அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
அது ஒரு பறவை இல்லை. அது ஒரு விமானமும் இல்லை. நிச்சயமாக அது ஒரு சூப்பர் மனிதனும் இல்லை. சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருந்து வரும் புதிரான ஒரு பொருள் அது. அது பூமிக்கு அருகில் வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நமக்கு அருகாமையில் இருக்கும் விண்வெளியில் இருந்து பெரும் விசையுடன் வேகமாக வரும் பொருள் அது.
இந்தப் பொருள் முன்பு A11pl3Z (A11pl3Z) என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போது இது 3ஐ/அட்லஸ் (3I/Atlas)என்று அறியப்படுகிறது.
இந்த விண்கல்லின் வருகையைக் குறித்து சிலியில் உள்ள ரியோ ஹர்ர்ட்டாடோவில் (Río Hurtado) இருக்கும் விண்கற்கள் வருகையால் ஏற்படும் தாக்கம் குறித்து எச்சரிக்கும் அமைப்பின் (Asteroid Terrestrial-impact Last Alert System (Atlas)) ஆய்வு தொலைநோக்கி முதலில் கண்டறிந்தது. பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொலைநோக்கிகள் இந்த விண்கல்லை உற்றுநோக்குகின்றன என்று நாசா கூறுகிறது. இப்போது இந்த விண்கல் சூரியனிடம் இருந்து 416 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது.
சஜிட்டேரியஸ் (Sagittarius) என்ற நட்சத்திரக் கூட்டத்தில் இருந்து இது பயணித்து வருகிறது. இந்த பொருள் சூரிய மண்டலத்தில் விநாடிக்கு 37 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இது விசித்திரமான அதி பர வளைய சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. அதி பர வளைய சுற்றுப்பாதையில் சுற்றி வரும் பொருள் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வந்து பிறகு அந்த மண்டலத்தை விட்டு வெளியேறும்.
2017ல் பூமிக்கு அருகில் வந்த சிகரெட் வடிவ அம்முஅம்முவா (Oumuamua) என்ற பொருள் மற்றும் 2019ல் வந்த 2ஐ/போரிஸாவ் (2I/Borisov) என்ற வால் நட்சத்திரப் பொருள் போல இதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
“இப்பொருள் உறுதி செய்யப்பட்டால் நட்சத்திர மண்டலத்தில் இருந்து வரும் மூன்றாவது பொருளாக இது இருக்கும். இத்தகைய பல பொருட்கள் நட்சத்திர மண்டலத்தில் அலைந்து திரிகின்றன என்பதை இது எடுத்துக் காட்டுகிறது” என்று மத்திய லங்காஷைர் (Central Lancashire) பல்கலைக்கழக விண்வெளியியல் பிரிவு மூத்த பேராசிரியர் டாக்டர் மார்க் நாரிஸ் (Dr Mark Norris) கூறுகிறார். இந்த பொருளின் தற்காலிக அடையாளங்கள் இது ஒரு வால் நட்சத்திரமாக இருக்கலாம் என்று சிறு கோள்களுக்கான மையம் (Minor Planet Center) கூறுகிறது.
நாசாவின் அட்லஸ் அமைப்பு தானியங்கி முறையில் விண்வெளியில் இரவில் தென்படும் பொருட்களை ஆராய உதவும் வகையில் ஹவாய் மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் செயல்படும் தொலைநோக்கிகளைக் கொண்டுள்ளது. இந்த புதிரான பொருள் நாசாவின் புவி அருகு பொருட்களுக்கான மையம் (NEOs) மற்றும் பன்னாட்டு விண்வெளியியல் சங்கத்தின் சிறு கோள்களுக்கான மையத்தால் உறுதி செய்யப்பட்டது என்று எர்த்ஸ்கை (Earth sky.org) என்ற அமைப்பு கூறுகிறது.
இப்பொருளுக்கு சுமாரான ஒரு கோமா (coma) எனப்படும் வால் நட்சத்திரத்தின் உட்கருவை சுற்றியுள்ள உறை போன்ற பகுதியும் சிறிய வாலும் உள்ளது. இதனால் இப்பொருளுக்கு சி/2025 என்1 (C/2025 N1) என்ற கூடுதல் பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. இது 12 மைல் /20 கிலோமீட்டர் சுற்றளவு உள்ளதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். பறக்க இயலாத டைனசோர்களை பூமியில் இருந்து அழித்த விண் பாறையை விட இது பெரியதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
வால் நட்சத்திரமா விண் கல்லா?
