அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை, அணு ஆற்றல் என்பது அணுக் கரு ஆற்றலே என்றும், அணுவின் இதர இயக்கங்கள் எல்லாம், அணுவின் எலக்ட்ரான் மட்டங்களிலேயே நிகழ்ந்து வருகிறது என்றும், ஆனால் அணுக்கரு ஆற்றல் மட்டும்தான், அணுவைப் பிளந்து பெறப்படுகிறது என்றும், எனவே, இதர ஆற்றல்களிலிருந்து அணுக் கரு ஆற்றல் எவ்வாறு வேறுபடுகிறது என்றும், எனவே தொழில் நுட்ப வகையில் மட்டும் அல்ல, அது ஏற்படுத்தும் அபாயத்திலும் அணுக் கரு ஆற்றல் எவ்வாறு பிறவற்றிலிருந்து மாறுபட்டுள்ளது என்றும் ஓரளவு பார்த்தோம்.
இப்படிப்பட்ட தொழில் நுட்பம், நுட்பமான அணுக் கருவிலிருந்து அளவற்ற ஆற்றலைத் தருகிறது. அதேசமயம் இது அளவற்ற அபாயத்தையும் தருகிறது. எனவே, இதன் ஆற்றலை நோக்க இருக்கலாம் போலவும், இதன் ஆபத்தை நோக்க இது வேண்டாம் போலவும் தோன்றும். காரணம், இது வெறும் ஆற்றலை மட்டுமே தந்தால் யாரும் இதை எதிர்க்கப்போவதில்லை. அதேபோல இது வெறும் அபாயத்தை மட்டுமே தந்தால் யாரும் அதை வரவேற்கப் போவதுமில்லை. ஏன் அதுபற்றிய பேச்சே வரப்போவதில்லை.
அப்படியெல்லாம் அல்லாமல் இது இரண்டையுமே தருவதனால்தான் இது வேண்டுமா வேண்டாமா, வைத்துக் கொள்ளலாமா கூடாதா என்கிற சர்ச்சையெல்லாம் எழுகிறது. எனவே, இதை வேண்டும் என்பவர்களும், வேண்டாம் என்பவர்களும் இதுபற்றி என்ன சொல்கிறார்கள், இதுபற்றி எப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றிப் பார்த்துக்கொண்டு மேலே செல்வோம். பொதுவாக அணு சக்தியை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கல்பாக்கம் அணு உலை
நம் பூமியில் உள்ள பெட்ரோலும், டீசலும் இன்னும் கொஞ்ச வருஷத்தில் தீர்ந்துவிடும். பிறகு மனிதன் தனக்குத் தேவைப்படும் ஆற்றலுக்கு வேறு எங்கே போவது? எங்கேயும் போக முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த அணு சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆகவே அணுசக்திதான் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு விடிவெள்ளி யாகத் திகழப்போகிறது. அதுதான் 21ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்துச் செல்லப் போகிறது என்கிறார்கள்.
இது அல்லாமல் பொருளாதாரம், சுற்றுச்சூழல், இவைகளை ஒட்டியும் இவர்கள் பல்வேறு கருத்துகளைச் சொல்கிறார்கள். இவர்கள் சொல்கிற கருத்துகள் பலவானாலும், முக்கியமாக அவர்கள் வலியுறுத்துவது நான்குதான்.
அவையாவன: 1. அணுசக்தி என்பது மலிவானது. அதாவது மற்ற அனல், நீர் மின்சக்தியை விட அணுசக்தி மலிவானது.
2. அணுசக்தி என்பது பாதுகாப்பானது. அதாவது இதர அனல், நீர், மின் உற்பத்தியைவிட இது பாதுகாப்பானது.
3. அணுசக்தி என்பது தூய்மையானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைவிட மிகவும் தூய்மையானது.
4. அணுசக்தி என்பது நம்பகமானது. அதாவது இதர அனல், நீர் மின் நிலையங்களைப் போல் கரியையோ நீரையோ சார்ந்திருக்காமல், எப்போதும் கிடைக்கக்கூடிய, உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய வகையில் நம்பகமானது என்று சொல்கிறார்கள். எனவே, இவர்கள் சொல்கிற காரணங்களை ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்த்து, இவர்கள் சொல்வதில் உள்ள ‘உண்மையை’ உணர்ந்து கொண்டு நாம் மேலே யோசிப்போம்.
அணு மின்சாரம் சிக்கனமானதா?
சாதாரணமாக மின்சக்தி மூன்று வித தொழில் நுட்ப வழி முறைகளில் பெறப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்
1. நீர் அல்லது புனல் மின்சக்தி
2. அனல் மின்சக்தி
3. அணு மின்சக்தி
இதில் அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கக்கூடிய முதல் வாதம், மேற்சொன்ன மூன்றுவித மின்சக்தி உற்பத்தியில் புனல், அனல் மின் உற்பத்தியைவிட அணு மின்சக்தி மிக மலிவானது, சிக்கனமானது என்பதுதான்.
தனிச்சுற்றுக்காக நடத்தப்படும் “புறப்பாடு” ஜூலை ஆகஸ்டு 88 இதழில் ‘The Economic Review’ என்கிற ஆங்கில இதழில் வெளிவந்ததாக ஒரு புள்ளி விவரம் தரப்பட்டுள்ளது.
இப்புள்ளி விவரத்தில், இதர மின் உற்பத்தி முறைகளோடு ஒப்பு நோக்க, அணுமின் உற்பத்தி, எவ்வளவு செலவு அதிகம் ஆகிறது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு கணக்கின்படி,
1. நீர்மின் திட்டம் 1 கி.வா. ரூ 1916
2. நிலக்கரி 1 கி.வா. ரூ 1995
அணுமின் தயாரிப்புக்கு,
1. தாராபூர் 1 கி.வா. ரூ 2250
2. இராஜஸ்தான் 1 கி.வா. ரூ 3650
3. கல்பாக்கம் 1 கி.வா. ரூ 4800
4. நரோரா 1 கி.வா. ரூ 7000
இப்புள்ளி விவரப்படி அணுமின் தயாரிப்புக்கு 1கி. வாட்டுக்கு ரூ. 2250 லிருந்து ரூ 7000 வரை செலவு ஆகிறது. சாதாரணமாக இந்தப் புள்ளி விவரமே இதர மின் உற்பத்திகளிலிருந்து அணுமின் உற்பத்தி அதிக செலவு மிக்கது என்று தெரிவிக்கிறது. என்றாலும், இந்தப் புள்ளி விவரத்திலும் ஒரு கேள்வி எழுகிறது. அதாவது, நீர்மின் நிலையத்தின் மூலம் ஒரு கி.வா. மின் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகும் என்று கணக்கிட்டுச் சொல்லி விடலாம். ஞாயம். அதேபோல அனல் மின் உற்பத்தி செய்யவும் ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு ரூபாய் செலவாகும் என்று கணக்கிட்டு சொல்லி விடலாம். ஞாயம். ஆனால் அணுமின் நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவு ஆகும் என்பதை எந்தக் கணக்கை வைத்துச் சொல்வது என்பதுதான் அந்தக் கேள்வி.
ஏனெனில், நாம் ஏற்கனவே பார்த்தபடி அணுமின் நிலையத் தொழில் நுட்பம் அப்படி...
சாதாரணமாய் ஓர் அணுமின் நிலையத்தைக் கட்டிமுடித்து அது மின் உற்பத்தி செய்யும் நிலையை அடைய 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும் என்பதையும், இப்படி கட்டி முடிக்கப்பட்ட அணுமின் நிலையமும் அதிக பட்சம் 20 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டும் இயங்கமுடியும் என்றும், அதற்குப் பிறகு அதை ஊற்றி மூடி விடவேண்டியதுதான் என்றும் ஏற்கனவே பார்த்தோம் இல்லையா...
இத்தோடு போனாலும் கூடப் பரவாயில்லை. அணுமின் நிலையத்தை மூடிவிட்ட பிறகு, அணுமின் நிலையம். நிறுவப்பட்ட இடத்திலிருந்து வீசும் கதிரியக்கத்தைப் பல ஆயிரம் ஆண்டுகள் அதனால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாகப் பாதுகாத்தும் வைக்கவேண்டும். இதுவும் நாம் ஏற்கெனவே பார்த்தபடி இதன் அரை ஆயுள் காலம் 22,400 ஆண்டுகள். இதன்படி 100 சதவிகிதக் கதிரியக்கப்பொருள் 50% ஆக மாற 22,400 ஆண்டுகள். பின் அந்த 50%, 25% ஆக மாற 22,400 ஆண்டுகள் பின் அந்த 25% 12.5% ஆக மாற மேலும் ஒரு 22,400 ஆண்டுகள். இப்படி அந்த இடம் முற்றும் அபாயகரமற்றதாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள்.
இது ஒருபக்கம் போக அணு உலை இயங்குவதால் ஏற்பட்ட கழிவுகள், இக்கழிவுகளைப் பாதுகாக்க, அதாவது இவற்றை உலோகப் பீப்பாய்களில் அடைத்துக் கடலில் தள்ளி அல்லது பூமியில் ஆழத்தில் புதைக்க இதற்கு ஆகும் செலவு.
ஆக, அணுமின் உற்பத்தியின்மூலம் மின் சக்தியை உருவாக்க 1கி. வாட்டுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட வேண்டுமானால், நமக்குத் தேவையானது,
1. அணுமின் நிலையம் அமைக்க ஆகும் செலவு.
2. அணுமின் நிலையம் இயங்கும் காலத்தில் ஏற்படும் செலவு. அதாவது இதில் அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு விபத்துகள், கசிவுகள், வெடிப்புகள் இதைச் சரி செய்ய ஆகும் செலவு.
