இந்திய வரைபடத்தில் ஒரு புள்ளிபோல தோன்றும் உத்தபுரம் என்ற கிராமம் தீண்டாமைக் கொடுமையால் தேசத்தின் கரும்புள்ளியாக மாறி உள்ளது. அங்கிருந்த 600 அடி தீண்டாமைச் சுவரை இடிக்க கடுமையாண போராட்டம் நடத்திய பிறகு 10 அடி சுவர் மட்டும் இடிக்கப்பட்டு ”ஆஹா! பாருங்கள் உத்தப்புரம் உத்தமபுரமாக மாறி விட்டது” என்று திமுக அரசு மார்தட்டிக்கொண்டது. ஆனால் அங்கு தலித் மக்கள் வாழ்க்கை மிகவும் கொடுமை மிக்கதாக இருந்தது மாறவே இல்லை. எத்தனை முறை மனு கொடுத்தும் அரசும் மதுரை மாவட்ட நிர்வாகமும் திரும்பிப் பார்க்கவே இல்லை. மீண்டும் மீண்டும் அங்குள்ள் தலித் மக்கள் தாக்கப்படுகின்றனர். ஆதிக்க சாதியால் மட்டுமல்ல காவல்துறையாலும் அவர்கள் தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குகள் போடப்படுகின்றன‌. அவர்கள் செய்கிற‌ ஒரே குற்றம் தீண்டாமையை எதிர்த்துப் போராடுவதுதான். 

uthapuram_332தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு அரசு உருவாக்கிய பொதுப்பாதையில் தலித் மக்கள் “ஆட்டோ” உள்ளிட்ட எந்த வாகனத்திலும் செல்லக்கூடாது என்ற ஆதிக்க சக்திகளின் நிலைபாட்டை காவல்துறையே ‘ஷிப்டு’ போட்டு அமல்நடத்திவரும் நிலையில், காலம்காலமாக முத்தாலம்மன் கோவில் அரசமர வழிபாடு தலித் மக்களின் பாரம்பரியமான வழிபாட்டு உரிமையாக இருந்துள்ளபோது, அதனை ‘சுவர் வைத்து’ அடைத்துக்கொண்டு தலித் மக்களுக்கு பல ஆண்டுகளாக அனுமதி மறுப்பதும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

தோழர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., அவர்கள், வளர்ச்சிப் பணிக்கான நிதியிலிருந்து ரூ. 3.75 லட்சத்தை உத்தப்புரம் தலித் மக்கள் மற்றும் இதர பிரிவினரின் பயன்பாட்டிற்காக பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க ஒதுக்கியும் அரசு அதை கட்டாமல் காலம் தாழ்த்தி வருவது ஆதிக்க சாதிகளின் வற்புறுத்தலால்தான். தொடர்ந்து ஏதாவது பிரச்சனை எனில் உத்தப்புரத்தில் உள்ள மொத்த தலித் மக்கள் மீதும் காவல்துறை வழக்குப் போடுவதும், ஒவ்வொரு வழக்கிலும் 300 பேர், 500 பேர் என பெயர் குறிப்பிடாமல் எண்ணிக்கையைச் சேர்ப்பதும், தலித் மக்கள் தங்கள் உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும்போதெல்லாம் மிகப் பெருவாரியான ஆண்கள் உள்பட தலித் மக்களை காவல்துறை கண்மூடித்தனமாகத் தாக்கி கைது செய்வதும் வழ‌க்கமாக உள்ளது.

இந் நிலையில் அங்கு சட்டத்தின் ஆட்சியை அமலாக்கக் கோரி 12.07.10 அன்று மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது தமிழக அரசின் காவல் துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் காவல் துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள் என். நன்மாறன், எஸ்.கே.மகேந்திரன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் படுகாயமடைந்தனர். பெண்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து கடுமையாகத் தாக்கியதோடு நில்லாமல், தலைவர்கள், தொண்டர்கள், பெண்கள் உட்பட 384 பேரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தமுக்கம் மைதானத்தில் அடைக்கப்பட்டார்கள். மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த கொடூரமான தாக்குதலுக்குக் காரணம் என்ன? "அம்பேத்கர் சுடர்" விருது பெற்ற முத்தமிழ் வித்தகர் பல காரணங்களை அறிக்கைகளாக இனி வெளியிடலாம்; தம்பிகளுக்கு கடிதம் எழுதலாம். அவரது குடும்ப சேனல்களும், சொந்தங்களின் அலைவரிசைகளும் பொய்களுடன் வலம் வரலாம்  ஆனால் உண்மையை யாரும் மறுக்க முடியாது. 

உத்தப்புரத்தில் அரசு திறந்து விட்ட பொதுப்பாதையை தலித் மக்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும், நிழற்குடை அமைக்க வேண்டும், அரசமர வழிபாட்டு உரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த தேசம் ஜனநாயக நாடு என்று மீண்டும் மீண்டும் வெட்கம்  இல்லாமல் அழைக்கப்படுகிறது. உத்தப்புரத்தில் ஆதிக்க சாதியினர் அக‌ங்காரத்தை தடுக்கமுடியாமல் தமிழக  காவல்துறை வேடிக்கை பார்த்து நிற்பதற்குப் பெயர் ஜனநாயகம்?

uthapuram_331தலித் மக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜிடம் தலைவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், காவல்துறை உதவி ஆணையர் தேன்மொழி ஆகியோர் உடனிருந்தனர். அரசு திறந்து விட்ட பாதையை தலித் மக்கள் பயன்படுத்தி வருவதாக மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் மு.மனோகரன்  கூறினார். அதற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவர்கள் மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாதையை பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை எனக்கூறிக் கொண்டே, எங்களை அன்று உத்தப்புரத்தில் வாகனத்தில் செல்ல விடாமல் காவல்துறை தடுத்தது என சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் குற்றம் சாட்டினார். மீண்டும், மீண்டும் காவல்துறை கண்காணிப்பாளர் பொய் சொல்லக்கூடாது என்று தலைவர்கள் வலியுறுத்தினர். 

'கடந்த பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் தலித் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதுவரை 4 மாவட்ட ஆட்சியர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தலைவர்கள் வலியுறுத்தினர். தான் நேரடியாக வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் கூறினார். அதற்கு பதிலளித்த தலைவர்கள், 'உத்தப்புரத்திற்கு பல ஆட்சியர்கள் நேரடியாக வந்து பார்த்து நிழற்குடை அமைக்கவும், அரசமர வழிபாடு நடத்தவும் தலித் மக்களுக்கு அனுமதி வழங்கலாம் என அறிவித்துள்ளனர். அந்த கோப்புகளைப் பார்த்து நடவடிக்கை எடுங்கள். ஒவ்வொரு ஆட்சியரும் வந்து பார்த்து விட்டு நடவடிக்கை எடுக்காத நிலை தொடரக் கூடாது. இன்னும் எத்தனை காலம்தான் தலித் மக்கள் ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டிருப்பார்கள்?' என வினா எழுப்பினர்.

'இது குறித்து அதிகாரிகளிடம் பேசிவிட்டுக்கூட சொல்லுங்கள் காத்திருக்கிறோம்' என மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆட்சியரிடம் கூறினார். ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது. அதன்பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஆட்சியர், 'பொதுப்பாதையில் தலித் மக்களை அனுமதிப்பது குறித்து காவல்துறை கண்காணிப்பாளருடன் பேசியுள்ளேன். இன்னும் இரண்டு நாட்களில் அந்த நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற விஷயங்கள் குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது. உத்தப்புரம் சென்று விட்டு வந்துதான் பேச வேண்டும்' என்றார். 'அதுவரை நாங்கள் காத்திருக்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் உத்தப்புரம் சென்று விட்டு வரும் வரை வெளியே காத்திருக்கிறோம்' என டி.கே.ரங்கராஜன் கூறி விட்டு தலைவர்களோடு வெளியேறினார். 

அதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயிலில் அமைதியான முறையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அப்போது அங்குவந்த மாநகர் காவல்துறை ஆணையர், எம்.பாலசுப்ரமணியன், தலித் மக்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் அடித்து வண்டியில் ஏற்றுங்கள் என உத்தரவிட்டதும், காவல்துறையோடு சேர்ந்து கொண்ட அதிரடிப்படையினர் ஒவ்வொருவரையாக குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று தாக்க ஆரம்பித்தனர். தடுத்த பெண்கள் மீதும் கடுமையாகத் தாக்கினர்.

uthapuram_333தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி. சம்பத்தை சூழ்ந்து கொண்ட காவல்துறையினர், அவர் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்தனர். மாநிலப் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜைத் தூக்கி வந்து மிருகத்தனமாக தாக்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், என்.நன்மாறன் ஆகியோரை மக்கள் பிரதிநிதிகள் என்றும் பார்க்காமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச்சென்று பேருந்தில் எறிந்தனர் அதிரடிப்படையினர். காவல் துறையினரோடு, மப்டியில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த காவலர் ஒருவரும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டார். பெண்களை நடுரோட்டில் மானபங்கம் செய்வது போல தலைகீழாகத் தூக்கிச் சென்று ஆண் காவலர்கள் கேவலப்படுத்தினர்; அவர்களையும் தாக்கினர் 

இத்தாக்குதலில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எம். தங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வேலம்மாள், முத்துராணி, முத்து பேயாண்டி, நல்லதங்காள், கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பாலசுப்ரமணியன், பி.தேவி, செங்குட்டுவன் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஒவ்வொருவரையும் கைது செய்து குண்டு கட்டாகத் தூக்கி வந்த காவல்துறையினர், பலரின் செல்போன்களை பறித்துக் கொண்டனர். காவல்துறை தாக்குதலில் பி.சம்பத், சாமுவேல்ராஜ், கிருஷ்ணமூர்த்தி, செங்குட்டுவன் ஆகியோர் மயக்கமடைந்தனர். கடைசியாக டி.கே.ரங்கராஜன் எம்.பி மீது காவல்துறையினர் தாக்குதல் தொடுத்தபோது, பெண்கள் அவரைக் கேடயம் போல சூழ்ந்துகொண்டு காவல்துறையினரின் தாக்குதலை தங்கள் மீது வாங்கிக் கொண்டனர். கடைசியாக அனைவரையும் அடித்து வாகனங்களில் ஏற்றிய காவல்துறையினர், வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று டி.கே.ரங்கராஜனை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.

காவல்துறையினரின் இந்த திட்டமிட்ட வன்முறையால் மாவட்ட ஆட்சியர் வளாகம் உள்ளிட்ட அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. செருப்புகள், பேனாக்கள், சில்லரைக் காசுகள் அப்பகுதியில் சிதறிக்கிடந்தன. காவல் துறையினரின் இத்தாக்குதலைக் கண்டு பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்த மக்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள் சென்று கதவுகளைத் தாழிட்டுக் கொண்டனர். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த காவல்துறை, அவர்களை தமுக்கம் மைதானத்தில் அடைத்தது. பலமணி நேரமாகியும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. பிற்பகல் 2.20 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் நல்லதங்காள், விருதுநகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

uthapuram_334தி.மு.கழகத்தின் பத்திரிக்கையான முரசொலியில் இந்தப் பிரச்சனை திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக கட்டுரை எழுதி மகிழ்கிறார் முதல்வர். மாவட்ட ஆட்சியர் 30 நாட்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என்று கூறியதும் அதை அப்படியே எழுதிக்கொடுங்கள் அல்லது பத்திரிக்கையாளர்களிடம் சொல்லுங்கள் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கேட்கிறார். இதில் ஏதாவது ஒன்று நடந்திருந்தாலும் இவ்வுளவு பெரிய பிரச்சனை எழுந்திருக்காது. எழுதிக்கொடுப்பதில் ஆட்சியருக்கு என்ன சிரமம்? சிரமம் எதுவும் இல்லை, அவருக்குத் தெரியும் உத்தபுரத்தின் தலித்துகளுக்கு எதுவும் செய்ய முடியாது என்று. இப்பிரச்சனை துவங்கி இவர் நான்காவது ஆட்சியர். இதில் திட்டமிட்டு பிரச்சனையை உருவாக்கியது யார் என்று கலைஞர்தான் சொல்ல வேண்டும். 

மனசாட்சி உள்ள யாரும் இதை ஏற்றுக்கொள்வார்களா? ஒரு சிறிய கிராமத்தில் உள்ள தீண்டாமைப் பிரச்சனையை தீர்க்க முடியாத தமிழக அரசும் காவல்துறையும் போராட்டத்தில் வந்த பெண்களிடம் தனது வீரத்தைக் காட்டுவது முறையா? பெண்களை சேலை அலங்கோலமாக ஆண் காவலர்கள் இழுத்து வருவது ஜனநாயகமா? காவல்துறைக்கு போட்டோ எடுக்கும் ஒரு அயோக்கியன் போராட்டத்திற்கு வந்த மாணவனை தலையில் மிதிப்பதை ஆதரிக்கலாமா? பொதுப்பாதையை அடைத்து வைத்திருக்கும் ஆதிக்க சாதியினரிடம் வீராதி வீரர்களான காவல்துறையின் தடிகள் நீளாதது ஏன்? கேள்விகள் நீண்டுகொண்டே இருக்கின்றன‌. வழக்கம் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கும் இந்த அரசு கள்ள மெளனம் சாதிக்கிறது. இப்படி தடியால் அடித்து மண்டைகளைப் பிளந்து உரிமைக்கான போராட்டத்தை அடக்கிவிடலாம் என்று கலைஞர் நினைத்தால் அது பகல் கனவாக மாறும் என்பதை அவர் உணர்வது நல்லது.