பூமியில் இருந்து 1.6 விண்வெளி அலகு அல்லது ஏறக்குறைய 150 மில்லியன் மைல் தொலைவில் இருக்கும் என்பதால் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து இல்லை என்று நாசா கூறுகிறது. “ஆரம்ப உற்றுநோக்கல்களின் அடிப்படையில் ஒரு விண்கல் என்று உறுதி செய்யப்பட்டால் இது 20 கிலோமீட்டர் அளவு உள்ள ஒரு சிறிய பொருளாக இருக்கலாம். ஆனால் இதற்கு ஒரு சிறிய வால் பகுதியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவ்வாறெனில் இதன் கோமா பகுதியைச் சுற்றி உள்ள தூசுக்களுடன் கூடிய வளிமண்டலம் பெருமளவிலான பிரகாசத்துடன் காணப்படும். அதனால் இதன் திட வடிவ உட்கருவும் சிறிதாக இருக்கும்” என்று எடின்பரோ (Edinburgh) பல்கலைக்கழக கோள் விண்வெளியியல் துறை பேராசிரியர் காலின் ஸ்நொட்க்ராஸ் (Colin Snodgrass) கூறுகிறார்.
இந்தப் பொருள் 2025 அக்டோபர் 30 அன்று சுமார் 130 மில்லியன் மைல் தொலைவில் சூரியனுக்கு அருகில் அல்லது செவ்வாய் கோளின் சுற்றுவட்டப் பாதைக்குள் வரும். பிறகு இந்த வால் நட்சத்திரம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியில் செல்லும். விண்வெளியை நோக்கிப் பயணிக்கும். இப்பொருள் ஒரு வால் நட்சத்திரமாக இருந்தால் அது அருகில் வரும்போது பிரகாசமாகத் தெரியும். அப்போது அமெச்சூர் விண்வெளியியலாளர்கள் இதை சுலபமாக ஆராய முடியும்.
“இப்போதுள்ள விவரங்கள் படி இந்த வால் நட்சத்திரத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. 2025 பிற்பகுதி அல்லது 2026 ஆரம்பத்தில் இதை பெரிய அமெச்சூர் வானியல் தொலைநோக்கியின் மூலம் காணலாம். அருகில் வர ஆரம்பிக்கும்போது இதைக் குறித்து தெளிவாக அறியலாம்” என்று ராயல் வான் ஆய்வு மையத்தின் க்ரீன்விட்ச் (Royal Observatory Greenwich) ஆய்வாளர் ஜேக் ஃபாஸ்ட்டர் (Jake Foster) கூறுகிறார்.
அது வரை இந்த புதிரான வான் பொருளைக் காண பொறுமையுடன் காத்திருக்க முடியாதவர்களுக்காக ரோபோட்டிக் தொலைநோக்கிகளைக் கொண்ட நிகழ்நேர தொலைநோக்கி திட்டம் (Virtual Telescope Project) என்ற அமைப்பு சமீபத்தில் தன் காணொளி அலைவரிசையில் இதைக் காண ஏற்பாடு செய்திருந்தது. விண்வெளியில் தொலைதூரத்தில் இருந்து வரும் இது போன்ற புதிரான பொருட்களை ஆராயும்போது பூமி மற்றும் சூரிய மண்டலத்தின் தோற்றம் பற்றி இதுவரை நாம் அறியாத பல புதிய விவரங்கள் கிடைக்கும் என்று விண்வெளியியலாளர்கள் நம்புகின்றனர்.
&
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
ஆழ் விண்வெளிப் பரப்பில் கொதிக்கும் கடலுடன் உள்ள நீரின் உலகை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். நாசாவின் ஜேம்ஸ் வெஃப் தொலைநோக்கி (James Webb space telescope (JWST)) கண்டறிந்துள்ள இந்தக் கோளின் மேற்பரப்பின் நிலை பற்றி ஆய்வாளர்களிடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. முழுமையாக நீரால் சூழப்பட்ட இந்த தொலைதூர உலகம் உற்றுநோக்கி அறியப்பட்டது.
உயிர்கள் வாழ உதவும் அடையாளங்களான மீத்தேன், கார்பன் டை ஆக்சைடுடன் உள்ள வளி மண்டலம் மற்றும் நீராவி இந்தக் கோளில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தொலைதூரக் கோளின் சுற்றளவு பூமியைப் போல இரண்டு மடங்கு. இது 70 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த வேதிப்பொருட்களின் கலவை நீருள்ள உலகால் சூழப்பட்டுள்ளது. இது ஹைடிரஜன் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்டுள்ளது என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
என்றாலும் இந்த கடற்பரப்பு மென்மையானதாக இருக்காது என்று கருதப்படுகிறது. “மேல்நோக்கிய அமைப்புடன் உள்ள இந்த கடல் நூறு டிகிரி செல்சியர்ஸ் அல்லது அதற்கும் மேல் உள்ள வெப்பநிலையைக் கொண்டதாக இருக்கலாம்” என்று ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் நிக்கூ மதுசூதன் (Prof Nikku Madhusudhan) கூறுகிறார். மிக அதிக வளி மண்டல அழுத்தத்தில் உயர்ந்த வெப்பநிலையுடன் உள்ள இந்த கடல் நீர் திரவ நிலையில் இருக்கலாம்.
