாட்டிலும் ஏதோ இருக்கிறது. கேட்காத தாளம்... கேட்கின்ற யாவும். கேட்டவர் காதில்... கேட்குமே தன் கீதம்.

தேநீர் முடிந்தது. கவனம் களைய தாகம் அடங்கிய குடிகாரன் காற்றில் கரைந்திருந்தான்.

ஆங்காங்கே நின்று நடந்து ஆசுவாசப் பட்டுக் கொண்டிருந்தார்கள் பயணிகள். "ஐயோ டைம் ஆச்சே...!" என்று அமர்ந்திருந்த இறுக்கத்தை விடுவித்துக் கொண்டிருந்தவர்களைத் தாண்டி பேருந்து நிறுத்தல்களின் குறுக்கு வெட்டாக்கும்... தோற்றத்தை தாண்டி தன் பேருந்தை தேடுகையில் சுளீரென எறும்பு கடித்தது மூளைக்குள்.

"அய்யயோ பஸ்ஸ காணோம்..." வாய் தானாக துடிக்க... கண்கள் தானாக இமைக்க மறந்திருந்தது.

தலையில் கை வைத்து..." ஓஹ்.. காட்... ஐ மிஸ்ட் த பஸ்.." என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

அட.. ஆமா MRM சென்னை பஸ் தான... அது போய்டுச்சே... டிரைவருக்கு போன் பண்ணுங்க" என்றான் தேநீர் ஆற்றும் அதே வேகத்தோடு.

"ஐயோ... போனை பேக்லயே வெச்சிட்டு வந்துட்டேன்" என்றவளின் முகம் முத்து முத்தாய் நட்சத்திரங்களை எரித்துக் கொண்டிருந்தது.

யோசித்த கடைக்காரன்... பக்கத்தில் நிற்கும் டாக்சியை பார்த்து கை நீட்டி... "ஒன்னும் பிராப்லம் இல்ல... டாக்ஸி பிடிங்க.. நம்ம பையன் தான்... அழுத்தினானா.. அடுத்த ஒன் ஹர்ல.. எப்படியும் பஸ்ஸ பிடிச்சிடுவான்.. கிளம்புங்க..." என்றான்.

"நல்லோர் இருக்கிறார்கள்... நள்ளிரவிலும்..." முணுமுணுத்துக் கொண்டாள். "தேவதை இளம்தேவி உன்னை சுற்றும் ஆவி....." பாடல் அடி மனதை கவ்விக் பிடித்தது.

வெள்ளை நிற டாக்சி.. இருளைக் கிழித்துக் கொண்டு அந்த நெடுஞ்சாலையில் "இந்த சாலையில் அடுத்த 30 கி மீட்டருக்கு கவனத்தோடு செல்லவும்.." என்ற அறிவிப்பு பலகையை கண்டும் காணாமல் தாண்டி செல்ல ஆரம்பித்தது.

இரவைக் கிழித்து செல்லும் வெள்ளை நிறத்தில் வானமேறி பார்த்தால் வெறிபிடித்தா பறவையொன்று வீதி சுற்றுகிறது போல தெரியலாம். டிரைவர் கண்ணாடி வழியே இருட்டில் அவள் முகம் தேடினான். எதிரே நீண்டு குறுகிய சாலையில் நீந்தி செல்லும் இருள் சென்று கொண்டிருந்தது. இரவின் காற்றில்... ஒரு இம்சை இருக்கிறது. உணர்ந்தாள்.

ஜன்னல் வழி புகும் குளிர் காற்றில் குறியீடுகள் உள்ளதை யூதரா அறியாள். அவளுக்கு தன் பேக் பேருந்தில் இருப்பதை குறித்து தான் தவிப்பும் தகிப்பும். வண்டி போவது போல எதையோ செய்துக் கொண்டிருக்கிறது.

அதற்குள் எதிரே நீட்ட நீட்ட கல்லறைகள் போல சாலையில் சரிந்து வழுக்கிக் கொண்டே செல்லும் பேருந்துகளில் கண் இமைக்கும் நேரத்தில் காலம் இணுங்கிக் கொண்டே செல்வதை காதோரம் உரசி செல்லும் சத்தத்தில் உள் வாங்கியபடியே அமர்ந்திருந்தாள்.

அதே நேரம் அவளை ஏற்றாமல் வந்து விட்டதை உணர்ந்த பேருந்து திரும்பி மீண்டும் அதே தேநீர்க் கடைக்கு சென்று கொண்டிருந்தது. எதிர் வினைகளுக்கு அது எதிர் வினைதான் என நம்ப செய்ய வினையை கொண்டோர் இருக்க வேண்டும். அது திசை மாறி சென்று கொண்டிருப்பதைப் பேருந்துக்காரன் அறியான்.

