அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- கொளஞ்சி
- பிரிவு: தொழில்நுட்பம்
எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி! இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும் போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில் நுட்ப வசதிகளை பயன்புத்துவதால் எவ்வளவு சார்ஜ் செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது. இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.
வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆஃப் செய்து வைத்து கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சில புதிய அப்ளிக்கேஷன்களை டவுன்லோட் செய்யும் போது, அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிக்கேஷன்களை அகற்றுவது நல்லது.
பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு, படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும், பேட்டரியை பாதிக்கும்.
எக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்க கூடிய அளவு திரை வெளிச்சத்தினை வைத்திருந்தால் போதும். இப்படி திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட, பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.
லேப்டாப்பை ஆஃப் செய்யும் போது, டர்ன் ஆஃப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆஃப் செய்யப்படாவிட்டால், இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூமை அதிக அளவில் வைத்து கொள்வதை தவிர்க்கவும். மைக்ரோசாஃட் மற்றும் பல அப்ளிக்கேஷனில் ஆட்டோ சேவ் ஆப்ஷனை பயன்படுத்துகின்றனர். இந்த ஆட்டோ சேவ் ஆப்ஷனை ஆஃப்பில் வைத்து கொள்ளலாம்.
அதிகம் வெப்பம் மிகுந்த இடத்தில் லேப்டாப்பினை வைப்பதை தவிர்ப்பது நல்லது. இது போன்ற வெப்பம் பேட்டரியை பாதிக்கும். உதாரணத்திற்கு வெப்பம் மிகுதியாக இருக்கும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, அதில் பல மணி நேரம் லேப்டாப்பை வைத்து செல்வது பேட்டரியை வெகுவாக பாதிக்கும்.
எல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு, ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும். ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன் பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது.
இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால், லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.
- விவரங்கள்
- யோசனன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அம்மீட்டர் (Ammeter): மின்னோட்டத்தின் வலிமையை அளக்க உதவுவது
அலிமோ மீட்டர் (Anemometer): காற்றின் வேகமும், வீசும் திசையும் அளந்தறிய உதவும் காற்று வீச்சளவி.
ஆடியோ மீட்டர் (Audiometer): கேள்வித் திறனை அளக்க உதவும் கேளொலி அளவி.
ஆல்டி மீட்டர் (Altimeter): குத்துயரங்களை அளக்க உதவும் ஒருவகை சிறப்பு திரவமில்லா அழுத்தமானி.
எலக்ட்ரோஸ்கோப் (Electrosospe): மின்னேற்றம் கண்டு துலக்க உதவும் மின்காட்டி
கம்யுடேட்டர் (Commutator): மின்னோட்டத் திசையை மாற்ற அல்லது திருப்ப உதவும் மின் திசை மாற்றி, டைனமோ இயந்திரத்தில் மாறு மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுவது.
கோலரிமீட்டர் (Colorimeter): நிறங்களின் தீவிரத்தை ஒப்புநோக்க உதவும் நிற அளவி.
கலோரி மீட்டர் (Calorimeter): வெப்பத்தை அளக்க உதவும் வெம்மையளவி
கால்வனோமீட்டர் (Calvanometer): மின்னோட்டத்தை அளக்க உதவும் நுண் மின்னளவி.
கிளினிக்கல் தெர்மோமீட்டர் (Clinical Thermometer): மனித உடல் வெப்ப நிலையை அளக்க உதவும் நோயறி வெப்ப அளவி
குரோனா மீட்டர் (Chronometer): கடல்பயணத்தில் தீர்க்கரேகை அளவை அறிந்து கொள்ள உதவும் கருவி போன்று துல்லியமாகக் கால அளவைக் காட்டும் கால அளவி.