ஆனால் இங்கு உயிர்கள் வாழ இயலுமா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை. இது பற்றிய ஆய்வுக் கட்டுரை விண்வெளியியல் மற்றும் விண்வெளி இயற்பியல் கடிதங்கள் (Astronomy and Astrophysics Letters) என்ற இதழில் வெளிவந்துள்ளது. ஆனால் டி ஓ ஐ 270 டி (TOI-270 D) என்று பெயரிடப்பட்டுள்ள இதே கோளை ஆராய்ந்த கனடா ஆய்வுக் குழுவினர் இந்த கருத்தை மறுத்துள்ளனர். அவர்கள் அங்கு இதே வேதிப்பொருட்களின் கலவையைக் கண்டறிந்தனர்.
ஆனால் இந்தக் கோள் மிக வெப்பமான கடலைப் பெற்றிருப்பதால் இங்கு நீர் திரவமாக இருக்க முடியாது. மாறாக இந்த கடலில் பாறைகள் நிறைந்த அடிப்பகுதியும் அதற்கு மேல் நம்ப முடியாத அளவு அடர்த்தி மிகுந்த ஹைடிரஜன், நீராவி உள்ள மேற்பரப்புடன் கூடியதாக இருக்கலாம் என்று அந்த ஆய்வுக் குழுவினர் கருதுகின்றனர். இதில் எந்த கருத்து வெற்றி பெற்றாலும் நாசாவின் தொலைநோக்கி மூலம் நம் சூரியக் குடும்பத்திற்கும் அப்பால் உள்ள கோள்களின் தன்மை பற்றிய வியப்பூட்டும் தகவலை இக்கண்டுபிடிப்பு தந்துள்ளது என்பது உறுதி.
இந்த தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு நட்சத்திரத்தின் ஒளியை பிடித்து அனுப்பியது. இந்த ஒளி சுழலும் கோள்களின் வளி மண்டலங்கள் வழியாக பயணிக்கும்போது வடிகட்டப்பட்டது. இது வேதிப்பொருட்களின் கலவையில் உள்ள தனிமங்கள் பற்றிய விரிவான விவரங்களை அறிய உதவியது. இதைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிர்கள் இங்கு வாழ முடியுமா என்பது பற்றியும் கோளின் தரைப்பரப்பின் படத்தையும் உருவாக்க முடியும். அமோனியா வாயு இல்லாததால் இங்கு கடல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கடல் சூழ் உலகம்
வழக்கமாக ஹைடிரஜன் செறிந்துள்ள வளி மண்டலத்தில் அமோனியா இயல்பாக உருவாகும் ஒரு வேதிப்பொருள் என்று அடிப்படை அறிவியல் கூறுகிறது. ஆனால் இந்த வாயு நீரில் அதிக அளவு கரையக்கூடியது. அதனால் இந்த வளி மண்டலத்திற்கு கீழ் கடல் இருந்தால் அமோனியா அதில் கரைந்திருக்கலாம். இந்தக் கோள் ஒரு கடல் சூழ் உலகம் (hycean world) என்ற கருத்தும் உள்ளது. ஹைசியன் உலகம் என்ற சொல் ஹைடிரஜன் செறிந்த நீருள்ள கடலுடன் கூடிய வளி மண்டலத்தைக் குறிக்கிறது.
அதனால் இங்குள்ள நிலை பூமியில் இருந்து மிக வேறானது. இந்தக் கோள் ஈர்ப்பு அலைகளால் தாய் விண்மீணால் ஈர்க்கப்பட்டுள்ளதால் இதன் ஒரு பக்கம் எப்போதும் தாய் நட்சத்திரத்தை நோக்கியும் இன்னொரு பக்கம் எப்போதும் முடிவில்லாத இருளிலும் மூழ்கியுள்ளது. இது இங்கு அதிதீவிர வெப்பநிலை வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. பகல் நேரத்தில் இங்கு மிக உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது.
இரவு நேரம் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலை இங்கு நிலவலாம். ஆனால் பூமியின் வளி மண்டல அழுத்தத்தைப் போல ஆயிரம் மடங்குக்கும் அதிகமான அழுத்தம் இங்கு உள்ளது. இதனால் கடலை விட்டு நீராவி வெளியில் சென்று கொண்டிருக்கிறது. இங்குள்ள கடல் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் ஆழமுடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் பாறைப் பரப்புகளுடன் உள்ள மேல் தோடு பகுதிக்கு மேல் அமைந்துள்ள கடலின் அடித்தட்டு மிகுந்த அழுத்தமுடையதாக காணப்படுகிறது.