- எஸ்.ஜி.ரமேஷ்பாபு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

அகிலம் முழுவதும் அமைப்புசாரா தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்கின்றன; இத்தொழிலாளர்களின் மனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல‌. தேசிய மாதிரி ஆய்வு நிறுவன கணக்கீட்டின்படி, 1999-2000ஆம் ஆண்டில் இந்தியாவில் 39.7 கோடி உழைப்பாளிகள் உள்ளனர். இதில் 2.8 கோடிப்பேர் மாதாந்திர ஊதியம் பெறக்கூடிய நிறுவனத்துறைகளில் பணிபுரிகின்றனர். எஞ்சியுள்ள 36.9 கோடிப்பேர் அமைப்பு சாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் 23.7 கோடிப்பேர் அதாவது 64 சதவீதம் பேர் விவசாயத்துறையிலும், 1.7 கோடிப்பேர் கட்டுமானத் துறையிலும், 4.1 கோடிப்பேர் உற்பத்தித் துறையிலும், 7.4 கோடிப்பேர் வணிகம், போக்குவரத்து, தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைத்துறைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற விவசாய கூலித் தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ளோர், மீன்பிடிப்பு, கிராமக் கைவினைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பண்ணைகளில் அடிமைகளாகவும், இணைக்கப்பட்ட தொழிலாளிகளாகவும் வேலைபார்ப்போர், ஒப்பந்த கூலித் தொழிலாளர்கள், மரம் ஏறுவோர், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டுவேலை செய்வோர், சலவை, முடிதிருத்தும் தொழிலாளர்கள், தெருவில் காய்கறி, செய்தித்தாள் விற்போர் என பலதரப்பட்ட பிரிவினர் இதில் அடங்குவர்.

மனித உரிமைகள்

  மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. குடிசார் மற்றும் அரசயில் உரிமைகள், வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நுகர்வுச் சுதந்திரம், பண்பாட்டுச் சுதந்திரம், உணவுக்கான உரிமை, கல்வி உரிமை ஆகியன இதில் அடங்கும்.

உலக மயமும், மனித உரிமை மீறல்களும்.

  புதிய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் உலகமயக் கொள்கைகள் காரணமாக அமைப்புச் சாராத் தொழிலாளர்களின் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. அவர்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட அரசு சட்டங்கள் காற்றில் பறக்க விடப்படுகின்றன. இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு சாலைப் போக்குவரத்து, இரயில்வே சாலை அமைப்பு, பாலங்கள் கட்டுதல், கட்டிடக் கட்டுமானப் பணிகள் உலகளாவிய ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யப்படுவதால், ஒப்பந்தப்புள்ளி எடுத்து பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களை மாநிலம்விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு புலம்பெயரச் செய்து  கொட்டில்களில் மாடுகளை அடைப்பது போன்று சிறுசிறு குடில்களில் தங்கவைத்து வேலை வாங்குகின்றனர். இத்தொழிலாளர்களும் தங்களின் வேலையின்மை, அறியாமை, வறுமை ஆகியவற்றின் காரணமாக தங்களின் உரிமைகள் குறித்து, மாறுபட்ட இடம், மதம், மொழி காரணமாக யாருடனும் இணைந்து தொடர்ந்து குரல் எழுப்ப முடியாத அவலநிலையில் பணிபுரிகின்றனர்.

இவர்களுக்காக அரசால் ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்ச கூலிச்சட்டம் 1948, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புச்சட்டம் 1979, கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் நலச்சட்டம் 1996 ஆகியவை குறித்தும், அதன் நடைமுறை குறித்தும் கூட அறியாமல் இருக்கின்றனர். இதனால் இவர்கள் குறைவான கூலியில் அதிக நேரம் உழைத்திடவும், போதுமான காற்றோட்டமற்ற, கழிவறை வசதிகளற்ற இடங்களில் தங்கிடவும், இயற்கை அழைப்புகளைக் கூட உரிய காலத்தில் செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றனர். இதிலும், பெண் உழைப்பாளிகளின் நிலை மிக மிக மோசமாக உள்ளது கண்கூடு.

   சமீபத்தில் பிரமாண்டமாகக் கட்டிமுடிக்கப்பட்ட பசுமைக்கட்டிடமாம் தமிழக சட்டசபைக் கட்டிட கட்டுமானப் பணியில் ஏறத்தாழ ஆறாயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டு பணியிலமர்த்தப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான உழைப்பாளர்கள் தங்கள் வேலை உரிமையை இழந்துள்ளனர். புலம்பெயர்ந்து இப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பாளிகள் எந்தளவுக்கு தங்கள் உரிமைகளைப் பெற்றனர் என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

சமீபத்தில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வட இந்தியாவைச் சார்ந்த உழைப்பாளி ஆதரவற்ற நிலையில் தவித்து வருதாகச் செய்தி வந்தது. இவர் வடமாநிலத்தைச் சார்ந்த ஒப்பந்ததாரரால், மதுரையில் நடைபெற்ற பாதாளச் சாக்கடை கட்டும் பணிக்காக அழைத்து வரப்பட்டிருக்கிறார். பணியின்போது காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் பணிமுடிந்த பின்பு அவரை மருத்துவமனையில் தவிக்கவிட்டுவிட்டு ஒப்பந்ததாரர் தனது சொந்த மாநிலம் திரும்பிவிட்டார். அந்த உழைப்பாளி தனது உரிமைகளை மட்டுமல்லாது தன்மானத்தையும் இழந்து தனது உணவிற்காக மொழி தெரியாத இடத்தில் பிறரை நம்பி வாழ வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. அதுபோன்றே இதே மாவட்டத்தில் மாநகராட்சிப் பணியில் ஈடுபட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மூன்று மாதத்திற்கும் மேலாக ஒப்பந்தகாரரால் ஊதியம் வழங்கப்படாமல், நீதிமன்றத்தை நாடித்தீர்வைத் தேடிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.

இயந்திர‌ மயமும், மனித உரிமை மீறல்களும்

  இன்றைக்கு பல்வேறு சமுதாய கட்டமைப்புப் பணிகளில் இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் வேலையிழப்பின் காரணமாக, உழைப்புத் தொழிலாளர்களின் வேலை பெறுவதற்கான உரிமை மறுக்கப்படுகிறது. மத்திய உரம் மற்றும் இரசாயனத்துறை அமைச்சரின் முன்முயற்சியால், வைகை அணை சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. வைகையில் வெள்ளம் பெருக்கெடுத்தபோது வீட்டுக்கு ஒருவர் வந்து வெள்ள அடைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டுமென மன்னர் கட்டளையிட்டதால், புட்டமுது விற்கும் பாட்டியிடம் புட்டு சாப்பிட்ட கடனை அடைக்க சிவனே நேரில் வந்து வைகை பராமரிப்புப்பணியில் ஈடுபட்டு பிரம்படி பட்டதாகவும் புராணம் கூறுகிறது. ஆனால் இன்று கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்ப‌ட்டு, முழுவதும் இயந்திரத்தால் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இயந்திரம் கொண்டு அவசர அவசரமாக முடிக்க வேண்டிய அளவிற்கு வைகையில் தண்ணீர் ஒன்றும் பெருக்கெடுத்து ஓடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இதுவும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கெதிரான மனித உரிமை மீறலேயாகும்.  இதனைத்தான் தேசத்தந்தை மகாத்மா காந்தி 'இந்தியாவிற்குத் தேவை அதிக உற்பத்தியல்ல, அதிக மக்களால் செய்யப்படும் உற்பத்தி்' என்றார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் - அமைப்புச் சாரா தொழிலாளர்கள் மீதான உரிமை மீறல்களும்

  இன்றைக்கு சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரிலே ஆயிரக் கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் வளைக்கப்படுகின்றன. இதுவரை 29,73,190 சதுர கீலோ மீட்டர் நிலப்பரப்பினை கையகப்படுத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 54.5 சதவீத நிலப்பரப்பு (16,20,388 ச.கி.மீ) விவசாய நிலமாகும். நில உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டாலும், சிறு, குறு விவசாயிகள் மற்றும் இந்நிலத்திலேய விவசாய வேலை செய்து அதை மட்டுமே தெரிந்த தொழிலாகக் கொண்ட விவசாயக் கூலித் தொழிலாளர்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. இதனால் இவர்களின் வாழ்வாதார உரிமை வேலை செய்வதற்கான உரிமை முழுமையாக மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக நகரங்களை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டியுள்ளது. இச்சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்படும்போது அரசால் ஏற்கெனவே இயற்றப்பட்ட நில உச்சவரம்புச்சட்டம், நிலக் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் சட்டம் ஆகியவை அப்பட்டமாக மீறப்படுகின்றன.

வறுமையும் மனித உரிமை மீறல்களும்

  இந்திய மொத்த மக்கள் தொகையில் 28 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாகத் திட்டக்குழுவும், 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதாக என்.சி.சேக்சேனா குழுவும், 42 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளதாக டெண்டுல்கர் குழுவும் கூறுகின்றன. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசியக்குழுவின் தலைவர் அர்ஜுன் சென் குப்தா இது 80 சதவீதம் எனவும் குறிப்பிடுகிறார். மேலும், வறுமையும் மனித உரிமை மீறலே என்றும் வறுமை மனிதனின் தன்மானத்தை பாதிப்பதாக உள்ளதெனவும், இதனால் தனிமனிதனின் உரிமை மறுக்கப்படுகிறதெனவும் குறிப்பிடுகிறார். மேலும், உலக வங்கியும், பன்னபாட்டு நிதியமும் தங்களின் சட்ட அமைப்பு விதிகளில் வறுமையும் மனித உரிமை மீறலே என்பதை கணக்கில் கொண்டு மாறுதல்கள் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கிறார். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா தொழில்களில்தான் ஈடுபட்டுள்ளனர்.

  எனவே, சமூக ஆர்வலர்கள், மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய அரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் இத்தகைய அவலநிலைக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைப்பு சாராத் தொழிலாளர்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் உலகமயக் கொள்கைகளின் பாதிப்புகளை வெளி உலகிற்கு கொணர்ந்து உழைப்புச் சுரண்டலுக்கு முடிவுகட்ட வேண்டியதும், இவர்களின் உரிமைகளை பாதுகாத்திடுதலும் காலத்தின் தேவையாகும்.

- மதுரை சு.கிருஷ்ணன்  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

செப்டம்பர் 2009, இரண்டாவது வாரம் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ்மாநாடு நடைபெறும் என அறிவித்தார். ஆனால் உலகத் தமிழ் ஆராய்ச்சிக்குழுவின் தலைவர் நொபாரு கராஷிமா, தமிழக முதல்வரின் அவசரங்களுக்குப் பணிந்துவிடாமல், “2011, ஜனவரியில் நடத்திக்கொள்ளலாம்; கால அவகாசம் போதாது” என ஒப்புதல் அளிக்கவில்லை. கருணாநிதி அதனிடத்தில் முதலாவது செம்மொழித் தமிழ் மாநாடு அறிவிக்கிறார். இதற்கு எதிர்வினையாக, 23.9.2009ல், தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சென்னையில் உருவாக்கப்பட்டது. சென்னை எழும்பூரிலுள்ள இக்ஷா மையத்தில் ஒரு கலந்தாலோசனைக் கூட்டம் மட்டுமே. முன்பதிவு செய்யப்பட்ட அறையை, நிர்வாகத்தை மிரட்டி ரத்து செய்து, கூட்டத்தை நடத்தவிடாமல் செய்தது காவல்துறை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நான்கு முடிவுகளில் ஒன்றாக, மாநாடு எங்கு நடைபெற உள்ளதோ, அந்த கோவை நகரில் 4.10.09 அன்று ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப் பெற்றது. நடத்தியதற்கு ஒருங்கிணைத்தவர்களையும், அனுமதியளித்த ரூபி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகத்தினையும் காவல்துறையும் கல்வித் துறையினரும் இணைந்து உண்டு இல்லை என ஆக்கினர்.

செம்மொழித் தமிழ் மாநாடு எதிர்ப்பு என்ற பெயரில், நேரடியாக எந்த அமைப்பும் சிறுநிகழ்ச்சியையும் நடத்த இயலவில்லை. தமிழகப் பெண்கள் செயற்களம் என்ற அமைப்பு, சென்னையில் “உலகத் தமிழ் செம்மொழி மாநாடு - விளக்கப் பொதுக்கூட்டம்” ஒன்றினை நடத்தமுயன்றது. புலவர் புலமைப்பித்தன், தியாகு, புலவர் இறைக்குருவனார், எழுத்தாளர் சூரியதீபன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கலந்துகொண்டு உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிகழ்வுக்கு முந்திய நாள் ஏற்பாட்டாளரை அழைத்து அனுமதியை ரத்து செய்வதாக அறிவித்தனர் காவல்துறையினர். அனைத்து இடங்களிலும் முளையில் கிள்ளி எறியும் கொள்கையை காவல் துறையினர் தீவிரமாகக் கடைபிடித்தனர். எதிர்ப்புக்கெனவே உருவாக்கப்பட்ட, தமிழ்ப் படைப்பாளிகள் உணர்வாளர்கள் கூட்டமைப்பும் தமிழ்மலர் 2010 நூல் வெளியீடு என்ற இன்னொரு பெயரில் ஒளிந்துகொண்டு, கோவை 13.6.2010ல் ஒரு நிகழ்வை நடத்தியது.

“தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு மாநாட்டு அவசரத்தில் இருக்கிறார். அந்த அவசரத்தில் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை எப்படி நடத்த வேண்டுமென்கிற முறைமையைப் புறந்தள்ளி, ஒரு கட்சி மாநாட்டை நடத்துவதுபோல் அறிவிப்பு செய்தார்... முதலாவது செம்மொழி மாநாட்டினை நடத்த முடிவு செய்ததில், தமிழ் ஆய்வு பற்றிய அக்கறையோ, செம்மொழி குறித்த நேர்மை உணர்வோ இல்லை. ஒரு மாநாட்டுக் கொண்டாட்டத்துக்கான ஆர்வந்தான் துருத்திக்கொண்டு நிற்கிறது. அதற்கும் மேலாக ஈழத் தமிழர் பிரச்சனையில் உலக அளவில் சரிந்துவிட்ட தனது செல்வாக்கை மீண்டும் உயர்த்த இப்படி ஒரு மாநாடு.” என விளக்கி, 1.11.2009ல், தமிழ்ப்படைப்பாளிகள் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பில், “தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்.” என்ற தலைப்பில் நான்கு பக்கமுள்ள ஒரு கடிதம் அனுப்பினோம். தமிழில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து, உலகெங்குமுள்ள தமிழறிஞர்களுக்கு, ஏறத்தாழ இருநூறு பேருக்கு மின்னஞ்சல் செய்திருந்தோம்.