3. அணுமின் நிலையம் நிறுவிய இடத்தில் ஏற்பட்ட கதிரியக்கத்தை சுற்றுச் சூழலைப் பாதிக்காமல் பாதுகாக்கும் முயற்சியில் அதை அடைத்து வைக்க ஆகும் செலவு.
4. அணுமின் நிலையம் இயங்கியதில் ஏற்பட்ட கழிவுகளைப் பாதுகாக்க அல்லது புதைக்க ஆகும் செலவு.
5. மூன்று நான்கு இனங்களில் அவ்வப்போது ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் இழப்பு மற்றும் அதைப் பராமரிக்க ஆகும் செலவு.
ஆக, இவை எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிட்டால் தான் உண்மையில் 1கி. வாட் அணுமின் தயாரிக்க எவ்வளவு செலவு ஆகும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்லலாம். ஆனால், இதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் முதலிரண்டு வகையினங்களுக்கும் எவ்வளவு செலவு ஆகும் என்பதைச் சரியாகக் கணக்கிட்டு விடலாம். ஆனால் 3,4,5 வகையினங் களுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை எப்படிக் கணக்கிடுவது?
முதலிரண்டு வகையினங்கள் போல இதர வகையினங்களை அவ்வளவு சரியாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது. காரணம். இது எதிர் காலத்தில் ஏற்பட இருக்கும் உத்தேச செலவு. ஆகவே இது எவ்வளவு ஆகும் என்று சொல்ல முடியாத செலவு. அதாவது இது ஒரு தொடர் செலவு. அதாவது 10ஐ 3ஆல் வகுத்தால் 3.333... ... என்று வருமே அது போன்ற செலவு. இந்தக் கணக்கீடாவது 3 3 3 ஆகத்தான் வரும். ஒரே எண்ணாக. ஆனால் அணுக்கழிவைப் பாதுகாக்க ஆகும் செலவு இப்படி ஒரே சீராக இருக்காது. தாறுமாறாக இருக்கும். எப்போது எங்கே எவ்வளவு செலவு ஆகும் என்று சொல்ல முடியாது.
அதோடு, இந்தப் பாதுகாப்புச் செலவோடு, இதில் ஏதாவது விபத்தோ கோளாறோ ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் ஆகிய எல்லாவற்றுக்குமான இழப்பையும் இத்துடன் சேர்த்தே இந்த அணுமின் தயாரிப்புச் செலவைக் கணக்கிட வேண்டும். காரணம், இந்த அணுமின் தயாரிப்பையொட்டி ஏற்படுவதுதானே இந்தச் செலவுகள் எல்லாம்?
ஆகவே, அணுமின் தயாரிப்புக்கு ஆகும் செலவு என்பது நாய் வாலை நிமிர்த்துவதற்கு ஆகும் செலவைக் கணக்கிடுவது மாதிரி. கட்டிவைத்திருக்கிற வரைக்கும் நேராக இருக்கும். கட்டுத்தளர்ந்ததும் மீண்டும் பழையபடியே வளைத்துக் கொள்ளும். அப்புறம் மறுபடியும் கட்டை இறுக்க வேண்டும். அல்லது புதுக்கட்டு போடவேண்டும்.அதாவது வாலும் நிமிராது செலவும் மாளாது அப்படி.
எனவே, அணுமின் உற்பத்தியைப் பொறுத்தமட்டில் 1 கி.வாட்டுக்கு உற்பத்திச் செலவு எவ்வளவு ஆகும் என்பதை உறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியாது. இதுவரை இப்படிச் சொல்வதாக வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் எல்லாம் கட்டுமானத்துக்கும், இயக்கத்துக்கும், இயக்க காலத்தில் அதன் பராமரிப்புக்கும் ஆன அல்லது ஆகிற செலவை அடிப்படையாகக் கொண்டு வந்தவைகளாகவே இருக்க முடியுமே தவிர, நாம் மேற்சொன்ன இந்த எதிர்காலச் செலவைக் கணக்கில் கொண்டதாக இருக்க முடியாது. அந்தச் செலவை இப்போதே கணக்கிடவும் முடியாது என்பதே உண்மை.
இப்படி எதிர்காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பூதம் காப்பது போல் அணுமின் நிலையம் நிறுவிய இடத்தையும், அணுக்கழிவுகளையும் பாதுகாக்க ஏற்படும் வம்பான செலவை எல்லாம் வைத்துக் கொண்டு அவற்றைக் கணக்கில் கொண்டு வராமல் அணுமின் உற்பத்தி இதர மின் உற்பத்தியை விட சிக்கனமானது என்று எப்படித்தான் சொல்கிறார்களோ நமக்குப் புரியவில்லை.
அப்படியே நடப்புக் காலச் செலவை மட்டும் கணக்கிலெடுத்துக் கொண்டாலும் அந்தச் செலவும், இதர புனல்,அனல் மின் உற்பத்திச் செலவை விடவும் இரண்டு மடங்கு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கிறது என்பதைக் காட்டுவதே மேலே குறிப்பிட்டிருக்கும் புள்ளி விவரமும். இந்த நிலைமையில் அணுமின் உற்பத்தி மலிவானது, சிக்கனமானது என்பதற்கு எது அடிப்படை என்பது நமக்குத் தெரியவில்லை. அப்படி ஒரு சரியான அடிப்படையோடு இந்த வாதம் வைக்கப்படுமானால் நாம் இதைப் பரிசீலிக்கலாம். பரிசீலிக்கவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
அதோடு, இதில் இன்னொரு முக்கிய விஷயம். அணு உலைக்குத் தேவைப்படும் எரிபொருளான யுரேனியத்தை வெட்டியெடுப்பதற்கும், அதைச் செறிவூட்டுவதற்கும் ஆன செலவை இங்கே நாம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை. நியாயப்படி அதையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம், யுரேனியம் தாது பூமியிலிருந்து ஒன்றும் அப்படியே கட்டிக் கட்டியாகக் கிடைத்து விடுவதில்லை. பூமிக்கு அடியிலுள்ள பாறைகளிலிருந்து தங்கத்தை எப்படி வெட்டிப் பிரித்தெடுக்கிறார்களோ அதே போலத்தான் யுரேனியத்தையும் பிரித்தெடுக்க வேண்டும். சாதாரண தங்கம், ஒரு டன் அளவுள்ள பாறையை வெட்டி யெடுத்து சுத்திகரித்தால் 61 கிராம் தங்கமே கிடைக்கும் என்கிறார்கள். அதாவது .061 பங்கு. அப்படியிருக்க அதை விடவும் நிறை எண் மிகவும் கூடிய அரிதான இந்த யுரேனியம் ஒரு டன்னுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
அதோடு, இப்படிக் கிடைக்கிற யுரேனியம் 238 ஐ அப்படியே எரிபொருளாகப் பயன்படுத்த முடியாது, இதைச் செறிவூட்டி 235 ஆக மாற்றிதான் எரி பொருளாகப் பயன்படுத்த முடியும் என்றும், இதிலும் இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் 238, 99.28 பங்கும் யுரேனியம் 235, 0.72 பங்கும்தான் கிடைக்கிறது எனவே, பெருமளவிலான யுரேனியத்தை இப்படி 235 ஆக மாற்றிச் செறிவூட்டி தண்டு வடிவில் ஆக்கி வைத்துக்கொண்டால் மட்டுமே அது எரி பொருளாகப் பயன்படமுடியும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம்.
ஆகவே, இதற்காக ஆகும் செலவையும், அணுமின் தயாரிப்புக்கான செலவிலேயே கூட்டிச் சேர்த்துக் கணக்கிட வேண்டும். இப்படி எல்லாவற்றையும் சேர்த்து கூட்டிப் பார்த்தால் மட்டுமே அணுமின் சக்திக்கு ஒரு கி. வாட்டுக்கு எவ்வளவு செலவாகிறது, அது இதர அனல் புனல் மின் ஆற்றலைப் பெற ஆகும் செலவை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பது நமக்குப் புரியவரும். ஆனால் கெடுவாய்ப்பாக இதுவரை யாரும் அந்த மாதிரி ஒரு கணக்கை வைக்கவில்லை. அப்படி ஒரு கணக்கு வரட்டும்.பிறகு இந்த வாதத்தைப் பார்ப்போம்.
அணுசக்தி பாதுகாப்பானதா?
அடுத்து அணுசக்தியின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதங்களில் ஒன்று அணுசக்தி பாதுகாப்பானது. அதாவது அனல்மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும், புனல் மின் நிலையங்களில் உள்ள ஆபத்தை விடவும் அணுமின் நிலையங்களில் ஆபத்து குறைவு, அல்லது எதுவுமே இல்லை என்பதாகும்.
அனல் மின் நிலையங்களிலோ, அல்லது புனல் மின் நிலையங்களிலோ, மிஞ்சி மிஞ்சி என்ன ஆபத்து வரும்? அனல் மின் நிலையத்தில் மிகவும் அதிகம் போனால் ஒரு பாய்லர் வெடித்துச் சிதறலாம். புனல் மின் நிலையத்தில் மொத்தக் கட்டுமானமே கூட வெள்ளத்தால் அடித்துக் கொண்டு போகப்படலாம். ஆனால் இந்த இரண்டு விபத்தில் எது நடந்தாலும், அது அப்போதைக்கு பல உயிர் மற்றும் பொருள்சேதங்களோடு முடிந்துவிடுமே தவிர அதற்கு ஒரு தொடர் பாதிப்பு இருக்காது.
ஆனால் அணுமின் நிலையம் அப்படியல்ல. இதில் ஏற்படும் எந்த விபத்தும் தொடர் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. அப்படி ஏற்படும் விபத்துகளின் சாத்தியக் கூறுகளை வரிசையாகப் பார்ப்போம்.