“நீராவி இருப்பதாலும் வெப்பநிலை மிக அதிகமாக இருப்பதாலும் இங்கு நீர் திரவநிலையில் இருக்க வாய்ப்பில்லை. அதனால் நீருள்ள கடலுக்கான வாய்ப்பு இங்கு இல்லை. கடலின் தரைப்பரப்பில் வெப்பநிலை 4,000 டிகிரி செல்சியர்ஸ் அளவுக்கு இருக்கலாம். அதனால் நீர் இங்கு மிக மோசமான நிலையில் காணப்படும். அதனால் திரவ மற்றும் வாயு நிலையை வேறுபடுத்தி காணும் வாய்ப்புகள் மிக மங்கலாக உள்ளன. இங்குள்ள கடல் அடர்த்தியான, சூடான நிலையில் காணப்படலாம்” என்று இதே கோளை கூடுதலாக ஆராய்ந்த கனடா மாண்ட்ரீல் பல்கலைக்கழக ஆய்வாளர் பேராசிரியர் பியெர்ன் பெனக் (Prof Björn Benneke) கூறுகிறார். இரண்டு குழுக்களும் இங்கு பூமியின் உயிரி செயல்முறைகளுடன் தொடர்புடைய கார்பன் டை சல்பைடு இருப்பதைக் கண்டறிந்தது. இந்த வாயு வேறு வழிகளிலும் உருவாக வாய்ப்பு உள்ளது.
ஆனால் உயிர்கள் வாழ்வதன் அடையாளமாகக் கருதப்படும் டை மீத்தைல் சல்பைடு (dimethyl sulphide) காணப்படவில்லை. “உயிரி செயல்முறைகளுடன் கார்பன் டை சல்பைடை தொடர்புபடுத்த முடியாது. ஹைடிரஜன் செறிந்த வளி மண்டலத்தில் இந்த வாயுவை உருவாக்குவது எளிது. இந்த மூலக்கூற்றை மதிப்பிட முடிந்தால் அது பூமிக்கு அப்பால் உயிர்கள் வாழத் தகுதியான கோள்களைக் கண்டறிவதில் பெரிதும் உதவும்” என்று மாத்யூ கூறுகிறார்.
“சூரிய மண்டலம் போன்ற ஒரு அமைப்பு இல்லாத இத்தகைய புதிய சூழலில் சிறிய கோள்கள் பற்றிய இந்த ஆய்வுகள் பரவசமூட்டுபவை. பல தொலைதூரக் கோள்களிலும் நீராவி இருப்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறுகிறது. தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்த இரண்டு ஆய்வுக் குழுக்களும் இங்கு ஒரே வகை வேதிப்பொருட்கள் இருப்பதை உறுதி செய்துள்ளன” என்று ஓப்பன் (Open) பல்கலைக்கழக விண்வெளியியலாளர் டாக்டர் ஜோ பார்ஸ்ட்டோ (Dr Jo Barstow) கூறுகிறார்.
சூரிய மண்டலத்திற்கும், பூமிக்கும் அப்பால் உயிர் வாழத் தகுதியான இடத்தை கண்டுபிடிக்கும் இடைவிடாட மனித முயற்சியில் இந்த ஆய்வு ஒரு புதிய திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
1739 மார்ச் 13 அன்று இரவு வில்லியம் ஹெர்ஷல், பாத் (Bath) நியூ கிங் தெருவில் (New King Street) உள்ள தன் வீட்டின் புறக்கடைத் தோட்டத்தில் தொலைநோக்கியைக் கொண்டு வானை ஆராய்ந்து கொண்டிருந்தபோது ஜீட்ட டோரி (Zeta Tauri) என்ற நட்சத்திரத்திற்கு அருகில் மங்கலான ஒரு பொருளைக் கண்டுபிடித்தார். அதை பல இரவுகள் உற்று நோக்கியபோது அது நட்சத்திரங்களின் பின்புலத்தில் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பதை அறிந்தார்.
ஒரு வால் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளதாக அவர் முதலில் நினைத்தார். ஆனால் அது தொலைவில் உள்ள ஒரு கோள் என்று பிறகு தெரிந்தது. பல காலங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட அதற்கு அவர் யுரேனஸ் (Uranus) என்று பெயர் வைத்தார். இந்த சாதனை அவருக்கு ராயல் சங்க உறுப்பினர் பதவி, நைட்ஹுட் பட்டத்தைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து நடந்த ஆய்வுகள் இந்தக் கோள் தனித்துவமானது என்பதை எடுத்துக் காட்டியது.
வில்லியம் ஹெர்ஷல் இந்த கோளை ஆராய்ந்ததன் 200ம் ஆண்டு நிறைவின் நினைவாக அவரது இல்லத்தில் நினைவுக் கல் நாட்டும் திட்டம் உள்ளது.
ஹெர்ஷல் ஆகஸ்ட் 25 1822ல் காலமானார். அவரது நினைவாக அவருடைய இல்லத்தில் உள்ள கண்காட்சியில் அவர் யுரேனஸை உற்றுநோக்கி எழுதிய குறிப்புப் புத்தகம் மற்றும் வால் நட்சத்திரங்களை கண்டுபிடித்தவரும் விஞ்ஞானி என்ற நிலையில் சம்பளம் பெற்ற முதல் பெண்மணியுமான அவரது சகோதரி காரலைன் (Caroline) எழுதிய விண்மீன்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன.