சாலினோ மீட்டர் (Salinometer): உப்புக் கரைசல்களின் அடர்த்திகளை அளப்பதன் மூலம் அவற்றின் கரைசல் செறிவைத் தீர்மானிக்க உதவும் ஒருவகை தரவமானி (உப்புக்கரைசல் அளவி)
செய்ஸ்மோ கிராஃப் (Seismograph): நில நடுக்க அதிர்ச்சிகளின் தீவிரத்தையும், தோற்றத்தையும் பதிவு செய்ய உதவும் பூகம்ப அளவி
குவாட்ரண்ட் (Quadrant): பயண அமைப்பு முறையிலும், வானவியலிலும் குத்துயரங்களையும், கோணங்களையும் அளக்க உதவும் செங்குத்தளவி.
டிரான்சிஸ்டர் (Transistor) : மின்னாற்றலை மிகைப்படுத்துவதுடன், வெப்ப அயன வால்வுகளின் பண்புகளும் கொண்டதோர் சிறு மின் கூறுப் பொருள்.
டெலிபிரிண்டர் (Teleprinter): தொலை தூர இடங்களுக்குத் தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் ஏற்கவும், தகவல்களை அச்செழுதவும் உதவும் தொலை எழுதி.
டெலி மீட்டர் (Telemeter): வான் பயணத் தொலைவில் நிகழும் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் கருவி (தொலை அளவி)
டெலஸ்கோப் (Telescope): தொலைதூரப் பொருட்களை பெருக்கிக்காட்டும் தொலை காட்டி.
டைனமோ (Dynamo): இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் கருவி
டைனமோ மீட்டர் (Dynamometer): மின் திறனை அளக்க உதவும் மின்திறனளவி.
தெர்மோ மீட்டர் (Thermometer): வெப்ப நிலையை அளக்க உதவும் வெப்ப அளவி
தெர்மோஸ்கோப் (Thermoscope): வெப்பத்தால் ஒரு பொருளின் பருமனில் ஏற்படும் அளவு மாற்றங்களைக் கொண்டு வெப்ப நிலை வேறுபாட்டைத் தோராயமாக அளக்க உதவும் வெப்பங்காட்டி
தெர்மோஸ்டாட் (Thermostat): ஒரு பொருளின் வெப்பநிலையைத் தானாகவே ஒழுங்குபடுத்தும் கருவி (வெப்ப நிலைப்படுத்தி)
பாரோமீட்டர் (Barometer): வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த அளவி.
பிளான்டி மீட்டர் (Plantimeter): சமதளப்பரப்பளவைத் தொகுத்தளிக்க உதவும் கருவி
பெரிஸ்கோப் (Periscope): நேரிடைக் கண்ணோட்டத்திற்குக் குறுக்கே தடையிருப்பின் காண்பவர் கண் மட்டத்திற்கும் மேலாக மறைந்திருக்கும் பொருட்களை கவனிக்க உதவுவது.
பைக்னோ மீட்டர் (Phknometer): நீர்மத்தின் அடர்த்தியையும், விரிவாக்கக் குணத்தையும் (Coefficient of Expansion): அளக்க உதவும் அடர்வளவி.
பைனாகுலர்கள் (Binoculars): தொலை தூரப் பொருட்களை பெருக்கி இரு கண்களுக்கும் ஒரே சமயத்தில் காட்டும் இரட்டைத் தொலைகாட்டி
பைரோ மீட்டர் (Pyrometer): உயர்வெப்ப நிலைகளை அளக்க உதவும் கனல் அளவி.
மாக்னடோ மீட்டர் (Magneto Meter): காந்தத் திருப்புத் திறன்களையும் (Magnentic Moments), புலங்களையும் (Fields) ஒப்புநோக்க உதவும் காந்த அளவி
மானோ மீட்டர் (Manometer): வளிமங்களின் அழுத்தத்தை அளக்க உதவும் திரவ அழுத்த அளவி
மரீனர்ஸ் காம்பஸ் (Mariner’s Compass): முப்பத்தியிரண்டு திசைகளும் குறிக்கப்பட்ட மாலுமித் திசை காட்டி
மைக்ரோ மீட்டர் (Micrometer): சிறு தொலைவுகள் மற்றும் கோணங்களைத் துல்லியமாக அளக்க உதவும் நுண்ணளவி.