1. அணு உலைகளில் பயன்படுத்தப்படும் தணிப்பான்கள் ஒழுங்காய் செயல்படாத நிலையில் ஒவ்வோர் அணு உலையும், ஓர் அணுகுண்டைப் போல வெடிக்கத் தயார் நிலையில் உள்ளன.
2. அணு உலையிலிருந்து வெளியேறும் அழுத்த நீர்க் குழாய், மிக உச்ச நிலை வெப்பத்தைத் தாங்கி வருவதால் அதில் கசிவோ, வெடிப்போ ஏற்பட வாய்ப்புண்டு.
3. இம்மாதிரி ஏற்படும் சிறு சிறு கோளாறுகளால் வெளிப்படும் கதிரியக்கம் அங்குப் பணிபுரியும் தொழிலாளர்கள் சுற்றுப்பகுதியில் வாழும் மக்கள் அத்தனை பேரையும் தலை முறைக்கும் பாதிக்கும்.
இவற்றையெல்லாம் நாமே கற்பனையாக எதுவும் சொல்லவில்லை. இதுவரை நிறுவப்பட்டு இயங்கிவரும் அணுமின் நிலையங்களின் அனுபவத்திலிருந்தே இவை சொல்லப்படுகின்றன.
உதாரணத்துக்குக் கல்பாக்கம் அணுமின் நிலைய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அந்நிலையத்திலேயே பணிபுரியும் டாக்டர் டி.வி. கோபிநாத் 29.10.88 இந்து செய்தித்தாளில் எழுதியுள்ள கட்டுரையைச் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம்
பொதுவான மின் நிலைய பாதுகாப்பு அம்சங்கள் பற்றி அவர் சொல்கிறார்:
சாதாரணமாய் 1000 மெ.வா. மின் உற்பத்தித் திறன் கொண்ட ஓர் அணுமின் உலை 10 இலட்சம் கியூரிகள் கதிரியக்கத் திறன் கொண்டது. இது தன் சுற்றுச் சூழலில் 108 ரெம் (rem) அளவு அதாவது10,00,00,000 ரெம் அளவு கதிர் வீச்சை வெளிப்படுத்தும். ஆனால் அங்கே பணி புரிபவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு அனுமதிக்கப் பட்ட கதிரியக்கம் 5 ரெம்தான். ஆகவே இக்கதிரியக்கம் பரவாமல் பாதுகாக்க கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று சொல்கிற அவர், இந்தப் பாதுகாப்பு உதாரணத்துக்குத் தாம் பணிபுரியும் கல்பாக்கம் அணு மின் நிலையத்தையே எடுத்துக் கொள்கிறார்.
அணுமின் உலை, அபாயகரமானது, அதாவது அணு குண்டுக்கு ஒப்பானது இல்லையா..? அதனால் எந்தக் கருவியும் எந்தக் கணத்திலும் பழுதடையாத வகையில் அதற்குத் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஏனெனில் மின்சாரம் தடைப்பட்டு ஏதாவது ஒரு சிறு கருவி இயங்காமல் போனாலும் அணு உலையின் வெப்பம் ஏறியது தெரியாமல் கிடந்து உலை வெடித்து விடும் அபாயம் உண்டு. ஆகவே இந்த மின்சாரத்தைத் தங்கு தடையின்றி வழங்க கீழ்க்கண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
1. ஆரணி, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மூன்று இடங்களிலிருந்தும் தனித்தனியாக மின் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒன்று கோளாறானாலும் ஒன்று செயல்பட்டு மின்சாரம் வழங்கும்.
2. அணுமின் நிலையம் முழுமைக்கும் தேவையான மின்சாரத்தைச் சப்ளை செய்யக்கூடிய 5 டீசல் ஜெனரேட்டர்கள் எந்த நேரத்திலும் உடனடியாக இயங்கும் வகையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவை மின் பழுது ஏற்பட்ட 10 விநாடிகளில் உடனே ஸ்டார்ட் ஆகி இயங்கக் கூடியவை.
3. இவையல்லாமல், சேமித்து வைக்கப்பட்ட மின்கலப் பெட்டிகள் மற்றும் மோட்டார் ஜெனரேட்டர்கள் வேறு தயார் நிலையில் உள்ளன.
இவையெல்லாம் மின் பழுதைச் சமாளிக்க... அடுத்து, அணு உலையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், அதாவது அணு உலையில் வெப்ப அளவு மீறி வெடிக்கும் அபாயம் ஏற்படுமானால் உலையின் இயக்கத்தில் தற்காலிகச் செயல் முடக்கம் (shut down) செய்வதற்காக - இந்தச் செயல் முடக்கம் என்பது கன நீரை உலைக்குள்ளிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது - இந்த வெளியேற்றத்துக்கு 100 சதவீதம் உத்தரவாதமான 6 அனுப்பு வால்வுகள் (dump valves), 3 மிகை வெப்ப வெளியேற்று வளைகள் (redunt loops) தயார் நிலையில் உள்ளன. இவையாவும் அசாதாரண நிலை ஏற்பட்டால் 7 விநாடிகளில் செயல்படத் தொடங்குவதோடு இவை தானியங்கும் தன்மை கொண்டதாகவும் நிறுவப்பட்டு உள்ளன.
அடுத்து, குளிரூட்டும் ஏற்பாடு. அணு உலையில் பயன் படுத்தப்படும் எரி பொருள் வெப்பமடையாமல் குளிரூட்டப் பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்காகக் கீழ்க்கண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதற்காக, 8 அடிப்படை வெப்ப மாற்று பம்புகள் (Primary Heat Transpose Pumps) நிறுவப்பட்டுள்ளன. இதில் 4 பம்புகள் எப்போதும் இயங்கும் நிலையில் உள்ளன. இதில் ஏதாவதொன்று பழுதானாலும் எஞ்சிய 4 பம்புகளில் ஏதாவதொன்றை பயன் படுத்திக் கொள்ளலாம். இது தவிர அவசரநிலையில் இயங்குவதற்காக டீசலில் இயங்கும் இரண்டு துணை பம்புகளும் நிறுவப்பட்டுள்ளன.
மேற்கண்ட எந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செயல்பட முடியாத மிகவும் இக்கட்டான நிலை எதுவும் ஏற்பட்டால் 7.5 மில்லியன் காலன் கொள்ளவு கொண்ட தீக்குளிர் நீர்(Fire-water) மூலம் குளிரூட்டுத் தன்மையை பெற முடியும். மொத்த நிலையத்தையும் குளிரூட்ட 4.5 மில்லியன் காலனே போதும் என்றாலும் எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் கூடுதலாகவே இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சரி. இது அனைத்துமே செயல்படாத மிக அசாதாரண, மிக ஆபத்தான ஒரு சூழ்நிலை ஏற்பட்டால்...என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கும் கட்டுரையாசிரியரே பதிலும் சொல்கிறார். எந்தத் தொழில் நுட்பமும் முழுமையாக நூற்றுக்கு நூறு பாதுகாப்பானதல்ல என்று சொல்லி மேலும் அவர் சொல்கிறார். அப்படி ஏதாவது ஆபத்து நேரும் பட்சத்தில், அணு உலையில் ஏற்படும் வெப்பமோ, கதிர்வீச்சோ பணியாளர்களையோ பொதுமக்களையோ பாதிக்காமல் பாதுகாக்கும் வகையில் அடுக்கடுக்கான மூன்று தடைகள் நிறுவப்பட்டுள்ளன. இந்த மூன்று தடைகளைத் தாண்டியும் கதிரியக்கம் வெளிப்படுமானால், அக்கதிரியக்கம் வெளிவராத வகையில், மிகவும் பாதுகாப்பான, இறுக்கமான, உலோகத்தால் ஆன அணுஉலை காப்புக் கருவி, எப்படிப்பட்ட அழுத்தமான வெப்ப நிலையிலும், அபாயகரமான விபத்து ஏற்பட்ட நிலையிலும் மொத்த அழுத்தத்தில் மணிக்கு 0.1 சதவீதத்துக்கு மேல் கசிவை வெளிப்படுத்தாத வகையில் நிறுவப்பட்டுள்ளது.
இதைச் சுற்றிலும், குறிப்பிட்ட இடைவெளி விட்டு இரண்டாவது பாதுகாப்பு உலோகக் கவசம் நிறுவப்பட்டுள்ளது. இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் ஏதாவது கதிரியக்கம் ஏற்படுகிறதா என்பதை இடைவிடாது கண்காணிப் பதற்கான கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. இதையும் தாண்டி ஏதாவது ஆபத்து ஏற்படுமாயின், இந்தியாவில் நிறுவப்படும் எந்த அணு உலையின் 1.6 கி.மீ. சுற்று வட்டாரத்திலும் மக்கள் வசிப்பைத் தடுக்கும் விசேஷப் பகுதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்துக்குச் சொந்தமான இடத்தில் பொதுமக்களது நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த 1.6 கி.மீ.க்கு அப்பால் 5 கி.மீ. சுற்று வட்டாரத்தில், மக்கள் நெருக்கத்தை மிகுதியாக்கும் தொழில்கள் தொடங்கு வதோ மிகையான மக்கள் குடியேற்றமோ தடைசெய்யப் பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பு அடுக்குகள் அனைத்தையும் கூறி, அணு உலை நிறுவப்படுவதற்கான இடம் தேர்வு, அணுஉலையில் நிறுவப்படும் கருவிகளின் தரம் தேர்வு, பணிபுரியும் பணியாளர்களின் திறமை தேர்வு முறை, அது அதற்கான கமிஷன்கள், அதற்கான அங்கீகாரங்கள் பற்றி யெல்லாம் சொல்லி, இவ்வளவு சிறப்பான ஏற்பாடுகள் இருக்க, அணுமின் நிலையங்கள் பற்றி அனாவசியமாய் அஞ்சத் தேலையில்லை என்கிறார் கட்டுரையாளர். சரி இருக்கட்டும்.
