Manகருகிப்போன பயிரைப் பார்த்து
உருகிப்போச்சு உசுரு - பின்
காலேஜிலே மகனைச் சேத்தேன்
பிஞ்சுது தல மசுரு - இங்கு
மதத்த ஜாதியை நெனச்சுப் பாக்க
நேரம் எங்கே கூறு - நம்
மக்கள் சிக்கலை போக்கிறதுக்கு
வழிகளுண்டா பாரு!

சோத்துப் பாட்டுக்கு ஒழைப்பதுவே
சோலியான போது - வேறு
சுகங்களெல்லாம் யோசிக்க
சூழல் இங்கே ஏது - இப்போ
ஆசுப்பத்திரி செலவு வந்தா
அதோடு நாங்கள் காலி - அரசு
ஆசுப்பத்திரி நல்லா இருந்தால்
எனக்கு கொஞ்சம் காமி!

நல்ல நாளு பெரிய நாளு
வந்து போற நாளில் - நாங்க
நகர முடியாம பெரிய வெலங்கு
விழுந்துவிடும் காலில் - நல்ல
சந்தோசத்தே தருவதுதான்
விழாவுங்கன்னு சொல்வார் - இது
சங்கடத்தத் தருவதெல்லாம்
யாரு கண்டு கொள்வார்?

கவனமெல்லாம் வேறு பக்கம்
திசை திருப்ப வேண்டாம் - எங்கள்
கஷ்டம் தீர சுலபமான
வழிகளும்தான் உண்டா? - ஏதும்
உண்டுன்னா இங்கே வந்து
உபதேசம் பண்ணு - அது
இல்லை என்றால் பேசாமல்
இடத்தை காலி பண்ணு! 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It