நேரம் ஓடிக் கொண்டிருக்க.... நேர்த்திக்கடன் போல சாலையும் முன்னால ஓடிக் கொண்டேயிருக்கிறது.

எல்லாமே மாறக் கூடியவைதான். வண்டியை பெரும்மரத்தின் ஓரம் நிறுத்தி இன்னும் கொஞ்சம் அவ்விடத்தை இருட்டாக்கிய டாக்சி ட்ரைவர்... திரும்பி அவளைப் பார்த்தான். அப்பார்வையில் திட்டமிட்ட குறிகள் முளைத்திருந்தன.

"அண்ணா... பிளீஸ்... ஏதும் தப்ப யோசிக்காதீங்க... என்னை எப்டியாவது பஸ்ல சேர்த்திடுங்க... நான் காலைல சென்னைல இருந்தாகணும்... சொன்னா கேளுங்க... விபரீதமா ஏதும் பிளான் பண்ணாதீங்க "...

அவள் பேச்சு மூச்சில் இருந்து வந்தது. அதற்குள் அவன்... வேகமாய் இறங்கி அவள் பக்க கதவைத் திறந்து அவளை வெளியே இழுக்க ஆரம்பித்து விட்டான்.

"ஐயோ... அண்ணா... இவ்ளோ நேரம் நல்லாத்தான வந்தீங்க... இப்டி பண்றது நியாயமா... சொன்னா கேளுங்க..." கால்கள் நடுங்க கைகளை அசைத்து அசைத்து உடலை உள் நோக்கி இழுத்தபடியே போராடினாள். போராட்டம்.. தொடர... அவன் அவள் கால்களை பற்றி இழுக்க... விடுபட்ட பெருமூச்சு இடைவெளியில்... அனிச்சையாக எட்டி உதைத்தாள்.

வயிற்றில் நங்கென்று வாங்கியவன் நிலை தடுமாடி சாலையின் நடுவே சென்று விட்டான். எங்கிருந்தோ வந்த லாரி இம்மியளவும் பிசகாமல் அவனை அடித்து தூக்கி வீசியது. அடித்த சத்தம் இருட்டின் செவிகளை கிழித்துக் குருதி கொட்ட வைத்தது.

படார் டமார் என்று பட் பட் என கேட்ட சத்தத்தின் உறைதலில் கேட்டதெல்லாம் மரணக் கூச்சல். கூச்சலுள் நுழைந்த லாரி... தடுமாறி.. தடம்மாறி... நிலை கொள்ளாமல் சாலையில் அங்கும் இங்கும் அலைபாய்ந்து இடது பக்கமிருந்த இன்னொரு மரத்தில் மோதி விடும் நூலிழையில் நின்றது.

தூக்கி வீசப்பட்ட டாக்சி டிரைவரைக் காணவில்லை. செத்தொழிந்தான் என்று விடவும் முடியாத பதட்டத்தில்... காரை விட்டு வெளியேறி பேய் பிடித்தவள் போல பார்த்துக் கொண்டிருந்தாள் யூதரா.

"நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன்" பாடலாக... சரிந்து முக்கால்வாசி மூஞ்சி திருப்பிக் கொண்டிருந்த லாரியில் இருந்து இளையராஜா இறங்கிக் கொண்டிருந்தார். அவள் லாரியையே பார்க்க... லாரிக்குள் இருந்து இளையராஜாவை குறைத்துக் கொண்டு வெளியே வந்த டிரைவர்.. தள்ளாடி தள்ளாடி அவள் அருகே வந்தான்.

நளினம் கூடிய நடை அது. குடித்தவனின் உச்ச போதையில் கலந்த அதிரூப ராஜநடை. அவன், அருகே வர.... லாரியில் பின்னொளியில் தெரிந்த சிவப்பில் இருந்து.. அவள் அவனை அடையாளம் கண்டு கொண்டாள். அவனும் அவளை சற்று முன் நீர் கொடுத்து சுதி ஏற்றிய சுகராகம் என்று நன்றியோடு பார்த்தான்.

"முடிந்தவைகளை பற்றி யோசிக்க பேசிக்க ஒன்றுமில்லை பெண்ணே. அர்த்தஜாமம்.. இருட்டுக்கு இம்சையாகத்தான் இருக்கும். கிளம்புவோம்" என்று பாடல் முனங்குவதை போல சொல்லிக் கொண்டே அவளை கண்களாலே வா என்று ஜாடை செய்தான். வேறு வழியே இல்லாத அவ்விரட்டில் தள்ளாடிய அவன் நடைக்கு பின்னால் அன்ன நடை நடப்பதைத் தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.

