மான்களும் மந்தையாய்த்தான் வாழ்கிறது.
தாக்குகிறவைகளை தாக்குவதற்கு
தலையில் உறுதியான
கிளைகளுடன் கொம்புகளுமுண்டு.
உரோமங்கள் அதன் உடலுக்கு
ஆரோக்கியத்துடன் அரணாயும் அழகாயும்...
பசும் புல்லை இலை தழையை
பல்லாயுதத்தால் உணவாக்கி உண்கிறது.

ஓநாய்க்கோ கொம்புகள்
ஒரு நாளும் முளைத்ததில்லை.
இரையை வசப்படுத்தவும்
எதிரிகளை எதிர்கொள்ளவும்
பற்களைத்தான் பயன்படுத்திக் கொள்கிறது.
கூட்டமாய் இருப்பதில்
நாட்டமாய் இருக்கிறது.
வெயிலுக்கும் குளிருக்கும்
உரோமமே உடை இவைகளுக்கும்...

ஓநாய்களைக் கண்டால்
ஓடுவதேன் மான்கள்?
மான்களின் கொம்பைவிடவும்
ஓநாய்களின் பல் நீளமா என்ன?
பற்களின் உறுதியைவிட
கொம்பின் வளிமை குறைச்சலா?
மான்களின் முன்னேயே ஓநாய்களுக்கு
மானின் குட்டி உணவாகிப் போகிறது.
மற்ற மான்களும் இழந்ததை உடன்
மறந்தே விடுகின்றன.

மான்களுக்கிடையே
அனல் பறக்கும் சண்டை
அற்பக் காரணங்களுக்காக
அதன் கொம்புகள் கூட ஒடியும் அளவிற்கு.
அந்த வேகத்தில் ஓநாயிடம் பொருதினால்,
ஓடிப்போய் ஒளிந்து கொள்ளாதா அது?
மான் மருண்டு போவதால்
மறந்து விடுகிறதோ கொம்பை!
எதை எப்படி எங்கே எப்போது
பயன் படுத்த வேண்டும் என்ற
பக்குவம் மானுக்குத் தெரிந்திருந்தால்,
கதி கலங்கி காற்றாய்ப் பறக்கும்
மான்களைப் பார்க்கும்போது ஓநாய்.
அதுவரை ஆளும் வாய்ப்பை
ஓநாய்களே ஒதுக்கிக் கொள்ளும்! 

சி.வ.தங்கையன், பட்டுக்கோட்டை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It