வரலாற்றுப் புதினமென்றால் ராஜா ராணிக் கதைகள்தான் என்ற ஆதிக்கவர்க்க போதனையை தகர்த்தெறிந்திருக்கிறது காவல்கோட்டம். வரலாற்று நாவலாசிரியர்கள் தங்கள் நாயகர்களின் ஆளுமைகளில் மயங்கி அவர்களைச் சுற்றியே கதைகளைப் பின்னுவது வழக்கமாக இருந்திருக்கிறது. ராஜாதி ராஜ, ராஜ குல திலகங்களின் வீர பிரதாபங்களின் காரணமாக பரந்துபட்ட மக்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படக்கூடும் என்ற பிரக்ஞையே இல்லாமல் தான் அநேக நாவலாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். இடையிடையே சித்தரிக்கப்படும் சமூக அவலங்கள் கூட ஏதோ நாவலுக்கு சுவை கூட்டவே இடம்பெறுகிறதோ என்று கூட நம்மை நினைக்க வைக்கும்.
பிரபஞ்சனின் மானுடம்வெல்லும் நிச்சயமாக ஆளும்வர்க்கங்களின் செயல்பாட்டால் அல்லலுறும் மக்களைப்பற்றி நிறைய செய்திகளை நமக்குச் சொல்லுகிறது. ஆனால் பஞ்சை பராரிகளைப் பற்றி, வரட்டி தட்டுவது கூட ஒரு போராட்டக் களமாக மாறிவிடும் ஒரு கொடுமையான வழலில் வாழ்க்கையை நகர்த்தும் அடித்தட்டுமக்களைப் பற்றி, திருட்டையே ஒரு குலத்தொழிலாகக் கொள்ளும் அவலத்திற்கு ஆட்படும் ஒரு பெரும் மனிதக்கூட்டத்தைப் பற்றி, உலகில் வேறு எங்கேனும் நாவல் எழுதப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.
நாவலின் முற்பகுதி விஜய நகர சாம்ராஜ்யம் தொடங்கி மதுரையை ஆண்ட நாயக்க மன்னர் பரம்பரையைப் பற்றி விஸ்தாரமாகவே சொல்லுகிறது, ஆனாலும் அங்கேயும் கொடுத்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரங்களே என்ற வாழ்த்துப்பா பாணியில் இல்லாமல், மன்னர்களின், மஹாராணிகளின் முகஞ்சுளிக்கவைக்கும் குணாதிசியங்களை அப்படியே தோலுரித்துக்காட்டுகிறார் வெங்கடேசன். ஆனால் மக்களுக்கு ஏதோ செய்யவிரும்பும் அரசர்களும் அரசிகளும் அனுதாபத்தோடு, சில சமயம் பிரமிப்போடு பார்க்கப்படுகின்றனர்.
ஓரளவு நல்லாட்சியளித்த ராணி மங்கம்மாவின் சோக முடிவு நம்மை அப்படியே உலுக்கிவிடுகிறது. தான் வளர்த்த பேரனே தன்னை தனது அறையில் அடைத்து, அனைத்து வெளி உலக தொடர்பையும் துண்டித்து, தனக்கு சமாதி கட்டும் அந்நேரத்தில், அவர் எப்படியெல்லாம் வேதனைப்பட்டிருப்பார் என்று நினைக்கவே நமக்கு நெஞ்சம் பதறும்.
பல கட்டங்களில் குறைத்துச் சொல்லல் மட்டுமல்ல, சொல்லாமல் விட்டு, நமக்கு நாமே கற்பனை செய்துகொண்டு வெதும்பவோ, மகிழவோ வைக்கிறார் வெங்கடேசன். அது இந்நாவலின் இன்னுமோர் சிறப்பு எனலாம். தனியாக கருத்துகள் என்று எதையும் சொல்லாமல், போகிறபோக்கில் சம்பவங்களை சித்தரிப்பது சிறப்பு உத்தியாகக் கூறப்படும். வெங்கடேசன் எங்கிருந்துதான் அத்தகைய கலையை கற்றார் என நம்மை வியக்க வைக்கிறார். ஒரு முதல் நாவலில் இப்படி ஒரு தேர்ந்த நடை. தாது வருட பஞ்சம் பற்றி விவரமாக எழுதுகிறார். எங்கும் தேவையற்ற வர்ணனைகள் இல்லை. விவரிக்கும் சம்பவங்களே நம்மை நெகிழ வைக்கிறது. உயிரைப்பணயம் வைத்து வேட்டையாடும் வல்லாங்கனின் வாழ்க்கை அம்மக்களின் அவலத்தின் ஒரு பரிமாணம் என்றால், முத்தணனின் மனைவியின் முடிவு சோகத்தின் உச்சிக்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறது.