அனுப்பப்பட்டவர்களில் உலகத் தமிழாராய்ச்சிக் குழுவின் தலைவர், ஜப்பானிய தமிழறிஞர் நொபாரு கராஹிமா, பிரான்சின் தமிழறிஞர் பேரா.பிரான்காய்ஸ் குரோ (Prof.Francois Gros) போன்ற சிலர் வருகை தரவில்லை. பின்லாந்தின் அஸ்கோ பாப்லோ, பேரா.கா.சிவத்தம்பி போன்ற பலர் பிறநாடுகளிலிருந்து வந்து மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள் அனைவருக்கும் நினைவு கூர்ந்து மாநாட்டுக்கு ஒரு மாதமிருக்கும். மீண்டும் மின்னஞ்சலில் அனுப்பினோம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலுமுள்ள தமிழறிஞர்களுக்கு நான்கு பக்க வேண்டுகோள். 500 பேருக்கு மேல் அஞ்சலில் அனுப்பப்பட்டது. முன்னெதிர்ப்புகள், தமிழக அளவில் சிலவும், இணைய தளங்களில் பரவலாகவும் எடுக்கப்பட்டன.

இத்தகைய முன்கூறல்களைத் தாண்டி, தமிழ்ப் பேராசிரியர்கள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளனர். நடைபெற்றது ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு அல்ல; முதலாவது செம்மொழித் தமிழ்மாநாடு - கலந்துகொள்வதில், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தருவதில் என்ன தவறிருக்க முடியும் என்ற சமாதானத்தை கலந்துகொண்டவர்கள் தமக்காக வைத்திருக்கலாம். அத்தகைய சமாதானத்துக்கும் பங்கேற்பு விருப்புக்கும் பின்னால் செயல்பட்ட அதிகார அழுத்தத்தையும், அறிவின் வன்முறையையும் காணத் தவறக்கூடாது.

அரசதிகாரத்தைப் பயன்படுத்தி, மாநாட்டு ஆதரவு கட்டியமைக்கப்பட்டது. செம்மொழித் தமிழ் மாநாட்டு அறிவிப்பைச் செய்தவுடன், பா.ம.கவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மாநாட்டில் பங்கேற்போம் என முந்திக்கொண்டு அறிக்கை வெளியிட்டனர். இது கூட்டணி உருவாதற்கான அரசியல் உத்தியாகப் பார்க்கப்பட்டது. இக்காலத்தின் எந்த அரசியல் கட்சியும் தங்கள் தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள், மக்கள் என்ன கருத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றறியும் சனநாயக முறையைக் கைவிட்டதால், மேலிருந்து முடிவுகளை அறிவிக்கும் நடைமுறை கொண்டு இயங்குகின்றன. எடுத்துக்காட்டாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு நிலைப்பாடு எடுக்குமுன் தனது கலை இலக்கியப் பெருமன்றத்தினரிடம் ஆலோசனை கலக்காமல் கண் தன்மூப்பாய் முடிவெடுத்தது. ஆனால், “இந்த மாநாட்டிற்கான நோக்கம் உலகத் தமிழர்களிடம் நன்மதிப்பைப் பெற்று இலங்கையில் ஈழத்தமிழர்களுக்குத்தான் செய்த துரோகத்தை மறைப்பதுதான். அதனுடைய நோக்கம் உயர்வானதல்ல.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் ஒரு நேர்காணலில் (16.5.2010) அறிவித்தார்.

இந்த ஆண்டு (2010) சாகித்ய அகாதமி பரிசு பெற்ற‌ கவிஞர் புவியரசு “அது செம்மொழி மாநாடோ, உலகத் தமிழ்மாநாடோ இல்லை. அது தி.மு.க.மாநாடு, நான் அதில் எந்த வகையிலும் பங்கேற்க மாட்டேன்.” என்று கோவை மண்ணிலிருந்து அறிவித்தார். இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதி தொடர்பு கொண்டு சென்னை சங்கமத்துக்குள் கவிஞரை இழுக்க முயன்றபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மாநாட்டுக்குமுன் கவிஞர்கள் இன்குலாப், இளம்பிறை, மாலதி மைத்ரி, சி.மோகன் போன்றோர் கவிதைகளும், மாநாட்டுக்குப்பின் சுகிர்தராணியின் கவிதையும் எதிர்ப்பைப் பேசின. சூரியதீபன், வெளி.ரங்கராஜன் போன்றோரது கட்டுரைகள் எதிர்ப்பை மையம் கொண்டு வெளிப்பட்டன.

எதிர்கட்சிகளில் அ.தி.மு.க., ம.தி.மு.க. தேர்தல் உத்தி அடிப்படையில் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்த்தன. தமழ்த் தேசிய இயக்கம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள், தமிழின அமைப்புக்கள், போன்றவர்தாம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இயங்கினர்.

முத்தமிழறிஞருக்குப் புகழாரம் சூட்ட தமிழறிஞர்கள் முண்டியடித்த கோவை மாநகரில் பிப்ரவரி, 6, 7 நாட்களில் புதிய தமிழகம் கட்சியின் ப.கிருஷ்ணசாமி. ‘உலகத்தமிழர் பாதுகாப்பு மாநாடு’ நடத்தியதை அரசு விரும்பவில்லை. கருணாநிதியின் உலகத் தமிழ்நாயகன் பட்டத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு நிகழ்வு அது. மாநாட்டை நடத்தவிடாமல் செய்ய மாவட்ட நிர்வாகமும், முதல்வரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகினர். சனவரி 15ல் காவல் துறை மாநகர ஆணையர் அனுமதி மறுத்தார். கருத்துரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து மாநாட்டு ஏற்பாட்டாளர் உயர்நீதிமன்றம் வரை சென்றார். மாநாடு நடத்த ஆறு நாட்கள் இருந்த நிலையில், உயர்நீதி மன்றம் மறுபடியும் விண்ணப்பிக்குமாறு ஏற்பாட்டாளருக்கு, ஆணையிட்டு, அனுமதிக்கு வழிகாட்டியது. மாநாடு நடைபெற இரண்டு நாட்கள் எஞ்சியிருந்த நிலையில் அனுமதி கிடைத்தது. செம்மாழித் தமிழ்மாநாடு முடியும்வரை, சிறு முனகல்களைக் கூட கேட்கவிடாமல் கருத்துரிமை காத்தார் கருணாநிதி; அரசியல் தளத்தில் சிறு அசைவும் எழாமல் பார்த்துக்கொண்டு தமிழறிஞர்கள் (கா.சிவத்தம்பி உட்பட), கலை, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் வட்டாரத்தை மிகக் கவனமாக தன்பக்கம் நிறுத்துவதில் முன்னேறினார் கனிமொழி.

ஏற்கனவே இலக்கிய உலகில் அப்பாவுக்கு மதிப்புத் தராத இலக்கிய உலகில் அப்பாவுக்கு மதிப்புத் தராத இலக்கிய வட்டாரத்தினர் மத்தியில்தான், தேடிக் காத்துவைத்த மதிப்பை பயன்படுத்திக் கொண்டார். உடல்நலமின்மை, அப்போலா மருத்துவமனைச் செலவு என்ற காரணஙகளால், இவருடைய அறிவுவட்டத்துக்குள் முதலில் அடைக்கலமானார் எழுத்துப்புலி ஜெயகாந்தன். சிந்தனையாளர், ஆய்வாளர் என்ற அடையாளமும் நேசமான அணுகுமுறையும், அரசியல் வன்முறை + அறிவு வன்முறை இணைவாய் செயல்பட்டு, தமிழின உணர்வோடு இருந்த சிலரையும் தின்று தீர்த்திருந்தன.

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்த கடந்த 30 ஆண்டுகளாய்த் தவறினார் என்று விமரிசித்தவர்கள்கூட, கோமானுடன் எதற்கு பிணக்கு என்று அச்சம் மேலேற இணைந்தனர். அரசியல் அதிகாரத்தின்முன் அறிவின் கம்பீரங்கள் மண்டியிட்டதை நேரிலேயே கண்டோம்; ஆட்சியதிகாரத்தில் இல்லாமலிருந்து இது போன்றதொரு மாநாட்டை நடத்தியிருந்தால், தமிழறிஞர்கள் ஆய்வாளர்கள், இலக்கிய ஜாம்பவான்கள் எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக முந்நாள், இந்நாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், ஆதினங்கள், மடாதிபதிகள் போல் ஆள் சேர்ப்புப் பணியில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றார்கள்.

***

“இம்மாட்டில் எத்துறைகளில் ஆராய்ச்சி நிகழும் தமிழ்மொழி வளர்ச்சிக்கும், இலக்கிய வளர்ச்சிக்கும் பண்பாட்டு முன்னேற்றத்துக்கும் எவ்வாறான வழிகளை இம்மாநாடு சுட்டிக் காட்டப்போகிறது?”- சென்னையில் 1968ல் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டினை நோக்கி பேரா.நா.வானமாமலை எழுப்பிய கேள்விகள், 1968, 1981, 1995 - என்று மூன்று பெரும் உலகத் தமிழ் மாநாடுகளும், செம்மொழித் தமிழ் மாநாடு முடிந்தபின்னும் பதில் அளிக்கப்படாமலே உள்ளன. எவ்வெத்துறைகளில் ஆராய்ச்சி வலுப்பெற வேண்டும் என்ற திட்டமிடல் இன்று கட்டுரைகள் பெறப்பட்டன. அவரவருக்கு எது சாத்தியப்படுமோ, அந்த வகையில் அவரவர் விருப்பத்துக்கேற்ப கட்டுரை தயாரித்திருந்தனர். ஆய்வரங்கில் கலைஞரின் பேச்சுக்கலை, தொல்காப்பியப் பூங்கா, கலைஞர் உரைத்திறன், கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக்கூறுகள், கலைஞரின் கடிதங்களில் இலக்கிய ஆளுமை என்றெல்லாம் 21 கட்டுரைகள் வாசிக்கப்பட்டன என்பதிலிருந்து ஆய்வரங்கத் தரத்தைக் கணித்துக் கொள்ளலாம். கனிமொழியின் இலக்கிய ஆளுமை பற்றி மூன்று கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. விமர்சகர்கள், ஆய்வாளர்களிடமிருந்து எழுந்த கேள்விகளுக்கு கட்டுரை வாசித்தவர்கள் பதில் சொல்ல இயலாமல் திணறியிருக்கிறார்கள். ஆய்வரங்கத்தில் பங்கேற்ற பலரும் கட்டுரையில் அல்லது தமது பேச்சின் ஒரு ஓரத்தில் கருணாநிதிக்கு நன்றி பாராட்டத் தவறவில்லை.

“பொது அரங்கில் ஒரே காக்காய் சத்தம்” என்று சுட்டிக் காட்டினார் ஒரு இதழாளர் (தினமணி 27.6.2010). கேலி செய்து விமர்சிக்கக் கூட ஒரு இதழுக்குத் துணிவு வந்தது ஆச்சரியம். ஊடகத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அத்தனை கவனிப்பு. கவியரங்கப் பாட்டாளர்கள் கருணாநிதி புகழ்பாடினர்; கருத்தரங்க உரையாளர்களும் அவ்வாறே. பட்டிமன்ற டமாரங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

திராவிட முன்னேற்றக்கழகம் துவங்கப்பட்டபோது இருந்த மூத்த தலைவர்களில் அண்ணா, கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவர்கள் பெயரும் இன்றைய தலைமுறைக்குத் தெரியாது. ஒவ்வொருவராய் காலமாகிவிட, இன்று மிஞ்சியிருப்பவர் இனமானப் பேராசிரியர் என்றழைக்கப்படும் க.அன்பழகன். எதிரில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கருணாநிதியைச் சுற்றி இவர்கள் நாக்கு ஓடியதேயன்றி, பக்கத்தில் அமர்ந்த பேராசிரியரை எவரும் கண்டுகொள்ளவில்லை. 95 சதவீதம் பேர், துணை முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பெயர் உச்சரித்தார்கள். ஒரு ஐந்து சதவீதம் பேர் பேராசிரியர் பெயரைக் குறிப்பிட்டது, முகத்தாட்சண்யத்துக்காக என்பதுபோல் இருந்தது.

மன்னர் எதிரில் அமர்ந்திருக்க, வயிற்றுப் பசிக்கும், வாழ்வுக்கும் கையேந்திய முன்னைய புலவர்கள்போல் புகழாரம் சூட்டினார்கள். முந்தைய அடிமை முறை உயிர்கொண்டு இயங்கியது.

“நீர்கூட்டும் ஆறுகளின்
சமுத்திரச் சங்கமத்தை
யார்கூட்ட முடியும்?
நீர்கூட்ட முடியும்! கலைஞரே
நீர்கூட்ட முடியும்”

என்று முதல்காக்கையாக அப்துல் ரகுமான் தொடங்கி வைத்தார்.

“முத்தமிழ்க்கலைஞர் பிறந்த நாள்
ஜூன் மூன்று
செம்மொழி தினமாக அறிவித்து
கொண்டாடி மகிழ்வோம்.”
என்றார் ஆண்டாள் பிரியதர்ஷினி.

நேரடியாக அறிவை விற்பதால் அவர்களுக்கொரு அங்கீகாரம் கிடைக்கலாம்; ஆனால் எதிரில் அமர்ந்து, இதையெல்லாம் ஏற்று நிலப்பிரபுத்துவ முறையின் குணாம்சத்திலிருந்து சற்றேனும் விலகாத ஒரு ஜீவனாய் கருணாநிதி ரசித்துக்கொண்டிருந்தார்.

ஈரோடு தமிழன்பன் வந்தார்.

“பூக்கள் காண்பவரின் கண்களுக்காகப் பூக்கின்றன.
எம் கவிதைகள்
கண்களை நம்பிப் பூப்பதில்லை
கலைஞரை நம்பிப் பூக்கின்றன.”

ஈழப்போர் கொடுமைகள் கண்டு கொதிப்புற்று உயிர்நீத்த முத்துக்குமார் பற்றி-
“முத்துக்குமார் கடிதத்தில் ஆங்காங்க
சிங்க நகங்கள்” என்றார். எதிரே அமர்ந்து கேட்கும் சிங்கத்துக்கு, நிகழ்காலத்தில் பிடிக்காத ஒரு சொல் முத்துக்குமார். அவருக்கு பிரியமான புகழ்வுகளை மட்டுமே குறிப்பிட்ட தமிழன்பன், பிடிக்காத ஒருவரை ஏன் குறிப்பிட்டார் என இதுவரை விளங்கவில்லை.

