அடர்த்தி வித்தியாசமுள்ள இரு பொருள்களை ஒரு திரவத்தினுள் போட்டு அசைக்கும் போது அடர்த்தி அதிகமான பொருள் கீழிறங்கிச் சென்று விடுவதையும், சற்று அடர்த்தி குறைவான பொருள் அதற்கு மேல் அமைத்துக் கொள்வ தையும் பார்க்கலாம்.  ஈர்ப்பு விசையை முக்கியமாகப் பயன்படுத்தி தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் இம்முறையின் தத்துவம்தான் சமையலறையிலும் மிகப் பெரிய தொழிற்சாலைகளிலும் செயல் படுகிறது.

ஒரு சில வித்தியாசங்களும் உண்டு. அரிசி களைதல் என்றழைக்கப்பட்டாலும் உண்மையில் அரிசியில் உள்ள கனமான, அதாவது அடர்த்தி அதிகமான கற்களைக் களைதல் என்ற பொருளில் தான் அதை எடுத்துக்கொள்ள வேண்டும். அடர்த்தி அதிகமான கற்கள் நமக்குத் தேவையில்லை.  அவற்றைத் தூக்கி எறிகிறோம். சற்று அடர்த்தி குறைவான அரிசிதான் நமக்குத் தேவை என்று அதை எடுத்துக்கொள்கிறோம்.

உலோகத் தொழிற்சாலைகளில் அடர்த்தி அதிகமான தாதுப்பொருள்கள்தான் நமக்குத் தேவை. அவை படுகையின் அடியில் தங்கி விடுகின்றன. அடர்த்தி அதிகமான தும்பு, தூசு, களிமண், மணல் போன்றவை நமக்குத் தேவையில்லை. ஆக, அரிசி களைதல் என்று சமையலறையில் நிகழ்த்தப்படும் செயலின் தத்துவம்தான் ஈர்ப்பு விசையில் பிரித்தல் செயலிலும் பயன்படுத்தப்படுகிறது.

தொழிற்சாலைகளில் நுரை மிதப்பு முறை என்ற ஒன்று கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக சல்பைடு தாதுப் பொருள்களுக்கு இம்முறை கையாளப்படுகிறது. இம்முறையில் பெரிய தொட்டிகளில் பொடியாக்கப்பட்ட சல்பைடு தாதுப் பொருள்களைக் கொட்டி, அதனுடன் சிறிது பைன் எண்ணெயையும் சேர்த்து பின் தொட்டியில் நிறைய நீர் ஊற்றி அழுத்தமான காற்றை அதனுள் செலுத்துவர். சிறிது நேரத்தில் நீரின் மேற்பரப்பில் நுரை திரண்டு மிதக்கும். அந்த நுரையில் தூய்மையான, இலேசான, எண்ணெயில் ஒட்டக்கூடிய சல்பைடு தாதுப் பொருள் களின் துகள்கள் மட்டும் ஒட்டிக் கொண்டு மிதக்கும். தேவையற்ற கனமான பொருள்கள் தொட்டிக்குள் அடியில் தங்கிவிடும். மேலே மிதக்கும் நுரையை வழித்து எடுத்துக்கொள்வர்.

இந்த முறையைக் கவனிக்கும் போது நம் சமையலறையில் கையாளும் முறை நம் நினைவுக்கு வராமலில்லை. தயிரிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்க நாம் என்ன செய்கிறோம்? தயிருடன் நீர் சேர்த்துப் பாத்திரத்தில் ஊற்றி, பின் மத்து எனப்படும் ஒரு கருவியை இரு உள்ளங்கைகளுக்கிடையில் பிடித்துக்கொண்டு இப்படியும், அப்படியுமாக உருட்டும் வேலையை மத்தினால் கடைதல் என்றழைக்கிறோம் அல்லவா? சிறிய பாத்திரத்திற்குள் கைகளினால் கடையும் வேலையைப் பெரிய தொட்டிகளில் அழுத்த மான காற்றைச் செலுத்தி தொழிற்சாலைகளில் செய்கிறார்கள் அவ்வளவுதான்!

இங்கு வெண்ணெய் திரண்டு, அடர்த்தி குறைவதனால் மோரின் மேல் மிதக்கிறது. அங்கு தாதுப் பொருள்களின் அடர்த்தி குறைவு. அதனால் நுரையில் அது மிதக்கிறது. நுரை மிதப்பு முறை என்று உலோகவியல் தொழிற்சாலைகளில் அழைக்கப்படும் முறையில் அடங்கியுள்ள தத்துவ மும் தயிர் கடைதல் என்று சமையலறையில் கடைப்பிடிக்கப்படும் முறையில் உள்ள தத்து வமும் ஒன்றுதான்.

