சொல்லப்படும் அறிகுறிகள்
சீக்குகள் எதனோடும்
பொருந்திப் போகாததால்
பெரிதும் குழம்பிய மருத்துவர்
எழுதிக் கொடுத்த மருந்துகள்
எந்தப் பலனும் தந்ததாய்
தெரியாத போது
எதார்த்தமாய்
எதிர்ப்படுகையில்
"நலந்தானா?" என
நண்பர் கேட்டார்.
"நலம்தான்" என்று
அறியாமலே சொன்னான் பொய்யை
அவன்.

கல்யாண வீட்டில்
கைகளைக் கழுவாமலே
சாப்பிட வேண்டும் என்பது
சகஜமாகிப் போனது.
முட்டைக் கோசு கறி
சாம்பார் என்றோர் சங்கடம்
சகிக்க முடியாத ரசம்
கைக்குழந்தை வாந்தியை
ஞாபகப் படுத்தும் மோர்
இவைகளெல்லாம்
இணைந்த மணத்துடன்
இருக்கும் தண்ணீர்க் குவளை.
வேறு வழியின்றி விழுங்கிவிட்டு
வெளியே வரும்போது
"விருந்து(?) நன்றாய் இருந்ததா?" என
விசாரித்துத் தொலைக்கிறார்
கல்யாண வீட்டுக்காரர்
கனிவான குரலுடன்.
"அற்புதம்" என்று
அறிந்தே பொய் சொல்கிறேன்
நான்.

இப்படியாக
நிர்ப்பந்தம் யாரும் செய்யாமல்
நிர்ப்பந்தப் பொய் சொல்ல
நேர்ந்து விடுகிறது
சில நேரம்! 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It