தனது நான்காவது படமான “நான் கடவுள்’’ படத்திற்காக இயக்குநர் பாலாவிற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளிவந்தபோதே விருதுகள் குறித்து எதிர்பார்ப்பினை உருவாக்கியது. காசி நகரத்து அகோரிகளின் வாழ்வையும், மாற்றுதிறன் கொண்டோரின் வாழ்க்கை அவலத்தையும் எதார்த்தமாக காட்டிய படம் நான் கடவுள். இயக்குநர் பாலாவின் இதர படங்களும் எதார்த்தவியல் ஓவியங்களே. தமிழ் சினிமாவின் எதார்த்தவியல் படைப்புகளின் முன்னோடியான இயக்குநர் பாலுமகேந்திராவின் சீடர் இவர்.
இன்றைய சமூகத்தில், வாழ்வின் சிக்கல்களை, துன்பத்தை, அவலத்தை விளிம்பு நிலை மக்களின் வாழ்வை எதார்த்தமாக சொன்னால் யாரும் படம் பார்க்க வரமாட்டார்கள் என்ற மசாலா இயக்குநர்களின் ‘கிளிப்பேச்சு’ வாக்குமூலத்தை தனது படைப்புகள் மூலம் உடைத்தெறிந்தவர் பாலா.
1999இல் சேது படத்தை இயக்கியபோது, அதை 60க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டியபோதும் அப்படத்தை வெளியிட யாரும் முன்வரவில்லை. கடும் முயற்சிக்கு பிறகு தன் சொந்த ரிஸ்க்கில் எவ்வித விளம்பரமும் இன்றி படம் வெளியிடப்பட்டது. படம் வெளிவந்தப்பின் நடந்ததை தமிழ் சினிமா வரலாறு பெருமையோடு தன் பக்கங்களில் குறித்துவைத்துக் கொண்டது. அப்படமும் அவ்வாண்டுக்கான சிறந்த தமிழ்மொழி படத்திற்கான தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான ஃபில்பேர் விருது, மாநில அரசின் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்திற்கான சிறப்பு விருது என நான்கு விருதுகளை பெற்றுத்தந்தது.
விருது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் தடத்தையே மாற்றியமைத்தது. நான்கு பாடல்கள், 5 சண்டைக்காட்சிகள், பன்ச் டயலாக் கதாநாயகன் ஒரு சென்டிமென்ட் என இருந்த வெற்றி பார்முலாவை உடைத்தெறிந்து புதிய தளத்தில் கதை வாழ்வியல் முரண்களோடு முட்டிமோதி தோற்றுப் போகும் கதாநாயகன், பக்கத்துவீட்டு பெண் போன்ற நாயகி உறுத்தும் சமூக எதார்த்தம் என தமிழ்சினிமாவை மாற்றி போட்ட புதிய இளம் இயக்குநர்களும், படைப்புகளும் புறப்பட்டு வந்தது. சேதுவிற்கு பிறகுதான் அதில் நந்தா (2001) பிதாமகன் (2003) நான் கடவுள் (2009) என பாலாவின் இதர படைப்புகளும் அடக்கம்.
இன்றைக்கும் கையில் கதையோடும், வயிற்றில் பசியோடும், கனவுகள் தேக்கிய கண்களோடு கோடப்பாக்கம் வீதிகளை சுற்றி சுற்றி வருகின்றனர் இலட்சிய இளைஞர்கள். அவர்களுக்குதான் தனது விருதை சமர்ப்பணம் செய்துள்ளார் பாலா. அதோடு தனக்கு எதார்த்த சினிமாவின் அறிவியலையும், அதன் சமூக முக்கியத்துவத்தையும் கற்றுக் கொடுத்த தனது குரு இயக்குநர் பாலுமகேந்திராவிற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.
தமிழ் கவிதைத் தளத்தில் பாரதி தடத்தை பின்பற்றும் முற்போக்கு பாரம்பரியம் தடம்பதித்து தொடர்வது போல, தமிழ்ச் சினிமாவில் எதார்த்தவியல் படைப்புகள் பாலுமகேந்திரா, பாலா அவரது சீடர்களான அமீர், சசிக்குமார் எனத் தொடர்வது ஆரோக்கியமானதே.
விருதுக்கு பிறகு பாலாவின் நேர்காணலில் விருதிற்காக நான் கடவுளுக்கு நன்றி சொல்ல தேவையில்லை. இந்த படத்தில் அவர் நடிக்கவில்லை. படத்திற்காக அவர் உழைக்கவில்லை. நடித்த நடிகர், நடிகைகள் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களுக்கும் தான் நன்றி சொல்வேன் என்றார். இத்தகைய பதிலுக்கான அவரின் புரிதல்தான் அவரை எதார்த்தவியல் தளத்தில் நிறுத்தியுள்ளது.
மனநிலை தவறியவர்கள் பற்றிய படம்தான் தொடர்ந்து எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, இல்லை. சமூகத்தில் ஒருவராய் வாழும் சராசரி மனிதர்கள் பற்றியே இனி படம் இயக்க உள்ளேன். அவர்களின் வாழ்க்கை நெருக்கடி என்கிறார் பாலா. செய்யுங்கள் பாலா. அதைத்தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
பாலா பிறந்தது ஜூலை 11.
பெரியகுளம் தேனி மாவட்டம்.
படிப்பு:தமிழ் இலக்கியம்
அமெரிக்கன் கல்லூரி மதுரை.
- கே.எஸ்.கனகராஜ்