ஒப்பு நோக்கில் இதை மேட்டூர் புனல், நெய்வேலி அனல் மின் நிலையங்களின் உதாரணம் மூலமாகவே, அணுசக்தி எவ்வளவு பாதுகாப்பற்றது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம். மேட்டூர் நீர்மின் நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் மக்கள் வசிக்கத் தடை இல்லை. விசேஷப் பாதுகாப்புப் பகுதிகள் இல்லை. அங்கே சிறுசிறு தொழிற்சாலைகளும் மக்கள் நெருக்கமும் மிகுதியாகவே உள்ளன. அதே போலத்தான் நெய்வேலியும். அங்கே சுரங்கத்தின் பக்கத்திலேயே அனல் மின் நிலையம். அதற்குச் சுற்று வட்டாரத்தில் 100 மீட்டருக்குள்ளேயே பேருந்துஸ் நிலையம், கடை, கடைத் தெருக்கள், குடியிருப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. இதே போலவே பேசின் பிரிட்ஜ் பகுதியும்.
ஆனால், அணு மின் நிலையம் நிறுவப்பட்டுள்ள கல்பாக்கத்தில் அப்படியில்லை என்று கட்டுரை ஆசிரியரே குறிப்பிடுகிறார். ஆக, கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள பாதுகாப்பு அடுக்குகளின் வரிசையைக் கொண்டே அணுமின்சக்தி எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அடுத்து, இடத்தேர்வு, கருவித்தேர்வு, பணியாளர் தேர்வுக்கான கமிஷன்கள் அல்லது நியமனக் குழுக்கள்.... ஊழலும், தனி நபர் செல்வாக்கும் மலிந்த இந்த சமூக அமைப்பில் இப்படிப்பட்ட கமிஷன்களும் நியமனக் குழுக்களும் எவ்வளவு பொறுப்புணர்ச்சியோடும் அக்கறையோடும் செயல்படும், படுகின்றன என்று சொல்லத் தேவையில்லை. இராணுவ பீரங்கி, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு என்ன முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதைக் காட்டிலும் எந்த வகையிலும் அதிக முக்கியத்துவம் அணுமின் நிலையங்களுக்கு தரப்பட்டுவிடாது என்று மட்டும் நாம் நிச்சயமாக நம்பலாம்.
அடுத்து, எல்லாமே உருப்படியாய் நடப்பதாகக் கொண்டாலும் கூட, கண நேரத்தில் ஏற்படும் ஓர் அசாதாரண விபத்து, அதாவது ஒரு நில நடுக்கம் அல்லது ஆழிப் பேரலை ஆகியன இந்த ஏற்பாடுகள் எல்லாவற்றையுமே ஒரு நொடியில் தகர்த்துத் தரைமட்டமாக்கிவிடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இங்கே சிலர் ஒரு கேள்வி கேட்கலாம். ஆபத்து எதில்தான் இல்லை? சாலையில் நடந்து போனால் கூடத்தான் விபத்து ஏற்படுகிறது. அதற்காகச் சாலையில் நடக்காமலே இருக்க முடியுமா..? இரயிலில் விமானத்தில் கூடத்தான் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்காக இவற்றில் பயணமே செய்யாமலே இருக்க முடியுமா என்று... நியாயம். விபத்து எங்கும்தான் நடைபெறுகிறது. ஆனால் மற்ற விபத்துகளின் தன்மை வேறு. அணுச்சக்தியின் கதிரியக்கத் தன்மை காரணமாக ஏற்படும் விபத்தின் தன்மை வேறு.
மற்ற விபத்துக்களினால் ஏற்படும் பாதிப்பு விபத்துக் காலத்தோடு விபத்து நடந்த இடத்தோடு முடிவடைந்து விடுகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் விபத்து பல நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர்கள் சுற்று வட்டாரத்துக்கு, பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடித்து நின்று மனித குலத்தைத் தலைமுறை தலைமுறைக்கும் தாக்கி அல்லது அச்சுறுத்தி வருவது.
தவிர, மற்ற விபத்துகள் கண்ணுக்குத் தெரிந்த அபாய அறிகுறிகளோடு வருகிறது. ஆனால் அணு சக்தியினால் ஏற்படும் கதிரியக்க அபாயம் கண்ணுக்குத் தெரியாத மாயா சக்தி போல வருவது. மனிதனைச் சிறுகச் சிறுக அரித்துத் தின்று சாக அடிப்பது.
அதோடு விபத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று மனிதக் கோளாறு காரணமாக நிகழ்வது. மற்றொன்று எந்திரக் கோளாறு காரணமாக நிகழ்வது
ஓர் இரயில் விபத்தில் ஒரு பாயின்ட்ஸ்மேன் பாயின்டை மாற்றி அடித்ததால் அவ்விபத்து நேர்ந்திருந்தால் அது மனிதக் கோளாறால் ஏற்பட்ட விபத்து. இதுவே அவன் பாயின்டைச் சரியாக அடித்தும் பாயின்ட் விழாமல், இரயில் செல்ல வேண்டிய தண்டவாளத்தில் செல்லாமல் வேறு தண்டவாளத்தில் சென்று விபத்து நேர்ந்து விட்டால் அது எந்திரக் கோளாறு.
பல சந்தர்ப்பங்களில் எந்திர விபத்து ஏற்பட்டால் கூட மனிதனின் சாதுர்யமான சமயோசித புத்தி காரணமாகப் பல விபத்துக்களைத் தவிர்க்க முடியும்; தவிர்க்கப்பட்டிருக்கின்றன. முற்றாகத் தவிர்க்க முடியாவிட்டால் கூட குறைந்தபட்சம் சேதாரங்களையாவது குறைக்க முடியும்; குறைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அணுஉலை விபத்து என்பது மனித விபத்தும் அல்ல. எந்திர விபத்தும் அல்ல. இது தொழில் நுட்பக் கோளாறுகளால் நேரும் விபத்து.
காரணம், அணு உலையில் பணிபுரியும் மனிதன் 100% சரியாகப் பணியாற்றினாலும், அணுஉலையில் நிறுவப்பட்ட எந்திரங்கள் 100% சரியாகவே இயங்கினாலும், அணுஉலை, உருகவோ, வெடிக்கவோ, அல்லது வெப்ப வெளியேற்றுக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்பட வாய்ப்புண்டு. இந்தக் கோளாறுக்குக் காரணமாக யார் மீதும் பழியைப் போட முடியாது. ஏனெனில் அது இயற்கை. அணுஉலையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் தனிமத்தின், அத் தனிமத்தின் அணுக்கருவைப் பிளப்பதால் ஏற்படுவதன் இயற்கையான விளைவு.
இந்த இயற்கை யாருக்கும் கட்டுப்பட்டதல்ல. அணு உலையிலிருந்து வெளிவரும் வெப்பமும் கதிர்வீச்சம் தவிர்க்கப் பட முடியாதவை. கட்டுப்படுத்தப்பட முடியாதவை. எனவே இந்த இயற்கைக்காக யார் மேலும் பழி போடமுடியாது. யாரையும் குறை சொல்லவும் முடியாது. ஏனெனில், அணுக்கருப்பிளப்பின்போது வெளிப்படும் வெப்ப ஆற்றல் கதிர்வீச்சுடனே பிறக்கிறது. இந்தக் கதிர்வீச்சு இல்லாமல் வெளிப்படும் வெப்ப ஆற்றலை, அல்லது அப்படிப்பட்ட வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும் அணுக்கருப் பிளவை இதுவரை விஞ்ஞானம் காணவில்லை. எதிர்காலத்திலும் காண சாத்தியமா என்பதும் சந்தேகமே.
காரணம், பூமிக்கு ஈர்ப்புவிசை உண்டு என்பது எப்படி உண்மையோ, சூரியன் வெப்ப ஆற்றல்களை வெளியிடுகிறது என்பது எப்படி உண்மையோ, கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றன என்பது எப்படி உண்மையோ, அப்படியே அணுக்கருப் பிளவின்போது வெப்பமும் கதிர்வீச்சும் வெளிப்படுகின்றன என்பதும் உண்மை. காரணம் அது இயற்கை.
பூமியின் ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடிந்தால், சூரியனின் வெப்ப ஆற்றலைக் கட்டுப்படுத்த முடிந்தால், கோள்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிந்தால்... அப்போது மட்டுமே அணுவின் கதிரியக்கத்தையும் கட்டுப் படுத்த முடியும். ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவற்றையெல்லாம் அவநம்பிக்கையின் காரணமாகப் பேசுவதாக யாரும் கருதக் கூடாது.
நம்முடைய கவலையெல்லாம் விஞ்ஞானம் இதற்கு விடை காணாமல், அணுமின் தயாரிப்பில் இறங்குவது ஆபத்தானது, மனிதகுலத்தின் எதிர் காலத்தையே பணயம் வைப்பது, என்கிற நிலையில் இத்தொழில் நுட்பத்தைச் செயலாக்க முனைவது முறையானதுதானா என்பதுதான் கேள்வியே தவிர, அணுச்சக்திப் பணியாளர்களையோ, அணுமின் நிலைய எந்திரங்களையோ இவற்றின் திறமைகளையோ குறை கூறுவதாக அர்த்தம் கிடையாது. நமது நோக்கமும் அதுவல்ல.
இது ஒரு அபாயகரமான தொழில் நுட்பம் என்பதே நம் வாதம். எனவே, அந்தத் தொழில் நுட்பத்தையே நாம் குறை கூறுகிறோமே தவிர வேறு யாரையும் அல்ல.
இதற்கு ஒரு சரியான தீர்வு காணாத வரை ‘அணுசக்தி’ பாதுகாப்பானது என்கிற வாதம் அர்த்தமற்றது. அபாயகரமானது என்பதே நம் கருத்து.
