இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியப் பதிவுகளில், தேவநேயப் பாவாணரின் பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர் 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7 ஆம் நாள் சங்கரன் கோயில் அருகேயுள்ள பெரும்புதூரில் பிறந்தார். அவரது பெற்றோர் ஞானத்து பரிபூரணம் இணையர் ஆவர். அவர்கள் அவருக்கு தேவநேசர் எனப் பெயரிட்டனர். ஆம்பூரிலும், பாளையங்கோட்டையில் உள்ள சி.எம்.எஸ். பள்ளியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். மிக இளம் வயதிலேயே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று, அவற்றில் கவியும் இயற்றத் தொடங்கினார்.

1919 முதல் 1921 வரை சியோன்மலை எனும் ஊரில் உள்ள பள்ளியில் ஆசியராகப் பணிபுந்தார். அவரது திறன்களை உணர்ந்த தமிழ்ப் பண்டிதர் மாசிலாமணி, அவருக்கு ‘தேவநேசக் கவிவாணன்' எனும் பட்டத்தை அளித்தார். இதுவே பின்னர் ‘பாவாணர்' என செழுமைப் பெற்றது. 1924 ஆம் ஆண்டில் மதுரை தமிழ்ச் சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் இவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார். பின்னர் 1928 ஆம் ஆண்டு சென்னை பல்கலைக் கழகத்தின் புலவர் (பி.ஓ.எல்) தேர்விலும் வெற்றி பெற்றார். 1952 ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் திராவிட மொழிகளில் ஆய்வு செய்வதற்காக, இளநிலை ஆசியராக சேர்ந்தார். 1974 இல் இலக்கியத் தமிழ் வேர்ச்சொல் அகரமுதலி தயாரிப்பிற்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார். அவ்வகரமுதலி, கலைக் களஞ்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வேர்ச் சொல் அகரமுதலியாகும். தமிழின் வளமையையும் பழமையையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான தமிழ் வேர்ச் சொல் அகரமுதலியை உருவாக்க வேண்டும் என்பதே பாவாணரின் குறிக்கோள். அம்மாதியான ஓர் அகரமுதலியை அவர் தொகுக்கவும் செய்தார். அகரமுதலியின் பன்முகப் பயன்களை வலியுறுத்திய அவர், வேர்ச் சொல் நுட்பங்களின் அடிப்படையில் தமிழ் மொழியை நிலைப்படுத்த வேண்டும் என நினைத்தார்.

அய்ம்பது ஆண்டுகளாக அவர் நடத்திய மொழியியல் ஆய்வுகளின் விளைவாக, தலை சிறந்த படைப்புகள் கிடைத்தன. அவற்றுள் ‘ஒப்பியல் மொழி' நூல், ‘செந்தமிழ்ச் செல்வி' இதழில் 1964 முதல் 1980 வரை தொடர்ந்து வெளிவந்த ‘வேர்ச்சொல் கட்டுரைகள்' போன்றவை குறிப்பிடத்தக்கவை. அவர் எல்லா மொழிகளும் ஒரே மொழியிலிருந்து பிறந்தவையே என்பதில் நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.

Devaneya Pavanarமொழியியல் ஆய்வுகளில் மிகவும் மூத்தவரான பாவாணர், இலக்கியத் தமிழில் மட்டுமல்லாது வட்டார மொழியிலும் தேர்ந்தவராக இருந்தார். அவர் உருவாக்கிய பல தூய தமிழ்ச் சொற்கள், இன்று பேச்சு வழக்கில் இயல்பாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனித்துவம் வாய்ந்த ஓர் அறிஞராக, சார்பற்று, துணிச்சலாக நிலவி வந்த தத்துவங்களைக் கேள்விக்குள்ளாக்கினார். தமிழர் வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் அகரமுதலி மீதான விமர்சன ஆய்வு (ஆங்கிலத்தில்), வடமொழி வரலாறு, திருக்குறளில் தமிழ்ப் பண்பாடு உரை போன்றவை அவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை.

அவர் எழுதியுள்ள 35க்கும் மேற்பட்ட நூல்களில் பல வகையான செய்திகளும் அடங்கியுள்ளன. பாவாணர், வெண்பா தொகுப்பு உட்படப் பல குறிப்பிடத்தக்க பாக்களையும் இயற்றியுள்ளார். அவர் இசையிலும் குரலிசை, கருவி இசை இரண்டிலும் தேர்ச்சிப் பெற்றவராக விளங்கினார். இசைப்பாடல்கள் குறித்தும் பல நூல்களை எழுதியுள்ளார்.

1979 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு அவருக்கு ‘செந்தமிழ்ச் செல்வர்' பட்டம் அளித்தது. அவர் 1981 ஆம் ஆண்டு சனவரி மாதம் 15 ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் விட்டுச் சென்றவை இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவரது நினைவாக அஞ்சல் தலை வெளியிடுவதில் அஞ்சல் துறை பெருமிதம் கொள்கிறது.