காலச்சுவடு (செப்-அக் 2003) இதழில் வெளியாகியுள்ள ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்: ஒரு பார்வை’ என்ற கண்ணனின் கட்டுரை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. என் கட்டுரைகள் இரண்டுமே (சனதருமபோதினி,கருப்பு தொகுப்புகளில் வெளியானவை) முஸ்லிம்களின் எதிர்த்தாக்குதல்/தற்காப்பு அரசியல் பற்றிய புரிதல்களுக்கான தேவையை முன்மொழிபவை. முஸ்லிம்களது தற்காப்பு என்பது அவர்களது அடிப்படை உரிமை. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் முஸ்லிம்கள் தொடர்ச்சியான ஒடுக்குமுறையைச் சந்தித்து வரும் பின்னணியில் அவர்கள் தம் ஜனநாயக உரிமைகளை வலியுறுத்த வேண்டும் அல்லது போராடிப் பெறவேண்டும் என்கிற அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாடுதான் தற்காப்புக்கான முன்மொழிதலும்.

தற்காப்புக்கான அவசியத்தைப் பேசுவதை ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்று பெயரிட்டுத் திசைதிருப்பும் கண்ணனின் மோசடித்தனம் கண்டிக்கத்தக்கது. கண்ணனின் கட்டுரை தமிழ்நாட்டு முஸ்லிம்களின் செயல்பாடுகளைக் கூட உலகளாவிய இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் இனங்காண முயற்சிக்கிறது. இங்குள்ள இந்துத்துவ அணிதிரட்டலை ஏதோ சாதாரண விஷயமாகவும் முஸ்லிம்களது தற்காப்புக்கான விழிப்புணர்வை சாதாரண விஷயமாகவும் பூதாகரப்படுத்தும் அயோக்கியத்தனம் கட்டுரை முழுக்க விரவிக் கிடக்கிறது. 1997 நவம்பரில் கோயம்புத்துரில் 20 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதின் எதிர்வினையாக 1998 பிப்ரவரியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு பற்றி பேசும் எனது கட்டுரை வரிகளை உருவியெடுத்துக் கண்ணன் விவரிப்பது கவனிக்கத்தக்கது.

“ஒரு தலைவரைக் கொல்ல நகரெங்கும் குண்டுவைப்பதை நியாயப்படுத்துவது. இது பின்லேடனைக் கொல்வதற்காக ஆப்கானிஸ்தான் எங்கும் அமெரிக்கா குண்டுவீசியதையும் சதாமைக் கொல்வதற்காக ஈராக் மீது படையெடுத்துப் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியதையும் நியாயப்படுத்துவதோடு ஒப்புமை உடையது.” “கோவையில் குண்டுவெடிப்பு பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று நடைபெற்றது என்பதைக் கட்டுரையாளர் தனித்துக் குறிப்பிடுகிறார். இதில் வெளிப்படும் வக்கிரம் அதிர்ச்சியளிக்கக்கூடுயது.” (காலச்சுவடு-இதழ் 49, பக்கம் 19).

நான் ஷாஜகான் என்ற பெயர் பூண்டதே காதலுக்காகத்தான். எனது கட்டுரையே காதல் செய்ய வேண்டிய இந்த இழைஞர் வாழ்வு வெறும் வெடிப்பொருள்களோடும் சிறைச்சாலையோடும் சுருங்கிப் போய்விட்டதே என்ற கவலையில் எழுந்ததுதான். இதெல்லாம் கண்ணனுக்குப் புரிந்திருக்க நியாயமில்லை. எனது அதே கட்டுரையில் நான் சொல்வது போல் ‘மற்றதைக்’ கவனிக்கத் தவறுகிற அல்லது அலட்சியப்படுத்துகிற தமிழ்ச்சூழல் என்பதும் முஸ்லிம் இளைஞர்களது விரத்திக்கு ஒரு காரணம். தமிழ்நாட்டில் காதலர் தினம் கொண்டாடப்பட வேண்டும் என்று சொல்லுகிற ஒரே அறிவுஜீவியான அ.மார்க்ஸுக்கு மட்டுமே முஸ்லிம் இளைஞர்களதும் யுவதிகளதும் மனக்கொந்தளிப்பு புரிந்திருக்கிறது, கண்ணனுக்கு காதலும் புரியாது; ‘மற்றதாக’ இருக்கிற முஸ்லிம் மனசும் புரியாது.

மற்றுமொரு விஷயத்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இன்று தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் இந்துத்துவ அணித்திரட்டல் நடந்து கொண்டிருக்கிறது. அதை எதிர்கொள்வதற்கு ஊர் ஊராக முஸ்லிம் இளைஞர்களும் யுவதிகளும் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. சகட்டுமேனிக்கு குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்ல வேண்டும் என்று எனது கட்டுரையில் எங்கும் குறிப்பிடவில்லை.அப்படிப்பட்ட சம்பவம் ஏன் நடைபெற்றது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகத்தான் அந்தக் கட்டுரைகள் அமைந்திருக்கின்றன. வன்முறையைத் தூண்டக்கூடிய விஸ்வ இந்து பரிஷத்தின் துண்டறிக்கையுடன் எனது கட்டுரையிலிருந்து உருவப்பட்ட சில வரிகளை ஒப்பிடுகிற கண்ணனுக்கு தயிர்வடை sensibility தான் இருக்கிறது என்று அடித்துச்சொல்ல முடியும்.