"நின்னுக்கோரி வர்ணம் இசைத்திட என்னைத்தேடி வரணும்..." பாதி பாட்டுக்குள் யூதரா பேருந்தை தவற விட்ட கதை சொல்லப் பட்டு விட...

" விடுங்க... எனக்கு நீர் கொடுத்த தேவதை நீங்க.. உங்களை அந்த பஸ்ல ஏத்தி விடறத விட வேற என்ன வேலை இருக்கு... நல்ல கெட்டியா பிடிச்சு உக்காருங்க" என்றவன்... அதன் பிறகு செய்ததெல்லாம் தாறுமாறு.

வண்டி அவன் கட்டுபாட்டில் இருப்பது போலவே இருக்கும் போதெல்லாம்.. சாலையில் அங்கும் இங்கும் அலை பாய்ந்து மாயாஜாலம் காட்ட ஆரம்பித்தது. எதிர் வரும் பெரிய நீட்ட கல்லறை போன்ற பேருந்துகள் சரிந்தபடியே சொய்ங்... சொய்ங்... என்று வந்து வந்து சர்ரென நிமிர்ந்து கடந்து போகையில் ஏறி இடறி இறங்கி நெளிந்து இடது பக்க சாலைக்குள் நுழைந்து விடும் வித்தையை அவன் லாரிக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான் போல.

கண்களை மூடிக் கொண்டு... மூச்சில் பேச்சற்று இருட்டை விலக்கி விலக்கி பார்த்துக் கொண்டிருந்த யூதராவுக்கு இவ்வுலகம் தன்னிலிருந்து விடுபட்டுக் கொண்டதோ என்ற அச்சம். அதை கீர் பாக்சில் இருந்து வரும் சூட்டில் உணர்ந்தாள்.

வண்டியின் அலசல் சாலையோரம் இருக்கும் மரங்களின் கிளைகளை கொத்தாக ஒடிக்கவும்... ஜன்னல் உடைந்து விடாத லாவகத்தில் மீண்டும் நிமிர்ந்து அப்புறம் இருந்தால் இப்புறமும் இப்புறம் இருந்தால் அப்புறமும் என்று பக்கவாட்டு சக்கரங்கள் சாலையில் இருந்து எகிறி இருபுறம் இருக்கும் காட்டில் கணம் ஒன்றில் சுற்றி மீண்டும் சமன் செய்து கொண்டு சிறுபிள்ளை லாரி பொம்மையை ஓட்டி விளையாடுவது போல... ராஜநடைக்காரன்.. அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

அவனுக்கு தலை நிற்க மாட்டேன் என்கிறது. வேகம் மட்டுமே பூமியின் அகம்பாவம் என்பதும் போல.. அவன் பூமிக்குள் சதுர பூமி ஓட்டுகிறான் போல. லாரி தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது.

என்ன நடந்தது என்று பிறகு தான் யோசிக்க முடிந்தது.

யோசிப்பதற்கு முன்பே சரிந்து சாய்ந்து நின்ற வண்டியில் இருந்து அதிவேகமாய் கீழே குதித்தவள் மரத்தில் தூக்கில் தொங்கி கொண்டிருந்த அந்த ஜோடிகளின் காலைப்பற்றி பதபதைப்போடு... வேக வேகமாய் காற்றினில் மேலே தூக்கினாள்.

வண்டியின் ஹெட் லைட் நேராக தொங்கும் கால்கள் மீதும் தூக்கும் யூதரா மீதும்தான்... விழுந்து கொண்டிருந்தது. வண்டியை விட்டு இறங்கி தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து பார்க்கையில்.. அந்த ஜோடி காப்பாற்றப்பட்டு நடு நடுங்கிக் கொண்டிருந்தனர். இரவு வானில்... ஏதோ திறந்து கொண்டு பார்ப்பது போல இருந்தது. விஷயம் புலப்பட்டு விட்டது. அவர்களை தூக்கில் தொங்க விட்டுக் கொண்டிருந்த மூவர் கூட்டணியை லாரி பதம் பார்த்து விட்டது.

உடல்கள் நைந்து... சதையைக் கூழாக்கி... மண்டையை சிதற விட்டு... வயிற்றில் ஏறி இறங்கி... குடல்... எல்லாம் சாலையில்... குழைந்து கிடக்க... காணும் கண்களில் மரணம் சிதறிக் கொண்டிருந்தது.

