மற்ற பையன்கள் பையைப் போல
மஞ்ச பைக்கு பலமேது?
புதுத் துணி வாங்கையில் தந்த பை
புத்தக மூட்டை ஆனதால்
பள்ளிக் கூடம் போகிற மகன்
பை கிழிந்து போனது
அப்போது....

நல்ல பை வேண்டுமென்று - மகன்
நாலு நாளாய்க் கேட்கிறான்.
அழகான பையை வாங்க
ஐம்பது நூறு ஆகுமே என
அடங்காக் கணக்குப் போட்டு பார்த்து
அசந்துபோய்க் கிடக்கிறாள்
அம்மா....

பேரைச் சொல்லி அழைத்துக்கொண்டு
பெரிய வீட்டுக்காரர் வந்தார்.
தேர்தல் சின்னத்தை ஞாபகப்படுத்தி
செலவுக்காக வச்சுக்கச் சொல்லி
சலவைத்தாளாய் நூறு ரூபாய்
சட்டுன்னு எடுத்து நீட்டினார்
அவர்....

'கையெடுத்துக் கும்பிடுறேன்
காசு அறவே வேண்டாங்க.
பணத்தை வாங்கி ஓட்டுப் போடும்
பழக்கம் எனக்கு இல்லைங்க.
நீங்க சொல்லும் சின்னத்துக்கு
நிச்சயம் போட்டுடுறேன்.' என்றாள்
அவள்....

தேர்தல் கூட்டணி பற்றிய
செய்திகள் தினம் வருகிறது.
நேற்று இருந்த அணியைவிட்டு
மாற்று அணிக்குப் தாவின தலைவர்
கோடிக் கணக்கில் வாங்கிக்கொண்டு
ஓடினதாய்ப் பேசிக்கொண்டார்கள்
சிலர்....

கொடுத்தோ வாங்கியோ கறையானதை
'கறை படியாத கரம்' என்று,
வாங்குவதை வாங்கிக் கொண்டு
வயிறு வீங்கத் தின்று விட்டு
கூச்ச நாச்சம் இல்லாமல்
காக்காய் கூட்டம் கரையுது
வீதியில்!....


சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.