உங்கள் உறவினரோ, பக்கத்து வீட்டுக்காரரோ புற்றுநோயால் அவதிப்படுவதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் விழிக்காதீர்கள். 

சென்னை அணு மின் நிலையம் (மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன்), கல்பாக்கம் அணு மறுசுழற்சி நிலையம் (கல்பாக்கம் அட்டாமிக் ரீபிராசசிங் பிளான்ட்) ஆகியவற்றில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 4,000 சதுர கி.மீ. பகுதி எளிதில் கதிரியக்க பாதிப்பு தாக்கக் கூடியது. இதில் சென்னை பெருநகரப் பகுதியும் அடக்கம். இப்பகுதியில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் வாழ்கின்றனர். 

"இப்பகுதியில் வாழும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள உடல்நல பாதிப்பு குறித்து அரசு இதுவரை எந்த ஆய்வும் நடத்தியதில்லை. இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தைராய்டு புற்றுநோய் தொடர்பாக டோஸ் அமைப்பின் (பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர்கள் அமைப்பு) மருத்துவர்கள் புகழேந்தி, கான்ராட் மேரி, ஆர். ரமேஷ், வி.டி. பத்மநாபன் ஆகியோர் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்தியாவில் இந்த ஆய்வு மட்டுமே கதிரியக்க அயோடின் - தைராய்டு புற்றுநோய், தைராய்டு கோளாறுகள் இரண்டுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது என்கிறார் புகழேந்தி. அந்த ஆய்வின் முக்கிய முடிவுகள் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை:

- அணுக் கதிரியக்க பாதிப்புகள் தொடர்பான ஐ.நா. அறிவியல் குழு வெளியிட்ட அறிக்கைப்படி, கல்பாக்கத்தில் இருந்து வழக்கமாக வெளியிடப்படும் கதிரியக்க நியூக்ளைடு மற்ற நாடுகளில் வெளியிடப்படுவதைவிட அதிகமாக இருக்கிறது என்று உறுதிப்படுத்தியுள்ளது. 

- கல்பாக்கம் அணுமின் நிலையம் ஐயோடின் 131 ஐசோடோப்பு உள்ளிட்ட கதிரியக்க வாயுக்களை காற்றிலும், கடலிலும் வெளியிட்டு வருகிறது. 1986 ஏப்ரல் மாதம் ஆடுகளிடம் ஏற்பட்ட தைராய்டு தொடர்புடைய கோளாறுகளை அரசு சார்ந்த சுற்றுச்சூழல் கணக்கெடுப்பு ஆய்வகமே உறுதிப்படுத்தியுள்ளது. அவை உண்ணும் புல்லில் அயோடின் 131 இருந்ததே காரணம். 

- 1998 ஆம் ஆண்டில் கல்பாக்கம் அணு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டதில் இருந்து கழிவு வெளியேற்றத்தைப் பற்றிய தகவல்கள் வெளியிடுவதை அணு சக்தித் துறை நிறுத்திக் கொண்டுவிட்டது. 

- கல்பாக்கத்தைச் சுற்றி குறிப்பிட்ட கி.மீ. சுற்றளவுப் பகுதியில் வாழ்வோர் எளிதில் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. காரணம் அணுக் கழிவு, அணுசக்தி நிலையம் வெளியிடும் கதிரியக்கம். இப்பகுதியில் உள்ள மெய்யூர்குப்பம், சத்ரஸ் ஆகிய கிராமங்களில் வாழ்வோர் ஏதாவது ஒரு புற்றுநோய் அல்லது மர்ம நோயால் இறந்தும் உள்ளனர். இப்பகுதியில் வாழும் 15-40 வயதுக்கு உட்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவருக்கு தைராய்டு வீக்கம் அல்லது தைராய்டு கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தைராய்டு புற்றுநோய் பாதிப்பும் அதிக எண்ணிக்கையில் உள்ளது. 

- கடற்கரையில் இருந்து 16 கி.மீ. சுற்றளவில் 15 வயதுக்குக் கீழ் உள்ளோரிடம் 12 பேரிடம் பாலிடாக்டிலி போன்று கூடுதல் உறுப்பு தோன்றுதல் கோளாறு, மனநிலை வளர்ச்சி குன்றுதல் போன்றவை அதிகம் காணப்படுகிறது. கரு உருவான காலத்தில் கதிரியக்கம் வெளிப்பட்டிருந்தால் மட்டுமே இது போன்ற பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

- அணுக் கதிர்வீச்சு காரணமாக 2002-03 ஆம் ஆண்டில் மல்டிபிள் மயலோமா என்ற அரிதான எலும்புப் புற்றுநோய் காரணமாக மூன்று ஊழியர்கள் இறந்துள்ளனர். இந்த பாதிப்பால் ஓராண்டில் சென்னை பகுதியில் ஒரு லட்சம் பேரில் 2.4 பேர் வீதம் இறக்க வாய்ப்புள்ளது. ஆனால் கல்பாக்கம் பகுதியின் மக்கள்தொகையோ 25,000. அவர்களில் 18 மாதங்களுக்குள் 3 பேர் இறந்திருப்பது மிகவும் ஆபத்தானது. இது இயல்பைவிட நான்கு மடங்கு அதிக பாதிப்பாக இருக்கிறது.  

- அணு உலைகளுக்கான கடல்நீர் சேகரிப்பு அமைப்பு கடலில் இருந்து 420 மீட்டர் (கிட்டத்தட்ட .42 கி.மீ) தொலைவில் கடலுக்குள் உள்ளது. இதற்கு ஆதரவாக 405 மீட்டர் நீள ஜெட்டி உள்ளது. மேலும் கதிரியக்கக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான குழாயும் இத்துடனே உள்ளது. கடலில் வெளியிடப்படும் கதிரியக்கக் கழிவுகள் புற்றுநோயை அதிகரிக்கலாம் என்கிறார் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த இயற்பியலாளர் எம்.வி. ரமணா. இந்தப் பகுதி கடற்கரையில் கறுப்பு மணலை வெளிப்படையாகக் காண முடிகிறது. இந்த மண்ணில் மோனசைட் அதிகமாக இருக்கிறது. இது அதிக நச்சுத் தன்மை கொண்டது.  

இதன் காரணமாக கடற்கரையில் வாழும் மக்கள், கடல் உணவை நம்பியிருப்போர் பெருமளவு பாதிக்கப்படுவர். கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள மீனவர்கள் ஏற்கெனவே மீன் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஒரு காலத்தில் அதிகமாகக் கிடைத்த நண்டு, இறால், லாப்ஸ்டர் போன்றவை கிடைப்பதில்லை என்கின்றனர். இங்கு கதிரியக்கக் கழிவை உண்ணும் மீன்கள் பிடிக்கப்பட்டு சென்னை சந்தைகளில் விற்கப்படுகின்றன, கோழி உணவாகவும் விற்கப்படுகின்றன. இவை ஏதோ ஒரு வகையில் மனிதனை வந்தடைந்துவிட அதிக வாய்ப்புள்ளது. 

- பூவுலகின் நண்பர்கள்

Pin It