அகச்சிவப்புக் கதிர்களின் முதல் கண்டுபிடிப்பு, செவ்வாய் கோளின் துருவ முனைகள் பற்றிய ஆய்வு, முன்பு உற்றுநோக்கப்படாத சனியின் நிலவுகள் பற்றிய ஆய்வுகள் போன்றவை ஹெர்ஷலின் சாதனைகளாகப் போற்றப்படுகின்றன. என்றாலும் யுரேனஸை கண்டுபிடித்ததே அவரது மிக பெரிய சாதனை என்று கருதப்படுகிறது.
வில்லியம் ஹெர்ஷல், அவரை ஆதரித்த மூன்றாவது ஜார்ஜ் மன்னரிருக்கு நன்றி சொல்லும் விதம் ஜியார்ஜியன் விண்மீன் அல்லது ஜியார்ஜியன் சிடஸ் (Georgium Sidus) என்று பொருள் தரும் பெயரை யுரேனஸ் கோளிற்கு வைக்க முதலில் விரும்பினார். என்றாலும் இப்பெயர் இங்கிலாந்திற்கு வெளியில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. அதனால் யுரேனஸ் என்ற பெயர் ஏற்கப்பட்டது. இந்தப் பெயர் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சர்வதேச அங்கீகாரத்தைப் பெறவில்லை.
நம் சூரிய குடும்பத்தின் மற்ற கோள்கள் நுனி முதல் அடிவரை உள்ள அச்சில் சுழலும்போது யுரேனஸ் அதன் பக்கவாட்டில் சுழல்கிறது. சூரியனிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை என்றாலும் இது சூரியக் குடும்பத்தின் மிகக் குளிர்ச்சியான கோள். அதிதீவிர பருவநிலைகளைக் கொண்டது. இதன் ஒவ்வொரு துருவமும் முழு இருளில் பல காலங்களுக்கு மூழ்கும் முன் பல பத்தாண்டு கால சூரிய ஒளியில் தொடர்ந்து வெந்து உருகுகிறது.
அங்கு துருவப்பகுதிக்கு அருகில் சூரியன் மறையும்போது பிறக்கும் ஒரு மனிதன் இலையுதிர்கால இருளில் காணாமல் போவார். முதல் வசந்தகால சூரியனைக் காண அவர் 42 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்தக் கோளே ரோமானியக் கடவுளின் பெயருக்கு பதில் கிரேக்கக் கடவுளின் பெயரைப் பெற்ற முதல் கோள். கிரேக்க புராணத்தில் இது ஜூஸ் (Zeus) என்ற கடவுளுடைய தாத்தா பெயரைக் குறிக்கிறது. இது போல பல தனித்துவமான சிறப்புகள் இருந்தாலும் இதை ஆராய வியப்பூட்டும் வகையில் மிகக் குறைந்த முயற்சிகளே இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது வரை ஒரே ஒரு ஆய்வுக்கலன் மட்டுமே யுரேனஸை ஆராயச் சென்றுள்ளது. 1986 வாயேஜர் 2 விண்கலன் சூரிய மண்டலத்தை ஆராயும் சுற்றுலாவின்போது இதைக் கடந்து சென்றது. அப்போது இது பொருண்மை நிறைந்த, தனக்கென்று சிறப்புப் பண்புகள் எதுவுமற்ற, ஹைடிரஜன், ஹீலியம், மீத்தேன் வாயுக்கள் உள்ள வளிமண்டலம், செழுமையான நிலவுகள் அடங்கிய, காந்தப்புலம் அதிகமாக காணப்படும் வெளிர் நீல உலகைக் கொண்டது என்று தெரியவந்தது.
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி வரும் பத்தாண்டில் யுரேனஸை ஆராய விண்கலனை அனுப்ப நாசாவிற்குப் பரிந்துரைத்துள்ளது. இந்த அகாடமி ஒவ்வொரு பத்தாண்டிலும் அமெரிக்கா முன்னுரிமை கொடுக்க வேண்டிய திட்டங்களைப் பரிந்துரை செய்கிறது. ஒவ்வொரு பத்தாண்டிலும் வெளியிடப்படும் ஆய்வுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விவரங்களுடன் இருக்கும். “இது மகிழ்ச்சி தரும் செய்தி. யுரேனஸ் போல சூரியக் குடும்பத்தில் மிகக் குறைவாக அறியப்பட்டவை மிக சிலது மட்டுமே. வியாழன், சனி, மிகத் தொலைவில் உள்ள ப்ளூட்டோ (Pluto) போன்றவற்றுடன் உட்பகுதியில் உள்ள கோள்களை ஆராய பல மின்கலங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இது போன்ற வானியல் வேறுபாடுகளே நம் சூரிய மண்டலத்தை உருவாக்கியுள்ளது” என்று லெஸ்ட்டர் (Leicester) பல்கலைக்கழக கோளியல் விஞ்ஞானி லீஃப் ஃப்ளெட்சர் (Prof Leigh Fletcher) கூறுகிறார்.