கையில் வேப்பிலை கொண்ட அருள்வந்த சாமியாடிபோல், கவிதை எடுத்து ஆடினார் வைரமுத்து.

“பூமி இடிஇடிப்பதை வானம் கேட்கட்டும்
எங்கே கலைஞருக்காக ஒருமுறை கைதட்டுங்கள்
வானம் கேட்கட்டும்” என்றவர் கருணாநிதியை ஒரு ஜீவநதியாக வருணித்து, அவரது அரசியல் வாரிசுகளை கிளை ஆறுகளாய் கற்பித்து,

“அரசாளப் போவதும் இந்த ஆறு
இது வரலாறு”
என்று பாரம்பரிய ஆட்சிமுறையை வரவேற்றார்.

‘கிளம்பிற்றுகாண் சிங்கத்தமிழர் கூட்டம்’ என்பது கவியரங்கப் பொதுத் தலைப்பு. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த சிங்கக் கூட்டம் கிளம்பிய வேகம் கண்டு, காது கேட்காத தொலைவில் போய் நின்று அவ்வப்போது சிலர் ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பினர்.

“பனையோலையில் கணினித் தமிழ் எழுதிய
இக்காலத்து இளங்கோ நீ”
பாடினார் தமிழச்சி. இதுகாறும் அவர் படைத்த கவிதைகளும், அவைகளுக்குள் ஒளிந்திருக்கும் ஊற்றும் எல்லாமும் இந்தப் புளுகுநதியில் அடித்துச் செல்லப்பட்டன. இதற்குப் பரிகாரம் செய்வதுபோல் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து 2010 ஜூலை தீராநதியில் மே18, 2010 என்று ஒரு கவிதையை எழுதியுள்ளார் தமிழச்சி. இதிலிருந்து இந்தக் கவிஞர்கள் பற்றி நமக்குக் கிடைக்கும் கணிப்பு, இவர்கள் 'கல்யாணத்திற்கு ஒரு கவிதை, கருமாதிக்கு ஒரு கவிதை' தயாராய் வைத்திருப்பார்கள் என்பதுதான்.

அதிகாரம் கோலோச்சுகிற இடத்தில் யார் என்ன கோலம் கொள்வார்கள் என்பது தீர்மானிக்க முடியாத ஒன்றாகும். அவரவர் வாழ்நிலைக்கேற்ப, வாழ்நிலையிலிருந்து உருவாகும் மனநிலைக்கேற்ப முடிவெடுப்பார்கள். எந்த வகை நிர்ப்பந்தம் அவரை வளைத்தது என்று சொல்லமுடியாது. கவிஞர் பழனிபாரதி,

“வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ”
என்ற பட்டினத்தார் பாடலை,

“காடுவரை பிள்ளை
கடைசிவரை கலைஞர்”
என்று தலைகீழாய் உலுக்கி எடுத்துவிட்டார்.

“கொன்று குவித்தோரில்
குற்றுயிராய்க் கிடப்போரே
கரம்கேட்டு எழுவதற்குக்
கதறி அழுவோரே
தற்காலிகமாய் அங்கே
ஈழம்தான் உமக்கில்லை
எப்போதும் எமக்கிங்கே
ஈனமானம் எதுவுமில்லை.”

ஈழப் படுகொலைக்காய் நெருப்பாய்க் கொதித்து இந்தக் கவிதையைப் எழுதிய கவிஞர் இளம்பிறை, கவியரங்கில் பங்கேற்பார் என எவரும் எதிர்பார்க்கவில்லை. வேலை போய்விடுமாம்; வேலை, அதுவும் அரசு வேலையிலிருந்து ஒருவரை, முறையான விசாரணை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பிவிட இயலுமா? அப்படியான நெருக்கடிகளை எதிர்கொள்ள இயலாமல் ஏன் இந்தக் கவிதை எழுதினார்? அன்பின் நெருக்குதல்தான் மேடையேறச் செய்தது. அதைக் காப்பாற்ற கவியரங்கம் ஏறிய அவலநிலை பல எழுத்தாளர்களைப் போல் இவருக்கும் வாய்த்தது. அவர் எழுதிய கவிதை அவருக்கு எதிராகவே நின்றது. அவர் அனாதையாக்கிவிட்டது அவருடைய கவிதையை அல்ல. அவர் கைவிட்டது எண்ணற்ற சித்திரவதைக்குள் ஒடுங்கிய ஈழத்தமிழரை அல்ல; அவர் கைவிட்டது கொள்கையை. பெயரைச் சுட்டாமல் யாருடைய துரோகத்தைச் சுட்டிக் காட்டினாரோ, அந்தத் துரோகத்தை தன் முன்னால் வைத்துக்கொண்டு

“நானும் திருக்குவளைக்குப்
பக்கத்து ஊர்க்காரி”

என்று சொந்தம் கொண்டாடிய வேளையில் இனி அவருக்குள்ளிருந்து வரப்போகிற எல்லாக் கவிதைகளும் வேரற்றவையாய் வெளிவிழும் என்றுதான் பட்டது.

“உலகில் வேறெந்த நாடுகள் அழைத்தாலும், அல்லது நான் விரும்பினாலும் செல்வேன். எங்கள் இனத்தைச் சாய்க்க துணைபோன தமிழகத்தில் நான் காலடி வைப்பதைக் கூட பார்க்க முடியாது” என்று தமிழினப் படுகொலை முடிந்த மே 2009ன் பின் வெம்பி வெதும்பி கா.சிவத்தம்பி சொன்னதையும் முள்ளிவாய்க்கால் ரத்தக்கூடலுக்கு மேலாக நீந்தி, இப்போது கோயம்புத்தூர் வந்தடைந்ததையும் இணைத்துக் காணவேண்டும்; செம்மொழித் தமிழ் மாநாட்டுக்கு சிவத்தம்பி வருகையை சில தீய சக்திகள் தடுக்க முயல்வதாக முதல்வர் கருணாநிதி அறிக்கை தந்தார். அதையும் தாண்டி அவர் வருவாரா? மாட்டாரா என்ற ஐயம் இருந்ததாக ஜூனியர் விகடன் (27.6.2010) கேள்வி எழுப்பியபோது, “நான் வரமாட்டேன் என்று யாரிடம் சொன்னேன். வருவேன் என்று யாருக்கு உறுதி அளித்தேன்? மாநாட்டு சமயத்தில் என் உடல்நலம்தான் முடிவு செய்யும் என் வருகையை”என்று சமத்காரமாகப் பதில் சொன்னார். சந்தர்ப்பவாதம், பலப்பல சமத்காரங்களுக்குள் தலைமறைத்துக்கொள்கிறது.

சிவத்தம்பி வந்துவிடக்கூடாது என்று அவரை மதிக்கிற நாங்கள் கவலை கொண்டோம். கவலைகொண்டு, அவருடன் கொழும்புவுடன் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் எப்போதும் அன்பொழுக உச்சரிக்கும் சொல் ‘ராஸா’ என்றுதான் அழைப்பார்.

“உங்களை ஆய்வரங்கத் தலைவராக முதல்வர் அறிவித்துள்ளாரே” என்று கேட்டபோது,

“அப்படியா செய்தி வந்துள்ளது? எனக்குத் தெரியாதே” என்றார்.

“உங்களுடைய ஒப்புதல் இல்லாமல் அவராகவே அறிவித்தாரா?” என்று கேட்டேன். அதற்கு, “இந்தச் சூழலில் நடத்துவது ஏற்றதல்ல என்று வி.சி.குழந்தைசாமிக்கு கடிதம் எழுதினேன்.” என்றார். எங்களுடைய எதிர்பார்ப்பு என்ன எதிர்ப்பார்க்கிறோம் என்பதை விளக்கினேன். அவர் சொன்ன பதில், “மாநாடு நடக்க இன்னும் எட்டு மாதமிருக்கிறது ராஸா. அதுவரை இந்த அரசியல் எதிலும் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை. கவனமாக இருப்பேன். அதுவரை வாயே திறக்கப் போவதில்லை.”

தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து 4.11.2009ல் அவருக்கு ஒரு கடிதமும் அனுப்பினேன். உடல்நிலையைக் காரணம் காட்டி, மாநாட்டில் பங்கேற்காமல் இருக்க அவரது உறவினர் மூலம் சொல்லி அனுப்பப்பட்டுள்ளது என்று பேரா.தொ.பரமசிவன் என்னிடம் தெரிவித்தார். அதுவும் காரிய சாத்தியமாகவில்லை. பேராசிரியர் வந்தேவிட்டார்.

அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, கலைநிகழ்ச்சி, கண்காட்சி ஊரெல்லாம் அலங்காரம் என மக்களைப் போல் கொண்டாட்டத்தில் மூழ்கித் திளைப்பவர்களாக இவர்களைக் கருத இயலாது. வேறென்ன இவர்களை ஈர்த்திருக்கும். “ஒருவனின் பிரதான எதிரி யாரென்று கேட்டால் அது தற்பெருமைதான்” என்றான் சாணக்கியன். அரசியல் சாகஸங்களைக் கற்றறிந்தானோ இல்லையோ, மனிதகுண விசித்திரங்களை நன்கு படித்திருந்தான் சாணக்கியன். தற்பெருமையின் உச்சம்தான், புகழும் அங்கீகாரமும் தேடுவது. புகழும் அங்கீகாரமும் மட்டுமே இவர்களை எதைநோக்கியும் ஓடச் செய்திருக்கும் என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

தமிழரை வாழவைத்துத்தான் தமிழை வாழ வைக்க முடியும். தமிழனை அழித்துவிட்டு தமிழைக் காக்க முடியாது.

“சாதியற்ற தமிழன் நாங்கள் என்று
சந்தம் பாடு
தமிழ் வளர்த்த சிங்கத் தமிழர் வாழ்கவே’

என்பது சென்னை சங்கமம் கொண்டாட்டத்துக்கு இசைக்கப்பட்ட பாடல். சிங்கத் தமிழர் இல்லை; அந்த சொந்த ரத்தத்தை தெற்கில் 26 கி.மீ. அப்பால் கொன்று கொண்டாடியாகிவிட்டது. சங்கத் தமிழன் இல்லை; சாதித் தமிழன் மட்டுமே ஆட்டம் போடகிறான். ‘ரெட்டை டம்ளர்’ எனும் கொடுநெருப்பை இன்னும் மடியில் கட்டிக் கொண்டிருக்கிற கிராமங்களை என்ன செய்தோம்? சாதித்தமிழர், ஆதித்தமிழர் பிளவுகளை அருகருகே காத்து வருகிறோமா, இல்லையா? தமிழினத்தின் தண்டுவடமான தலித் மக்கள் உழைத்து வாழ முடிகிறதா? தமிழக மீனவர் ஆதாரம் பறிக்கப்பட்டு, இலங்கை கடற்படையினரால் அன்றாடம் உயிர் பறிக்கப்படுகிறார்கள். குற்றுயிரும் குலைஉயிருமாய் விவசாயிகள் நகரம் நோக்கி ஓடுகிறார்கள். கனிம வளங்கள் வேட்டை, காடுகள் அபரிப்பு என மக்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். வாழ்வியலிலிருந்து அகற்றப்படுகிற மக்களிடமிருந்து மொழியும் அகற்றப்பட்டுவிடும். தர்க்கப்பூர்வமாக, தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இதை சிந்தித்திருப்பாளர்களா?
தமிழனை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்யாமல் மொழியை வாழச் செய்வது என்பதோ, அவனுடைய வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்பாட்டு மொழியாக ஆக்காமல், தமிழ்வாழ்க என்பதோடு தமிழை வழிபாட்டு உருவாக மட்டுமே வைத்திருக்கப் பயன்படும்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராகப் பதவி வகித்தவர் தமிழருவி மணியன். 2007ம் ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசுக் குடியிருப்பு வீடு, பொது ஒதுக்கீட்டின் கீழ் இவருக்கு ஒதுக்கப்பட்டது. வாடகை வீட்டுக்கான குத்தகையை 19 மாதங்களாகப் புதுப்பிக்கவில்லையென்று, வீட்டைக் காலி செய்ய அரசு உத்தரவிட்டது. ஆனால் வீடுகள் ஒதுக்கப்பட்ட மற்றவர்களுக்கு குத்தகையை புதுப்பிக்க வேண்டும் என வற்புறுத்தவில்லை. “வீட்டு வசதிவாரியம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தீர்ப்புக் கூறிய உயர்நீதிமன்ற நிதிபதி சந்ரு, தொடர்ந்து சொல்லியிருக்கிற வாசகம் முக்கியத்துவமானது, “வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலக கட்டடத்தில் பெரிய அளவில் பொருத்தப்பட்ட நியான் விளக்கு’ பலகை உள்ளது. அதில் தமிழ் வாழ்க என்கிற வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது. இதை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால், கொள்கை ரீதியான மாறுபாடுகள் இருந்தாலும் மனுதாரரைப் போன்ற தமிழ் எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், தமிழ்ச் சிந்தனையாளர்களைக் கவுரவப்படுத்தவேண்டும். தமிழ்ச் சிந்தனையாளர்களைப் பாதுகாப்பதன் மூலமே தமிழ்வாழும். அப்போதுதான் நியாய் விளக்குப் பொருத்தப்பட்ட தமிழ்வாழ்க’ என்கிற வாசகம் மேலும் மிளிரும்” மாநாட்டை வெற்றிகரமாக முடித்துவிட்டோமென களிப்பில் மிதந்திருப்போருக்கு, தமிழ் வாழ்வது எப்படியென்று எடுத்துரைத்திருக்கிறார் நீதிபதி சந்ரு.

செம்மொழி மாநாட்டின் வெற்றிக்களிப்பில் மிதந்து கொண்டிருப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் விழுந்த அடியாக இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழனை அவனுடைய வீட்டிலிருந்து விரட்டி, தமிழை அவன் வாழ்விலிருந்து விரட்டியடித்த பின் மொழியையும் விரட்டிவிட்டு, 380 கோடியில் உலகச் செம்மொழித் தமிழ் மாநாடு என்பதும் 500 கோடிகளில் கோவை நகர மேம்பாடு என்பதும் அந்த ‘நியான் விளக்கு’ கதைதான். கருணாநிதி தனக்காகவும் கட்சிக்காகவும் மாட்டிக்கொண்ட டிஜிட்டல் விளம்பரப் பலகையாக ஆகியிருக்கிறது மாநாடு.