அணு சக்தியின் தூய்மை, நம்பகத்தன்மை குறித்து அடுத்து பார்ப்போம்.
- இராசேந்திர சோழன் (
- விவரங்கள்
- நா.ராஜேந்திர பிரசாத்
- பிரிவு: தொழில்நுட்பம்
கதிரியக்கமானது மின்காந்த ஆற்றல் (உ.ம்: காமா மற்றும் எக்ஸ் - கதிர்கள்) மற்றும் துகள் கதிர்களால் (உ.ம்: நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்கள்) ஆனது. கதிரியக்கம் அது செல்லும் பாதையில் உள்ள பொருட்களின் மீது ஆற்றலைக் குவித்து அயனியாக்கம் செய்கிறது.
கதிரியக்கம் உயிரினங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. கதிரியக்கம் உயிரியல் மூலக்கூறுகளை தாக்கி சேதப்படுத்துகிறது. மிக முக்கியமாக மரபணு மூலக்கூறுகளான நியூக்ளிக் அமிலங்களை (DNA) நேரடியாகவோ (கதிரியக்க ஆற்றலை நியூக்ளிக் அமிலங்களின் மீது குவித்து சேதப்படுத்துதல்) மறைமுகமாக செல்களில் உள்ள நீரினை நீராற்பகுத்து தனிநிலை மூலக்கூறுகளை (DNA) உருவாக்குவதன் மூலமாகவோ சேதமடையச் செய்கிறது.
கதிரியக்கம் உண்டாக்கிய நியூக்ளிக் அமில சேதமானது செல்களில் தன்னிச்சையாக இயற்கையான முறையில் சரிசெய்யப்படுகிறது. கதிரியக்கம் உருவாக்கிய DNA சேதம் செல்களின் சரிசெய்யக்கூடிய அளவினைத் தாண்டும்பொது மரபணுவில் நிரந்தரமான முடக்கம் (mutation) ஏற்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் வருவதற்கு வகை செய்கிறது. இது பெரும்பாலும் கதிரியக்கம் தொடர்ச்சியாக உயிரினங்ககளின் மீது பாய்ச்சப்படும்போது நிகழ்கிறது.
கதரியக்கம் புற்றுநோயை உருவாக்குகிறது என்ற போதிலும் அதே கதிரியக்கமானது (உ.ம்: X -கதிர்கள்ஃ கொபால்ட் கதிர்கள்) பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. சுமார் 80 சதவிகித புற்றுநோயாளிகள் அறுவைசிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் (chemotherapy) மட்டுமல்லாது கதிரியக்க சிகிச்சையும் மேற்கொள்கின்றனர். புற்றுநோய்க்காக கொடுக்கப்படும் கதிரியக்கத்தின் பக்கவிளைவாக இரண்டாம்வகை புற்றுநோயினை உருவாக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது. முக்கியமாக கதிரியக்கமானது இரத்தப் புற்றுநோயை உருவாக்குகிறது.
எல்லா செல்களிலும் கதிரியக்கம் ஒரே மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. கதிரியக்கமானது உடலின் வெவ்வேறு உறுப்புகளில் வெவ்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக மிக விரைவான வளர்ச்சித்திறன் கொண்ட செல்களான இரத்த செல்கள் (குறிப்பாக வெள்ளையணுக்கள்) மற்றும் எலும்பு மஜ்ஜை செல்களில் மிக அதிக விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து விந்தணு செல்கள் மற்றும் குடல் எபீதிலிய செல்கள் கதிரியக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. விந்தணுக்களின் எண்ணிக்கையை கதிரியக்கம் வெகுவாக குறைக்கிறது. இது மலட்டுத் தன்மைக்குக் காரணமாகிறது. குடல் எபிதிலிய செல்கள் கதரியக்கத்தால் வெகுவாக பாதிக்கப்படுவதால் இந்த செல்களில் உணவு மற்றும் ஊட்டங்களை உறிஞ்சும் ஆற்றல் குறைகிறது. இதனால் கதிரியக்கம் தாக்கப்பட்ட மனிதனின் பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் மற்றும் நரம்பு செல்கள் மிக அதிக அளவில் கதிரியக்கத்தால் பாதிக்கப்படுகிறது.
ஒருமுறை கதிரியக்கம் உடலில் செலுத்தப்பட்டாலும் அது அதனுடைய விளைவுகளை உடலில் உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ உயிர்வாழ்வினங்களில் ஏற்படுத்துகிறது. சில உடனடி விளைவுகளான வாந்தி, மயக்கம், காய்ச்சல் மற்றும் இரத்த செல்களில் மாறுபாடு, சிறுகுடல் புண், எலும்பு மஜ்ஜை சேதம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
இதைத்தவிர கதிரியக்கமானது நீண்ட கால விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடியது. கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக உட்படும்பொது இரத்தப் புற்றுநோய் (leukemia), எலும்பு புற்றுநோய், தைராய்டு சுரப்பி புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகியவை உருவாகின்றது. மேலும் கதிரியக்கத்தால் மரபணு செல்களில் ஏற்படும் மாற்றமானது குறைபாடுகளுடன் உடைய குழந்தைகள் பிறக்கக் காரணமாகின்றது. விரைவாக வளரும் கருவின் செல்கள் கதிரியக்கத்தின் தாக்குதலுக்கு வெகுவாக உட்படுகிறது. கர்ப்பிணிகள் கதிரியக்கத்தின் தாக்குதலக்கு உள்ளாகும்போது உடல் வளர்ச்சிக் குறைபாடு மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் இந்தக் குழந்தைகள் எதிர்காலத்தில் எளிதாக புற்றுநோயின் தாக்குதலுக்கு உட்படுகின்றன.
நியூக்ளியர் அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் மக்கள் கதிரியக்கத்தின் தாக்குதலால் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அணு உலைகளிலிருந்து வெளியேறும் கதிரியக்க சீசியம் மற்றும் கதிரியக்க அயோடின் போன்றவை அணு உலைகளுக்கு அருகாமையில் வசிக்கும் உயிரினங்களில் மிக அதிக அளவில் பாதிப்புகளை நிச்சயமாக உருவாக்கும்.
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
அணுகுண்டு தயாரிப்பும், அணுமின் உற்பத்திக்காக வெப்பத்தை உற்பத்தி செய்யும் அணு உலையும் அடிப்படையில் ஒரே தத்துவத்தைக் கொண்டது என்றும், அணுகுண்டு என்பது கட்டுப்பாடற்ற ஒரு முழு வீச்சான செயல்முறை என்றும், ஆனால் அணு உலையில் இந்தக் கட்டுப்பாடற்ற இயக்கத்தைக் கட்டுப்படுத்தவே தணிப்பான்கள் (Moderators) பயன்படுத்தப்படுகின்றன என்றும் ஏற்கெனவே பார்த்தோம். இந்த தணிப்பான்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் ஒவ்வோர் அணு உலையும், ஒவ்வோர் அணு குண்டுக்கு ஒப்பானதுதான் என்று சொல்லலாம்.
இன்று உலகில் அணுசக்தித் தொழில் நுட்பம் எவ்வளவோ வளர்ந்திருப்பதாகவும், மேலும் மேலும் பாதுகாப்பான, பல புதிய வடிவமைப்பில் அணு உலைகள் தயார் செய்யப்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்றாலும், அதன் அடிப்படை எரிபொருளாகப் பயன்படுத்தப்படும் பொருளின் அணுக் கருவை நியூட்ரான் துகள்களைக் கொண்டு தாக்கி, தொடர் நிகழ்வினை உண்டுபண்ணி, அதன் மூலம் அளவு கடந்த வெப்பத்தை உருவாக்குவதே; அந்த வெப்பத்தைக் கொண்டு வெளிக் குழாயில் உள்ள நீரை ஆவியாக்கி, அதன் மூலம் டர்பைனை இயக்கி ஜெனரேட்டரைக் கொண்டு மின் சக்தியைப் பெறுவதே.
இதில் எவ்வெவ்வகையான வடிவமைப்புகள் கொண்ட அணு உலைகள், எவ்வெவ் வகையில் செயல்படுகின்றன என்கிற உள்ளார்ந்த தொழில் நுட்பங்கள் பற்றிய விவரங்களைப் போதுமான அளவு நாம் அறிய வாய்ப்பில்லை என்றாலும் இன்று பத்திரிகை, மற்றும் இதழ்களில் வெளி வந்திருக்கும் விவரங்களைப் பார்க்க, அணுசக்தித் தயாரிப்பு என்பது மூன்று வகை உலைகளில் நடைபெறுவதாகப் புலனாகிறது.
1. யுரேனியம் 235ஐ எரிபொருளாகக் கொண்டு செயல்படும் அணு உலை இது. இது 440 மெகாவாட் திறன் கொண்டதும், 1000 மெகாவாட் திறன் கொண்டதுமான இரண்டு வகைப்பட்டதாக வடிவமைக்கப்படுகிறது. இதில் கன நீரை தணிப்பானாகப் பயன்படுத்துவது Water Electricity Reactor - WER எனப்படுகிறது. இத்துடன் நீரைக் குளிர்விப்பியாகவும் தணிப்பானாகவும் கொண்ட Water Cooled Water Moderated Energy Reactor என்னும்ஒரு வகையும் செயல்படுத்தப் படுகிறது. இதுவே, WWER எனவும், VVER எனவும் அழைக்கப் படுகிறது. மற்றொன்று, கிராஃபைட்-ஐத் தணிப்பானாகப் பயன்படுத்துவது. இது RBMK என அழைக்கப் படுகிறது. இந்த அணு உலை ருஷ்யத் தொழில் நுட்ப அடிப்படையில் செயல்படுவதாகும்.எனவே ஆங்கிலத்தில் High Power Channel Type Reactor என அழைக்கப்படும் இது ருஷ்ய மொழியில் Reaktor Bolshoy Moschnosti Knalniy-RBMK என அழைக்கப்படுகிறது. செர்னோபில் விபத்துக்குள்ளானது இவ்வகை அணு உலையே என்றும் அதனால் அதனின்றும் பாதுகாப்பாக வடிவமைக்கப் பட்டதே (VVER) அணு உலை எனவும் சொல்லப்படுகிறது.