விண்வெளியியலாளர்கள் சூரியக் கோள்களை மூன்று அடிப்படைப் பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளனர். பாறைகள் நிறைந்த உட்பகுதிக் கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் மற்றும் வெளியில் ராட்சச வாயுக் கோள்களான வியாழன், சனி ஆகியவை ஒரு பிரிவு. பெரும்பாலான பிரம்மாண்ட உலகங்கள் ஹைடிரஜன் மற்றும் ஹீலியத்தால் ஆக்கப்பட்டுள்ளன. சூரிய மண்டலத்தின் விளிம்பில் யுரேனஸ், நெப்டியூன் (Neptune) ஆகியவை உள்ளன. இவை இரண்டும் சூரியனிடம் இருந்து முறையே வெகுதொலைவில் அமைந்துள்ள இரண்டாவது மற்றும் முதலாவது கோள்கள்.
வியாழன், சனிக்கோள்கள் போல யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பெரியவை இல்லை என்றாலும் அவை பனிப்பொருட்களால் ஆக்கப்பட்டவை. அதனால் அவை பனிக் கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கோள்களின் வளிமண்டலத்திலும் உட்பகுதியிலும் மிதமிஞ்சிய மீத்தேன், நீர் மற்றும் பனிக்கட்டியை உருவாக்க உதவும் மூலக்கூறுகள் உள்ளன. இது தவிர 2006ல் கோள் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு குள்ளக் கோள் என்று பன்னாட்டு வானியல் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட ப்ளூட்டோ போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்தப் பண்புகள் சுவாரசியமானவை என்றாலும் கவனத்தைக் கவரும் வகையில் புதிரானவை அல்ல. இவை போல மற்ற கோள்களையும் சூரிய மண்டலத்திற்கு வெளியில் விண்மீன்கள் சுற்றி வருகின்றன. “இயற்கை இந்த வடிவமைப்பில் கோள்களை உருவாக்க விரும்புகிறது. நமது விண்மீன் மண்டலத்தில் ராட்சச பனிக்கோள்கள் ஏன் அதிகமாக உள்ளன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை” என்று சாந்தா குரூஸ் (Santa Cruz) கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோனதன் ஃபாட்னி (Jonathan Fortney) கூறுகிறார்.
யுரேனஸ் சூரியனிடம் இருந்து 1.8 பில்லியன் மைல்/2.8 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் சுற்றுகிறது. நெப்டியூன் 2.8 பில்லியன் மைல்/4.5 பில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் சுற்றுகிறது. இதில் சூரியனுக்கு அருகில் இருப்பதால் யுரேனஸ் மீது விஞ்ஞானிகளின் கவனம் திரும்பியுள்ளது. வழியில் இருக்கும் வியாழன் கோளை தாழ்வாகச் சுற்றிவந்து அதன் மூலம் கிடைக்கும் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி யுரேனஸ் கோளுக்கு செல்லும் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிர்களுக்கு விடை கிடைக்குமா?
இதனால் ஆய்வுக்கலன் அதிக கருவிகள், எரிபொருளை எடுத்துச் செல்ல முடியும். இது நீண்ட கால ஆய்வுக்கு உதவும். வியாழன் கோளுக்குச் செல்ல 2031 அல்லது 2032 ஆகிய ஆண்டுகள் சிறந்தது என்று வானியல் தரவுகள் கூறுகின்றன. இத்திட்டம் ஐரோப்பிய விண்வெளி முகமை போன்ற மற்ற சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படும். கோளை ஆராயும்போது அதன் நிலவுகளுக்கு அருகில் சென்று அவற்றையும் ஆராயத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுகள் இதன் மிதமிஞ்சிய குளிர்ச்சி, இதன் பக்கவாட்டு சுழற்சி, மற்ற கோள்களுக்கு மைய அச்சு துருவப்பகுதிகளில் உள்ளபோது இதன் அச்சு பக்கவாட்டில் இருப்பதற்கு காரணம் போன்ற பல புதிர்களுக்கு விடை தரும் என்று நம்பப்படுகிறது.
“தோன்றியது முதல் இதன் உட்பகுதியில் வெப்பம் இல்லை. இதுவே இதை சூரிய மண்டலத்தில் இதை மிகக் குளிர்ந்த கோளாக மாற்றுகிறது. நெப்டியூன் சூரியனிடம் இருந்து பெறும் வெப்பத்தை விட குறைவான அளவு வெப்பத்தை உமிழ்கிறது. ஆனால் யுரேனஸில் இவ்வாறு நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் பிரம்மாண்ட விண்கல் கடந்த காலத்தில் மோதியதாக இருக்கலாம். இதனால் இதன் வெப்பம் முழுவதும் வெளித்தள்ளப் பட்டிருக்கலாம்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக இயற்பியலாளர் பேராசிரியர் பாட்ரிக் எர்வின் (Prof Patrick Irwin) கூறுகிறார்.