*************

பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்களுக்கு, 4.11.2009ல் சூரியதீபன் எழுதிய கடிதம்.

-----

‍‍தோழமையுடைய பேராசிரியர் அவர்களுக்கு, தங்களின் மின்னஞ்சல் தெரியாததினாலேயே, இந்த எழுத்து அஞ்சல். செம்மொழித் தமிழ் மாநாடு பற்றிய தங்களது கருத்துக்கள் – தங்களின் ஈரெட்டான நிலையை வெளிப்படுத்தியுள்ளன. தங்களின் உறுதிப்பாடற்ற, ஊசலாட்டம் எங்களைத் தடுமாற்றங்களுக்கு கூட்டிச் செல்கிறது.

2002 - அக்டோபரில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற மானுடத்தின் தமிழ்க்கூட‌ல் மாநாட்டிற்கு தாங்கள் வந்திருந்தவேளை, நீங்கள் தலைமையுரை ஆற்றினீர்கள். "1920லிருந்து அரசியல் வடிவில் தமிழர்களின் உரிமைகள் பற்றி, எடுத்துக்கூறுகின்ற ஒரு குரல் காணப்படுகிறது. இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பதிவே இல்லாமல் செய்யும் முயற்சி 1948லிருந்து தீவிரப்படுத்தப்பட்டது. தமிழினம் என்ற ஒன்றே இல்லாமல் செய்கிற முயற்சியின் எதிர்வினையாகவே ஈழத்தமிழர்களின் குரல் எழுந்துவரத் தொடங்கியது.

தன் ஆளுமைக்குரிய மனித குணங்களைப் பெறமுடியாதபடி செயல்படுகிற ஒரு சூழலில் - நிர்ப்பந்திக்கப்படுகிற சூழலில் - அத்தளைகளிலிருந்து விடுபட மானுடத்தின் குரல் முன்னுக்குவரும். அது உலகப் பொது நியதியாகும். அது பாலஸ்தீனத்தில் கேட்கும்; பிலிப்பைன்சில் கேட்கும்; அமெரிக்காவில் கேட்கும். அந்தக் குரல் தமிழிலே பேசும் என்பது தவிர, இந்தக் குரலை வேறுவகையாக எடுத்துக்கொள்ளக் கூடாது....

இது ஈழத் தமிழர்களின் உரிமைக்கான ஒரு போராட்டமும் தேடுதலுமே தவிர இது எடுக்கும் வடிவங்களை வைத்துக்கொண்டு, அதற்கு எதிராகக் கூறப்படும் கருத்தை வைத்துக்கொண்டு, இந்த உரிமைப் போரை மதிப்பிடக்கூடாது.”

தங்களின் இந்த உரையை - ஈழத்திலிருந்து நாங்கள் திரும்பியபின் நான் எழுதி வெளியான ‘ஈழக்கதவுகள்’ நூலில் முழுமையாக எடுத்தாண்டுள்ளேன். (பக்.40,41). எனில் இந்த உரிமைப் போருக்கு எதிரான குரலில் ‍ எதிரான நிலைப்பாட்டில் 1990லிருந்து இயங்கி வருகிற ஒருவர் - உலகத் தமிழரின் அளவிலா வெறுப்பை அடைத்து மூடுவதற்கான ஒரு செயற்பாடாக செம்மொழித் தமிழ் மாநாட்டை முன்னிறுத்துகிறபோது அதில் கலந்துகொள்ளும் மனநிலை எவருக்கும் வருதல் கூடாது. கலந்துகொள்ளும் விருப்பம் எவ்வாறு தங்களிடமிருந்து வெளிப்பட்டது?

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் - என்ற முழக்கம் ஆட்சியாளருக்கு; எங்கே தமிழ், எதில் தமிழ் என்ற அவலம் மக்களுக்கு.

"தமிழ் வாழவேண்டும்; தமிழன் வாழ வேண்டும்; செத்துக்கொண்டிருக்கும் தமிழனை வாழவைக்கவேண்டும்” - இது 1983 படுகொலைக்குப்பின் பேசிய கருணாநிதி. இன்று தான் வாழ வேண்டும்; தன் குடும்பம் வாழ வேண்டும்; முதலாளியக் குடும்பமாக வாழ வேண்டும்; தன் கட்சி வாழ வேண்டும்; அதிகாரத்தின் உச்சத்தில், பதவிகளின் உச்சத்தில் வாழ வேண்டுமென்று சுருக்கிக் கொண்ட இன்றைய கருணாநிதி.

"கலைஞர் போன்ற சிறந்த தமிழறிஞர் முயற்சியில் நடைபெறுகிற மாநாடு" என எடுத்துரைக்கிறீர்களே, உங்களுடைய அறிவுப் புலம், புலமைச் செருக்கு கேள்விக்குள்ளாகப் படுதல் கொண்டு நாங்கள் வேதனை கொள்ளச் சம்மதமோ?

கலைஞர் கருணாநிதியின் மொழிப்பற்றை, இனப்பற்றை அவருடைய வர்க்கப்பற்று விழுங்கிவிட்டது. இன்று கருணாநிதி சாதாரண அரசியல்வாதியல்ல; அவருடைய குடும்பம் இந்தியப் பெருமுதலாளிகளுடன் ஒன்றாக ஆகிவிட்டது; இந்தியப் பெருமுதலாளிகளுக்கு இலங்கைத் தீவு ஒரே தீர்வாக இருப்பதுதான் முக்கியமேயன்றி, தமிழ்மக்களின் விடுதலைப் போர் அல்ல. எனவே இந்தியப் பெருமுதலாளியாகிவிட்ட கருணாநிதி - தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள இன அழிப்புக்குத் துணை போனார் என்பதுதானே உண்மை.

‘ஈழம் - வன்மமும் அவதூறுகளும்’ என்ற எனது சிறுநூலை இத்துடன் தங்கள் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். அதில் ‘இந்தியத் துரோகத்தின் தமிழ்வேர்’ – என்ற கட்டுரையையும் இத்துடன் இணைத்துள்ள வேண்டுகோளையும் வாசிக்க கேட்டுக்கொள்கிறேன்.

எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் சரி. ஐயா, உங்களைப் பற்றி வேறுபாடாக நினைக்க வைத்துவிட வேண்டாம்.

தோழமையுடன்
சூரியதீபன் (பா.செயப்பிரகாசம்)

- சூரியதீபன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

இலங்கை அல்லது இந்திய மரபார்ந்த மார்க்சியர்களின் விடுதலைப் புலிகளின் மீதான ஓரு பிரதானமான குற்றச்சாட்டு அவர்கள் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்பது. அதனோடு அவர்கள் உருவாக்க விரும்பிய சமூகம் முதலாளித்துவ சந்தைப் பொருளாதார சமூகம் என்பது. யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம் மக்களின் வெளியேற்றம் மற்றும் யாழ் வெள்ளாளர் கருத்தியலை ஏற்ற தலித்திய விரோதிகள் புலிகள் என்பதும் சேர்ந்து இவர்களைப் பொறுத்து புலிகள் முழு வலதுசாரிகளாகவும் ஆனார்கள். இலங்கை தொடர்பாக நடந்து வரும் இனக்கொலை மற்றும் மனித உரிமை விவாதங்களில் மரபார்ந்த மார்க்சியர்களிடம் பொதிந்திருக்கும் மௌனத்திற்கான காரணங்களை இப்படியாகவன்றி நாம் வேறுவிதமாக விளங்கிக் கொள்ள முடியாது.

பின்நவீனத்துவம், மார்க்சியம் கடந்த தரிசனம் என்று சொல்லப்படுவதாலும், தமிழகத்தில்  இருத்தலியலை முன்வைத்துப் பேசிய விமர்சன மார்க்சியம் சீனா உள்ளான சோசலிச நாடுகளிலும் நிலவி வந்த மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை செய்தன என்பதாலும், இது ஒரு கோட்பாட்டு நிலைபாடு எனும் அளவில் இதனை நாம் நிதானமாகப் பரிசீலிக்க வேண்டும்.

தேசியம் குறித்து அதிகமும் எழுதிய மார்க்சியரான ரொனால்ட் மங்க் தேசிய விடுதலைப் போராட்டம் முற்போக்கானதாக அமைய வேண்டுமானால் அது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பதனை ஒரு முன்நிபந்தனையாக வைத்தார். மேற்கத்திய காலனியாதிக்கத்திற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டங்கள் இயல்பாகவே ஏகாதிபத்திய எதிர்ப்புத்தன்மையைக் கொண்டிருந்தன. பெரும்பாலுமான நாடுகள் முதலாளித்துவமல்லாத சோசலிசம் நோக்கிய அரசியலையும் தேர்ந்து கொண்டன. அவைகள் நடைமுறையில் சோசலிச நாடுகள் இல்லையெனினும் தமது யாப்பில் சோசலிசம் எனும் வார்த்தையைச் சேர்த்துக் கொண்டன. ஆப்ரிக்க இலத்தீனமெரிக்க ஆசிய நாடுகளின் விடுதலைப் போரட்டங்களை ஆய்வு செய்கிற ஒரு வரலாற்று மாணவன் இதனை உணர முடியும். சோசலிசத்தைத் தனது யாப்பில் கொண்ட இந்திய உதாரணம் இதற்குப் போதுமானது.
 
இனத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் பெரும்பாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைபாட்டையும், மார்க்சியர்களின் பாலான விலக்கத்தையும் கொண்டிருக்க என்ன காரணம்? இரண்டு காரணங்கள். ஒன்று இனத்தை அடிப்படையாகக் கொண்ட போராட்டங்கள் பாசிசமாகச் சீரழிவதற்கான வரலாற்று நிலைகள் என்றும் அப்போராட்டங்களில் உண்டு. இட்லர், முசோலினி, பிராங்கோ எனச் சான்றுகளும் இருக்கின்றன. திராவிடநாடு அரசியலும் அதனது கலாச்சாரக் கோருதல்களும் பாசிசமாகவும் இனவெறியாகவும் தமிழக இடதுசாரிகளால் பார்க்கப்பட்டிருக்கிறது. திராவிட மரபு பாசிசமாக ஆகவில்லை எனும் வரலாறு நமக்கு முன்பு இருக்கிறது.

இரண்டாவது காரணம், வரலாறற்ற தேசியங்கள் என்பது குறித்த மார்க்சிய மரபு. வரலாறற்ற தேசியங்களுக்கு போராடும் உரிமையை ஏற்கத் தேவையில்லை. இத்தகைய போராட்டங்கள் கலாச்சாரமற்றதாகவும் காட்டுமிராண்டித்தனமானதாகவும் வரலாற்றைப் பின்தள்ளுவதாகவுமே இருக்கும் என இதனை ஒரு கோட்பாட்டு நியாயமாக விரிக்கலாம். ஆப்ரிக்க தேசிய விடுதலைத் தலைவரான அமில்கார் காப்ரேல் இந்த மார்க்சிய மரபை மறுத்திருக்கிறார்.

நம்காலத்தில் தமது இனமக்களின் விடுதலையைப் பேசிய கிழக்கு திமோரின் குசாமா சனானவும், குர்திஸ் விடுதலை இயக்கத்தலைவரான அப்துல்லா ஒச்சலானும் நடைமுறையில் இந்த மார்க்சிய மரபை மறுத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தமது விடுதலைப் போராட்டத்தைத் துவங்கிய காலங்களில் சர்வதேசியத்தை ஏற்ற, சோசலிசத்தை ஏற்ற, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்பதனை எவரும் மறந்துவிட வேண்டிய அவசியம் இன்றும் இல்லை.

சோவியத் யூனியனும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் தேசியங்களாக சிதறிப் போனதற்கான காரணங்களில் ஒன்றாக நிலவிய சோசலிச ஆட்சியாளர்கள் தேசிய இனப் பிரச்சினையை எதேச்சாதிகாரமாகக் கையாண்டதும் ஒரு காரணம் என்பதனை இலங்கை மார்க்சியரான ரெஜி சிறிவர்த்தனா போன்றவர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள். சோவியத் யூனியன் யுகோஸ்லாவிய சிதறல் அதற்கான நடைமுறைச் சான்றாக எம்முன் இருக்கிறது.

தொண்ணூறுகளின் துவக்கம் கடந்த இருபது ஆண்டுகளில் உருவாகின எந்தத் தேசமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதனைத் தமது பிரதான அரசியலாகக் கொண்டிருக்கவில்லை. இதற்கான காரணம் தேசியம் குறித்த வரலாற்றுரீதியில் முன்நோக்கிய பார்வை சோவியத் யூனியன் மற்றும் சீனா என இரு முகாம்களையும் போற்றிய இருபிரிவான மரபார்ந்த மார்க்சியரிடமும் இல்லை. இனத்தேசிய விடுதலைப் போராட்டத்தின் பண்பு குறித்த புரிதல் அவர்களிடம் இல்லை. இனக்கொலை என்பது எமது நூற்றாண்டின் மிகப்பெரும் பிரச்சினை என்ற உணர்வும் அவர்களிடம் இல்லை. இந்தக் காரணங்களால்தான் ஈழத்தில் இனக்கொலை நடந்திருக்கிறது அல்லது மனித உரிமை மீறல் நிகழ்ந்திருக்கிறது என்று இவர்கள் அறிக்கைகளில் அல்லது கட்டுரைகளில் பேசினாலும், இத்தகைய இயக்கங்களை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். நடைமுறையில் மௌனம் காக்கிறார்கள்.