2. யுரேனியம் 235ஐ எரிபொருளாகப் பயன்படுத்தும், முதல்வகை அணு உலைகளில் ஏற்படும் கழிவான புளூடோனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்துவது இரண்டாவது வகைப்பட்ட உலையாகும். இது முதல் வகைப்பட்ட அணு உலையை விடவும் அதிக அளவு ஆற்றலையும் வெப்பத்தையும் தர வல்லது. இதை அதிவேக ஈனுலைகள் (Fast Breeder Reactor -சுருக்கமாக FBR) என்கிறார்கள். இந்தத் தொழில் நுட்பம் இதுவரை எந்த நாட்டிலும் வெற்றிகரமாக, அதாவது இடையூறின்றியும், விபத்தின்றியும், பாதுகாப்பாகவும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. அடிக்கடி பணி முடக்கம், சிறு சிறு விபத்துகள், கசிவுகள் என்பன சாதாரண நிகழ்ச்சிகளாகிப் போய், இப்படிப்பட்ட இடையூறுகளுடனேயே இவை இயங்கி வருகின்றன.
3. இரண்டாவது வகை அணு உலைகளில் அதாவது FBR உலைகளில் வெளிப்படும் கழிவுகளான, எரிபொருளாகப் பயன்படாது போன, ப்ளூட்டோனியம் மற்றும் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம் - 233. இவற்றில் தோரியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை இந்த மூன்றாவது வகைப்பட்டதாகும். இது இன்னும் எந்த அளவுக்கு நடைமுறையாக்கப்பட்டுள்ளது என்றும், இப்படிப்பட்ட உலைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
ஆனால், எந்த ஓர்அணு உலை வடிவமைப்பிலும், அந்த அணு உலையில் பயன்படுத்தும் தணிப்பான் அணு உலை வெப்பத்தைத் தாங்கி வெளிவந்து சாதாரண நீருக்கு தந்து, செல்லும் குழாயில் பயன்படுத்தப்படும் நீர், அணு உலையில் பயன்படுத்தப்படும் எரிபொருள், இவற்றின் தன்மை அல்லது பயன்பாட்டு முறைக்கேற்ப இவற்றிற்கான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இது பற்றிய உள் விவரங்களைத் தெரிந்து கொண்டு அணு உலைகளை, அவற்றின் இயக்க முறைகளுக்கு ஏற்ப வகைப்பிரிவு செய்யப் போதுமான விவங்களை ஆராய வேண்டியுள்ளது. ஆராய்வோம்.
ஆனால், எல்லா உலைகளுக்கும் பொதுவானது என்று இதுவரை வளர்ந்து வந்துள்ள விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது பொதுவாக ஒன்று உண்டு. அந்தத் தொழில்நுட்பம், அணுசக்தி உற்பத்தியில் இதுவரை தொட்டுள்ள எல்லைகள், தொடாத எல்லைகள் எது என்பதே இத்தொழில் நுட்ப விஷயத்தில் பிரதானமாய் நமக்கு முன் உள்ள கேள்வி.
முதலாவதாக, அணுக் கருப் பிளவு என்பது அளவு கடந்த, அபரிதமான வெப்ப ஆற்றலை மட்டும் தரவில்லை. மாறாக, அது அபாயகரமான அழிக்க முடியாத கதிரியக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. எனவே, இன்றுள்ள அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது கதிரியக்கமற்ற அணுக் கருப் பிளவு பற்றியோ, அணுசக்தியைப் பற்றியோ பேசவில்லை. மாறாக, கதிரியக்கத்தோடு கூடிய வெப்ப ஆற்றலைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எனவே, எப்படிப்பட்ட வடிவமைப்பு கொண்ட உலை யானாலும், அது எவ்வளவு நவீனத் தன்மை கொண்ட தானாலும், அது பேசுவதெல்லாம் இந்தக் கதிரியக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்பது பற்றி மட்டும்தானே தவிர, கதிரியக்கமே இல்லாத அல்லது தோன்ற முடியாத ஒரு தொழில் நுட்பத்தைப் பற்றி அது பேசவில்லை.
காரணம், இக் கதிரியக்கம் என்பது அத்தனிமத்தின் இயற்கைப் பண்பு. அதாவது, பழுத்த பழம் மணம் வீசுவதைப் போல, ஒரு குறிப்பிட்ட அணுப் பொருண்மை கொண்ட தனிமங்களெல்லாம் இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. இயற்கையில் மிக மெதுவான, சீரான, பரவலான அளவில் உள்ள இக்கதிரியக்கம் அணுக்கருப் பிளவின் போது அபரிமிதமாகவும், ஒருங்கு குவிக்கப்பட்டதுமாகவும்,ஒரே நேரத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. எனவே இது கட்டுப்பாடற்றதாக, தடுத்து நிறுத்த முடியாததாக இருக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
இரண்டாவதாக, இக்கதிரியக்கத்தை அழிக்க முடியாது என்று சொல்வதன் காரணம், அது ஆற்றலின் அழியாமை விதி போல, ஓர் ஆற்றல் இன்னோர் ஆற்றலாக உடனடியாக மாற்றப்படுவது போல, இக்கதிரியக்க ஆற்றலை உடனடியாக வேறு ஓர் ஆற்றலாக மாற்றிவிட முடியாது என்பதுதான்.
உதாரணமாக, கதிரியக்கம் பரவிய சுற்றுச் சூழலில் இக்கதிரியக்கம் சுற்றிலுமுள்ள உயிரினங்களை, மனிதர்களை, விலங்குகளை, தாவரங்களைப் பாதிக்கும்; காற்றைப் பாதிக்கும். இதிலிருந்து மறைந்து கொள்வது அல்லது ஒளிந்து கொள்வது, தப்பித்துக் கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. காரணம், இது கனமான கான்க்ரீட் கட்டடங்களையும் தாண்டி ஊடுருவ வல்லது. அதுவும் சாதாரண வேகத்தில் அல்ல, ஒளியின் வேகத்தில் நம் கண்ணுக்குத் தெரியாமல்.
இப்படிப் பரவிய கதிரியக்கமானது ஏதோ சில மணிநேரம் அல்லது ஒரு நாள் இரண்டு நாள் கிடந்து பிறகு மறைந்துபோய் விடுமா? விடாது. மண்ணில் பரவிய கதிரியக்கம் அது முளைக்கும் புல்லில், அந்தப் புல்லைத் தின்னும் மாட்டில், அது கறக்கும் பாலில், அதன் இறைச்சியில், இப்படித் தாவித் தாவி மாறிக்கொண்டே உயிருடன் இருக்கும். சரி. இப்படி உயிராயிருக்கிறதே என்று எரித்துத் தொலைக்க முயன்றாலும் அது காற்றில் கலந்து நம் சுவாசத்தில் கலந்து உள்ளே புகுந்துவிடும். அந்த அளவுக்கு அபாயகரமானது இந்தக் கதிரியக்கம். கதிரியக்கத்தின் இப்படிப்பட்ட அபாயம் பற்றி இன்றுள்ள எந்த விஞ்ஞானமும் மறுக்கவில்லை.
அடுத்து, இப்படியெல்லாம் அபாயம் நிறைந்த ஒரு அணுசக்தி நிலையத்தைக் கட்டி முடிக்க 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும் என்கிறார்கள். அதாவது இது அடிக்கல் நாட்டியதிலிருந்து, அணு உலையைக் கட்டி முடித்து அது செயல்படத் துவங்கும் தன்மையை எட்டுவது வரை உள்ள காலப்பகுதியாகும். இப்படி ஓர் அணு உலை செயல்பாட்டு நிலையை அடைவதை Critical Stage என்கிறார்கள். இந்த நிலையை அடைந்தபிறகே ஒரு அணு உலை செயல்படத் துவங்கும். அதாவது எரிபொருளைப் பிளந்து வெப்பத்தை வெளிப்படுத்தும் பணியைத் துவங்கும்.
இப்படிப்பட்ட பணி துவங்கியபின் அது எத்தனை ஆண்டுகள் செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? 25 முதல் 30 ஆண்டுகள் வரை மட்டுமே. அதற்கு மேல் இவ்வுலை இயங்க முடியாதாம். வேறு உலைதான் கட்ட வேண்டுமாம்.
சரி. இந்த உலை பயன்படாது என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு வேறு உலை கட்ட முடியுமா என்றால் அதுவும் முடியாது. பயன்படுத்திய உலை அபரிதமான கதிரியக்கத் திரட்சிக்கு உள்ளானதாயுள்ளதால், அதன் மீது மிக மிக கனமான கான்கீரிட் சமாதி கட்டி அதைப் பாதுகாப்பாக மூடித்தான் அதன் அபாயத்தைத் தணிக்க முடியுமாம். இப்படித் தணிக்காவிட்டால் அது ஏற்படுத்தும் விளைவுகள் அபாயகரமானதாய் இருக்குமாம்.
சரி. இப்படி 15 - 20 ஆண்டு கால சிரமத்தில் உருவாக்கி 25 - 30 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தி மீண்டும் சமாதியாக்கிக் கல்லறை கட்டப்பட வேண்டிய நிலையில் உள்ள இந்த அணு உலை, அது செயல்படும் நாளிலாவது அபாயமின்றி இருக்குமா என்றால் அதுவும் இருக்காது. காரணம், அணு உலை செயல்படும்போது, முறைப்படுத்தி சரியாய் இயங்காவிட்டால் அணு உலை அணுகுண்டாய் மாறும் அபாயம் இருக்கிறது.