சூரிய மண்டலத்தின் புதிர் நிறைந்த கோளாகக் கருதப்படும் யுரேனஸை ஆராயும் இத்திட்டம் விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய சரித்திரம் படைக்கும் என்று நம்பப்படுகிறது.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2022/jul/16/uranus-mission-space-exploration-nasa?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: விண்வெளி
தேவைப்படும் நேரத்தில் கிரகணத்தை ஏற்படுத்தி சூரியனை ஆராயும் புதிய திட்டத்திற்காக விண்கலன்களை அனுப்ப ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர். ப்ரோப-3 (Proba-3) என்ற இந்த இரட்டை ரோபோட் செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொலைவில் பூமியைச் சுற்றும். சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகும் இடையூறுகளை ஆழத்தில் அறிய இதில் ஒன்று மற்றொன்றில் இருந்து பார்க்கும்போது சூரியனை ஆராய முடியும்.
An impression of the European Space Agency’s double-satellite Proba-3 mission. Photograph: ESA-P. Carril
இவற்றில் லேசர்கள், ஒளி உணரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் மூலம் பல மணி நேரம் நீளும் சூரிய கிரகணத்தை உருவாக்க முடியும். இந்த கிரகணங்களை ஆராய்வதன் மூலம் சூரியனைப் பற்றிய ஆய்வுகளில் ஒரு மாற்றம் ஏற்படும். சூரியனால் ஆற்றல் தொடர்புகள், வழியறியும் செயற்கைக்கோள்கள் மற்றும் புவி சார் தொழில்நுட்பங்களில் ஏற்படுத்தும் பாதிப்பைத் தெரிந்து கொள்ள முடியும்.
ஈர்ப்பு அலைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், கருந்துளைகளை ஆராய இது ஒரு முன் மாதிரியாக அமையும். “தொழில்நுட்ப ரீதியில் சவால்கள் நிறைந்தது. இதை சரியாகச் செய்வது சுலபமானதில்லை. ஆனால் அதிக பயன் தருவது” என்று இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் (UCL) சேர்ந்த சூரியனை ஆராயும் இயற்பியலாளர் பிரான்சிஸ்கோ டியேகோ (Francisco Diego) கூறுகிறார்.
ஒன்றுடன் மற்றொன்று சேர்ந்து செல்ல வசதியாக இவ்விரு ஆய்வுக்கலன்களும் துல்லியமாக ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான தூரத்தில் இருக்க உதவும் பல சிக்கலான உணரிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இத்திட்டப் பணிகளை முழுமை செய்ய பத்தாண்டுகள் ஆனது. ஒன்றில் இருந்து மற்றொன்று 144 மீட்டர் தூரத்தில் இருக்கும்படி இவை பூமியைச் சுற்றி வரும். இதனால் இவை 144 மீட்டர் நீளமுள்ள ஒற்றை ஆய்வுக்கலனாக செயல்படும்.
“இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் அவற்றின் சரியான சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து தெளிவாகத் தெரியும் வகையில் சூரியனை மறைக்கும் விதத்தில் முதல் செயற்கைக்கோளில் இருந்து ஒரு வட்டு (disc) வெளிப்படும். இதனால் சூரியன் மறையும். இதை இரண்டாவது செயற்கைக் கோளில் இருந்து ஆராயலாம். இதன் விளைவாக உருவாகும் கிரகணம் ஒரு நாளில் ஆறு மணிநேரம் நீடிக்கும்” என்று திட்ட மேலாளர் டேமியன் கலானோ (Damien Galano) கூறுகிறார்.
நிலவு சூரியனைக் கடந்து செல்லும்போது பூமியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. அப்போது நிலவு, கண்ணைக் கூசவைக்கும் சூரிய ஒளியை மறைக்கிறது. வெப்பம் மிகுந்த கரோனாவை மட்டும் தெரியும்படி செய்கிறது. கரோனா என்பது சூரியனின் புலனாகும் பரப்பிற்கு மேல் அதன் வளிமண்டலத்திற்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வெளிப்புற அடுக்கு. இத்திட்டத்தின் உதவியுடன் கரோனாவை நன்கு ஆராய முடியும்.
வானில் இருந்து கிரகண ஆராய்ச்சி
துரதிஷ்டவசமாக முழுமையான சூரிய கிரகணம் பூமியில் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே சராசரியாக நிகழ்கிறது. இதைக் காண விஞ்ஞானிகள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. வானிலையின் கருணையால் மட்டுமே கிரகணத்தை நன்கு பார்க்க முடியும். அதை ஒரு சில விநாடிகள் மட்டுமே உற்றுநோக்க முடியும். விரிவான ஆய்வுகளுக்கு இந்த நேரம் போதுமானதாக இல்லை.
வான் தொலைநோக்கிகளுடன் இணைத்து கிரகணத்தை ஏற்படுத்தி சூரிய ஒளியை நேரடியாகத் தடுக்கும் கரோனாகிராஃப் (Coronagraph) போன்ற கருவிகளால் உட்புற கரோனாவை விரிவாக ஆராய முடிவதில்லை.