இலங்கையின் போர்க் குற்றங்கள் மனிதஉரிமை மீறல்கள் பற்றி இலங்கை அரசாங்கம் நேர்மையாக விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என இவர்கள் கருதுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உள்பட மனித உரிமை விவகாரத்தில் அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் செய்வது இலங்கையின் இறையாண்மையில் தலையீடு என்கிறார்கள். மனித உரிமை சம்பந்தமான இலங்கையின் மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பிரச்சினை ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின்பற்பட்டது என இவர்கள் சொல்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கையால் தமிழ்மக்களுக்கு நீதியோ தீர்வோ கிடைக்காது என்கிறார்கள். அதே வேளையில் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களை விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்கிறார்கள். இதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் சொல்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் இன்றைய நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்தியத்தினது என்பதுவே தவறான சித்தரிப்பாகும். அதனது நிகழ்ச்சி நிரல், அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள், சீனா, ரஸ்யா போன்ற நாடுகளினது தேசிய நலன்களின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரல். அதனால்தான் இந்த நாடுகள் வீட்டோ அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. தமது நாட்டின் நலன்களைக் காக்க வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இந்த நாடுகள் ஏன் பிறரது நலன்களை அறத்தின் அடிப்படையில் காக்க முடியவில்லை? சீனாவின் மனித உரிமையை அமெரிக்கா விமர்சிக்காதுவிட்டால், சீனாவும் அமெரிக்காவை விமர்சிக்காது. இதுதான் நிதர்சன அரசியல். இந்தப் போக்கில்தான் இந்தியாவினது நிகழ்ச்சி நிரலாகவும் ஐக்கிய நாடுகளின் நிரல் ஆகவேண்டும் என்பதனால்தான் இந்தியாவும் பாதுகாப்புக் கவுன்சில் உறுப்பினராக முண்டியடித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் மட்டுமல்ல சீனா, ரஸ்யா, இந்தியா போன்ற நாடுகளும்தான் இன்று உலகைக் கூறுபோட்டுக் கொண்டிருக்கின்றன. இனக்கொலைக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிற ஒரு மக்கள் கூட்டத்தின் இருத்தலுக்கு இந்த நிகழ்ச்சி நிரலினால்  பயன் விளையுமானால் இந்த நிகழ்ச்சிநிரலை அந்த மக்கள் கூட்டம் வரவேற்கவே வேண்டும். இதனால் ஏகாதிபத்தியத் தலையீடு வரும் என்பது ஓரு பயனற்றவாதம். இலங்கை அரசு மேற்கத்திய நாடுகளையும் அமெரிக்காவையும் எதிர்ப்பதில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்புக் குணாம்சமும் இல்லை. மேற்கத்திய நாடுகளிடம் அது ஏற்றுமதி ஜிஎஸ்பி சலுகை பெற்றுப் கொண்டிருந்துபோது உள்நாட்டில் கடுமையாகச் சுரண்டப்பட்ட சுதந்திர வர்த்தக வலய வியர்வைத் தொழிலாளரின் மீதான உழைப்புச் சுரண்டலில் எந்தவிதமான ஏகாதிபத்திய எதிர்ப்பும் இல்லை.

ஆப்ரிக்காவில் குவிந்து கொண்டிருக்கும் சீன இந்திய மூலதனத்தில் எந்தவிதமான முற்போக்குத் தன்மையும் இல்லை. அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இன்று முன்னைய இன்றைய சோசலிச நாடுகளிலெங்கும் நீக்கமற தனது மூலதனங்களைக் கொண்டுதான் இருக்கின்றன. சமபலநிலைக்காக அந்த நாடுகள் போராடவும் செய்யத்தான் செய்கின்றன. இந்தியா ஒரே சமயத்தில் அமெரிக்காவினது நண்பனாகவும் சீனாவினது நண்பனாகவும் இருக்க முயற்சிக்கிறது. இலங்கையிலும் இந்திய சீன மூலதனமும் அரசியல் தலையீடும் இருக்குமானால் அமெரிக்க மேற்கத்திய மூலதனத்தினால் அல்லது அரசியல் தலையீட்டினால் எதுவும் தலைகீழ் மாற்றமோ அல்லது புரட்சிகர மற்றும் எதிர்புரட்சிகரமாற்றாமோ வற்துவிடப் போவதில்லை. இந்த நகர்வுகளால் இலங்கைத் தமிழரது இருப்பும் அரசியல் உரிமையும் நிலைநாட்டப்பட்டு, இனக்கொலை நடவடிக்கை நிறுத்தப்படுமானால் அது ஈழத் தமிழருக்கு நன்மையையே கொண்டு தரும்.

இலங்கை அரசு பற்றிய திட்டவட்டமான நிலைபாடுகளை மரபான இலங்கை இந்திய மார்க்சியர் கொண்டிருக்கவில்லை.  இலங்கை அரசு தொடர்பான ஒரு பிரமையை இக்கட்சிகள் தமிழ் மக்களிடம் விதைக்க முனைகின்றன. இலங்கை அரசை எதிர்த்த அல்லது வலியுறுத்துகிற எல்லாவிதமான இயக்கங்களையும் நீர்த்துப் போகச் செய்கிற நடைமுறைப் பண்பற்ற அறிக்கைகளை மட்டுமே இக்கட்சிகள் தமது அரசியல் நிலைபாடுகளாகக் கொண்டிருக்கின்றன.

மனித உரிமை அரசியல் என்பது ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல் என்பது கெடுபிடிப் போர்க்கால கட்டத்தின் இடதுசாரி வாய்ப்பாடு. நிலவிய சோசலிசம் தகர்ந்து போனதற்கு ஏகாதிபத்திய ஊடுறுவலும் பிரச்சாரங்களும் மட்டுமே காரணமாக இருக்கவில்லை. நிலவிய சோசலிச சமூகத்தில் கட்சியின் எதேச்சாதிகாரம் நீக்கமற நிறைந்திருந்தது. மனித உரிமை ஜனநாயக அவாக்கள் சிறுபான்மையினர் உரிமைகள் என்பன நிராகரிக்கப்பட்டன. மேற்கத்திய விமர்சன மார்க்சியம் என்பதுவே இதனைப் பற்றியதுதான். தனது நாட்டில் சோசலிசத்தைக் கட்டியதாகச் சொன்ன மாவோவின் அரசுதான் ஜனநாயகபூர்வமாகத் தேர்ந்தேடுக்கப்பட்ட சோசலிஸ்ட்டான அலேண்டேவின் அரசை சி.ஜ.ஏவின் உதவியுடன் இரத்தத்தில் மூழ்கடித்த கொடுங்கோலன் பினோசேவை ஆதரித்தது. அதனது தொடர்ச்சியாகவே தியானென்மென் படுகொலையையும் நாம் பார்க்க முடியும்.

ஸ்டாலினது ரஸ்யா துவங்கி, மாவோவின் சீனா ஈராக, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை இந்நாடுகளில் மனித உரிமைகள் நிராகரிக்கப்பட்டன என்பதை இன்று எவரும் ஏற்க வேண்டும். சோவியத் யூனியனது வீழ்ச்சியைத் துரிதப்படுத்தியதும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அவை வீழக் காரணமாக அமைந்தவர்களும் அந்த மக்கள்தான் என்பதனை மறந்துவிட்டு, வெறுமனே ஏகாதிபத்தியச் சதி என அதனைப் பேசிக் கொண்டிருப்பது பயனற்ற வாதம்.

ஈழமக்களின் போராட்டம் வீழ்ந்ததற்கான பிரதானமான காரணங்கள் இரண்டு. வீழ்ச்சியின் உள்ளகக் காரணமாக விடுதலைப் புலிகளின் அரசியல் தூரதரிசனமற்ற நிலைபாட்டையும், சகலமுரண்களையும் அழித்தொழிப்பின் மூலம் சாதிக்க நினைத்த அதனது செயல்பாட்டிலும், தனது சொந்த மக்களின் மீதான அதிகாரத்தைச் செலுத்தியதிலும், யாழ் இஸ்லாமிய மக்களை வெளியேற்றிய இனக்கொலை முஸ்தீபு கொண்ட நடவடிக்கையிலும் நாம் காணலாம். தமிழர்களுக்கிடையிலேயே கணிசமான எதிரிகளை இதனால் விடுதலைப் புலிகள் உருவாக்கினார்கள். புறநிலைக் காரணமாக, நிலவிய உலகை அரசியல் பொருளாதார ஒழுங்கை மிகச் சாதுரியமாகப் பாவித்து, உலக நாடுகள் அனைவரதும் ஆதரவை ‘பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவாகத் திருப்பிய’ இலங்கை அரசின் செயல்பாட்டைச் சொல்லலாம். இதில் இலங்கை அரசு சார்ந்த காரணம், வஞ்சகமான, இனக்கொலைப் பண்பு கொண்ட, கொடுங்கோன்மையான காரணம்.

விடுதலைப் புலிகளின் தவறுகளை முன்வைத்து இன்றும் தொடரும் இந்த இனக்கொலை நடவடிக்கையை, அதற்குக் காரணமான இலங்கை அரசின் தன்மையை எவரும் பின்தள்ளிவிட முடியாது. இலங்கை அரசிடம் இறைஞ்சிக் கொண்டிருப்பதும், அதற்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருப்பதும் அபத்தமான அரசியல் நிலைபாடுகளாகவே இருக்கும். இன்றைய இலங்கை அரசு எந்தவிதமான அரசியல் தீர்வும் முன்வைக்க விரும்பாத, தமது ‘பயங்கரவாத ஒழிப்பு’ இராணுவ அனுபவத்தை ஒரு ராணுவக் கோட்பாடாக்கி அதனை உலக நாடுகளுக்கு விற்கவிரும்பும் ஒரு கொடுங்கோன்மை அரசு. இந்த அரசு போர்க்குற்றங்களை ஒப்புக்கொள்ளப்போவதும் இல்லை. குற்றவாளிகளை அது தண்டிக்கப் போவதும் இல்லை. 

இலங்கை அரசின் மீதான சர்வதேச ரீதியிலான அரசியல் நெருக்கடிகளும், அரசுக்கு எதிரான போராட்டங்களும் மட்டுமே இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவர முடியும். தண்டிக்கப்பட வேண்டியவர்களிடமே நீதி கேட்பது போன்றது மரபார்ந்த மார்க்சியர்களின் இலங்கை அரசு நோக்கிய  அறிக்கைகள். இந்திய மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இந்திய அரசு நிலைபாட்டை எதிர்க்கிறவர்கள் அதே இந்திய அரசின் ஆதரவுடன் இலங்கை செய்யும், தொடரும் இனப்படுகொலைச் செயல்பாடுகளை விடுதலைப் புலிகளின் தவறுகளைக் காட்டிப் பேசாமல் இருப்பது, தமிழக மனித உரிமை மார்க்சியர்களின் இரட்டை நிலைபாடுகளாகவே ஆகிறது.

இலங்கை அரசுக்கு எதிரான, மனித உரிமைகளை வலியுறுத்திய தமிழக தமிழ்த் தேசியர்களின் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளின் போராட்டங்கள் தமது தார்மீகத் தன்மையை அறம்சார்ந்த அதனது போராட்ட வழிமுறைகளின் மூலமே தக்கவைத்துக் கொள்ள முடியும். பெரியாரிய, தலித்திய, மார்க்சிய  அரசியலை முன்வைக்கிற அரசியலே இங்கு இந்தப் பாத்திரத்தை எடுக்க முடியும். ‘தமிழகத்திலுள்ள சிங்களவர்களைக் கொல்வோம்’ என்கிற வெறி அரசியல் தார்மீக அரசியலாக ஆகாது.

மனித உரிமைப் பிரச்சினை இன்று இரு முனைகளில் பேசப்பட்டு வருகிறது. ஒன்று அமெரிக்க மேற்கத்திய அரசு மட்டத்திலும், தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபை மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிறிதொரு முனையில் சுயாதீனமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், அம்னஸ்டி இன்டர்நேசனல் போன்றவை முன்னெடுத்து வருகின்றன. இந்த இரண்டாவதான அமைப்புகளின் மனித உரிமை நிகழ்ச்சி நிரல் ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் என எவரேனும் வாதிடுவார்களானால் அவர்களது தமிழக மட்டத்திலான அனைத்து மனித உரிமை அரசியலையுமே நாம் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டும்.

தமது கண்களுக்கு முன்னால் நடந்திருக்கும் இனப்படுகொலை குறித்துக் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, தமிழக மனித உரிமை குறித்து உண்மை அறியும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது தந்திர அரசியலாகுமே தவிர அது மனித உரிமை அக்கறையின் பாற்பட்ட நடவடிக்கை ஆகாது. இதைப் போன்றே இனப்படுகொலை பற்றிப் பேசாது மாவோயிஸ்ட்டுகள் பற்றி மட்டுமே தேர்ந்தெடுத்துப் பேசுவதும் ஜனநாயக நடவடிக்கை ஆக முடியாது. இரண்டு பிரச்சினைகளும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாததாகும். நமது கண்முன்னால் நடந்து முடிந்திருக்கும் இனக்கொலை குறித்த நடைமுறைத் திட்டம் என்பதுவே இன்று தேவை. இதற்கு நீட்டி முழக்கிய மேற்கோள்களால் நிரப்பப்பட்ட வெற்றுப் பகுப்பாய்வுகளால் எந்தப் பயனும் இல்லை. திட்டவட்டமான தீர்மானங்களும் அதனையொட்டிய செயல்பாடுகளும்தான் இன்று அவசியம். மரபான மார்க்சியர்கள் அதற்குத் தமது கடந்த காலத்தைக் கடந்து வரவேண்டும்.

- யமுனா ராஜேந்திரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It

இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது. இவ்விரண்டு வெற்றி தோல்விகளையும் நமது வெற்றி தோல்விகளாகக் கருதி படிப்பினைகளைப் பெறுவதே அவற்றின் விலைமதிப்பற்ற தியாகத்திற்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். இரண்டையும் ஒப்பிடுவதற்கான ஒரே காரணம் அவை இந்திய விரிவாதிக்க அரசின் ஆதிக்க பரப்புக்குள் உள்ளன என்பதும் இந்திய அரசின் தலையீட்டால் அவை வெவ்வேறு முடிவுகளை எட்டியுள்ளன என்பதும்தான்.

வல்லாதிக்க வல்லூறுகளும் விடுதலை இயக்கங்களும்

இந்திய அரசின் தலையீடு வியப்புக்குரிய வகையில் நேபாளத்திலும் ஈழத்திலும் எதிரெதிர் தன்மை கொண்டதாக இருந்தது. நேபாளத்தில் முடியாட்சி ஒழிப்புக்கு ஆதரவு அளிக்காவிட்டால் நேபாளம் சீனாவின் பக்கம் சென்றுவிடும் என்று சொல்லி மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்த இந்திய அரசு, இலங்கையில் தமிழின அழிப்புக்கு ஆதரவு அளிக்காவிட்டால் இலங்கை, சீனாவின் பக்கம் சென்று விடும் என்று சொல்லி ஆதரவு அளித்தது. நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கு ஆதரவு; ஈழத்தில் தேசிய விடுதலைக்கு எதிர்ப்பு; இப்படி முரண்பட்ட தலையீட்டுக்கு இந்தியா சொல்வது போல் சீனாதான் காரணமா? ‘சீனா நீதி அநீதி என்ற வரைமுறைகள் இன்றி ஏகாதிபத்திய செங்கோலை கையில் எடுத்தது, பதிலுக்கு இந்தியா தேசப் பாதுகாப்பு அஸ்திரத்தை கையில் எடுத்தது’ என்பது இந்திய அரசாதரவு ஊடக முழக்கம்.