மைக்ரோஸ்கோப் (Microscope): நுண்ணிய பொருட்களை பன்மடங்கு பெருக்கிக் காட்டும் நுண்காட்டி
ரிஃப்ராக்டோ மீட்டர் (Refractometer): ஒரு பொருளின் ஒளி விலகல் எண்ணினை அளக்க உதவும் விலகல் அளவி.
ரெசிஸ்டன்ஸ் தெர்மோ மீட்டர் (Resistance Thermometer): வெப்பத்தால் மின் கடத்திகளின் தடையில் எழும் மாற்றங்களை அளப்பதன் மூலம் வெப்பநிலையைக் கண்டறிய உதவும் மின்தடை வெப்ப அளவி.
ரெயின்கேஜ் (Raingauge): மழைப்பொழிவை அளக்க உதவும் மழை அளவி.
ரேடியோ மைக்ரோமீட்டர் (Radiomicro meter): வெப்பக்கதிர் வீச்சுக்களை அளக்க உதவும் கதிரலை நுண்ணளவி
லாக்டோ மீட்டர் (Lactometer); பாலின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது
வெர்னியர் (Vernier): அளவுகோலின் மிகக் குறைந்த அலகின் உட்பகுப்புகளைச் சுத்தமாக அளக்க, பிரதான அளவுகோலில் சறுக்கி நகரக்கூடிய நுண்ணளவுகோல்.
வோல்ட் மீட்டர் (Voltmeter): இரு புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் மின்னழுத்த அளவி.
ஸ்டெதஸ்கோப் (Stethoscope): இதயத்தின் நாடித்துடிப்பை அளக்க மருத்துவர் பயன்படுத்தும் இதயத்துடிப்பளவி.
ஸ்பிக்மோமானோ மீட்டர் (Spygmomano Meter): இரத்த அழுத்தத்தை அளக்க உதவும் இரத்த அழுத்த அளவி.
ஸ்பிரிங் பாலன்ஸ் (Spring Balance): பொருளின் எடையை அளக்க உதவும் சுருள் தராசு.
ஸ்பெக்ட்ரோ மீட்டர் (Spectrometer): ஒளி விலகல் எண்களை மிக நுட்பமாக அளந்தறிவதற்கு உகந்த வகையில் திறம்படுத்தப்பட்ட ஒளியின் நிறமாலை அளவி.
ஸ்பெக்ட்ரோஸ்கோப் (Spectroscope): மின் காந்த அலைவரிசையைப் பிரித்து பகுப்பாய்ந்து காட்டும் நிரல்மாலைகாட்டி.
ஸ்ஃபியரோ மீட்டர் (Spherometer): கோளக வடிவப் பொருட்களின் வளைவைத் துல்லியமாக அளக்க உதவும் கோள அளவி.
ஹைக்ரோ மீட்டர் (Hygrometer): வளிமண்டல ஒப்பு ஈரப்பத அளவி (relative Humidity) அளந்திட உதவும் கருவி
ஹைக்ரோஸ்கோப் (Hygroscope): வளி மண்டல ஈரப்பதத்தின் அளவு மாற்றங்களைக் கண்டறிய உதவும் ஈரப்பதங்காட்டி
ஹைட்ரோஃபோன் (Hydrophone): நீருக்கடியில் பேசும் குரலைக் கேட்ட உதவும் நீரொலி வாங்கி
ஹைட்ரோமீட்டர் (Hydrometer) நீர்மங்களின் ஒப்பு அடர்த்தியை அளக்க உதவுவது.
- விவரங்கள்
- பேரா.சோ.மோகனா
- பிரிவு: தொழில்நுட்பம்
சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் ஒரு அமெச்சூர் வானவியலாளர் வாழ்ந்திருக்கிறார். அவர் பெயர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் (Joseph Jackson Lister, FRS (11 January 1786 – 24 October 1869) என்பதாகும். அவர் கண் கண்ணாடிகள் செய்வதில் வல்லவர். ஓர் இயற்பியல்வாதியும் கூட. நவீன அறுவை சிகிச்சையின் தந்தையாகிய ஜோசப் லிஸ்டரின் தந்தையும் கூட. ஜோசப் ஜாக்சன் லிஸ்டரின் தந்தையின் பெயர் ஜான் லிஸ்டர். அன்னையின் பெயர் மேரி. ஜான் லிஸ்டரின் 49 வது வயதில் பிறந்த கடைசி மகன்தான் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர். ஜோசப்பிற்கு சிறு வயதிலேயே, கண்ணாப் பொருட்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.