பல தூரம் நடந்து தங்களது சொந்த ஊருக்கு அத் தம்பதியர் திரும்பும்போது, காட்டில் களைத்து உறங்குகின்ற்னர். சில மிருகங்கள் அப்பெண்மணியை இழுத்துக்கொண்டு போய்விடுகின்றன. அவரால் அவற்றை தடிகொண்டு விரட்டவோ கணவனை எழுப்பவோ, கூச்சலிடவோ முடியவில்லை. அவ்வளவு சீவனற்று கிடக்கிறார் அவர். அந்த இரவில் இழுத்துக்கொண்டு போகும் மிருகத்தின் வாய்க்கு ”அப்பெண்ணின் கழுத்து அடக்கமாக இருக்கிறது.”
வாசகன் அதிர்ந்துபோகிறான். அது என்ன சுவை? குரூரமா, சோகமா? இரண்டுமேவா? ஒரு புதிய அழகியல் இலக்கணம் அங்கே உருவாகிறது.
காவல்கோட்டத்தைப் படிக்கும்போது, அதில் சித்தரிக்கப்படும் கொடுமையைத் தாங்கமுடியாமல் புத்தகத்தை மூடிவிட்டு குமுறிய சந்தர்ப்பங்கள் பல.
இறுதிவரை நம் நெஞ்சை விட்டு அகலாத ஒரு காட்சி - பரங்கியரால் ரத்த விளாறாக அடிக்கப்பட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டு குற்றுயிராய் கிடக்கின்றனர் தாதனூர் நாயகர்கள். வைகையில் அடியிலேயே நீந்தி வந்து காவலர்களுக்குத் தெரியாமல் அந்நாயகர்களைப் பார்க்கவரும் இளைஞர்களில் ஒருவனான மாயாண்டியின் கண்களும், மண்டபத்தில் சிறைபிடிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அவனது தந்தையின் கண்களும் ஒரே ஒரு நொடி சந்தித்துக் கொள்கின்றன. அப்போது அவர்களது கண்கள்
என்னவெல்லாம் செய்திகளைப் பறிமாறிக் கொண்டன, தந்தை என்னசொல்ல நினைத்திருப்பார். நாம் கற்பனைசெய்து கொள்ள வேண்டியதுதான். அடுத்த கணம் ஆற்றில் மூழ்கி அங்கிருந்து மறைகிறான் மாயாண்டி. அவ்வாறு சிறைபிடிக்கப்பட்டோர் பின்னர் எங்கோ நாடுகடத்தப்பட்டதாக செய்தி மட்டும் வருகிறது தாதனூருக்கு. இப்படிப்பட்ட பரிதாபகரமான வாழ்வு வாழ்ந்தவர்கள்தான் காவல்கோட்ட மாந்தர்கள்.
இதுதான் ப்ளாட், கதைக்கரு என்று சொல்ல எதுவுமில்லை. அது ஒரு நீண்ட நெடிய சமூக வரலாறு. தாதனூர்க் கள்ளர்களின் வரலாறு, விஜய நகரப் பேரரசு காலத்தில் மதுரையம்பதியிலும் அதனை ஒட்டிய் பகுதிகளிலும் குடியேறிய கொல்லவாருகளின் வரலாறு, காவக்கூலி விவகாரத்தில் தாதனூர் மக்களுக்கும் வெள்ளைக்காரத்துரைகளுக்குமிடையே மாட்டித் தவிக்கும் மதுரை மக்களின் கதை, இப்படி எத்தனையோ கதைகளை மூச்சுவிடாமல் சொல்லும் ஒரு நவீன மகாபாரதம் காவல்கோட்டம். தமிழ் இலக்கியத்தில் பிரமிக்கவைக்கும் ஒரு சாதனை.
கோளாறுகள், பிரச்சினைகள், பலவீனங்கள்? நிறையவே உண்டு.ஒரேயடியாக தனது மாந்தர்களின் வாழ்வில் லயித்துப்போய்விடுகிறார் வெங்கடேசன். அனுதாபம் வேண்டியதுதான் ஆனால் அது விமர்சனமற்ற போற்றுதலாகலாமா? அவரது அணுகுமுறையின் விளைவு தாதனூர்க் கள்ளர்களின் பலவீனங்கள், அவர்கள் தொழிலில் இருந்திருக்கக்கூடிய சிக்கல்கள் அதிகமாக பேசப்படவில்லை. பயிரைக்கசக்கும்போது மாட்டிக்கொள்கிறார்கள் சரி, ஆனால் அவர்கள் வைத்த குறி மதுரையில் பெரும்பாலும் தவறவே இல்லை, அப்படியா?