படக்கென்று தாங்கொணா துயரம் வந்தவன் போல.. பாக்கெட்டிலிருந்து பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்தான்.

"வினை கொண்டோன் எதிர்வினை பெறுவான். பெண்ணே... காலத்தின் நியதிக்குள் நாம் எல்லாரும் கடவுளர்கள்.."

"ஆணவ கொலை முயற்சி... ஆனாலும்... நம்ம வண்டி தேடிக் கண்டு பிடிச்சு காப்பாத்திடுச்சுல்ல... சரியா கொலைகார முட்டாள்களை நசுக்கி போட்ருச்சுல்ல... கொலை கொலையா முந்திரிக்கா... லாரி லாரியா சுத்தி வா..."

வண்டி காதலர்களுக்கு டாட்டா காட்டி விட்டு கடக்கையில்... எல்லாமே நம்மை மீறிய சம்பவங்களாக நடந்துக் கொண்டிருப்பதை யூதரா உணர்ந்தாள்.

"என்ன நடக்குது என்ன சுத்தி.. யார் இவன்.. ஏன் இப்டியெல்லாம் பண்றான். இவன் நல்லவனா கெட்டவனா... இதெல்லாம் சரி ஆகி எப்போ பஸ் பிடிப்பேன்னு தெரியலையே..." அவள் வாய்க்குள் நடுங்கும் சொற்களில்... உருவம் இல்லை. உள்ளத்தின் வரிகளை... மென்று பார்க்க காற்றுக்கு தைரியமில்லை.

எதிரே வரும் ஒலிப்பானில்.. சாலைத்திமிர். மயிர் கூச்செரியும் அசுரத்தனம். அயோ என்பதற்குள் வந்து போகும் வேகத்தில்.. அதிகாலை ஊர்கள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பச்சை விளக்கெரியும்... கூடாரத்தை தாண்டுகையில்... நொடியில் கண்ட காட்சியை ஸ்லோ எழுத்துக்களில் கண்டாள் அவள். அந்த கூடாரத்துள்ளே.. அத்தனை சேர் இருக்க.. காக்கி ட்ரவுசர் போட்ட ஒருவர் கீழே அமர்ந்து பரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

வண்டி... போன வேகத்தில் திரும்பியது. திரும்ப வேகத்தில்... கடைக்குள் நுழைந்தது. பெரும் பசி கொண்ட யானை வாழைத் தோப்புக்குள் நுழைந்து வெளி வந்தது போல... வெளி வந்த வண்டி பின்னால் ரெவர்ஸில் வந்து மீண்டும்... சாலைக்குள் வந்தது. எந்த பக்கம் செல்ல வேண்டும் என்ற எந்த கட்டுக்கோப்பும் இல்லாத மாதிரி வண்டி பக்கவாட்டில் சாலையை அலசி சரிந்துக் கொண்டிருந்தது.

வண்டிக்குள் ஒரு பொம்மையை போல அங்கும் இங்கும் சுழன்று சுழன்று கொண்டிருந்தாள் யூதரா.

"இவன் லூசு போல இருக்கானே...! என்னென்னவோ பண்றான் ஒரு மாயாஜாலக்காரன் மாதிரி. அவன் கடைக்குள் வண்டியை விட்டு ஆட்டிய பிறகு... கீழே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் நடுநடுங்கி பயந்து அவரையுமறியாமல் இருந்த ஒரே ஒரு சேரில் அமர்ந்து கையில் இருந்த பரோட்டாவை தானியங்கி போல வாய்க்குள் போட்டுக் கொண்டிருந்தார். கல்லாவில் அமர்ந்திருந்த ஓனர்... உடல் நசுங்கி கொத்து கறியாக சேரில் குவிந்திருந்தார்.

"இரவின் நீளம் கண்களின் கருவிழியில் உண்டு போல. காற்றின் நாவு கேட்கையில் புரியும். உள்ளே வெளி உண்டு. வெளியே உள் உண்டு. நகத்தை கடித்துக் கொண்டு வெட்கப்பட ஒரு பாடல் கேள்..." என்றவனின் தலை குடிக்கு ஆடியாதா... குடிக்க ஆடியதா என்று தெரியவில்லை.

சற்று நேரத்தில்... அவள் தொலைத்த பேருந்தை பிடித்து அரக்க பறக்க ஏற்றி விட்டான். 30 கிலோ மீட்டர் முடிந்திருந்தது.