பள்ளிப் படிப்பை அரைகுறையாய் முடித்த ஜோசப் ஜாக்சன், தனது 14 வது வயதில் தன் தந்தையுடன் இணைந்து லோத்புரி என்ற ஊரில் ஒயின் வியாபாரத்தைக் கவனித்து வந்தார். அதிலேயே அவர் சிறப்பாக செயல்பட்டார். பிறகு 4 ஆண்டுகளுக்குப்பின், அதன் பங்குதாரராகவும் ஆனார். தனது 32 வது வயதில், 26 வயதுள்ள இசபெல்லா என்பவரை மணந்தார். பிறகு 1821ல் தனது மைத்துனருடன், கப்பல் வணிகத்துக்குப் புறப்பட்டார்.
நுண்நோக்கிகளும், தொலைநோக்கிகளும், முன்னரே கண்டுபிடிக்கப் பட்டாலும், அதில் நிறைய குறைகள் இருந்தன. முக்கியமாக, உருவங்கள் தெளிவாகத் தெரியாமல், மசமசவென்று கலங்கலாகத் தெரிந்ததுதான். பல முன்னேற்றங்கள் ஏற்பட்டும் கூட, இந்த பிரச்சினை பல ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. ஆனால் இறுதியில் லென்சின் அபரேஷன் (aberration) எனப்படும் உருவம் கசங்கலாகத் தெரியும் பிரச்சினைக்கு முடிவு கட்டியவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்தான். அருமையாக நுண்ணோக்கி மூலம் பார்க்க வழி செய்த பெருமை இவரையே சேரும். இவர் ஒரு அமெச்சூர் நுண்ணோக்கியல்வாதிதான். ஆனாலும் கூட, லென்சின் மூலம் தெளிவாக அருகாமைப் பொருட்களையும், தொலைப் பொருட்களையும் பார்க்க வகை செய்தார். ஜோசப் அற்புதமாக ஒரு நுண்நோக்கியை 1826ல் உருவாக்கினார். இன்றும் கூட அது லண்டன் அருங்காட்சியகத்தில் பத்திரமாக, பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜோசப்பின் நுண்ணோக்கி உருவாக்கத்தால், 1832ல், இங்கிலாந்தின் ராயல் கழகத்தில் (fellowship of the Royal Society in 1832) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது மிகவும் கெளரவம் மிக்க பொறுப்பாகும். அதன் மூலம், அவர் நுண்ணோக்கி வழியே திசுக்களைப் பார்த்து அதனைப் பற்றிய கல்வியை வளர்த்துக்கொண்டார். அவரது நுண்ணோக்கி உருவாக்கத்துக்குப் பின், உயரியல் மிக வேகமாக வளர்ந்தது. நுண்ணோக்கி தொழிலும் வளர்ந்தது. முதல் முதல் இரத்தத்தின் சிவப்பணுவை உருப்பெருக்கியில் முதன்முதல் கண்டவர், மற்றவர்களுக்கு காண்பித்தவர் ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் மட்டுமே.
- விவரங்கள்
- கா.மீனாட்சி சுந்தரம்
- பிரிவு: தொழில்நுட்பம்
செயலுக்குரிய வெப்பமானி உடலின் வெப்பத்தை அளக்க பதினாறாவது நூற்றாண்டு முடியுமுன் இத்தாலிய வான்கணிப்பாளர் (astronomet) கலிலியோவால் (Galileo) முதன் முதலாக உருவாக்கப் பெற்றது. அது முதல் வளி வெப்பமானியாய் (airthermometer) சூட்டையும் தணிப்பையும் (heat & cold) குத்து மதிப்பாக அடையாளம் காட்டிற்று. பின்பு வளிக்குப் பதிலாகச் சாராய வகையைப் பயன்படுத்தி அவர் அதனுடைய கணிப்புத் திறனை மிகுதிப்படுத்தினார்.