(கையினால் கடைதலைச் செய்தபோது இயற்பியலில் வரும் இணையின் திருப்புத்திறன் தத்துவத்தையும் நாம் பயன்படுத்துகிறோம் என்பதை மறக்கக் கூடாது.) இவ்வாறாக வேதி யியல் பாடங்களில் நாம் படிக்கும் பல செயல் முறைகளும் அவற்றுள் அடங்கியுள்ள தத்துவங் களும் நமக்குப் புதியதல்ல. நாம் நம் வாழ்வில் கடைப்பிடிக்கும் பல விவரங்கள்தாம் அவை என்பதை அறிந்துகொண்டு விட்டால் அப்பாடங்களையும் அவற்றினுள் அடங்கியுள்ள தத்துவங்க ளையும் எளிதில் மறக்க முடியாதல்லவா? எந்த ஒரு பாடமும் நமக்குப் புரிய வேண்டுமானால் அது கற்றுக்கொடுக்கப்படும் விதம் ஒரு பக்கம் முக்கியம் என்றால் புரிந்துகொள்ளும் மாணவர்கள் அதை எந்தக் கோணத்தில் பார்க்கிறார்கள் என்பதும் முக்கியம். சரியான கோணத்தில் பார்க்கத் தொடங்கி விட்டால் கடினமான பாடம் என்று ஒன்று உண்டா என்ன?

வேதியியலில் உள்ள பல கோட்பாடுகளில் முக்கியமான ஒன்று கலப்பினச் சேர்க்கை என்பதாகும். உயிரியியலில் கூட கலப்பினச் சேர்க்கை என்ற கோட்பாடு உள்ளது.  செயல்படும் விதங்கள் இரண்டிலும் வேறுபட்டாலும் அடிப்படைக் கருத்தை ஒன்றாகத்தானிருக்கிறது.

வேதியியலில் கலப்பினச் சேர்க்கை என்ற கோட்பாடு விளங்கவேண்டுமென்றால் முதலில் வலுவெண் கோட்பாட்டிலிருந்து நாம் தொடங்க வேண்டும். இதை எளிமையாகப் புரிந்துகொள்ள வழக்கமாகக் கையாளும் கரி அணுவை எடுத்துக் காட்டாக  எடுத்துக்கொண்டு விளக்கத் தொடங்குவோம். எந்த அணுவிலும் அதன் இறுதிச் சுற்றுப் பாதையில் உள்ள இணை சேராத மின்னணுக்களின் எண்ணிக்கையே வலுவெண் என்பதாகும், என்று வேதியியல் விளக்கம் தருகிறது. சாதாரண நிலையில் கரி அணுவில் மின்னணுக்கள் அமைந்துள்ள நிலையைப் பார்ப்போம்.

Carbon C 1s22s2 2p     

இந்த அமைப்பின்படி பார்த்தால் ஒரு கரி அணுவில் இரண்டு இணை சேராத மின்னணுக்கள் உள்ளன. ஆதலால் அதன் வலுவெண் இரண்டு என்றாகிறது. ஆனால், கரி அணுக்கள் உள்ள கூட்டுப்பொருள்கள் அனைத்திலும் கரி அணுவின் வலுவெண் நான்காகத்தான் உள்ளதே தவிர எங்கேயும் இரண்டைக் காணோம். அதாவது இருக்கவேண்டிய நியதிக்கும், உண்மையில் நடக்கின்ற நடப்புக்கும் தொடர்பில்லாமல் இருக்கிறது.

இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை விளக்கத்தான் நியதிகளும், கோட்பாடுகளும் உருவாக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டு தான் தீர்வுகள் விளக்கப்படுகின்றன. நியதிக்கும், நடப்புக்கும் வேறுபாடு இருந்தால் என்ன செய்வது? நடக்கின்ற நிகழ்வுகளுக்குத்தான் நாம் நியதி கற்பிக்கலாமே தவிர நாம் கூறிவிட்ட நியதிக்கேற்ப நிகழ்வுகள் நடந்தாக வேண்டுமென்று நாம் எதிர்பார்க்க முடியாது. அப்படி எதிர்பார்த்தால் செருப்புக்குத் தகுந்தாற் போல காலின் அளவை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் செயலுக்கு ஒப்பாகும். அது முட்டாள்தனமானது என்பதை சொல்லத் தேவையில்லை.. சரி! இந்தப் பிரச்னைக்குத் தீர்வு என்ன?

(அடுத்த இதழில்)

(அறிவியல் ஒளி - 2012 ஜனவரி இதழில் வெளியான படைப்பு)

Pin It