தங்களுக்காக ஒரு வழக்கறிஞரைக் கூட வைத்துக்கொள்ள வசதில்லாத எத்தனையோ முஸ்லிம் இளைஞர்கள் தமிழ்நாட்டில் சிறைப்பட்டு இருக்கிறார்கள். குண்டுவெடிப்பில் நேரடியாகத் தொடர்பில்லாத சுமார் 250 இளைஞர்களது கண்ணீரும் வேதனையும் கண்ணன்களுக்குப் புரியப் போவதில்லை. வெடிகுண்டுப் பெண் தீவிரவாதி சங்கீதா என்ற ஆயிஷாவைத் தேடுகிறோம் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் நின்ற பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களின் பர்தாவைத் தூக்கி தமிழ்நாடு போலிஸ் சோதனை செய்தபோது எனது தோழர் கவிஞர் இன்குலாப்பும் கொதித்தெழுந்தார். இது என்ன அநியாயம் என்று கேட்டு தமிழன் எக்ஸ்பிரஸில் கட்டுரை எழுதினார். அப்போது இந்தக் கண்ணன்கள் எங்கே போயிருந்தார்கள்? எங்களுக்குப் பாடம் கற்பிக்க ஒரு யோக்கியதை வேண்டாமா?

அஸ்கர் அலி எஞ்சினியரை ஒரு முன்மாதிரியாகக் காட்டும் கண்ணனுக்கு அஸ்கர் அலி எஞ்சினியர் முஸ்லிம்வாதியான யூசுஃப் அல் கர்ளாவியை மேற்கோள் காட்டுவது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளை அ. மார்க்ஸ் தொடர்ந்து பேசிவருவதைச் சகித்துக் கொள்ளவியலாத கண்ணன் ஏற்கனவே அவரைப் பற்றி காலச்சுவடு இதழ் ஒன்றில் ‘பயங்கரவாதத்துக்கு துணை போகும் பேராசிரியர்’ என்று அவதூறாக/வக்கிரமாக எழுதியதும் குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தில் சுயவிமர்சனம் /ஜனநாயகத் தன்மை இல்லை எனக் கூப்பாடு போடும் கண்ணன்களே! ரவிக்குமார்களே! எங்கள் சமூகத்திற்குள் சீர்திருத்தம் குறித்துப் பேசுகிற தகுதியை/நேர்மையை நீங்கள் எப்போதே தொலைத்து விட்டீர்கள். உங்களது நோக்கமெல்லாம் ஆதிக்கம் செலுத்துவதுதான். எமது சமுகத்தை வழிநடத்த/ மறு உருவாக்கம் செய்ய எங்களால் முடியும். நீங்கள் எங்களை ஆதிக்கம் செய்வதை, காட்டிக் கொடுப்பதை நாங்கள் எதிர்ப்போம். தற்காப்பு என்பது அடிப்படை உரிமை. அது ஜனநாயகம் வழங்கியுள்ள உரிமை. ஆகவே முஸ்லிம்களது தற்காப்பு அரசியலைக் கொச்சைப்படுத்திய கண்ணனுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.

பின்குறிப்பு :

எனக்கு சிறுவயதாயிருந்தபோது சமூகப் போராளியான என் தந்தை சிறையிலிருந்தார். அப்பொது எங்களது வீடு மிகவும் பெரியது. எங்கள் வீட்டருகே இந்து முன்னணி அலுவலகம் இருந்தது. எங்கள் வீட்டருகே போலீஸ் குடியிருப்பும் இருந்தது. தந்தை சிறையிலிருந்தபடியால் மாலை நேரமானதும் என் தாய் அந்த வீட்டிலுள்ள மிகச் சிறிய அறை ஒன்றுக்கு நான் உள்பட நாலு குழந்தைகளையும் அழைத்துச் சென்று பூட்டிவிடுவார். பாதுகாப்புக்கு ஒரு கத்தியை வைத்துக்கொள்வார். இந்து பயங்கரவாதியாலோ, இரும்புத் தொப்பி போலீஸ்காரனாலோ தனக்கும் பிள்ளைகளுக்கும் ஆபத்து வரக்கூடுமென அப்போது அவருக்கு பயமிருந்தது. என் தாய்ப்பட்ட மன அவஸ்தைக்குச் சமமான ஒன்றை நான் இப்போது கண்ணன் போன்றவர்களால் அனுபவித்து வருகிறேன்.

(‘காலச்சுவடின் ஆள்காட்டி அரசியல்’ நூலிலிருந்து)

Pin It