"எங்கம்மா போய் தொலைஞ்ச.. போன் பண்ணுனா அதையும் எடுக்காத.. உன்ன தேடி நாங்க திரும்பவும் அந்த டீ கடைக்கெல்லாம் போய்... எங்க வேலைக்கு உலை வைக்க பார்த்தியே.. இந்த இடம் ரெம்ப டேன்ஜர்ம்மா.. இது எப்பவும் கைமீறிய அசம்பாவிதம் தொடர்ந்து நடந்துட்டு இருக்கற இடம்... நல்லவேளை நீ தப்பிச்சு வந்திருக்க... போ...போய் உக்காரு " என்று அதட்டிய நடத்துனரிடம் யூதராவுக்கு சொல்ல ஒன்றுமில்லை.

ராஜநடைக்காரனுக்கு நன்றி கூட சொல்ல மறந்த கதையோடு படபடப்பாக இருக்கைக்கு அருகே வைத்திருந்த பேக்கை அவரச அவசரமாக பார்த்தாள். அப்பாடா என்று நிம்மதி... ரகசிய பெருமூச்சானது.

சற்று முன் நிகழ்ந்தவைகளை ஒருவேளை கனவோ என்றுகூட யோசித்தாள். கனவைக் கலைப்பது போல அவளின் பின் இருக்கையிலிருந்து மெல்ல ஒரு குரல் ராத்திரியை கிழிப்பது போல எழுந்தது.

"ரெம்ப கொடூரமா பத்து நாள் கட்டிப் போட்டு... தினமும் குடிக்க வெச்சானுங்க... நேர நேரத்துக்கு வந்து வாயில சரக்க ஊத்திட்டே இருந்தா... என்னாகும்...? ஒரு கட்டத்துல ரத்த ரத்தமா வாந்தி வந்திருச்சு. ஆனாலும் சரக்க ஊத்தறத மட்டும் நிறுத்தல. வர்றவன் போறவனல்லாம்.. பொழுது போகாம இருக்கறவனல்லாம் வந்து ஊத்திட்டு போவான். ஒரு வாரத்துல ரெம்ப கொடுமையா... குலை நடுங்க... உயிர் நடுங்க... சாவு வந்துருச்சு.

காரணம், மணல் கொள்ளையை பத்தி எழுதினது. மணல் கொள்ளைக்கு எதிரா போராடினது. மணல் கொள்ளைய தடுக்கறதுக்கு கூட்டம் கூட்டினது. விட்றாத... நீ கொண்டு போற.. எல்லா சாட்சிகளையும்....இந்த மாசம் முழுக்க நீ சேகரிச்ச எல்லா ஆதாரங்களையும்.. காலையில சேக்க வேண்டிய இடத்துல சேர்த்துடு.. உன்ன தான் நம்பறேன்..." என்ற குரலோடு சேர்ந்து பேருந்துள் இரவுக்கு போடும் சிவப்பு வெளிச்சத்தில்... நிழல் போல தெரிந்த முகத்தைப் பார்த்தாள்.

பேச்சற்று பார்த்த யூதரா... பட்டென்று வலது பக்கம் திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள்.

அதே மணல் லாரி பேருந்தை முந்தி விட வந்து வந்து போய்க் கொண்டிருந்தது. படபடப்போடு பார்த்தவளுக்கு ஓட்டுநர் இருக்கையில் யாரும் இல்லாதது உள்ளுக்குள் தூக்கிவாரி போட்டது. வண்டி தானாக ஓடிக் கொண்டிருந்த காட்சி அவள் உடலை நடுங்க செய்தது.

உள்ளே எதுவோ கத்தும் குரல். அதே நேரம் உள்ளுணர்வு உதைக்க.. காதில் இதுவரை கேட்டுக் கொண்டிருந்தது கற்பனையல்ல... நிஜம் தான் என்று பயந்து கொண்டே பலமாய் வாங்கும் பெரு மூச்சோடு வேகமாய் குரல் வந்த திசைக்கு திரும்பினாள்.

ஒரு லாரியின் அதிவேக சத்தத்தோடு பேருந்து முன்பை விட வேகமாய் போக ஆரம்பித்திருந்தது. அங்கே... அங்கே நன்றாக சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தது ராஜநடைக்காரனின் முகம்.

"வேதாளம் வந்துருக்குது... வந்து தேவாரம் பாடி நிக்குது..." பாடல்.. பேருந்துள் எவனோ ஒருவனின் ஹெட்போனையும் தாண்டி கசிவதை நன்றாக கேட்க முடிந்தது.

- கவிஜி

Pin It