அணு உலையிலிருந்து வெப்பத்தைத் தாங்கி வெளிவரும் குழாய் வெப்ப வரம்பைத் தாண்டும் நிலை ஏற் பட்டால் வெடிப்போ கசிவோ ஏற்படும் அபாயம் இருக்கிறது. இக் குழாயைக் குளிரூட்டும் எந்திரம் பழுதடைந்தாலோ, வேறு காரணங்களால் செயல்படாமல் போனாலோ, வெப்பம் மிகையாகி அது ஏற்படுத்தும் அபாயம், ஆக இப்படிப்பட்ட அபாயங்களோடு கூடியதுதான் இந்த அணுசக்தித் தொழில் நுட்பம்.
எல்லாத் தொழில் நுட்பமுமே அபாயமுள்ளதுதான் என்று சிலர் கருதலாம். ஆனால் மற்றத் தொழில்நுட்ப அபாயங்கள் ஏற்படுத்தும் விளைவுகள் வேறு. அணுசக்தித் தொழில் நுட்பம் ஏற்படுத்தும் அபாயம் வேறு. மற்ற தொழில் நுட்ப அபாயம் சில மணிநேரம் அல்லது சில நாள் மட்டுமே இருந்து மறைந்து போவது. ஆனால் அணுசக்தித் தொழில்நுட்ப அபாயம் ஆண்டுக் கணக்கில் பல்லாண்டு காலம் நீடிப்பது. மனித குலத்தையே தலைமுறை தலைமுறைக்கும் நசிப்பது, முடமாக்குவது, முற்றாக அழிப்பது, ஊனப்படுத்துவது.
இதில், இப்படிப்பட்ட விபத்துகள் நேர வாய்ப்பில்லை என்றுதான் அணுசக்தித் தொழில்நுட்பம் கூறுகிறதே தவிர அணுசக்தி வல்லுநர்கள் கூறுகிறார்களே தவிர, இப்படிப்பட்ட அபாயங்கள் எதுவுமே கிடையாது என்று எவரும் கூறவில்லை.
இப்படிப்பட்ட அபாயங்களோடு செயல்படும் அணு உலை, அது செயல்படுவதால் வெளிப்படுத்தும் கழிவுப் பொருள்கள் பற்றிய அபாயம் ஒருபுறம். உதாரணமாக, யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தும் அணு உலை புளூட்டோனியத்தைக் கழிவாகத் தருகிறது. இதுவும் கடுமையான கதிரியக்கத் தன்மை உடையது. எனவே கதிரியக்கத்தால் ஏற்படும் எல்லாவித ஆபத்துகளையும் இதுவும் தோற்றுவிக்கிறது. எனவே இந்தக் கழிவை என்ன செய்வது என்று தெரியாமல் பல நாடுகள் திண்டாடிக் கொண்டிருக்கின்றன.
இதை உலோகப் பெட்டிகளிலும், பீப்பாய்களிலும் அடைத்து பூமிக்கு அடியில் ஆழக் குழி தோண்டிப் புதைக்கின்றனர். அல்லது இதை ஆழ் கடலுக்குள் தள்ளுகின்றனர். இப்படி இந்தக் கழிவை அப்புறப்படுத்துவதை அல்லது பாதிப்பற்றதாக அதாவது வீரியத்தைச் செயலிழக்கச் செய்வதான முயற்சியை Decommissioning என்கிறார்கள். எனவே அணு உலை என்பது அதன் உருவாக்கத்தோடு கூடவே அதைச் ‘செயலிழக்கச் செய்தல்’ என்பதும் ஒரு பெரிய பிரச்சினையாகவே இருந்து வருகிறது.
ஆக, இதுவரை வளர்ந்துள்ள அணுசக்தித் தொழில் நுட்பம் என்பது,
1. அணு உலைகளில் நிகழும் அணுப் பிளவு காரணமாக ஏற்படும் அபாயகரமான கதிரியக்கத்தை மறுக்கவில்லை.
2. அணு உலை செயல்படும் காலங்களில் அணு உலை உருகுதலோ அல்லது வெப்ப வெளியேற்றக் குழாய்களில் வெடிப்போ கசிவோ ஏற்படும் ஆபத்தை மறுக்கவில்லை.
3. அணு உலைகள் அபாயகரமான கதிரியக்கத் தன்மையுள்ள கழிவுகளை வெளிப்படுத்துகின்றன என்பதையும், இக் கழிவுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் மனித குலத்துக்குப் பிரச்சினையாய் இருந்து வரும் என்பதையும் மறுக்கவில்லை.
எனவே, இதரத் தொழில்நுட்பங்களை நோக்க அணுசக்தித் தொழில்நுட்பம் என்பது 1. அதன் கட்டுமானத்தில், 2. அதன் செயல்பாட்டில், 3. அது உண்டாக்கும் அபாயத்தில், இது எல்லாவற்றிலுமே முழுக்க முழுக்க வேறானது, வித்தியாசமானது, அது நம் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதது. நம்மால் கட்டுப்படுத்த இயலாதது என்பதை நாம் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம் அணுஆற்றலின் அதாவது அணுக்கரு ஆற்றலின் சாதக பாதகங்கள் பற்றி ஆராயவும் வேண்டும்.
- இராசேந்திர சோழன்
- விவரங்கள்
- இராசேந்திர சோழன்
- பிரிவு: தொழில்நுட்பம்
இதுவரை அணுக்கருப் பிளவு, அப் பிளவினால் வெளிப் படும் ஆற்றல், கதிரியக்கத்தினால் வெளிப்படும் கதிர் வீச்சு, அதன் பண்புகள் பற்றி ஓரளவு பார்த்தோம்.
இனி அணுகுண்டு எவ்வாறு செயல்படுகிறது, அணு உலை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஓரளவு பார்ப்போம்.
அணுகுண்டு என்பது அணுக் கருச் சக்தியைக் கொண்டு அதாவது அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் வெளிப்படும் ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது என்று நமக்குத் தெரியும்.
இந்த அடிப்படையில் யுரேனிய அணுக் கருவின் மீது நியூட்ரான் துகள்களை அதிவேகமான பாய்ச்சலோடு செலுத்தித் தாக்குதல் தொடுக்கிறார்கள். இந்த நியூட்ரான் துகள்கள், யுரேனிய அணுக்கருவைப் பிளந்து, அதிலுள்ள துகள்களை அதே துரித வேகத்தில் வெளிப்படச் செய்கிறது. அதே சமயம் அணுக் கருப் பிளப்பினால் உண்டான நியூட்ரான் துகள் களிலிருந்து ஏராளமான ஆற்றல் பிறக்கிறது. யுரேனியத்தின் அணுக் கருவிலிருந்து பேரியம் மற்றும் கிரிப்டான் ஆகியவற்றின் இரண்டு அணுக்கருக்கள் உண்டாகின்றன. கூடவே சில நியூட்ரான்களும் 20 கோடி எலக்ட்ரான் வோல்ட் ஆற்றலும் வெளிப்படுகிறது. இவ்வணுக் கருப்பிளவின் மூலம் உண்டான நியூட்ரான் தொடர்ந்து யுரேனியத்தின் அடுத்தடுத்த அணுக் கருக்களைத் தாக்க மேற்கூறியவாறு ஒரு தொடர் நிகழ்வை ஏற்படுத்துகிறது.
இந்தத் தொடர் நிகழ்வு வெறும் சாதாரண ஒரு சங்கிலித் தொடர்போல் அல்லாமல் பல கிளைகளாகக் கிளைத்துப் பரவுகிறது. உதாரணமாக ஒரு நியூட்ரான் துகள் தாக்கி மூன்று நியூட்ரான்களை உருவாக்குகிறது என்று சொன்னால் அந்த மூன்று நியூட்ரான்களிலும் அதன் இருமடிப் பெருக்கமாக ஒன்பது நியூட்ரான்களையும், இதேபோல அந்த ஒன்பதும் எண்பத்தொரு நியூட்ரான்களையும் என்று இப்படியே இப் பெருக்கம் தொடர்கிறது. இப்படிப் பெருக்கம் செய்யும் இத் தொடர் நிகழ்வையே ‘Chain Reaction’ என்கிறார்கள்.
இந்தத் தொடர் நிகழ்வினால் வெளிப்படும் வெப்பமும், கதிரியக்கமும் கூடவே மற்றொரு தொடர் நிகழ்வாகிறது. இந்தத் தொடர் நிகழ்வு கட்டுப்படுத்தப்படாது அதன் போக்கிற்கு வெளிப்படும்போது அதுவே அணுகுண்டு வெடிப்பாக மாறுகிறது. கீழ்க்கண்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு இத்தொடர்வினை நிகழ்கிறது.
கிட்டத்தட்ட இப்படி ஓர் அணுகுண்டு செயல்படும் இதே அடிப்படையில்தான் அணு உலையும் செயல்படுகிறது.
ஆனால், அணு உலை இம்மாதிரி வெடிப்பு ஏற்படாத வண்ணம், கட்டுப்பாட்டுடன் பாதுகாப்பு வசதிகளோடு செயல் படுவதாகச் சொல்லப்படுகிறது.
அணு உலை என்பது மேலும் கீழும் வலுவாகச் சீல் வைக்கப்பட்ட கனமான உலோகத்தால் செய்யப்பட்ட பாய்லர் போன்ற ஓர் உலையாகும். இவ்வுலையின் உட்புறம் பாது காப் பான பெட்டகம் போன்ற துளைகள் நிறைந்த கனமான உலோகப் பெட்டியில், துளைகளில் யுரேனியத் தண்டுகள் செருகப்பட்டிருக்கும். இதுவல்லாமல் அணு உலைக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள் பல இருக்கின்றன அவை பற்றிய முழு விவரமும் இங்கே நமக்குத் தேவையில்லை.