சீனாவின் நோக்கம் என்ன? உலக சண்டியராவதன் பகுதியாக ஆசிய சண்டியராவது. இந்தியாவின் நோக்கம் என்ன? தெற்கு ஆசிய சண்டயராவது, இரண்டுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்க போட்டியில் எதிரியை ஒவ்வொரு அரங்கிலும் தோற்கடிப்பது என்பதே இரண்டின் குறிக்கோளாகும். மியான்மரில் இராணுவ ஆட்சி நடந்தால் என்ன? நேபாளம், பூட்டானில் மன்னராட்சி நடந்தால் என்ன, அவற்றின் கவனம் எல்லாம் அவை தமது ஆதிக்க வரம்புக்குள் நடக்கிறதா? இல்லையா? என்பதுதான்.

அரசதிகாரப் போட்டியில் போராடும் இரு பிரிவில் எதன் கை மேலோங்குகிறதோ அதனை தற்காலிகமாக ஆதரிப்பது; நீண்டகால நோக்கில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து தனது ஆதிக்க பரப்பை விரிவு செய்வது என்பதே இவற்றின் அணுகுமுறை. இந்தியா சீனா மட்டுமின்ற உலக வல்லாதிக்கங்களின் அணுகுமுறையும் இதுதான். நிலவுகிற அரசுகளுக்கு இடையே ஏற்கனவே இந்த சித்து வேலையை நீண்ட காலமாகவே செய்து வருகின்றன. ஆனால் அவை நிலவுகிற அரசுக்கு எதிரான விடுதலை இயக்கங்களின் கை ஓங்கினால் அவற்றை தயக்கமின்றி ஆதரிப்பது இல்லை. அவை தமது முதலாளிய வர்க்க நலன்களுக்கு எதிரானது என்பதால் தயக்கம் காட்டுகின்றன. ஆனால், அவை தம் வல்லாதிக்க நலனுக்கு உதவும் என்ற நிலை இருந்தால் மட்டுமே ஆதரிக்கின்றன.

சோவியத் யூனியன் அதன் புரட்சிகர தன்மையை இழக்கும் வரை உலகில் ரீதியான போராட்டங்களுக்கு அரசியல், இராணுவ, பொருளாதார உதவிகளை செய்து வந்தது. அதற்கு பின்பும் சரி, முன்பும் சரி நீதிநெறிகள் அற்ற வல்லாதிக்க நெறி மட்டுமே கோலேச்சி வருகிறது. இன்று மக்களின் விடுதலைப் போராட்டங்கள் தீவிரவாதம், பிரிவினைவாதம், பயங்கரவாதம் போன்ற எளிமையான சட்டகங்களுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நெரிக்கப்படுகின்றன. செப்டம்பர் 11, 2000க்கு பிறகு தீவிரவாதம் என்ற பதம் எல்லாம் ஓரங்கப்பட்டு பயங்கரவததம் என்ற ஒற்றைப்பதம் உலகமயமாக்கப்பட்டது. விடுதலைப் புலிகள், நேபாள மாவோயிஸ்டுகள் உள்ளிட்ட அனைத்து இயக்கங்களும் பயங்கரவாத இயக்கங்களாக அறிவிக்கப்பட்டன. இத்தகைய சூழலில்தான் விடுதலை இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் வல்லாதிக்க முரண்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இது விடுதலையின் தவிர்க்கவியலாமை.

நேபாளம்

நேபாளத்தில் இந்தியா நேரடி அரசியல் பொருளாதார ஆதிக்கம் கொண்டுள்ளது. இந்திய நேபாள நட்புறவு ஒப்பந்தத்தை நேபாள மக்கள் அடிமைச் சாசனமாகவே கருதுகின்றனர். நேபாள மன்னர் பிரேந்திராவை அரண்மனை படுகொலை செய்து ஞானேந்திராவை பதவியில் அமர்த்தியது இந்திய உளவுத் துறை. தன் கைத்தடி அரசை வைத்து சீனாவோடு நேபாளத்தை நெருங்க விடாமல் செய்து வந்தது. சீனா அக்கறை காட்டிய விசயம் இதுதான். நேபாளத்தில் இந்தியாவையும் அதன் அடிவருடிகளையும் அகற்றுவதில் சீனாவின் நலன் அடங்கியிருக்கிறது.

உள்நாட்டில் மன்னன் மட்டுமின்றி காங்கிரசு உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளும் இந்திய அடிவருடிகளாகவே இருந்தன. இந்நிலைமையில் தான் ‘முடியாட்சியை ஒழிப்போம்’ என்ற முழக்கத்தை வெளிப்படையாக முன்வைத்து மாவோயிஸ்டுகள் மக்களை திரட்டினர். 40 அம்ச திட்டம் ஒன்றை மக்கள் முன்வந்து அணிதிரட்டலைச் செய்தனர். நாடெங்கும் ஆதரவு அலை பெருகியது. முடியாட்சியின் கொடிய அடக்குமுறையும் இராணுவ ரீதியான “ரோமியோ நடவடிக்கையும்” மாவோயிஸ்டுகளை ஆயுதப் போராட்டத்திற்கு தள்ளியது. ஆயுதம் தங்கிய இயக்கமும், வெற்றி மேல் வெற்றி குவித்து விடுதலை பிரதேசங்களை நிறுவியது. இந்நிலைமை முடியாட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. இந்திய ஆலோசனைப்படி முடியாட்சியும் இருக்கும்; பாராளுமன்ற சனநாயகமும் இருக்கும் என்ற “இரட்டைத்தூண் கொள்கையை” மன்னன் முன்வைத்தான். மாவோயிஸ்டுகள் முடியாட்சி ஒழிப்பில் உறுதியாக இருந்தனர். இந்நிலை மாவோயிஸ்டுகளுக்கு மகத்தான அரசியல் சாதகத்தை அளித்தாலும் மிக முக்கியமான சிக்கல் ஒன்று இருந்தது. அது உள்நாட்டு எதிரியையும் வெளிநாட்டு எதிரியையும் தனிமைப்படுத்துவது என்பதாகும்.

உள்நாட்டில் மன்னனுக்கு காங்கிரசு, யூஎம்எல் உள்ளிட்ட 7 கட்சிகளின் ஆதரவு இருந்தது. இருந்தாலும் இக்கட்சிகள் முடியாட்சிக்கு எதிரான மக்களின் கிளர்ச்சியை கண்டு அஞ்சி “சனநாயகக் குடியரசு” என்ற முழக்கத்தை எழுப்பத் தொடங்கின. இம்முரண்பாட்டை மாவோயிஸ்டுகள் அடையாளம் கண்டனர். இதனை மேலும் விரிசல் ஆக்குவதன் மூலம் மன்னனை தனிமைப்படுத்த முடியும் என தீர்மானித்தனர். ஆனால் 7 கட்சிகளும் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கவில்லை.

சர்வதேச ரீதியில் மன்னனுக்கு முழு ஆதரவு அளித்தது இந்தியாவும் அமெரிக்காவும்தான். இந்த கூட்டணியை தனிமைப்படுத்த வேண்டி இருந்தது. சீனாவும் ரஷ்யாவும் இந்த கூட்டுக்கு எதிரான நடவடிக்கையை ஆதரித்தது. ஆனால் மாவோயிஸ்டுகளை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இதனை தீவிரமாக பரிசீலித்த மாவோயிஸ்டுகள் 7 கட்சி மற்றும் சர்வதேச நாடுகளோடு வெளிப்படையான அணிசேர்க்கைக்கு மடை திறக்க முடிவு செய்தனர். அதுவரை மாவோயிஸ்டுகள் பாட்டாளி வர்க்க தலைமையிலான மக்கள் சனநாயக குடியரசு என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தனர். இதனை உள்நாட்டு முதலாளித்துவ கட்சிகளான 7 கட்சிகளும் சர்வதேச அளவிலான எல்லா முதலாளித்துவ அரசுகளும் கடுமையான எதிர்த்தன. இதுவே மாவோயிஸ்டுகளின் முதன்மை கவனத்திற்குரிய அம்சமானது.

நேபாள சனநாயக புரட்சியின் மூலவுத்தி இலட்சியமான மக்கள் சனநாயக குடியரசு என்ற முழக்கத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றனர். அதற்கு பதிலாக நேபாளத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்த (முதலாளித்துவ) ‘சனநாயக குடியரசு’ அமைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்தனர். அதனை வெற்று முழக்கமாக மட்டுமின்றி நடைமுறைப்படுத்தவும் செய்தனர். உள்நாட்டு தரகு வர்த்தகம் மற்றும் அதன் அரசியல் கட்சி தலைவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்களைத் திரும்ப அளித்தமை போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்களின் அவநம்பிக்கையை போக்கினர். அதன்பின் அணிசேர்க்கை தலைகீழாக மாறியது. நேபாள காங்கிரசு உள்ளிட்ட 7 கட்சிகளும் மன்னனை அதோகதியில் விட்டுவிட்டு மாவோயிஸ்டுகளுடன் இணைந்து 8 கட்சி கூட்டணியாயின.

சர்வதேச அளவில் சீனா, ரசியா, ஐரோப்பிய யூனியன் ஆகியவை தயக்கமின்றி ஆதரித்தன. இந்தியாவிற்கு பெருத்த ஏமாற்றம். தனது எடுபிடியான நேபாள காங்கிரஸ் கட்சி மன்னனை கைவிட்டு மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் தான் வைத்த “இரட்டைத் தூண்” கொள்கையையும் கைவிட்டது என்பதால் விரக்தி அடைந்தது. கடைசியில் இரட்டைத்தூண் கொள்கை மன்னனோடு சேர்ந்து அநாதையாகி தனிமைப்பட்டது. மாவோயிஸ்டுகளின் முழு செயலுத்தித் திட்டமும் வெற்றியடைந்தது. மன்னர் அதிகாரம் பறிக்கப்பட்டு அரசியல் நடைபிணமானார். இறுதியில் இந்தியா வேறு வழியின்றி சனநாயக குடியரசை ஆதரித்தது. இந்த ஒட்டுமொத்த அரசியல் அணிசேர்க்கையில் ஏற்பட்ட மாற்றம் மாவோயிஸ்டுகளின் தெளிவான அரசியல் பார்வை மற்றும் செயல் உத்தித் திட்டத்தால் வெற்றி பெற்றது.

நேபாளத்தில் சனநாயக குடியரசை ஆதரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அது சீனாவின் பக்கம் சென்று விடும் என்று முடிவு எடுத்து மாவோயிஸ்டுகளை ஆதரித்த இந்தியா, இலங்கையை ஈழத்தை ஆதரிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அது தனக்கு பாதகமாக முடியும் என்று ஏன் முடிவு எடுக்கவில்லை?

ஈழம்

நேபாள மாவோயிஸ்டுகளைவிட பன்மடங்கு வலிமையான நீண்ட போராட்ட அனுபவம் வாய்ந்த தரைப்படை, கடற்படை, வான்படை என வரலாற்றில் முத்திரை பதித்த ஒரு மாபெரும் விடுதலை இயக்கம், உலகில் தன்னிகரில்லா போர் உத்திக்காரர் என்று சிங்களத் தளபதி ஒருவரால் போற்றப்பட்ட தலைவரால் வழி நடத்தப்பட்ட இயக்கம் எப்படித் தோற்றது? உள்நாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது, வெளிநாட்டு எதிரியை தனிமைப்படுத்துவது என்ற உத்தியில் ஈழத்தின் அனுபவம் என்ன?

உள்நாட்டைப் பொறுத்தவரை சந்திரிகா ஆட்சி காலத்தில் 2002-2004 வரையிலான அமைதிப் பேச்சுவார்த்தை காலம் முன்னெப்போதும் இல்லாத அளவில் விடுதலைப்புலிகளுக்கு அரசியல் களத்தை திறந்துவிட்ட காலம். சனாதிபதியாக இருந்த சந்திரிகாவும் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதில் எதிரெதிராக முரண்பட்டிருந்த காலம். அமைதிப் பேச்சின் மூலம் தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவு - எதிர்ப்பு என்ற அடிப்படையில் சிங்கள அரசியல் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டிருந்த காலம். அமைதி பேச்சுவார்த்தை என்பதும் அரசியல் யுத்தம் என்கிற வகையில் மோதிக் கொள்ளும் இருவரில் யார், யாரை தனிமைப்படுத்தி நம்மை பலப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் எதிர்கால வெற்றி அமையும்.

ரணில் ஒரு புறம் “இலங்கையில் அமைதியை ஏற்படுத்தி விட்டேன்; பொருளாதாரத்தை சீரமைக்கப் போகிறேன் உதவுங்கள்” என்று கூறி பல மில்லியன் டாலர்களையும் நெருக்கத்தையும் மேற்குலகிடமிருந்து சம்பாதித்துக் கொண்டார். இராணுவத்தை பலப்படுத்தினார். மறுபுறம் புலித்தலைவர்களிடையிலான முரண்பாட்டை பயன்படுத்தி கருணாவை வைத்து புலிகளின் கிழக்கு மாகாண பலத்தை வீழ்த்தினார். பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா முடிவுக்கு கொண்டு வந்தபோது தோல்வியுள்ள ரணில், சிங்கள அரசுக்கு பல வெற்றிகரமான அடித்தளங்களை விட்டுச் சென்றிருந்தார். ரணில் அரசு வடகிழக்கில் சுய அதிகாரமுடைய இடைக்கால நிர்வாகம் என்ற புலிகளின் கோரிக்கையை இறுதிவரை கொள்கை அளவில் கூட அங்கீகரிக்கவில்லை.