பெரும்பாலான வெப்பமானிகள் வேலை செய்வதற்கான கோட்பாடு என்னவெனில், ஒழுகு பொருள் அல்லது வளி பயன்படுத்தப்பட்டு வெப்பநிலை மாற்றங்கட்கேற்ப அதன் கொள்கலனா கிய கண்ணாடியை விட விரைவாக விரிவடைந்து அல்லது குறைந்து நின்று அளந்துகாட்டித் தெரியப்படுத்துவதாம். எனவே வண்ண ஒழுகுபொருள் குறுகலான இலேசான கண்ணாடிக் குழாய்க்குள் அமைந்து, விரிவின் வேறுபாட்டை ஒழுகுபொருள் படிப்படியான எண்ணிட்ட அளவுகோலில் எங்கு நிற்கிறது என அறிவித்து வெப்ப அளவைத் தெரிவிக்கும். ஏறத்தாழ 1714இல் ஜெர்மானிய அறிவியலார் கேபிரியல் டேனியல் பேரன்ஹீட் (Gabriel Daniel Fahrenheat) ஒரு வெப்பமானியை வடிவமைத்து முதன்முதலாகப் பாதரசத்தை (mercury) அளக்கும் இயக்கியாகப் பயன்படுத்தினார். அத்துடன் தன் பெயரால் அழைக்கப்பட்ட 32 டிகிரியை தண்ணீர் உறைநிலை அளவாகவும் 212 டிகிரியை கொதிநிலை அளவாகவும் கொண்ட அளவுகோலை அறிமுகப்படுத்தினார். பாதரசம் பெரும்பாலான வெப்பமானிகளில் இன்றும் பயன்படுத்தப் படுகிறது. ஏன் எனில் பாதரசத்தின் கொதிநிலை 674 டிகிரி ஆகவும் கீழ் உறைநிலை -83 டிகிரி ஆகவும் இருப்பதாலேயே ஆகும்.
சாராய வகை வெப்பமானி இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏறத்தாழ 1731 ஆம் ஆண்டில் ரேனேடே (rene de Reaumur) என்ற பிரெஞ்சு இயற்கையறிவு நிபுணரால் இது கண்டுபிடிக்கப்பட்ட ஒன்றாகும். அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்வீடிஷ் வான் கணிப்பாளர் அண்டர்ஸ் செலிசியஸ் (Anders Celsius) என்பவர் நூற்றியல் அளவைக் கொண்ட நூற்றியல் வெப்பமானியை முதலாவதாகப் பயன்படுத்தினார் உறை நிலை அளவு 0 டிகிரி ஆகவும் கொதிநிலை 100 டிகிர் ஆகவும் இதில் அளவுகள் அமைந்துள்ளன.
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு
- மின்கலத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி
- டன்னல் டையோடு
- செயற்கை மூளையை உருவாக்க முடியுமா?
- ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?
- கூடங்குளம் மின்திட்டம் - மாற்று சிந்தனை + எரிபொருள்
- மின்னணுவியல் மூக்கு
- தண்ணீருக்குள் சுவாசிக்க ஒரு திரவ நுரையீரல்
- EPR சோதனை என்பது என்ன?
- வேதியியலின் கதை – 8
- புழை இருவாயின் செயல்பாடு(Function of tunnel diode)
- அணு உலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 2
- அணுஉலைகளுக்கு மாற்று - மூடி மறைக்கப்பட்ட உண்மைகள் - 1
- ஐன்ஸ்ட்டீன் கோட்பாடு ஆட்டம் காண்கிறது!
- ஒளிரும் புரதங்கள்
- மின்மினிகள்... உயிர் காக்கும் கண்மணிகள்
- காற்றாலை - ஒரு அலசல்
- பிள்ளையார் சிலை பால் குடித்தது எவ்வாறு?
- அசத்தும் அன்ட்ரோயிட் அலைபேசிகள் - அடுத்த தலைமுறைக்கு
- எதிர்மறை சவ்வூடு பரவல் முறையில் நீர்த் துப்புரவு முறை
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.