இங்கே நமக்குத் தேவையானது, பாதுகாப்பான பெட்டகம் போன்ற துளைகளில் செருகப்பட்டுள்ள யுரேனியத் தண்டுகள் மட்டுமே. இந்த யுரேனியத் தண்டுகள் குறிப்பிட்ட வேகத்தில் பாயும் நியூட்ரான் துகள்களால் (Slow Neutron or Thermal Neutron) தாக்கப்படுகின்றன. இந்தத் தாக்குதலால், அணுகுண்டின் செயற்பாட்டில் நிகழ்வது போலவே தொடர் நிகழ்வு ஏற் படுகிறது. அதன்மூலம் அளவு கடந்த வெப்பமும், ஆற்றல் மிக்க கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. இந்தத் தொடர்நிகழ்வு கட்டுப்படுத்தப்படாவிட்டால் இதுவே அணுகுண்டாக மாறி அணு உலை வெடித்து, ஓர் அணுகுண்டைப் போட்டால் என்ன விளைவை ஏற்படுத்துமோ அதே போன்ற விளைவை ஏற்படுத்தும் என்கிறார்கள் என்பதை முதலிலேயே பார்த்தோம்.
ஆகவே, இப்படி ஆபத்து எதுவும் ஏற்பட்டு அணு உலை வெடித்துவிடாது இருக்க, இந்த அணுக்கருப் பிளவை ஒரு கட்டுப்பாட்டுக்குள் நிகழ்த்த, அதாவது இந்த அணுக்கருப் பிளவைத் தேவைக்கேற்ப நிகழ்த்தவும் வரம்புக்குள் வைக்கவும், காட்மியம் (Cadmium) அல்லது போரான் (Boron) ஆகிய பொருள்களை கட்டுப்படுத்துக் கழிகளாகப் (Control Rods) பயன்படுத்துகிறார்கள். இது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது என்பதைப் பிறகு பார்ப்போம். ஆக கட்டுப்படுத்துக் கழிகளைப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவைக் கட்டுக்குள் வைக்க முயல்கிறார்கள்.
சரி, அணுக்கருப் பிளவினால் உண்டான வெப்பமும், கதிர்வீச்சும் அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம்.
இவ்வாறு அணு உலையில் உண்டான வெப்பம் அணு உலையோடு பொருத்தப்பட்டுள்ள, நீர்க்குழாயிலுள்ள அழுத்தம் நிறைந்த நீரை (Pressurised Water) வெப்பப்படுத்து கிறது. இந்த நீர் அணு உலையில் ஏற்பட்ட வெப்பத்தைத் தாங்கி, கொதிநிலையில் குழாய் வழியாக வெளிவருகிறது. இப்படி வெளிவரும் குழாய் நீர், நீராவி, டர்பைனை நோக்கிச் செல்லும் வழியில் இடை நிறுத்தப்படுகிறது. அங்குச் சாதாரண நீர் அடங்கிய குழாய் ஒன்று இந்த அழுத்தம் நிறைந்த வெப்பத்தைத் தாங்கி வெளிவரும் குழாய்க்குள் குழாயாகப் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆகவே, அழுத்தம் நிறைந்த வெப்ப நீரைத் தாங்கி வரும் குழாய் தன் வெப்பத்தைச் சாதாரண நீர்க் குழாய்க்குத் தந்து குளிரூட்டும் பகுதிக்குச் சென்று பின் மீண்டும் அணு உலைக்குச் செல்கிறது. இதோடு பொருத்தப் பட்டு உட்புறமாக உள்ள சாதாரண நீர்க் குழாய் அணு உலையிலிருந்து வெளிப்படும் அழுத்த நீர்க் குழாயின் வெப்பத்தை ஏற்று நீராவியாகி, டர்பைனை நோக்கிச் சென்று அதை இயங்கச் செய்து, கண்டென்சர் வழியாக மீண்டும் அழுத்த நீர்க் குழாய்க்குள் வருகிறது. வந்து மீண்டும் வெப்பமூட்டப் பட்டு டர்பைனை நோக்கிச் செல்கிறது.
ஆக அணுசக்தி உற்பத்தி என்பது மிக முக்கியமாக
1. அணு உலை, 2. அணு உலையில் உற்பத்தியாகும் வெப் பத்தைத் தாங்கி வெளிவந்து சாதாரண நீர்க்குழாய்க்கு வெப்பத்தைத் தந்து குளிரூட்டும் பகுதிக்குச் சென்று மீண்டும் அணு உலைக்கே செல்லும் அழுத்த நீர்க்குழாய், 3. அழுத்த நீர்க் குழாய்க்குள் பொருந்தி, அழுத்த நீர்க்குழாயின் வெப்பத்தை ஏற்று, வெளிவந்து டர்பைனை இயக்கி மீண்டும் கண்டென்சர் வழியாக அழுத்த நீர்க் குழாய்க்குள்ளாகவே செல்லும் சாதாரண குழாய் நீர், 4. டர்பைன் அதன் மூலம் இயங்கும் ஜெனரேட்டர். இப்படி நான்கு பகுதிகளைக் கொண்டதாக இயங்குகிறது.
இன்று அணு உலைகளில் பல புதிய கட்டமைப்புகள் வந்திருக்கலாம். என்றாலும் அதன் அடிப்படைச் செயல்முறை மேற்சொன்ன இந்த நான்கு பகுதிகளைக் கொண்டதாகவே இயங்குகிறது.
இங்கே ஒரு கேள்வி எழலாம். அதாவது அணு உலை யிலிருந்து வெப்பத்தைத் தாங்கிவரும் அழுத்தம் நிறைந்த நீர்க் குழாயை அப்படியே நேராக டர்பைனுக்கு அனுப்பிச் சுழலச் செய்து, பின் குளிரூட்டும் பகுதிக்கு அனுப்பிக் குளிரச் செய்து, அப்படியே அணு உலைக்கு அனுப்பினால் என்ன என்று தோன்றலாம்.
ஆனால் பிரச்சனையே இங்கேதான் இருக்கிறது. காரணம், அணு உலையில் அணுக் கருப்பிளவு ஏற்படும்போது அளவு கடந்த வெப்பம் மட்டும் ஏற்படுவதில்லை. கூடவே அபாய கரமான கதிரியக்கமும் ஏற்படுகிறது என்று பார்த்தோ மில்லையா?
இந்தக் கதிரியக்கம் என்பது ஒளி வேகத்தில் பாயக் கூடியது. கனமான எஃகுத் தகடுகளையும்கூட கடந்து ஊடுருவ வல்லது. உயிர்ச் செல்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடியது, உயிர்ச் செல்களை எரித்துப் பொசுக்கிவிடும் தன்மையுடையது என்பதும் நமக்குத் தெரியும் இல்லையா.
எனவேதான் கதிரியக்கமுள்ள அபாயகரமான அந்த நீரை அப்படியே ஜெனரேட்டருக்கு அனுப்பினால் ஜெனரேட்டர், டர்பைன் மற்றும் அதைச் சார்ந்த கருவிகள் எல்லாம் கதிரியக்கத்துக்குள்ளாகி, அங்குப் பணி புரிபவர்களின் உயிருக்கு அபாயம் விளைவிப்பதோடு, அக்கதிரியக்கம் வெளியிலும் பரவி, அப்பகுதி வாழ் மக்களது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கும் என்பதால், அக்கதிரியக்க அபாயமுள்ள நீரை அப்படியே நேராக ஜெனரேட்டருக்கு அனுப்பாமல், அதைச் சாதனமாகக் கொண்டு அதற்கு அப்பால் உள்ள சாதாரண கதிரியக்கமற்ற நீரை ஜெனரேட்டருக்கு அனுப்புவதாகச் சொல்கிறார்கள்.
நியாயம். இந்த அளவுகூட பாதுகாப்பு இல்லையென்றால் ஓர் அணுமின் நிலையம் கூட இயங்க முடியாது இல்லையா? எனவே, இப்படிப்பட்ட காப்பு ஏற்பாடுகள் அவசியமானதுதான். ஆனால் இந்த ஏற்பாடு முழுமையான பாதுகாப்புள்ளவை தாமா.... பாதுகாப்பு உள்ளவை என்றால் எவ்வாறு? என்று இதையெல்லாம் தெரிந்து கொண்டு பின் அணு சக்தியின் சாதக பாதகங்களைப் பற்றி ஆராய்வோம்.
- கதிரியக்கமும் கதிர்வீச்சும்
- அணுக்கரு ஆற்றலும் இதர ஆற்றல்களும்
- அணுக்கரு ஆற்றல்
- பல்வகை ஆற்றல்கள்
- அணுவின் இயற்பியல் & வேதியியல் பண்புகள்
- அணுவின் வகைகள்
- அணு ஆற்றல் என்றால் என்ன?
- மின் ஆற்றலை வழங்கும் ’செயற்கைச் சூரியன்’கள்
- லேப்டாப் பேட்டரி சக்தியை பராமரிக்க வேண்டுமா!
- அறிவியல் கருவிகளும் அவற்றின் பயன்பாடுகளும்
- உருப்பெருக்கியை உருவாக்கிய ஜோசப் ஜாக்சன் லிஸ்டர்
- வெப்பமானி எப்போது முதலில் உருவாக்கப்பட்டது?
- புதிய முறையில் மின்சார தயாரிப்பு
- மின்கலத்தில் இயங்கும் இரு சக்கர வண்டி
- டன்னல் டையோடு
- செயற்கை மூளையை உருவாக்க முடியுமா?
- ஒரு பொருளை நாம் பார்ப்பது எப்படி?
- கூடங்குளம் மின்திட்டம் - மாற்று சிந்தனை + எரிபொருள்
- மின்னணுவியல் மூக்கு
- தண்ணீருக்குள் சுவாசிக்க ஒரு திரவ நுரையீரல்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.