“உயர் வெப்பநிலை நிலவுவதால் உட்புற கரோனாவை ஆராய்வதில் விஞ்ஞானிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சூரியனின் பரப்பில் வெப்பநிலை சுமார் 6,000 டிகிரி. கரோனாவில் வெப்பநிலை ஒரு மில்லியன் டிகிரி. இது ஒரு முரண்பாடு. சூரியனிடம் இருந்து விலகும்போது வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை” என்று கரோனா பரிசோதனைப் பிரிவுக்கான முதன்மை ஆய்வாளர் ஆண்ட்ரே ஜூக்கோவ் (Andrei Zhukov) கூறுகிறார். உட்புற கரோனாவை அதிக நேரம் ஆராயும்போது சூரியனின் பரப்பு மிகுந்த வெப்பமாகவும் கீழ்ப்பகுதிகள் குறைந்த வெப்பத்துடன் இருப்பது ஏன் என்பதற்கும் விடை கிடைக்கும்.
விண்வெளி வானிலை, வழியறியும் தொழில்நுட்பம், ஆற்றல் பகிர்மானம், மற்ற தொழில்நுட்பங்களை சூரியன் பாதிக்கிறது. “சூரியனை நன்கறிவது வருங்கால ஆய்வுகளுக்கு முக்கியமானது. அரிதாக சூரியனின் வெளிப்புற அடுக்கில் இருந்து மின்னூட்டம் பெற்ற வாயு மற்றும் காந்தப்புல மேகங்கள் வெடித்து சிதறுதல் (coronal mass ejection) ஏற்படுகிறது. அப்போது சூரியனால் பெருமளவில் ப்ளாஸ்மா விண்வெளியில் வெளித்தள்ளப்படுகிறது.
இது பூமியின் மேல்வளிமண்டலத்தை அடையும்போது அரோரா என்னும் துருவ வெளிச்சங்களை ஏற்படுத்துகிறது. அரிதாக இது ஆற்றல் பகிர்மானத்தை பாதிக்கிறது. பொதுவாக நாம் பூமியின் வளி மண்டலம் மற்றும் பூமியைச் சுற்றியுள்ள ஆற்றல் மிக்க கதிரியக்கப் பட்டைகளான வான் ஆலன் பட்டைகளால் (Van Allen radiation) பாதுகாக்கப்படுகிறோம்” என்று டியோகோ கூறுகிறார்.
ஒரு புதிய அத்தியாயம்
ஆனால் ஆழ் விண்வெளியில் கதிரியக்கத்தில் இருந்து தப்பிக்க உதவும் இத்தகைய பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லை. மனிதனை நிலவுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பும்போது சூரிய கரோனாவின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் விண்வெளி வீரர்களை தீங்கு தரும் கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்கலாம். இந்த ஆய்வு சூரிய இயற்பியலுக்கும் அப்பால் பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
பறத்தல் பற்றிய ஆய்வு விவரங்களுக்கு இத்திட்டம் ரோபோட்டிக் கலன்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும். இதன் மூலம் மிகச் சில சிறிய செயற்கைக் கோள்களைப் பயன்படுத்தி ராட்சச செயற்கைக் கோளின் வேலைகளைச் செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இத்தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயற்கைக்கோள் குழுக்கள் மூலம் கருந்துளைகள், சூரிய மண்டலத்திற்கு அப்பால் இருக்கும் கோள்கள், ஈர்ப்பு அலைகளை ஆராயலாம்.
இத்தொழில்நுட்பம் வருங்கால விண்வெளி ஆய்வுகளில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் ஓர் அலசல் - 2
- 21ஆம் நூற்றாண்டில் விண்வெளித் துறையில் நிகழ்ந்த மாற்றங்கள் - ஓர் அலசல்
- விண்வெளி வீரர்களின் சிறுநீரை குடிநீராக மாற்ற உதவும் உள்ளாடைகள்
- உயிர்கள் வாழ உதவுமா வெள்ளிக் கோளின் மேகங்கள்...?
- சூழல் காக்க உதவும் மர செயற்கைக்கோள்கள்
- சூரியனை நோக்கி பயணிக்கும் மினி நிலா
- கடலை விழுங்கிய சனியின் நிலவு
- கற்காலத்திற்குப் பிறகு பூமிக்கு வரும் அதிசய விண்கல்
- சனியின் நிலவில் உயிர்கள்!?
- நிலவுக்குச் செல்வது ஏன் கடினமாக உள்ளது?
- பால்வீதியில் ராட்சச நட்சத்திரக் கூட்டத்தின் கண்டுபிடிப்பு
- பூமிக்கு வெளியே ஓர் உயிர்க்கோள்
- விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து ஒரு நற்செய்தி
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- விண்வெளியில் தொழிற்சாலைகள்
- விண்வெளி இரகசியங்களை ஆராய ஒரு மணிஜாடி சோதனை
- ஈர்ப்பு அலைகளை கண்டுபிடித்த பார்க்ஸ் தொலைநோக்கி
- நிலவில் வீதிகள்
- சைக்கியை நோக்கி ஒரு பயணம்
- உலகின் காடுகளைக் காக்க கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு - ஜெடி
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.