ரணிலால் தாங்கள் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த புலிகள் மற்றுமோர் அரசியல் தவற்றைச் செய்தனர். தமிழரோடு நடந்த குறைந்தபட்ச சமாதான முயற்சிகளையும் எதிர்த்து நின்ற ராசபக்சே, ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய என்ற இனவெறிக் கூட்டணி வெற்றிபெறும் வகையில் தேர்தலை புறக்கணித்து ரணிலைத் தோற்கடித்தனர். மொத்தத்தில் சமாதானகாலம் சர்வதேச அளவிலும் உள்நாட்டு அளவிலும் விடுதலைப்புலிகளுக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தியது. தான் போட்ட அடித்தளத்தில் நின்று தான் ராசபக்சே வெற்றி பெற்றார் என்ற ரணிலின் கூற்று கவனிக்கத்தக்கது.

ராசபக்சே பதவி ஏற்ற 7ம் நாள் தனது வெளியுறவு அமைச்சரை இந்தியாவிற்கு அனுப்பி உறவை பலப்படுத்தினார். இந்திய-சீன முரண்பாட்டை புரிந்து கொண்ட ராசபக்சே ஏற்கனவே சந்திரிகாவின் காலத்தில் சீனாவுடன் இருந்த உறவை பலப்படுத்தி நெருக்கமடைந்தார். அதைக் காட்டியே இந்தியாவிடம் இலங்கைக்கு உதவுவதில் இருந்த துளியளவு தயக்கத்தையும் துடைத்தழித்து போர்க்களத்திற்கே இழுத்து வந்தார். தவிர பாகிஸ்தான், இசுரேல் மற்றும் பல சர்வதேச நாடுகளையும் அணி சேர்த்துக் கொண்டார். இது சர்வதேச அரங்கில் புலிகளுக்கு மிகப் பாதகமாக அமைந்தது.

இந்திய அமைதிப்படையின் நேரடியான ஆக்கிரமிப்பும் அமைதிப் படையின் ஜெனரலாக இருந்து சதீஷ் நம்பியார் சந்திரிகா காலந்தொட்டு இலங்கை இராணுவ ஆலோசகராக இருந்து வருவதும் யாழ்ப்பாணத்தை புலிகள் முற்றுகைவிட்டபோது இந்தியா “போர்க் கப்பலை அனுப்பத் தயார்” எனச் சொன்னதும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இலங்கையுடன் போட்டுள்ளதும் 15 ஆண்டுகளுக்கு மேல் புலிகளை தடை செய்து வைத்திருப்பதும் ஆணித்தரமாக ஒன்றைப் பறைசாற்றி வந்தது. அது இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்க ஒன்றுமில்லை என்பதைத்தான்.

ராசபக்சே ஹிட்லர் பாணி இன அழிப்பை தொடங்கியபோது புலிகளின் தலைமை உள்நாட்டு நிலைமையில் இருந்து போர் உத்தியை வகுக்காமல் அயல்நாடுகளின் தலையீடுகளை எதிர்பார்த்து போர் உத்தியை வகுத்தது. ஈழத்தின் ஆயுதப் போராட்டமும் துவக்கம் முதற்கொண்டு அதன் அச்சாக விளங்கிய கெரில்லாப் போர் முறையை பயன்படுத்தி செயல் உத்தி ரீதியான வலிந்த தாக்குதலை (Tactical offensive) மேற்கொண்டு தம்மை தற்காத்துக் கொள்ளவில்லை.

மாறாக இந்திய பாராளுமன்றத் தேர்தல் மாற்றத்தால் சாதகமான தலையீடு நடக்கும்; அமெரிக்கா தலையிடும் என்றெல்லாம் நம்பி முழுத்தற்காப்பு போர் உத்தியை வகுத்தது என்பது எதிரிக்கு சாதகமாகிப் போனது. ராசபக்சே, தான் பிரபாகரனாக இருந்தால் கெரில்லா போர் உத்தியை பயன்படுத்தி இருப்பேன் என்று பகடி செய்ததில் வெற்றித் திமிரும் விசயத்தில் உண்மையும் இருந்தது. எந்த ஒரு விடுதலை இயக்கமும் தனது சொந்த நிலைமைகளின் பலாபலன்களின் அடிப்படையில் திட்டமிட வேண்டுமே ஒழிய புற ஆதரவை அடிப்படையாகக் கொண்டு திட்டமிடக் கூடாது. அது தோல்வியை தரும். வடக்கில் புலிகளால் அமைக்கப்பட்ட மிகச்சிறந்த நிர்வாக கட்டமைப்புகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதை பாதுகாக்க அவர்கள் தலையிடுவார்கள் என்று புலிகளின் தலைமை மிகைமதிப்பீடு செய்தது. அது முதலாளித்துவ அரசுகள் மீதான குட்டி முதலாளிய நல்லெண்ண மதிப்பீட்டின் ஈடுசெய்ய முடியாத தவறாக அமைந்துவிட்டது.

புலிகள் தம்மளவில் சிங்கள ஜனநாயக சக்திகள், இடதுசாரிகள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம் தமிழர்கள் ஆகியோரோடு வலுவாக ஒன்றுபட்டு சிங்கள ஆளும் வர்க்கத்திற்குள் சந்தர்ப்பவாதமாக ஜனநாயகம் பேசும் பிரிவுக்கும் சிங்கள பேரினவாத பிரிவுக்கும் இடையிலான முரண்பாட்டை தீவிரப்படுத்தி, பிளவுபடுத்தி பேரினவாதிகளை தனிமைப்படுத்த அரசியல் தந்திரத்தை தொடக்கத்திலிருந்து மேற்கொள்ளவில்லை. முஸ்லிம் தமிழர்களை எவ்வித பண்பாட்டு தொடர்போ உறவோ இல்லாத சிங்கள தரப்பிற்கு தள்ளியது புலிகளின் கடும் தவறாகும். சுமார் 70 ஆயிரம் முஸ்லிம் தமிழர்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற சொன்ன பிறகு புலிகளின் மாவீரர் பட்டியலில் முஸ்லிம்கள் இடம் பெறவில்லை. மத அடிப்படைவாத குழுக்கள் தோன்றுவதற்கும் அதுவே அடிப்படையானது.

மலையகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஈழப் போராட்டத்தின் பகுதியாக இல்லை. சமாதான காலத்தில்கூட இதற்கான கொள்கை ரீதியான அணுகுமுறையோ முயற்சியோ இல்லை. போராளி இயக்கத் தலைவர்களின் அரசியல் துரோகங்களை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தும் அணுகுமுறையைவிட அவ்வியக்கங்களை அழித்தொழிக்கும் முறையையே இறுதி வரை கடைப்பிடித்து வந்தது. இதில் அவ்வியக்கங்களின் செயல் வீரர்கள் நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டனர். இது தமிழர் ஒற்றுமையை குலைத்து போராட்ட வலிமையை குறைத்தது. மொத்தத்தில் புலிகள் ஐக்கிய முன்னணி தந்திரத்தை தொடக்கத்திலிருந்தே கோட்பாட்டுப் புரிதலிலிருந்து அணுகவில்லை. நடைமுறை ரீதியாகக் கூட பயன்பாட்டுவாத அணுகுமுறையில் சில நேரங்களில் ஐக்கியத்தை கடைபிடித்திருந்தாலும் அடிப்படையில் மாற்றம் இல்லை.

விடுதலைப்புலிகளின் வீரம் செரிந்த மகத்தான போராட்டம் ஆரம்பம் முதலே சில அடிப்படையான அரசியல் மற்றும் அமைப்புரீதியான பலவீனங்களைக் கொண்டிருந்தது. தொடக்கத்திலிருந்தே நிலக்கிழாரிய பிளவுவாத மோதலில் சிக்கிக் கொண்டமை, அமைத்துறையில் சனநாயகக் கட்டமைப்பு இல்லாமை, அரசியல் பலவீனம், இராணுவவாதம், எல்லாவற்றிற்கும் மேலாக அரசு, ஏகாதிபத்தியங்கள் குறித்த தெளிவான பாட்டாளி வர்க்க நிலைப்பாடு இல்லாமை, அரசுகளின் முதலாளித்துவ காரியவாத காய்நகர்த்தல்களுக்கு எதிராக பலவீனமான குட்டி முதலாளிய காரியவாத அணுகுமுறையை கைக்கொண்டமை ஆகியனவாகும். முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையிலான குட்டி முதலாளிய பார்வை உண்மையில் ஊசலாட்டமான தெளிவற்ற நிலைப்பாட்டையே எடுக்க நிர்ப்பந்திக்கிறது. அதுதான் இந்திய அரசின் விரிவாதிக்கபண்பை அதன் ஆளும் வர்க்க நலனை அறுதியிட்டு எல்லைக் கோடை வரையறுத்து அணுகாமல் இந்திய நாடாளுமன்ற தேர்தல் மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த தவறின் நிலைக்களன். அதுதான் அமெரிக்க-இந்திய கூட்டணியின் ஏகபோக நலனை அறியாமல் ஒபாமாவின் மாறுபட்ட அணுகுமுறையை எதிர்பார்த்தமைக்கும் நிலைக்களன் ஆகும்.

விடுதலைப்புலிகளின் அன்னியோன்யமான தமிழக ஆதரவு தலைமைகளில் அனைவரும் இந்திய அரசு குறித்த முதலாளித்துவ தப்பெண்ணங்களிலும் நல்ல எண்ணங்களிலும் மூழ்கி கிடப்பவர்கள். அவர்களின் பயன்பாட்டு வரம்பை தீர்மானிக்காமல் அவர்களையே மலைபோல் நம்பினர். இவையெல்லாம் வீரம்செரிந்த விடுதலைப்படை தோற்றதன் அரசியல் பலவீனங்கள் என்பதே நமது மதிப்பீடு.

இந்த ஒப்பீட்டு படிப்பினை என்பது கம்யூனிச இயக்கங்கள் எல்லாம் சரி; மற்ற விடுதலை இயக்கங்கள் அனைத்தும் தவறு என்று நிறுவ முயலும் முயற்சியும் அல்ல. இது பகுதிகளிலும் வேறுபட்ட சூழ்நிலையை பொருட்படுத்தாமல் நமது எதிர்பார்ப்பை சுமத்தும் முயற்சியும் அல்ல. அடிப்படையில் எதிரிகளையும் நண்பர்களையும் சரியாக வரையறுத்து தெளிவான அரசியல் யுத்தத்தை தொடுக்காத எந்தவகை இயக்கமும் தோல்வியை தழுவும் என்ற படிப்பினையையும் அதற்கு உதவும் அனைத்து கோட்பாடுகளையும் உள்வாங்கிச் செயல்படுதல் வெற்றிக்கு உதவும் என்ற படிப்பினையையும் பெறுவதே இதன் நோக்கம். அதிலும் அரசை எதிர்த்த எந்த ஒரு விடுதலை இயக்கமும் அரசு ஒழிப்புக் கோட்பாடான மார்க்சிய கோட்பாட்டை புறந்தள்ளுவதும் மிகப்பெரிய பலவீனமாகும். மார்க்சிய கோட்பாடு என்பது வேறு; மார்க்சியத்தின் பெயரால் மகுடி வித்தை காட்டுவோர் என்போர் வேறு என்ற தெளிவு இருந்தால் நலம்.

இப்பின்னணியில் இந்தியப் போக்கு ஒன்றைப் பரிசீலிப்போம். இந்தியாவில் குறிப்பிடத்தக்க சக்தியாக கருதப்படும் மாவோயிஸ்ட் கட்சி “ஆயுதப் போராட்டம் நடத்தும் இயக்கங்களோடு மட்டுமே ஐக்கிய முன்னணி அமைப்போம்” என்று பிரகடனப்படுத்தி உள்ளது. சனநாயகப் புரட்சி என்பது பாட்டாளிகள், உழவர்கள், சிறுமுதலாளிகள், தேசிய முதலாளிகள் ஆகிய வர்க்கங்களின் கூட்டுப் புரட்சி என்று கூறும் இக்கட்சி ஆயுதப் போராட்டத்தை ஐக்கிய முன்னணிக்கு நிபந்தனையாக்குவதன் மூலம் இந்திய அளவிலான எதார்த்தத்தை முற்றிலுமாக புறந்தள்ளுகிறது.

உண்மையில் ஐக்கிய முன்னணிக் கொள்கை என்பது ஏகாதிபத்திய - நிலஉடைமை எதிர்ப்பில் உடன்படும் மேற்கூறிய வர்க்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவதாகவே இருக்க முடியும். மாவோயிஸ்ட் கட்சியோ ஆயுதப் போராட்டத்தை நிபந்தனையாக்குகிறது. பிறகு வடகிழக்கு மற்றும் காஷ்மீரின் ஆயுதப் போராட்ட அமைப்புகளை தவிர்த்து ஒன்றுபட அதற்கு வேறு இயக்கங்கள் இல்லை. உண்மையில் இவை தவிர்த்த இந்தியப் பகுதியே மிகப்பெரும் பொருண்மையைக் கொண்டது. இது அப்பட்டமான குறுங்குழுவாத கொள்கையாகும். ஆயுதம் தாங்கிய புரட்சியானது ஆயுதம் தாங்கிய எதிர் புரட்சியை தொடக்கத்திலிருந்தே எதிர்கொள்கிறது என்று சீன நிலமையில் இருந்து மாவோ வரையறுத்த ஐக்கிய முன்னணி உத்தியை அப்படியே நகல் எடுப்பதன் விளைவு இது.

ஆயுதமே தன்னியல்பில் புரட்சிகரமானது இல்லை. நிறுவனமயமான அரசுக்கெதிராக பாட்டாளி மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் அவர்களின் எண்ணிக்கை பலம் மட்டுமே என்ற மார்க்சின் கூற்றுக்கும் மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட வடிவ வழிபாட்டுக்கும் எந்த உறவும் இல்லை. ஒட்டுமொத்த மக்களையும் கிளர்ந்தெழ வைக்காமல் நிலவுகிற அமைப்பை மாற்றி அமைப்பது சாத்தியமில்லை. நேபாளமும் ஈழமும் நம் கண் திறக்கட்டும்.

“எதிரியை புரிந்து கொள், உன்னையும் புரிந்து கொள், உன்னால் தோல்வியின் பயமின்றி நூறுமுறை சண்டையிட முடியும்”. - சன் ஷு வு 

- தங்கப் பாண்டியன்

(புதிய போராளி ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

Pin It

உட்பிரிவுகள்