இன்னும் முக்கியமாக அவர்கள் தங்கள் தொழில் தர்மத்தை மிகச்சிறப்பாகக் கடைபிடித்திருப்பதாகவே நாவல் கூறுகிறது. மதுரையைப் பொறுத்தவரை பொதுமக்களே தாதனூர்க்காரர்களுடன் ஒரு நல்லுறவை வளர்த்துக்கொண்டதாகவும், பிரிட்டிஷ்காரர்கள்தான் சதிசெய்து அவர்களைப் பிரித்ததாகவும் ஆசிரியர் கூறுகிறார். அப்படி ஒரு நேசம் மதுரையில் மட்டும்தான் இருந்ததா? பண்டுகலவரம் எல்லாம் எழுந்ததென்றால் அதற்கு காரணம் தாதனூர்க்காரர்களால் பாதிக்கப்பட்ட பலர் இருந்திருக்கவேண்டும் என்றுதானே பொருள்?
போதகர் சாம்ராஜ் தம்மக்களின் நிலை குறித்து வருந்துவது சரி, அவர்களுக்கு உதவுவதும் சரி, ஆனால் பிரிட்டிஷாரின் முயற்சியால் தாதனூர் வாழ்க்கை முறை மாறுமானால் அதில் தவறென்ன?
காலனியவாதிகளின் குரூரத்தை கண்டிப்போம், ஆனால் அதற்காக தாதனூரின் நிலவுடைமைச் சமூகத்திற்கும் முற்பட்டதான வாழ்வியலை, கல்வியறிவே இல்லாமல் பல தலைமுறைகள் மரிக்கும் அக் கொடுமையை, நாம் நியாயப்படுத்திவிடமுடியுமா? மதுரைக் கோட்டையை இடிக்கும்போது ஆசிரியர்க்கு ஏற்படும் சோகம் நம்மையும் கவ்விக் கொள்கிறது. முனிகள் வெளியேறும்போது முழு நாத்திகர்களும் மெய்சிலிர்த்துப் போவார்கள். அப்படி ஒரு வர்ணனை வலிமை. ஆனாலும் அவ்வாறு கோட்டை இடிக்கப்பட்டதன் காரணமாக அதுவரை வெளியே இருந்த சில சாதியினர் உள்ளே வந்து குடியேறியதை வெங்கடேசன் குறிப்பிடவில்லை என சிலர் அங்கலாய்க்கின்றனர். சொல்லி இருக்கலாம், அப்படிச்செய்வது சோகத்தை மட்டுப் படுத்தும் என அவர் நினைத்திருக்கலாம். தவிரவும் ஏன் ஆதார நூல்கள் பட்டியிலிடப்படவில்லை எனவும் கேட்கப்பட்டிருக்கிறது. இது ஒரு புதினம்தானே என்பதால் அப்படி நடந்திருக்கலாம். ஆனாலும் அவ்வாறு செய்வது புத்தகத்தின் நம்பகத்தன்மையைக்கூட்டும் என்பதால், அடுத்த பதிப்பில் அப்படி ஒரு பட்டியலை எதிர்பார்க்கலாமா? அடுத்த பதிப்பில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான செயல் பிழைதிருத்தல். ஆம், இலக்கணப்பிழைகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன. படிவங்களை சரி பார்ப்பதில் வித்தகர் என்று புகழ்பெற்றிருக்கும் வசந்தகுமாரின் பதிப்பிலா இப்படி? அவை நிச்சயம் திருத்தப்படத்தான் வேண்டும்.
தவிரவும் பிரம்மாண்டமானதொரு புதினத்தை எழுதி இருப்பதால் எல்லா சம்பவங்களையும் நினைவில் வைத்துக் கொள்வது கடினம், அவ்வப்போது பக்கங்களைப் புரட்டி பழயனவற்றை நினைவுபடுத்திக்கொள்ளவேண்டி இருக்கிறது. ஆனால், உண்மையை சொல்லவேண்டுமானால் அப்படிச் செய்வது கூட தனிச் சுகம்தான். புத்தகத்தின் இறுதிப்பக்கங்களை எட்டியபோது, அய்யோ முடியப் போகிறதே என்றுதான் தோன்றிற்று. படித்து முடித்த பிறகு அந்த நாள் முழுதும் வெறுமை என்னைப் பிடித்து ஆட்டியது. 1,000க்கும் மேற்பட்ட பக்கங்களைப் படித்தும், மேலும் ஏதாவது வெங்கடேசன் எழுதியிருக்கக்கூடாதா என்ற ஏக்கமே மிஞ்சியது. இத்தகைய ஒரு புதினத்தை ஒரு மார்க்சிஸ்ட்தான் எழுதியிருக்கமுடியும், அப்படி ஒரு சமூகப் புரிதலும், மனித நேயமும். தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் வெங்கடேசன்.